6/30/2022

ஆற்றின்மடியில்

 



மெம்ஃபிஸ் நகரில் ரிவர்வாக்(மிசிசிப்பி ஆற்றங்கரை), செயிண்ட் லூயிஸ் நகரில் ரிவர்ஃபிரண்ட்(மிசிசிப்பி ஆற்றங்கரை), சார்லட் நகரில் ரிவர்பார்க்(கட்டாபா ஆற்றங்கரை), சட்டனூகா நகரில் ரிவர்பெண்ட், ரிவர்வாக்(டென்னசி ஆற்றங்கரை), லூயிவில் நகரில் வாட்டர்ஃபிரண்ட்(ஒஹாயோ ஆறு), இவையெல்லாம் ஆன்ம உலாவுக்கான இடங்களாகப் போற்றப்படுகின்றன அமெரிக்காவில். ஆற்றங்கரையோரத்தில் பூங்காக்கள் அமையப் பெற்றிருக்கும். காலை, மாலை வேளைகளிலும் வார ஈற்று நாட்களிலும் அங்கேதாம் மக்கள் தங்கள் நேரத்தைச் செலவழிப்பர். உடற்பயிற்சி, படிப்பு, விளையாட்டு, படகு ஓட்டுதல் எனப் பலவாக இருக்கும். அது ஒரு பண்பாடு. இயற்கையைத் தரிசித்துக் கொண்டேவும் இசை பயில்வார்கள். சும்மாவேனும் உட்கார்ந்திருப்பார்கள்.

நண்பகல் விருந்து என்பதே இரண்டரை மணிவாக்கில்தாம், தலைவாழை விருந்தாக மருத்துவர் சோமு ஐயா அவர்களின் வீட்டில் வெகுவிமரிசையாக இடம் பெற்றது. அதற்குப் பிறகு மாலைக்குளியலுடன் உண்டாட்டு நிகழ்வு தோட்டத்தில். நிரம்பிய வயிற்றுடன் என்னால் படுக்கையை நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. 'மாப்பு, கொஞ்சம் எங்காவது வாக்கிங் சென்று வரலாமா?' என்று கேட்டேன். இரவு 9 மணியைத் தாண்டியிருந்தது. 'வீட்டுக்கு மேலேயே சற்று நடக்கலாம் மாப்பு' என்றவர் என்ன நினைத்தாரோ, வாங்க போகலாமெனச் சொல்லி வெளியே அழைத்துப் போனார்.

தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த இடங்களில் இதுவுமொன்று. பவானியும் காவிரியும் சங்கமிக்கின்ற இடம். அதன் குறுக்கே நெடியதொரு பாலம். கும்மிருட்டு. மின்விளக்குகள் எதுவும் எரிந்திருக்கவில்லை. ஓரத்தில் நடந்து செல்லும்படியான குறுகற்தடம் ஒன்று உண்டு. அதன்வழியாக செல்ஃபோன் டார்ச் உதவியோடு மறுகோடி வரை நடந்து சென்றோம். இடப்புறம் இரு ஆறுகளும் அமைதியாக வந்து ஈருயிர்கள் ஓருயிரென ஆகிக் கொண்டிருந்தன. தொலைதூரத்தில் ஒரு மலைக்குன்று. அதோ அதுதான் குமாரபாளையம். இதுதான் பவானி. வலப்புறத்தில் பரந்து விரிந்த காவிரி, தென்னை மரங்கள், மரங்களுக்கு இடையே சாந்தமாக காளிங்கராயன் வாய்க்கால். கீழே பார்க்கின்றேன். விழுந்தால் மிஞ்சுவோமா? 'மாப்பு, இது நெம்ப ஆழமா?' என்றேன். 'ஆமாங், மாப்பு. சுழல்களோடுதான் சென்று கொண்டிருக்கின்றாள் காவிரி' என்றார். நுனியோரம் இருந்தவன் உள்பக்கமாக நடையை மாற்றிக் கொண்டேன். ஆகாசத்தில் நடந்து சென்று கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்வு.

திரும்பிவிட்டோம். ஒரே ஒருவர் சைக்கிளை நிறுத்திவிட்டு, தன்னந்தனியாக உட்கார்ந்து காவிரித் தென்றலை ஏகபோகமாக அனுபவித்துக் கொண்டிருந்தார். நாங்களும் பாலத்தின் கங்கில் அமர்ந்து கொண்டோம். கனரக வாகனங்கள் செல்லும் போதெல்லாம், ஊஞ்சலில் உட்கார்த்தித் தாலாட்டுவது போல இருந்தது. ஆமாம், அம்மாம்பெரிய பாலம் மேலும்கீழுமாக ஊசலாடியது. 'உள்ள ஸ்பிரிங் வெச்சி சட்டகங்களை கேக்போல வெச்சிக் கட்டியிருக்குங் மாப்பு' என்றார்.

இராவெல்லாம் உட்கார்ந்து கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாருமே இல்லை எங்களைத்தவிர. நீர்ப்பரப்பின் ஒளி பட்டு மரங்கள் மினுமினுப்பைக் காட்டிக் கொண்டு நின்றன. தொலைதூரத்தில் சங்கமேஸ்வரரின் கோபுரக் கலசங்கள் போல ஏதோவொன்று, அதுவும் மின்னியது. இதையெல்லாம் பார்க்காமல் என்னதான் செய்கின்றனர் மக்கள் என்பதாக ஒரு செருக்கு நமக்கு.

உண்டாட்டின் தீண்டல் நாவறட்சியாக உருவெடுத்தது. கையில் தண்ணீர் பாட்டிலோடு வந்திருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். 'மாப்பு, தண்ணித் தாகமெடுக்குது' என்றேன். பிரிய மனமில்லாமல் பிரிந்து நடை போட்டோம் வீடு நோக்கி. 

தண்ணீர் குடித்தானதும் வீட்டு மேல்தளத்துக்குச் சென்றமர்ந்தோம். சிலுசிலு காற்று. காவிரித்தாய், அவளின் பவானி எழில்மகள், வாய்க்கால், மரங்கள், வீடுகள், கூடவே பெருஞ்சாலையில் சுடுகாற்றைக் கக்கியபடிக் கக்கியபடி தீப்பெட்டிகள் போல அங்குமிங்கும் சீறிக்கொண்டிருந்த கனரக வாகனங்கள்; இவற்றுக்கிடையே இரண்டு மனிதப்பயல்கள் மொட்டை மாடியில்! வானம் எல்லாவற்றையும் கேலிப்பார்வையுடனும் புன்சிரிப்புடனும் பார்த்துக் கொண்டு இருந்தது.

6/24/2022

தாயகம்

35 ஆண்டுகளாக அந்நிய நாடுகளில் வாழ்ந்து வரும் எனக்கு ஒவ்வொரு தாயக வருகையும் மறுபிறவிதான். ஒவ்வொரு முறை வரும்போதும் சிலபல மனிதர்களைத் தொலைத்து விட்டிருப்பேன். பிறந்த மண்ணில் வாழும் மனிதர்களே எனக்குத் தாயகம். ஆகவேதான் மனிதர்களைத் தேடித்தேடிச் செல்கின்றேன். அம்மா பிறந்த ஊரிலிருக்கும் மாமாவின் தோட்டத்தில் இருந்த தாவரங்களைப் பார்த்தபடி இருந்தபோதுதான் என் சின்னம்மா என்னை அழைத்து, இது யாரென்று தெரிகின்றதாயெனக் கேட்டார். தெரியவில்லை என்றேன். சுட்டப்பட்டவர், என் சகோதரர்களின் பெயர்களைச் சொல்லி, என் பெயரையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, 'நீங்களெல்லாம் குழந்தைகளாக இருக்கும் போது, வளவுக்குள் உங்களைத் தூக்கிக் கொண்டு போய் வைத்திருப்போம். விளையாடி மகிழ்வோம்' என்று சொன்னார். எனக்கு மனம் உறைந்துபோய் விட்டது.

'இதுதா கருங்கண்ணி. நீண்ட காலமானதால் நீ மறந்து விட்டிருப்பாய்' என்றார் கவனித்துக் கொண்டிருந்த சின்னம்மா. நான் மறுமொழியாக எனக்கு நினைவிலிருக்கும், 'மாரி, முத்தி எல்லாம் நலமா?' என்றேன். 'அவர்களெல்லாம் இறந்து பல ஆண்டுகளாகின்றன' என்றார் கருங்கண்ணி. என்னை விடவும் ஐந்தாறு ஆண்டுகளே அதிக வயதுள்ள அந்தப் பெண்மணி.

காசு பணம் கொடுத்திருக்கலாம். உணர்வுப் பெருக்கில் எதுவும் தோணவில்லை. இப்படியாகப்பட்ட மனிதர்களே எம் தாயகம்.

பழமைபேசி.

6/17/2022

FeTNA: சிறுகதைப் போட்டியும் வாழ்த்துகளும்

வட அமெரிக்கத் தமிழர்களின் அடையாளமான, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையானது சிறுகதைப் போட்டி நடத்தியிருப்பது பெரும் போற்றுதலுக்குரிய செயல். அதனை மிக நேர்மையாக, உண்மையாக நடத்திய இலக்கியக்குழுவுக்குப் பாராட்டுகள். பங்கு கொண்டோர் அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்; அல்லாவிடில், முன்னெடுப்பு வெற்றி பெற்றிருக்காதுதானே?

கதைகளைத் தெரிவு செய்யும் பணியில் எனக்கும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி!  hope I was not too hard. கிட்டத்தட்ட 100 மணி நேர வேலையது. இப்போது, வழமையான நம் பணியைத் தொடர்வோம். கடந்த 2 மாதங்களுக்கும் முன்பே, 2010ஆம் ஆண்டுக்கான விழாநறுக்கினை(flyer) அனுப்பி, இப்படியாக விளம்பரப் பணிகளைச் செய்ய வேண்டுமென அறிவுறுத்திச் செயற்குழுவுக்கு மடல் அனுப்பினேன். முகமன் கருதி ஒரு பெறுகை(acknowledgement) கூடக் கிடைக்கப் பெறவில்லை. விழாவுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்த தமிழ்ச்சங்கத் தலைவர்கள் /ஆயுள் உறுப்பினர்கள் கூட்டத்தில் ஃப்ளையர் வடிவமைப்பு குறித்து மயிர் பிளக்கும் விவாதம் நடக்கின்றது. ஆவ். எனவேதான், சிறுகதைப் போட்டிப் பணிகளின் போது இடம் பெற்ற என் நயாப்பைசாக் கருத்துகளைத் தற்போது பொதுவில் வைக்கின்றேன். இனி வரும் காலங்களில் வருவோர், சரியெனக் கருதினால் பயன்படுத்திக் கொள்வார்களாக. Please take it as constructive feedback.

o0o0o0o0o0o

வணக்கம்.  சிறுகதை இப்படித்தான் அமையப் பெற வேண்டுமெனத் திட்டவட்டமாக வரையறுத்துவிட முடியுமாயெனத் தெரியவில்லை. அப்படி வரையறுத்து விட்டால், புதுமுறையில் முயன்று பார்ப்பதென்பது இல்லாமலே போய்விடும்தானே? அப்படியொன்று பிறந்து, அது வெற்றி பெறாது என்பதற்கும் எந்த உறுதியும் இல்லை. ஆனாலும் கூட, அவரவர் வாசிப்பு, எழுத்தனுபவம், புரிதலுக்கொப்ப சிலவற்றைப் பொதுப்படையாகச் சொல்ல முடியும். அவற்றுள், முக்கியமாகத் தெரிவன கீழேவருமாறு:

சிறுகதைக் கூறுகள்

1.முழுமை/விழுமியம்

சிந்தனையைக் கிளறுவதாக இருக்கலாம். அனுபவத்தைக் கொடுப்பதாக இருக்கலாம். சுட்டிக் காண்பிப்பதாக இருக்கலாம். புதிய திறப்புக்கு வழிகோலுவதாக இருக்கலாம். என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நோக்குநிலை என்னவோ, அது முழுமையாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும். நிறைவுத்தன்மை கொண்டிருக்காவிடில், கதையின் மற்றைய கூறுகளுக்கு ஒரு பொருளுமில்லை.

2. எழுத்துநடை

எளியதும் நுண்ணியதுமானதுமான தமிழ்ச் சொற்கள் கொண்டு, சொல்ல வரும் கருத்தினைக் கடத்துவதும் வாசகரைக் கதைக்குள் ஒன்றச் செய்வதுமான போக்கினைக் கொண்டிருப்பது.

3.கதைக்கரு

தனித்துவமானதும் பொதுப்புத்திக்கு எளிதில் அகப்படாததுமான ஏதொவொன்றைப் படம் பிடித்துக் காண்பிப்பது, இடித்துரைப்பது, போற்றுவது, சுட்டிக்காட்டுவதென்பதாக இருத்தல்.

4.கதைவடிவம்

சிறுகதை உத்திகளில் பலவுண்டு. தன்னிலையில் சொல்வது,  வட்டாரவழக்கில் சொல்வது,  உரையாடல், நனவோடை, இயல்புவாதம், தலைப்பு,  கருக்கதை, கதைமாந்தர், உணர்வு முதலானவற்றைத் தேவைக்கேற்றாற்போல செவ்வனே கொண்டிருத்தல்.

[இந்த நான்கு கூறுகளின் அடிப்படையிலேயே கதைகளுக்கான மதிப்பீடுகள் வழங்கப்பட்டிருந்தன]

o0o0o0o0o0o

வணக்கம். எல்லாக் கதைகளையும் வாசித்து விட்டேன். ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதுதான். தமிழில் கதை எழுத ஆசைப்பட்டு முயன்றிருக்கின்றனர். பாராட்டத்தக்கது. ஆனால், அமெரிக்கா வந்து சேர்ந்த நம்மால் ஒரு கதையை வாய்வழக்காகக் கூடச் சொல்ல முடியாதா? தொடர்ந்து எழுதாவிடினும், ’அவ்வப்போது கூடத் தமிழில் எழுதுவதில்லை’ என்பது முக்கியமாகப்படுகின்றது. அடுத்தமுறை இப்படியான போட்டிகள் வைக்கும் போது, தொடர்போட்டியாக அமைத்தல் நலம் பயக்குமெனக் கருதுகின்றேன். எப்படி?

மாதாமாதம் போட்டியாளர்கள் கதை எழுதி அனுப்ப வேண்டும். அந்தந்த மாதத்தில் எவை சிறந்த மூன்று கதைகளோ அவற்றுக்கு $50 பரிசு. இப்படித் தொடர்ந்து 12 மாதங்களும் எழுதி வருகின்ற போது, அவர்களுக்குப் போதிய பயிற்சி அமையும். மேலும், கதைகளை வாசிக்கத் தலைப்படுவர். கதை நேர்த்திகளைக் கற்றுக் கொள்ள விழைவர். கடைசியாக 36 கதைகளில் சிறந்த ஐந்து கதைகளுக்கு பெரும்பரிசுகளை அறிவிக்கலாம்.

பெரும்பாலானவற்றில் ஊர்ப் பெயர்கள் அமெரிக்க நகரங்களாக இருக்கின்றனவேவொழிய, உள்ளீடு தமிழ்நாட்டைச் சார்ந்தவையாகவே உள்ளன. அமெரிக்க விழுமியங்கள் ஆயிரமாயிரம் கொட்டிக் கிடக்கின்றன. மரம் பேணுவதினின்று, தற்பணிகள்(do it yourself), மருத்துவ ஒழுங்குகள், காப்பீட்டுப் பணிகள், பன்னாட்டுப் பண்பாட்டுப் பற்றியங்களென ஏராளமான விதைகள் உள்ளன. ஓரிரு கதைகளில் ஓரிரு பற்றியங்கள் உள்ளூர் சார்ந்தனவாக அமைந்திருக்கின்றன.

இலக்கணம், எழுத்துப்பிழை, கதைக்குத் தலைப்பிடல், கதைக்கரு ஆகியனவற்றின் அடிப்படையில் 29 கதைகளுக்கு விலக்கம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இடம் பெறுவதில், ஒருசில கதைகள் முன்பின் இருக்கலாம்; தவிர்க்க இயலாதது. எஞ்சி இருக்கும் இருபது கதைகளைக் குழுவின் பார்வைக்குத் தருவது உசிதமாய் இருக்குமெனக் கருதப்படுகின்றது.

o0o0o0o0o0o

வணக்கம். முதற்சுற்றில் தெரிவான 20 கதைகளை மீண்டும் சில முறை வாசிக்க வேண்டியிருந்தது. கதைக்கும் கதைக்கும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டி இருந்தது. ஏற்கனவே சொல்லப்பட்டதுதான். ஒரு கதை கூட அமெரிக்கக் கதையாகவோ, கனடியக் கதையாகவே இருந்திருக்கவில்லை. மாறாக, அமெரிக்காவிலும் கனடாவிலும் எழுதப்பட்ட தமிழ்க் கதைகளாகவே இருக்கின்றன. எனினும், ஈழத்தமிழ் நடையில் இருக்கும்  சில   கதைகள் சற்று வேறுபட்டு இருந்தன.

நீட்டலும் மழித்தலும் எனத் தலைப்பிட்ட கதையானது, சிறுகதைக்கான முழுநேர்த்தியைக் கிட்டத்தட்ட தொட்டுவிட்டது. ஆனால் அது ஒரு அமெரிக்கக் கதை எனச் சொல்லிவிட முடியாது. குறியீட்டுக் கதை என்கின்ற அளவில், 'அவரவர் அவரவராய் இருத்தல் நன்றாம்' என்பதைச் சொல்லாமற்சொல்லும் கதை.

புதுவானம் எனத் தலைப்பிட்ட கதை, உள்ளூர் மனநிலையைக் காண்பிக்கின்ற கதையாகப்படுகின்றது. மேலும் கூடச் செம்மையாக்கியிருக்கலாம்.

ஒரு சதவிகித ஐயம் எனத் தலைப்பிட்ட கதை, நல்ல கதைக்கரு. ஆனால் எழுதப்பட்ட விதம் இன்னும் செம்மைப்படுத்தி இருக்க வேண்டும். எழுத்துப் பிழைகள் கூடத் திருத்தப்படவில்லை.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மதிப்பீடுகள் கொடுத்தேவும் கூட, வரிசைப்படுத்துவது சிக்கலான வேலையாக இருந்தது. மற்ற திறனாய்வாளர்கள் இக்கதைகளை எதுகொண்டு, எப்படி வரிசைப்படுத்துவரோ? அவரவர் பார்வை, அவரவருக்கு. முடிவுகளைத் தெரிந்து கொள்ள ஆவல். வாய்ப்புக்கு நன்றி!

o0o0o0o0o0o

போட்டியின் அமைப்பாளர்கள் மிக நேர்மையாகத் தங்கள் பணிகளைச் செய்திருக்கின்றனர். எனவே என்னுடைய தனிப்பட்ட கருத்தாக இதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். போட்டி விதிமுறைகளின்படி ஒருவருக்கே இரு பரிசுகள் கிடைத்திருக்கின்றன. அடுத்தமுறை, ஒருவருக்கு ஒரு பரிசு என்கின்ற முறையில் அடுத்தவருக்கும் ஊக்கத்தொகை கிடைக்கச் செய்தல் நன்றாம். அதற்கொப்ப விதிமுறைகளில் மேம்பாட்டினைக் கூட்டிக் கொள்ளலாம்.

o0o0o0o0o0o

பேரவையின் சமூக வலைதளத்தில் காணப்பெற்ற ஒரு மறுமொழி. கதை, கவிதைகள் தேவையா? தேவைதாம். அமெரிக்காவில் தமிழ்ப்பள்ளிகளும், ஆசிரியர்களும் ஏராளமாக இருக்கின்றன(ர்). ஆனால், பிழையின்றி ஒரு பக்கம் எழுத, குறிப்பாகப் பேரவைக்கு எழுத ஆட்கள் கிடைப்பதில்லை. மேலும் கதைகள், கவிதைகள் என்பன வெறுமனே எழுத்துப் பயிற்சி அன்று. அது சிந்தனைப் பயிற்சி. தகவற்பரிமாற்றம்.  சோர்வின்றி, இன்னும் கூடுதல் ஊக்கமுடன் இலக்கியக் குழுவினர் செயற்பட வாழ்த்துகள், அமெரிக்க விழுமியங்களோடு!!


6/08/2022

நம்ம ஊர் தபால் பெட்டியும் தபால்காரரும்!

அழகிய அந்த ஊரில் வசிக்கும் மனிதர்களுக்கு, வெளியுலகச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பதில் அந்த தபால் நிலையத்தின் பங்கு முக்கியமானது. முகவரிகளைத் தாங்கி வரும் தபால்களைக் கொண்டு சேர்ப்பதில் தபால்காரர் கெட்டிக்காரர். அந்தத் தபால் நிலையத்திற்கு, ஊரின் பெயரை மட்டும் முகவரியாகக் கொண்ட கடிதம் ஒன்று வந்தது.. யாரிடம் இருந்து வந்ததெனும் தகவல் அதில் இல்லை. சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு  “மொட்டைக் கடுதாசி”.

கெட்டிக்காரத் தபால்காரருக்கு அதை என்ன செய்யலாமெனும் யோசனை கோலோச்சியது. அவர்தான் கெட்டிக்காரர் ஆயிற்றே?! ”தம்வேலைகடிதத்தைக் கொண்டு சேர்ப்பது மட்டும்தானே?” என்ற எண்ணம் கொண்டவராகத் தனது தலையை வலது புறம் திருப்பி, தபால் நிலையத்தின் மூலையைப் பார்த்தார். அப்போது அதனைக் கண்டதும் அவரின் மூளை வேகமாகச் சிந்தித்தது.

வலது மூலையில் இருக்கும் நகல் இயந்திரம்(Xerox photocopier machine)தான், அவரின் வலது மூளையைச் சிந்திக்க வைத்தது. அந்த மொட்டைக் கடிதாசியை உடனே ஊரில் உள்ள அனைவருக்கும் நகல் எடுத்துச் சென்று சேர்ப்பதாக முடிவெடுத்தார். அதன்படியும் செய்தார்.

முதன்முறையாக மொட்டக் கடுதாசியைக் கண்ட கிராமத்தவரும், அது தங்களுக்கு வந்த கடிதமாக பாவித்தனர். ஒருவரும் கேள்வி கேட்கவில்லை.

ஒரு நாள் வந்த மொட்டைக் கடுதாசி, வாரம் ஒன்றாக வந்தது. பின்னர்,  வாரம் ஒன்றாக வந்த மொட்டைக் கடுதாசி நாளுக்கு ஒன்றாக வந்தது. நம்ம கடமை தவறாத தபால்காரர், அந்த முகவரியற்ற மொட்டைக் கடுதாசியை நகலெடுப்பதும் அதனை அனைவர் வீட்டில் கொண்டு சேர்ப்பதுவுமாகத் தவறாது செய்தார். 

”இப்படி முகவரி அற்ற மொட்டை கடுதாசியை ஏன் அய்யா கொண்டு தருகிறீர்கள்?” என்று ஒருநாள் அந்த கிராமத்தில் உள்ள ஒருவர் கேட்டார். உடனே அந்தத் தபால்காரருக்கு வந்ததே கோபம்? ”உனக்கெல்லாம் ஒரு செய்தியை நகலெடுத்துக் கொண்டு வந்து சேர்க்கிறேன். அதனைப் பாராட்டாமல் என்னையா கேள்வி கேட்கிறாய்? மடையா, முட்டாள்!” எனக் கத்தலானார். ”உனக்கு வேண்டாமானால், அதனைப் புறந்தள்ளு, கிழித்து எறி. என்னைப்பார்த்து கேள்வி கேட்கிறாய், நீ ஒரு அடாவடி, பன்னாடை” என்றெல்லாம் இன்னும் ஆவேசமாகக் கத்தினார்.

சத்தம் கேட்டுக் கூடிய கூட்டத்தில் இருந்து ஒருவர் சொன்னார், நல்ல சண்டையென்று!  இன்னொருவர் சொன்னார், ஆமாம், இவன்களுக்கு வேறு வேலையே இல்லையென்று.

இப்படியான கதையில், மொட்டைக் கடுதாசியை எழுதுபவர் யாரென்று இன்று வரையிலும் கண்டு பிடிக்கவுமில்லை? மொட்டைக் கடுதாசியை நகலெடுப்பதைத் தவறெனச் சொல்லவும் யாரும் முன் வரவில்லை! அந்த மொட்டைக் கடுதாசியில் ஏன் ஒற்றைப் படையான, ஒருசார்புச் செய்திகளே வருகின்றதெனவும் எவரும் கேட்கவில்லை. ஆனால் தபால்காருக்கு ஒரு விருது தருவார்கள் என்பது மட்டும் நிதர்சனம். பொறுத்திருந்து பார்த்தால் அதுவும் நடக்கும். இப்படியான கதையை எழுதியவர் சிந்தனை உணர்வாளர் சிக்காகோ சரவணன் என்பார். இதைச் சொல்லாவிட்டால், எனக்கும் ஃபார்வர்டு பத்மநாபன்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்தானே?!


6/07/2022

மேல்நிலை vs ஆழ்நிலை

In shallow communities, status is based on outer appearances. You gain influence by accumulating money, power, and prestige.

In deep communities, status is based on inner character. You earn respect by becoming a person of generosity, integrity, curiosity, and humility. https://twitter.com/AdamMGrant/status/1533815641253216257

இந்த நிலைத்தகவலைப் பலகுழுக்களிலும் பகிர்ந்திருந்தேன். மருத்துவர் ஜெரால்டு அவர்கள், ”இன்னும் கூடுதலாக இதைப் பற்றி எழுதலாமே?” என்று கேட்டிருந்தார்.

”நாம் உதிரிகளாக இருக்கும் போது மட்டுமே விடுதலையின் முழுப்பயனையும் அனுபவிக்க முடியும். தமிழ் வளர்க்கின்றேனெனக் கூடுகின்றனர். குழு மனப்பான்மைக்கு இரையாகிப் போகின்றனர். இலக்கியம் வளர்க்கின்றேனெனக் கூடுகின்றனர். ஆசிரியப் பித்துப் பிடித்தவராய் ஆகின்றனர். ஆன்மீகம் வளர்க்கின்றேனெனக் கூடுகின்றனர். சாமியாருக்கு அடிமை ஆகின்றனர். நாட்டைக் காப்பாற்றுகின்றேனெனக் களமிறங்குகின்றனர். தலைவர்களுக்கு அடிவருடியாகின்றனர். நாம் உதிரிகளாக இருக்கும் போது மட்டுமே விடுதலையின் முழுப்பயனையும் அனுபவிக்க முடியும்.”

ஆடம் அவர்கள் சொல்வதும் இதைத்தான். பணம், அதிகாரம், அந்தஸ்துக்குச் சோரம் போவதுதான் மேல்நிலை மனோபாவம். ஆழ்நிலைப் புரிதல் கொள்ள முயல்பவர்கள், நோக்கம், செயல் குறித்த சிந்தனைக்கே முன்னுரிமை கொடுப்பர். எடுத்துக்காட்டாக நான் கண்டவற்றைச் சொல்கின்றேன்.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். அந்த பெண்கலைஞர் கோயமுத்தூருக்கு வந்திருந்தார். கோவை விமான நிலையத்தில் இருந்து யார் வெளிப்பட்டாலும், எங்கள் கல்லூரி வளாகத்தைக் கடந்துதான் நகருக்குள் சென்றாக வேண்டும். அவரைக் காண அப்படி அலைமோதினர் மக்கள். இதற்கும் அவருடைய வயது அதிகபட்சம் இருபதுதான் இருந்திருக்கும். பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சென்னை தொடர்வண்டியில் அவரைப் பார்த்தேன். பக்கத்து இருக்கையில்தான் அமர்ந்திருந்தார். நலமாயென்று விசாரித்தேன். மிக எளியராகக் காட்சி அளித்தார். பலரும், அவர் யாரெனத் தெரிந்திருந்தும் கண்டும் காணாதது போல இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு ஒரு பெண்கலைஞர் வந்திருந்தார். குறித்த நேரத்துக்கு வந்திருந்து, குறுகிய நேரத்தில் கிளம்பி விட்டதாக நண்பர்கள் கூறினர். மனிதச்சங்கிலிக்கு நடுவே வந்து போனதாகப் பகிரப்பட்ட படங்கள் சொல்லிற்று. நினைத்துக் கொண்டேன். இளமைதானே இத்தனைக்கும் காரணம்? அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து வந்தால் இந்த அமர்க்களம் வாய்க்கப்பெறுவாரா? எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.

எத்தனையோ நல்லவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், உழைப்பாளர்கள் வந்து போகின்றனர்; கேட்பாரற்ற தெருவோரத்து மலர்கள் போலே! இந்த பாரபட்சத்துக்கு யார் காரணம்? அண்மையில் அமெரிக்காவில் ஓர் தேர்தல் இடம் பெற்றது. அமெரிக்காவிலே சட்டம் பயின்றவர், சட்டெனத் துரிதமாய்ச் செயற்படுவதில் எடுத்தியம்புவதில் வல்லவர். முதலில் எனக்கு அவர் யாரெனத் தெரிந்திருக்கவில்லை. அறிமுகம் கிட்டியபின்புதான் கவனிக்கத் தலைப்பட்டேன். என் சிந்தனைகள் அடங்கிய சிறு கோப்பினைப் பகிர்ந்திருந்தேன். ஓரிரு விநாடிகளில் அதனை உள்வாங்கி, உடனுக்குடனே பெருந்திரளான மக்களுக்கு அவர் எடுத்தியம்பிய பாங்கு என்னைப் பெருவியப்பிலாழ்த்தியது. ஆனால் அவர் தேர்தலில் தோற்றுப் போனார். இழப்பு சமூகத்துக்கே!

பொருளின் தரம் பார்க்கப்படுவதில்லை. பொட்டலத்தின் அழகுதானே தீர்மானிக்கின்றன சந்தைக்கான வெற்றிவாய்ப்புகளை? கொந்தளிப்பிலும் பரபரப்பிலுமிருந்து விடுபட்டு, உபரியாக நிற்கும் போது நமக்கான தெளிவு பிறக்கலாம்.


6/02/2022

FeTNA:தேர்தல் முடிவுகள் கண்ணோட்டம்

வட அமெரிக்காவெங்கும் இருக்கின்ற தமிழர்களின் படியாட்கள் பங்குபெற்ற ஒரு தேர்தல் இது. இலாபநோக்கற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் மிக நேரத்தியாக நடத்தப்பட்ட தேர்தல் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.

நடத்தப்பட்டதில் இருந்த நேர்த்தி, பங்கு கொண்டவர்களிடத்தில் இருந்ததாயென்றால், இல்லை என்பதுதான் நம் பார்வையாக இருக்கின்றது. ஏன்? பங்குபெற்ற இரு அணிகளுக்கு வாக்களித்தவர்களும், தத்தம் விருப்பு வெறுப்புகள், வேட்பாளர்களின் தற்குறிப்பு, விளம்பரங்கள், பரிந்துரைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டுதாம் வாக்களித்திருக்கின்றனர். அதை எப்படி உறுதிபடச் சொல்லமுடியும்? கலந்துரையாடற்கூட்டங்கள் நடக்கின்றன. அமைப்பின் பணிகளை, கடந்தகாலத்தை, எதிர்காலத்திட்டங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு நாடி வந்தவர்கள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. 

தேர்தல் முடிவுகள் எப்படி அமைந்தன? மொத்தம் பதிவான வாக்குகள் 238. பேரவை காப்போம் அணிக்குப் பதிவான ஆகக்குறைந்த ஓட்டுகள் 102. பேரவை வளர்ச்சி அணிக்குப் பதிவான ஆகக்குறைந்த ஓட்டுகள் 108. இரு அணி வேட்பாளர்களுக்கும் கலந்து வாக்களித்தவர்கள் 28. ஆக இரு அணிகளும் சமபலத்தில் இருந்தன என்பதுதாம் என் புரிதல். மிகவும் அணுக்கமான தேர்தல்.

https://drive.google.com/file/d/1vauenlGZScDsMUKThi2wrcCDUcE-wbXo/view?usp=sharing

அன்றாடமும் அமெரிக்காவின் ஏதோவொரு மூலையில் ஏதோவொரு தேர்தல் நடந்து கொண்டேயிருக்கும். இது ஒரு தேர்தல்நாடு. மக்களாட்சியின் உயிர்மூச்சு என்பதே தேர்தல்தாம். வீட்டு உரிமையாளர் சங்கங்களுக்கான தேர்தல், இலாபநோக்கற்ற தொண்டமைப்புகளின் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல், மாநிலத் தேர்தல், ஒன்றியத்தேர்தலென தேர்தல்கள் இடம் பெற்றுக் கொண்டே இருக்கும். அப்படியான ஒரு நாட்டில் இருக்கும் நாம், தேர்தல்களை எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, நான் ஒரு தமிழ்ச்சங்கத்தின் பேராளன்(delegate). இந்தத் தேர்தலில் கலந்து கொள்கின்றேன். செயலாளர் பொறுப்புக்கு இரு வேட்பாளர்கள். இருவரும் வாக்குறுதிகள் அளிக்கின்றனர். ஏதோவொன்றின் அடிப்படையில் வாக்களிக்கின்றேன். ஒருவர் தெரிவாகின்றார். அவர் அவரது வாக்குறுதிக்கொப்ப நடந்து கொள்கின்றாரா? கவனிக்க வேண்டியது என் கடமை. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் பேராளர் பொறுப்பிலிருந்து விடுபட்டுக் கொள்கின்றேன். அடுத்த பேராளரிடம் என்னிடம் இருக்கும் தகவல், விபரங்களை முறைப்படி கையளிக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான், அவர் மீண்டும் தேர்தலில் பங்கு கொள்கின்ற போது, எடை போட்டுப் பார்க்க இயலும்.

தேர்தல்கள் இடம் பெறுவதும் பங்கு கொள்வதும் முன்னேற்றத்துக்கான அறிகுறி; ஆனால் அது முதற்படி. அடுத்ததாக அதை முறைப்படி பயன்படுத்திக் கொள்வதுதாம் உயர்வுக்கு இட்டுச் செல்லும். இப்படித்தான் நண்பர் ஒருவர் ஆவேசமாகப் பேசினார். பேரவையில் இருக்கும் ஆயுள் உறுப்பினர்களுக்கான ஓட்டுரிமையைப் பறிக்க வேண்டுமென்றார். அப்படியானால், பேரவையின் தொடர்ச்சியை, கட்டமைப்பின் இருப்பை, இயக்கத்தைப் பேணுவது யார் என்றேன். தமிழ்ச்சங்கங்கள் பார்த்துக் கொள்ளும் என்றார். அவர்கள் ஆண்டுக்கொருமுறை, ஈராண்டுகளுக்கொருமுறை மாறிக்கொண்டே இருப்பரேயென்றேன். செயலாக்கமுறையை(process)க் கட்டமைத்து விட்டால், அதன்படி அது இயங்கிக் கொண்டிருக்குமென்றார். அப்படியான முறைமையைக் கட்டமைப்பதும், கட்டமைத்தபின் அதிலிருந்து பிறழ்வதைக் கண்காணிப்பதும் யாரென்றேன். தமிழ்ச்சங்கம், பேரவைப் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை எப்படியாக இருக்கின்றதென்றேன். பதிலில்லை. கூட்டங்களுக்கு இயன்றவரை வரப்பழக வேண்டும்; அல்லாவிடில் பொறுப்பைக் கைவிடுதல் நன்றாம்.

கேளிக்கையாகத் தேர்தலில் பங்கு கொண்டுவிட்டு, பேரவையின்பால் நாட்டம் கொண்டு வினாத் தொடுப்பவர்களைக் கண்டு முகஞ்சுழிப்பதெல்லாம் நல்ல பண்பாக இருக்காது. மாறாக, அதனின்று கற்றுக் கொள்ள முயலவேண்டும். செயலாக்கங்கள் நிமித்தம் தத்தம் கருத்துகளை முன்வைத்துப் போட்டியிட முன்வர வேண்டும். அல்லாவிடில், ’அண்ணஞ்சொல்றார் தம்பி செய்கின்றான்’ எனும் போக்குத்தான் மிகும். வெற்றிக்கான களம் மட்டுமேயல்ல தேர்தல்கள். மாற்றுச்சிந்தனைகளை விதைப்பதற்கான களமும்தான் தேர்தல்கள்.

பேரவை என்பது ஒரு பண்பாட்டியக்கம். தமிழ் கொண்டு புழங்குவதுதாம் அதன் அடிப்படை. தமிழ் என்றால் அதனுள் எல்லாமும் அடக்கம்; தமிழ்க்கலை, இலக்கியம், மரபு, தொன்மை எல்லாமும். தேர்தல் நிமித்தம் மின்னஞ்சல்கள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. அதனை எதிர்மறையாகப் பார்க்கத் தேவையில்லை. அவற்றுள் கற்றுக்கொள்வதற்கு ஏராளமாக இருக்கின்றன. தனிமனிதத் தாக்குதல்கள், நெகடிவ் என்றெல்லாம் சொல்லி அகங்கலாய்த்துக் கொள்கின்றனர். இருக்கட்டுமே? அப்படியான செயலை நாம் செய்யக் கூடாதென உணர்வதும்கூட ஒரு படிப்பினைதானே? என் மீது காழ்ப்புக் கொள்வதையெல்லாம் நான் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அது அவரின் குறைபாடு. இஃகிஃகி. 

ஒருவர் மடல் இடுகின்றார். மற்றொருவர் பதிலுரைக்கின்றார். நீங்கள் ஏன் பதிலுரைக்கின்றீர்களென வினவுகின்றார் மடலிட்டவர். பதிலுரைத்தவர் சொன்னதைக் குடும்பத்தினரிடம் சொல்லிக் காண்பிக்கின்றேன். தமிழை நுகர்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு. மேலும் அந்த பதிலில் இருந்த சொல்நயமும் கருத்துநயமும் அவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றது.

இக்கடிதம்

எனக்கு வந்தது

எனக்கும் வந்தது

அதனால் இந்த பதில்!

இல்லையென்றால்

இல்லை என் பதில்!!

பேரவை விழாக்களின் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். விழா முடிந்து வீடு திரும்பும் தருணத்தில், மனத்தில் பாரமேகிப் போகும். அழுகை அழுகையாக வரும். ஏன்? புலம்பெயர்ந்த மண்ணில் தாய்பிள்ளைகளோடு இருக்கும் அணுக்கத்தை ஊட்டும்படியாக விழாக்களும் பேரவையும் இருந்தன என்பதுதான் காரணம். அதுதான் பேரவையின் விழுமியம். பொருளார்ந்த விளம்பரங்களும் பகட்டுகளும் மட்டுமே அத்தகைய விழுமியத்துக்குப் போதுமானதாக இருந்துவிட முடியாது. அன்பும் அறனும் மேலோங்குகின்ற இடத்திலே பண்பும் பயனும் மிகும். வாழ்க தமிழ்! வளர்க பேரவை!!

[காலத்தின் சான்றுகளாக இருக்கும் நம் பதிவுகள். இத்துடன் தேர்தற்காலக் கட்டுரைத் தொடர் நிறைவு பெறுகின்றது! Cheers! Bye!!]


6/01/2022

FeTNA: தேர்தலும் வாழ்த்துகளும்

பேரவையின் தேர்தலில் 95% வாக்குகள் இதுகாறும் பதிவாகி இருக்கலாமென்று நினைக்கின்றேன். வாக்களித்தவர்களுக்கும் பேரவைக்காகப் பணியாற்றக் களத்தில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இது ஒரு இலாபநோக்கற்ற தன்னலமற்ற தன்னார்வத் தொண்டு. வெற்றி பெற்றால், பணியாற்றப் பணித்திருக்கின்றார்கள் என்பது பொருள். வெற்றி பெறாவிட்டால், அந்தப் பொறுப்புகளில் பணியாற்ற வாய்ப்புக் கிடைக்கவில்லை, மாறாக வேறு பணிகளில் விருப்பமிருந்தால் தொண்டாற்றலாமென்பது பொருள். வாய்ப்பமையாதவர் குறித்துச் சொல்ல நம்மிடம் எதுவுமில்லை. வாய்ப்புப் பெறுவோர் அவசியமாகக் கண்காணிக்கப்படுவர், அது யாராக இருந்தாலும், இஃகிஃகி. ஆமாம், பேரவைப் பணிகளில் அவர்களின் பங்களிப்பு கண்காணிக்கப்படும்தான்.

1. உலகமெங்கும், தொழில் முனைவோர் மத்தியில், பேரவை மாநாடுகளுக்குச் சென்றால், முதலீடுகளை ஈட்டலாமெனச் சொல்லப்படுகின்றது. தமிழர்களின் வணிகம் பெருகுமேயானால், பேரவைக்கு மட்டுமேயல்ல, ஒட்டுமொத்த தமிழருக்கும் பெருமை. இதன்நிமித்தம், பேரவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, வணிக ரீதியில் விளம்பரப்படுத்தப்படுகின்றது. அவர்களெல்லாம் கூடுதல் விபரங்களைப் பெற, இணையதளத்திற்கு வருகின்றனர். அதுதான் பேரவையின் முகம். ஆனால் அப்படியான முகம் களையிழந்து, பொலிவிழந்து, குப்பையாக இருக்கின்றது. Vision, Mission, Outlook என்பன எல்லாமும் ஒரே சொற்றொடர்களை, ஆங்கிலத்தில் கொண்டிருக்கின்றது. ஏனைய பக்கங்களும் அரைகுறையாக இருக்கின்றன. முதல் வேலையாக, அதைச் செம்மைப்படுத்துவீர்களா?

2. அமெரிக்காவில் தமிழ்க்கல்வி, தமிழாசிரியர்கள் ஓங்கிச் சிறப்பது உண்மைதான். பெருமைதான். பல தமிழாசிரியர்கள், பேரவை முன்னோடிகளாக, முன்னாள் தலைவர்களாக இருக்கின்றனர். பேரவை இணையதளம், விழாத்தளங்கள், விழாப்பணிகள் முதலானவற்றில் தமிழின் புழக்கத்தினைக் கூட்டுவீர்களா?

3. காலாண்டுக்கூட்டங்களும், காலாண்டிதழ்களும் தொய்வின்றி இடம் பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். பேராளர்கள், தமிழ்ச்சங்கங்கள், பொதுமக்களுடனான தொடர்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும். விளம்பரப் படங்கள்/நறுக்குகள்மிகு கலாச்சாரம் ஒழிக்கப்பட்டு, எழுத்துப்பூர்வமாகவும் கூட்டங்களினூடாகவும் உரையாடுவீர்களா?

4. முன்னாள் தலைவர்களுக்கும் ஆயுள் உறுப்பினர்களுக்கும் உகந்த மதிப்பளித்து, ஊக்கமூட்டி, ஒருங்கமைந்த செயற்பாட்டுக்கு வழிவகுப்பீர்களா? நீங்கள் தற்காலிகமானவர்கள் பொறுப்புகளில்; ஆயுள் உறுப்பினர்கள் ஆயுள் முழுக்கவும் தொடர்பவர்கள் என்பதறிந்து செயற்படுவீர்களா?

5. ஆக்கப்பூர்வமாக, ஆங்காங்கே தென்படும் வழுக்களையும் பிழைகளையும் நேர்மையோடு நறுக்குத் தரித்தாற்போலச் சுட்டுவதும் மேம்பாட்டுப் பணிதான் என்பதறிந்து, விமர்சகத்தன்மையையும் தமிழ்ப்பண்பாட்டுக்குள் விதைக்க முற்படுவீர்களா? நெகடிவ் என்றெல்லாம் சொல்லி முகஞ்சுழிக்கும் போக்கினைச் சமூகத்தில், பேரவைப்பணிகளில் இருந்து களைய முற்படுவீர்களா?? வேட்பாளர்களது வாக்குறுதிகள் திரைநகல் எடுக்கப்பட்டுச் சேமிக்கப்பட்டுவிட்டன. இஃகிஃகி!

வாழ்க தமிழ்! வாழ்த்துகள்!!