2/04/2022

மனமே மனமேகு

அவசியம், தேவையானவொன்று அல்லது இன்றியமையாதவொன்று. அதற்கு முன்னம் ‘அ’ சேர்த்துக் கொண்டால், அதன் எதிர்ச்சொல்லாகிவிடும், in the form of 'anti'. அ + அவசியம் = அனாவசியம். அ + சிங்கம் = அசிங்கம். ஏகம் என்றால், எல்லா இடத்தும் பரந்துபட்டு மொத்தமாக. ஏகமாக எல்லா இடத்திலும் மழை பெய்தது. அ + ஏகம் = அனேகம். எல்லா இடத்தினின்று என்பதற்கு மாற்றாக, இந்த இடத்தில் மட்டும், விதிவிலக்காக. அனேகமாக இன்று வரலாம். இப்படியானதன் வினைச்சொல் ஏகுதல். மனமெல்லாம் நிரவிப் போதல் மனமேகுதல், affirmation. சிலபல கொள்கைகளை, பண்புகளை மனத்தின்பால் பூணுதல் என்றும் கொள்ளலாம்.

பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்கின்றன. அன்றாடம் காலை 8.55 மணிக்கு முதலோசை. ஒன்பது மணிக்கு இரண்டாமோசை. பள்ளிவளாக முன்றலில் கூட்டம் அதற்கான ஒழுங்குடன் துவங்குகின்றது. தமிழ்த்தாய் வாழ்த்து. தேசியப்பாடல். தலைமை ஆசிரியர் உரை. பின்னர் உறுதிமொழி கூறல். ‘இந்தியா என் தாய்நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள், ..’ இப்படியாக ஒவ்வொருநாளும். என்ன காரணம்? ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கால், மனம் அந்தப் பற்றியத்தினின்று தடம் பிறழாமல் இருக்கவும், அதன்பால் ஊக்கம் கொள்ளவும் நாட்டம் உடைத்தாவதுமாக ஆகும் என்பதுதான். அதாவது, மனம் யாவிலும் சிந்தனையை நிரவிச்செல்லுதல் என்பதாகும்.

தன்மீதான எதிர்மறை எண்ணங்கள் தனது செயலாற்றலின் வீரியத்தைக் குறைக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ’குளிராயிருக்கின்றது, வெளியே சென்றால் நமக்கு அது செரிவராது, இன்று விட்டுவிடுவோம், ஒருநாள் சைக்கிளிங்க போகாவிட்டால்தான் என்ன?’ என்று நினைத்தால் இல்லைதான். ‘அதற்கென்ன, நம்மிடம் தேவையான உடுப்புகள் இருக்கின்றன. அணிந்து கொண்டு போனால் குளிர் நம்மையொன்றும் செய்துவிடப் போவதில்லை, போய்வருவோம்’ என்று நினைத்தால் போகலாம்தான். இப்படியான தருணங்களிலே, மனமேகுதலெனும் பயிற்சி ஓர் உந்துதலைக் கொடுக்க வல்லது.

ஒருவரைப் பார்த்து இன்னொருவர் வினவுகின்றார், ‘பலதையும் எழுதுகின்றீர்கள். எழுதியவண்ணம் முதலில் உங்களால் இருக்க முடிகின்றதா?’. முதலில் இந்த வினாவின் முகாந்திரத்தைத் தெரிந்து கொள்ள முற்படுவோம். இவையெல்லாம் எதார்த்தத்தில் செயற்படுத்தக் கூடியதுதானாயெனத் தெரிந்து கொள்வது வினாவின் அடிப்படையாக, நோக்கமாக இருக்குமேயானால் நல்ல கேள்வி. அல்லது, எழுதியவரைச் சாடவேண்டுமென்கின்ற நோக்கில் விடுக்கப்பட்ட வினாவாக இருக்குமேயானால் அது அபத்தமான கேள்வி. பேசுபொருளின் தன்மை, சாதகபாதம், அதன் உண்மைத்தன்மை முதலானவற்றை ஒட்டியும் வெட்டியும் கலந்துரையாடும்போதுதான் பேசுபொருள் குறித்த முழுப்பார்வையும்(wholistic view) வெளிப்படும். அல்லாவிடில், பேசுபவரது விருப்பு வெறுப்பு மனச்சாய்வுக்கொப்ப ஒருசார்புப் பார்வை மட்டுமே பார்வையாளனுக்கு, வாசகனுக்குக் கிட்டும். அப்படியானவை பெரும்பாலும் உள்நோக்கம் கொண்டவையாக, சார்புடையதாக இருக்கும். அதை விடுத்து, படைப்பாளரின் கிரிடிபிளிட்டியை, சுயத்தைக் கேள்விக்குள்ளாக்குவது பொழுதை வீணாக்குவதிலேதான் முடியும். எனவே அப்படியான உள்நோக்கம் இருக்குமேயானால் அது அபத்தம். சிகரட்டுக்கு கட்டுண்டு போன ஒருவர், புகைபுடிக்காதேயெனச் சொல்லக் கூடாதாயென்ன? ஆகவே தர்க்க ரீதியாகத்தான் எதையும் அணுக வேண்டும் நாம்.

மனம் கடந்தகாலத்திலேயே இருந்து, நினைத்துக் கொண்டிருந்தால், நடப்புக்காலம் வீணாகின்றதெனப் பொருள். எதிர்காலக் கனவை, திட்டத்தை மட்டுமேயெண்ணிக் கொண்டிருந்தால் நினைப்பை இலக்கினை இல்லாதொழித்துவிடும். ஆக, நடப்புக் காலத்துக்கு நாம் ஆட்பட்டாக வேண்டும். அந்த நடப்புக்காலம் ஓர் ஒழுங்கில் செல்லும்படியாக இருக்க வேண்டும். அப்படியானதற்கு, தான் விரும்பும் செயற்பாடுகள் குறித்தான சிந்தனைகளைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் கலந்துரையாடுவதும், அந்தந்த நபரை நடப்புக்காலத்தில் இருக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் பிறழ்ந்து போகாமைக்கு வழிவகுக்கும். அப்படியானதொரு முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆகவே அந்தத் தனிமனிதரைப் பற்றிப் பேசுவதற்கு மாறாகப் பேசுபொருள் குறித்து அறிய முற்படல் மேன்மையளிக்கும். ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கால், வெளிப்படுத்துங்கால் மனம் அதனோடு பிணைத்துக் கொள்கின்றது. அடுத்தவரின் பார்வைக்கும் ஆட்படுகின்றது. அதுவே gurdrail தடம்புரளா வழிகாட்டியாகவும் அமைந்து போகின்றது. 

மனநலத்துக்கும் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளுக்கும் மனமேகுதல் (அஃபர்மேசன்) உகந்தது. எனவேதான், தொடரியக்கமாகத் தலங்களுக்கு, பாடசாலைகளுக்கு, வாசகசாலைகளுக்குச் சென்று ஊக்கமுறு கருத்துகளைத் திரும்பத் திரும்ப உள்வாங்கலும் செப்புதலும் என்பது அடிப்படை.

I am committed to improving myself and I am getting better daily. ― Idowu Koyenikan





No comments: