2/03/2022

சுவடுகள்

ஆகக்குறைந்தபட்சம் ஓராண்டாவது விடுதியில் தங்கிப் படிக்க வேண்டுமென்பது அமெரிக்காவின்  90%க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் கட்டாயம். அனுப்பப்பட்ட பிள்ளை நன்றாகப் படிக்கின்றதா என்பதைக் காட்டிலும் மனநலத்துடன் இருக்கின்றதாயென்பதில்தான் எல்லாப் பெற்றோர்களும் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பர். பணம் செலவாவதைப் பற்றியோ படிப்பைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. என்ன காரணம்? 18 வயதில் வீட்டை விட்டு வெளியில் தங்குவதினால் தன்னாட்சியுடன் அவர்கள் வாழத்தலைப்படும் போது எதிர்கொள்ளும் சவால்களும், பன்னாட்டுப் பல்லினமக்களும் வந்து படிக்கின்ற இடத்தில் நேரும் பண்பாட்டு வித்தியாசங்களினால் ஏற்படும் மனக்கசப்புகளும்தான்.

ஆண்டுக்குப் பதினொரு இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவுக்குப் படிக்க வருகின்றனர். அதிலே தோராயமாக 2 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள். அந்த 2 இலட்சத்திலே தோராயமாக 50 ஆயிரம் பேர் தமிழர்கள்.

உலகமயமாக்கல் என்பது உலகப்பொதுப் பண்பாட்டுக்கு நம்மை இட்டுச் சென்று கொண்டிருக்கின்றதென்பதை எவராலும் மறுக்க முடியாது. பிடிவாதமாக மறுத்தோ இடித்தோ பேசினாலும்கூட அதுதான் உண்மை. பெங்களூரிலும் சென்னையிலும் கால்செண்ட்டர்கள் இருக்கின்றன. ஜான், மைக்கேல் போன்ற பெயர்களிலே அந்தந்தநாட்டுப் பேச்சு, பழக்க வழக்கங்களோடு பயனர்களை அணுகிப் பேசியாக வேண்டும். ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், அதன் ஒலிப்பு, பேச்சு முறைமைகள் எல்லாம் அந்தந்த நாட்டுப் பண்பாட்டை ஒத்துத்தான் இருந்தாக வேண்ட்டும். இப்படி இதன் தாக்கம் பலதுறைகளிலும் இன்றியமையாததாகப் போய்விட்டது. எனவே, பன்னாட்டு முறைமைகளுக்கொப்ப நாம் நம்மை மாற்றிக் கொண்டாக வேண்டிய கட்டாயமும் ஏற்படுகின்றது.

வீட்டிலே, அக்கம்பக்கத்திலே எண்ணங்களும் சிந்தனைகளும் ஒவ்வாமை, பகைமை, நல்லிணக்கப்போதாமை போன்றன சார்ந்து இருக்கும் போது, இலைமறை காயாக அதன் தாக்கம் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கும் ஏற்படும். அவர்கள் வளர்ந்து மேலே வரும் போது அவர்களின் செய்கைகள், திட்டமிட்டுச் செய்யாமல் அனிச்சையாக நிகழ்ந்திருந்தாலும் கூட (ignorant), அது அவர்களின் முன்னேற்றத்துக்கு. நற்பெயருக்குக் குறைபாடாகப் போய் முடியும்.

நேரிடையாக, நீ இதைச் செய்தாய் எனச் சொல்லிவிட்டால், தொடர்புடையவர் அதைச் சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். அதையும் சொல்ல மாட்டார்கள். சிரிக்க சிரிக்கப் பேசி அனுப்பி விடுவர். ஒரு ஆய்வுப் பயிற்சிக்கான வாய்ப்பு, ஒரு விளையாட்டுக்கான வாய்ப்பு, ஒரு பிசினஸுக்கான வாய்ப்பு இப்படி எல்லாமும் நழுவிப் போகலாம். இவையெல்லாம் மறைமுகமான பக்கவிளைவுகள். பல நேரங்களில், ஹானர்கோட் வயலேசன், ரிமார்க் நொட்டேசன் போன்றவை நிகழ்ந்துவிடும். அவ்வளவுதான். அவை அந்தந்த நபரது பட்டயங்களிலே இடம் பெறும். காலம்முழுமைக்கும் அதன் தழும்பு/வடு இருந்து கொண்டேயிருக்கும். எடுத்துக்காட்டாக, ஆட்டையாம்பட்டியில் இருந்து கொண்டு ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கின்றார். அந்த நிறுவனம், அந்த விண்ணப்பதாரின் விபரத்தை, தான் பிசினஸ் செய்யும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கும். கணினியில் கணக்குக் கட்டமைக்க, பயனர்களின் விபரங்களைப் பகிர்ந்து கொள்ள எனப் பலவற்றுக்கும் அவர்கள் செக்யூரிட்டி கிளியரன்சு பெற்றாக வேண்டும். அப்படியாப்பட்ட கிளியரன்சு பெறுமையில் அன்னாரது பெயருக்குப் பங்கம் ஏற்பட்டிருப்பது புலப்பட்டால், அவருக்கான வாய்ப்பு மறுக்கப்படும். சரி, என்னதான் செய்ய வேண்டும்?

திறமை(டேலண்ட்) மட்டுமே போதுமானது அல்ல. பண்புநலம்(கேரக்டர்) இன்றியமையாதது. திறமைக்குறைபாடு இருக்கலாம், ஆனால் பண்புக்குறைபாடு இருப்பது தெரிய நேர்ந்தால் நிச்சயம் அவர் தவிர்க்கப்படுவார் பெரும்பாலும். உலகில் இருக்கும் எல்லா சமயங்களும், மாந்தசமுதாயத்துக்கான நெறிமுறைகளின் தொகுப்பே. நன்மை கருதியே அவை கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் எந்தக் கோளாறுமில்லை. நேரிய எண்ணங்களின் தொகுப்பாகக் கொள்ளலாம். நாத்திகம்/சமயம்சாராமை எனச் சொல்லிக் கொண்டாலும் கூட, சில பல ஒழுங்குகளை வரிசைப்படுத்தி இதுதான் வாழ்க்கைமுறையெனச் சொல்ல முற்படும்போது, அதுவுமொரு சமயமாகவே மாறிவிடுகின்றது. எனவே, இவை எல்லாவற்றின் அடிப்படைத் தார்மீகம் ஒன்றுதான். மாந்தநேயம், நல்லிணக்கம், கூடிவாழ்வது, பிழைத்திருத்தலை நல்வழிப்படுத்துவது மட்டுமே. எனவே கீழ்க்கண்ட பற்றியங்களைப் பற்றியொழுகல் அவசியமானது.

rumor spreading வதந்தி பரப்புதல்: உறுதியற்றவற்றைப் பரப்புவது, இட்டுக்கட்டிப் பேசுவது, ஃபேக்நியூஸ் பகிர்வது

name calling தனிமனிதத்தாக்குதல்: தொடர்பற்றமுறையில் தனிப்பட்ட நபரைச் சாடுவது

psychological manipulation உளவியற்தாக்குதல்: உணர்வுகளைத் திசைதிருப்புவதும் புரட்டிப் போடுவதும்

character assassination நற்பெயருக்குக் களங்கம்: ஒருவரை மானக்கேடாக்குவது

social exclusion சமூகவிலக்கம்: சமூகத்தில் இருந்து, மக்கட்திரளில் இருந்து விலக்கி வைப்பது

purposeful ostracism ஒதுக்கல்: பாராமுகம் கொண்டு நோகடிப்பது

extortion மிரட்டிப்பெறுதல்: பிணையாக்கிப் பயன் பெறுவது

malicious teasing அவமானப்படுத்தல்: பலர் சேர்ந்து ஒருவரைத் தனிமைப்படுத்தி அவமானப்படுத்தி நிலைகுலைய வைப்பது

slander இழிமொழிகூறல்: மொழி, இனம், சாப்பாடு போன்ற விழுமியங்களைக் கொண்டு இழிவுபடுத்துவது

avoiding தவிர்த்தல்: நாடி வருபவரை, தேடி வருபவரை திட்டத்துடன் தவிர்ப்பது

மேற்கூறிய செயற்பாடுகள் இல்லாத இடம் இப்புவியில் உண்டா? கிடையாது. கிடையாது என்பதற்காகவே taking it for granted, அனுமதிக்கப்பட்டவொன்றாகக் கருதலாமா? கூடாது. ஏனென்று சொன்னால், ஒருவருக்கு அவருக்கான சுவடு(legacy) முக்கியமானது. நம் சுவடுகள் வழியாகத்தான் நம் பிள்ளைகள் பயணிக்கத் தலைப்படுகின்றனர். எங்கோவொரு நாள், ஏதோவொரு தருணம் அவர்களுக்கு அது பின்னடைவாகப் போயே தீரும். அதைத்தான் சமயங்கள் முன்னோர் செய்த பாவம் என்கின்றன. சமயங்களுக்கும் அரசியல் கொள்கைகளுக்கும் பரிந்து பேசிப் பயனில்லை, அதனதன் அடிப்படையைப் புரிந்து கொள்ளாத வரையிலும். யாரோ சிலர் பணம் பண்ணுவதற்காக, அதிகாரப்பயன்களை அனுபவிப்பதற்காக நாம் நம் சுவடுகளைக் கறையாக்கிக்(corrupt) கொள்ள வேண்டிய அவசியமில்லை.

No matter what happens in life, be good to people. Being good to people is a wonderful legacy to leave behind. -Taylor Swift


No comments: