12/11/2021

மனித உரிமைகள் நாள்

மனித உரிமை என்றால் என்ன? இந்தப் புவியில் நான் பிறந்திருக்கின்றேன். எனக்கான ஆசைகளோடும் விருப்பங்களோடும் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கப்பட வேண்டும். அதுதான் ஒருவருக்கான மனித உரிமை. என் ஆசை என்பது, என் விருப்பம் என்பது பிறிதொருவரின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் உயிருக்கும் இடையூறாக அல்லாமல் இருந்திடல் வேண்டும். இதுதான் மாந்தநாகரிகம், மாந்தநேயம். இதற்கு மேல் எந்தப் புண்ணாக்கும் இல்லை; இல்லவே இல்லை.

ஆனால்? பணத்தாசை, மண்ணாசை, காம இச்சை, புகழாசை போன்றவற்றின் நிமித்தம் ஆதிக்கவாதமென்பது மாந்தன் தோன்றிய காலந்தொட்டேவும் இருந்து வருகின்றது. மனிதனின் அறிவுப்புலம் முதிர்ச்சி கொள்ளக் கொள்ள, மனித உரிமைகள் என்பதற்கான ஆவலும் நாட்டமும் வரையறையும் மிளிர்கின்றது. அது அறிவுப்புலத்தில் கனிந்த கனி. அந்தக் கனிக்கு ஊறு நேர்ந்து மாந்தநேயத்தில் என்றுமில்லாத அளவுக்குப் புழுக்கள் பூத்து நெளிந்து கொண்டிருக்கின்றன. ஆமாம், புழுத்துப் போய்க் கொண்டுதான் இருக்கின்றது மாந்தநேயம்; போலிச்செய்திகள், ஃபேக்நியூஸ் எனும் வடிவில் செல்லரித்துக் கொண்டிருக்கின்றன அவை.

ஃபேக்நியூஸ் என்று சாடுவதைக் கண்டதுமே எதிர்வினைகள் பிறக்கின்றன. இது காலகாலமாகவே இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இன்று என்ன புதிதாக? இப்படியெல்லாம் வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. என்ன காரணம்? ஏதோவொரு விதத்தில் அப்படியான ஃபேக்நியூஸ்களை நாமும் விரும்புகின்றோம் என்பதுதான் அதன் பொருள்.

காலாகாலமாகவே பொய், புரட்டு, திரிபுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அல்லாவிடில் மொழியில் இச்சொற்கள் இடம் பெற்றிருந்திருக்காதுதான். ஆனாலும் மாந்தவுரிமைகளுக்கான பேரவலமாக ஃபேக்நியூசைச் சொல்ல வேண்டிய தேவை எங்கேயிருந்து, ஏன் வருகின்றது?

என்றுமில்லாத அளவுக்குத் தகவற்தொழில் நுட்பம் தற்போது உச்சத்தில் இருக்கின்றது. அதன்காரணமாக மூன்ற் கோணங்களில் பன்மடிப் பெருக்கமாகப் பெருவேகத்துடன் பாய்ந்து சமூகத்தைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன ஃபேக்நியூஸ்கள். அடுத்த நொடியில் உலகமெங்கும் சென்று சேரக்கூடிய வேகம், அனுப்பும் செய்தியின் அளவு, செய்தியின் வீரியம், சென்று சேரக்கூடிய மக்கட்தொகையென எல்லாப் பண்புகளிலுமே அளவீடுகள் பெருகியிருக்கின்றன. New technologies and means of communication have meant that false information can now be spread at a faster, more alarming rate than ever before. எனவேதான் ஃபேக்நியூஸ்கள் நமக்குப் புதியதொரு பெருங்கேடாகத் தெரிகின்றது. எதிர்வினையாற்றுவாருக்குத் தெரியாத விசயமல்ல இது. அவற்றுக்கு இரையாகிப் போனதன் விளைவு அவர்களை அப்படிப் பேச வைக்கின்றதென்பதாகவே நாம் அதனைக் கருத வேண்டியிருக்கின்றது.

இப்படியான ஃபேக்நிவீஸ்கள், மக்களை முட்டாள் ஆக்குகின்றன. பொய் பேச வைக்கின்றன. மூடிமறைப்புக்கு ஆளாக்குகின்றன. முறையற்ற புள்ளிவிபரங்களை அள்ளித் தெளிக்கின்றன. மக்களைப் பிளவு படுத்துகின்றன. பகைவர்களாக ஆக்குகின்றன. ஆதிக்கத்தையும் அடிமைத்தனத்தையும் நைச்சியமாகக் கட்டமைக்கின்றன. உயிர்களைக் காவு வாங்குகின்றன. But why aren’t people angrier about the segregation, lies, cover-ups, misleading figures, division, hypocrisy and coerced medical procedures which ignore basic human rights? அணு ஆயுதம் பேரழிவு என்கின்றோம். ஆனால் அதனினும் கூரியப் பயங்கரவாதம்தான் இந்த ஃபேக்நியூஸ்கள். அடுத்த வேளை நீங்கள் என்ன உண்ண வேண்டும் என்பதை அது தீர்மானிக்கும். கணவன் மனைவியைப் பகைகொள்ள வைக்கும். மனைவிக்கு கணவனை எமனாக்க வைக்கும். நீங்கள் காண்கின்ற காட்சியில் வினை விதைக்கப்பட்டிருக்கும். செவிமடுக்கின்ற ஒலியில் வினை விதைக்கப்பட்டிருக்கும். எதையும் எதிர்க்கேள்வி கேட்டுப் புலப்படுத்திக் கொள்ள வேண்டியதன் தேவை பலவாகப் பெருகியிருக்கின்றது.

அறிந்தோ, அறியாமலோ அவற்றை நமக்கு அனுப்பி வைப்பர். நாமும் அவ்விதமே அறிந்தோ அறியாமலோ பிறருக்கு அனுப்பி வைப்போம். காசு, பணம் கட்டிப் பரப்புரைகள் வாயிலாக இடையறாது புகட்டப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன இவை. மனிதனுக்கு பொருளாதார, சமூக உரிமைகளை நிலைநாட்டவல்ல தேர்தல்களிலே ஃபேக்நியூஸ்கள். மருத்துவ உரிமைகளைப் பெறுவதிலே வளைக்கப்பட்ட செய்திகள், தகவல்கள். சமூக இணக்கத்தைச் சீர்குலைப்பதற்கென்றே சாதி, சமயம், மொழியின்பாற்பட்ட அவதூறுகள், ஃபேக்நியூஸ்கள். இப்படியானவை மக்களைத் தொடர்ந்து கொதிநிலையிலே, கொந்தளிப்பிலே, ஆர்ப்பரிப்பிலே உணர்வுக்கடலில் மூழ்கிக் கிடக்க வைக்கின்றன.

சமத்துவம், தன்னுமை, அமைதி, மனவுறுதி, சட்டத்தின் ஆட்சி, அறம்போற்றுதல், உழைப்பு ஆகியனமட்டுமே மனிதனை மனிதனாக்கும்; அழகாக்கும். இவற்றுக்குக் கேடு விளைவிக்கின்ற வேறெதுவும், மாந்த உரிமைகளுக்கு வழிவகுக்காது. மாந்தனாயிருக்க, ஃபேக்நியூஸ்களை வெறுத்தொதுக்கச் சூளுரைப்போம்! The idea of cultural policing is nothing but an excuse to violate human rights! Dare to counter fake news!!

-பழமைபேசி, டிச 10, 2021.

No comments: