உரசல் குறித்த நம் மனப்பாங்கு எப்படியெல்லாம் இருக்க நேரிடுகின்றது?
1. அதுவொரு சின்ன விசயம், நான்தான் பெருசா நினைக்கிறம் போலிருக்கு.
2. என்ன செய்றதுன்னு தெரீல, ஆனா அது எனக்கு ஒப்புதலா இல்லை.
3. நாம அதை சொன்னா, மத்தவங்க கோபப்படுவாங்க அல்லது நம்மளை கீழாக நினைப்பாங்க.
4. நாம பேச வெளிக்கிட்டா, உறவு முறியக்கூடும்.
இவையெல்லாமுமே நாம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். இவற்றுக்காக நாம் அந்த உரசல் குறித்தான பற்றியத்தைக் கைவிட்டு நகரந்தாலும், நம் மனம் அதனைக் கைவிடுவதில்லை; மாறாக உள்மனக்குரங்காக இருந்து கொண்டேவும் ஆட்டம் போடுகின்றது. இது போன்ற உள்மனக்குரங்குகள் ஒவ்வொன்றாகக் கூடிக் கொண்டே போகும் நிலையில், எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறக்கூடுமோயெனும் நிலையை எட்டிவிடுகின்றது மனம் . உணர்வுகள் அடக்கப்படுகின்றன வெளித்தோற்றத்துக்கு; ஆனால் உள்மன அழுத்தம் கூடிக்கொண்டேவும் இருக்கின்றது.
உரசல், மாற்றுக்கருத்து என்பது உள்ளபடியேவும் ஒரு நல்வாய்ப்பாகும். உறவுகளை மேம்படுத்திக் கொள்ள, அடுத்ததொரு நிலைக்கு எடுத்துச் செல்ல வழிகோலக் கூடியதாகும். அதையொரு தடைக்கல்லாகப் பார்க்காமல், அதில் இருக்கும் நன்மையென்ன, மாற்றுவழியென்ன என்பதைப் பேசி ஒருவொருக்கொருவர் இடையேயான நேர்மையை, வெளிப்படைத்தன்மையை மென்மேலும் கட்டமைத்துக் கொண்டே போகலாம் நாம்.
பேசிக் கொட்டிவிட்டால் இனி மறைப்பதற்கேதுமில்லை. ஓடித் திரியலாம் அந்த சின்னஞ்சிறு அணில்கள் போலே, தெருவோரத்து நாய்க்குட்டிகள் போலே!
1. என்ன பிரச்சினை? அதையொட்டிய உன் நிலைப்பாடு, உணர்வுகள்தாம் என்ன? எப்படி இருக்க வேண்டுமென நீ நினைக்கின்றாய்? திறந்த மனத்தோடு வா, பேசலாம்.
2. பொதுவெளியில் பேச விருப்பமில்லையா, தனித்துப் பேசலாமே? வா.
3. நான் உன்னிடம் பணிகின்றேன். அதே போல நீயும் பணிந்துவிடு. பிரச்சினையைப் பேசுவோம், நீயும் நானும் நமக்குள் ஒருபொருட்டல்ல.
4. நீ பேசு, நான் கேட்கின்றேன். நீ பேசி முடி, சத்தம் போடாதே. ஆனால் உன் உணர்வுகள் எல்லாவற்றையும் சொல், சொல்லி முடி, பிறகு நான் பேசுகின்றேன்.
5. பேசுபொருளுக்குள் மட்டுமே நேரத்தை செலவிடுவோம். எனக்குள் இருப்பது நீ. ஆகவே நான் பெறுவதெல்லாமும் நீ பெறுவதாகவே ஆகும்.
6. இடம், பொருள், சூழலுக்கும் நாம் பொருந்திப் போக வேண்டும். இருவருமே இணங்கி அதை நோக்கிச் செல்லத்தான் வேண்டும்.
இப்படி, அவரவர் வசதிக்கேற்ப வழிகள் ஆயிரம் உண்டு. அத்தனைக்கும் அச்சாரம் உரையாடல். உரையாடாமல் ஒரு நூலிடை கூட முன்னேறுவதில்லை நாம். அமைதி முக்கியம்தான். அமைதியாகவே இருந்து விட்டால் வாழ்வில் சூன்யமே மிஞ்சும்.
If you avoid the conflict with no conversations to keep the peace, you start a war inside yourself! பாரம்சுமந்துதிரியப் பிறந்தவரல்ல நாம், பேசித்தீர்த்துவிடு!!
-பழமைபேசி.
No comments:
Post a Comment