10/06/2021

வாதம் பிரதிவாதம் விவாதம்

அமெரிக்காவில், கதைகள் ஆய்வு, கருத்தாடு மன்றம் போன்றவையெல்லாம் இரண்டாம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. என்னடா இவன் எப்போது பார்த்தாலும் அமெரிக்கா, அமெரிக்காயென்று சொல்லியே பேசுகின்றான் என்றேல்லாம் ஒவ்வாமை கொள்ளத் தேவையில்லை. மாறாக, உரிய தரவுகள், சான்றுகள் கேட்டால் அளிக்க முற்படுவேன்.

https://schools.cms.k12.nc.us/communityhouseMS/Pages/CHMS-Clubs.aspx தற்போதைக்கு, மகளார் படிக்கும் இந்தப் பள்ளியின் சுட்டியைச் சொடுக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் பொருட்டுத்தான், குழந்தைகளுக்கும் முதன்தலைமுறைக் குடிவரவுப் பெற்றோருக்குமான இடைவெளி நேர்கின்றது. அவர்கள் நம்மைப் பற்றி ஒரு மதிப்பீடு கொண்டிருப்பார்கள். அந்த மதிப்பீடு மேம்பட வேண்டுமானால் இவற்றையெல்லாம் நாமும் அறிந்து கொள்வது அவசியம்.

வீட்டில் பேசுகின்றோம். ஆன்லைனில் உரையாடுகின்றோம். உணர்வின் அடிப்படையில் செயற்படுவது ஒருவிதம். நுட்பங்கள் அறிந்த நிலையில் செயற்படுவது ஒருவிதம். நம் கருத்தாடலைப் பார்த்து, நம் குழந்தை நம்மைக் கேலி செய்யக் கூடும். ஆனால் குழந்தை கேலி செய்வதைக் கூட அறிந்திராத நிலையில் நாம் இருப்போம். ஏனென்றால் அவர்கள் குறிப்பிடும் ஆங்கிலப்பதத்தின் விபரம் நமக்குத் தெரிந்திருக்காது. ஆகவே வாத விவாதங்களில் முன்வைக்கப்படும் முறை சரியானதாக இருந்திடல் வேண்டும். ஏரணமற்ற வாதங்கள் எத்தகையது?

1.திரிபுவாதம் (Straw Man Fallacy): வாதத்தை திரித்துக் கொண்டு போவது அல்லது மேலெழுந்தவாரியாக எடுத்துக் கொண்டு பேசி, பேசுபொருளை வலுவிழக்கச் செய்வது.

”அடுத்தவாட்டி யுடியூப்ல இருக்கிறமாரி செய்து பார்க்கணும்!” “அப்ப நான் வெச்சிருக்கிற குழம்பு உங்களுக்குப் பிடிக்கலை; நல்லா இல்லை; அப்படித்தானே? இந்த 8 வருசமா எதையும் சொல்லலை. இப்ப என்ன திடீர்னு? எதா இருந்தாலும் ஓப்பனா சொல்லுங்க!”

2.மந்தைமனோபாவவாதம் (Bandwagon Fallacy): சொல்லப்படும் கருத்துக்கு ஏதுவாக ஆட்களைக் கொண்டமைத்துப் பேசுவது அல்லது பெரும்பான்மை ஆதரவு என்கின்ற ரீதியில் பேசுவது. எங்கே ஆதரவு கூடுமானதாக இருக்கின்றதோ அதுதான் சரியானதாக இருக்கும் என நினைத்து மற்றவரும் சேர்ந்து கொள்ளும் இயல்புடையது இத்தகைய வாதம். எல்லாரும், அல்லது பெரும்பான்மை என்பதாலேயே எடுத்தியம்பும் கருத்து சரியென்றாகி விடாது.

”இங்க இருக்கிற எல்லாருமே சொல்றாங்க. அப்புறமென்ன நீ மட்டும்? கர்நாடகாவில்தான் பெட்ரோல் விலை குறைவு”

3.பிரபலத்தன்மைவாதம் (Appeal to Authority Fallacy): சமூகத்தில் வசதி படைத்தவர், விஐபி, பிரபலம், செலிபிரட்டி, பிரின்சிபல், ஆசிரியர், இப்படி யாராவது ஒருவரைக் குறிப்பிட்டுப் பேசிய மாத்திரத்தில் அது சரியானது என்றாகிவிடாது.

“போன மாசம் அப்படி ஆயிருச்சேங்றதுக்காக நாம திருத்தம் செய்யணும்ங்றது இல்லை. சரவணன் சொல்றாரே? அவர் சொன்னா சரியா இருக்கும்!”

4. அச்சுறுத்துவாதம் (False Dilemma Fallacy): அச்சுறுத்தி, பொய்மையைக் கட்டமைத்து பேசுபொருளுக்குக் கடிவாளம் இடுதல்.

“அப்பா சொல்றபடி செய்யலாம்; இல்லன்னா தெருவுல பிச்சை எடுக்க வேண்டியதுதான் எல்லாருமா!”

5.பொதுமைவாதம் (Hasty Generalization Fallacy): எதையும் ஓரிரு எடுத்துக் காட்டுகளைக் கொண்டு எல்லாமுமே அப்படித்தான் எனப் பொதுமைப்படுத்தி பேசுபொருளை மட்டையாக்கிவிடுவது.

“துளசி தின்னு தொண்டைவலி அவனுக்கும் நல்லாயிருச்சி. இவனுக்கும் நல்லாயிருச்சி. ஆகவே துளசி தின்றால், தொண்டை வலி பூரணமாகக் குணமாகிவிடும்”.

6. தவிர்ப்புவாதம் (Slothful Induction Fallacy): உரிய சான்றுகள், ஏரணம் இருந்தாலும் கூட, அவற்றையே நீர்த்துப் போகச் செய்து பேச்சைக் கடத்திக் கொண்டு போவது.

“போனவாட்டி முதல் பத்துல வரலைதான். இப்ப இன்னமும் 2 கிலோ எடை கூடியிருக்குதான். அதுக்காக டீம்ல இருந்து வெளியேத்திட முடியுமா? அதனாலேயே இந்தவாட்டி வெல்லுறதுக்கு இடமில்லைன்னு முடிவு கட்டிறமுடியுமா??”

7.உடன்நிகழ்வுவாதம் (Correlation Fallacy): அதே இடம், சூழல், தருணத்தில் நிகழ்ந்தவொன்றைக் காரணம் காட்டி நிறுவ முற்படுவது.

“அன்னிக்கி நான் நீலக்கலர் சேலைதான் கட்டி இருந்தன். இதுக்கு முன்னாடியும் நோட் செய்திருக்கன். எப்பல்லா நீலக்கலர் ட்ரஸ்ல இருக்கணோ, அந்த எக்சாம் மார்க் கொறவுதான். நீலக்கலர் டிரஸ் எக்சாமுக்கு நல்லதில்லை”

8. நிறுவுசிக்கல்வாதம் (Burden of Proof Fallacy): ஏதாகிலும் ஒன்றை மெய்யெனச் சொன்னால், சொல்பவர்தாம் அதை மெய்ப்பிக்க வேண்டும். உன்னால் பொய்யென நிறுவ முடியவில்லையல்லவா, அப்படியானால் அது மெய்யென வாதிடுவது.

“அமாவாசையன்று பொறந்தவன் திருடனாக அல்லாமல் இருக்கவே முடியாது”

9. சேர்ந்திழுப்புவாதம் (Tu quoque Fallacy): ஒன்றைச் சொல்ல முற்படும்போது, பிறிதொன்றைக் காரணம் காட்டி சொல்ல வந்த கருத்தை மட்டையாக்கிவிடுவது.

“எந்த சூழலிலும் மறுகரைக்குச் செல்வது அவசியம். முகேசுக்கு நீச்சல் தெரியாது; எனவே....” “உனக்கு மட்டும் நீந்தத் தெரியுமாயென்ன?”

10.குழப்புவாதம் (Red Herring Fallacy): தொடர்பில்லாத கருத்துகளை வேகமாக அடுக்கி பேசவந்த கருத்தை மட்டையாக்கிவிடுவது.

“அந்தக் கதவு இப்ப சரி செய்றதுக்கு இல்ல; இப்படித்தான் மரக்கடைக எல்லாம் கொள்ளையடிக்கிறாங்கன்னு அவங்க சொல்லப் போயி, அது உண்மையில்லையாம். மரக்கடக்காரங்கெல்லாம் சேர்ந்து சொன்னாலும் அது மரக்கட இரும்புக்கடைங்ற பிரச்சினையாகி, கலெக்டர் வந்து, அந்த கலெக்டர் அப்பாயிண்ட்மென் செய்ததே செரியில்ல, அவன் எப்படி செரியாப் பேசுவான், ஆனாலும் அவன் வந்து...”

11.கழிவிரக்கவாதம் (Appeal to Pity Fallacy): அனுதாபம் ஏற்படும் வகையில் ஏதோவொன்றைச் சொல்லி பேசுபொருளைக் கடத்திச் செல்வது.

”நீங்க என்னோட நிலைமையவும் யோசிச்சுப் பார்க்கணும். கை அடிபட்டு இருக்கு. கூடவே தலைவலியும். அதிலயும் எழுதி 87 மார்க் வாங்கி இருக்கன். ஒருவேளை அப்படியான நெலம எனக்கு இருந்திராவிட்டால் என்ன ஆகியிருக்கும்? ஆகவே, A+ கிடைக்கக் கூட 3 மார்க் கொடுக்கிறதுல என்ன பிரச்சினை? ”

12. பொருள்மயக்கவாதம் (Equivocation Fallacy): ஏதோவொரு சொல், பழமொழி, சொலவடை, பாட்டு, ஏதாகிலும் ஒன்றைச் சொல்லி பேசுபொருளின் திசையை, பொருளை மாற்றிவிட்டு மட்டையாக்குவது.

“உங்க கட்சி பணத்தை மான்யங்களுக்குச் செலவிடும் சொல்லி இருக்கு. நம்ம பணம் வீணாகும். ஆனா எங்க கட்சி, ஃப்ரீஸ்கீம் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தப்போகுது, அதுபோக சொச்சோபுச் திட்டங்களும் வரப் போகுது”

13.நட்டயீட்டுவாதம் (Sunk Cost Fallacy): ஏற்கனவே ஏற்பட்ட இழப்பைக் காண்பித்தே பேசுபொருளை அழித்தொழிப்பது.

“எதிர்பார்த்த அவுட்புட் இல்ல, அதுக்காக இப்ப அதையெதுக்குக் கைவிடணும்? ஏற்கனவே 80%, 7 கோடி ரூபாய் செலவு செய்தாச்சி. இன்னும் 2 கோடிதானே?? செய்து முடிச்சிடலாம்!”

14.இயல்புநிலைவாதம்( Causal Fallacy): எதார்த்தங்களைக் கொண்டே பேசுபொருளை மட்டையாக்குவது.

“எப்ப சூரியன் வருது? கோழிகூவுனதும் சூரியன் வருது. அப்ப இந்த உலகத்தின் போக்குகளைக் கணிக்கவல்லது சேவற்கோழிகள். அதனாலதான் உலகம் முழுக்கவுமே சேவலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. அதனால சேவல் ஆராய்ச்சிக்கே கூட செலவு செய்யாத பணத்தை, அந்தத் திட்டத்துக்கு செலவு செய்றது வீண்”.

15. சொன்னதுகூறல்வாதம் (Circular Argument Fallacy): சொல்லப்படும் கருத்தையே சொல்லப்படும் கருத்துக்குச் சான்றாகக் காட்டுதல்.

“நான் திறமையானவன். ஏன் அப்படிச் சொல்றன்னா, திறமையான மூளையக் கொண்டு செயற்படும் ஆற்றல் எனக்கிருக்கு. அதனாலதான் நான் சொல்றன், நான் ஒரு திறமையானவன்னு!”

நம் குழந்தைகள் நாம் பேசுவது, முறையிடுவது, அறைகூவல் விடுப்பது, கொந்தளிப்பது கண்டு, இவற்றுள் ஏதொவொரு பதத்தைக் குறிப்பிடலாம். ‘it doesn't make any sense, playing with red herring, trying to put words on my mouth' போன்ற சொல்லாடல்களைப் பாவிக்கலாம். அப்படியான சொல்லாடல்கள் இடம் பெறும் போதெல்லாம், நம் மதிப்பீட்டில் ஒரு புள்ளி குறைகின்றதென்பதே பொருள். உஷாரய்யா உஷாரு!!

No comments: