1. பலபேர் முன்னிலையில் தவறு சுட்டிக்காட்டப்படும் போது, தமக்கு ஏதோ இழுக்கு நேர்ந்து விட்டது போன்ற எண்ணம்.
2. சுட்டிக்காட்டுபவர் தனக்கான மேட்டிமையைக் கட்டமைத்துக் கொள்கின்றாரெனும் எண்ணம்.
இவற்றுக்கு அஞ்சி அஞ்சியே, வாளாதிருந்துவிடும் சமூகமாக நாம் ஆகிவிட்டோம். உரையாடலுக்கு இடமில்லை. எங்கு உரையாடலுக்கு இடமில்லையோ அங்கு மனிதனுக்கான தன்னாட்சி இல்லை என்பதே பொருள். நினைத்ததைச் சொல்ல முடியவில்லையெனும் போது, அங்கு தமக்கான விடுதலை இல்லை என்பதுதானே? நினைத்தேன் என்பதற்காக, அவச்சொல், இழிசொல், அநாகரிகம், மலினம் போன்றவற்றைப் பாவிப்பதல்ல விடுதலையென்பது. ஒரு மாற்றுக்கருத்து, பிழையைச் சுட்டுதல் என்பதற்குக் கூட இடமில்லையானால் அது என்ன சுதந்திரம்?
பெரிய பெரிய பிரபலங்கள் டிவியில் தோன்றுகின்றார்கள். பேசுகின்றார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்கின்றனர். அவற்றிலே தென்படும் பிழைகளைச் சுட்டுவதிலே என்ன அநாகரிகம் இருந்து விடப் போகின்றது?பெரியார் ஈ.வெ.ரா பேசியதை ஜெயகாந்தனும், ஜெயகாந்தன் பேசியதை பெரியாரும் ஒரே மேடையில் விமர்சித்துக் கொண்டதைக் கொண்டாடுகின்றோம். விமர்சகப் பிதாமகர் வெங்கட் சாமிநாதன் என்பதாக வாசித்துத் தெரிந்து கொள்கின்றோம். அப்படி இருக்கும் போது, நான் எழுதியதில் இருக்கும் தவறினை ஒருவர் சுட்டும் போது நான் ஏன் சினம் கொள்ள வேண்டும்?
இது டிஜிட்டல் யுகம். எல்லாரும் உள்ளீட்டுக்காக ஏங்குகின்றனர். அதற்காக வித்தியாசமாகப் பேசிக் கவர வேண்டுமென்பதற்காக, ஆல்ட்டர்நேட் என்கின்ற பெயரிலே உறுதிப்படுத்தப்படாத, சான்றில்லாத, தன்கருத்துக்கு வளைக்கப்பட்டதெனப் பலதையும் மெய்யும் பொய்யும் கலந்து விட்டடித்துக் கொண்டிருக்கின்றனர். யுடியூப் காணொலிகளிலே பெருமளவு மிஸ்லீடிங், புரட்டும் திரிபும்தான் காணக்கிடைக்கின்றது. அவற்றைக் குழுவிலேயோ, அல்லது அலுவலகத்திலேயே காண்பிக்கப்படும் போது, அவற்றுக்குப் பின்னாலான கேள்வி பதில் நேரம் அமைய வேண்டும்.
சும்மா யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பகிரலாம். பார்ப்போர் பாராட்டலாம் அல்லது பார்த்துவிட்டுச் சும்மா இருக்கலாம் என்பது மாந்தனுக்கு மேன்மையை ஒருபோதும் ஈட்டாது. அது ஒரு பொய்யான சூழலையே நமக்கு ஈட்டுத்தரும்.
முறையான வழியில் பேசுபொருளின்பாற்பட்ட கருத்தாக அது இருக்க வேண்டும்; பகிரும் தனிமனிதர் குறித்தானதாக இருந்திடக் கூடாது. இடப்படும் கருத்தினையும் அந்தத் தனிமனிதர் தனக்கெதிரானதாக நினைத்திடக் கூடாது. இவையிரண்டில் எது மேலிட்டாலும், அது அவருடைய அகந்தையென்பதே பொருள்.
Be open to criticism and keep learning.If someone feels afraid to tell you honest criticism, then you're never going to improve. -Cole Sprouse
https://www.linkedin.com/pulse/when-someone-corrects-you-feel-offended-have-high-ego-kishore-shintre
No comments:
Post a Comment