வணிகப்போக்குவரத்து என்றால், அதிலும் கடற்போக்குவரத்து என்றால் அது அமெரிக்காதான். ஏனென்றால் இன்றளவும் 90% முக்கிய கேந்திரங்களின் ஆட்சி அமெரிக்காவிடம் உள்ளது. இவற்றுள் இன்னமும் ஒரு விழுக்காட்டினைக் கூட்டுவதில் முனைப்புக் காட்டுமேவொழிய குறைத்துக் கொள்வதில் எந்தவொரு நாடும் முனைப்புக் காட்டாதுதான்.
சோவியத் ரஷ்யா என்பது 1991ஆம் ஆண்டு பதினைந்து நாடுகளாகச் சிதறுண்டு போனது; இரஷ்யா, உக்ரைன், ஜியார்ஜியா, பெலாருசியா, உசபெக்கிசுதான், ஆர்மீனியா, அசர்பைசான், கசகஸ்தான், கிர்கிஷ்தான், மால்டோவா, துர்க்மினிஸ்தான், தஜகிஷ்தான், லாட்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா என்பனவாக. 1991 ஆகஸ்டு 24ஆம் நாள் சோவியத் அதிபர் கோர்பச்சேவ் பதவி விலகினார். அதேநாளில் உக்ரைன் தன்னைத் தனிநாடாகவும் அறிவித்துக் கொண்டது.
தன்னாட்சி பெற்றுக் கொண்ட நாடுகளில் பலவற்றிலும் சர்வாதிகாரிகளே ஆண்டு வருகின்றனர். சிலநாடுகள் கிழக்கு ஐரோப்பா என அழைக்கப்பட்டு, அவற்றுள் சில அமெரிக்காவின் தலைமையிலான நேசநாடுகள் அமைப்பிலும் உறுப்புநாடுகளாக இருக்கின்றன. அவற்றுள் உக்ரைனும் ஒன்று.
2014ஆம் ஆண்டு அப்போதைய உக்ரைன் பிரசிடெண்ட் விக்டர் யானுகோவிச் என்பார், ஐயோப்பிய யூனியனிலிருந்து விலகி இரஷ்யாவின் நேசநாடாக இருக்க முடிவெடுத்ததை முன்னிட்டு எழுந்த மக்களின் கிளர்ச்சியினாலே பதவியிழந்தார். உடனடியாக, உக்ரைன் நாட்டின் கிரீமியா தீபகற்பத்தை இரஷ்யாவுடன் இணைத்துக் கொள்வதாக அறிவித்து ஆக்கிரமித்துக் கொண்டது இரஷ்யா. இரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் நாட்டின் தொழில்வளப்பகுதியான டான்பாஸ் பகுதியை கைப்பற்றிக் கொண்டனர். ஏன்?
குளிர்காலம் வந்துவிட்டால் தனக்கெனத் துறைமுகம் எதுவும் அற்றுப் போய்விடும் இரஷ்யா. மற்றநாடுகளை நம்பித்தான் இருந்தாக வேண்டும். அதுவரையிலும் தனக்கேதுவான உக்ரைன் நாட்டுத் தலைவர் இருந்தபடியினாலே, கிரீமியாவில் இருக்கும் கருங்கடற்துறைமுகமான செவஸ்டோபோல் எனும் துறைமுகத்தைத் தன்வசம் கொண்டிருந்தது இரஷ்யா. இந்தத் துறைமுகம் உறைதன்மையினால் பாதிக்கக் கூடியது அல்ல. கூடவே கருங்கடலுக்கும் பாரசீகவளைகுடாவுக்குமான வாய்க்காலையும் தன் வசப்படுத்தியிருந்தது. இந்தத் துறைமுகத்துக்காகவேண்டியே கிரீமியாவைத் தன்வசப்படுத்திக் கொண்டது இரஷ்யா. முன்சொன்ன வாய்க்காலுக்கும் ஆப்பு வைக்க, துருக்கிநாடானது அமெரிக்காவின் ஒத்தாசையுடன் தனி வாய்க்காலை வெட்டிக் கொள்ளத் துவங்கி இருக்கின்றது என்பது தனிக்கதை.
கிரீமியாவிலிருந்து தரைவழியாகப் போய்வர வேண்டுமானால், அமெரிக்காவின் நேசநாடான உக்ரைன்நாட்டுக் கிழக்கெல்லையிலும் இரஷ்யாவின் மேற்கெல்லையிலுமாக இருக்கும் அந்த சிறு தரைவழிச்சாலையின் தயவு தேவையாய் இருக்கின்றது இரஷ்யாவுக்கு. ஆகையினாலே, அந்தச் சாலைக்கு ஒட்டியபடி இருக்கும் டான்பாஸ் பகுதி ஆதரவுக் கிளர்ச்சியாளர்களின் மூலமாக அதனைக் கைப்பற்றத் துடிக்கின்றது இரஷ்யா. இதுவரையிலும் இந்த மோதலின் காரணமாக 14 ஆயிரம் பேர் உக்ரைனில் கொல்லப்பட்டு இருக்கின்றனர். நேசநாட்டின் பகுதி தம் பகுதி, அதற்கான பாதுகாப்புக்கும் நாங்களே பொறுப்புயென எதிராக இருக்கின்றன நேசநாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு முதலான நாடுகள். இரஷ்யா தன் எல்லையை மேற்குநோக்கி விரிவாக்க ஏராளமான படைகளை நாளுக்கு நாள் அந்தப் பகுதியில் குவித்துக் கொண்டே இருக்கின்றது. எதிரிக்கு எதிரி நண்பன் என்கின்ற முறையிலே அந்தந்த நாடுகள் அணி சேரத் துவங்கியிருக்கின்றன.
இந்தியாவானது, அமெரிக்காவுக்கும் இரஷ்யாவுக்குமிடையே பொதுத்தன்மையுடன் இருக்கின்றது. சீனாவும் இரஷ்யாவும் எத்தகைய அளவுக்கு நெருங்குமென்பதைப் பொறுத்து, அமெரிக்கா இந்தியாயிடையேயான அணிசேரல் அமையும் என எதிர்பார்க்கலாம். இரஷ்யாவும் சீனாவும் நெருங்கிக் கொண்டால், சீனாவுக்கான பல கதவுகள் மூடப்பட்டுவிடுமெனச் சீனாவும் சிக்கலில் ஆழ்ந்திருக்கின்றது. இரஷ்யாவின் மீது ஏற்கனவே பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அது இன்னமும் வலுப்பட்டால், இரஷ்யாவுக்குள்ளேயே உள்நாட்டுக் கிளர்ச்சிகள் தோன்றக் காரணமாகவும் அமையலாம். இரஷ்யாவை விட்டுக் கொடுத்து விட்டால், தமக்கான வலுவும் குறைக்கப்பட்டு விடுமோயென அஞ்சுகின்றது சீனா. தேசதேச உறவுகள் என்பது அப்படித்தான். ஒன்றை எட்டிப் பிடித்தால் இன்னொன்று கைவிட்டுப் போகும்.
தலைவர் பைடன் 40 ஆண்டுகால ஜியோபாலிடிக்ஸ் அனுபவம் கொண்டவர். எப்படித் தன் வியூகங்களைக் கட்டமைப்பார்? உலகமே உற்று நோக்குகின்றது. Here comes year 2022!!
2 comments:
எதாத்தமான விளக்கம்..நன்றிங்க...
En Yakın Hurdacı firması Rüzgâr Hurda Metal aracılığıyla tüm hurdalarınızı değerlendirebilirsiniz.
Post a Comment