பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்
முடைச்சாகா டச்சிற் றுழி - நாலடியார் 48.
வணக்கம். சரியாக முப்பது மாதங்கள்; கிட்டத்தட்ட
900 நாட்கள்,
750 இடுகைகள். இவையெல்லாம் வெறும் எண்ணிக்கையே. எண்ணிக்கைகள் மட்டுமே வாழும் வாழ்க்கைக்குச் சிறப்புச் சேர்த்திடுமா? இன்றைய சூழலில், எங்கு காணினும், எதையும் எண்ணிக்கைதானே நிர்ணயிக்கிறது; ஆக, எண்ணிக்கை என்பது இன்றியமையாததுதானே?
வினா நம்மையும் சூழ்ந்தது. என்ணிக்கை நிர்ணயம் என்பது தற்காலிக வெற்றியாக இருக்குமே ஒழிய, அது வாழ்வாங்கு வாழ்ந்திடப் போவதில்லை. புறச்சூழல் கருதிக் கிடைக்கும் பாராட்டு எவையும், சூழல் மாறுகிற தருணத்தில் செல்லாக் காசுகள் ஆகிவிடும்.
அகம் கருதிக் கிடைக்கிற பரிசும், பொருளும், பாராட்டும் என்றென்றும் நம்மோடு வரும். மண்டிப் பெடைச் சேவலும், வன்கழுகுமாகச் சேர்ந்து உயிரற்ற இப்பூதவுடலைக் குதறிய பின்னும் அவை நம்மோடு சேர்ந்து வரும் என்கிற நாலடியாரை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
இப்படியானதொரு மனநிலைக்கு ஆட்பட்டதும், மீண்டும் மற்றொரு வினாவானது நம்மைச் சூழ்ந்து கொண்டது. பகிர்ந்தது, படைத்தது எழுநூற்று ஐம்பதே ஆயினும், பலரும் பலனடையும் பொருட்டுப் பொருள் கொண்டு படைத்தது எம்மாத்திரமோ?
திரும்பிப் பார்த்தேன். முதல் நாளது முதல், இம்மணித் துளியானது வரையிலான மனவோட்டம் மற்றும் அகச்சூழலை! ஆங்காங்கே சறுக்கிடினும், மீண்டு வந்தது தெரிகிறது. மகிழ்ச்சி!
கடந்த 14-10-2009 தேதியில்,
ஐநூறுகளோடு அளவளாவினோம். இதோ மீண்டும், எழுநூற்று ஐம்பதுகளோடு அளவளாவுகிறோம். அளவளாவலுக்கு வித்திட்ட வலையுலக அன்பர்களுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்!!
ஆளும் வளரணும்; அறிவும் வளரணும்!! இது நடைமுறையில் சாத்தியமா? உங்கள் தரப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா??
இக்கூற்றானது கூறப்படுகிற இடத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அறிவு என்பது வளரும் என அப்படியே பொருள் கொண்டால், முரணாகத்தான் புலப்படும். அறிவு பெருக வேண்டும். எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறார் என்பதை விட, எவ்வளவு திறம் வாய்ந்தவராக இருக்கிறார் எனக் கணக்கிடும் காலமிது. இணையத்தில் கிடைக்காதது ஏதும் உண்டா?
திறத்தை மேம்படுத்த, அவனியில் எல்லா தரப்பு மக்களும் தத்தம் முயற்சிகளைச் செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், குறிப்பாக, நம் நாட்டில் ஆண்டாண்டு காலமாய் இருந்து வருகிற முக்கியமான ஒன்றை நழுவவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் என் நிலைப்பாடு. அது என்ன?
மனிதனின் மனமானது, வயது கூடக்கூட முதிர்ச்சியடையும்; அடைய வேண்டும். அதன்பொருட்டு, பெற்ற அனுபவங்களின் வாயிலாக மனம் பண்படைந்து, பக்குவப்படும்; பக்குவப்பட வேண்டும். சிலருக்கு, பிறப்பிலேயே மனம் பண்படையப்பட்டு இருக்கும். மற்றவர்க்கு? பட்டறிவின் வாயிலாக அது கூடிவரும். ஆனால் இன்றைய நிலை? பண்படைந்து, பக்குவமுறுதல் என்பதற்கான தடைகள்தான் பெருகி வருகிறது. எனவே, ஆளும் வளரணும்; படினமும் பெருகணும் என்பதே சரி!!
நான் எனது உடன்பிறந்தாரோடு அல்லது உறவினர்களோடு உரையாடும் போது, எல்லாமும் தமிழில்தானிருக்கும். எல்லோருக்கும் ஆங்கிலம் தெரிந்தாலும் அதன் கலப்பு இருக்காது. ஆனால் வெளியில் சிலரோடு உரையாடும்போது, அவர்கள் பேச்சை ஆங்கிலத்தில் திசை திருப்பி விடுவதைப் பெரும்பாலும் பார்க்கிறேன். தவறு எங்களிடமா அல்லது மற்றவரிடத்தா எனத் தெரியவில்லை. ஏன் இது?
இது தவறு என்பது சரியல்ல. பெற்ற குழந்தைகளுக்கு, முதன்மை மொழி ஆங்கிலமாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை பழக்கமாக்கிக் கொண்டிருக்கக் கூடும். நாம் தொடர்ந்து தமிழில் உரையாடுவதன் மூலம், அவர்களையும் தமிழின்பால் கொண்டு வர முடியும். அப்படிக் கொண்டுவர முடியாவிட்டால்தான் என்ன? தமிழில் பேசுவதைக் கேட்கிற வரையிலும் மகிழ்ச்சியே!
பொதுவாக பொருள் உதவி செய்பவர்கள், உறவினர் அல்லாதவர்க்குச் செய்யும்போது யாதொரு தயக்கமும் இல்லாமல் செய்ய முடிகிறது. ஆனால் உறவினர்களிடம் செய்யும் போது ஏகப்பட்ட சிந்தனைகள். எதனால் இது?
கடந்து வந்த பாதை. அவரது நடத்தை மற்றும் அவரது பின்புலம், இவற்றுக்கும் மேலானதொரு காரணியாக இருப்பது, நம்முள் இருக்கும் கோபதாபமும்! எம்முள் இதே நிலை எண்ணற்ற முறை நிகழ்ந்திருக்கிறது. சமீபத்தில் நான் இடுகையில் பகிர்ந்து கொண்ட இப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
பலநாளும் பக்கத்தார் ஆயினும் நெஞ்சில்
சில நாளும் ஒட்டாரோ ஒட்டார் - பலநாளும்
நீத்தார் எனக் கைவிடல் உண்டோ தன் நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு!
முடிந்தவரை ஆங்கிலக் கலப்பின்றி தமிழில் பேச நினைக்கும் சிலர்கூட, வெட்கத்தால் அவ்வாறு பேசுவதை கைவிடுகின்றனரே?! முழுமையாகத் தன் தாய்மொழியில் பேச வெட்கப்படும் இந்தத் தனி குணம், எதிர்காலத்தில் மாறும் எனும் நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா??
நான் எதோ ஒரு தமிழ்ப் புரவலன் எனும் பாங்கில் அல்லவா வினாக்கள் விடுக்கப்படுகிறது. ஆனானப்பட்ட தமிழ் மாமேதையே, நான் ஒரு தமிழ் மாணவன் எனக் கல்லறையில் எழுதி வைத்துச் சாகும் போது, இச்சாமன்யன் எம்மாத்திரம்? இருந்தாலும் என் மனநிலையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எதுவும் இயற்கைக்குக் கட்டுப்பட்டு இருக்கிற வரையிலும், மேன்மையோடு தொடரத்தான் செய்யும். இயற்கையைச் செயற்கை கொண்டு மாற்றியமைக்கும் போது, இன்னல்கள் நேர்வது தவிர்க்க இயலாதது. மாந்தர்கள், தத்தம் இருப்பிடத்தோடு, இனத்தோடு வாழ்ந்து வந்தான்.
இந்நூற்றாண்டில், புறச்சூழல் கருதி நாமனைவருமே தத்தம் மண்ணை விட்டகன்று வாழத்தலைப்பட்டு இருக்கிறோம். இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? உலகம் முழுமைக்கும் ஒரே இனமாக உருவெடுக்குமா? உலகம் முழுமைக்கும் ஒரே மொழி பேசப்படுமா??
உலகமயமாதல் உருவெடுக்கும்போது, தன்மயமாதல் உருவெடுக்காதா என்ன?? நான் பணிபுரிந்த நிறுவனமான, LMW, இலட்சுமி இயந்திரத் தொழிற்சாலைதான் நினைவுக்கு வருகிறது. மூன்று தலைமுறையைப் பார்த்த, மாபெரும் நிறுவனம் அது.
ஆங்காங்கே பிரிந்திருந்த பிரிவுகளை ஒன்றிணைத்து, ஒரு நிர்வாகத்தின் கீழ், ஒரே இடத்திற்குக் கொணர்ந்தார்கள் ஒரு தலைமுறையில். மற்றொரு தலைமுறையில், நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் பொருட்டு, பல பிரிவுகளாகப் பிரித்தார்கள். போக்குவரத்து, மற்றும் இன்னபிற காரண்ங்களைக் காட்டி மீண்டும் ஒன்றிணைக்கும் நாள், நான் மடியுமுன்பாகவே வரும் என நம்புகிறேன்.
யுனஸ்கோ ஆய்வின்படி எதிர்காலத்தில் முற்றிலும் அழியும் மொழிகளின் பட்டியலில் தமிழும் உள்ளதே?! அவ்வாறு ஒருநிலை வருமா?? அல்லது ஒவ்வொரு காலகட்டதிலும் தனக்கான அழிவு ஏற்படும் சூழலில், ஏதோ ஒரு சக்தியின் இயக்கத்தில் மீண்டெழும் தமிழ் இம்முறையும் மீண்டெழுமா??
யுனஸ்கோ ஆய்வு அறிக்கையில் தமிழ் இடம் பெறவில்லை. எனினும் அக்காலத்தில், விஞ்ஞானம் இல்லை. எழுதுவதற்குத் தாள் இல்லை. தாளில் வரிவடிவங்களைப் பொறிக்க மசியும் இல்லை. அச்சும் இல்லை. இருந்ததெல்லாம் கற்களும், உளியும், ஓலைகளும், எழுத்தாணியுமுமே. இருந்தும் நிலைத்து நிற்கிறது தமிழ். காரணம்? மக்கள் ஒன்றியமாய் வாழ்ந்தார்கள்.
ஆனால், இன்றைக்கு மக்கள் பலவாறாகப் பிரிந்து வாழத் துணைபோய்க் கொண்டிருக்கிறார்கள். இருந்தும் தமிழ் வாழ்கிறது. வாழும்! எங்கோ இருக்கும் நீங்களும், நானும் யாத்திருப்பதன் காரணம் கணினி அல்லவா? கணினியில் பதிந்திருப்பதை, இன்றிலிருந்து இன்னும் பத்துத் தலைமுறை கடந்து பிறக்கும் ஒரு பிறவியானது, தோண்டித் துழாவி எடுக்காது என்பதை எப்படி அறுதி இட்டுச் சொல்ல முடியும்? மரபுகளின் நீட்சிக்கு முடிவேதும் கிடையாது. அது இயற்கையின் நியதி!
நல்ல தமிழ்ல பேசினாலோ, பிள்ளைக்குத் தமிழ்ல பெயர் வைத்தாலோ, தமிழ் மீது அன்பும் ஆர்வமும் கொஞ்சம் இருந்தாலோ, "ஓ! நீங்க தமிழ் வெறியரா, எப்பவுமே தமிழ்ல தான் பேசுவீங்களா?" என்பதுபோல் பேசும் தமிழர்களை எப்படி அணுகுவிங்க?
புன்னகைத்துக் கடந்து செல்ல வேண்டியதுதான்! எவனொருவன், சினமுற்றுக் கிளர்ந்தெழுகிறானோ, அவன் தோல்விக்குத் தன்னைத் தாமாக இட்டுச் செல்கிறான் என்றே ஆகிறது. எறும்பு ஊறக் கல்லும் தேயும். அதற்கும் மேலாக, மற்றவர் மனதை நான் எதற்குக் கரைக்க வேண்டும்? எனக்குப் பிடித்திருக்கிறது. நான் செய்கிறேன். அவ்வளவே!
என் மக்ள் கல்வி கற்பது, கோவையில் இருக்கும் ஒரு ஆங்கில இந்தியப் பள்ளியில். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், எனது அலைபேசி எண்ணை என் உறவினரிடத்தில் இருந்து பெற்று, சென்ற வாரத்தில் என்னை அழைத்திருந்தார். நான் பதைபதைத்துப் போனேன். மகள் என்ன செய்தாளோ, என்னவோயென!!
அமெரிக்காவில் பிறந்து, அங்கேயே துவக்கப் பள்ளியில் பயின்றும் வந்த உங்கள் மகள், இந்தி மற்றும் தமிழ் கற்றதோடு மட்டுமல்லாமல், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் வந்திருப்பது வியத்தகு செயலாக இருக்கிறது எனக் கூறினார். நான் ஒருநாளும் என் மகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தது கிடையாது. இதை இங்கே குறிப்பிடுவதன் காரணம், நாம் நாமாக இருக்கிற வரையிலும், நம்முடையது நம்முடனே வரும்.
இந்த ஆண்டில் ஏதாவது புத்தகம் எழுத எண்ணியுள்ளீர்களா? எண்ணியுள்ளீர்கள் எனில், எந்த மாதிரியான புத்தகம்? சிறுகதை அல்லது கவி காளமேகம்?? கவி காளமேகம் குறித்து நீங்கள் எழுதியவைகளை தொகுத்துப் புத்தகமாக வர வேண்டும் என்று நேற்று தான் எண்ணினேன்.
ஊர்ப் பழமை எனும் நூல் என்பது, நான் திட்டமிட்டுச் செய்த ஒன்றல்ல. நான் தாயகம் சென்றிருந்த போது, நட்பினரைச் சந்தித்த வேளையில் நண்பர் ஆரூரன் அவர்கள் தமது விருப்பத்தை வெளியிடவும், நானும் அதற்கு இசைந்தேன். அச்செயலானது, எமக்கு வெளியுலகில் நல்ல பல தொடர்புகளைப் பெற்றுக் கொடுத்தது. அவ்வழியில், எதுவும் அமையுமாயின் அதன் போக்கில் விட வேண்டியதுதான்!
நல்ல தமிழ் என்றாலே முகம் சுழிக்கும் சமுகத்தில் கோவை வட்டார வழக்குடன் தமிழ் பேசுவதை பலர் கேலி செய்வார்களே? அவர்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?? அதுவும் நீங்க வெள்ளையா இருக்கீங்க, நல்லா இங்கிலிபீசு வேற பேசறீங்க? எனவே இத்தொல்லை உங்களுக்கு அதிகமாக இருக்கும் இல்லையா??
ஏற்கனவே நண்பர் தென்னவன் கேட்ட கேள்வியைச் சற்று மாற்றிக் கேட்டிருக்கிறீர்கள். நான் எதற்கு வெட்கப்பட வேண்டும்? எம் மண்ணில் பேசப்படுவதை, எம்மக்கள் பேசுவதை நான் பேசாமல், சப்பானியனோ, சீனனோ வந்தா பேச முடியும்? கேலி பேசுபவர்களைப் பற்றி நான் பொருட் படுத்தினால்தானே அது எம்மை வதைக்கும்??
நீங்கள் உள்ளிட்ட எம் நண்பர்களுக்கு நான் அடிக்கடி சொல்வதெல்லாம் இதுதான். உன் ஊரெதென யாரும் வினவினால், அழுத்தம் திருத்தமாக உமது ஊர்ப் பெரைச் சொல் என்பதுதான். உடுமலைப் பேட்டை என்றோ, கோயமுத்தூர் என்றோ நான் ஏன் சொல்ல வேண்டும்?? அந்தியூர் என்று சொல்வேன். கோபி பக்கந்தானே என்பார்கள். இல்லை, உடுமலைப் பேட்டையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில், எட்டாவது மைல்தூரத்தில் இருக்கிறது என்பேன்.
என் ஊரின் பெயரை நான் பிரகடனப்படுத்திப் பிரபலமாக்காத வரையிலும், வேறு யார் செய்திட முடியும்?? விபரந் தெரிந்தவ்ர்கள், ”ஓ, அந்தியூர்ல எல்லாம் மேட்டாங்காட்டு வறண்ட விவசாய பூமியாச்சே?” என்பார்கள். “ஆமாம், வாய்க்காத் தண்ணி பாயுற வெள்ளாமைக்காரங்க எல்லாம் அந்தியூர்க்காரங்ககிட்டத்தான் காசு பணம் வாங்க வருவாங்க!” என்பேன். உண்மை அதுதானே?!
உங்க குழந்தைகளுக்கு இந்தியா, தமிழ்நாடு, கோயமுத்தூர் மாவட்டம் பற்றி என்ன மாதிரியான புரிந்துணர்வை உருவாக்க போறீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க?
நான் எதற்கு உருவாக்கணும்? என் பிறந்த மண்ணைக் காண்பித்தேன். நான் பிறந்த வீட்டைக் காண்பித்தேன்.என் பெற்றோரிடத்தில் வளர விட்டேன். வளர்கிறார்கள். புரிந்து கொள்வதும், கொள்ளாததும் அவர்கள்பாடு. ஆனால், நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன்.
இந்தியாவிற்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரும்பி வந்து விட முடியும்ங்ற நம்பிக்கை இருக்கிறதா?
கேள்விக்கான தேவையே இல்லை. நான் எங்கிருந்தாலும் நானாகவே இருப்பேன். ஆனாலும், எங்கே உயிர்ப்பிக்கப்பட்டேனோ, அங்கேயே மரிக்கவும் செய்ய வேண்டும் என்பது எம் தணியாத ஆசை.
நீங்க படிச்ச பள்ளிக்கு என்ன செய்து இருக்கீங்க? என்ன செய்யப் போறீங்க??
நான் பல பள்ளிகளில் படித்தவன். பள்ளிக்குச் செய்வதென்பதைவிட, என் ஆசிரியர்களுக்குச் செய்ய ஆசைப்படுகிறேன். செய்தும் வருகிறேன். பள்ளிக்கு ஒரு கட்டிடம் என்பதற்கு அரசாங்கம் இருக்கிறது. இச்சாமான்யனைவிட கடலளவு பொருளாதாரம் அரசிடம் இருக்கிறது. ஆனால், என் ஆசிரியர்களைச் சிறப்பிக்க, என்னைப் போன்ற மாணவர்களை விட்டால் வேறு எந்த நாதியும் கிடையாது என்பதுதான் இன்றைய நிலை.
குறைந்தபட்சம் உங்கள் சொந்தபந்த ஏழை மாணவர்களுக்காவது கல்விக்கான பொருள் உதவி செய்து இருக்கீங்களா?
அரசு செய்ய வேண்டிய பணிகளுக்கு மாற்றாக, தனிமனிதர்கள் அளிக்கும் நிதியானது முறையற்ற ஒன்று. மாறாக, தான் கட்ட வேண்டிய வரியை, அரசுக்கு முறையாகச் செலுத்தலாம். எங்கு அரசின் உதவி பெறுவது ஏதுவாக இல்லையோ, அதற்குச் செய்திடலாம். மேலும், சமூகப் பணிகளுக்கு நேரிடையாகத் தன் உழைப்பை நல்கிடலாம்.
என் மகளின் பிறந்த நாளன்று, ஐயாயிரம் உரூபாயை நன்கொடையாக அளிப்பதைக் காட்டிலும், அன்றைய தினத்தில் அவள் நேரிடையாகச் சென்று சமூகப் பணியாற்றுவதைப் பெரிதும் விரும்புவேன் நான்.
செய்தவற்றைப் பட்டியலிட்டுச் சொல்வது அறமாகாது. இருந்தாலும், ஒரு செய்தியை மற்றவர்க்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக இது. தகுந்த வசதியின்றிச் சுகாதாரத்தைப் பேணாமல், அவதியுறுவோர் நாட்டில் பெருகி வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதை நான் முதன்மையாகக் கருதுகிறேன்.
வலைபதிவுகளில் ஆச்சரியப்பட்ட ஐந்து வலைபதிவுகளை சொல்ல முடியுமா? காரணத்தை ஒரு விமர்சனம் போல முடிந்தால் தரவும். நீங்க இதில் தப்பித்தால் உங்களை வலையுலக அரசியல் பிதாமகன் என்ற பட்டத்தை தருவேன். சம்மதமா?
நிறைய இருக்கின்றன.
http://maravalam.blogspot.com%2c/
http://mooligaivazam-kuppusamy.blogspot.com%2c/
http://pkp.blogspot.com%2c/
http://ocblogs.blogspot.com%2c/
http://www.kasangadu.com/
இதுதவிர, நெஞ்சை அள்ளியவை இன்னும் பல இருக்கின்றன. இவற்றுக்கான விமர்சனம் தேவையற்றது என நான் எண்ணுகிறேன். நீங்கள் அங்கு சென்றதும் புரிந்துவிடக் கூடிய அளவில்தான் பதிவுகளைப் பதிவு செய்யும் பதிவர்களின் செயல்பாடு இருக்கிறது.
நீங்க எளிமை விரும்பின்னு நான் நினைக்கிறேன். யார் மாதிரி இருக்கணும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?
காந்தியைப் போல் இருக்க வேண்டும். வள்ளலாரைப் போல் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி, சமகாலத்தவரை இருட்டடிப்புச் செய்ய விரும்பவில்லை. சக பதிவரைக் குறிப்பிட்டுச் சொல்வதனால், சில அசெளகரியங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. எனினும் குறிப்பிட விரும்புகிறேன். சகிப்புத்தன்மை மற்றும் எளிமை போற்றுவதில், சக பதிவர்
சீமாச்சுவைப் போல் நானும் பண்படைய வேண்டும் என அவ்வப்போது நினைத்துக் கொள்வது உண்டு.
வெளி நாட்டில் விவசாயம் செய்யும் முறைகள் பற்றி அறிந்திருப்பீர்கள்; நேரிலும் பார்த்திருப்பீர்கள்; மேலை நாட்டு விவசாயம் போல, நம் நாட்டு விவசாயத்தை பெரிய அளவில் முறைப்படுத்தி செய்ய இயலுமா? அல்லது இப்படியே தொடர்வதே சிறந்ததா?
நல்ல கேள்வி. கூடவே காலத்தின் கட்டாயமும் கூட. குறைந்த பொருட்செலவில் வேளாண்மை என்பது இசுரேல் மற்றும் கனடாவில் நடைமுறையில் இருக்கிறது. கனடிய நாட்டின் கோதுமை உற்பத்தியைக் கண்டு வியந்து நின்றேன் நான். இசுரேல் மற்றும் கலிஃபோர்னியாவின் காய்கறி வளர்ப்பும் வியத்தகு ஒன்றாகும். விரைவில், இதுகுறித்துச் செய்திகள் சேகரம் செய்ய வேண்டும்.
பொதுவாக தண்ணீர்ப்பஞ்சம் என்ற பிரச்சினை மேலை நாடுகளில் இல்லை; அதற்கு அந்நாடுகளின் தகவமைப்பு மட்டுமே காரணமா அல்லது நீர் மேலாண்மை மெய்யாகவே சிறப்பாக உள்ளதா??
நீர் மேலாண்மைதான் முக்கியக் காரணம்.
சென்ற இடுகையில் நடிகர் சோபனா, நடிகர் சிந்து எனக் குறிப்பிட்டு உள்ளீர்களே? அது பிழையல்லவா??
ஒருவன் - ஒருத்தி, பாடகன் - பாடகி, செல்வன் - செல்வி, சிறுவன் - சிறுமி என்கிற வரிசையில், ஆசிரியன் - ஆசிரியை, நடிகன் - நடிகை என்பதுதானே சரி? ஆசிரியர், நடிகர் என்பனவெல்லாம் பொதுப் பெயர்தானே?
நடிகன் கமல், நடிகன் இரஜினி என அழைப்பதில் சிக்கல் இருக்கிறதல்லவா? அதே சிக்கல்தான் எனக்கும்; நடிகை சிந்து என்பதிலும், நடிகை சோபனா என்பதிலும். தமிழ் ஒருபோதும் பெண்டிரை நிந்திப்பதில்லை!! பெண் ந்டிகை என்பதும், நடிகையர் திலகம் என்பதும் அபத்தத்தின் உச்ச கட்டம். நடிப்புத் திலகம் சாவித்ரி என்றால், குறைந்துவிடுமா என்ன?!
உடன் அளவளாவிய அன்பர்கள்,
ஜோதிஜி,
புதுகை அப்துல்லா,
ரங்சு,
தென்னவன்,
சேது மற்றும்
குறும்பன் ஆகியோருக்கு நன்றி! மேலும் உடன் பயணித்து வரும் சக பதிவுலக அன்பர்கட்கும் நன்றி!!