6/26/2010

செம்மொழி மாநாடும், கோவைக் காவல்துறையும்!!

தண்மை அளித்திடும் இலக்கியமும், தாரணி புகழ்ந்திடும் இலக்கணமும் கொண்ட தமிழ் மொழிக்கான ஒரு உலகளாவிய மாநாடு. அரசியல் மற்றும் இன்னபிற விழுமியங்களுக்கும் அப்பாற்பட்ட மனநிலை கொண்டு பார்க்கின், இம்மாநாட்டைக் கண்ணுறும் வாய்ப்பு கிடைக்காமற் போனதில் எனக்கு மிகுந்த ஏமாற்றமே!

தமிழ் மாணவன் என்கிற முறையிலே, நிறையக் கண்காட்சிகள், உரைகள், நிகழ்ச்சிகள் முதலானவற்றைக் கண்டு, தமிழின் தொன்மையை அறிந்து கொள்ளக் கூடிய ஓர் அரிய வாய்ப்பு. இவ்வார ஈறில், கிடைத்த நேரத்தில் இதுபற்றிய காணொலிகள் மற்றும் செய்திகளை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

மேலும், அரங்கத்தில் இருந்த நிறைய நண்பர்களிடமும் உரையாடினேன். நிறைவான செய்திகள் பல கிடைக்கப் பெற்றேன். கூடவே, நிறையற்றவையும் இருக்கத்தானே செய்யும்? முதலாவதாக, வருத்தப்பட வேண்டிய ஒன்றைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ஏதோ போனால்ப் போகிறதென, இங்கொருவரும் அங்கொருவரும்தான் அதிகக் கலப்படமற்ற தமிழ் கொண்டு உரையாடுகிறார்கள். ஆங்கிலத்தின் தாக்கம் என்றைக்கும் இல்லாதபடி மேலோங்கி இருப்பதைக் காண முடிகிறது.

துவக்கப்பள்ளியில் நான் இருந்த காலமது. பட்டி தொட்டிகளில் எல்லாம் பேரலை வீசிய காலமது. திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் மற்றும் T.இராஜேந்தர் ஆகியோரின் மேடைப் பேச்சுகளைக் கேட்க, வயதில் பெரியவர்களோடு மிதிவண்டியிலேயே ஊர் விட்டு ஊர் செல்வோம்.

பெதப்பம்பட்டியில் தூயமணி, வா.வேலூரில் அரங்கநாதன், சூலூரில் கூத்தரசன், உடுமலையில் S.K.இராஜூ போன்றோரெல்லாம் தமிழைத் தென்றலாய் வளைய விடுவார்கள். நட்சத்திரப் பேச்சாளர் கோவைத் தென்றல் மு.இராமநாதன் பேச்சைக் கேட்டாலோ, பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர்ந்தது போன்றொரு மலர்ச்சி உண்டாகும்.

அத்தகைய கொங்குநாட்டிலே நடக்கிற ஒரு தமிழ்மாநாட்டில், என் நண்பர்கள் எல்லாம் கலந்து கொண்டிருக்கிற இச்சூழலில், அவர்களொடு இல்லாதது குறித்து ஏமாற்றமே. எனினும், மாநாட்டு வளாகத்துள்ளேயே ஆங்கிலம் மேலோங்கியிருப்பது கண்டு, அவ்வேமாற்றம் என்பது அந்நொடியிலேயே மறைந்தும் விடுகிறது.

கொங்குதமிழைக் காணோம்; அந்த உவமை, உவமேயம், உவமானம் காணோம்; இலக்கியச் சுவையானது காணோம்; கட்சி மேடை என்றாலும் கூட, கலிங்கத்துப்பரணியும், புறநானூறும், பதிற்றுப்பத்தும், பொருநராற்றுப்படையும் இறக்கை கட்டிப் பறக்குமே அந்நாளில்? இன்று அந்த இறக்கைகள் எல்லாம் முறிக்கப்பட்டு விட்டனவா??

அரசியல்க் கட்சிகளின் பங்கு இவ்வாறிருக்க, மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக நடத்தி இருக்கிற தமிழக அரசையும், அரசு சார்ந்த அலுவலர்களையும் வெகுவாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும். நான் பார்த்த செய்திகளைப் பொறுத்த மட்டிலும், நான் கண்ட காணொலிகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்த மட்டிலும், நண்பர்கள் சொல்லக் கேட்டதைப் பொறுத்த மட்டிலும், விழா ஏற்பாடுகளும், கட்டமைப்பும், சட்டமொழுங்கும் வெகு சிற்ப்பாகவும் ஒழுங்கோடும் அமைக்கப்பட்டு இருப்பதாக உணர்கிறேன்.

தமிழக அரசின் செயல்பாட்டைப் பொறுத்த வரையிலே, கோயம்பத்தூரைச் சார்ந்தவன் என்ற முறையில், நன்றி கூறுதலோடு அகமகிழவும் செய்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்நகரின் சட்டம் ஒழுங்கைச் செம்மையாகக் கொண்டு செல்லும் கோவைக் காவல் துறையினரின் கடுமையான உழைப்புக்குத் தலைவணங்குகிறேன்!!எழில்வஞ்சி சிறப்புறுகவே!

6 comments:

Thamizhan said...

ஆய்வுக் கட்டுரைகள் தரமானவை என்று போற்றப் படுகின்றன.
இணையத்தில் இளைய தலைமுறை முழு வேகத்துடன் ஆக்கபூர்வச் செயல் வடிவங்கள் எதிர் பார்க்கப் படுகின்றன.
கொடிக்கம்பங்கள் இல்லாததும்,அரசியல் மிகுதியில்லாததும் தெரிகிறதாம்.
என்ன இருந்தாலும் கலைஞரைக் கவிஞர்கள் பாராட்டாமல் பாட மாட்டார்கள் தான்.திற்மையைக் காண்பிக்க ஒரு சந்தர்ப்பம்.
ஆனால் த்மிழ்,தமிழின் தொண்மை,பெருமை,
வள்ளுவர், பாரதி,பாரதிதாசன்,பரிதிமாற் கலைஞர்,பாவாணர் என்ற பரம்பரையும்,இந்தி எதிர்ப்பும், பெரியாரும்,அண்ணாவும்,என்.எஸ்.கிருட்டிணன்,எம் ஆர் ராதா என்று பல புரட்சி நடிகர்களும் பாராட்டப் பட்டுள்ளனர் பலரால்.
மகளிர் பங்கேற்பும் நன்கு தெரிகிறது.
ஈழத்தை ஆதரித்து,வேதனையை விவரித்து,செயல் பாடு வேண்டி அனைத்துத் தமிழ் உணர்வாளர்களும் பேசியுள்ளனர்.

தாராபுரத்தான் said...

எழில்வஞ்சி சிறப்புறுகவே!

வெண்ணிற இரவுகள்....! said...

மாநாட்டை எதிர்த்து சுவரொட்டி ஒட்டிய தோழர்களுக்கு காவல்துறை வீடு தேடி சென்று கைது செய்திருக்கிறார்களே ...
இது ஜனநாயகமா ????? சரி வக்கீல்கள் தமிழில் பேச முடியாத சூழலில் , தன மகனுக்கு என்றால் டெல்லி வரும் போகும் கருணாநிதி,
பெண் சிங்கம் என்னும் படத்தில் ஈழ படுகொலைக்கு காரணமாய் இருந்த சோனியாவை புகழ்ந்த கருணாநிதி , இதை எல்லாம் எதிர்த்து
சுவரொட்டி கூட ஓட்ட முடியாது என்ற சூழல் . இது எல்லாம் புரியாமல் வெறும் கணினியிலே உட்கார்ந்து கொண்டு பாராட்டுவது ,
அதற்க்கு ஆதரவாய் சில பேர் வேறு , வெட்கமாய் இருக்கிறது நண்பர்களே

பழமைபேசி said...

@@வெண்ணிற இரவுகள்....

அன்பருக்கு வணக்கம்! நான் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனநிலையில் நின்றுதான் இதை எழுதினேன். எனக்குள்ளும் பல வருத்தங்கள் உண்டு.

அதையும் கடந்து, ஏராளமான கூட்டத்தினரைக் கட்டுப்படுத்தி, அந்த நகரின் சட்டமொழுங்கை நிர்வகித்த அவர்களின் உழைப்பைப் பாராட்டத் தோன்றியது அவ்வளவுதான். தயவு கூர்ந்து புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.

அபி அப்பா said...

அன்பு பழமைபேசி! நீங்களும் நானும் எல்லோரும் பார்த்தது அதாவது தொலைக்காட்சியில் பார்த்தது வெறும் கொண்டாட்ட நிகழ்வுகளே!(பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் தவிர)தவிர அந்த ஆய்வரங்க கூடத்தின் உள்ளே சமர்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகள், அதன் பிற்பாடாக நடக்கப்போகும் இன்னபிற மேல் நடவடிக்கைகள், தவிர தமிழ் இணைய மாநாட்டில் நடந்தேறிய பல நல்ல விஷயங்கள் இவை தாம் உண்மையான தமிழ் செம்மொழி மாநாடு ஆகும்.

அதை எல்லாம் தொலைக்காட்சியில் காட்டினால் விளம்பரம் வராது என நினைத்து கூட அந்த தொலைக்காட்சிகள் காட்டாமல் விட்டிருக்கலாம். அத்தனை ஏன் நம் வலைப்பதிவர்கள் ஆற்றிய உரைகள் கூட மிகச்செரிந்த உரைகள் என கேள்விப்பட்டேன். அவையெல்லாம் கூடத்தான் தொலைக்காட்சியில் காட்டப்படவில்லை.

கவியரங்கம் முதலான சில நிகழ்சிகள் அதாவது தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பல நிகழ்ச்சிகள் தனிமனித துதி பாடின என்பதும் உண்மை தான். நாம் இதை சாதாரணமாக பல திருமண நிகழ்வுகளிலும் பார்த்து தானே இருக்கின்றோம். அதாவது கச்சேரி ஏற்பாடு செய்த மணமகன்\மகள் வீட்டாரை அவர்கள் பெயரை பாடல்களில் இட்டுகட்டி பாடுவர். அதிலே ஏற்பாடு செய்தவருக்கு ஒரு சந்தோஷம், மணமக்கள் பெயரை இட்டுகட்டி பாடுவர். அதில் மணமக்களுக்கு மகிழ்வு.அது போல தான் இங்கும் நடந்தது. ஆனால் கொடுத்த காசுக்கு மேல் கொஞ்சம் கூவினர். இது தவிர்க்க இயலாதது.

உடனே "இது என்ன கருணாநிதியின் வீட்டு கல்யாணமா?" என அடுத்த கேள்வியும் வரும். வரட்டும். அது பற்றி எல்லாம் கவலை படாமல் அந்த ஆய்வரங்கத்தின் உள்ளே நடந்த உண்மையான செம்மொழி மாநாட்டை பற்றி மட்டும் சிந்திப்போம்.

அடுத்து 380 கோடி ரூபாயை அந்த குடும்ப பாராட்டுக்கு மட்டுமே கருணாநிதி செலவழித்தார் என கூறும் கூற்றை தாங்கள் கோவை வரும் போது இப்போது நடந்து முடிந்துள்ள உட்கட்டமைப்பு பணிகள் பார்த்த பின்பு எழுதவும். நானும் தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கின்றேன். அந்த 380 கோடியும் அந்த உட்கட்டமைப்புகளுக்கும், தமிழ் ஆய்வுகளுக்கும் செலவிடப்படாமல் பாராட்டுக்கு மட்டுமே ஆன செலவா என்று!

தாங்கள் ஆசைப்பட்டது போல அந்தகால திமுக கட்சி கூட்டத்தில் பேசப்பட்ட இலக்கிய உவமைகளும், உவமானங்களும் கூட பலபேர் பேசியவற்றில் வெளிவந்தது. உதாரணம் கொங்குமண்டலம் தமிழகத்துக்கு கொடுத்த பரிசான திரு. சிவக்குமார் அவர்களால். ஆனால் அவர் வழமையாக கம்பராமாயணத்தை அழகு கொங்கு தமிழில் பிரசங்கம் செய்வது போல் செய்யாமல் தஞ்சை தமிழில் பிரசங்கித்தது சின்ன குறை தான் எனக்கும் மற்றும் பலருக்கும்.

அது போல அரசியல் தலைவர்கள் கருத்தரங்கில் திரு.தொல்.திருமா, அடுத்த நாள் நிகழ்வில் வழக்கறிஞர் அருள்மொழி போன்றவர்கள் ஈழம் பற்றிய தங்களது கருத்துகளை ஆணித்தரமாக பதியவைத்தனர் என்பதும் சந்தோஷமான நிகழ்வுகள்.அதே நேரம் நக்கீரன் கோபால், திருச்சி செல்வேந்திரன் போன்ற சபை நாகரீகம் தெரியாத சிலரின் பேச்சையும் கேட்க வேண்டியிருந்தது.

கூட்டி கழித்து நீங்களே முடிவெடுத்துகொள்ளவும் செம்மொழி மாநாடு பற்றி.

Unknown said...

பாலில் பல்லி விழாமல் பார்த்துக் கொண்டவர்கள் (அரசியல் கலப்பு) அதில் துளி விஷம் கலக்காமல்(குடும்பத்தினரின் ஆக்ரமிப்பு)
காக்கத் தவறிவிட்டனர். மற்றபடி விழா சிறப்பாகவே நடந்தது.

பொது கலையரங்கத்தில் நடந்த நிகழ்வுகள் வந்திருந்த மக்களை மகிழ்விக்க மட்டுமே, ஆராய்ச்சி அரங்குகளிள் நடந்த நிகழ்வுகளின் ஒளிவட்டு அரசால் வெளியிடப்பட்டால்தான் அங்கு என்ன நிகழ்ந்தது என்ற முழு விவரம் தெரியவரும்.

மற்றபடி இந்த பாலைக் குடித்த தமிழ்த்தாய்க்கு என்ன ஆச்சு என்பது இனிமேல்தான் தெரியும் :)