6/17/2010

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, தமிழ்த் திருவிழா - ஒரு கண்ணோட்டம்!

உறவெல்லாம் ஓடியோடி
உழைக்க உழைக்க
உன்னதமாய்ப் பெருகி வருகுது
உற்சாகம்! உற்சாகம்!!

முன்னோடிகளெல்லாம்
மூச்சுவிட நேரமில்லாது
முடுக்கிவிட்டு முடுக்கிவிட்டு
ஆடுறார்! முத்தாடுறார்!!

இனிக்க இனிக்க
இலக்கியம் பெருகுது
கன்னலென கவிகள்
கனியுது! கனியுது!!

வேர்கள் தமிழிலென
சொல்லிச் சொல்லி
தன்னார்வத் தொண்டர்படை
உழைக்குது! உழைக்குது!!

வலைப்பதிவர் பெருமை
வந்தோரெல்லாம் கண்டுகொள்ள
சின்னப்பையன் சத்யா
வேலை செய்யுறார்! செய்யுறார்!!

வியப்பூட்டும் விழாக்கோலம்
வருகுது! வருகுது!!
வட அமெரிக்கத் தமிழரெலாம், அல்ல
உலகத் தமிழரெலாம்
வாருங்கோ! வாருங்கோ!!

மக்களே, வணக்கம்! சென்ற ஆண்டு, வெகு விமரிசையாக அட்லாண்டாவில் திருவிழா நடந்தேறியது தெரிந்ததே! அங்கே அரங்கம் நிரம்பி, இறுதி நாட்களில் வர விழைந்தோருக்கு இடம் கிடைக்காமற் போனமை பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது. நானே கூட, இறுதி நேரத்தில் வராமற் போன ஒருவரின் நுழைவுச் சீட்டைப் பயன்படுத்தித்தான் கலந்து கொண்டேன்.

இதையெல்லாம் மனதிற் கொண்டு, பேரவையினர் அதைவிடப் பெரியதொரு அரங்கில் இவ்வருடத் திருவிழாவை நடத்தத் திட்டமிட்டு, வேலைகள் வெகு விமரிசையாகவும் விறுவிறுப்பாகவும் நடந்து வருவதைக் காண முடிகிறது. தினமும் பல பல்வழி அழைப்புகள், செம்மையான ஒருங்கிணைப்பு என ஏராளமான தன்னார்வத் தொண்டர்கள் அல்லும் எல்லும் தொடர்ந்து உழைத்து வருகிறார்கள்.

தமிழர்களை ஒன்று கூட்டி, அவர்களுக்குள் ஒரு இணைப்பைக் கொண்டு வருவதற்கு அவர்கள் ஆற்றும் பணி மகத்தானது என்றே சொல்ல வேண்டும். நிற்க! தற்போது நிகழ்ந்து வரும் விழா வருகைக்கான பதிவு, எதிர்பாராததைவிட வெகு வீரியத்துடன் ஏற்றப் பாதையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறது என அறிய முடிகிறது.

எனவே, அன்பர்கள் அனைவரும் இன்றே பதிவு செய்து உங்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். கூடவே, உங்கள் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் விபரத்தைத் தெரியப்படுத்துவீராக!!

வேர்கள் தமிழில்!
விழுதுகள் உலகெங்கும்!!

1 comment:

Thamira said...

வாழ்த்துகள்.