6/28/2010

அடுத்த அமெரிக்கத் தமிழ்த் தலைமுறையினரிடம் தமிழ் வாழுமா? வாழாதா??

மக்களே,

வணக்கம். வரும் வார ஈறானது, விடுப்புடன் கூடிய நெடிய வார ஈறு என்பது அமெரிக்காவில் உள்ளோர் அனைவருக்கும் தெரிந்ததே! மேலும், இவ்வார ஈறில், கனெக்டிக்கெட் வாட்டர்பெரி நகரில் தமிழர்கள் எல்லாம் பெருந்திரளாகக் கூட இருக்கிறார்கள்.

இவ்வாண்டுத் தமிழ்த் திருவிழாவானது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் வரலாற்றில் ஒரு பெரிய திருப்பு முனையாகவும், மைல்கல்லாகவும் அமைய இருக்கிறது என்பது நோக்கர்களின் எதிர்பார்ப்பு. எனவே, கூடுமான வரையிலும் தத்தம் நண்பர்களுடனும், குடும்பத்தாரோடும் கலந்து கொண்டு சிறப்புறச் செய்வீராக!

இத்திருவிழாவிலே, புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் வாழும்! வாழாது!! எனும் தலைப்பிலான பட்டிமண்டபம் நிகழ்விருக்கிறது. முனைவர்.பர்வீன் சுல்தானா அவர்கள் நடுவராக இருந்து இந்நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.

புலம்பெயர்ந்து வாழும் அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் வாழுமா? வாழாதா?? எங்கே உங்கள் கருத்துகளையும் சொல்லுங்களேன் பார்ப்போம்!! வாழும் என்றால் அதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?? வாழாது என்றால், அதற்கான காரணம் என்ன??

வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

42 comments:

ராஜ நடராஜன் said...

ஜுலை 6 அமெரிக்க தினமல்லவா? கூடவே விழாக் கொண்டாட்டம் வேறா?வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

அமெரிக்க பதிவர்களின் வாரிசுகளின் பதிவு பட எழுத்துக்களை பார்க்கும் போது வாழும் என்றே தோன்றுகிறது.இதையெல்லாம் விட புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாழ வைப்பார்கள் என்றே தெரிகிறது.(மரக்கறி,கடலுணவுகள் போன்ற சென்னைக்குத் தெரியாதவை)

ஐ.நா சில வருடங்களுக்கு முன் வருங்காலத்தில் அழியும் மொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்கும் என்று ஆருடம் சொன்னார்கள்.போகிற போக்கைப் பார்த்தால் ஆருடம் பொய்க்கட்டும்.

Thamizhan said...

தமிழ் வாழ இப்போதுள்ள்வர்கள் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.இது அமெரிக்க யூதர்களின் வழிமுறையில் நம்மால் செய்யக் கூடியதுதான்.
1.ஆங்காங்கே திருக்குறள் மையங்கள்,முதலில் வாடகை இடத்திலும்,பின்னர் சொந்த இடங்களிலும் தொடங்கப் பட வேண்டும்.இது தமிழ்ச் சங்கங்களால் நடத்த முடிந்தால் சரி,இல்லாவிட்டால் ஒரு சிறு குழு பொருளாதாரப் பொறுப்பெடுத்து நடத்தலாம்.இப்போது நல்ல தருணம்,வாங்குவதற்கு.
இந்த மையங்கள் தமிழ் நூலகங்கள், கணினி மையங்கள்,தமிழர் தொடர்பு,வேலை வாய்ப்பு,குழந்தைகள்,பெரியோர் பல நிகழ்ச்சிகள்,புத்தகக் குழுக்கள், இசை,நாட்டிய பயக்கு மையங்கள் என்று நடத்தலாம்.
மூன்றாம்,நான்காம் தலைமுறையினர் பர்மாவில் இன்றும் வெற்றிகர்மாக நடத்தி நல்ல தமிழ் பேசி வாழ்கின்றனர்.டொரான் டாவிலும் நன்கு ந்டை பெருகிறது.
கோவில்களில் நடப்பது சிலரைத்தான் இணைக்கும்,அனைத்தும் செய்வதும் முடியாது.திருக்குறள் மையங்கள் பொதுவானவை.அனைவரையும் இணைத்து அனைத்தும் செய்ய இடமளிக்கும்.இளைய தலைமுறை அவர்கள் விருப்பப்படி செயல்பட உரிமையளிக்க வேண்டியது முக்கியம்.
2.உலகத் தமிழ் இளைய தலைமுறை ஒன்று கூடல் ஆண்டுக் கொருமுறை ஒரு நாட்டில் கூடித் தங்கள் தனித் திறமை,குழுக்களின் திறமையென்று காட்டிப், பழகி தமிழர் என்று உணர்வுடன் மகிழ வேண்டும்.நாட்டை இழந்த சிந்தி இனம் இன்றும் உலகெங்குமுள்ள சிந்தி மக்கள் ஒன்று கூடி ஆண்டு தோறும் மகிழ்ந்து ஆக்க பூர்வமாகச் செயல் படுகின்றனர்.கோடையிலும், மலேசிய சிங்கப்பூர் விடுமுறையான் டிசம்பர் மாதங்களில் நடத்தலாம்.
3.உலகத் தமிழர் வங்கி என்று தொடங்கி நாம் நமது வங்கிகளில் போடும் தொகையில் ஒரு பகுதியையும், சேமிப்பில் உள்ள ஒரு பகுதியையும் அதிலே போட்டுச் சிறு துளி பெரு வெள்ளமாக்கிப் பொருளாதாரக் கருவிக்கு வழி வகுக்க வேண்டும்.குசராத்தில் ஆப்பிரிக்க,அமெரிக்க,இங்கிலாந்து குசராத்திகளால் வெற்றிகரமாக நடத்துப் பட்டு வரும் திட்டம் இது போல உள்ளது.
4.ஆங்காங்கே தமிழ்ப் புத்தகக் குழுக்கள் ஞாயிற்றுக் கிழமை 3- 5 மாலையில் என்று நடத்துதல் அதில் குழந்தைகளும் பங்கேற்றல்,அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் படிக்கட்டும்.வாய்விட்டுப் பேசி வளர்க்காமல் தமிழ் வளராது. எந்தக் ஞாயிற்றுக் கிழமை எங்கு சென்றாலும் எங்கோ ஒரு புத்தகக் குழு நகழ்ச்சிக் கட்டாயம் இருக்கும் என்ற நிலை உருவாக்க முடியும்.
5.அனைவரும் சொல்லும் மிகவும் முக்கியமானது " தமிழில் பேசுவோம்" என்பது நாம் ஒவ்வொருவரும் கடை பிடிக்க வேண்டியது.

உங்கள் தொடர் முயற்சிகள் கட்டாயம் வெற்றியளிக்கும்.வாழ்த்துக்கள்.

vasu balaji said...

நிச்சயம் வாழும். தலைப்பு அமெரிக்கத் தமிழ்த் தலைமுறையினரிடம் என்றிருந்தாலும், கேள்வி புலம்பெயர்ந்த என்றிருப்பதால், புலம் பெயர்ந்த தமிழ்த் தலைமுறையினரிடம் மட்டுமே நல்ல தமிழ் வாழும்.
காரணங்கள்:
1. மதிப்பெண்ணுக்காகவின்றி விரும்பிப் படிப்பது.
2.அந்தந்த நாடுகளில் முதலில் தாய்மொழியில் பேச ஊக்குவிப்பு
3.பல்வேறு ஊக்கப் போட்டிகள்

பழமைபேசி said...

பாலாண்ணே, நாந்தான் வாழும் அணிக்குத் தலைவர்... கொஞ்சம் இன்னும் நிறைய சொல்லுங்க....

jeyachandran s said...

அன்பு நண்பரே
நிச்சயமாக அடுத்த தலைமுறையிலும் அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களிடம் தமிழ் வாழும் என்பதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம். தமிழகத்தில் இருந்து ஆறு மாத கால விடுப்பில் இங்கு வந்து உள்ளேன் . இங்கு வசிக்கும் தமிழ் குடும்பங்கள் நமது மொழி மற்றும் கலாச்சாரத்தை தங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுக்கக் காட்டும் ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டிஸ்கோ டான்ஸ் கட்டரு கொடுப்பதில் காட்டும் ஆர்வத்தை இங்குள்ளவர்கள் பரத நாட்டியம் மற்றும் கர்நாடக இசையை கற்று கொடுப்பதில் காட்டுகிறார்கள். வீடுகளில் குழந்தைகளை தமிழில் பேசும்படி வற்புறுத்துகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் எல்லாமே தலைகீழாக உள்ளது.
அது மட்டுமல்ல. இங்கு தென்றல் என்று ஒரு மாத இதழ் வெளியிடப்படுகிறது . அதில் வெளியாகும் கட்டுரைகள், கதைகள், நேர்காணல்கள் எல்லாம் மிகவும் அற்புதமாகவும், தரமானதாகவும் இருக்கிறது. தமிழ் நாட்டில் வெளியாகும் வாரப் பத்திரிகைகளை நினைத்தால் உண்மையிலேயே மனது வேதனைப் படுகிறது. பல்வேறு துறைகளில் திறமை பெற்றவர்களை குறிப்பாக இளைய தலைமுறையினரை அறிமுகப்படுத்துவதிலும் தென்றல் சிறப்பாக செயல் படுகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களிலும் செயல் படுகின்ற தமிழ் சங்கங்கள் தமிழை கற்று கொடுப்பதில் மட்டுமின்றி தமிழர்களை ஒன்றுபடுத்துவதிலும், சமூக ,கலை மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் ஆர்வம் கட்டுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும் போது அமெரிக்காவில் தமிழ் அடுத்த தலைமுறையிலும் நிச்சயமாக வாழும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஜெயச்சந்திரன் எஸ் திண்டுக்கல்

பழமைபேசி said...

@@Thamizhan

தங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றிங்க!!

@@ஜெயச்சந்திரன் எஸ் திண்டுக்கல்

அன்பு விருந்தினர்க்கு வணக்கமும் நன்றியும். தென்றல் இதழுக்கு நானும் ஒரு முகவர்தான். தங்கள் கருத்துகள் ஊக்கமளிப்பதாய் உள்ளது. தென்றல் இதழில் எனது படைப்புகளும் அவ்வப்போது இடம் பெற்று வருகின்றன... :-0)

பழமைபேசி said...

@@ராஜ நடராஜன்

அண்ணா, வணக்கமுங்!!

அரசூரான் said...

பழமை, என்ன கேள்வி இது? ஓ பட்டிமன்றத் தலையப்பா... சரி சரி. புலம் பெயர்ந்த தமிழர்களால் தமிழ் இனி மெல்ல வாழும்-ன்னு நீங்கள் வலியுறுத்திச் சொல்லலாம்.

BaMa said...

நிச்சயம் வாழும்.
தமிழனின் பலம் மற்றும் பலவீனம் இரண்டுமே தமிழ்தான். புலம்பெயர்த் தமிழர்களுக்குத் தாய்மொழி தமிழ் என்பதையும் தாண்டி அது அனைவரையும் இணைக்கும் மாபெரும் சக்தி. இங்கே எனக்குத் தெரிந்த நிறைய நண்பர்கள் தங்கள் சுய பொருளாதாரத் தேவைகளுக்கு செலவிடும் நேரத்திற்குச் சமமாக/மேலாகத் தமிழுக்காக உழைப்பவர்களைக் கண்கூடாகப் பார்த்து வருகிறேன். காட்டாக,தமிழ்ப்பள்ளிகள், திருக்குறள் கூட்டங்கள், இலக்கிய மையங்கள், தமிழ் விழாக்கள், பேரவைத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றில் தங்களுடன் தம் குழந்தைகளை பங்கு பெறச்செய்வதில் மிகுந்த முனைப்புடன் செயல்படுகிறார்கள். இந்தத் தமிழ்ச்சூழலில் வளரும் குழந்தைகளுக்கு தமிழின் முக்கியத்துவம் இயல்பிலேயே வந்துவிடுகிறது. எனவே அடுத்த தலைமுறை நம் தமிழின் செழுமைகளையும் வளங்களையும் உணர்ந்தேதான் வளர்கிறார்கள்.
இது மேலும் வளர நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளது.
1. தமிழில் நிறைய குழந்தைகளுக்கான புத்தகங்கள் வர வேண்டும். பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி வாசிப்பனுபவத்தை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான தரமான புத்தகங்கள் எழுதப்படவேண்டும். குறைந்தபட்சம் மொழிபெயர்ப்பாவது செய்ய வேண்டும்.
2.இங்குள்ள நூலகங்களில் அவர்களுக்கான தமிழ் நூல்கள் கிடைக்க வகைசெய்ய வேண்டும். அல்லது தமிழ்ச்சங்கங்களில் தமிழ் நூலகம் அமைத்து அவர்களுக்கான நூல்களைக் கொடையளிக்க வேண்டும்.
3.பேரவையின் உதவியோடு இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளை ஒருங்கிணைக்கவேண்டும். அதன் மூலம் அமெரிக்க பள்ளி/கல்லூரிகளில் தமிழைத் தேர்வுப்பாடமாக்க வேண்டும்.

தங்கள் குழு அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். :)))

அது சரி(18185106603874041862) said...

//

புலம்பெயர்ந்து வாழும் அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் வாழுமா? வாழாதா?? எங்கே உங்கள் கருத்துகளையும் சொல்லுங்களேன் பார்ப்போம்!! வாழும் என்றால் அதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?? வாழாது என்றால், அதற்கான காரணம் என்ன??
//

பதில் சொல்லும் முன், எனக்கு கேள்வியிலயே கேள்வி இருக்கு..

1. வாழ்தல் என்பதற்கு உங்கள் வரையறை என்ன? அடுத்த தலைமுறைக்கு தமிழ் பேசினா கொஞ்சம் புரிஞ்சிக்க முடியும் என்பது வாழ்தலா இல்லை, அவர்களால் கதை, கவிதை, கட்டுரை என்று எழுத முடிவது வாழ்தலா? மூன்று தலைமுறைக்கு முந்தியவர்களை அவர்கள் சந்திக்கும் போது தமிழ் பேசுதல் வாழ்தலா இல்லை குடும்பத்துக்குள் தமிழ் பேச வேண்டுமா? எது வரையறை?

2. அடுத்த தலைமுறை என்றால் எந்த தலைமுறை? உங்களுக்கு அடுத்து வரும் மகன் மகள் போன்றோரா இல்லை அவர்களுக்கும் அடுத்த தலைமுறையா?

எனக்குத் தெரிந்த பதில்கள் அப்புறம் :))

பழமைபேசி said...

@@அது சரி

ஏஏஏஏஏ... அது சரி அண்ணாச்சி வந்து இருக்காங்களே.....

வாங்க, வாங்க....எத்தினி நாளாச்சி??

1)நிச்சய்மா படிக்க, எழுதத் தெரிஞ்சி இருக்கணும்... கதை, கவிதை, கட்டுரை... இப்ப மட்டும் எல்லாரும் எழுதுறாய்ங்களா என்ன?? எதோ கொஞ்சப் பேர்....

2)அடுத்து வர்றவங்கன்னு...மகன், மகள்...என்னையப் பொறுத்த மட்டிலும்.... இஃகி.... மத்தவங்களுக்குப் பேரன் பேத்தின்னும் இருக்கலாம்...

தாராபுரத்தான் said...

அமெரிக்கா தமிழ் குடும்பங்களின் கைபேசியில் ஒலிக்கும் குரல் பாரதிதாசன் பாடலாக மாற்றுங்கள்...தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்.

ஜோதிஜி said...

ஆரோக்கியமான பதிவும் அற்புதமான பின்னூட்டங்களும். மீண்டும் உள்ளே வந்து என் கருத்தை பதிய வைக்க முயற்சிக்கின்றேன்.

குறும்பன் said...

என்ன இப்படி கேட்டுபுட்டு நான் தான் வாழும் என்ற அணிக்கு தலைவர் என்றால் மாற்று கருத்தை எப்படி கூற?

குறும்பன் said...

சரி நம்ம கருத்தை சொல்லி வைப்போம்.
வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் வாழ சிரமப்பட வேண்டியிருக்கும்.

எனக்கு தெரிந்த நிறைய அடுத்த தலைமுறையினர் தமிழில் பேசினால் புரிந்து கொள்கிறார்கள் ஆனால் பதில் ஆங்கிலத்தில் தான். அவர்கள் பெற்றோர்கள் தமிழ் ஆர்வம்மிக்கவர்கள் என்பது இங்கு கவனிக்கதக்கது. நான் பார்த்த அளவில் தமிழில் பதில் கூறுபவர்களும் தமிழ் படிக்கத்தெரிந்தவர்களும் குறைவு.

ஷர்புதீன் said...

இதற்க்கு பதில் அளிக்க தனி ஒரு இடுக்கையை போடலாம்ன்னு இருக்கேன் பாஸ், காரணம் சற்று நான்-லீனியர் காரணங்கள்தான்!

துளசி கோபால் said...

சொன்னாக் கோச்சுக்காதீங்க.

எனக்குத் தெரிஞ்சவரை,

நம்ம தமிழ் உணவுப்பழக்கங்கள் மட்டும் வாழும்.

மொழி என்ற அளவில் வளருவது கஷ்டம்தான்.

எங்க ஊரில் தமிழ்ச்சங்கம் ஆரம்பிச்சு வெற்றிகரமா 14 ஆண்டுகள் ஆயிருக்கு. தமிழ்ப்பள்ளிக்கூடம் வேற ஞாயிறுகளில் நடத்தறோம். தேர்வுகள் எல்லாம் கூட இருக்கு. ஆனாலும் மாணவர்களைத் தமிழில் பேச வைப்பது கல்லில் இருந்து நார் உரிப்பதைப் போல:(

இப்ப உள்ள தலைமுறைக்கு (எ.கா: என் மகள்) நாம் தமிழில் பேசுவது அத்தனையும் புரிகிறது. ஆனால் நம்மிடம் தமிழில் உரையாடுவதே இல்லை.

குழந்தைகள் வெளியுலகில் நண்பர்களுடன் கலப்பதற்கு முன் தமிழ் பேசுவார்கள். மழலையர் பள்ளி போனதும்........இயல்பா அந்த நாட்டு மொழிதான் அவர்கள் வாயிலே.

Anonymous said...

என்னை பொறுத்த வரையில், தமிழ் வாழும்..

சிங்கையில் நான் பார்த்த அனுபவம்,இரண்டு சிங்கப்பூர் தமிழர்கள் உரையாடும் பொது அவர்கள் தமிழிலும், ஒரு சிங்கப்பூர் தமிழரும் வேற்று நாட்டவர் ஒருவரும் உரையாடும் போது ஆங்கிலத்திலும் உரையாடுகிறார்கள்.

பேசுவதோடு மட்டும் இல்லாமல், பேச்சு போட்டி,கவிதை, கட்டுரை இந்த மாதிரி எதாவது நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தி கொண்டு இருந்தால் கண்டிப்பாக தமிழ் அழியாது.....

Adirai khalid said...

நான் குடும்பத்தினருடன் ஒருமுறை ஆஸ்திரேலியாவிலுல்ல‌ ஒரு தமிழ் அமைப்பின் தலைவர் வீட்டிற்க்கு சென்றிருந்தேன் அப்பொழுது அவர் தன் குடும்பத்தினருடன் ஆங்கிலத்திலேயே கதைத்தனர், அவர் வீட்டிலுல்ல குழந்தைகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசினைர் .இது எனக்கு வியப்பை அளித்தது ஏனெனில் அவரை தமிழ் நிகழ்வு ஒன்றில் சந்தித்தேன் அங்கு அவர் தமிழ் பற்றி அதிகமாக பேசினார், தேவை, அதன் முக்கியம் பற்றியும் மேலும் அனைவரும் இந்நாட்டில் இதை கடைபிடிக்க வேண்டும், நம் பிள்ளைகள் கற்க வேண்டும் என வழியுறுத்தினார்கள் ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்கள் வீட்டில் நடந்ததே அவர் கூறிய அறிவுறைகளுக்கு மாறாகத்தான் இருந்தது

ம்.. எங்கும் எதிலும் பதவி, புகழ், ஆசை என்ற உன்மையானக் குறிக்கோள் என போகப் போக அறிந்துக் கொண்டேன்

நம் தாய் தமிழ் கொஞ்ச காலத்தில் "டமில், டமில்" என்று ஆகாமல் இருக்க..

1. நம் வீட்டில் இருக்கும் பொழுது குழந்தைகளுடன் தமிழ் பேசவேண்டும்
முடிந்தால் உறவு முறைகளை தமிழிலேயே கூப்பிட பழகிக் கொடுக்க வேண்டும் (உம். அப்பா, அம்மா, மாமா, மாமி, வாப்பா, உம்மா அண்ணா, தம்பி, தங்கை அக்கா போண்றவைகள் )

2. இதற்காக சிலமணிநேரம் ஒதுக்கி எழுத்துக்களையும் முடிந்தால் இலக்கணங்களையும் கற்றுக் கொடுக்கவேண்டும்.

3. நம் பண்பாடு, பழக்க வழக்கங்களை, மற்றும் நம் நாட்டில் உள்ள நம்உறவு முறைகளை அவ்வப்பொழுது குழந்தைகளுடன் பேசி பறிமாறிக் கொள்ளவேண்டும். நம் தாய் நாட்டிலுல்ல சொந்தங்களை தொடர்ந்து தொடர்பு படுத்திக் கொடுக்கவேண்டும்

4. நம் தமிழ் மொழிபேசும் விருந்தினர்களை சந்திக்கும் பொழுது (பீட்டர் வாசிப்பதை தவிர்க்கவேண்டும்) தமிழ‌ரிடம் தமிழிலேயே பேசவேண்டும்., முக்கியமாக குழந்தைகள் இருக்கும்பொழுது நன்பர்களுடன் தமிலிலேயே பேசவேண்டும்

ஜோதிஜி said...

1.ஈழ மக்கள் உலகில் எங்கெங்கு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ் வாழும். வளருமா என்பது பெற்றோர்களின் கைகளில்?

2. தமிழ் திரை உலகம் இருக்கும் வரைக்கும் இந்த சந்தேகமே வரக்கூடாது.

3. பிரான்ஸ் ல் உள்ள ரீ யூனியன் தீவில் பணிபுரியும் மருத்துவர் தமிழ் ஆண்டு விழா மலரை அனுப்பி இருந்தார். படங்களில் பரதநாட்டியம். மற்ற தமிழர் பண்பாட்டு படங்கள், ஆனால் உருவாக்கிய இதழ் மட்டும் ப்ரென்ஞ் எழுத்துக்களில்.

4. அவரே திருச்சிக்கு வந்து இருந்தே போது பேசினால் 30 வருடம் ஆனால் வட்டார வழக்கு கூட அப்படியே துல்லியமாக தமிழில் பேசுகிறார். குழந்தைகள் மட்டும் பேந்த பேந்த முழித்துக் கொண்டுருக்கிறார்கள்.

மதிப்பெண் உண்டா?

Anonymous said...

நண்பரே புலம்பெயர்ந்து வாழும் அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் வாழும் சந்தேகம் வேண்டாம். தமிழையும் புலி என்ற மிகவும் கொடிய பயங்கரவாதிகளையும் பாதகாப்பற்றுவதற்கான முயற்சியாக செய்வது தமிழர்களுக்கு செய்யும் அநியாயம்.

பழமைபேசி said...

// Anonymous said...
நண்பரே புலம்பெயர்ந்து வாழும் அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் வாழும் சந்தேகம் வேண்டாம். தமிழையும் புலி என்ற மிகவும் கொடிய பயங்கரவாதிகளையும் பாதகாப்பற்றுவதற்கான முயற்சியாக செய்வது தமிழர்களுக்கு செய்யும் அநியாயம்.
//

அன்பருக்கு வணக்கம். நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்... அது போன்ற காரியங்களில் நாட்டம் என்பது சிறிதும் கிடையாது.

எனக்குப் பிடித்ததெல்லாம் தமிழும், தமிழர்களுமே என்பதைச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன். மேலும், மனமொவ்வாத காரியங்கள் நிகழும் இடங்களில் இருந்து வெளியேறவும் தயங்க மாட்டேன்.

ஆனால், தற்போதைய மனநிலையில், பேரவையின் மீது நான் மிகுந்த மதிப்புக் கொண்டு உள்ளேன்.

LinuxAddict said...

டமில் கண்டிப்பா வாலும்..

Anonymous said...

பெற்றோர்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசினாலே தமிழ் வாழும்

Sankar said...

thamizil pesa kulandaikalai urchagappaduthum thamizh sanga periyorgalai nan kuraivahathan parthirukkirean. Ellorum Kalaingar Karunanithi mathiri than.

அது சரி(18185106603874041862) said...

//
Anonymous said...
நண்பரே புலம்பெயர்ந்து வாழும் அடுத்த தலைமுறையினரிடம் தமிழ் வாழும் சந்தேகம் வேண்டாம். தமிழையும் புலி என்ற மிகவும் கொடிய பயங்கரவாதிகளையும் பாதகாப்பற்றுவதற்கான முயற்சியாக செய்வது தமிழர்களுக்கு செய்யும் அநியாயம்.
June 29, 2010 8:57 AM
//

இங்கே எங்க வந்துச்சி புலியும் கிலியும்?? போன தடவை ஃபெட்னால இப்படித் தான் ஒருத்தர் என்ன நடந்துச்சின்னு பாக்காமயே ஆஃபிஸ்ல உக்காந்துக்கிட்டு புலி ஆதரவு மாநாடுன்னு எழுதினாரு...இந்த வருஷம் இப்பவே ஆரம்பிச்சிட்டாங்களா?..

அது சரி(18185106603874041862) said...

//
தாராபுரத்தான் said...
அமெரிக்கா தமிழ் குடும்பங்களின் கைபேசியில் ஒலிக்கும் குரல் பாரதிதாசன் பாடலாக மாற்றுங்கள்...தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்.
June 28, 2010 8:56 PM
//

ஸாரி...

என்ன பாஸ், எதுனா காமெடி பண்றீங்களா இல்லை சீரியஸாவே சொல்றீங்களா?

அது சரி(18185106603874041862) said...

துளசி கோபாலும் குறும்பனும் சொல்லியிருப்பது தான் என் கருத்தும்....பின்னர் ஒரு நாள் இதைப் பற்றி விரிவாக சொல்ல முயற்சிக்கிறேன்...

(தவிர, தனிப்பட்ட கேள்வி...அமெரிக்காவில் வளர்ந்து, அமெரிக்காவிலேயே வாழும் அடுத்த தலைமுறை தமிழ் பேச வேண்டிய அவசியம் என்ன?)

Anonymous said...

மொழியைக் கற்றுக் கொள்வது சுலபம். அதைக்
கற்றுக் கொடுக்கும் ஆசையை வரவழைப்பது கடினம். தமிழில் கதைப் புத்தகம், குழந்தைகளுக்கானது என்று பார்த்தால் ஆங்கிலப்
புத்தகங்களைப் போலக் கிடையாது. படங்களுடன்
நல்ல தரமான புத்தகங்கள் வர வேண்டும். சின்னக்
குழந்தைகளுக்கு மொழி கற்றுக் கொடுக்க ஓவியமும் இசையும் கண்டிப்பாக உதவும்.

Indian publishing industry should take note of the western approach to children's books. Once we create an interest in reading they can pick up the language easily. Children's poets rhymes set to catchy tunes is another way to help children learn the language. It's
surprising that an original Indian show
comparable to Seasame street or Barney
is not there yet. Or may be there is?

Ajay said...

அது சரி, அமெரிக்காவில் படித்து, அமெரிக்காவில் வளர்ந்து, அமெரிக்காவில் வாழப்போகும் குழந்தைக்கு தமிழ் எதற்கு? தன் வீட்டில் எந்த தலைமுறையிலோ பேசினார்கள் என்பதால் அவர்கள் அதை படிக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என எண்ணுவதில் என்ன நியாயம் இருக்கிறது? நமது முன்னோர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்ன மொழி பேசினார்களோ நாம் அறியோம். அது போல தான், குழந்தைகளும். அந்த அந்த நாட்டில் அந்த அந்த மொழி கற்று, அதில் சிறப்பாகி வாழ வேண்டியது தான். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது போல, எம்மொழியும் நம் மொழி தான். தமிழ் தமிழ் என பேசி குழந்தைகளை சிரமப்படுத்தவோ, தனிமைப்படுத்தவோ கூடாது என்பதே என் கருத்து.

Ajay said...

ராஜராஜனின் உலக அறிவு புல்லரிக்க வைக்கிறது. ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தினம். இந்த வருடம் ஜூலை 4 வார இறுதியில் வருவதால் ஜூலை 5 விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. ஜூலை 6 எப்படி வந்தது என்று தான் எனக்கு தெரியவில்லை.

Ajay said...

//
தாராபுரத்தான் said...
அமெரிக்கா தமிழ் குடும்பங்களின் கைபேசியில் ஒலிக்கும் குரல் பாரதிதாசன் பாடலாக மாற்றுங்கள்...தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்.
June 28, 2010 8:56 PM
//

சிலருக்கு தாங்கள் பாரதியின் (மன்னிக்கவும், பாரதிதாசனின்) பேரன் என்ற நினைப்பாக இருக்கலாம்.

Ajay said...

எம்மதமும் சம்மதம் என்பது போல தான், எம்மொழியும் சம்மதம் என்பதே என் கருத்து. ஜாதி, மதம், மொழி என பாகுபாடு பார்க்கும் வரை இந்தியா முன்னேறாது, இந்தியர்கள் முன்னேற மாட்டார்கள்.

Ajay said...

ராஜராஜன் இல்லை, ராஜ நடராஜன்.... தவறுக்கு மன்னிக்கவும்.

பழமைபேசி said...

//Ajay said...
ராஜராஜனின் உலக அறிவு புல்லரிக்க வைக்கிறது. ஜூலை 4 அமெரிக்க சுதந்திர தினம். இந்த வருடம் ஜூலை 4 வார இறுதியில் வருவதால் ஜூலை 5 விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. ஜூலை 6 எப்படி வந்தது என்று தான் எனக்கு தெரியவில்லை.

June 29, 2010 7:46 PM//

அன்பா, அவர் வெளியூரில் வசிப்பவர். மேலும், அது தட்டச்சு இடறியதாகக் கூட இருக்கலாம் இல்லையா?? பிழையானதுன்னு சொல்லுங்க கேட்டுக்குறோம்!!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நானும் வாழாது அணி :) இங்கு சில இரண்டாம் தலைமுறை ஜுனியர் தமிழ் மாணாக்கர்களை கண்டதால் சொல்கிறேன்.. எல்லாரும் இங்கயே பேசிட்டுப் போறாங்க?

BaMa said...

http://www.youtube.com/watch?v=bDxS9QoBpTo&feature=player_embedded#!

BaMa said...

http://www.youtube.com/watch?v=RPFnPgfMabc&feature=player_embedded

BaMa said...

http://www.youtube.com/watch?v=FYyp-fxNsHQ&feature=related

BaMa said...

http://www.youtube.com/watch?v=7ruTVWIAUEM&feature=player_embedded#!

Anonymous said...

இதுக்கு ஏன் பட்டிமன்றம். இலங்கைத் தமிழர்களிடையே முதலில் ஒற்றுமை வளரட்டும். பிறகு தமிழை நன்றாக வளர்க்கட்டும். நான் இலங்கை தான். எங்கள் மக்களிடையே ஒற்றுமை குறைவு. போட்டி, பொறாமை அதிகம்.