6/06/2010

தமிழ்த் தொண்டன் விஜய் மணிவேல்

செறிவெனப்படுவது கூறியது மறாஅமை; பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்!! இவ்வண்ணமே, பண்புக்கும் அன்புக்கும் செறிவுக்கும் பொலிவூட்டி, அமெரிக்கத் தமிழர்களுக்கும் தமிழுக்கும் பிறர் அறியா வண்ணம் தன் கடமை அறிந்து பெருந்தொண்டாற்றி வரும் இளைஞர்தான், செயல்வீரர் விஜய் மணிவேல் அவர்கள்.

எத்தகைய விளம்பரத்திற்கும் ஆசைப்படாதவர்; தெளிந்த சிந்தனைக்கு உரியவர்; உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்களுக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கும் தொடர்ந்து தன்னாலான தொண்டினைச் செய்து வருபவர்! மேலும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இணைய தளத்தைக் கட்டமைத்துப் பராமரித்து வருபவருங்கூட!!

அடுத்த மாதம் நிகழவிருக்கும் தமிழ் விழாப் பணிகளில் மூழ்கியிருந்த அவர், நமது வேண்டுகோளுக்கு இணங்க நேரம் ஒதுக்கி, நமது கேள்விகளுக்குப் பொறுமையாக பதிலளித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வணக்கம் விஜய். நீங்கள் எத்தனை ஆண்டுகளாக அமெரிக்காவில் இருக்கிறீர்கள்?

வணக்கம் பழமைபேசி. நான் இங்கு வந்து பத்து ஆண்டுகளாகிறது. காலம் கழிந்ததே தெரியவில்லை. பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

உங்களை கடந்த ஓர் ஆண்டாக, அருகில் இருந்து அவதானித்து வருகிறேன். தமிழர்களுக்காக உழைக்க வேண்டும் என்கிற நாட்டம் எப்படி வந்தது?? தாயகத்தில் இருக்கும் போதே தமிழுணர்வு கொண்டவராகவும் முனைப்பாகவும் இருந்தீர்களா??

உண்மையில் சொல்லப் போனால், ஊரில் இருந்தவரைக்கும் எனக்கு எந்த உணர்வும் இருந்ததில்லை. என்னை ஒத்த வயதுள்ள இளைஞர்களுடன் சேர்ந்து கொண்டு, பொழுதைக் கழிப்பதுதான் நான் செய்யும் வேலையாக இருந்தது. இங்கு வந்த பிறகுதான், சிறிது சிறிதாக என்னுள் தாயகத்தின் மீதும், தமிழர்களின்பாலும், தமிழ் மொழியின்பாலும் ஒரு பற்றுதல் ஏற்பட்டது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் மதுரையைச் சார்ந்தவனாக இருந்தாலும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நான்கு அல்லது ஐந்து முறைதான் சென்றிருக்கிறேன்; நான் இங்கே வந்த பிறகு சென்று வந்தையும் சேர்த்து! ஊரில் இருக்கும் வரைக்கும் அதன் அருமை, பெருமையை உணரமுடியவில்லை. ஆனால், இங்கே வந்தபிறகு கோவிலின் பெருமைகளை உணர்ந்து அடிக்கடி செல்ல வேண்டும் என்கிற ஆவல் மேலிடுகிறது. அதேபோல்தான், தாய்மொழியின் மீதான பற்றுதலும் மேலோங்கிய வண்ணம் இருக்கிறேன்.

நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. உணர்வு கொண்டவராக இருந்தாலும், எதோ ஒரு உந்துசக்தி இருந்திருக்கும். குறிப்பாக, தமிழ்ச் சங்கங்கள் மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கு அயராது உழைத்துக் கொண்டு இருக்கிறதைக் காண முடிகிறது. அப்பணிகளுக்குள் எப்படிக் காலடி எடுத்து வைத்தீர்கள்?

இந்த இடத்தில் மிசெளரியில் இருக்கும் கெழுதகை நண்பர் பொற்செழியன் அவர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.அவரோடு இருந்த, முனைவர் திரு. ஆறுமுகம் மற்றும் திரு. வாசு அவர்களும் இதற்குக் காரணமாக இருந்தார்கள். பொற்செழியன் அவர்களோடு இணைந்த காலத்தில், மிசெளரி தமிழ்ச் சங்கத்திற்கு இணையதளம் மற்றும் இதர கட்டமைப்பு வேலைகள் செய்ய வேண்டி இருந்தது. அதன்பொருட்டு, அவருடன் இணைந்து மேற்கொண்ட பணிகளே முதற்படி.

எப்படி வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கான பணிகளுக்குள் நுழைந்தீர்கள்?

நான் மிசெளரி தமிழ்ச் சங்கத்திற்கு செய்யும் பங்களிப்பைக் கேள்வியுற்ற அன்றைய பேரவைத் தலைவர் தில்லை குமரன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவே, இரவி சுந்தரம் அவர்களுடன் என்னை இணைத்துக் கொண்டேன்.


இரவி சுந்தரம் அவர்கள், பேரவையின் இணையதளம் மற்றும் தகவல்க் கட்டுமானப் பணிகளை கவனித்து வந்தார். அவரோடு சேர்ந்து நானும் செய்ய வேண்டிய பணிகளைப் பங்கிட்டுக் கொண்டேன். ஆனாலும், என் பங்களிப்பானது இன்றைய அளவுக்கு அப்போது இருந்திருக்கவில்லை.

அப்படியானால், எப்போது முழுமூச்சாக உழைக்கத் துவங்கினீர்கள்?

2007ஆம் ஆண்டு ஃப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டிருந்தேன். அவ்விழாவிற்குப் பிறகு முனைவர் திரு.முத்துவேல் செல்லையா அவர்கள் தலைவரானார். ஒரு நாள் அவருடன் அளவளாவிக் கொண்டிருக்கையில், எனது மனதிற்பட்டதைக் கூறியதும் அவர் என் மேல் நம்பிக்கை கொண்டவரானார். இது என் வாழ்வில் நடந்த ஒரு பெரிய நிகழ்வு என்றே குறிப்பிட வேண்டும். நல்லதொரு வாய்ப்பினை எனக்களித்தமைக்கு அவருக்கு என்றென்றும் நன்றி உடையவனாகிறேன்.

மேலும், அன்றிலிருந்து இன்று வரைக்கும் நான் கடந்த வந்த பாதையை எண்ணும் போது, எனக்குப் பெருமையாக இருக்கிறது. பேரவையின் இணைய தளத்தை, பேரவையின் முன்னோடிகளின் உதவியால்தான் வெகுவாக மேன்மைப்படுத்த முடிந்தது.

அட்லாண்டாவில் நடந்த தமிழ் விழா குறித்த அனைத்துப் பணிகளையும், தக்க மென்பொருள் கொண்டு தன்னியக்கமாக மாற்றியமை, கட்டமைப்புக்கு வெகுவாக வலு சேர்த்தது. இனி அந்த கட்டமைப்பானது, என்றென்றும் பேரவைக்கு உதவியாக இருக்கும். நண்பர் செளந்திர பாண்டியன் அவர்களது பங்கும் இதில் அளப்பரியது ஆகும்.

இன்னும் பேரவையின் வலைதளத்தை மேன்மைப்படுத்த வேண்டியது உள்ளது. அதற்காகச் செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே இருக்கிறேன்.

சென்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டவன் என்கிற முறையில், நீங்கள் கூறியதை எல்லாம் நானே பார்த்து இருக்கிறேன். நீங்கள் வெகுவாகச் செய்த மாற்றங்களுக்கான வரவேற்பு எத்தகையதாக இருந்தது?

நல்ல வரவேற்பு இருந்தது. பேரவையின் அத்தனை விபரங்களையும், வெளிப்படையாகப் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. எவரும், எப்போது வேண்டுமானாலும் தரவாக்கிக் கொள்ளும் வகையில் அத்தனை விபரங்களும் வழங்கியில் முறையாக்ச் சேமிக்கப்பட்டு உள்ளது. இவையெல்லாம் பேரவையின் கட்டமைப்புக்கு வலுச்சேர்த்தன என்றால் மிகையாகாது. உகந்த நேரத்தில், தக்க ஆலோசனை நல்கி வழிநடத்திய பேரவைத் தலைவர் மற்றும் முன்னோடிகளை நினைவு கொள்வதில் பெருமை அடைகிறேன்.

நண்பர் என்ற முறையில், உங்கள் வாழ்க்கையைக் குறித்தான கேள்வி. நீங்கள் செய்து வருகிற சமூகப் பணிகள், உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கவில்லையா? அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்??

நல்ல கேள்வி. நிச்சய்மாக எனது மனைவியின் ஒத்துழைப்பு இதில் அடங்கி இருக்கிறது. எங்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வினால்தான் இது சாத்தியமாகிறது.


இப்போதெல்லாம், அன்றாடம் அதிகாலை ஒரு மணி வரைக்கும் விழித்திருந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது. வீட்டாருக்கும் இது தெரிந்தே இருக்கிறது. என்னுடன் இருக்கும் மனைவி, மகள் மட்டுமல்லாது ஊரில் இருக்கும் என் உற்றார் உறவினரும் இதை எண்ணி மகிழ்ந்து, பெருமை கொள்ளவே செய்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், அமெரிக்கா போயும் என் மகன் தமிழுக்குத் தொண்டாற்றுகிறான் என அவர்கள் மற்றவரிடத்தே சொல்லிச் சொல்லிப் பெருமை கொள்வதைக் காண முடிகிறது.

விஜய், உங்கள் உழைப்பை எண்ணி நானும் பெருமை கொள்கிறேன். உங்கள் மனைவிக்கும் தமிழின்பால் பற்றுதல் இருப்பதாகக் குறிப்பிட்டீர்கள். அது எப்படி??

எனக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பே, தமிழ்ச்சங்கப் பணிகளில் முனைப்பாக ஈடுபடுத்திக் கொண்டு இருந்தேன். திருமணம் நடைபெற்ற பின், அமெரிக்கா வந்த என் மனைவி இங்குள்ள தமிழ்ச் சங்கத்தினரோடு நட்புறவோடு பழக ஆரம்பித்துக் கொண்டமையால், இயல்பாகவே அவருக்கும் தமிழின்பால் பற்றுதல் ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

உள்ளூர்த் தமிழ்ச் சங்க விழாக்கள் என்று சொன்ன மாத்திரத்திலேயே, வீட்டில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். விழாவிற்குச் சென்று நண்பர்களோடு இருந்து பொழுதைக் கழிப்பது, பண்பாடு பேணுவது, நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவற்றில் இருக்கும் குதூகலத்தை எண்ணுகையில் மகிழ்ச்சி பொங்கும். உறவுகளைக் காண்பதில் என் மனைவிக்கு எப்போதுமே மகிழ்ச்சிதான்!

உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த ஆண்டிற்கான தமிழ்விழா குறித்த ஏற்பாடுகள், பேரவையின் வளர்ச்சி இது பற்றிக் கூறமுடியுமா??

மிகவும் எழுச்சியாக இருக்கிறது. நிறைய புதுமுகங்களை, இளைஞர்களைக் காண முடிகிறது. அடுத்த தலைமுறையினர் வெகுவாக உள்ளே வர ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழ் மொழியின்பால் என்றுமில்லாத பற்றுதல் மேலெழுந்த வண்ணமாக உள்ளனர் என்பது வெள்ளிடைமலை.


நாடெங்கும் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையும், மாணவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. இதையெல்லாம் அவதானிக்கும்போது பேருவகை அடைகிறேன்.

விஜய், இது ஒரு சிக்கலான கேள்வி. பொதுவாக, ஊதியத்தை எதிர்நோக்கி ஒன்றைச் செய்வார்கள். அல்லது, புகழ், விளம்பரத்திற்க்காக உழைப்பார்கள். உங்களைப் பொறுத்த வரையில் இதில் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருக்கையில், என்றேனும் அயர்ச்சியாக, சலிப்பாக உணர்ந்தது உண்டா??

கிடையவே கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்கையில், உற்சாகம், ஊக்கம் என்பது படிப்படியாகக் கூடிக் கொண்டேதான் வருகிறது. முனைப்பின் வீரியம் என்னுள் கிளர்ந்துவிட்டுப் பீறிடுகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. உள்ளூர்த் தமிழ்ச் சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் என் குழந்தைகள். குழந்தைகளுக்காக உழைப்பதை எந்த ஒரு தமிழனும் அயர்ச்சியாக நினைப்பதில்லை.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையைப் பற்றி மற்றவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பேரவையானது தமிழுக்கும், தமிழருக்குமான ஒரு கட்டமைப்பு. அதைப் போற்றுவது நம் கடமை. ஒவ்வொருவரும் அதை உணர்ந்து, எந்த ஒரு தயக்கமும் இன்றி நாட வேண்டும். ’கண்ணால் காண்பதுவும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரிப்பதே மெய்!’ என்பதை வலியுறுத்துகிறேன். தமிழ் உறவுகளுக்கான இடம் இது. புலம் பெயர்ந்த மண்ணில், நமது பண்பாடு பேணவும், மொழியை வளர்த்தெடுப்பதிலும் பேரவையின் பங்கு மகத்தானது.

விஜய், தங்களுடன் உரையாடியதில் மனநிறைவும், மகிழ்ச்சியும் கொள்கிறேன். மிக்க நன்றி! உங்களுக்கு என்னிடத்தில் ஏதேனும் கேட்க வேண்டி இருக்கிறதா??

ஆண்டு முழுமைக்கும் என்னுடன் தொடர்பில் இருந்து கொண்டு உதவி வரும் உங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் முனைப்பாக பல்வேறு பணிகளை எடுத்துச் செய்து வருகிறீர்கள். அவை யாவும் சிறப்புற அமைய என் வாழ்த்துகள்!

---பழமைபேசி

செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!

13 comments:

நா. கணேசன் said...

விஜய் பற்றி பொற்செழியன் தம்பி, நண்பர் சௌந்தர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

தமிழ் மதுரம் said...

வாழ்த்துக்கள் நண்பர்களே! கடல் கடந்து, வேற்று நாட்டில் வாழ்ந்தாலும் எம் தமிழின் சிறப்பினை உயர்த்துவதில் அயராது பாடுபடும் உங்களின் நற்பணி தொடரட்டும்.

RRSLM said...

விஜய் மற்றும் பொற்செழியன் அவர்களுக்கு வாழ்த்துகள்! மேலும் இவர்களை அடையாளம் காட்டியதற்கு பழமை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

பனித்துளி சங்கர் said...

எங்கும் எம் தமிழ் எதிலும் எம் தமிழர் மிகவும் பெருமையாக இருக்கிறது நண்பரே !

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். பேட்டியெடுத்த உங்களுக்கும் நன்றிகள்.

vasu balaji said...

அன்பர்களுக்கு வாழ்த்துகள். பகிர்ந்தமைக்கு பழமைபேசிக்கு நன்றி.

சின்னப் பையன் said...

அட்டகாசம்ணே. விஜயோட சில முறை பேசியிருந்தாலும் அடுத்த மாத விழாவில் சந்திக்க ஆவலாயிருக்கேன்.

தமிழுக்காக அவர் செய்யும் தொண்டு அளப்பரியது என்பதில் ஐயமேயில்லை.

இப்படி ஒரு அறிமுக பேட்டி கொடுத்ததற்கு உங்களுக்கும் நன்றி..

குடுகுடுப்பை said...

விஜய்க்கு நன்றி, அப்படியே தமிழ்க்குண்டன் குடுகுடுப்பையை ஒரு பேட்டி எடுத்து சிறப்பிக்கவும்

ஜோதிஜி said...

இவர்களைப் போன்றோர்களைப் பற்றி உங்கள் தளம் வாயிலாக படிக்கவாவது முடிகிறதே? அவருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துகள்.

தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டுருக்கும் பலரையும் உங்கள் பேட்டி வாயிலாக எதிர்பார்க்கின்றேன்.

க.பாலாசி said...

சிறந்த பகிர்வு..வணக்கங்கள்...

Thamira said...

சிறப்பான பகிர்வு. விஜய் மணிவேல் மற்றும் அனைத்து தமிழார்வலர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.!

Mahi_Granny said...

தமிழால் தங்களுடன் இணைந்த நண்பருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்

நசரேயன் said...

நல்ல பகிர்வு அண்ணே