6/12/2010

பள்ளயம் - 06/12/2010

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

========================================

காணுதல், பார்த்தல், நோக்குதல் முதலான சொற்களை நாம எந்த சூழ்நிலையில புழங்குறோம்? கண்களால எதோ ஒன்னைப் பார்க்கும் போது பரும்படியாப் பாவிக்கிறது நம்ம வழக்கம். அந்த மூன்று சொற்கள்லயும் இருக்குற நுண்ணியத்தைப் பெரும்பாலானவர்கள் தெரிஞ்சி வெச்சிருக்கிறதும் இல்லை. சரி, அப்படி அதுல என்ன நுண்ணியம் இருக்கு?

மலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, உலாவிய மானைக் கண்டேன். திரையை நோக்கியதும், திகில்க் காட்சியைக் கண்டேன். அவளை நோக்கியதில், பின்னணியில் இருந்த எழிலார்ந்த வெளியைப் பார்க்க முடியவில்லை.

மேம்போக்கா, மொத்தமா ஒன்னை விழிகளால தரிசிக்கிறது பார்த்தல்; வானத்தைப் பார்த்தேன். நகரும் காட்சி அல்லது குறிப்பிட்ட ஒன்றை மட்டும் பிரதானமாகக் கண்களால் தரிசிப்பது காணுதல் அல்லது கண்டு கொள்தல். முன் தீர்மானத்தோடு, நோக்கத்தோடு, கண்களால் தரிசிப்பது நோக்குவது.

இப்படி நுண்ணியங்களைப் புரிஞ்சி, அதற்கான சொற்களைப் புழங்கினா, மொழியின் வளம் கூடும். தமிழ்நாட்டுல என்ன சொல்றோம்? அவளைப் பார்த்து பேசிட்டு வந்தேன். அதுவே ஈழத்தமிழ்ல?? அவளைக் கண்டு, இருந்து, நாலு கதை கதைச்சிட்டு வந்த நான்!


========================================

தமிழ் ஒரு செம்மொழி! கூடவே நுண்ணிய மொழின்னும் சொல்றோம். ஆங்கிலத்துல சொல்லணுமுன்னா, it is sensitive language too! அப்படின்னா? அதாவது, சொல்ல வந்ததை, எந்த விதமான மாற்றுப் பொருள் கொள்தலும் இல்லாம, குழப்பம், திரிபுமில்லாமச் சொல்றது. Communicating without any ambiguity....

ஆனாலும் பாருங்க, சிலேடை, பல பொருள்ச் சொற்கள்னும் நிறைய தமிழ்ல இருக்கு. ஆக, மேல சொன்ன கூற்றுக்கு இது முரண்பாடா இருக்கு. கூடவே, மொழியின் விழுமியத்தில் ஒரு நடைமுறையும் இருக்கு. அது என்ன??

உலகளாவிய ஒப்பந்தங்கள் போடும் போது, அந்த ஒரு குறிப்பிட்ட மொழியிலதான் ஒப்பந்தத்தை வரையறுப்பாங்களாம்! காரணம் என்ன?? ஒன்னைச் சொன்னா, சொன்னதுதான்! அதை வேற பொருள்கொண்டு புரிதலுக்கான இடமே இல்லையாம். It is very sensitive with no ambiguity. அப்படிப்பட்ட மொழியா? அது எது?? ஃபிரெஞ்ச்!!!


========================================

Blackmail! தமிங்கிலத்துல ப்ளேக்மெயில்னும் சொல்றோம். அதென்ன இந்த ப்ளேக்மெயில்?? ஒருவரைப் பற்றிய மறைபொருள் ஒன்றைத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதை வெளியிட்டு, விழுமியக்கொலை(character assasination) நிகழ்த்தி விடுவேன் என அச்சுறுத்துவது. அல்லது, செய்த குற்றமிகு செயலை வெளியிட்டுச் சட்டத்தின் முன்னால் நிறுத்தி விடுவேன் என மிரட்டுவது.

சரி, அப்படியான் ஆங்கிலத்துல இருந்து தமிழுக்கு கருப்பு அஞ்சல்னு மொழியாக்கம் செய்யலாமா? அபத்தமாத் தெரியுதே? மொழியாக்கம் செய்யும் போது, எதையும் சொல்லுக்கு சொல்னு செய்தா, அது அபத்தமாத்தான் முடியும். ஆகவே, இடம், பொருள், ஏவல் மற்றும் மரபு தெரிஞ்சி மொழியாக்கணும் செய்யணும்.

சரி, இந்த சொல்லுக்கான இடம், பொருள், ஏவல் பத்தி நாம பேசவேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா, இது வெகுவாப் புழக்கத்துல இருக்கிற சொல்தான்! மரபு??

Blackmailங்ற இச்சொல், இசுகாட்லாந்து நாட்டுக்கு உரிய சொல். mail அப்படின்னா, அவங்க மொழியில, வரி, கையூட்டு அல்லது குறியாப்பு என்று பொருள். ஒன்றைப் பெறுவதற்கான மாற்றுப் பொருள். ஆகவே, நாம இதை எதோ அஞ்சல்னு நினைக்கப்படாது பாருங்க.

இப்படியாக, இசுகாட்லாந்து நாட்டுல, தொழில் நிமித்தமாகவும், அன்றாடப் பிழைப்பு நிமித்தமாகவும் அமைதி வேண்டி, அங்கிருந்த அடாவடிப்பேர்வழிகள் கையூட்டு, அதாவது அச்சுறுத்திப் பணம் பறிச்சாங்க.

அப்படிப் பணம் பறிக்கும் போது, தம்வசம் இருந்த கால்நடைகளைக் கொடுத்தாங்க. அவைகள் பொதுவா கறுப்பு வண்ணத்துல இருந்ததால, கறுப்புக் கையூட்டுன்னு சொல்றது வாடிக்கை ஆச்சு, அதான் இந்த Blackmail! அதுவே, தன்வசம் இருந்த வெள்ளியைக் கையூட்டாத் தரும்போது வெண்மைக் கையூட்டு, அதாவது whitemailனும் சொல்ல ஆரம்பிச்சாங்க.

ஆகவே, இச்சொல்லை மொழியாக்கம் செய்யும் போது இப்படியான மரபுகளையும் தெரிஞ்சி வெச்சி, மொழியாக்கம் செய்யுறது மிக அவசியம். அதெல்லாஞ்செரி, இதுக்கு இணையான தமிழ்ச் சொல்? அவன், அவளோட நிர்வாணப்படத்தை வெச்சே, அவளை சூட்சுமகந்தம் செய்யுறான். திருடினதை வெளில சொல்லிடுவேன்னு சொல்லிச் சொல்லியே சூட்சுமகந்தம் செய்ததுல, அவன் பைத்தியமாவே ஆயிட்டான்.


========================================

லாபியிங்(lobbying): இந்தத் தமிங்கிலச் சொல் என்னா சொல்லுது? அவன் செஞ்ச லாபியில, இவனோட நியாயமெல்லாம் செத்துப் போச்சு. இப்படிப் பேசிப் புழங்குறதைக் கேட்டும், படிச்சும் இருப்பீங்க.

மேலை நாடுகள்ல, சட்ட முன் வரைவுகள் ஓட்டெடுப்புல வெல்றதுக்கான, தனக்கு ஏதுவான சரிக்கட்டுதல் வேலைகளை எங்க செய்வாங்க? ஓட்டெடுப்புத் துவங்குறதுக்கு முன்னாடி, அரங்க முன்றல், முற்றத்துல சக உறுப்பினர்கள்கிட்டச் செய்வாங்க. இந்த இடத்துல(lobby) செய்யுற காரியமே, பெயராகு பெயரா மாறவும் செய்தது.

அதாவது, சரிக்கட்டுதல்ங்ற வினையாகு பெயர்தான், முற்றப்படுத்துதல்ங்ற பெயராகுபெயர்ல புழக்கத்துக்கு வந்திடுச்சு. தமிழ்ல, வினையாகு பெயர்லயே, அதாவது, சரிக்கட்டுதல்ன்னே புழங்கலாம்; கையாள்றதுக்கு வாட்டமாவும் இருக்குதல்ல?!


========================================

அடம்பன் கொடியும், திரண்டால் மிடுக்கு!

18 comments:

கயல் said...

//
மொழியாக்கம் செய்யும் போது, எதையும் சொல்லுக்கு சொல்னு செய்தா, அது அபத்தமாத்தான் முடியும். ஆகவே, இடம், பொருள், ஏவல் மற்றும் மரபு தெரிஞ்சி மொழியாக்கணும் செய்யணும்.
//
நல்லதொரு கருத்து!

அருமை ஆசானே!

Anonymous said...

சில சமயம் யோசிச்சு தீர மாட்டேங்குது. சரியான மொழியாக்கம் செய்ய முடியாட்டி அப்பிடியே தமிங்க்லீஷ் ஆக்கிடறேன் .

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
சில சமயம் யோசிச்சு தீர மாட்டேங்குது. சரியான மொழியாக்கம் செய்ய முடியாட்டி அப்பிடியே தமிங்க்லீஷ் ஆக்கிடறேன்
//

முயற்சி செய்யுறீங்க பாருங்க... அதுவே மனநிறைவுதான்!

@@கயல் said

நன்றிங்க!

சீமாச்சு.. said...

யோசிக்க வெக்கிறீங்க.. எனக்கென்னவோ கருப்பு அஞ்சல் தான் கன்வீனியண்ட்டாத் தோணுது.

சூட்சுமகந்தம்-னு புழங்க ஆரம்பிச்சால், கொஞ்ச காலத்துல மருவி கெட்ட வார்த்தையாகிவிடும் சான்ஸ் இருக்கு..

பழமபேசி பதிவில ச்சும்மா சீண்டுற சான்ஸுக்குத்தான் கன்வீனியென்ஸ் எல்லாம் :)

பழமைபேசி said...

//Seemachu said...

பழமபேசி பதிவில ச்சும்மா சீண்டுற சான்ஸுக்குத்தான் கன்வீனியென்ஸ் எல்லாம் :)
//

சமூக நலப் பேரவையினரும் அக்கினிச்சித்தர் அவர்களும் உடனே மேடைக்கு வரவும்! இஃகி!!

அப்பாவி முரு said...

//உலகளாவிய ஒப்பந்தங்கள் போடும் போது, அந்த ஒரு குறிப்பிட்ட மொழியிலதான் ஒப்பந்தத்தை வரையறுப்பாங்களாம்! காரணம் என்ன?? ஒன்னைச் சொன்னா, சொன்னதுதான்! அதை வேற பொருள்கொண்டு புரிதலுக்கான இடமே இல்லையாம்//

அப்ப உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு பிரென்ச் சொல்லிக்கொடுத்து, அவிங்களை பிரென்சிலேயே பேச வைக்கணும். முடியலை...

குறும்பன் said...

lobby என்பதற்கு தமிழ் சொல் என்னவென்று தெரியாமல் இருந்தேன். சரிகட்டுதல் ம்ம்ம் .... lobbyist? Indian Lobby congressman ... சில உதாரணங்களையும் கொடுத்தா தேவலை.


Blackmail க்கு சூட்சுமகந்தம். வேற சொல் இருந்தா சொல்லுங்களேன்.

தமிழ்மணத்தில் மற்ற இடுகைகளை பார்த்துக்கொண்டு இருந்த போது உங்க இடுகையை கண்டேன். இது சரியா????

Anonymous said...

எல்லாவிதமான செயல்கலுக்கும் தனியான சொல் அமைப்பு தம்ழில் உண்டூ

வாட்டர் பால்ஸ்- நீர் வீழீச்சி இது பெயர்ப்பு

அருவி இது அசல்

பழமைபேசி said...

@@அப்பாவி முரு

வாங்க மாப்பிளை, வாழ்த்துகள்! அலைபேசியில் அழைத்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை... மன்னிக்கவும்!

//குறும்பன் said...
lobby என்பதற்கு தமிழ் சொல் என்னவென்று தெரியாமல் இருந்தேன். சரிகட்டுதல் ம்ம்ம் .... lobbyist? //

கொற்றன் - முடித்துத் தருபவன்

//Blackmail க்கு சூட்சுமகந்தம். வேற சொல் இருந்தா சொல்லுங்களேன். //

முயற்சிக்கிறேன்!

//தமிழ்மணத்தில் மற்ற இடுகைகளை பார்த்துக்கொண்டு இருந்த போது உங்க இடுகையை கண்டேன். இது சரியா????//

மிகச் சரி... மொத்தத்தையும் தரிசிப்பது பார்த்தல்... aggregation vs single... மொத்தத்தில் ஒன்றினைத் தரிசிப்பது, காணுதல்...

தமிழ்மண முகப்பைப் பார்த்தபோது, இவ்விடுகையைக் கண்டேன்.
//

பழமைபேசி said...

//Anonymous said...
எல்லாவிதமான செயல்கலுக்கும் தனியான சொல் அமைப்பு தம்ழில் உண்டூ

வாட்டர் பால்ஸ்- நீர் வீழீச்சி இது பெயர்ப்பு

அருவி இது அசல்
//

மிக்க நன்றி!

இதிலாவது பொருளாக்கம் பொருந்தி வருகிறது.... கருப்பு அஞ்சல்--- சகிக்கலை!

Fanaticsஐ Fan எனச் சுருக்கினால், நம்மாட்கள் அதை விசிறி என்றார்கள்... வெறியார்வலர் என்பது தமிழாக்கம்.... விசிறி என்பது தமிங்கிலாக்கம்.... இஃகிஃகி!!

a said...

ஆங்கிலத்தில் தினமும் இரண்டு புதிய வார்த்தைகளையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நாம்(நான்), தமிழ் மொழியில் உள்ள அறிய/ நமக்கு தெரியாத வார்த்தைகளை தெரிந்து கொள்ள முற்படுவதில்லை.

தங்களுடைய இந்த பதிவு நம்மை(என்னை) போன்றவர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமையும்.

Swengnr said...

சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!

ஈரோடு கதிர் said...

நல்ல பள்ளயம்

தாராபுரத்தான் said...

நானும் வந்திருக்கிறேன்ங்க.

ஜோதிஜி said...

கொஞ்சம் பயமா இருக்கு. ஒவ்வொரு முறையும் நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை படித்து விட்டு நமக்கு தமிழ் தெரியுமா என்று யோசிக்க வைக்கின்றது. ஏற்கனவே தமிழ்மணம் அவர்களின் அறிவிப்புகளில் பயன்படுத்தும் வார்த்தைகளைப் பார்த்து மனதிற்குள் ஒரு சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இப்போது நீங்கள்.

வழிப்போக்கன் கிறுக்கன் சொன்னது நெஞ்சில் குத்திய குண்டூசி அல்ல. பெரிய ஆணி.

cheena (சீனா) said...

அன்பின் பழமைபேசி

சூட்சுமகந்தம் - சரியா வருமா - மாற்றுச் சொல் தேடுக நண்பா

நல்வாழ்த்துகள் பழமைபேசி
நட்புடன் சீனா

Paleo God said...

//தமிழ் ஒரு செம்மொழி! கூடவே நுண்ணிய மொழின்னும் சொல்றோம்.//

சரிதானுங்க! வெண்ணைன்னு ஊத்துக்குளில சொல்றதுக்கும், உசிலம்பட்டில சொல்றதுக்கும் நிறைய வேறுபாடு இருக்குங்க. :))

//அலைபேசியில் அழைத்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை... மன்னிக்கவும்!//

இதுவேறயா? உங்கள நம்பி அமெரிக்கா வந்தா பஸ் ஸ்டாண்ட்லயே தேவுடு காக்கவேண்டியதுதான் போல!! :)

தமிழ் நாடன் said...

பள்ளயம் அருமை!