10/27/2009

ஒடுவங்கந் தலையக் கண்டா ஓடிப்போ!

ஏங்க, புனைவும் தனையுமாவே இருக்க முடியுமாங்க ஒருத்தன்? பல நூல்களை வாசிக்கத்தான் வேணும். அப்பத்தானே வந்த வழி தெரியும்?? படிக்கிறோம். படிச்சதுல பிடிச்சது எதுவோ அதுல, தனிப்பட்ட அனுபவத்தையும் கலக்குறோம்; அதை மத்தவங்க பார்வைக்கும் வைக்குறோம்! அதுல என்ன தப்பிதம் இருக்க முடியும்? என்ன, ஒன்னும் புரியலையா? அப்ப சரி, வாங்க மேல படிக்கலாம்!

ஒரு நாள், வெங்கடேசன் எங்க நிறுவனத்துக்கு வந்திருந்தார். அவர் பெரிய நிர்வாகி! கோயமுத்தூர் நிறுவனம் ஒன்னுல தொழில்நுட்ப இயக்குனர் அவரு. அதே நிறுவனத்துல, அன்னூர்ப் புளியம்பட்டியச் சேர்ந்த பாலகிருஷ்ணனும் வேலை செய்துட்டு இருந்தாரு. அவர், தரக்கட்டுப்பாட்டு அதிகாரி. அதே நிறுவனத்துல, இழை உருளிப்(flutted rollers) பிரிவுக்கு முதன்மைப் பொறியாளன்(Foreman) நானு.

அந்த இயக்குனர் வெங்கடேசன் இருக்காரே, பெரிய கெடுபிடியான ஆளும் கூட. அதட்டுவாரு, முறைப்பாரு, அதுன்னுவாரு, இதுன்னுவாரு, எல்லாரும் அவரைக் கண்டா அப்படிப் பம்பு பம்புன்னு பம்புவாங்க. அந்த காலகட்டத்துல, நாந்தான் அந்த நிறுவனத்துலயே வயசு குறைஞ்ச, மீசை கூட முளைக்காத ஆள். என்னைக் குழந்தைன்னுதான் கூப்பிடுவாங்க, இப்பவுங்கூட. அதே ஒரு பேருன்னும் ஆயிப்போச்சு, கூட வேலை செய்த சக அலுவலர்கள் மத்தியில.

இப்படிதாங்க ஒரு நாள் வெங்கடேசன் வேக வேகமா வந்து, எனக்குப் பாத்தியப்பட்ட வேலையிடத்துல நின்னுட்டு, மறுகோடியில இருக்குற என்னை ஆட்காட்டி விரலால் பின்னாடிச் சுண்டிச் சுண்டிக் கூப்ட்டாரு. அதைப் பார்த்த நான், அன்ன நடை போட்டுப் போனதைப் பார்த்ததும் மனுசன் மகாக் கோவப்பட்டு, You, Young Old Man, Can't you come bit faster?ன்னு, எனக்குக் கீழ வேலை செய்யுறவங்க முன்னாடியே கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாரு.

அப்புறம், எதோ அவருங் கேட்க நானுஞ் சொல்ல, மனுசன் கத்திட்டு அந்தப் பக்கமாப் போயிட்டாரு. ஆனாப் பாவம், அந்தப் பக்கமா, கதிர்கள்(Spindles) பிரிவுல நம்ம ஒடுவங்க நாட்டு அண்ணன், அதாங்க அன்னூர்ப் புளியம்பட்டிக்காரரு இருக்குறது தெரியலை அவருக்கு!

அவர் பலே கில்லாடிங்க! இவர் வர்றது தெரிஞ்சதும், எங்கயோ இருந்த அவர் இவரைத் தேடி ஓடி வந்தாரு. வந்ததும் வராததுமா, ’வெங்கடேசன், நானே உங்ககிட்ட வரலாம்ன்னு இருந்தேன். போனதடவை நீங்க உலா வரும்போது சொன்னேனே, அந்தக் காரியம் இன்னும் ஆகலை, அதான் என்ன ஆச்சுன்னு கேட்கலாமுன்னு இருந்தேன்!’ அப்படீன்னாரு.

நாங்களா, அதைக் கேட்டு சிரிக்கவும் முடியாம, அடக்கி வைக்கவும் முடியாமத் திணறிப் போயிட்டோம். இயக்குனர் பெருமகனாருக்கு வந்தது பாருங்க கோபம், ’என்ன நீ? பேர் சொல்லிக் கூப்புடுறே?? அதுவும் இத்தனை பேர் சுத்தியும் நின்னு வேலை பார்த்துட்டு இருக்காங்க?!’ அப்படீன்னு ஆய் ஊய்ன்னு குரல் கொடுத்தாரு!

நம்ம ஒடுவங்க நாட்டுக்காரரு கொஞ்சங்கூடப் பதற்றப்படாம, ‘உங்க பேரு வெங்கடேசன்தான? மாத்திட்டீங்களா, யாருஞ் சொல்லவே இல்லியே??’ங்கவும், சுத்தி இருக்குறவங்க எல்லாரும், அவங்க அவங்க வேலை செய்யுற இயந்திரங்களுக்குப் பின்னாடி போயிக் குலுங்கக் குலுங்கச் சிரிச்சாங்க.

இந்த நிகழ்வு நடந்த அன்னைக்குதாங்க, வேலுச்சாமிங்ற நண்பர் சொன்னாரு, ஒடுவங்க நாட்டுக்காரன் தலையக் கண்டா ஓடுவாங்கன்னு சும்மாவா சொல்றாங்க அப்படின்னு. பொதுவாவே, ஒடுவங்க நாட்டுக்காரங்க யாரையும் வாகாப் பேசி விழுத்திடுவாங்களாம்; அதனால, தலை தப்பினது தம்பிரான் புண்ணியமுன்னு ஓடுவாங்களாம் மத்தவங்க!


சீருலவி டுந்தடப் பள்ளிகூ டற்கரை திருக்கணாம்
பேட்டையுடனே
திகழ்சத்தி மங்கையவக் கோட்டை கலையனூர்
திறமைமிகு சிறுமுகைநிதங்
காருலவி வருமிரு காலூர்கா ராப்பாடி கருத்துறும
திப்பானூருங்
கனிவுமிகு வானிபுத் தூரெழில்விண் ணப்பள்ளி
கனமா மிரும்பரையுடன்
ஏருலவு மாலத்தூர் கெம்மநாய்க் கன்பட்டி
யிணைமேவு சதுமுகையதும்
இறையவர்க் குபதேச மோதுமலை யாணடவ
னின்பஞ் சிறப்பதான
பாருலகி லுத்தண்ட தவளமலை யான்கிருபை பாலிக்க
நின்றுவளரும்
பரிவுமிகு மொடுவங்க நாட்டிலுள வனைவரும்
பலகால மிக வாழ்கவே!

தடப்பள்ளி, கூடற்கரை, திருக்கணாம்பேட்டை, சத்தியமங்கலம், அரவக்கோட்டை, கலையனூர், சிறுமுகை, இருகாலூர், காராப்பாடி, மதிப்பானூர், வானிபுத்தூர், விண்ணப் பள்ளி, இருப்புரை, ஆலத்தூர், கெம்மாநாய்க்கன்பட்டி, சதுமுகைன்னு பதினாறு ஊர்கள் கொண்டு கொங்குநாட்டில் இடம்பெற்றது ஒடுவங்கம்.

இந்த ஒடுவங்கத்துல தணாக்கன் கோட்டையும், படி நாடுங்குற கொள்ளேகாலமும் இணை. சகபதிவர், அண்ணல் மஞ்சூர் ராசா அவர்களுக்கான சிறப்பு இடுகைங்க இது!

7 comments:

vasu balaji said...

வட்டாரத்துக்கு வட்டாரம் லொள்ளுல வித்யாசமிருக்குமாட்ருக்கு:))

க.பாலாசி said...

// நாந்தான் அந்த நிறுவனத்துலயே வயசு குறைஞ்ச, மீசை கூட முளைக்காத ஆள்//

இப்ப இருக்குங்களா அண்ணே.

//’என்ன நீ? பேர் சொல்லிக் கூப்புடுறே?? அதுவும் இத்தனை பேர் சுத்தியும் நின்னு வேலை பார்த்துட்டு இருக்காங்க?!’ அப்படீன்னு ஆய் ஊய்ன்னு குரல் கொடுத்தாரு!//

நல்ல நகைச்சுவைத்தான்.

வழக்கமாய் ஊர்ப்பாடலும் அதற்கான விளக்கங்களும் அருமை.

எம்.எம்.அப்துல்லா said...

//‘உங்க பேரு வெங்கடேசன்தான? மாத்திட்டீங்களா, யாருஞ் சொல்லவே இல்லியே?? //

:))))

ஈரோடு கதிர் said...

//கதிர்கள்(Spindles) பிரிவுல //

நம்ம பிரிவுக இருந்தா அப்படித்தானுங்க இருப்பாரு,

இல்லைனா வெங்கடேசன் பேர்ல ஒட்டடை படிஞ்சிறாதாக்கும்

நேசமித்ரன் said...

மிக நல்ல ஆய்வு .உங்கள் இடுகைகள் பற்றி நைஜீரியா வரை புகழ் பரவிக் கிடந்த போதும் இன்றுதான் வாய்த்தது .இனி தொடர்வேன்

தாராபுரத்தான் said...

ெகாங்கோவியம்,,,,ம்,,,தீட்டுங்க,,,

cheena (சீனா) said...

அன்பின் பழமைபேசி

நல்ல இடுகை ‍ ரசித்து மகிழ்ந்தேன் ‍ பேரு மாத்திட்டாங்களா ‍ சொல்லவெ எஇல்லையே. எரியும் நெருப்பினில் எண்ணையா ?

மீச மொளைக்காத கொழந்த படம்தான் இடுகையின் வலது பக்கத்தில் இருக்கும் ப‌டமா

நலலாருக்கு பால் வடியும் சிரித்த முகம் நல்வாழ்த்துகள்