10/26/2009

ஆறைநாட்டானின் அலம்பல்கள் - 11

ஒரு வருசம் இருக்கும்னு நினைக்கிறேன்; ஒருநாள் காலையில, நான் வெளில ஓட்டப்பயிற்சிய முடிச்சிட்டு களைப்போட வீட்டுக்கு வரவும், என்னோட அன்பு மகள் மட்டும் வெளில என்னை எதிர்நோக்கிக் காத்துகிட்டு நின்னபடி இருந்தா. ’என்றா தங்கம் நீ மட்டும் வெளில நிக்குறே? அம்மா எங்கடா??’ அப்படீன்னேன்.

குழந்தை, அழகாத் தெளிவா பதில் சொல்லுச்சு, ‘ம்ம்.. ம்ம்.. அம்மா, பாத்திரம் எல்லாம் குளிக்க வெச்சுட்டு இருக்கு!’ அப்படின்னு.

எனக்கா, களைப்பு எல்லாம் நீங்கி, ஒரே சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. என்னங்கடா இது, அமெரிக்காவுல பாத்திரத்தை எல்லாம் குளிக்க வெக்க ஆரம்புச்சுட்டாங்களே அப்படின்னுதான். அது போலத்தாங்க, சமீபத்துல காக்கா கத்துதுன்னு எதோ படிச்சேன். கழுதைதான் கத்தும், காக்கா கத்துமா? அது கரையும்! இதை மனசுல அசை போட்டுட்டே இருந்தப்பதான், எங்க அண்ணனோட மகள் நேற்றைக்கு மேலும் ஒரு சுவாரசியத்தைக் கொடுத்தா, பிள்ளை.

ஊருக்கு பேசிட்டு இருக்கும் போது, என்னடா வீட்ல சாப்பாடு இன்னைக்குன்னு கேட்கவும், பிள்ளை சொல்லுறா, ’சித்தப்பா, அம்மா இன்னைக்கு வெங்காய இலைப் பொரியல் போட்டுப் பிசைஞ்சு ஊட்டி விட்டாங்க’ அப்படின்னு. என்னங்கடா இது, வெங்காயத்துக்கு எல்லாம் இப்ப இலை முளைக்க ஆரம்பிச்சுடுச்சான்னு அண்ணிய ஒரு கலாய் கலாய்ச்சம்ல? இஃகிஃகி!

நான் பலமுறை சொன்னதுதான், தமிழ்ல ஒவ்வொன்னையும் அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை உண்டு செய்து வெச்சு இருக்காங்க. அதை நாம சரியாப் பாவிச்சா, குழப்பம் (Ambiguity) வராது.

ஆமாங்க, வெங்காயத்தாள், இராகித்தாள், வரகுத்தாள், சாமைத்தாள் அப்படின்னு, நீட்ட வாக்குல முளை விடுறது எல்லாத்தையுஞ் சொல்லுறது தாள். அகத்தி, பசலை, முருங்கை இந்த மாதிரியான தாவரங்கள்ல, உணவுக்கு நேரிடையாப் பாவிக்கக் கூடியது கீரை. கீரை ரெண்டு இணுக்கு முறிச்சுட்டு வாடா கண்ணு அப்படின்னுதான் கிராமத்துல சொல்லுறது. அதுக்காக கறிவேப்பிலைய ஏன் கீரைன்னு சொல்றது இல்லைன்னு மொடக்கடி பேசப்படாது பாருங்க.

சின்ன அளவுல நீட்ட நீட்டமா வர்றது எல்லாம் புல்; அறுகம்புல், கோரைப்புல் இதெல்லாம். அதுவே தரையில படர்ந்து போச்சுன்னா, அதுக்குப் பேரு பூண்டு. புல், பூண்டு அப்படீன்னு சொல்லக் கேள்விப்பட்டு இருப்பீங்க இல்லையா? பரந்து, விரிஞ்சு இருந்தா அது மடல், சப்பாத்திக்கள்ளி மடல்! கரும்பு, நாணல் இதுல வர்றதைச் சொல்லுறது சோகை, நல்ல தமிழ்ல சொல்றது தோகை. அதே போல, குறுகலா நீட்ட நீட்டமா வர்றது ஓலை, தென்னை ஓலை, கமுகு ஓலை இப்படி!

உசிலை, சாணிப்பூட்டான், இந்த மாதிரி பத்தையில பச்சைப் பசேல்னு இருக்குறதெல்லாம் தழை. டேய், அப்ப எதைத்தான் இலைன்னு சொல்லுறதுன்னு எகுர ஆரம்பிக்கிறீங்க பார்த்தீங்களா? பொறுமை சாமி, பொறுமை! எதுவும், செடியானாலும் சரி, கொடியானாலும் சரி, சிறு, குறு, பெரு மரமானாலும் சரி, தன்னிச்சையா எடுப்பா விரியுறது இலை, வேப்பிலை, அரச இலை, மாவிலை இப்படி!

இவன் என்ன, இன்னைக்கு இலைய வெச்சிக் கச்சேரி நடத்திட்டு இருக்கான்னுதானே யோசிக்குறீங்க? விசயம் இருக்குது இராசா, விசயம் இருக்குது. நாம சின்ன வயசுல, வாரக்க நாட்டுல வாழ்ந்த கதையப் படிச்சீங்க இல்லையா? அந்த காலகட்டத்துல வீட்ல சொல்வாங்க, டேய், போடாப் போயி பெதப்பம்பட்டியில நல்ல வெத்தலையாப் பாத்து நாலு கவுளி வாங்கியா போன்னு சொல்லிச் சொல்வாங்க.

நானும் உடுமலைப் பேட்டை போற வண்டியப் புடிச்சு பெதப்பம்பட்டி நாலுமுக்குச் சந்தியில இறங்கி, அங்க வெத்தலைக்கடை வெச்சிருந்த இராமலிங்கண்ணங் கடைக்குப் போவேன்.

“யாரு, சலவநாய்க்கன்பட்டிப் பொன்னானா, வாப்பா, வா! கொழுமம் வெத்தலை, கொமரலிங்கம் வெத்தலை, தாராபுரத்துக் கற்பூர வெத்தலை எல்லாம் இருக்குது. உங்க ஊட்டுல என்ன வாங்கியாறச் சொன்னாங்க?”

”தாராவரத்து வெத்தலைதேன் வாங்கியாறச் சொன்னாங்ண்ணா!”

“அப்படியா, எத்தனை கவுளி வேணும்?”

“அம்மா, அரை முட்டியாவே வாங்கியாறச் சொல்லுச்சுங்!”

”சரி அப்ப, இந்தா புடி அரை முட்டி!”

அப்படின்னு, வாழை மரத்துச் சருகுல சுத்திக் குடுப்பாரு அந்த அண்ணன். அப்படி தாராவரம்ன்னா வெத்தலையும் அமராவதி ஆறும் கரும்பும்தாங்க ஞாவகத்துக்கு வருது. கூடவே, நாம கச்சை கட்டுனதுமு! இஃகிஃகி,

தாராபுரம் V.P.பழனியம்மாள், R.அய்யாசாமி, A.பெரியசாமின்னு நிறைய... ஆமாங்க, நாமதான் பிஞ்சுலயே பழுத்தமல்ல? போடுங்கம்மா ஓட்டு, ரெட்டை எலையப் பாத்து... அடச்சீ, சும்மா நிறுத்து! இஃகிஃகி!! அப்புறம் முக்கியமான் விசியம், நம்ம நடிகர் நாகேசுமு!!

சரி வாங்க, நம்ம சகபதிவர்கள் அப்பன், ராஜ நடராஜன் அவர்களுக்கான சிறப்பு இடுகையா, தாராபுரமுமு அதைச் சுத்தீலுமு இருக்குற ஊர்களை உள்ளடக்கின, கொங்கு நாட்டோட உபநாடுகளான மணநாடு, தலையநாடு பாக்குலாம் இன்னைக்கு!


தென்னிலை கூடலூர் சேர்கோடந் தூர்நடந்தை
சின்னத்தா ராபுரமுஞ் சேர்ந்துமிக உன்னிதங்கள்
சூழ்ராச மாபுரமும் சூடா மணியிலவை
வாழ்மணலூர் நாடாய் வழுத்து!


தென்னிலை, கூடலூர், கோடந்தூர், நடந்தை, சீர்மிகுதாராபுரம், இராசபுரம், சூடாமணி, இலவனூர் என எட்டு பேரூர்கள் கொண்டது மணநாடு!

தங்குபுங்கம் பாடியர வக்குறிச்சி
தகுசேந்த மங்கலமு ந்ன்மு டக்கூர்
பொங்குசாந் தப்பாடி யிணுங்கனூரும்
புகழ்வேளாண் பூண்டியெழிற் றலையூ ரோங்கும்
மங்கைகன்னி வாடிகிழான் கொண்டல் சின்ன
மருதீடக் கலப்பாடி யறிஞ ரெல்லாம்
புங்கமிகு குமரபா ளையத்தி னோடு
போந்தபதின் மூன்றூருந் தலைய நாடே!

புங்கம்பாடி, அரவக்குறிச்சி, சேந்தமங்கலம், முடக்கூர், சாந்தப்பாடி, இணுங்கனூர், வேளாண்பூண்டி, தலையூர், கன்னிவாடி, கிழான்கொண்டல், சின்னமருதூர், இடக்கலப்பாடி மற்றுங் குமாரபாளையம் என ப்தின்மூன்று ஊர்கள் கொண்டது தலையநாடு!

சரி, இன்னைக்கு மணநாடு, தலையநாடு படிச்சாச்சில்ல? போங்க, போயி அம்மணிக்குக் கூடமாட இருந்து ஏனவானம், பண்ட பாத்திரம் எல்லாத்தையும் குளிக்க வையுங்க போங்க!

24 comments:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல ஆய்வு கட்டுரையாக இருக்கு நண்பா..

Anonymous said...

பாத்திரம் குளிக்க வைக்கறது சூப்பர். :)
மத்த இலை தழை, தோகை விளக்கம் எல்லாம் அருமை.

குறும்பன் said...

இலையை படிச்சதும் வெத்தலை நினைவு வந்திச்சு நீங்க சொல்லிட்டீங்க. நான் எப்பவும் பச்சை கொடி வெத்தலை வாங்கறது தான் வழக்கம்.

எனக்கு தெரிந்து நான் வாங்குற இடத்துல பச்சைகொடியும் கற்பூரமும் தான் விப்பாங்க.

\\போடுங்கம்மா ஓட்டு, ரெட்டை எலையப் பாத்து.\\ அது மட்டுமா நாங்க எம்ஜிஆரு மேடையில அப்படின்னல்லாம் கோசம் போடுவோம் இஃகிஃகி.

கரூருக்கு பக்கத்திலயும் ஒரு தென்னிலை இருக்குங்க. ( தகவலுக்காக)

வழக்கம் போல் பல புதியதகவல்களை தெரிந்து கொண்டேன்.

தமிழ் நாடன் said...

நல்லாருக்கு உங்க இலைப்புராணம்!

vasu balaji said...

தென்கச்சி திரும்ப பொறந்தா மாதிரி இருக்கு இன்னைக்கு இடுகை சிறப்பு.
/ஏனவானம், பண்ட பாத்திரம் எல்லாத்தையும் குளிக்க வையுங்க போங்க!/

தோடா. அதாலயே மொத்துபடவா.

அப்பாவி முரு said...

இலை, தழைகளைப் பற்றிய விளக்கம் அருமை.

ஊர்களைப் பத்தி சொல்லியாறப்ப, அப்படியே இறங்கி திண்டுக்கலு, தேனி கம்பம்ன்னு வந்தீகன்னா புண்ணியமா போகும்.

:)

அரசூரான் said...

பழமை உங்க பேச்சு கா, ஓலை சோலை எல்லாம் சொன்னீங்க பனை மட்டைய உட்டுட்டீங்க, அட அது போனா போயிட்டு போகுது... எங்க ஊரு கும்பகோணம் கொழுந்து வெத்தலைய பத்தியாவது சொல்லியிருக்கலாம்... ஏன் பழமை ஏன்?

பிரபாகர் said...

//ஏனவானம், பண்ட பாத்திரம் எல்லாத்தையும் குளிக்க வையுங்க//

சிறு வயது முதல் நிறைய தடவை கேட்டிட்ட வார்த்தைகள்.... எப்படித்தான் நினைவு வைத்து எழுதுகிறீர்களோ! பிரமிப்பாய் இருக்கிறது, நண்பா...

சந்தனமுல்லை said...

ஏனம்னு சொல்லித்தான் கேள்விப்பட்டு இருக்கேன்...ஏனவானம்-க்கு ஏதாவது விளக்கம் இருக்கா?!!

Rekha raghavan said...

ஒன்பதாவது ஓட்டை போட்ட எனக்கு இன்னிக்கு வாழை இலையில்தான் சாப்பாடு போடணும் ஆமா சொல்லிபுட்டேன்.

ரேகா ராகவன்

Rekha raghavan said...

ஒன்பதாவது ஓட்டை போட்ட எனக்கு இன்னிக்கு வாழை இலையில்தான் சாப்பாடு போடணும் ஆமா சொல்லிபுட்டேன்.

ரேகா ராகவன்

ஈரோடு கதிர் said...

//‘ம்ம்.. ம்ம்.. அம்மா, பாத்திரம் எல்லாம் குளிக்க வெச்சுட்டு இருக்கு//

அட குட்டிப்பொண்ணு இம்புட்டு வெவரமா?

பூண்டுக்கு உதாரணம் சொல்லுங்க மாப்பு

//கொழுமம் வெத்தலை, கொமரலிங்கம் வெத்தலை, தாராபுரத்துக் கற்பூர வெத்தலை எல்லாம் இருக்குது//

அட அந்தியூரு வெத்தலை கெடைக்காதுங்களா?

pudugaithendral said...

பாத்திரம் குளிக்க வைக்கறது சூப்பர். :)
மத்த இலை தழை, தோகை விளக்கம் எல்லாம் அருமை.//

ரிப்பீட்டிக்கறேன்

க.பாலாசி said...

//வெத்தலையாப் பாத்து நாலு கவுளி வாங்கியா போன்னு சொல்லிச் சொல்வாங்க.//

இதுல கவுளிங்கற வார்த்தைக்கு இன்னும் எனக்கு விளக்கம் தெரியல. முடிஞ்சா அதையும் சொல்லிடுங்களேன்.

கீரை, தாள், புல், பூண்டு..... இவைகளைப்பற்றின உங்களின் இடுகை பயனுள்ளது.

பழமைபேசி said...

மக்களே, நான் இப்ப வேலைக்கு ஆயத்தமாகிட்டு இருக்கேன்... அந்தியில வந்து உங்க கேள்விகளுக்கு எல்லாம் மறுமொழி இடுறேன்... நன்றி!

Unknown said...

ஒரு முட்டி, அரை முட்டி, ஒரு கவுளி, ஏலம், சொச்சு வெத்திலை, கற்பூர வெற்றிலை எனக் கேட்ட பழைய பேச்சுகளையும் அதைப் பேசியவர்களையும், எழிலாய் பழைமைபேசி, ஞாபகத்துக்கு கொண்டு வந்து விட்டீர்கள் நண்பரே.

cheena (சீனா) said...

பல பழந்தமிழ்ச் சொற்கள் - தெரிந்து கொள்ளும் வாய்ப்பளித்தமைக்கு நன்றி பழமை பேசி - நல்வாழ்த்துகள்

தாராபுரத்தான் said...

மொடக்கடி பேசப்படாது இது ேவறு1

அது சரி(18185106603874041862) said...

//
அதுக்காக கறிவேப்பிலைய ஏன் கீரைன்னு சொல்றது இல்லைன்னு மொடக்கடி பேசப்படாது பாருங்க.
//

கேக்கலாமுன்னு நினைச்சேன்...முந்திக்கிட்டீக...நெம்ப வெவரமாத்தான் இருக்கீகப்பு....:0))))

பழமைபேசி said...

@@ஆ.ஞானசேகரன்

நன்றிங்க ஞானியார்!

@@சின்ன அம்மிணி
நன்றிங்க அம்மிணி!

@@குறும்பன்
மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!

@@தமிழ் நாடன்
நன்றிங்க!

@@வானம்பாடிகள்
இஃகி, வாங்க பாலாண்ணே!

@@அப்பாவி முரு
வந்திட்டாப் போகுது... நன்றிங்க தம்பி!

@@அரசூரான்
இராசா வாங்க, வாங்க... கோவிக்கப்படாது பாருங்க!

@@பிரபாகர்
நன்றிங்க பிரபாகர்!

@@சந்தனமுல்லை

வாங்க! அது ஏனபானம், பேச்சுவழக்குல ஏனவானம் ஆயிடுச்சுங்க. ஏனம்ன்னா, பரந்த பாத்திரம், உண்பதற்கு பாவிக்கலாம். பானம்ன்னா, பருகப் பாவிப்பது!

@@KALYANARAMAN RAGHAVAN
டிசம்பர்ல கோயமுத்தூர் வாங்க, தலைவாழை இலை போட்டு அசத்திடலாம்!

@@கதிர் - ஈரோடு
மாப்பு, பூண்டைப் பூடுன்னும் சொல்றது உண்டு. நெருஞ்சிப்பூடு, சாணிப்பூட்டான் பூடு, இப்படித் தரையில படர்ந்து கிடக்கிறதெல்லாம் பூ(ண்)டுதான்.

@@புதுகைத் தென்றல்
நன்றிங்க!

@@க.பாலாசி

கவுளி என்றால் கை + உள், அதாவது நீளச்சுருள் போல வெற்றிலைய உயரமா அடுக்கிக் கட்டுவாங்க. நீள்சுருளா இருக்கும். அதுல ஒரு கைக்கு அடங்குற ஒரு சுருள், ஒரு பிரியச் சொல்றது கவுளி!
நன்றிங்க பாலாசி!

@@சுல்தான்
நன்றிங்க ஐயா!

@@cheena (சீனா)
நன்றிங்க ஐயா!

@@அப்பன்
ஆமாங்க, நினைச்சேன்!

@@அது சரி
இஃகிஃகி, எப்படியும் அது சரி அண்ணாச்சி வருவார்னு தெரியும்ல?

க.பாலாசி said...

//கவுளி என்றால் கை + உள், அதாவது நீளச்சுருள் போல வெற்றிலைய உயரமா அடுக்கிக் கட்டுவாங்க. நீள்சுருளா இருக்கும். அதுல ஒரு கைக்கு அடங்குற ஒரு சுருள், ஒரு பிரியச் சொல்றது கவுளி!//

தங்களின் விளக்கத்திற்கு நன்றி பழமையே....

வல்லிசிம்ஹன் said...

அம்மாடி , வெத்திலையில் இத்தனை ரகமா. நாங்க கும்மோணம் வெத்திலை உசத்தின்னுல நினைச்சிருக்கோம்.
ஆமா, இப்ப யாராவது வெற்றிலை பாக்கு போடுறாங்களா.
அதிசயப் பிறவி ஐயா நீங்கள். கண்ணே பட்டுடும்!!!

சுந்தரா said...

இலை தழையில தொடங்கி இத்தனை அருமையான விளக்கமா என்று வியக்கத்தான் தோன்றியது.

அப்புறம்,உங்க வீட்டுப்பிள்ளைகளும் ரொம்ப கெட்டிதான் போங்க.

நேசமித்ரன் said...

மிக நல்ல ஆய்வு .உங்கள் இடுகைகள் பற்றி நைஜீரியா வரை புகழ் பரவிக் கிடந்த போதும் இன்றுதான் வாய்த்தது .இனி தொடர்வேன்