10/09/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 5!

என்னுடைய நெருங்கிய பொட்டிதட்டி ஒருத்தர் நாமக்கல்; அவர் கடுமையாச் சொல்லிட்டாரு. டேய், நீ கீழ்க்கரைப் பூந்துறை, வடகரை நாடு, கிழங்கு நாடு, கருவா நாடுன்னு போடுறதை எல்லாந் தினமும் உன்னோட பக்கத்துக்கு வந்து பார்த்திட்டு இருக்க முடியாது. இன்னைக்கு எந்நேரம் ஆனாலும், எங்க வாழவந்தி நாட்டைப் பத்திப் போடுற; இல்லே? மவனே திங்கக்கிழமை தட்டுறதுக்கு பொட்டி இருக்காதுன்னு கூப்ட்டு மிரட்டிட்டாருங்க! பொட்டி போனாப் போகுது, மூக்கு பத்திரமா இருக்கணுமே? அதான், வாழவந்தி நாடு இன்னைக்கு!

வாழவந்திங்ற ஊரை மையமா வெச்சி இந்த நாடுங்க. ஆனா, வாழவந்திக்கு ரெண்டு உபநாடுகள். முதலாவது, தூசூர் நாடு! ரெண்டாவது விமலை நாடு. நாமக்கல், அரூர்க்காரங்க நம்ம திண்ணைக்கு அடிக்கடி வந்து போறவிங்களும் இருக்காங்க. ஆகவே, மொதல்ல தூசூர் நாடு!


மருவுநிலவு தூசியூர் குவளமா பட்டியுடன்
வளம்பெரிய தோகைநத்தம்
வளர்சிதம் பரபட்டி முத்தக்கா பட்டியும்
வருபழய பாளயமுடன்
தருநிலவு வேப்பையும் வசந்தரா யன்கோயில்
தருலத்தி வாடிபரளி
தாதுநிலவு பொன்னேரி புதுபட்டி புதுக்கோட்டை
தங்குமாலப் பட்டியும்
விரிவுமிகு நாமக்கல் கோடங்கிபட்டியும் வெற்றி
சீரங்க நல்லூர்
வீறானதிபிரமா தேவி யெருமைப் பட்டி
வீரசோழரசை நத்தம்
திருவுலவு ரட்டையும் பட்டிமேட் டுப்பட்டி
சீர்கொள்ளு மருவூருடன்
செய்ய புத்துர்ரலங் காநத்த முஞ்சேர்ந்து
செய்தூசூர் நாடுதானே!

தூசியூர், குவளம்பட்டி, தோகைநத்தம், சிதம்பரப்பட்டி, முத்தக்காபட்டி, பழயபாளயம், வேப்பநத்தம், வசந்தராயன் கோயில், லத்திவாடி, பரளி, பொன்னேரி, புதுப்பட்டி, புதுக்கோட்டை, பாலப்பட்டி, நாமக்கல், கோடங்கிபட்டி, நல்லூர், திப்பிரமாதேவி, எருமைப்பட்டி, அரசநத்தம், ரட்டயம்பட்டி, மேட்டுப்பட்டி, அரூர், புத்தூர், அலங்காநத்தம்னு ஆக மொத்தம் இருபத்தி அஞ்சு ஊருக தூசியூர் நாட்டுல!

பூவோட சேர்ந்தா நாரும் மணக்கும்னு சொல்வாங்க அல்ல? அது போல, வாசிங்டன் மாநகர் தமிழ்ப் பெரியவர்களோட ஒரே ஒரு நாள், கூட இருந்ததுக்கே என்னா பெரிய சிறப்பு நமக்கு வந்து சேர்ந்து இருக்குன்னு பாருங்க மக்களே!

உலகில் வலிமையும் ஓங்கிய செல்வமும்
இலகும் அமெரிக்க எழில்சேர் நாட்டில்
வாசிங்டன் டீசி வளமார் நகரில்
நேசமும் அன்பும் நிலவிடத் தமிழர்
தம்மொழிப் பற்றும் தாயகப் பாசமும்
செம்மை யாகச் செழித்திடும் வகையில்;
பற்பல ஊரினர்; பற்பல துறையினர்;
பற்பலப் பணியினர்; பரிந்தொரு மித்துத்
தமிழுக்கு ஆங்கோர் சங்கம் வைத்தே
அமிழ்தாம் மொழிக்கு ஆக்கம் சேர்க்க,
திரைகடல் ஓடியும் செந்தமிழ் வளர்க்கும்
முறையினில் அன்பர்கள் முழுமூச் சுடனே
எண்ணினர்; கூடினர்; இனிதாய் மழலைகள்
பண்ணரும் தமிழைப் பயின்றிட வகுப்புகள்,
நடத்து கின்றனர்; நற்றமிழ் இலக்கியம்
படித்தே ஆய்வுகள் பல்லோர் குழுமி
கருத்துரை யாடியும்; கசடறக் கற்றும்;
ஒருமித்துப் பொருளை உணர்ந்தே மகிழ்வர்;
பெறற்கரும் நல்லார் பிரபா கரனெனும்
திறனுடை யாரின் தேர்ந்தநல் தலைமையில்
எல்லையில் ஆர்வலர் இராம சாமியும்;
செல்லை யாவும்; செந்தில் முருகனும்;
மணிவா சகமும் மாண்புடை செயந்தியும்
அணிசேர் பாஸ்கர் அன்பர் சாமியும்
பீற்றர் மற்றும் பீடுடைப் பெற்றியர்;
வாட்டமில் இளைஞர் வலம்பெறு துணையுடன்
செயற்கரும் செயலைச் செய்து முடிக்கும்
முயற்சி தளரா மொய்ம்புடை உறுப்பினர்
அத்துணை பேரும் ஆழிசூழ்
இத்தரை மீதினில் இனிதாய் வாழ்கவே! "

02 அக்டோபர் 2009

அன்புடன்,
புலவர் வெ.இரா.துரைசாமி,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.

சொந்தக்கதை ஒன்னு சொல்லாமப் போனா, நீங்க கோவிச்சுகுவீங்க அல்ல? அதான், அம்மணிய மடிக்கிறதுக்கு எடுத்து விட்டதுல உங்க பார்வைக்கு ஒன்னு!

மாண்டு மடிஞ்சாலும்
மடிஞ்சழிஞ்சு போனாலும்
மாண்ட எடத்துலதான்
மல்லியப் பூவாவேன்
உனக்கு!
செத்து மடிஞ்சாலும்
சீரழிஞ்சு போனாலும்
செத்த எடத்துலதான்
செவ்வந்திப்பூ நானாவேன்
உனக்கு!

15 comments:

Mahesh said...

அம்மிணியை மடிச்சு மடிச்சு சின்னப் பொட்டலமா கட்டிருவீங்க போல :)))

பிரபாகர் said...

நண்பரே.....

உங்களை கடந்த ஒரு மாதமாய்த் தான் தொடர்கிறேன். தமிழை நீங்கள் பாங்குடன் கையாளும் விதம், மறந்த பழைய நினைவுகளை அப்படியே பாடல்களால் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் திறன்... உண்மையில் பெரிதும் மகிழ்வாயிருக்கிறேன் உங்களை படிக்கையில்.

//மாண்டு மடிஞ்சாலும்
மடிஞ்சழிஞ்சு போனாலும்
மாண்ட எடத்துலதான்
மல்லியப் பூவாவேன்உனக்கு!

செத்து மடிஞ்சாலும்
சீரழிஞ்சு போனாலும்
செத்த எடத்துலதான்
செவ்வந்திப்பூ நானாவேன்உனக்கு! //

இது நாட்டுப்புறப் பாடல் போலிருக்கிறது நண்பரே! பெரியவர்கள் பாட கேட்டார்போலும் இருக்கிறது. மிக அருமை.

உங்களை எனக்கு அறிமுகம் செய்த அன்பிற்குரிய 'மாப்பு' என செல்லமாய் அறியப்படும் கதிருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

பிரபாகர்.

Rekha raghavan said...

கொங்கு தமிழில் உங்கள் பதிவை படிக்க மிகவும் சுவாரசியமாக இருக்கு. மேலும் பல ஊர்களின் பெயர்களையும் அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.

ரேகா ராகவன்.

தேவன் மாயம் said...

பெறற்கரும் நல்லார் பிரபா கரனெனும்
திறனுடை யாரின் தேர்ந்தநல் தலைமையில்
எல்லையில் ஆர்வலர் இராம சாமியும்;
செல்லை யாவும்; செந்தில் முருகனும்;
மணிவா சகமும் மாண்புடை செயந்தியும்
அணிசேர் பாஸ்கர் அன்பர் சாமியும்
பீற்றர் மற்றும் பீடுடைப் பெற்றியர்;//

பாட்டுடைத் தலைவா! வாழ்க!

ஈரோடு கதிர் said...

//மல்லியப் பூவாவேன்
உனக்கு!
செவ்வந்திப்பூ நானாவேன்
உனக்கு! //

இதுலதானய்யா... நம்மு பொண்ணு சொக்கிப்போச்சா...

ஆமா.. மாப்பு..
அதென்ன மூக்கு, நாக்குனு..

vasu balaji said...

அட நம்ம அம்மா ஊரு பாலப்பட்டியும் வந்திருச்சே.படிக்க சுகமா பழைய நினைவுகள். நன்றி பழமை.

எம்.எம்.அப்துல்லா said...

//பொட்டி போனாப் போகுது, மூக்கு பத்திரமா இருக்கணுமே //

நடப்பு :))))


//உங்களை கடந்த ஒரு மாதமாய்த் தான் தொடர்கிறேன் //

அண்ணன் வந்த காலத்தில் இருந்து தொடர்கின்றேன் என்பதில் எனக்கு கர்வம். தமிழ் இருக்கும் இடத்திற்கெல்லாம் இந்த அப்துல்லா அடிமை, ஆதலால் பழமை அண்ணனுக்கும் :)

எதிர்கட்சி..! said...

):!

பழமைபேசி said...

//Mahesh said...
அம்மிணியை மடிச்சு மடிச்சு சின்னப் பொட்டலமா கட்டிருவீங்க போல :)))
//

அண்ணா, இருக்கீங்களா? வாங்க, வணக்கம்!!

பழமைபேசி said...

@@எம்.எம்.அப்துல்லா

சேற்றில் விரிந்த ஆம்பல் மலரே, வருக, வணக்கம்!

குறும்பன் said...

பழமைக்கு யாராச்சும் மரியாதை கொடுக்காம இருக்க முடியுமா?

நீங்க ஆறை நாட்டானா அல்ல வாரக்க நாட்டானா? நீங்க ஆறை நாட்டுல பொறந்து இருக்கலாம் ஆனா நீங்க வாரக்க நாட்டு சொத்து இல்லையா? வாரக்க நாட்டானின் அலம்பல்கள் என்ற தலைப்பு தான சரியா இருக்கும்?????

Karthikeyan G said...

Sir, காங்கேய நாட்டை பத்தி எதாவது உண்டா?

பழமைபேசி said...

//Karthikeyan G said...
Sir, காங்கேய நாட்டை பத்தி எதாவது உண்டா?
//

கண்டிப்பா, எல்லா நாடும் வருதுங்க... மன்றாடியார் பூமிய விடமுடியுமா??

Cholan said...

I am thusur

Cholan said...

எங்கள் ஊர் தூசூர்