அன்பர்களே,
வணக்கம்! பதிவுலகில் நுழைந்து, இந்த இடுகையோடு 500வது இடுகையைக் காண்கிறேன். இடுகை ஒன்றிற்கு சராசரியாக அரை மணி நேரம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, கிட்டத்தட்ட 250 மணித்தியாலங்கள் செலவழித்திருக்கிறேன் என்பதை உணர முடிகிறது. ஒரு வேளை நான் இதில் ஈடுபடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? வீட்டாரோடு செலவழித்திருப்பேனா? நிச்சயமாக, ஒரு 50 மணி நேரமாவது குழந்தைகளோடு செலவழிந்திருக்கும். ஆனால், மீதி 200 மணி நேரம் வேறெதிலாவதுதான் செலவழிந்து இருக்கும். ஏனெனில், பெரும்பாலான இடுகைகள் நான் வெளியூரில் இருக்கும் போது எழுதியவையே, நான் வாராவாரம் வெளியூர் செல்கிறவன் என்ற முறையில்!
எழுத்திற்கு வந்திருக்காத பட்சத்தில், அந்நேரமானது விளையாட்டுப் போட்டிகள், அமெரிக்க அரசியல், அமெரிக்கக் காணொளிகள் என்று கழிந்திருக்கும் என எண்ணுகிறேன். பதிவுலகில் நுழைந்ததால் எனக்கு ஏற்பட்ட இழப்புகளை விட நிறைவே அதிகம் என இப்போழ்தும் எண்ணுகிறேன். எனக்குத் தெரிந்த, அறிந்த பல பற்றியங்களை வலை ஏற்றி இருக்கிறேன். பதியப்பட்டுக் கிடக்கிறது, எதிர்வரும் சந்ததிக்காக! எனது வாசிப்புத் திறன் மற்றும் ஆய்வுத் திறன் கூடியிருக்கிறது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், நான் என் தாய்மண்ணில் வாழ்ந்த காலமென்பது மூன்று மாதங்களுக்கும் குறைவே. பதிவுலகில் செயலாற்றியதால் தாய் மண்ணோடு கூடிய அணுக்கம் பெருகி இருக்கிறது. அங்கு வாழும் மக்களின் மனவோட்டத்தை அறிய நேர்ந்தது. இந்த வழக்கத்தை நல்ல அனுபவம் என்றே எடுத்துக் கொள்வேன்.
எமது இந்த, 16 மாத கால அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு, வலையுலக அன்பர்களோடு ஒரு அளவளாவுதல், இதோ:தமிழ்ப் பதிவுலகை எப்படி அறிந்து கொண்டீர்கள்? அறிமுகம் கிடைத்தது எப்படி? நான் இருக்கும் சார்லட் தமிழ்ப் பண்பாட்டுக் குழுவினருக்காக, குழும மின்னஞ்சலில் எழுத விழைந்து, ஒரு கட்டத்தில் அவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கும் வைக்க வேண்டும் என அன்பர் ஜெய் சுப்பிரமணியம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வலைப்பூ துவங்கினேன். தமிழ்மணத்தை அறிமுகம் செய்ததும் அவரே!
தமிழகச் செய்தி ஊடகங்கள்\மிடையங்கள் தன் கருத்தைத் திணிக்கும் ஊடகங்களாகவும், காசுக்காக உண்மையைத் திரிக்கும் ஊடகங்களாகவும் இருக்கின்றனவே, எப்படி மக்களுக்கு உண்மையான \நடுநிலையான செய்தி சென்று சேரும்? தமிழகத்தில் மாத்திரம் அல்ல; உலகம் முழுமைக்கும் உள்ள சவால்தான் இது. எனினும் தமிழகத்தில் இது இன்னும் ஒருபடி மேலோங்கி இருக்கிறதையே காண்கிறோம். மக்கள் கல்வியறிவு பெற்று, பகுத்தறிந்து செயல்படுவதின் மூலம் மட்டுமே இதனைக் கடந்து வர முடியும். ஆனால், படித்தவர்களும் விட்டில் பூச்சிகளாய் ஏமாறுவது மிகவும் கவலையளிக்கிறது. பெரியவர்கள், மானம் எனும் மூன்றெழுத்து மந்திரத்தை சமூகத்தில் இழையோட விட்டார்களே, அதைப் போன்றதொரு உளவியல்க் கூறின் மூலமாகவும் எதிர்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.
தமிழக அரசியல் இன்னும் சீரழியுமா? அல்லது ஏதாவது நல்ல மாற்றம் வருமா? அப்படி வருவதாக இருந்தால் இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்று உங்களுக்கு தோன்றுகிறது? கல்வியறிவும், பொருளாதார மேம்பாடு காண்பதன் மூலமாகவும் ஒரு நல்ல சூழல் வர வாய்ப்பு இருக்கிறது. நிச்சயமாக சீரழிவுக்கு இடம் கிடையாது தமிழகத்தில். எவ்வளவு காலம் என்றெல்லாம் யூகம் செய்யக் கூடிய வகையில் முன்னேற்றமானது இல்லை, ஆனால் மேம்பாட்டில் இருக்கிறது!
அச்சு ஊடகத்தில் (அமெரிக்க ஊடகத்தில் அல்ல, தமிழக ஊடகத்தில் :-)) பங்களிக்க திட்டமிருக்கிறதா? ஏற்கனவே வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றேன். நுழைந்தால் முழு வீச்சில் நுழைய வேண்டும் என்கிற எண்ணத்தில், தயக்கத்துடன் மறுத்து விட்டேன். எதிர்வரும் காலத்தில் நிச்சயமாக இடம் பெறுவேன்.
இந்த கடைசி 108 மாசத்துல, 3 மாசம் கூட ஊருல இல்லைங்கறீங்க. (கல்யாணத்துக்குதான் ஊருக்கு போயிருப்பீங்க போலிருக்கு :-)) அதனால் இழந்தவை என்னவென்று கருதுகிறீர்கள்? அதை நினைத்து வருத்தப்பட்டது உண்டா? நான் இழந்தவை ஏராளமானவை. குறிப்பாக எமது கிராமங்களின் தொன்மையை நுகராமல் போனது. அவை எல்லாம் இன்றைக்குப் பொலிவிழந்து காணப்படுவதை எண்ணி ஏமாற்றம் அடைகிறேன். சிற்றாறுகளில் கூட, சதா சர்வகாலமும் நீரோடிக் கொண்டிருக்கும். ஆனால், இன்றைக்கு கானல் நீர் மட்டுமே ஓடிக் கொண்டு இருக்கிறது.
பல லோக்கல் டச் சமாச்சாரங்கள் எப்படி தெரியும்? நீங்கள் சொல்லும் நிறைய விஷயங்கள் ஒரு தமிழாசிரியருக்கே தெரியுமா என்பது கேள்விக்குறியே. எப்படி இந்த ஆர்வம்? உடுமலை வட்டத்தின் உள்ளோங்கிய கிராமப் பகுதிகளில் பிறந்து வளர்ந்தவன். முதல் பதினைந்து ஆண்டுகளில் கோவைக்கு வந்ததே ஓரிரு முறைதான். முழுக்க முழுக்க கிராமியத்தை நுகர்ந்து பருகியவன், அதுதான் காரணம். திருமூர்த்திமலை துவக்கம், சுல்தான் பேட்டை வரையிலான கிராமங்கள் ஒவ்வொன்றிற்கும் சென்று வந்திருக்கிறேன், அதுவும் கால்நடையாக!
நான் வாகத்தொழுவு வேலூர் எனும் எழில் வாய்ந்த நல்லூரில், இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது, முருகுபாண்டியன் கலைநிகழ்ச்சி நடந்தது. அதிலே பேசிய திமுக பேச்சாளர் கூத்தரசன் என்பவர் இலக்கியம் பேசியதில், நான் என்னையே இழந்தேன். அதன்பிறகு, பேச்சாளரைப் போலப் பேசி விளையாடுவது வழக்கமானது. சிறார்கள் மத்தியில் சரளமாகப் பேச வேண்டுமே என்பதற்காக, எதையாவது தமிழில் மனனம் செய்ய ஆரம்பித்தேன். அதுதான் எமது துவக்கப் புள்ளி!
தமிழ் வளர்கிறதா? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்?
வளர்கிறது, புலம் பெயர்ந்த நாட்டிலே இருப்பவர்கள் தொழில்நுட்ப ரீதியாக, மேம்பட்ட கணினி சார்ந்த கட்டமைப்பில் தமிழைப் புகுத்த விழைகிறார்கள். சீரழிகிறது, தமிழ்நாட்டிலே ஆட்சியாளர்கள் இரண்டகம் செய்வதால்!
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததால் என்ன லாபம்? யாருக்கு?
அரசியல் கட்சிக்கு! அதைச் சொல்லி உரையை நீட்டிக்கலாம், மக்களை மேலும் சிறிது நேரத்திற்கு அமர வைக்கலாம்!!
இந்தியா போயிருந்த போது, தமிழ் தினசரிகளில், வாழ்த்து(க்)கள் என்றே பார்த்தேன். இந்த சின்ன விசயம் கூட தெரியாமல் பத்திரிகை ஆசிரியர்கள் / திருத்துபவர்கள் இருக்கின்றனரா?
தலைக்கு மேலே வெள்ளம் போனால், அது சாணென்ன முழமென்ன என்று விட்டிருப்பார்கள். கிரீட்டிங்ஸ் என எழுதாமல் விட்டு வைத்ததை எண்ணி மகிழ்ந்து கொள்வோம் நாம்.
மற்றவர்களால் தமிழன் எப்போதும் வஞ்சிக்கப்படுகிறான் (உதாரணம் : காவிரி பிரச்சினை)? இது எதனால்? நமக்குள் ஒற்றுமை இன்மைக்கு இதை எடுத்துக்காட்டாக கூறலமா?
சாதியுணர்வு மேலோங்குவதுதான் காரணம்.
விளையாட்டுத் துறையில் நம் நாடு முன்னேற்றம் அடையாததற்கு காரணம்.. அரசியலா / பொருளாதாராமா?
பொருளாதாரம். பொருளாதார முன்னேற்றம் தடைபடுவதற்குக் காரணம் அரசியல்!
வெளிநாட்டு வாழ் தமிழர் மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணுகின்றீர்களா?
மகிழ்ச்சியாய் இருப்பவர்களே அதிகம்.
மாணவர்களுக்கு அரசியல் தேவையா?
அரசியலுக்கு மாணவர்கள் தயவு தேவை எனும் நிலைமாறி, ஒவ்வொரு மாணவனும் அரசியல் ஆர்வம் பெற வேண்டும்.
வலைப்பூக்களால் நன்மையா / தீமையா?
நன்மையே! வெளிவராத மாய்மாலங்களும், தமிழாட்சி மேலோங்குவதும் உள்ளங்கை நெல்லிக்கனி!!
கச்சா எண்ணை இப்போதெல்லாம் அமெரிக்க டாலரில் விலை சொல்லப்படுகிறது... இது ஈரோவில் மாறினால் என்ன ஆகும்.. (சும்மா.. கோச்சுக்கிடக்கூடாது... ஒரு மாறுதலுக்காக இந்த கேள்வி)
ஈரோ என்பது அமெரிக்காவின் நாணயமாக மட்டுமே இருக்கும்!
இப்போதுள்ள தொழிலுக்கு வரமால் இருந்திருந்தால் என்னவாக ஆகி இருப்பீர்கள்?
எதோ ஒரு இயந்திரவியல் நிறுவனத்தில், மேலாளராக முன்பிருந்த பணியைத் தொடர்ந்து செய்திருக்கக் கூடும்.
2012 - ல் உலகம் அழியும் என சிலர் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்களே, அதைப் பற்றி உங்க அபிப்ராயம் என்ன?
ஆனாலும் தமிழ் அழியாது என சொல்லிக் கொள்கிறேன்!
நைஜிரியா வரும் உத்தேசம் உண்டா?
என் சகோதரர் வர இருக்கிறார். அங்கே எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் தொடங்க இருக்கிறதாம். எனவே வரும் வாய்ப்பு இருக்கிறது.
ஊக்கம் அவசியமா? (உதா... பின்னூட்டங்கள்)
மிக அவசியம்! ஊக்கு இல்லா வாழ்க்கை, கோர்க்கப்படாத சிதறிய மணிகள் போல்!
’ஆலாப் பறக்கிறான் அவன்’ என்பதின் பின்னணி என்ன?
ஆலா (Haliaetus leucogaster) என்பது வேகமாகப் பறக்கக் கூடிய பறவை. அதைப் போல வேகமாகப் போகிறான் எனும் மரபுத் தொடரே இது.
பெட்னா நிகழ்வுகளை கவர் செய்த கையோடு ஒரு அறச்சீற்றமும் வந்ததே? அதன் விளைவுகள் என்ன?
ஊட்கத்தின் திரிபான கட்டுரையைச் சாடி வந்த இடுகை அது. எமது அந்த இடுகையானது, விழாவுக்கு வந்திருந்த, விழாவைக் கேள்வியுற்ற தமிழரிடத்தே ஒரு பிரளயத்தையே உண்டு செய்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் அவர்களே ஒரு அறிக்கை வெளியிட்டார்; அது கிட்டத்தட்ட 3000 புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும், தமிழகத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், நிகழ்ச்சியை நடந்தது நடந்தபடியே தொகுத்து பல இதழ்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை பிரசுரமும் ஆனது. ஓரிரு இதழ்களில் எனது கட்டுரையும் இடம் பெற்றது. இந்த இடத்திலேதான், வலைப்பூ எழுத்தாளனின் பணி பேரவைக்கு தெரிய வந்தது என்பதைக் கூறிக் கொள்வதில் உங்களோடு சேர்ந்து நான் மிகவும் அகமகிழ்கிறேன்!
உலக மயமாக்கல், உலக பொருளாதார மயமாக்கல் போன்ற மயமாக்களில் தமிழன் என்ற இனமும், அந்த தமிழினத்தின் திறமைகளும் பணத்திற்காக வெளி நாடுகளில் விற்பனையாகும் அவலத்திற்கு முடிவு இருக்குமா?(வருமா எனத்தான் கேட்க்க ஆசை ஆனால் இருக்குமா என்பது தான் பொருத்தமாக இருக்கும் என மனதில் படுகிறது)
அவலம் என்று ஏன் நாம் நினைக்க வேண்டும்? தமிழ் திக்கெட்டும் பரவுகிறது என ஏன் நினைக்கக் கூடாது?? அமெரிக்காவிலே திருக்குறள் சாதனை செய்த சிறுமி காவ்யா! ஐரோப்பாவிலே, கிழக்காசிய நாடுகளிலே, ஆசியிலே, தமிழ் 24 மணி நேரமும் வானலைகளில் தவழ்கிறதே? வாசிங்டனில், ஹூசுடனில் அமெரிக்க மாணவர்கள் தமிழ் கற்கிறார்களே? தமிழினம் பெருக வேண்டும், தமிழ் மொழி பரவ வேண்டும்.
சிங்கை, மலேயம் போன்ற நாடுகளில் வேலைக்குச் செல்லும் தமிழர்கள் குடியுரிமையைப் பெற்றாலும்கூட, பெரும்பாலும் இறுதியில் தாய்நாட்டில் வந்து நிரந்தரமாக தங்குவதையே விரும்புகின்றனர். அமெரிக்க வாழ்க்கையை அமெரிக்காவாழ் தமிழர்கள் எப்படி உணர்கின்றனர்?
தாய்நாட்டுக்கு வரும் வேட்கைதான் மேலோங்கி இருக்கிறது. ஆனால், ஏமாற்றம் அடைகிறார்கள். காரணம் என்ன? ஒருவர் தமிழ்நாட்டை விட்டு வரும் போது அப்போது இருக்கும் சூழலிலேயே, அவரது மனமானது(mind freeze) தங்கி விடுகிறது. அதனாலே, திரும்பும் போது இருக்கும் மாறுபட்ட சூழலுக்கு அவர்கள் தன்னை ஆட்படுத்திக் கொள்வதிலே சிக்கல் ஏற்பட்டு, மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பும் ஒரு முடிவுக்கு ஆட்படுகின்றனர். இந்த இடத்திலேதான், எனது பதிவுலக ஈடுபாடு என்பது, என்னை எம் தாய் மண்ணோடு ஒட்டியிருக்கச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பதிவுகளை படிக்க ஆரம்பித்ததில் இருந்து, உங்கள் இடுகைகளைப் படித்துக் கொண்டு வருகிறேன். விறுவிறுப்பு குறையாமல் அதே ஆர்வத்துடன் எல்லா இடுகைகளையும் படிக்கின்றேன். மிகவும் நன்றாக எழுதி வரும் நீங்கள், அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? நல்ல இடுகைகளை எல்லாம் தொகுத்து அச்சில் அழகிய புத்தகமாய் வெளியிடும் எண்ணம் உள்ளதா?
அடுத்து நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. நேரம் போதவில்லை. புத்தகம் வெளியிடும் திட்டமும் உள்ளது.
வேர் தொய்ந்து விட்டது, இனி விழுதுகளின் காலம்! தாய் மண்ணை நம்பி, இனி பயன் இல்லை. உலகெங்கும் வாழும் தமிழர்கள்தான், இனி நம் மொழி மற்றும் பண்பாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பது உங்கள் கருத்தாக தெரிகிறது(தொடர்ந்து உங்களிடம் பேசி, உங்கள் இடுகைகளைப் படித்ததில் நானே புரிந்துகொண்டது :) ) எந்த அளவுக்கு இது சரி என்று நினைக்கிறீர்கள்?
தமிழகம் மாறுபாட்டிலே இருக்கிறது. புலம் பெயர்ந்தவன் வேறுபாட்டிலே இருக்கிறான். மாறுபாட்டில் இருப்பவனுக்கு, மாற்றங்களை ஆய்ந்து பார்க்கக் கூடிய அவகாசம் தரப்படவில்லை. வணிக நிறுவனங்கள் அவ்வாய்ப்பைத் தரவும் மாட்டாது.
ஆனால், புலம் பெயர்ந்த நாட்டிலே ஓடியாடி ஒரு நிலைக்கு வரும் நிலையில், தனது பண்பாட்டை இங்கே இருக்கும் பண்பாட்டோடு ஒப்பிடுகிறான்; இரண்டிலும் இருக்கும் நல்லனவற்றை நுகர்கிறான். தமிழர் பண்பாடு கண்களுக்குப் புலப்படுகிறது. அதை அவன் செம்மையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் நான் தீவிரமாய் இருக்கிறேன்.
உடுமலையில் இருந்து அமெரிக்கா வரையிலான பயணம் குறித்துச் சொல்ல இயலுமா?
உடுமலை அந்தியூரில் பிறந்த நான், கோவை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், கனடா - டொரோண்டோ, ஜெர்மனி - மூனிச், இலண்டன், அமெரிக்கா, சைப்ரசு, இசுரேல் - இராணா, மீண்டும் அமெரிக்கா என நாட்கள் வெகு வேகமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
டொரோண்டோ யார்க் பல்கலைக்கழக வளாகத்தில் வாழ்ந்த மூன்றாண்டு காலம், உலகில் இருக்கும் அனைத்து நாடுகளையும் பார்த்த அனுபவத்தைக் கொடுத்தது. ஆம், அங்கே பல தரப்பட்ட நாடுகளைச் சார்ந்த நண்பர்களைப் பெற்றவன் ஆனேன். குறிப்பாக, பலதரப்பட்ட விடுதலை இயக்கங்களைச் சார்ந்தவர்களிடம் பழகும் வாய்ப்புக் கிட்டியது.
சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா? அது உண்மையா??
உண்மையே! பாரெங்கும் ஓடி வந்து கொண்டிருக்கும் எமக்கு, நானுறங்கிய அந்தத் திண்ணையும் கிழிந்த பாயும் ஆழ்மனதில் குடிகொள்ளவே செய்கிறது.
நீங்கள் சந்தித்த முக்கிய நபர்கள் யார், யார்?
பஞ்சீர்ச் சிங்கம் அகமது சா மசூது, N. T. இராமராவ் மற்றும் மதுரை தமுக்கம் மைதானத்தில் டெசோ மாநாட்டின் போது வல்லரசு அவர்களுடன் பல ஈழப் போராளிகள் (அப்போது நான் நான்காம் வகுப்பு என நினைக்கிறேன்).
டொரோண்டோவில் பல நாட்டுப் பிரபலங்கள், சிங்கப்பூர் முசுதபாவில் காலஞ்சென்ற தயாரிப்பாளர் பாலாஜி அவர்கள்! நிறைய திரைப் பிரபலங்களோடு உரையாடி இருக்கிறேன், ஆனால் என்னவோ, தானாக முன்வந்து இவர் என்னோடு உரையாடியது மனதை நெகிழ வைத்த அனுபவம். கூடவே பண்பாளர், நண்பர் C.T.தண்டபாணி அவர்களும் மறக்க முடியாத நபர்.
பள்ளி வாழ்க்கையில் இடம் பெற்ற முக்கிய நண்பர்கள் யார், யார்?
முதலாம் வகுப்பில் இருந்தே என்மீது தீராத அபிமானம் கொண்ட நண்பர்கள் பரமசிவம், ரெங்கராஜ் மற்றும் வெட்டூர்னிமடம் ஜேம்சு பென்சிகர், அப்பநாய்க்கன் பட்டி இராஜேந்திரன், சுல்தான் பேட்டை மேட்டுக்கடை பழனிச்சாமி, வாரப்பட்டி கதிர்வேல், Kerala Queen Bras கிருஷ்ணமூர்த்தி என பட்டியல் நீள்கிறது.
தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கும் போது, (இது உண்மை.. ஓட்டல் கடைக்குச் சென்று “சோறு இருக்கா?”-ன்னு கேட்டுப் பாருங்க தெரியும்.) புலம் பெயர்ந்து வந்து நாம் தமிழை வளர்த்தி என்ன பயன்? நமது அடுத்த தலைமுறைக்கு தமிழ் மீது அவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? நம்முடைய ஊரின் பெருமைகளை நீங்கள் சிலாகித்து எழுதும்போது, எங்களால் ரசிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் நாங்களும் அந்தப் பாதையை கடந்து வந்ததால்.. ஆனால் நம் குழந்தைகளால் எப்படி இதையெல்லாம் ரசிக்க முடியும்?
எல்லாக் குழந்தைகளாலும் இரசிக்க முடியும் என நான் எண்ணவில்லை. ஆனால், நூறில் பத்து குழந்தைகளாவது எதோ ஒரு சமயத்தில் தனது பூர்வீகத்தின் மீது பற்றுக் கொண்டு நாடவே செய்யும். அது மனித இயல்பு. அப்படி இருக்கையில், நாம் அந்த நாடுவோருக்கான கட்டமைப்பை எழுப்பும் கடமையில் இருந்து தவறலாமா?
முப்பது ஆண்டுகளாக இல்லாத வேட்கை, எனது நண்பர் ஒருவருக்கு இப்போது ஏற்பட்டு இருக்கிறது. அப்படி, எவருக்கு எப்போது ஏற்படும் எனச் சொல்ல இயலாது. இசுரேல் என்ற நாடே இருந்தது கிடையாது. நாடோடிகளாய் ஓடித் திரிந்தார்கள். இரசியாவிலே நிறைய சிறு சிறு நாடுகள். அவர்களெல்லாம் இன்றைக்கு தனது இனத்தை, மொழியை மீட்டெடுத்து இருக்கிறார்களே? எப்படி??
கட்டமைப்புச் சிதையாமல் இருந்ததுதான் காரணம். பாரதி பாடிய முப்பது கோடியில் தமிழன் இரு கோடிகளுக்கும் குறைவே. அப்படியானால், 1000 ஆண்டுகளுக்கு முன்னால்? ஒரு சில ஆயிரங்களா?? ஆயிரங்களை வைத்து இனத்தைக் காப்பாற்றிய போது, நாம் கோடிகளை வைத்துக் கொண்டு இனத்தை, மொழியை, பண்பாட்டைத் தக்க வைக்க இயலாதா?? ஒரு சில நூறுகள் போதும், தமிழ் இனம், மொழி, பண்பாடு வாழ!
நினைவுகளை, சிந்தனைகளை, தகவல்களைப் பதிந்து வைப்போம்... சுவடுகள் முன்னெடுத்துச் செல்லும்!
எவ்வாறு உங்களால் குடும்பத்துக்கும், வேலைக்கும் நடுவில் பதிவுக்கென்று இவ்வளவு நேரம் ஒதுக்க முடிகிறது? நீங்கள் எப்படி தினமும் ஒரு இடுகை இடுகிறீர்கள்? அதுவும் சும்மா மொக்கைகளாக இல்லாமல் ஆழ்ந்த கருத்துடையனவாக... சில சமயங்களில் இவர் என்னேரமும் பொட்டியும் கையுமாகவே இருப்பார் போலிருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது. இது உங்கள் குடும்ப வாழ்க்கைக்கும், உங்கள் உடல் நலத்துக்கும் சிறிதேனும் கேடு விளைவித்தாலும் நல்லதில்லையே?
நிச்சய்மாக இல்லை. வாரத்தில் நான்கு நாட்கள், தினம் ஒரு மணி நேரம் என உடற்பயிற்சி செய்வது உண்டு. எழுத்து என்று வந்துவிட்டால், பெரும்பாலும் எனது அனுபவத்தில் இருந்தே இடுகைகள் பிறக்கின்றன. எனக்கு கடந்த கால நினைவுகள் என்பது சட்டென இயம்பும் தன்மை கொண்டவை. ஒரு இடுகைக்கு முப்பது மணித் துளிகளுக்கு மேல் ஆகாது. தமிழில், அதுவும் பேச்சுத் தமிழ் என்பதை வெகு இயல்பாகத் தட்டச்சு செய்யக் கூடியவன் நான்.
எல்லாமே பயிற்சியைப் பொறுத்தே அமைகிறது. விமானப் பயணத்தின் போது, நினைவுகள் தானாக மேலெழும். அப்போது சிட்டுக் காகிதத்தில் ஓரிரு சொற்களாக குறித்துக் கொள்வேன். தமிழ்விழாவின் போது கூட, ஓரிரு நிமிடத்தில் சொற்கள் குறிக்கப்பட்டு, 1500 பேர் முன்னிலையில், கொடுத்த தலைப்பை ஒட்டி உடனடிக் கவிதை வாசிக்க முடிந்தது. எல்லாம் பயிற்சி, வாசிப்பு அனுபவம் மற்றும் வேட்கையை வைத்தே அமைகிறது.
தமிழன் என்பதற்காக மனம் வெதும்பியது / குறுகியது எதற்காக?
தமிழன் சாதியின்பால் அளவுகடந்த பற்றுக் கொண்டு சீரழியும் போது!
இயல்பாக பேசும்போது... பிறமொழிச் சொற்களை யூஸ் பண்ணுவதை ஈஸினு திங்க் பண்றமே இது எதனால்?
புழக்கமும், வாடிக்கையாகிப் போனதும்தான் காரணம். அதில் ஊடங்களுக்கு பெரும் பங்கு உண்டு. தமிழனின் தாழ்வு மனப்பான்மையும் உள்ளடக்கம்.
ஏன் தமிழ் வார்த்தைகளிலிருந்து பிற மொழிச் சொற்களுக்கு புலம் பெயர்ந்தோம்.... மீண்டும் தமிழ் சொற்களை மனதின் ஆழத்திற்கு கொண்டு செல்ல என்ன செய்யவேண்டும்?
கிராமத்திலே இருப்பவர்கள் இன்னும் தமிழிலேதான் உரையாடுகிறார்கள். கிராமத்தான் எனும் எள்ளலும், நையாண்டியும் ஒழிய வேண்டும். கிராமத்தான் என்பதைப் பெருமையாக என்ணிப் பாருங்கள், தமிழ் தாண்டவமாடும் நம் நாவில்!
மிக அற்புதமாக நீங்கள் எழுதிவருகிறீர்கள்.... மொழி சார்ந்து மட்டுமே அதிகம் இருப்பதாக எண்ணுகிறேன். ஏன் சமூகம் சார்ந்து, அடிப்படை ஒழுக்கத்தை வலியுறுத்தி உங்கள் எழுத்தைக் கொஞ்சம் பாய்ச்சக்கூடாது?
எழுதலாம்தான்! அக்கப்போர்கள் உருவாகும், அதற்கு வால் பிடிப்பதில் நேரம் வீணாகும். மேலும் அதைச் செய்ய நிறைய இருக்கிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்த கிராமியச் சுவடுகள் என்னோடு மட்டுமே அல்லவா? அதனால்தான்!
ஈழம் பற்றி....?
என்னவானாலும், அது எம் தேசம்!
உடன் அளவளாவிய நண்பர்களுக்கு நன்றி!இராகவன் நைஜிரியா குறும்பன்சூர்யாசெந்தழல் ரவி எம்.எம்.அப்துல்லா தென்றல் தென்னவன்கதிர் - ஈரோடு அப்பாவி முருஉடுமலை விஜிஎம்மைச் சிறப்பித்தவர்கட்கும் நன்றி!வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைசாண்டியேகோ தமிழ்ச் சங்கம்பழமைபேசும் இளைய தாத்தாஎழில் தமிழ்பண்பாட்டுக் குழு, சார்லட்