4/17/2009

வாய்க்கா மேடு!

களத்து மேட்டில் நுங்குவண்டி ஓட்டிச் சலித்த சிறுவன் பழமைபேசி, கம்பந் தண்ணீரைக் குடித்த பின்பு, சிறுதாழியை அலசி, இருந்த இடத்தில் வைத்தபின், சாளையைப் பூட்டிவிட்டு, எடுத்த இடத்திலேயே சாவியை பத்திரமாக வைத்தான். சாவியைச் சட்டத்தில் வைத்தபின் திண்ணையில் இருந்து ’ச்சங்’ என்று இவன் குதிக்கவும், எங்கோ இருந்த பேச்சி எனும் அவனது செல்ல நாய் இவனருகே வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

“டே பேச்சி, வாடா வாய்க்கா மேட்டுக்கு போலாம்!”

பேச்சி அதற்கு ஆமோதித்தது போலவும், அதே நேரத்தில் பழமைபேசி செல்லப் போகிற வழியில், எட்டத்தில் குறுக்கிட்ட ஒரு பெருங் குழவியைப் பார்த்துக் குரைக்கவும் செய்தது. ’ஏய், என் மனதில் குடிகொள்ளும் பாலகன் வருவது உனக்கு கண்ணுக்குத் தெரியவில்லையா?’ என வினவியது போல் இருந்தது பேச்சியின் அந்தக் குரைப்பு.

சிறுவன் பழமைபேசிக்கு பேச்சியின் குரைப்பைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் பிடித்தது. புரிந்தும் புரியாதவன் போல், அவர்களது சாளைக்கு கிழபுறமாக ஓடிக் கொண்டிருக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு (PAP) கால்வாயை ஒட்டி இருக்கும் மேட்டிற்கு செல்ல ஆரம்பித்தான். அவன் வயலுக்கு வரும் போதெல்லாம், இந்தக் கால்வாயில் கரை புரண்டோடும் தண்ணீரைப் பார்க்க விழைவது வழமையான ஒன்று.

அவனுடைய அம்மாவோ, அப்பத்தாவோ இருந்தால் அவனை அங்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். இன்று இருவருமே வயலில் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு புறப்பட்டு விட்டான், திருமூர்த்தி மலை அணைக்கட்டில் இருந்து ஈரோடு மாவட்டம் வரை வளைந்து நெளிந்து பல ஊர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் நற்புனலைக் கண்டு இரசிக்க.

பேச்சியும் பாலகனும் கால்வாய் மேட்டினை அடையவும், எட்டத்தில் இருக்கும் கால்வாயின் மதகு இருக்கும் இடத்திலிருந்து ஒரு பெண் குரல் வெளிப் படுகிறது. அது கேட்டு, இவர்கள் வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருக்கும் வேலண்ணனும் பின்குரலில் பாடுகிறார்; இவர்கள் இருவரும் பாட, பழமைபேசி அதைக் கேட்டுக் கொண்டே மேட்டின் மீது ஏறுகிறான்.


உங்க தங்கச்சிலைய மச்சான்
சந்திக்க ஆசை இருக்குதுன்னா
சாயங்காலம் ஊர்க் கோயலடிக்கு
இருட்டுனாப்புறம் வந்திடவேணும்!

வாசப்படியில் வந்து நின்னு
காளை கனைச்சு நின்னா
எங்கிருந்தாலும் எழுந்து
வந்து நிக்க மாட்டாதோ?

காளையரைக் கண்டுநானு
ஓடோடி வந்து நின்னுருவேன்
ஊருசனம் பாத்து பொரளிபேச
ஒலை பத்திடாதோ?

அக்கரையில இருக்குறமீனே
அணில்கடியா கொய்யாவே
இந்தப்பொறம் வந்தியானா
இனிச்சகனி நாந்தருவேனே!

பாலகனுக்கு இந்தப் பாடலின் தர்க்கம் புரிந்திருக்கவில்லை. ஏதோ இருவர் பாடுகிறார்கள், நாமும் இவர்களோடு பாடினால் என்ன என எண்ணி, இவனும் மேம்போக்காக சொல்ல ஆரம்பித்தான்.

எங்கவாய்க்கா மேட்டுல நானு!
அக்கரையில பாடுறவங்க யாரு?
அட, மேட்டுமேல நிக்குறேன் பாரு!

இவனது குரலைக் கேட்டதும் இருவரும் பாடுவதை நிறுத்தி விட்டனர். இவனும் கால்வாயில் புரண்டு வரும் பெருக்கை இரசிக்க ஆரம்பித்தான். நீர் தளும்பி, குலுங்கி, அலங்கிச் செல்லும் காட்சியில் தன்னையே மறந்தான் பாலகன் பழமைபேசி. பேச்சியும், அந்தக் காட்சியில் ஒன்றிப் போனது. ஆனாலும் அவ்வப்போது துள்ளும் மீன்களைக் கண்டு, பேச்சி குரைத்தபடி இருந்தான்.


திருமூர்த்திமலை, பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துப் பட்டி, பாப்பநூத்து, மொடக்குப்பட்டி, குண்டலப்பட்டி, லெட்சுமாபுரம், கோலார்பட்டி, நெகமம், சர்க்கார் பாளையம், அரசூர் எனப் பல ஊர்கள் கண்டும், அந்த ஊர்களின் சிலபல சாமான்கள், கோழி, ஆட்டுக் குட்டிகள், சில நேரங்களில் மனித உடல்களும் மிதந்து வரும் இந்தக் கால்வாயில். அவற்றை எல்லாம் உன்னிப்பாய்க் கவனிப்பது பாலகன் பழமைபேசிக்கு மிகவும் பிடிக்கும். இப்படியாக நேரம் கழித்துக் கொண்டிருந்த பழமைபேசி, அக்கரையில் உள்ள சாலையில் பொள்ளாச்சிப் பேருந்து செல்வதைக் கண்டதும், நேரம் கடந்து விட்டதை எண்ணி மேட்டிலிருந்து கீழே உள்ள அவர்களது வயலுக்குத் திரும்பினான்.

அவன் இறங்கி வந்து பார்க்கும் போது, சாளைக்கு மேற்புறம் இருந்த பூவரச மரத்தடி சமீபம் நிறுத்தி இருந்த கட்டை வண்டியில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் வேலண்ணனும், பெரியப்பா பண்ணையில் வேலை பார்க்கும் தேவராசுவும். வேலண்ணன் தண்ணீர் பாய்ச்சும் வேலை முடிந்து, இப்போது என்னவோ செய்கிறார், அது என்னவெனப் போய்ப் பார்ப்போமே என்ற ஆவலில் பேச்சியுடன் நேராக பூவரச மரத்தடிக்குச் செல்கிறான் பழமைபேசி.

“அண்ணா, சக்கரத்தைக் கழ்ட்டி என்ன செய்யறீங்ண்ணா?”

“கண்ணூ, நாளைக்கு மண்ணடிக்கோணும், அதாங்கண்ணு வண்டிக்கு கீல் போட்டுட்டு இருக்குறம்!”, வேலண்ணன் பதிலளித்தார்.

கீலுன்னா என்னுங்ண்ணா?”

“கீலுன்னா, துணியச் சிறு துண்டுகளாக் கிழிச்சி, அதுகளைக் கரிப்பொடி கலக்குன விளக்கெண்ணயில ஊற வெச்சி, அதைய அச்சுல சுத்துறது கண்ணூ. அப்பத்தான், அச்சுத் தேயாம நெம்ப நாளைக்கு வரும். இல்லீன்னா, அச்சு சீக்கிரத்துல முறுஞ்சு போயிருங் கண்ணூ!”

வண்டியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலில், குழந்தைகளுக்கே உரிய குணமான கேள்வி கேட்டுத் துளைக்கும் பாங்கில் ஆரம்பித்தான் பழமைபேசியும்.

“அப்புறம் இதென்னுங் அண்ணா?”

“இதுக்குப் பேரு பட்டா கண்ணூ, சக்கரத்துல வெளிய கனமா தகட்டுல இருக்குறது. அதையொட்டி இருக்குறது வட்டை. வட்டைக்கும் திகிரிக்கும் நடுப்புல இருக்குறதெல்லாம் ஆரம். இது அச்சாணி கண்ணூ!”

“அப்பிடீங்களா? இது என்னுங்ண்ணா?”

“கீழ நடுப்புல பெருசா இருக்குறதா? அது பார்ச்சட்டம். பார்ச் சட்ட்த்துக்கு கீழ அச்சத் தாங்கி இருக்குறது இருசு கண்ணு. பாரம் நெம்பப் போனா, இருசு முறிஞ்சு போயிருந் தெரியுமல்லோ? மேல, அல்லையில படல் கட்டுறதுக்கு இருக்குறது மொளக்குச்சிக!”

“முன்னாடி பெருசா இருக்குறது சட்டமுங்களா?”

“ஓ! அதா? அது ஏர்க்கால் கண்ணூ! ஏர்க்குச்சிக்கு அல்லையில ரெண்டு பக்கமும் இருக்குறது சவாரித் தப்பை. வண்டியை நெலத்துல ஊனுறதுக்கு மூக்காணி. மூக்காணிக்கு மேல எருதுகளைப் பூட்டுறதுக்கு நொகம். தாம்புக் கவுறுமு காண்டியுமு இருந்தா எருதுகளைப் பூட்டுலாம்!”

“அப்பிடீங்களா?”

“ஆமா கண்ணு, இன்னிக்கி இரவைக்கு சாளையிலயே இருக்கப் போறியா? ஊட்டுக்குப் போகோணுமா கண்ணு நீயி?”

“அம்மா, சாயந்தரம் அஞ்சு மணிக்கெல்லாம் வரச் சொல்லீருச்சுங்ண்ணா!”

”அப்ப நேரமாச்சு கண்ணூ... இருட்றதுக்கு முன்னாடியே போயிரு!”

“செரீங்ண்ணா, அப்ப நான் வாறேன்!”

பாலகன் பழமைபேசியும், வயல் நண்பன் பேச்சியும் பூவரச மரத்தடியிலிருந்து நகர்ந்து, அவனுடைய பெரியப்பா வயலின் வழியாக இட்டேரிக்குச் செல்லும் சிறுகால்த் தடத்தை நோக்கிச் சென்றார்கள். போகிற வழியில், அப்படியே ஒரு பூவரச இலையைப் பறித்து, நன்றாகச் சுருட்டி, சீட்டி அடிக்க ஒரு சீட்டி செய்து, ’ப்ப்பீ! ப்ப்பீ!!’ என்று ஊதிக் கொண்டே செல்கிறான்.


பேச்சியும், பழமைபேசி நடப்பதின் வேகத்துக்கு ஏற்ப, அவனுக்கு முன்பாக இட்டேரியை நோக்கிச் செல்கிறது! மாலை வேளை நெருங்கிக் கொண்டிருப்பதால், முன்னே செல்லும் பேச்சியின் நிழல் நீள நீளமாகத் தரையில் விழ, அதை வினோதமாகப் பார்த்துச் சிரிப்பதும், சீட்டி அடிப்பதுமாக பின்தொடர்ந்து செல்கிறான் பாலகன் பழமைபேசி.

15 comments:

Anonymous said...

//பாலகனுக்கு இந்தப் பாடலின் தர்க்கம் புரிந்திருக்கவில்லை.//

பாலகன் வளர்ந்து இளங்குமரன் ஆனதும் அவனும் இந்தப்பாட்டை ஒரு இளங்குமரியைப்பாத்து பாடுனதா பட்சி சொல்லிச்சி :)

அப்பாவி முரு said...

//சில நேரங்களில் மனித உடல்களும் மிதந்து வரும் இந்தக் கால்வாயில். அவற்றை எல்லாம் உன்னிப்பாய்க் கவனிப்பது பாலகன் பழமைபேசிக்கு மிகவும் பிடிக்கும்.//

என்ன ஒரு பாசிச மனப்பான்மை...


ஆனா., பதிவு சூப்பர்ண்ணோவ்... ஊருக்கு போற திட்டம் ஏதும் போட்டாச்சா?

அது சரி(18185106603874041862) said...

//
அதே நேரத்தில் பழமைபேசி செல்லப் போகிற வழியில், எட்டத்தில் குறுக்கிட்ட ஒரு பெருங் குழவியைப் பார்த்துக் குரைக்கவும் செய்தது. ’ஏய், என் மனதில் குடிகொள்ளும் பாலகன் வருவது உனக்கு கண்ணுக்குத் தெரியவில்லையா?’ என வினவியது போல் இருந்தது பேச்சியின் அந்தக் குரைப்பு.
//

(பழமை) பேசியும், பேச்சியும் நல்ல வலுவான கூட்டணி தான் போலருக்கு :0))

ஆ.ஞானசேகரன் said...

//’ஏய், என் மனதில் குடிகொள்ளும் பாலகன் வருவது உனக்கு கண்ணுக்குத் தெரியவில்லையா?’ என வினவியது போல் இருந்தது பேச்சியின் அந்தக் குரைப்பு.//

ஆமா ஆமா...

ஆ.ஞானசேகரன் said...

//எங்கவாய்க்கா மேட்டுல நானு!
அக்கரையில பாடுறவங்க யாரு?
அட, மேட்டுமேல நிக்குறேன் பாரு!//

ஏங்கோ எச பாட்டு நல்லாதான் வருது உங்களுக்கு..

ஆ.ஞானசேகரன் said...

வழக்கமாகவே... பதிவு நல்லா வந்திருக்கு பாராட்டுகள்..

vasu balaji said...

இங்க சித்திரை வெயில் வறுக்குது. நீங்க பாட்டுக்கு காடு, கம்மா, ஓடை, ஆறு, மதகுன்னு ஏங்க விட்டாலும், பேச்சி கூட பழமை கூடவே நாமளும் சுத்துறதால, இதமாத்தானிருக்கு. மாட்டு வண்டிய அக்கு வேற ஆணி வேற தெரிஞ்சிக்கிற ஆர்வம், விளையும் பயிர் முளையிலேவா? வழமை போல பழமை அருமை.

Mahesh said...

அட இந்த வகை எழுத்து நடை நல்லா இருக்கு... நடந்தத எழுதன மாதரயுமாச்சு... நாலு வார்த்தை சொல்லி குடுத்த மாதரயுமாச்சு...

அப்பறம் அது "நெகமம்"ண்ணா.... "நெகம்ம"ன்னு எழுதிட்டீங்க !!

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
//பாலகனுக்கு இந்தப் பாடலின் தர்க்கம் புரிந்திருக்கவில்லை.//

பாலகன் வளர்ந்து இளங்குமரன் ஆனதும் அவனும் இந்தப்பாட்டை ஒரு இளங்குமரியைப்பாத்து பாடுனதா பட்சி சொல்லிச்சி :)
//

இதெல்லாம் பொது இடத்துல ஆமோதிக்க முடியுமா?

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
ஆனா., பதிவு சூப்பர்ண்ணோவ்... ஊருக்கு போற திட்டம் ஏதும் போட்டாச்சா?
//

நன்றிங்க, நன்றிங்க!!

பழமைபேசி said...

//அது சரி said...
(பழமை) பேசியும், பேச்சியும் நல்ல வலுவான கூட்டணி தான் போலருக்கு :0))
//

இஃகிஃகி!!

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
வழக்கமாகவே... பதிவு நல்லா வந்திருக்கு பாராட்டுகள்..
//

நன்றிங்க!

பழமைபேசி said...

// பாலா... said... //

//Mahesh said... //

பாராட்டுக்கும், பிழை திருத்தலுக்கும் நன்றிங்க!!!

கொங்கு நாடோடி said...

சில நேரங்களில் மனித உடல்களும் மிதந்து வரும் இந்தக் கால்வாயில். --- அந்த இரு கோவை சிறுபிள்ளைகள் கொள்ளப்பட்ட செய்தி- PAP வாய்காலில் மிதந்த உடல்கள். பழமைபேசியின் மனதில் என்ன தோன்றியது?

பழமைபேசி said...

@@Jay

ஜெய், எங்க தோட்டம் வாய்க்காமேட்டை ஒட்டித்தான் இருக்குங்க... நிறைய உடல்கள் மிதந்து வருவதைச் சிறு வயதிலேயே கண்டவன்.....

தினமலரில், இச்செய்தியைப் படித்ததும், அதுவும் கெடிமேடு எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததுமே ஊர் நினைவுதான்.... குழந்தைகளை நினைத்து மிகுந்த அதிர்ச்சியும் மேலிட்டது.

pazamaipesi@gmail.com எனும் மின்னஞ்சலில் அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே நீங்கள்?