4/04/2009

வந்து, கடல்ல விழுங்க இராசா?!

வணக்கம்! என்னவோ தெரியலை, அரசியலைப் பத்தின ஒரு யோசனையாவே இருக்கு! ஆனாலும், அதைப்பத்தி எழுதி, ஒரு இடுகைய வீணாக்கணுமா? வேணாம் விடுங்க! நாம வழக்கம் போல, நம்ம பேச்சு வழக்குல இருக்குற எதனா ஒன்னை, அலசித் துவச்சிக் காயப் போடலாம் வாங்க.

அது பாருங்க, நாம ஊர்கள்ல இருக்கும் போது குளம், குட்டை, ஏரி, தடாகம்ன்னு நீர் நிலைகளைப் பத்திப் பலதும் பேசக் கேட்டு இருக்கோம். தமிழ் செம்மொழி ஆச்சுங்களே? துல்லியமா, ஒன்னை குழப்பமில்லாம சொல்ல வல்லது. அப்ப, நீர் நிலைகளைத் தமிழ் எப்படிக் கையாளுது? மனசுல கேள்வி தோணுதே?? வாங்க, தமிழ் என்னதாஞ் சொல்லுதுன்னு பார்க்கலாம். • அகழி(Moat): கோட்டைக்கு வெளில அகழ்ந்தமைச்சிருக்குற நீர் அரண்

 • அணை, அணைக்கட்டு(Dam): ஆற்றின் குறுக்கே அணைத்துக் கட்டப்பட்ட நீர்நிலை

 • அருவி(Water fall): மலைமுகட்டுல இருக்குற தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது

 • ஆழிக்கிணறு(Well in shore): கடலருகே இருக்கும் கிணறு

 • ஆறு (River): அறுத்துக் கொண்டு பெருகி ஓடுவது

 • இலஞ்சி (Reservoir for drinking): குடிதண்ணீர்த் தேக்கம்

 • உறை கிணறு(Ring well): மணலில் தோண்டி, சுடுமண் வளையமிட்ட கிணறு

 • ஊருணி (Drinking water tank): பருகுநீர் உள்ள நீர்நிலை

 • ஊற்று(Spring): நிலத்தடியிலிருந்து நீர் ஊறி வரும் நிலை

 • ஏரி(Irrigation Tank): வேளாண்மைக்கு உதவும் நீர் நிலை

 • ஓடை (Brook): ஊற்றெடுத்து ஓடி வரும் வாய்க்கால்

 • கட்டுக்கிணறு (Built-in-well): அகச்சுவர் கட்டியெழுப்பிய கிணறு

 • கடல் (Sea): பரவை என்றும் சொல்லப்படும் பெரும் நீர் நிலை

 • கம்வாய்(Irrigation Tank): ஏரிக்கு தென் மாவட்டங்களில் சொல்லப்படுவது, கண்மாய்

 • கலிங்கு (Sluice with many ventwavs): தேக்கம் உடைப்பெடுக்காமல் இருக்கக் கட்டப்படும் கடைவாய் நீர் வெளி

 • கால் (Channel): நீரோடும் வழி

 • கால்வாய் (Supply channel to a tank): ஏரி, குளம், ஊருணிக்கு நீர் கொண்டு செல்லும் வழி

 • குட்டம் (Large pond): பெருங்குட்டை

 • குட்டை(Small Pond): சிறுகுட்டை

 • குண்டம் (Small pool): சிறு குளிக்கும் நீர்நிலை

 • குண்டு(pool): சிறுகுழியான நீர்நிலை

 • குமிழி(Rock cutwell): நிலத்தின் பாறையைக் குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச் செய்த நீர்நிலை

 • குமிழி ஊற்று (Artesian fountain): அடியிலிருந்து கொப்புளித்து வரும் நீர்நிலை

 • குளம் (Bathing Tank): ஊரார் குளிக்கப் புழங்கும் நீர்நிலை

 • கூவம்(Abnormal tank): ஒழுங்கில் அமையாத நீர்நிலை

 • கூவல்(Hollow): ஆழமற்ற, கிணறு போனறதொரு பள்ளம்

 • கேணி(Large Well): பெருங்கிணறு

 • சிறை (Reservoir): தேக்கி வைக்கப்பட்ட பெரிய நீர்நிலை

 • சுனை(Mountain Pool): மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர்நிலை

 • சேங்கை( Tank with duck weed): பாசிக் கொடி மண்டிய குளம்

 • தடாகம், தடம்(Beautiful bathing tank): அழகுற அமைக்கப்பட்ட குளம்

வந்து, நல்லாத் தமிழ்க் கடல்ல விழுந்தீங்களா? ஆனாப் பாருங்க, நாம பாதிக் கடல்தான் தாண்டி இருக்கோம். ஆகவே, மிச்சத்தை நாளைக்கு மேலதிக இடுகையா இடுறேன்!


கிணற்றுக்கு அழகு தண்ணீர்!
பழமைக்கு அழகு தமிழ்!!


20 comments:

அப்பாவி முரு said...

நல்ல ஆராய்ச்சி...

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
நல்ல ஆராய்ச்சி...
//

நல்ல ஆராய்ச்சிங்றது உண்மையா? இல்ல, இந்த தகவல் மத்தவங்ககிட்ட பகிர்ந்துகிற அளவுக்கு இல்லங்கறது உண்மையா??

அப்பாவி முரு said...

ஓ.. இவ்வ்ளோ இடங்கள்ள,

தண்ணி கிடைக்குமா?????

எங்கூருல்லையெல்லாம் ஒரு அரசாங்க கடையிலயே எல்லாம் கிடைக்கும்...

Mahesh said...

தமிழ்ப் பெருங்கடல் !!!!

Stream - இதுவும் ஓடைதானே?

BAY - விரிகுடா விட்டுப் போச்சா?

குடந்தை அன்புமணி said...

//ஆறு (River): அறுத்துக் கொண்டு பெருகி ஓடுவது.//

இப்பல்லாம் அப்படியில்ல தலைவா! மணலைத்தான் அறுத்து எடுத்துக்கி்ட்டு போறாங்க!

பழமைபேசி said...

//அப்பாவி முரு said...
ஓ.. இவ்வ்ளோ இடங்கள்ள,

தண்ணி கிடைக்குமா?????

எங்கூருல்லையெல்லாம் ஒரு அரசாங்க கடையிலயே எல்லாம் கிடைக்கும்...
//

இது நல்லா இருக்குங்க....

பழமைபேசி said...

//Mahesh said...
தமிழ்ப் பெருங்கடல் !!!!//

வாங்க மகேசு அண்ணே!

Stream - இதுவும் ஓடைதானே?
நீரோடி... குழாயிலிருந்து பீச்சியடிக்கும் நீரோடியில் தலையைக் காண்பிக்க, தலைக்கேறிய சூடு தணிந்தது.

BAY - விரிகுடா விட்டுப் போச்சா?
இன்னும் பாதிக்கடல் தாண்டலை அண்ணே!!

பழமைபேசி said...

//குடந்தைஅன்புமணி said...
//ஆறு (River): அறுத்துக் கொண்டு பெருகி ஓடுவது.//

இப்பல்லாம் அப்படியில்ல தலைவா! மணலைத்தான் அறுத்து எடுத்துக்கி்ட்டு போறாங்க!
//

இஃகிஃகி!

கயல் said...

கூவம்னா சென்னையை சுத்தி ஓடுற ஆற்றோட பேருன்னு நினைச்சிருந்தேன்! அது காரணப்பெயருன்னு இப்போதான் தெரிஞ்சது!இலஞ்சி‍ இது புதுசு! அருமையான ஆராய்ச்சி! தொடருங்கள்!
மேலதிக இடுக்கையில இன்னும் என்ன தகவல் சொல்லப் போறீங்க?

vasu balaji said...

தண்ணில வெண்ணெய் எடுக்குறதுன்னு சொல்லுவாய்ங்க. பாதி கடல்லவே முத்தெடுத்துட்டீங்க பழமை. மீதி பாதி முடிச்சி, மொத்தம் எத்தன நீர் நிலை பார்காம சொல்லோணும்னு கணக்கு குடுக்க மாட்டீங்க தானே?

பழமைபேசி said...

//கயல் said...
கூவம்னா சென்னையை சுத்தி ஓடுற ஆற்றோட பேருன்னு நினைச்சிருந்தேன்! அது காரணப்பெயருன்னு இப்போதான் தெரிஞ்சது!இலஞ்சி‍ இது புதுசு! அருமையான ஆராய்ச்சி! தொடருங்கள்!
மேலதிக இடுக்கையில இன்னும் என்ன தகவல் சொல்லப் போறீங்க?
//

வாங்க கயல்... இன்னும் நீர்நிலைகளை முழுசாப் பாத்து முடியலையே? பொய்கை, கயம்ன்னு நிறைய இன்னும் இருக்குங்க.

பழமைபேசி said...

//பாலா... said...
தண்ணில வெண்ணெய் எடுக்குறதுன்னு சொல்லுவாய்ங்க. பாதி கடல்லவே முத்தெடுத்துட்டீங்க பழமை. மீதி பாதி முடிச்சி, மொத்தம் எத்தன நீர் நிலை பார்காம சொல்லோணும்னு கணக்கு குடுக்க மாட்டீங்க தானே?
//


அப்படியெல்லாம் இல்லீங்க பாலாண்ணே, பழங்கணக்குகளைச் சொல்லுறப்ப, மக்கள் புரிஞ்சிகிடணும் பாருங்க... அதுக்குத்தான் இதெல்லாம்! இஃகிஃகி!!

vasu balaji said...

நிசத்தில நீங்க சொல்லுற கணக்கெல்லாம் பார்க்கிறப்ப பெருமையா இருக்கு. இப்படி இருந்த நாம எப்படி ஆய்ட்டோம்னு. நான் சும்மா சொன்னேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தமிழ் கடலாட்டம் ஆனந்தம்..

பழமைபேசி said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
தமிழ் கடலாட்டம் ஆனந்தம்..
//

நன்றிங்க நன்றிங்க...

Poornima Saravana kumar said...

அண்ணாச்சி இதுல ஒன்னு இரண்டு கடல் தான் எனக்கு தெரிஞ்சதே:(

Poornima Saravana kumar said...

முதல்ல தலைப்ப பார்த்ததும் நான் பயந்தே போயிட்டேன்!

பழமைபேசி said...

//Poornima Saravana kumar said...
முதல்ல தலைப்ப பார்த்ததும் நான் பயந்தே போயிட்டேன்!
//

வாங்க, வாங்க! இப்ப பயந்தெளிஞ்சு போச்சு பாருங்க.... இஃகிஃகி!!

Arasi Raj said...

ஆனாலும், அதைப்பத்தி எழுதி, ஒரு இடுகைய வீணாக்கணுமா? வேணாம் விடுங்க
////

நல்ல வேலை நான் புளச்சேன்

Arasi Raj said...

எங்கப்பா.....இம்புட்டு இருக்கு....ஆனா நம்ம ஊர்ல எல்லாமே வறண்டு போயி தான் இருக்கு கடலைத் தவிர