4/30/2009
குண்டக்கமண்டக்க செயலாற்றும் பஞ்சமாபாதகன்!
வாய்ச்சாடலில் ஒருவர் அறைகிறார், பஞ்சமாபாதகன், இனத்தைக் கெடுக்க வந்த கயவன் என்றெல்லாம்.... உமது தூற்றலில் எதிரி குளிர் காய்கிறானே? அதை நினைந்து, நமக்கு ஆவதென்ன அன்பர்காள்? வாருங்கள் பஞ்சமா பாதகத்தின் பொருளறிவோம்!
வரும் மாசுகள் கொண்டவன் பஞ்சமாபாதகன் என்றறிவார்: கொலை, காமம், களவு, பொய், குருநிந்தை. வடவர் கூற்றுப்படி, அகங்காரம், உலோபம் (ஈயாமை), காமம், பகை, போசனவேட்கை, சினம், சோம்பல் உடையோர் நவகயவன் ஆவர்.
குண்டக்கமண்டக்க செயலாற்றுபவர் என்கிறார் ஒருவர். அதற்கும் ஆயிரமாயிரம் கரங்களின் பின்னொலியில் ஆமோதகம். பொருளறியாமல், தலைவனின் உச்ச குரலுக்கு மயங்கும் தகைமை உடைத்தெறிந்து, குடிகளுக்கென பிறப்பவர் இனி உண்டோ? காலமே விடை தருக! சரி, அது என்ன குண்டக்கமண்டக்க?
குண்டக்க என்றால், சாய்ந்தும், வளைந்தும், நெளிந்தும் ஒரு சீரில்லாமல் இருக்கும், கிடக்கும் எதுவும். மண்டக்கம் என்றால், ஆழ்நீர்நிலையில் இருப்பவரைக் கட்டி இழுக்கும் கயிறு. இழுபடுதல் ஆனபின்னர், சுருட்டிச் சீர்பட எடுத்து வைக்காமல் எறிந்து கிடப்பது குண்டக்கமண்டக்கம். தெளிவில்லாமல், அங்குமிங்குமாய் தான்தோன்றியாய் இருப்பவன் குண்டக்கமண்டக்கன். எந்தத் தலைவரும் குண்டக்கமண்டக்க செயலாற்றும்படியாய் இல்லை, ஆனால் அவர்கள் பின்னால் செல்லும் அபிமானிகள்?!
4/29/2009
360 பாகையில்!
யோகாசனப் பயிற்சியில் அந்த 95 வயதுப் பெரியவர் வெகு சிரத்தையாக ஈடுபட்டிருந்த நேரத்தில், அந்த வழியாக சென்ற ஒரு இளைஞன்,
“தாத்தா, எதுக்கு இந்த வயசுல முடிஞ்சும் முடியாம இதெல்லாம் செய்துட்டு இருக்கீங்க?”
“எனக்காகதாம்ப்பா செய்துட்டு இருக்கேன்!”
“?!?!”
அதே போல, நேற்றைக்கு இங்கு Buffalo, NYல் அலுவலகத்தில் இருக்கும்போது, சக அமெரிக்க நண்பரான Don Russell, வேறொரு இந்திய நண்பரைப் பார்த்து,
“Hey Sunil, in which room are we suppossed to meet?"
"One thousand thirty five!"
"wwwwwhat?"
"One Thousand... Thirty Five!"
உரத்த குரலில் "wwwwhat??"
எனக்கா சிரிப்புத்தாங்க முடியவில்லை, அதே வேளையில் இதையெல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த Mike Tirone என்பவர் சொல்கிறார்,
“See Don, this is Globalization age, we should think in 360 degrees man.... he means Ten Thirty Five, you know?!"
பின் உரையாடல் இது குறித்துத் தொடரவே, இறுதியில் “Knowledge doesn't matter anymore, it is just that one should have ability to think in 360 degrees and adopt to the circumstance!" என்ற கருத்தோடு நிறைவுற்றது.
அபிமானத் தலைவன் சொல்வது வேதவாக்கு, பிடித்த எழுத்தாளர் எழுதுவதே எழுத்து என்று இருந்தால், "நமக்கு வாய்ப்பது எத்தனை பாகை?" என்று எனக்குள் யோசிக்க முயலுகிறேன்....
4/28/2009
4/26/2009
இப்ப போகுறயே சோரம்?!
பழசை நல்லா மறந்துடுவான் - புது
மகுடிக்கு நல்லா மயங்கிடுவான்!
சேத்துகிறது நல்லா, உப்பு புளி காரம்
இப்ப போகுறயே சோரம்?!
பாங்கா நாலும்பேசி உசுப்புவான் - அந்த
உசுப்பலுக்கு நல்லா கையுந்தட்டுவான்!
சேத்துகிறது நல்லா, உப்பு புளி காரம்
இப்ப போகுறயே சோரம்?!
இப்ப போகுறயே சோரம்?!
பேச்சுல சுதி ஏறஏற, இவனுக்கு
மழுங்கித்தான போகுது மதி?!
எதிரியின்னும் சொல்லுறான், துரோகிக்கு
எதிரி மேலுன்னும் சொல்லுறான்! ரெண்டுல
ஒன்னுக்கு சரணாகதியின்னும் சொல்லுறான்! ரெண்டுல
சேத்துகிறது நல்லா உப்பு புளி காரம்
இப்ப போகுறது சோரம்!
பழச நல்லா மறந்துருவான் - புது
மகுடிக்கு நல்லா மயங்கிடுவான்!
தப்புத்தாளத்துக்கு உணர்ச்சிவசப்படுறியே இப்போ,
ஞாயத்துக்கு அறிவுவசப்படுவது எப்போ??
அவனிவன் ரெண்டுமே தப்புக்குக் கூட்டாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!
தனிச்சு நின்னு இனத்துக்காக சமாளி!!
சேத்துகிறது நல்லா உப்பு புளி காரம்;
இப்ப போகுறயே சோரம்?! தமிழா நீ
சேத்துகிறது நல்லா உப்பு புளி காரம்;
இப்ப போகுறயே சோரம்?!
4/25/2009
உணர்வுகள் வாங்கப்படும்!
மாத்திப் போடேய்!!
இருக்குற நாப்பதும் போகட்டும்,
நரித்தனம் நசியட்டும், போங்காட்டம்
புரிஞ்சு போச்சு, முகமூடி கிழிஞ்சு போச்சு!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
கூட்டத்தோட ஒத்துவாழு,
காட்டமான பேச்சைக்கேளு,
தோட்டத்தம்மா நீயும் ஒப்புக்கழு!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
இனத்தைக் காவுகுடு
உணர்ச்சியக் கிள்ளியுடு
ஏழையக் குழப்பியுடு!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
எட்டணவும் நாலணாவும் மறஞ்சி போச்சு!
பத்துரூவா நாணயமும் வீதிக்கு, வந்தாச்சு!!
நாட்டுமதிப்பு பாதாளம் பாஞ்சுபோச்சு!!!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
இல்லே சொன்னவங்க இருக்கு சொல்றாங்க,
இருக்கு சொன்னவங்க இல்லே சொல்றாங்க,
குரல்கூடுன பக்கம் போறன்நாங்க!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
சிந்திக்க நேரமில்ல, பாக்க பொழுதுமில்ல,
இதுல நல்லவன் யாரு, கெட்டவன் யாரு
யோசிக்க என்ன கெடக்கு?!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
சேதி சொல்லுறான், நல்ல சேதி சொல்லுறான்!
அக்கம்பக்கம் நல்லாப் பாத்துதான சொல்லுறான்?!
நம்மசாதி ரொம்ப ஒசந்ததுன்னு நல்லா சொல்லுறான்!!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
குட்டையில மீனைப் புடி!
அது குழம்புனமீனா இருந்தா என்ன?!
இல்ல, நாறுனமீனாதான் இருந்தா இப்பென்ன?!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
கட்சி ஏது? கொளுகை ஏது??
இதுல நாட்டுக்கு ஒசத்திஏது? ஆக
நீயும், பைசாவுக்கு பசப்பிப் பாரு!
ஏ போடேய்!
மாத்திப் போடேய்!!
உணர்வுகள் வாங்கப்படும்;
நியாயங்கள் வேரறுக்கப்படும்!!
4/24/2009
காலச்சுவடுகள்!
குறியாப்புக்கு அரிசி கொடுக்கும் விதமாய்த் தாயானவள் வீட்டினுள் செல்ல, குறியாப்பு வாங்க வந்த தோழனுடன் சில மணித்துளிகள் கழித்தவனாய் பழமைபேசி!
முன்வாசலில் வெண்குழல் விளக்கின் மெல்லிய வெள்ளொளி வீச, நேற்று பூத்த சாமந்திப் பூக்களைக் காணுகிறான் பழமைபேசி. அவைகளை எண்ணிச் சில மலர்கள் கூடியிருக்க்க் கண்டு,
“தேவண்ணா, இன்னிக்கு இனியுமு நெறைய இருக்குது பாருங்கோ!”
“பழமை பாத்துறா, இந்த மாதர பத்தைகளுக்குள்ள எல்லாம் பூச்சி புழுவுக இருக்குமடா!”
“அப்படியாங், வாங்க அப்ப போயிருலாம்!”
அரிசி வாங்க வந்த தேவராசு அரிசியோடு இடத்தை விட்டு அகலவும், அருகண்மை வீட்டுக் குடியானவளான செங்கமலம் தன் மூன்று வயது பாலகனுடன் வாசலுக்குள் நுழைகிறாள். மாலை நேரம் எந்த வீட்டுக்குச் சென்றாலும், எதையாவது கொடுத்துப் பின் அளவளாவிவிட்டு வருதல் எனும் வழக்கம் முறிக்கப்பட்டு விடக் கூடாது என்று நினைத்தவளாய், வீட்டுப் புறக்கொல்லையில் விளைந்த காய்கறிகளுடன் வந்து இருக்கிறாள் செங்கமலம்.
“சரோசினி அக்கா, எங்க காட்டுக்குப் போயிட்டீங்களாக்கூ? ஊடு பூட்டியே கெடந்துச்சூ!”
“நான் இன்னைக்கு மலைச் சந்தைக்குப் போயிட்டு சாயந்தரம் போலத்தேன் வந்தேன்!”
“அப்பிடீங்களா, சித்த சொல்லியிருந்தா நானுமு தங்கவேலனை அவிங்க அப்பத்தாகிட்ட உட்டுப்போட்டு, கூடா வந்துருப்பம் பாருங்க?!”
“அவிங்க அப்பன், திடீல்ன்னு ஆடு வாங்கப் போகோணும், நீயுமு, கூட வரணோமுன்னு கையோட கூட்டிட்டிப் போனதுல, போட்ட்து போட்டபடி போட்டுட்டுப் போயிட்டன்ஞ் செங்கமலம்!”
“ச்சேரி செரிங்கோ!”
”செரீ, நின்னுட்டே பேசிட்டு இருக்காட்டீ என்னோ? இப்படிக் குக்கு, நான் வாறன்!” என்று சொல்லிவிட்டு உள்ளே போன பழமையின் தாயானவள் வெங்காயம் கிட்த்திய முறத்தோடு வந்து வாசலில் அமர, இருவருமாய்ப் பழமைபேச ஆரம்பித்து விட்டார்கள்.
தாயானவள் பேச்சு பேச்சாய் இருக்க, ஆடுகளை அடைத்து விட்டு வரும் தகப்பனுக்குச் சூடாய்ச் சமைத்து வைக்கும் பொருட்டு, வெங்காயத்தில் இருந்து தோல் உரிக்கும் லாவகத்தைப் பார்த்து இரசித்தவனாய் பழமைபேசியும் அருகில். தன் அன்னையின் மடியில் உட்கார்ந்து கொண்டு, அன்னையின் மடியில் இருந்து பெயர மாட்டேன் என்கிற பாங்கில் தங்கவேலன்.
நத்தக்காடையூர் பொடாரப்பன் கோயிலில் மொட்டை அடிப்பதற்க்காய் வளர்ந்திருந்த நீண்ட முடியுடனும், கன்னக் குழியழகோடும் இருந்த தங்கவேலனைச் சடையப்ப வள்ளல் என்றே பழமைபேசி விளிப்பான். அவனது நிலையிலிருந்து, அவனை மாற்றித் தன் வழிக்குக் கொண்டுவரும் பொருட்டு, வீட்டினுள் சென்று, தனது அமுச்சி ஊரான லெட்சுமாபுரம் திருவிழாவின் போது வாங்கிய மொசப்பந்தை எடுத்து வந்தான் பழமைபேசி.
தங்கவேலன் கவனத்தை ஈர்க்கும்படியாய், அந்த மொசப்பந்தினை இங்குமங்கும் உருட்ட, ஃகிஃகி என்று பகர்ந்தவனாய் மெள்ள மெள்ள மனம் மாறி, முதலில் எழுந்து நின்றான் மழலைச் சிறுவன் தங்கவேலன். வேண்டுமென்றே, பந்தைத் தவறவிட்டவனாய், தங்கவேலன் நிற்க்குமிடத்துப் பந்தை நழுவவிட்டான் பழமை.
‘அஃபிச்சீ’ என்று சிருங்காரித்து, பின் புளகாங்கிதம் பெருக்கிடப் பந்தைப் பிடித்து, பின்னர் அந்த பிஞ்சுக்கையால் உதறினான் தங்கவேலன். வெகுபெரியவன் போன்றதொரு தோரணையோடு புன்முறுவலிட்டுக் கொண்டான், வெற்றி பெற்ற உவகையுடன் பாலகன் பழமைபேசி.
வாசலின் ஒரு கோடியில் நின்று கொண்டு தங்கவேலனை நோக்கிப் பந்தை இவன் உருட்ட, அவன் அதை திருப்பி இவனை நோக்கி உருட்ட, கள்ளங்கபடமில்லாச் சிரிப்புடன் இருவரும் மரத்தடியில் ஓடியாடும் அணிற்ப் பிள்ளைகளாய். போகிற போக்கில் பழமைபேசி உற்சாகம் உற்றவனாய்ப் பாட, அவன் சொல்லுவதை தங்கவேலனும் மழலையில் பின்குரலிட்டுக் கொண்டான்.
“பந்தாடம்மா பந்தாடு!’
“ஃபண்டாடம்மா ஃபண்டாடு!
“அக்கம்பக்கம் பாத்து பந்தாடு!”
“அக்குபக்கு வாத்து ஃபண்டாடு!”
“பந்தாடம்மா பந்தாடு!”
“ஃபண்டாடம்மா ஃபண்டாடு”
“குதிச்சுக் குதிச்சுப் பந்தாடு”
“குய்ச்சு குய்ச்சுப் பண்டாடு”
இப்படியாக இருவரும் சிறிது நேரம் வாயில் வந்ததைச் சொல்லிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். களைப்பு தலைகாட்டியதும், இருவரும் திரும்ப வந்து த்த்தம் அன்னையர் மடியில் தஞ்சம் புகுந்தார்கள். பழமைபேசி தனது அன்னையின் மடியில், தனது தலையைக் கிடத்தியதும், மயிலிறகின் பீலிகையில் துவள்வது போல உணர்ந்தான். தாயானவளுக்கோ, பிரிந்த குஞ்சு இறகுக்குள் புகுந்த உணர்வு மேலிட்டது.
தொப்புள்க் கொடி அறுபடும் போது, முதல் பிரிவு! வீட்டைச் சுற்றி வலம் வரும் குழந்தை, முழுநேரப் பள்ளிக்குச் செல்லும் அந்த முதல்நாள் இரண்டாம் பிரிவு! பதின்ம வயதில், படிப்பு, வேலை இப்படியாக ஏதோவொன்றிற்கு மாற்று இருப்பிடம் நாடிச் செல்லும் நாள் மூன்றாவது பிரிவு! இந்த மானுடம்பு மண்ணுக்கு இரையாகும் நாளோ, இறுதிப் பிரிவாகிறது!
இப்படியான பிரிவுகளை வெல்லும் படியான காலச்சுவடுகள், அழியாத நினைவுகளாய், சூட்சுமமாய், எக்காலத்தும் ஒலிக்கும் ரீங்காரமாய், அயர்வுக்கு ஏற்ற மாமருந்தாய்த் தன்னுள் விதைக்கப்படுவது உணராமல், மதியின் பாலொளி தண்மிக்க, வெளியில் வியாபித்த விண்மீன்கள் சீராட்ட, தாயின்மடி தாலாட்ட, நித்திரையின் ஆதிக்கத்தில் கட்டுண்டு போனான் பழமைபேசி.
4/23/2009
அமெரிக்காவின், ’அலேக்’ அண்டவெளி ஓடம்!
(மூலம்: மின்னஞ்சல்)
இப்ப, ஊர்வழில ’அலேக்கா’த் தூக்கிட்டான்றாங்க. அலாக்காத் தூக்கிட்டுப் போயிடுச்சுங்றாங்க. அங்கவாரு, அலாக்காப் போவுது பாருங்கறாங்க... அதென்ன இந்த அலேக்கா? இஃகிஃகி!
’அலேக்கா’ ’அலேகம்’ன்னு சொல்லிச் சொல்றதுக்கு, இலகுவாக காற்றில் பறக்கவல்ல பனை இலை, இலகுவாக மேலோங்குகிற மணற்துகள் இப்படியானதுங்களாம். அதுல இருந்து, இலகுவா மேல போற எல்லாத்துக்கும் வந்தது அலேக், அலாக் அப்படீங்ற வழக்கு. இஃகிஃகி!!
4/21/2009
டேய், ஒன்னும் பயப்படாத!
“அம்மா, அப்பன் எப்ப வரும்?”
“ஆடுகளைக் கொண்டு போயிச் சாளையில நிறுத்திப் போட்டு, பொள்ளாச்சி வண்டி இராசூசு வந்துட்டுப் போறதுக்குள்ள வந்துரும்டா, நீ எங்க போற?”
“அம்மா, நான் பெருமாளு அவிக ஊட்டுக்குப் போயிட்டு வாறம்மா!”
“செரி, வேற எங்கயும் போயிராத கண்ணூ!”
“செரிம்மா!”
பெருமாளு வீடு பழமையின் வீட்டில் இருந்து கூப்பிடு தூரம், இவனது வீட்டுப் பொடக்காளி வழியாக பின்புற வீதியில் உள்ள அவர்கள் வீட்டிற்குச் செல்கிறான். அவ்ர்கள் நெசவாளர்கள். பெருமாளு, அவன் சகோதரன் தேவராசு, அவனுடைய தந்தை தொட்டண்ணன், சித்தப்பா சிக்கண்ணன், தாய் சரசுவதி, உறவினர் பையன் கோயிந்தன் என எப்போதும் ஒரு கூட்டம் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டே இருப்பார்கள்.
தொட்டண்ணன் என்றால் பெரியண்ணன் என்றும், சிக்கண்ணன் என்றால் இளைய அண்ணன் என்று கன்னடத்தில் இருந்து மொழியாக்கம் செய்து, அந்த விபரத்தை பெருமாளு ஏற்கனவே பாலகன் பழமைபேசிக்கு சொல்லியும் இருந்தான். பழமைபேசிக்கு, பெருமாளு வீட்டில் இருப்பது என்றால் கொள்ளை ஆசை.
இரு தறிக்குழிகள் இருக்கும். தொட்டண்ணன், சிக்கண்ணன், கோயிந்து, இவர்களில் யாராவது இருவர் தறிக்குழியில் அமர்ந்து நெய்து கொண்டிருப்பார்கள். தறி என்றும் நிற்பது என்பது கிடையாது. சதா சர்வகாலமும் ‘ச்சடக், டடக்’ என்று இசைத்துக் கொண்டே இருக்கும். தறியின், பாவுச் சட்டத்திலிருந்து நாலாயிரம் நூலிழைகள் புறப்பட்டு, அவையாவும் மறு பக்கத்திலிருக்கும் உருளையில் சுற்றப்பட்டு இருக்கும். இரண்டாயிரம் இழைகள் மேல்ப் பாளமாகவும், இரண்டாயிரம் இழைகள் கீழ்ப் பாளமாக்வும் இருக்கும்.
இந்த இரண்டு பாளங்களுக்கும் இடையில், ஊடுநூலாக நாடாவைக் குறுக்கே செலுத்தியும், மேல் உள்ள பாளம் கீழாகவும், கீழ்ப்பாளம் மேலாகவும் ஒரே நேரத்தில் இயங்கி, தார்க்கதிர் ஓடினால் துணி உருப் பெற்று விடும். பாலகன் பழமைபேசிக்கு, கைத்தறியில் அவர்கள் கால்கள் கொண்டு விசையை இயக்குவதையும், கைகளால் நாடாவை இங்குமங்கும் இயக்குவதையும் பார்க்கப் புரியாத புதிராக இருக்கும். நூல் அறுந்து போகும் நேரத்தில், கைகளால் பாவு பிணைப்பதையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருப்பான்.
தறிக்கூடத்தில் இருந்து வெளியே வந்தால் திண்ணையில், பெருமாளுவின் அம்மா சரசுவதியக்கா எப்போதும் நூல்ச் சுற்றில் இருந்து கழி சுற்றுவதும், இராட்டை கொண்டு கழியிலிருந்து தார்க்குச்சி சுற்றுவதுமாக இருப்பதையும், வைத்த கண் பிறழாது பார்த்துக் கொண்டு இருப்பான். தேவராசு சுற்றினால் மணிக்கு 30 தார் சுற்றுவான். இவன் அருகில் அமர்ந்து அதையெல்லாம் பார்த்துக் கொண்டே அளவளாவிக் கொண்டு இருப்பான்.
தார்க்குச்சியை நாடாவில் இட்டு, அதிலுள்ள நுண்துளை வழியாக வாயினால் உறிஞ்சி இழுக்கும் போது, ‘சூ’ என ஒரு ஒலிச்சிந்தல் மேலிடும். அது மேலிடும் போதெல்லாம், வினோதமாய்ப் பார்ப்பான் பாலகன் பழமைபேசி. வாரம் ஒருமுறை, நெகமத்தில் இருந்து வாங்கி வரும் பாவுநூலைக் கஞ்சியிட்டு பதப்படுத்துவார்கள். அப்போது பள்ளிக்கூட மைதானத்துக்கு அவர்களுடன் சென்று, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வேடிக்கை பார்க்கும் பழக்கம் இருந்தது.
பெருமாளு, தேவராசு இருவரும் அவ்வப்போது இராட்டையைக் இவன் கையில் கொடுப்பதும் உண்டு. இன்றும் அவ்வாறே, பழமையும் தார் சுற்றிக் கொண்டிருந்தான். திடீரென, பின்னால் இருக்கும் அறையிலிருந்து, “ஐயோ பாம்பு, பாவுக்கஞ்சி போடறதுக்கு வெச்சிருந்த நூல்க்கத்தைல பாம்பு!” என்று அலறினாள் சரசுவதியக்கா.
கண்ணிமைக்கும் நேரத்தில் ஊரே கூடியது. பின்புற அறைகளில் மின்விளக்கு இருந்திருக்கவில்லை. யாரோ கொண்டு வந்த கை மின்விளக்கில் பார்க்க அது கண்களுக்கு அகப்படவில்லை.
“யாரப்பா அங்க, அதெல்லாம் நெம்பக் கடினமப்பா தேடி அடிக்கிறது!”
“என்னுங்க பண்ணுறது? அப்படியே உட முடியுமா புள்ளை குட்டி இருக்குற எடத்துல?”
”ஏ என்னப்பா பேசுறீங்க, சித்த யாருனாச்சிம் போயி மாயனைக் கூட்டிட்டு வாங்க! அவன் வந்து புடிச்சிட்டுப் போறான், என்ன நாஞ்சொல்றது?”
“ஆமா, ஆள் உட்டுக் கூட்டியாறச் சொல்லுங்க! சிக்கா போடா, போயிக் கூட்டியாடா!”
மாயன் கையில், மழைக்காகித நெகிழிக் கோணியோடும் மகுடியோடும் வந்து விட்டான் உடனே. மாயன் அந்தப் பகுதியில் பாம்பு பிடிக்கும் பிரபலம்.
”சித்த அல்லாரும் வெலகி நில்லுங்க!”
மகுடியால் மெதுவாக இசைக்கத் துவங்கினான். முதல் ஐந்து நிமிடங்களில் ஒன்றும் நடக்கவில்லை. அனைவரும் பொறுமை இழந்ததை உணர்ந்த மாயன், யாரையும் பேச வேண்டாம் என்று இடதுகையால் சைகையில் பேசினான். அவன் சொல்லி ஓரிரு நிமிடங்களில், எங்கிருந்து வந்தன என்றே தெரியவில்லை, இரண்டு அரவுகள் இசைக்கு நர்த்தனம் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பாலகனுக்கு உடலெல்லாம் நடுங்கியது. பெருமாளு, தேவராசு, பழமை மூவரும் அடுத்தவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டு நடப்பதறியாது பார்த்துக் கொண்டிருந்தனர்.
மாயன் இலாவகமாக, இசைத்துக் கொண்டே நெகிழிப் பையை விரித்துப் பிடிக்க அவை இசையின் மயக்கத்தில் தஞ்சம் புகுந்தன அந்த பைக்குள்ளாக. மாயன் பையைக் கவனமாக இறுகக் கட்டி, பின்னர் தான் கொண்டு வந்திருந்த இரும்புத்தடியை அதன் மீது வைத்த பின்னர், ஊராரை வெற்றிப் பெருமிதத்தோடு நிமிர்ந்து பார்த்தான்.
“சரசூ, ம்ம், மாயனுக்கு குடுக்க வேண்டிய ஒரு படி அரிசியைக் குடுத்தனுப்பு!”, என்றாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி. பாம்பு பிடித்தவனுக்கு ஒரு படி அரிசி என்ற ஊர் வழக்கை ஆமோதிப்பது போல் கூட்டத்தினரும்!
“ம்ம்... எங்க வீட்ல, குடுக்குற அளவுக்கு அரிசி மொடாவுல இல்லீங்களே!”
“அதுக்கென்ன சரசூ பண்ணுறது? குடுக்குற முறையச் செய்யாமப் போயி, ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிடப் போகுது?”
“ம்ம்... கழுவு நூல்ல நூத்த துண்டு வேணா இருக்கு, யாராவது அதை இரவிக்கை தெக்கிறதுக்கு வாங்கிட்டு, படி அரிசியை மாயனுக்கு குடுத்தனுப்புங்க! அதான் இப்பத்திக்கு எங்கட்ட இருக்குது வேலம்மக்கா!”
ஓரிரு நிமிடங்கள், நிசப்தம் நிலவியது. நிசப்தத்தைக் கலைப்பது போல், பாலகன் பழமைபேசியின் தாயார்,
“இந்தா சரசூ, நான் வேணுமின்னா ஊட்டுக்குப் போயி ஒரு படி அரிசியை தேவங்கிட்டக் குறியாப்பாக் குடுத்து அனுப்புறேன். வாடா தேவா, கூட வருவியாமா?” என்று சொல்லிவிட்டு, பழமையின் கையையும் பற்றிக் கொண்டு வீடு நோக்கி நகரவும், அதைப் பார்த்த பெருமாளு நன்றியுணர்வோடு ஓடி வந்து, அவனிடம் இருந்த முள்ளூசி, காதூசி, இடுக்கி ஆகியவற்றைக் கொண்டிருந்த அந்த வளையத்தை, யாரும் பார்க்காத நேரத்தில் பழமைபேசியின் கால்ச்சட்டைப் பையில் போட்டுவிட்டுச் சொன்னான், ”டேய், ஒன்னும் பயப்படாத!”.
4/19/2009
அய்ய், அம்மா வந்துட்டா!
ஊரின் பின்புறம் வழியாக உள்நுழையும் போது முதலில் வருவது தெற்கு வீதி. அந்தத் தெற்கு வீதியில் நுழைந்ததுமே அந்த வளவில் உள்ள மிட்டாய்க்காரப் பாட்டியின் கூப்பாடு கேட்கிறது. ஆம், அந்தப் பெண்மணி, ஊரில் உள்ள துவக்கப் பள்ளியின் முன்பாக மிட்டாய், மற்றும் சிறுதீன்கள் விற்கும் பெண்மணி. இவன் அவ்வப்போது அந்த பாட்டியிடம் தேன்மிட்டாய் மற்றும் இலந்தவடை வாங்குவது உண்டு. ஆதலால் பாட்டியின் குரல் அவனுக்கு வெகு பரிச்சயமானதுதான். அந்தக் குரலைக் கேட்டவாறே வீதியில் நுழைகிறான் சிறுவன் பழமைபேசி.
தாரா தாரா தண்ணிக்குள்ள
தவள ரெண்டும் பொந்துக்குள்ள
நேத்து வெச்ச கொட்டாச்சி
நெய்ய ஊத்தி தின்னாச்சி
குத்தாலத்துக் குரங்கே
கூரைய விட்டு எறங்கே! ஏய்
கூரைய விட்டு எறங்கே!
வெளிச்சம் மங்கி, இருள் மெதுவாக வியாபிக்க ஆரம்பித்திருக்கும் வேளையில், வீட்டுப் பிறவடையில் மேய்ந்து கொண்டிருந்த கோழி மற்றும் அதன் குஞ்சுகளை அடைக்க முயற்சித்து, அது குடிசையின் கூரையின் மேல் போய் நின்று கொள்ளவே, அதைப் பார்த்து இப்படிக் கூப்பாடு போடுகிறாள் அவள். அதைப் பார்த்த பழமைபேசி,
“பாட்டி, என்ன கோழியப் போயி குரங்கேன்னு சொல்றீங்க. நான் தொரத்துறேன், நீங்க புடீங்க!”
“கண்ணூ பழமை, வாங்க இராசா, சித்த அந்தப் பக்கம் போயி அதை முடுக்கு சாமீ!”
பழமை அந்தப் பக்கம் இருந்து விரட்டி வர, இவள் இலாவகமாய்க் கூடையால் மூடி விடுகிறாள்.
“கண்ணூ, இனி அந்தக் குஞ்சுகளையும் புடிச்சுப் போடோணும்!”
“பாட்டீ, நாம் போகோணும். அம்மா சந்தையில இருந்து வாற நேரமாச்சு. பொழுது உழுகுறதுக்குள்ள ஊட்ல இருக்காட்டி திட்டும் பாட்டி!”
“செரிச் செரி, இதுகளை நாம் பாத்துகுறேன், நீ பதனமாப் போயி சேரு இராசா!” என்று சொல்லிவிட்டு, மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள்.
இதுகளைப் புடிக்க எனக்கு ஒரு மாமாங்கம்!
இந்தப் பயபுள்ளைக ஊடு திலும்ப ஒரு மாமாங்கம்!!
இப்படியாக இப்போது தன்வீட்டாரை ஏச ஆரம்பித்தாள் அந்த பாட்டி. சிறுவன் பழமைபேசி அங்கிருந்து கிளம்பி, தென் தெருவில் இருந்து அவன் வீடு இருக்கும் தெருவான தலைவாசல்த் தெருவுக்குள் நுழைய, அவனது சினேகிதன் அப்பாசாமி எதிர்ப்பட்டான்.
“டே பழமை, எங்கடா போன? நாங்கெல்லாம் தெள்ளு வெளையாடுனம் உன்னியத்தாங் காணம்!”
“நான் எங்கு சாளைக்குப் போயிட்டு வாறன்டா அப்பாசாமீ!”
“நீயி எங்கூடப் பழமா, டூவா??”
“ஏன்டா இப்பிடிக் கேக்குறே?”
“ஆமாடா, எனக்குமு பெருமாளுக்குமு சண்டை வந்துருச்சுடா! அதான் நீ அவங்கட்சியா? எங்கட்சியா? சொல்றா, நீ எங்கூடப் பழமா, டூவா?? பழமுன்னா பட்டாம்பூச்சி புடிக்கிறதுக்கு நாளைக்கு உங்கூட வருவேன்”
“பழந்தான்டா, நான் எங்கூட்டுக்குப் போகோணுன்டா...”
“அப்ப நீ சத்தியம் பண்ணு!”
அவனது வலது கையில், இவனது வலது கையை ஒப்புதல் அளித்தபடியே சொல்கிறான்,
“சத்தியமா உங்கூடப் பழம்!”
“பாத்தியா?! நீ அசத்தியமான்னு சொல்ற பாரு!!”
“இல்லீடா, நெசமாலுமேப் பழந்தான், நாம்போகோணுந் தள்றா!”
தெருவின் மேல்புறத்துல் இருந்து, வீடு நோக்கி வந்து கொண்டிருக்கிறான். தாயானவள் சந்தையில் இருந்து வந்திருப்பாளா? இன்னும் இல்லையா?? என்னவெல்லாம் வாங்கி வந்திருப்பாள்? வாங்கப்போன ஆடுகளும் வீடு வந்து சேர்ந்திருக்குமா, அல்லது தகப்பன் தோட்டத்துச் சாளைக்கே ஓட்டிச் சென்றிருப்பாரா? இவ்வாறு பலவிதமான கேள்விகளுடன்! தனது வீட்டு எல்லையை நெருங்குவதற்கு முன்பே மோப்பம் பிடித்து விட்டான் பாலகன் பழமைபேசி.
கண்களை நன்கு கறுப்புத் துணியால் கட்டி, இடமாகப் பதினாறு சுற்றும், வலமாகப் பதினாறு சுற்றும் நன்கு வேகமாக சுற்றி விடப்பட்டு, பின்னர் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு போய் அந்த வீட்டின் எந்த இடத்தில் விட்டாலும், அந்த இடத்தைக் கண்டுபிடிக்க வல்லவன் சிறுவன் பழமைபேசி. அந்த சூட்சுமம் வேறொன்றுமல்ல, வீட்டின் வாசம்தான் காரணம்.
பிறவடையில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்கு மெலிதான நீச்சு வாசம். திண்ணைக்கு, முன்வாசலின் ஓரத்தில் பெரியவர்கள் துப்பும் வெற்றிலை பாக்கு எச்சிலின் வாசம். பிறவடையின் வலதுபுறத்தில், வறட்டி மற்றும் விறகுகளின் மக்கல் வாசம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் இருக்கும் கொட்டுப் பருத்தியின் வாசம். அடுத்த அறையில், நுவாக்ரான், சிம்புசு, மற்றும் மெட்டாஃபர் மாவு மருந்து வாசம். கூடவே மருந்து தெளிப்பானின் கல்நெய் வாசம்.
நடுவில் இருக்கும் தொட்டியில், மழைநீர் சேமித்து வைக்கப்படும் சால் மற்றும் கொப்பரையில் இருக்கும் மழைநீர் வாசம். அடுத்த பக்கத்தில், சாமி படங்களும், அதனருகே இருக்கும் பழனி சித்தனாதன் விபூதி வாசம். உள்ளறைக்கும், தொட்டியின் முற்றத்திற்கும் இடையில் உள்ள சுவரில் மாட்டியிருக்கும் தூக்குப் பலகையில் தன் அம்மாவின் சாந்துப் பொட்டு அடிக்கடி சிந்துண்டு போனதில் சாந்துப் பொட்டு வாசம், உள்ளறையில் பத்திரமாய் பதுக்கப்பட்டு இருக்கும் வாழைப்பழச் சீப்புகளின் வாசம்.
கிழக்கு மூலையில் இருக்கும் சமையலறையின் நுழைவில் உள்ள உறியில் இருக்கும் மோர் மற்றும் வெண்ணெயின் புளிப்பு வாசம். அதையும் தாண்டிப் போனால், அடுப்பங் கரையில் சாம்பல் வாசம். அதற்கு வலப்புறம் பொருட்கள் இருக்கும் இடத்திலிருந்து அஞ்சலைப் பெட்டிக்கே உரிய அந்த வாசம். குளியலறையில் சீகக்காய்ப் பொடி வாசம்.
புறக் கொல்லைக்கு வந்த உடனே, தவுடு புண்ணாக்கு கழிநீர் கொண்ட தாழியின் வாசம். அடுத்த புறத்தில் கட்டுத்தரையின் சாண வாசம். புறக்கொல்லையின் கோடியில் குப்பைமேட்டு வாசம். இத்தனை வாசங்களையும் கடந்து பாலகன் பழமைபேசிக்கு அகப்பட்டது வேறுவாசம். அதையுணர்ந்த அவன் போட்டுக் கொண்டான் ஒரு குதி, ’அய்ய், அம்மா வந்துட்டா’ என்று!
”அம்மா, எனக்கென்னமா வாங்கியாந்த?”
“இராசூ, கன்ணூ, பழமை வாடா, வந்து கால்மொகங் கழுவு வா!”
அவசர கதியில் பிறவடையில் இருக்கும் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து கை, கால் முகம் கழுவிய பின்னர், நேராக தன் தாயிடம் வந்து, அகப்பட்ட அவளது சேலையின் ஒரு கொங்கைக் கொண்டு முகம் மட்டும் துடைத்துக் கொண்டான் பாலகன்.
“அம்மா, என்னெல்லாம் வாங்கியாந்த காமி!”
“இர்றா, இர்றா! ஆமா, சாளைக்குப் போனியே, அப்பத்தா என்ன சொல்ச்சு?”
“அப்பத்தா சிக்கநூத்து போயிட்டு இன்னும் வருலை. நீ என்ன வாங்கியாந்த, குடும்மா!”
இவனது அலப்பறையைத் தாங்காது, தாய் அந்த மக்கிரியில் இருக்கும் தூக்குப் போசியைத் திறந்து, தேனான அந்த பலாச் சுளைகளைத் தட்டில் வைக்க ஆரம்பித்தாள்!
4/18/2009
பாங்கா இருந்துக்கடா!
மதிய உணவு உண்டபின் தம் வயல்வெளிக்கு வந்து பேச்சியுடன் பொழுதைக் கழித்தவன், ஊருக்குள் இருக்கும் வீடு திரும்பும் வேளையாகி ஆகிவிட்டபடியால், ஒத்தைக் கால்த் தடம் வழியாக, ஊர் செல்லும் இட்டேரிக்கு பேச்சி முன் செல்ல இவன் பின் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறான். செல்லும் வழியில் இருக்கும் தம் பெரியப்பாவின் சாளையைக் கடக்கும் வேளையில்,
“கண்ணூ பழமை, வந்துட்டு சாளைக்கு வராமயே போறியே? வா, வந்து காப்பித் தண்ணியாவது குடிச்சிட்டுப் போவியாமா?” என்கிறாள் அவனுடைய பெரியம்மா.
“இல்ல பெரியம்மா, நான் ஊட்டுக்குப் போகோணும், பொழுது உழுந்திட்டு இருக்கு பாரு!”
“அப்பத்தா வந்துருவாங்க கண்ணூ, இங்கியே இருக்குறது?!”
“அம்மா, ஊட்டுக்கே ராத்திரிப் படுக்கைக்கு வரச் சொல்லியிருக்கு பெரீம்மா!”
“செரி அப்ப, தடம் வழியில யாருன்னா வழுக்குவாலுக வந்தா அவிங்களோட பழமை பேசாம, பெராக்குப் பாக்காம, நேரங்காலமா ஊடு போயிச் சேரோணும், செரியா?”
”செரீங் பெரீம்மா, நாம் போயிட்டு வாறனுங்க அப்ப!” என்று சொல்லி விட்டு நடையைத் தொடர்கிறான்.
சிறுகால்த் தடத்திலிருந்து இட்டேரியை அடைந்து, இட்டேரியில் நடந்து செல்கிறான் பாலகன் பழமைபேசி. பேச்சியும் உடன் வருவதில் அவனுக்கு ஆறாம்மேட்டைக் கடப்பதில் எந்தத் தயக்கமும் இருந்திருக்கவில்லை வீடு திரும்புகையில். உடன்வரும் பேச்சியும், இட்டேரியில் புல், புதர், செத்தை கண்ட இடங்களிலெல்லாம், அவற்றின் மீது பின்னங்கால்களில் உள்ள இடதுகாலைத் தூக்கியபடி சிறிதாய்ச் சிறுநீர் கழிப்பதும், பின்பு ஓடி வந்து இவனுடன் சேர்ந்து கொள்வதுமாக உடன் வந்து கொண்டிருக்கிறது.
பேச்சியின் இந்த சிறுநீர் கழிக்கும் செயல் கண்ட பாலகன் பழமைபேசி, தன் அப்பாருடன் நடைபயணமாக மாலை கோயில் சென்றபொழுது, பேச்சி ஏன் இப்படி உடன் வரும் போதெல்லாம் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறது என்பதைப் பற்றி அளவளாவியதை நினைவு கூர்ந்து கொள்கிறான்.
”அப்பாரு, ஏன் பேச்சி அடிக்கொருக்கா சொலுக்கு மல்லு ஊத்திட்டே வாறானுங்க?”
“அதா கண்ணூ. நாம இப்ப பெதப்பம்பட்டிக்கு பக்கத்துல இருக்குற ஆல்கொண்ட மாலை கோயிலுக்கு போயிட்டு இருக்குறமல்லோ?”
“ஆமாங்கோ!”
“அப்ப, நாமகீன அவனை உட்டுப் போட்டு எங்கனாச்சும் போயிட்டோம்ன்னு வையி, அவந் தோட்டத்துக்கு திரும்பி வரோணுமல்லோ?”
“ஆமாங்!”
“அதாங்கண்ணூ, திரும்பிப் போற தடம் மறக்காம இருக்குறதுக்கு ஒன்னுக்கு ஊத்திட்டே வாறான்!”
“என்னுங்க அப்பாரு... சொலுக்கு மல்லு இப்பிடி ஊத்திட்டே வந்தா தடமெப்பிடி தெரியுமுங்கோ?”
“அதா, அது வந்து இராசு, நாயிகளுக்கு மோப்பம் பிடிக்குற சத்தி இருக்குது பாரு, அதாங்காரணம். அதனோட ஒன்னுக்கை அது கண்டு பிடிச்சுப் போடும்!”
“செரீங்!”
“அப்ப, அதை மோப்பம் புடிச்சுட்டே வந்த வழியப் புடிச்சு சாளைக்குப் போயிச் சேந்துருமது!”
இந்த உரையாடலை நினைத்து அசைப்போட்டவாறே, ஆறாம் மேட்டையும் கடந்து, இட்டேரியிலிருந்து ஆற்றை யொட்டியுள்ள பிரதான மண்சாலைக்கு வந்து விட்டான் பழமைபேசி.
“டேய் பேச்சி, இன்னி நீ சாளைக்குப் போகுலாம், போடா!” என்று பேச்சியைத் திரும்பப் போகச் செல்கிறான். அது கேட்காது உடன்வரவே, கையை வீசிப் போகச் சொல்கிறான். அதைப் பார்த்த பேச்சி தன் நடையை நிறுத்தி விட்டு, அந்த நிலையிலேயே இவனை வாஞ்சையுடன் பார்த்தவாறு நின்று கொண்டது.
“நான் நாளா மக்காநேத்து வாறஞ் செரியா?” என்று விடை பெற்றுக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான் சிறுவன் பழமைபேசி. திடீரென ஏதோ நினைத்தவனாய், வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறான்; பார்த்துவிட்டு, மனம் நெகிழ்ந்து, கலங்கி, ஏதோ ஒன்றைத் தொலைத்தவனாய் உணர்கிறான். ஆம், பேச்சி, அதே இடத்தில் இவன் மறையும் வரை இருந்து வழி அனுப்பிவிட்டுச் செல்வோம் என்கிற நினைப்பில் நின்று கொண்டிருக்கிறது! அது கண்ட இவன் நெக்குருகிப் பாடுகிறான்,
மலைச் சந்தயில யிருந்து புதாடுக இன்னிக்கு வருமல்லோ?
இனி ஊட்டுக்கு நாம்போயிருவேன், நீ சாளைக்குப் போயிருடா!
இட்டேரியில கண்டதுந்திங்காமப் பாங்கா இருந்துக்கடா!!
அமெரிக்கா: மகப்பேறும் தந்தையின் கடமையும்!
உடனே, இப்ப இந்த முன்னேற்பாடு யாருக்குன்னு நீங்க கேட்ப்பீங்களே? எனக்காகவும் இருக்கலாம், நம்ம பதிவுக்கு வழமையா வர்ற தம்பிகளுக்காகவும் இருக்கலாம். இஃகிஃகி! நம்ம பதிவுல இருக்குற மறு மொழிகளைக் கவனமா படிச்சிட்டு வர்றவங்களுக்கு பற்றியம் தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். மகப்பேறு இனிதாய் அமைந்து, புதுவாழ்வு சிறக்க தொடர்புடையவர்கட்கு வாழ்த்துகள்!
என்னோட சீன நண்பன் பேசிட்டு இருக்கும் போது சொன்னான்,
“See, Bachelors are like Animals! They can move around wherever they want, because they have such flexibility.
Married guys with no children are like Plants! Still they can bend around, as they could still find bit flexibility.
Married guy with kid(s) is like a Rock! They can't find any flexibility, now I am like a Rock since seven years you know?!"
அதுக்காக நாம வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு போகாம இருக்க முடியுமா? மழலைச் செல்வமும், அந்த இனிமையும் வெகு அலாதிங்க! சரி, நம்ம மரபு என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம் வாங்க!
- குழந்தைக்கு பெயர் தேர்வு செய்யணும். இதுதாங்க இருக்குறதுலயே பெரிய வேலை. நான் பொதுப் பெயர், ஆண் பெயர், பெண் பெயர்ன்னு பலதும் கைவசம் வெச்சி, கடைசியா ஸ்ரீநிதின்னு அமைஞ்சது. எல்லாம் அவங்க முடிவுதான். இஃகிஃகி!
- மருத்துவமனையில மகப்பேறு பிரிவுக்கு ஒரு தடவை முன்கூட்டியே போய்ட்டு வந்திடணும். அவசரத்துல, போக வழி தடுமாற்றம் இல்லாம இருக்கும்.
- தள்ளுவண்டி(Stroller), இருக்கை (Car seat) வாங்கி வைக்கணும்.
- பருத்தி (cotton) யாலான துணிமணிகளா வாங்கி வைக்கணும், அந்த புதுப் பிறப்புக்கு.
- காலுக்கும், பருத்தித் துணியாலான பாத சொருகு (socks) வாங்கி வைக்கணும்.
- துண்டு, பால்புட்டி, வாங்குதுணின்னு தேவையான அத்துனையும் அப்பாமாரும் தெரிஞ்சி வெச்சிருக்கணும்.
- முக்கியமா, குழந்தைக்கு கீழ்ச்சரம் (diaper) மாத்த தெரிஞ்சி இருக்கணும். அது தானா வந்திரும், அது வேற விசயம்.
- துள்ளுதொட்டில் (bouncer) வாங்கி வைக்கணும்.
- அமெரிக்க கடவுச்சீட்டு வாங்கி வைக்க என்ன செயல்முறைன்னு முன்னாடியே தெரிஞ்சி வைக்கணும்.
- பிறப்புச் சான்றிதழ் வாங்குற முறை தெரிஞ்சி வைக்கணும்.
- இந்தியாவுக்கு OCI வாங்குற முறை தெரிஞ்சி வைக்கணும்.
- எப்பவும் புகைபடக் கருவி கையிலயே இருக்கணும். எடுக்கும் போது கொஞ்சம் தயக்கமாத்தான் இருக்கும். ஆனா, பின்னாள்ல பாக்க அவ்வளவு அருமையா இருக்கும். நல்ல பொறியாப் பாத்து ஒன்னு வாங்கி வையுங்க.
- காணொளிப் பொறியும் (video camera) தேவை.
- கடைசியா ஒன்னு, தங்கமணி செலுத்துற கவனிப்பை தவற விட்டுடாதீங்க. இப்ப விட்டா அப்புறம் எதுவும் கிடைக்காது இராசா! சொன்னாக் கேட்டுக்கோங்க!!
இதுக்கு மேலயும் எதனா விடுபட்டு இருந்தா, மக்கள் வந்து சொல்லாமலா போய்டுவாங்க? அன்புத் தம்பிமார் இனிமையான இந்தத் தருணத்தை மகிழ்வாய் கழிக்க வாழ்த்துவோமாக!
4/17/2009
வாய்க்கா மேடு!
“டே பேச்சி, வாடா வாய்க்கா மேட்டுக்கு போலாம்!”
பேச்சி அதற்கு ஆமோதித்தது போலவும், அதே நேரத்தில் பழமைபேசி செல்லப் போகிற வழியில், எட்டத்தில் குறுக்கிட்ட ஒரு பெருங் குழவியைப் பார்த்துக் குரைக்கவும் செய்தது. ’ஏய், என் மனதில் குடிகொள்ளும் பாலகன் வருவது உனக்கு கண்ணுக்குத் தெரியவில்லையா?’ என வினவியது போல் இருந்தது பேச்சியின் அந்தக் குரைப்பு.
சிறுவன் பழமைபேசிக்கு பேச்சியின் குரைப்பைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் பிடித்தது. புரிந்தும் புரியாதவன் போல், அவர்களது சாளைக்கு கிழபுறமாக ஓடிக் கொண்டிருக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு (PAP) கால்வாயை ஒட்டி இருக்கும் மேட்டிற்கு செல்ல ஆரம்பித்தான். அவன் வயலுக்கு வரும் போதெல்லாம், இந்தக் கால்வாயில் கரை புரண்டோடும் தண்ணீரைப் பார்க்க விழைவது வழமையான ஒன்று.
அவனுடைய அம்மாவோ, அப்பத்தாவோ இருந்தால் அவனை அங்கு செல்ல அனுமதிக்க மாட்டார்கள். இன்று இருவருமே வயலில் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு புறப்பட்டு விட்டான், திருமூர்த்தி மலை அணைக்கட்டில் இருந்து ஈரோடு மாவட்டம் வரை வளைந்து நெளிந்து பல ஊர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் நற்புனலைக் கண்டு இரசிக்க.
பேச்சியும் பாலகனும் கால்வாய் மேட்டினை அடையவும், எட்டத்தில் இருக்கும் கால்வாயின் மதகு இருக்கும் இடத்திலிருந்து ஒரு பெண் குரல் வெளிப் படுகிறது. அது கேட்டு, இவர்கள் வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு இருக்கும் வேலண்ணனும் பின்குரலில் பாடுகிறார்; இவர்கள் இருவரும் பாட, பழமைபேசி அதைக் கேட்டுக் கொண்டே மேட்டின் மீது ஏறுகிறான்.
உங்க தங்கச்சிலைய மச்சான்
சந்திக்க ஆசை இருக்குதுன்னா
சாயங்காலம் ஊர்க் கோயலடிக்கு
இருட்டுனாப்புறம் வந்திடவேணும்!
வாசப்படியில் வந்து நின்னு
காளை கனைச்சு நின்னா
எங்கிருந்தாலும் எழுந்து
வந்து நிக்க மாட்டாதோ?
காளையரைக் கண்டுநானு
ஓடோடி வந்து நின்னுருவேன்
ஊருசனம் பாத்து பொரளிபேச
ஒலை பத்திடாதோ?
அக்கரையில இருக்குறமீனே
அணில்கடியா கொய்யாவே
இந்தப்பொறம் வந்தியானா
இனிச்சகனி நாந்தருவேனே!
பாலகனுக்கு இந்தப் பாடலின் தர்க்கம் புரிந்திருக்கவில்லை. ஏதோ இருவர் பாடுகிறார்கள், நாமும் இவர்களோடு பாடினால் என்ன என எண்ணி, இவனும் மேம்போக்காக சொல்ல ஆரம்பித்தான்.
எங்கவாய்க்கா மேட்டுல நானு!
அக்கரையில பாடுறவங்க யாரு?
அட, மேட்டுமேல நிக்குறேன் பாரு!
இவனது குரலைக் கேட்டதும் இருவரும் பாடுவதை நிறுத்தி விட்டனர். இவனும் கால்வாயில் புரண்டு வரும் பெருக்கை இரசிக்க ஆரம்பித்தான். நீர் தளும்பி, குலுங்கி, அலங்கிச் செல்லும் காட்சியில் தன்னையே மறந்தான் பாலகன் பழமைபேசி. பேச்சியும், அந்தக் காட்சியில் ஒன்றிப் போனது. ஆனாலும் அவ்வப்போது துள்ளும் மீன்களைக் கண்டு, பேச்சி குரைத்தபடி இருந்தான்.
திருமூர்த்திமலை, பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துப் பட்டி, பாப்பநூத்து, மொடக்குப்பட்டி, குண்டலப்பட்டி, லெட்சுமாபுரம், கோலார்பட்டி, நெகமம், சர்க்கார் பாளையம், அரசூர் எனப் பல ஊர்கள் கண்டும், அந்த ஊர்களின் சிலபல சாமான்கள், கோழி, ஆட்டுக் குட்டிகள், சில நேரங்களில் மனித உடல்களும் மிதந்து வரும் இந்தக் கால்வாயில். அவற்றை எல்லாம் உன்னிப்பாய்க் கவனிப்பது பாலகன் பழமைபேசிக்கு மிகவும் பிடிக்கும். இப்படியாக நேரம் கழித்துக் கொண்டிருந்த பழமைபேசி, அக்கரையில் உள்ள சாலையில் பொள்ளாச்சிப் பேருந்து செல்வதைக் கண்டதும், நேரம் கடந்து விட்டதை எண்ணி மேட்டிலிருந்து கீழே உள்ள அவர்களது வயலுக்குத் திரும்பினான்.
அவன் இறங்கி வந்து பார்க்கும் போது, சாளைக்கு மேற்புறம் இருந்த பூவரச மரத்தடி சமீபம் நிறுத்தி இருந்த கட்டை வண்டியில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் வேலண்ணனும், பெரியப்பா பண்ணையில் வேலை பார்க்கும் தேவராசுவும். வேலண்ணன் தண்ணீர் பாய்ச்சும் வேலை முடிந்து, இப்போது என்னவோ செய்கிறார், அது என்னவெனப் போய்ப் பார்ப்போமே என்ற ஆவலில் பேச்சியுடன் நேராக பூவரச மரத்தடிக்குச் செல்கிறான் பழமைபேசி.
“அண்ணா, சக்கரத்தைக் கழ்ட்டி என்ன செய்யறீங்ண்ணா?”
“கண்ணூ, நாளைக்கு மண்ணடிக்கோணும், அதாங்கண்ணு வண்டிக்கு கீல் போட்டுட்டு இருக்குறம்!”, வேலண்ணன் பதிலளித்தார்.
“கீலுன்னா என்னுங்ண்ணா?”
“கீலுன்னா, துணியச் சிறு துண்டுகளாக் கிழிச்சி, அதுகளைக் கரிப்பொடி கலக்குன விளக்கெண்ணயில ஊற வெச்சி, அதைய அச்சுல சுத்துறது கண்ணூ. அப்பத்தான், அச்சுத் தேயாம நெம்ப நாளைக்கு வரும். இல்லீன்னா, அச்சு சீக்கிரத்துல முறுஞ்சு போயிருங் கண்ணூ!”
வண்டியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலில், குழந்தைகளுக்கே உரிய குணமான கேள்வி கேட்டுத் துளைக்கும் பாங்கில் ஆரம்பித்தான் பழமைபேசியும்.
“அப்புறம் இதென்னுங் அண்ணா?”
“இதுக்குப் பேரு பட்டா கண்ணூ, சக்கரத்துல வெளிய கனமா தகட்டுல இருக்குறது. அதையொட்டி இருக்குறது வட்டை. வட்டைக்கும் திகிரிக்கும் நடுப்புல இருக்குறதெல்லாம் ஆரம். இது அச்சாணி கண்ணூ!”
“அப்பிடீங்களா? இது என்னுங்ண்ணா?”
“கீழ நடுப்புல பெருசா இருக்குறதா? அது பார்ச்சட்டம். பார்ச் சட்ட்த்துக்கு கீழ அச்சத் தாங்கி இருக்குறது இருசு கண்ணு. பாரம் நெம்பப் போனா, இருசு முறிஞ்சு போயிருந் தெரியுமல்லோ? மேல, அல்லையில படல் கட்டுறதுக்கு இருக்குறது மொளக்குச்சிக!”
“முன்னாடி பெருசா இருக்குறது சட்டமுங்களா?”
“ஓ! அதா? அது ஏர்க்கால் கண்ணூ! ஏர்க்குச்சிக்கு அல்லையில ரெண்டு பக்கமும் இருக்குறது சவாரித் தப்பை. வண்டியை நெலத்துல ஊனுறதுக்கு மூக்காணி. மூக்காணிக்கு மேல எருதுகளைப் பூட்டுறதுக்கு நொகம். தாம்புக் கவுறுமு காண்டியுமு இருந்தா எருதுகளைப் பூட்டுலாம்!”
“அப்பிடீங்களா?”
“ஆமா கண்ணு, இன்னிக்கி இரவைக்கு சாளையிலயே இருக்கப் போறியா? ஊட்டுக்குப் போகோணுமா கண்ணு நீயி?”
“அம்மா, சாயந்தரம் அஞ்சு மணிக்கெல்லாம் வரச் சொல்லீருச்சுங்ண்ணா!”
”அப்ப நேரமாச்சு கண்ணூ... இருட்றதுக்கு முன்னாடியே போயிரு!”
“செரீங்ண்ணா, அப்ப நான் வாறேன்!”
பாலகன் பழமைபேசியும், வயல் நண்பன் பேச்சியும் பூவரச மரத்தடியிலிருந்து நகர்ந்து, அவனுடைய பெரியப்பா வயலின் வழியாக இட்டேரிக்குச் செல்லும் சிறுகால்த் தடத்தை நோக்கிச் சென்றார்கள். போகிற வழியில், அப்படியே ஒரு பூவரச இலையைப் பறித்து, நன்றாகச் சுருட்டி, சீட்டி அடிக்க ஒரு சீட்டி செய்து, ’ப்ப்பீ! ப்ப்பீ!!’ என்று ஊதிக் கொண்டே செல்கிறான்.
பேச்சியும், பழமைபேசி நடப்பதின் வேகத்துக்கு ஏற்ப, அவனுக்கு முன்பாக இட்டேரியை நோக்கிச் செல்கிறது! மாலை வேளை நெருங்கிக் கொண்டிருப்பதால், முன்னே செல்லும் பேச்சியின் நிழல் நீள நீளமாகத் தரையில் விழ, அதை வினோதமாகப் பார்த்துச் சிரிப்பதும், சீட்டி அடிப்பதுமாக பின்தொடர்ந்து செல்கிறான் பாலகன் பழமைபேசி.
4/16/2009
’பேச்சி’யுடன் ஒரு பொழுது!
எதிரில் ஓடி வந்த பேச்சி, வாலை வாலை ஆட்டியவாறு முகமலர்ச்சியாய் வந்த வேகம் குறையாமல் முன்னங் கால்களை முன்னீட்டி, பின்னங் கால்களில் சிறுவன் பழமைபேசியின் உயரத்திற்கு நின்று, தனது முன்னங் கால்கள் இரண்டையும் அவன் மேல் வாஞ்சையாய்ப் பதிக்க, இவன், “என்றா பேச்சி, என்னடா பண்ணிட்டு இருக்கே? அப்பாரோட ஒத்தைச் செருப்பை எங்கடா கொண்டு போயி ஒளிச்சு வெச்சே படுவா ராசுகோலு?” என்றான் சிரித்தபடியே.
பேச்சியும், நாக்கை வெளித் தள்ளிக் கொண்டு, மூச்சிரைத்தவாறு தலையை மேலும் கீழும் சில முறை அசைத்து விட்டு, குடுகுடுவென அருகில் இருந்த கம்பங் காட்டிற்குள் சென்று, கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஒத்தைச் செருப்பைக் கவ்வியவாறு வாலை ஆட்டிக் கொண்டு வந்து, குழைந்து நின்றது. இவனுக்கோ அது கண்டு, மட்டில்லாத மகிழ்ச்சி.
“அப்பாரய்யா! அப்பாரய்யா!! காணாமப் போன உங்க செருப்பைக் கொண்டாந்து குடுத்துட்டான் பேச்சி, உங்க செருப்பு கெடச்சிருச்சீ!” என்று கத்தியபடியே, அவனது வயலில் இருக்கும் இரட்டைச் சாய்ப்பு சாளையை நோக்கி ஓடினான். பேச்சியும் அவனுடன் ஓடியது. ஆனால் அங்கு அப்பாரய்யனைக் காணாமல் ஏமாற்றமுற்றான் பாலகன் பழமைபேசி. ”என்றா பேச்சி, அப்பாரய்யனைக் காணம்?” என வினவியபடியே, தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வேலனிடம் சென்றான்.
“ஏனுங்க எங்க அப்பாரய்யன்?”
“கண்ணூ, அப்பாரய்யன் சிக்கல்நூத்து போன அப்பத்தாவைக் கூட்டியாறதுக்கு நம்ம சவாரி வண்டீல மயிலைகளைப் பூட்டீட்டி போயிருக்காங்க கண்ணூ. இருட்டு கட்டுறதுக்குள்ள வாறமின்னு சொல்லிட்டுப் போனாங்க!”
“ம்ம்... நேத்தைக்கு ஊருக்குள்ள வந்த அப்பாரய்யன் ஒத்தைச் செருப்பை பேச்சி கொண்டு போய் எங்கயோ போட்டுட்டான்னு சொல்லுச்சு. நாங் கேட்டதுமே, பேச்சி போயிக் காட்டுக்குள்ள இருந்த செருப்பைக் கொண்டாந்து குடுத்துட்டானுங்ண்ணா!”
“அவன் செரியான குறும்பு கண்ணூ, வாய்க்கா மேட்டுல வாறவிங்க போறவிங்களை எல்லாம் கடிச்சிப் போடுறான்!”
“ஏண்டா பேச்சி அப்பிடியெல்லாம் பண்றே?”
“ப்ளொள், ப்ளொள்” என்று செல்லங் கொஞ்சியது பேச்சி.
“செரிச்செரி, வாடா சாளைக்கு போகுலாம்!”
“ப்ளொள்!”
“அண்ணா, நான் சாளைக்கு போயி பேச்சிக்கி சோறு போட்டுட்டு வாறன்!”
“செரி கண்ணூ, பாத்துப் போ, எல்லாம் இப்பத்தான் தண்ணி பாஞ்சி ஈரமாக் கெடக்குது!”
சிறுவன் பழமைபேசியும், செல்லப் பிராணியான பேச்சியும் வயக்காட்டில் இருந்த பொழிகளின் மீது ஓடுவதும், நடப்பதுமாக மீண்டும் சாளைக்கே திரும்பி வந்தார்கள். சாளை இரட்டைச் சாய்ப்பு கொண்டது, பக்கவாட்டில் கால்நடைகளுக்கு என ஒரு ஒத்தைச் சாய்ப்பும் இறக்கப்பட்டு இருக்கும். இவன் முன்வாசலுக்கு சென்று பார்க்கவே, முன்கதவு பூட்டப்பட்டு இருந்த்து. அது கண்டு திண்ணையின் மேல் ஏறி, மேலே உள்ள சட்ட்த்தில் வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்து, கதைவைத் திறந்து கொண்டு சாளைக்குள் சென்றான். ஆனால், பேச்சி மட்டும் வாயிற் படியிலேயே வாஞ்சையுடன் குழைந்து கொண்டு நின்றது.
உள்ளே சென்றவன், பேச்சிக்கென்று வழமையாக வைக்கப்பட்டிருக்கும் தூக்குப் போசியில் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான். அதில், சாமைச் சோறும், மோரும் கலந்த கூழ் இருந்தது கண்டு உற்சாகமடைந்து, தூக்குப் போசியை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். பேச்சியும் அது கண்டு துள்ளிக் குதித்தது. நேராக பக்கவாட்டில் இருந்த சாளைக்குள் சென்று, பேச்சிக்கென வைக்கப்பட்டு இருந்த தட்டில் சாமைக் கூழை ஊற்றி, “பேச்சி வாடா, வா!” என்றழைத்தான். பின், அவனுக்குப் பிடித்த அவனுடைய நுங்கு வண்டி அங்கு இருக்க்க் கண்டு, கவட்டிக் கோலால் அதை உருட்டி விளையாட ஆரம்பித்தான் பழமைபேசி.
பேச்சி, நாக்கால் நக்கி கூழைப் பருகுவதும், வாஞ்சையுடன் எசமானனின் அருகே வந்து வாலை ஆட்டிக் குழைவதும், மீண்டும் வந்து கூழைப் பருகுவதுமென இருந்தது. அதற்குப் பசியாறவும் வேண்டும், அதேவேளையில் வந்த எசமானனும் தோழனுமாய் ஆனவனுடனும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம்.
அது கண்டு, “டே பேச்சி, நான் உன்னிய உட்டுப் போட்டு எங்கியியும் போகுலடா, போ, பூராக் கூழும் இருந்து குடிச்சிட்டு வாடா!” என்றான் பழமைபேசி. ஆனாலும், அது இவனிடம் வந்து இரண்டு சுற்று சுற்றுவதும், பிறகு கூழ்க் குடிக்கப் போவதுமாகவே இருந்தது.
இவன் சாளைக்கு முன்னால் இருந்த களத்து மேட்டில், நுங்கு வண்டியை உருட்டி விளையாடுவதில் மும்முரமானான். களத்துமேடும், அதற்கேற்றாற்ப் போல் சாணத்தால் மெழுகி, வெகுசுத்தமாக இருந்தது. மனம் முழுக்க குதூகலமே குடிகொள்ள, தென்னை மற்றும் இலவம்பஞ்சு மரங்கள் அசைந்தாட, தென்றல் தவழ்ந்து வர, இயற்கையின் வெண்சாமர வீசலில் மனம் விட்டு, பாட ஆரம்பித்தான் பாலகன் பழமைபேசி.
வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
வெரசக்கூடி வேகம் போற வண்டி
மாமனுக்கு பீடிவாங்கப் போகும் வண்டி
மேடுபள்ளம் கடந்துநல்லாப் போகும் வண்டி
கல்லமுட்டா வாங்கநல்லாப் போகும் வண்டி
கவிட்டியால தள்ளநல்லாப் போகும் வண்டி
வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
வெரசக்கூடி வேகம் போற வண்டி
ஆத்தா பலகாரம் சுமக்கும் வண்டி
தோப்பு காயெல்லாம் சுமக்கும் வண்டி
நோம்பிக்கு சிக்கநூத்து போற வண்டி
மயிலைகூடப் போட்டி போடும் வண்டி
வண்டியின்னா வண்டி வேலூரு வண்டி
வெரசக்கூடி வேகம் போற வண்டி
வண்டி ஓட்டியதில் சலித்துப் போன சிறுவன் பழமைபேசி, தாகம் தணிக்க மீண்டும் சாளைக்குள் சென்றான். அவனது அப்பத்தா எப்போதும் வைத்திருக்கும் கம்பங்கூழ்ப் பானையைத் துழாவி, அதில் இருந்து கொஞ்சமாக கம்பந்தண்ணீரைச் சிறுதாழியில் ஊற்றி, அதில் சிறிதளவு உப்பும் கலந்து, பின்னர் திண்ணையில் அமர்ந்து மாந்தினான். பாலகன் பழமைபேசி மாந்தும் அழகினை வாலை ஆட்டியபடியே, கண் பிறழாமல் ஒரு விதமான லயிப்பில் ஆழ்ந்து, நெகிழ்ந்து, இரசித்துக் கொண்டு இருந்தது பேச்சி!
4/15/2009
ஆறாம்மேட்டுப் பேய்!
அந்த அச்சம் மேலிடக் காரணம், அவன் ஆறாம்மேடு கடந்துதான் அந்த சிறுகால்த் தடத்தை அடைந்தாக வேண்டும். ஆறாம்மேடு என்றால் பாலகனுக்கு ஒரே அச்சம். அவன், ஒரு நாள் அவனுடைய அப்பாருடன் வயலுக்கு வந்து கொண்டிருந்த போது, ஆர்வமிகுதியால் அவனுடைய அப்பாருடன் வினவினான்,
“அப்பாரு, ஏன் இந்த எடத்தை ஆறாம்மேடு, ஆறாம்மேடுன்னு சொல்லிச் சொல்றாங்க?”
“அதா, அது வந்து நம்மூரு மேக்கால வளவுல இருக்குற பெருமா கோயல்ல ஆறான், ஆறான்னு, ஆறுமுகம்ங்ற அன்னக் காவடி இருந்தான். அவன் ஊருக்குள்ள அன்னக்காவடி எடுத்து சோறுண்டுட்டு, ஊர்க் கோயலுகளுக்கு எல்லாம் சேவகம் செஞ்சிட்டு இருந்தான்.”
“அன்னக் காவடின்னா என்னுங்க அப்பாரு?”
“அதா, காவடி நொகத்துக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு குண்டாவுக, சங்கிலியில தொங்கிட்டு இருக்கும். அந்த சங்கிலியில மணியோசை சத்தம் வாற மாதர சலங்கை மணியெல்லாம் இருக்கும். அப்ப, ஆறான் ஊருக்குள்ள வரும்போது அந்த சத்தங்கேட்டு, ஊட்டை உட்டு வெளியில வந்து அவனுக்கு சோறு கஞ்சி ஊத்துவாங்க. அவனும், அந்த அன்னக்காவடியில இருக்குற குண்டாவுல அதை வாங்கி உண்டுட்டு பொழப்பு நடத்திட்டு வந்தான்!”
“செரீங்க அப்பாரு!”
”அப்பிடியிருக்க, அவன் ஒரு நாளு இந்த இட்டேரி வழியா பூரண்டா பாளையம் பரமசிவங் கோயலுக்கு போயிட்டு இருக்குறப்ப, திடீல்ன்னு இந்த எடத்துல நெஞ்சு வலி வந்து உசுரை உட்டுட்டான். அதுனால, இந்த எடத்துக்கு ஆறாம் மேடுன்னு பேரு வந்ததுடா இராசா!”
“அப்ப, ஆறானோட பேய் இங்க இருக்குமா அப்பாரு?”
“நீ தெகிரியமா இருடா...அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லடா கண்ணூ!”
இப்படியாக ஆறாம்மேட்டைத் தெரிந்து கொண்டதிலிருந்து இந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம், ஒரு வித அச்ச உணர்வுடனே செல்வான் பழமைபேசி. இன்றும் அவ்விதமாகவே, ஆறாம் மேட்டைக் கடந்து சிறுகால்த் தடம் வழியாக வயலுக்குள் நுழைந்தான். முதலில் வருவது, அவனுடைய பெரியப்பாவின் வயல்.
வயலுக்குள், ஒரு பெரிய வேம்பு மரம் இருக்கும். அந்த வேம்பு மரத்தடியில் நாட்ராயன் சாமியும், அந்த சாமிக்கு நேர் எதிரே ஒரு வேலும் நடப்பட்டு இருக்கும். அந்த மரத்தடியில், பெரியப்பா பண்ணையில் வேலை செய்யும் தேவராசுவின் மனைவி முத்துலட்சுமி தன்னுடைய குழந்தையை, அந்த வேப்பமரத்தில் கட்டியிருந்த தொட்டிலில் கிடத்தி தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தாள்.
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
சீராரும் பசுங்கிளியே தெவிட்டாத தெள்ளமுதே
நேராக உறங்கிலையோ நிறையன்பு ஊக்கிலையோ
ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ
இந்த பாடலையும் கேட்டவாறே, பாலகன் பழமைபேசி பெரியப்பாவின் வயலைக் கடந்து அவனது வயலுக்குள் செல்ல முற்பட்டான். அப்பொழுது, இவன் தலை தெரியக் கண்டதும், அவனுடைய தோட்டத்து நாய் பேச்சி ஒரே ஓட்டமும் பாய்ச்சலுமாய் இவனை நோக்கி வந்தது.
இவனுக்கு தன்னுடைய வயலுக்குள் வந்ததும் ஒரே குதூகலமும், பேச்சி வந்து கொண்டிருந்ததைப் பார்த்து, பிள்ளைப் பிறப்பு கண்ட தாய் போன்றதொரு உணர்வும் மேலிட்டது. அவனையறிமாலே, கீழ்க்கண்டவாறு கத்திக் கூச்சலிட்டான்,
ஆத்தைக் கடந்துவந்தேன், மேட்டைத் தாண்டிவந்தேன்
கம்பங்காடு பார்த்துவந்தேன், முத்தக்கா பாட்டு கேட்டுவந்தேன்
பெரியப்பங் களத்துமேட்டு, அலணு ரெண்டும் விரட்டிவந்தேன்
பாத்து வாரமல்லோ ஆச்சி!! வந்து தாவிக்கோடா பேச்சி!!
4/14/2009
இந்தாடா கள்ளிப்பழம்!
பள்ளம் படுகையில் தென்னந் தோப்பு இருப்பதற்கு அந்த ஆறே காரணம். அந்த ஊரில், வெயில் காலத்திலும் கூட இனிமையான தென்றல் வீசும். அதற்குக் காரணமும் அந்த காட்டாறுதான். அதில் பாயும் வெள்ளம் சத்து வாய்ந்த எருவை நாலாபுறமும் இருந்து எடுத்து வரும். இரு கரைகளிலும், தென்னை, மா, வேம்பு, ஆல மரங்கள் எனப் பலவகையான மரங்களைக் கொண்டு, எழிலாய் செழிப்பாய் எண்ணற்ற கதைகளை தன்னகத்தே கொண்டது அந்த உப்பாறு என்ற காட்டாறு. அது, வேலூரில் இருந்து, சிந்திலுப்பு, பூளவாடி, பெரியபட்டி, பப்பாளியூர் என்ற ஊர்கள் வழியாக வளைந்து நெளிந்து சென்று, இறுதியில் அமராவதியில் கலக்கிறது.
இந்த ஆற்றின் கரையோரம் சென்று கொண்டிருந்த பழமைபேசி, அவர்கள் வயலுக்குச் செல்லும் இட்டேரி வந்ததும், கரையில் இருந்து இடது புறமாகப் பிரிந்து, அந்த இட்டேரியில் நடந்து சென்று கொண்டிருந்தான். சென்று கொண்டிருக்கும் போது, அந்த இட்டேரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சின்னமுத்து பழமைபேசியைக் கண்டதும், உற்சாகம் உற்றவனாய் பேச ஆரம்பித்தான்.
”பழமை, என்னடா மத்தியான சோறுண்டுட்டுப் போறயாக்கூ?”
“ஆமாங்ண்ணா, நீங்க உண்டாச்சுங்களா?”
“இல்லை, எனக்கு எங்கக்கா சாந்தாமணி ஒரு மணி வண்டி கெழக்க போனதுங் கொண்டு வருவா!”
“சரீங்ண்ணா, அப்ப நான் போய்ட்டு வாறனுங்!”
“இர்றா, நான் ஒரு கதை சொல்லுறேன், கேட்டுட்டுப் போவியாமா?”
“சராங்கமா சொல்லுங்ண்ணா, நான் போகோணும்!”
“உன்ன மாதரத்தான், ஒரு பையன் அவிங்க தோட்டத்துக்கு போயிட்டு இருந்தானாமா. அப்போ, போற வழியில ஒரு மண்ணாங்கட்டி இருந்துச்சாமா. அதைப் பாத்து இந்த பையன் கேட்டான், மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி மழை வந்தா, நீ என்ன பண்ணேவேன்னு. அது சொல்ச்சாம், மழை வந்தா கரைஞ்சு போவேன்னு.
செரீன்னு கேட்டுட்டு மறுக்காவும் நடந்து போய்ட்டு இருந்தானாம். அப்ப, எச்செலை ஒன்னு போற வழில கெடந்துச்சாம். இவங் கேட்டானாம், எச்செலை, எச்செலை காத்தடிச்சா நீ என்ன பண்ணுவேன்னு. அது சொல்லுச்சாம், காத்தடிச்சா நான் பறந்ந்ந்து போயிடுவேன்னு.
செரீன்னு இதையுங் கேட்டுட்டு அந்த பையன் மறுக்காவும் நடந்து போய்ட்டு இருந்தானாம். அப்ப, ஒரு நாய்க்குட்டி ஒன்னு வாலை வாலை ஆட்டிட்டு, குழைஞ்சுட்டே இவங்கிட்ட வந்துச்சாம். அந்த நாய்கிட்டயும் இவங் கேட்டானாம், நாய்க்குட்டி நாய்க்குட்டி நீ என்ன பண்ணுவேன்னு. அதுக்கு அந்த நாய் என்ன சொல்லுச்சு தெரியுமாடா பழமை?”
“தெரிலீங்ளே, நீங்களே சொல்லுங்க!”
”அந்த நாயி, ஒன்னுக்கு வந்தா பழமைபேசி வாயில ஊத்துவேன்னு சொல்லுச்சாம்! ”, இப்படி சொல்லிவிட்டு பலமாக அஃகஃகாவென்று சிரிக்க ஆரம்பித்தான் சின்னமுத்து.
இதைக் கேட்ட பழமைபேசிக்கு ஒரே ஏமாற்றம், முகம் எல்லாம் சிவந்து பரிதாபமாக செய்வதறியாது, கண்ணீர் சிந்தியவாறு நின்று கொண்டிருந்தான். இதைப் பார்த்த சின்ன முத்துவுக்கும் மனம் வருத்தத்தில் ஆழ்த்தியது. உடனே, சமயோசிதமாக, இட்டேரி வேலிக்குள் பொளேரெனப் பாய்ந்து, அங்கே செக்கச் செவேல் எனச் சிவந்து பழுத்திருந்த இரண்டு கள்ளிப் பழங்களையும், வேலியில் இருந்த சூரிப் பழங்களையும் பறித்து பழமைபேசியிடம் கொடுத்து, அவனை தேற்றினான்.
“இந்தாடா பழமை, இந்த ரெண்டு பழங்களையுமு உனக்கோசரமே, இவ்வளவு நாளுமு உட்டு வெச்சிருந்தேன் தெரியுமா? வாங்கிக்கடா!”
“ம்ம்ம்... ம்ம்ம்... செரீங்க...ம்ம்!”
சின்ன முத்துவும் சடாரெனச் சென்று, அங்கு குழியொன்றில் தேங்கியிருந்த தண்ணீரில் இரண்டு பழங்களையும் கழுவி வந்தான். பிறகு, அந்த இரண்டில் ஒன்றை சின்ன முத்துவின் எதிரிலேயே சுவைத்துப் பார்த்து, அது இனிக்கவும், பழமைபேசி மனம் மாறி மகிழ்ச்சியில் ஒரு பாடலை முணுமுணுத்தவாறே மீண்டும் அவர்கள் வயல் நோக்கி நடையைக் கட்டினான்!
எனக்காகப் பழுத்த, உப்பாத்துப் பெரியபழம்!!
வாளவாடி, பூளவாடி, காணாத கள்ளிப்பழம்!
சின்னவனே, பெரியவனே, உனக்கில்லை இந்தப்பழம்!!
4/13/2009
வெல்லந்தின்ற பழமைபேசி!
“எங்கடா போற?”
“தெய்வாத்தா கடைக்கு சோறுங்கப் போறன்டா!”
“ஏன் உங்கூட்ல யாரும் இல்லியாக்கூ?”
“ஆமாடா, எங்கப்பனுமு, அம்மாளுமு செஞ்சேரிமலைச் சந்தையில சோளம் வித்த பணத்துக்கு ஆடு வாங்கப் போயிருக்காங்க!”
”ச்சேரி, ச்சேரி, நானுமு எங்கூட்டுக்குப் போறன், எனக்குமு பசிக்குது!”
”சரிடா பெருமாளு!”
அந்த வில்வமரம் சூழ இருக்கும் வினாயகர் கோவிலடியின் ஊடாக, ‘வட்டப் வட்டப் பிள்ளையாரே, வாழைக்காயி பிள்ளையாரே, உண்ணுண்ணு பிள்ளையாரே, ஊமத்தங்காயிப் பிள்ளையாரே’ என்று பாடியவாறே தெய்வாத்தாவின் உண்டிச் சாலையை அடைகிறான் பழமைபேசி.
“பழமை, வா கண்ணூ! என்ன கண்ணூ, உன்றப்பன் வடைகிடை வாங்கியாறச் சொல்லுச்சாக்கூ?”
“இல்லாத்தா, எங்கப்பனுமு அம்மாளுமு செஞ்சேரிமலைச் சந்தைக்கி போயிருக்காங்க. பொழுதுழுகத்தான் வருவாங்க!”
“அப்பிடியா கண்ணூ. செரி, என்னுங்கற?”
“என்னாத்தா இருக்குது?”
“கட்டுச் சோறு, எடுப்புச் சோறு, ஏகாந்த போசனம், இதுல உனக்கு என்ன வேணும்?”
“அப்பிடின்னா என்னாத்தா?”
“கட்டுச்சோறுன்னா, இதா அந்த பாக்கு மட்டையில கட்டி வெச்சுருக்குறது. எடுப்புச் சோறுன்னா, கத்திரிக்கா கொளம்புமு, புடலைங்காக் கூட்டுமு, மோரும் உங்கலாம். ஏகாந்த போசனம்ன்னா, வடை பாயாசம் எல்லாமும், நம்ப கணேசன் கொண்டாந்து பரிமாறுவாங் கண்ணூ!”
“எனக்கு அப்ப கட்டுச் சோறே போதுமாத்தா! எங்கம்மா வந்து பணந் தாறேன்னு சொல்லுச்சு!”
“டேய் கணேசா, பாரு நம்ம சரோசினி ஊட்டுப் பொன்னான் வந்துருக்குறான். வந்து என்னன்னு பாத்துக் குடு சித்த!
பசியாற கட்டுச் சோறு உண்டுவிட்டு, பெற்றோர் கூறிச் சென்றபடியே, ஊருக்குத் தென்புறமாய் இருக்கும் அவர்களது புலத்தை நோக்கிச் செல்கிறான். போகிற வழியில் கரும்பு ஆலை ஓடிக் கொண்டு இருக்கிறது. கருப்பங் கழிகளை ஆலையில் கொடுத்துப் பிழிந்து, சாற்றை உலையில் ஏற்றிக் காய்ச்சிக் கொண்டு இருந்தார்கள். பிறகு காய்ச்சின சாற்றை அச்சுப் பலகைகளில் ஊற்றினார்கள்.
அது ஆறின உடனே வெல்ல அச்சுகள் ஆயின. இதை எல்லாவற்றையும் உற்று நோக்கிக் கொண்டு இருந்தான் பழமைபேசி. அதைக் கவனித்த வேலையாட்களில் ஒருவனான மாரி,
“கண்ணூ பழமை! இந்தா ரெண்டு வெல்லம், வாங்கி வாயில போடு!!”
”இல்லீங்க, வேண்டாங்கண்ணா, எங்கம்மாக்குத் தெரிஞ்சா வையும்!”
“அட, இந்தா வந்து வாங்கி வாயில போடு. நானு உங்கம்மாகிட்டச் சொல்லிகிறேன்!”
அதை வாங்கி வாயில் போட்டுச் சுவைத்துக் கொண்டே பழமைபேசி அவ்ர்களுடைய வயல் நோக்கிச் சென்றான். செல்லும் வழியில் பூத்திருந்த பூக்களைக் கண்டதும், ரெண்டொரு பூவையும் பறித்துக் கையிலேந்தியபடியே எதையோ நினைத்தவாறு சென்று கொண்டிருந்தான்.
கவனம் அவன் செல்லும் வழியில் இல்லாதபடியால், கல்தடுக்கி அவன் தடுமாறியதில், அவனிடம் இருந்த அந்தப் பூக்கள் கை நழுவி அருகில் இருந்த ஓடையில் விழுந்து விடவே, சோகமாய்ப் பாடிச் செல்கிறான் பழமைபேசி:
4/12/2009
அமெரிக்கா: பூந்தாதுத் தொல்லையும், தீராத இம்சையும்!
நண்பரோட நண்பர், இப்ப அவர் நமக்கும் நண்பர், சித்தங்கலங்கி, மூக்குல, வாயில, கண்ணுலன்னு உடல்ல இருக்குற நவ துவாரங்கள்லயும் தண்ணி சிந்திகினு உள்ள வந்தாரு. உடனே, துடைப்பானால துடைச்சி விட்டு, மூக்குல பச்க், பச்க்ன்னு எதொ தெளிப்பானால தெளிச்சு விட்டாங்க. அதைப் பார்த்த நாம மிரண்டு போய்ட்டம்ல?! ஆச்சலு, என்னடா இது எல்லாம்ன்னு நாம கேட்க, அவரு,
“நிரந்தரவாசிக்கான(green card) விண்ணப்பம் எந்த நிலையில இருக்கு?”
“I-140 முடிஞ்சது, I-485 இனிதான் விண்ணப்பிக்கணும்டா. ஆமா, அது எத்தனை நாள் எடுக்கும்?”
“கவலையேபடாத. அது வர்றதுக்கு முன்னாடியே, இந்த ஒவ்வாமை(allergy) உனக்கு வந்துரும்டா!”ன்னான் பாவி மகன்.
அதேபோல அவன் சொன்ன நாள்ல இருந்து, ஒரு வருசத்துக்குள்ளயே அந்த ஒவ்வாமை வந்து சேந்துருச்சுங்க. வருசா வருசம் ஏப்ரல் ஒன்னாந்தேதி தவறாம வந்திடுதுங்க. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி, மருத்துவர்கிட்ட போனேன். அவர், பொறியில சிக்கின எலியாட்டம், லபக்னு புடிச்சி கிட்டாரு நம்மளை. நாம ஏற்கனவே எல்லாப் பற்றியமும் தெரிஞ்சுதான இருக்கோம். ஐயா, அந்த Allegraக்கு மருந்துச் சீட்டு எழுதிக் குடுங்க போதும்ன்னோம். ம்ம், நீங்க ஒரு தடவை பரிசோதனைக்கு வந்தே ஆகணும்ட்டாரு.
சரின்னு, ஒரு நல்ல நாளும் அதுவுமாப் போனோம். வாங்க, வாங்கன்னு உபசாரமல்லா வெகு பலமா இருந்துச்சு. முதல்ல உட்கார வெச்சாங்க. இடது பக்கம் திரும்பினா, 125 விதமான ஊசி மருந்து இருக்கு. என்னங்க, இன்னைக்கு இவ்வள்வு பேர் பரிசோதனைக்கு வர்றாங்களா? எல்லார்க்கும் ஒரே ஒவ்வாமை போல இருக்குன்னேன்.
அந்த தாதியம்மா சிரிச்சுகிட்டே, ஆமா, இன்னைக்கு நிறைய பேர் வர்றாங்க. ஆனா, ஒரு சிறு திருத்தம்ன்னாங்க. ஏன், நான் இன்னைக்கு போய்ட்டு, வேற ஒரு நாளைக்கு வரணுமான்னு கேக்க, அவங்க மறுபடியும் ஒரு குறுஞ்சிரிப்போட, நீங்க பாக்குற இந்த 125 ஊசிகளும் உங்களுக்குத்தான் போடப் போறங்கன்னு சொல்ல, நம்முளுக்கு அழுகையே வந்திடுச்சு. ஆனா, 60, 70 ஊசிகளோடயே நிறுத்திகிட்டாங்க.
அதைப்பார்த்த அந்த தாதி, இது சும்மா, தோல்ல மேலால போட்டு, உங்க உடம்பு எது எதுக்கெல்லாம் ஒவ்வாதுன்னு பாக்கப் போறோம்ன்னாங்க. சரி, பொறியில மாட்டியாச்சு, இனி என்ன செய்ய? நடத்துங்கன்னு சொல்லியாச்சு. இடது கையில மேல தோள்பட்டையில இருந்து, முழங்கை வரைக்கும், இட வலமா எட்டு எட்டு ஊசியா, எங்க அமுச்சி வறட்டி தட்டி வைக்குறா மாதிரி, குத்திகினே வந்தாங்க. முதல் பத்து ஊசிக்கும் வலிச்சது. அப்புறம், அவ்வளவாத் தெரியலை.
எல்லாமும் போட்டு முடிச்சதுக்கப்புறம், பத்து நிமிசங்கழிச்சு பாத்தா, ஒரு பத்து பன்னெண்டு வில்லைக ஊசி போட்ட இடத்துல. அதுகளை வெச்சி, உங்க ஒடம்பு இது இதுக்கு ஒவ்வாமைன்னு ஒரு பட்டியலையும் கீழ்க்கண்ட மருந்துகளையும் குடுத்தாங்க.
Allegra - மாத்திரை
Nasonex - மூக்குத் தெளிப்பான்
Visine - கண் சொட்டு மருந்து
இதுகளைத் தேவைக்கு ஏத்தா மாதிரி பாவிச்சுகுங்கன்னு சொல்லி மருந்துச் சீட்டும் குடுத்தாங்க. அன்னைக்கு ஆரம்பிச்சதுங்க, இந்த இம்சை. கண்ணுல ஒரே அரிப்பு, மூக்குல தண்ணியா ஊத்துது, உடம்பெல்லாம் சித்தங் கலங்கி ஓய்ஞ்சா மாதிரியே இருக்கு இப்பக் கூட.
சரி, ஏன் இது வருது? பாருங்க, வசந்த காலம் பொறக்குதோ இல்லையோ, மரம், செடி, புல்லுகள்ல பூந்தாது (மகரந்தத்தூள்) வெளிப்பட ஆரம்பிச்சிரும். இதுக, காத்துல 400 மைல் வரைக்கும், தரையில இருந்து மேல ரெண்டு மைல் வரைக்குமா பறக்குமாமுங்க. அவ்வளவு நுணுக்கமா இருக்குற இது, காத்தோட காத்தா மூக்கு, வாயி, கண்ணுல படும்போது உடல்ல இருக்குற தற்காப்பு அமைப்புகள் வேலை செய்ய ஆரம்பிச்சுடுமாம். அதாவது, தும்முறது, கண் உறுத்துறது இந்த மாதிரி.என்னதான், மேல சொன்ன மருந்துகளைப் பாவிச்சாலும், இம்சை இம்சைதானுங்க!
இது தெரிஞ்ச நம்மாள் ஒருத்தன், அவனோட இந்தியப் பிரயாணத்துக்கு நடுப்புல இருந்துட்டு கூப்ட்டான், ’டேய், இங்க Allegra கிடைக்குது, ஒரு ரெண்டு பெரிய பொட்டலம் 200 மாத்திரைக வாங்கிட்டு வரட்டா?’ன்னு கேட்டான். ’சரீடாப்பா!’ன்னேன் நானும். அவனும் நல்ல புள்ளையாட்டம் வாங்கியாந்து தந்தான்.
ஒரு மாத்திரை போட்டேன், ரெண்டு போட்டேன், ஒன்னும் வேலைக்காகலை. போன வாரம் பூராவும் இப்பிடியே ஓடுச்சு. முடியலை! பழைய குருடி, கதவைத் திறடின்னு நேத்து மறுபடியும் மருத்துவர்கிட்டப் போக, அவரும் மாதிரிக்கு இருந்த அதே Allegra மாத்திரைக, ஒரு 50 மாத்திரைகளுக்குப் பக்கமா குடுத்தாரு. அதுல ஒன்னை உள்ள போட்டன், அடைச்சி இருந்த மூக்கு ஒடனே தொறக்குது. அரிச்சிப், பிச்சிகினு இருந்த கண்ணு முழிக்குது, களைப்பு நீங்குது.... இது எப்படீங்க? இதுக்கும் மருத்துவர் கொடுத்தது, நுண்ணிய அளவுல குறைஞ்சதுதான். அப்ப, அந்த 200 மாத்திரைகளும் தூக்கிப் போட வேண்டியதுதானா? அல்லது, எனக்கு மனப்பிராந்தியா??
அதை விடுங்க, இப்ப ஒடம்புக்கும் கொஞ்சம் நல்லா இருக்கு, நாம நம்ம பினாத்தலை ஆரம்பிக்கலாம்... இஃகிஃகி! காயம், புண் அப்படீன்னு சொல்றமே, அதுகளை எப்படிப் பொழங்குறது? ஏன்னா, சில பல இடங்கள்ல இடம் மாறிப் பொழங்கிப் போடுறமே, அதனாலதான் ஒரு அலசல். அது வந்துங்க, புறச் சக்திகளால் ஆனது காயம். உளரீதியான உணர்வு, உடல் உபாதை இதுகளால ஆகுறது புண்.
4/11/2009
விமர்சனம்: கவிஞர் கயல்விழி அவர்களின் தப்பிதம்!
உலகமயமாக்களின் விளைவு, உலக அளவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரு சவாலாக அமைந்து உள்ளது. உலகமயமாக்கல் என்கிற மாபெரும் மாற்றத்தில், வெகுவாகப் பங்கேற்காத நாடு மற்றும் இனங்களின் மொழிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இந்த மாற்றத்தின் பெரிய பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று என்ற வகையிலே, தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் பாதிப்பு என்பது இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இச்சூழலில், தமிழ் மொழியைக் காப்பது தமிழக அரசு, மற்றும் ஆர்வலர்களின் கடமை. ஒருவரின் மூதாதையரின் பிறப்பிடம் அறிந்து, அவர்கள் தமிழர் அல்லர் என்று பறைசாற்றுவது மடமை. தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் எவராயினும் அவர் தமிழரே! அப்படியல்லாது, அவர்களைப் பிரித்துக் கண்ணுறுவது தமிழனே தமிழுக்கு செய்யும் பேரிழுக்கு. அவ்விதம் வாதாடிவிட்டு, சாதியின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்புக் கோருவது மகாக் கேவலம் ஆனதும், மற்றும் தமிழனைக் கூறுபோடும் செயலுமானது என்பது சொல்லித் தெரிவதில்லை.
மேற்கூறியது போன்றதே, தமிழ் படைப்பாளிகளை சக தமிழர்களே தூற்றுவதும், காழ்ப்புணர்வு கொண்டு வசைத்தலும். ஒருவரது படைப்புகள் விமர்சிக்கப்படலாம், ஆனால் அந்த படைப்பாளியை அல்ல. ஆகவே, இன்றைய சூழலில், தமிங்கிலமன்றி தமிழில் எழுதுவோர், படைப்போர் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள். தமிழில் எழுத முனைந்து, தமிங்கிலக் கலப்பு கொள்வோர், மென்மேலும் படைப்புகள் படைத்து, தமிங்கலம் தவிர்த்திடும் பொருட்டு ஊக்குவித்தலுக்கு உரியவர்களும், தமிழில் எழுதும் பொருட்டு பாராட்டுதலுக்கு உரியவர்களும் ஆவர்.
ஆனால், நாட்டிலே வணிகரீதியில் தமிழ் விற்கப்படுவதும், பட்டங்கள் சூடிக் கொள்வதும் இயல்பான ஒன்றாகிவிட்டது. இச்சூழலில், வலையுலகத்தில் ஏராளமான தமிழ் படைப்பாளிகள் மேற்கூறியவர்களோடு ஒப்பிடுகையில், பாராட்டுதலுக்கு இலக்காகாமலேயே கழிக்கப்படுகிறார்கள்.
இந்த மனநிலையில், கவிதை வடித்தும் பாக்கள் படைத்தும் இடுகையிட்ட தமிழ் படைப்பாளியை பாராட்டும் பொருட்டு, கவிஞர் என்றும், வளர்ந்து வரும் பாவலர் என்ற மதிப்படைச் சொல் கொண்டும் விளித்தோம். இது தவறா?
பாக்கள் படைக்கப்பட வேண்டும்; கவிதைகள் வடிக்கப்பட வேண்டும்; இவையாவும் உற்பத்தி செய்தல், உரைநடைக்கு ஒப்பாகும் என்றான் தமிழறிஞன் ஒருவன்.
உட்கருவான சூழலுக்குள் தம்மை ஆட்படுத்தி, மனமார உருகியும், நெகிழ்ந்தும் உணர்வுகளை இலக்கிய இலக்கணத்திற்குள் கட்டுண்டு பாக்கள் படைப்பவன் பாவலன்.
உட்கருவான சூழலுக்குள் தம்மை ஆட்படுத்தி, அனுபவத்தை விதைத்து, கற்பனை நயத்தைக் கூட்டி, தேனடையில் இருந்து வடியும் தேனைப் போல், உளச்சிந்தையை வடிப்பவன் கவிஞன்.
இந்தப் பின்னணியோடு தமிழுலகில், சிந்தல்க் கவிஞர்கள், நறுக்குக் கவிஞர்கள், ஈரடிப்பயனறு(Haiku) கவிஞர்கள், முறையான பாக்கள் படைக்கும் பாவலர்கள், கவிஞர்கள் என, அவற்றுக்கான இலக்கணம் தெரிந்தும் தெரியாமலும் வலம் வருவோர் ஏராளம்.
கொடுத்தேன் விடுதலை செய்தார்கள்!!
இனி தலைப்புக்கு வருவோம். தகுதியில்லாத அடுத்தோரை, பெரிய அடைச்சொல் கொண்டு அவர் விளிப்பது தவறன்றோ?! ஏனெனில், உற்பத்தி செய்யப்படுபவை பாக்களும் கவிகளும் ஆகாது அன்பர்காள்! ஆனாலும், தனித்தமிழில் படைத்தும் வடித்தும் ஏறு கொள்கையில், யாவரும் மதிப்படை கொள்வது திண்ணமன்றோ?!
தமிழையும் தமிழனையும் இழித்துப்பேசி!
இது அவர்களது அறம். (நன்றி: சிதறல்கள்)
வேட்பாளரை மாத்திப் போட்டாங்களாம்டா, இராசூ...
“யாரு, நம்ம பெரிய பள்ளிக்கூடத்து வாத்தியாரையா சொல்லுற?”
“மம்ட்டி, மம்ட்டி, நீ இந்த அறுகெடுக்குறதுலயே இரு. எப்பத்தான் வெளியுலகந் தெரிஞ்சுக்கப் போறயோ என்னமோ?”
”இப்பத்தான் தோண்டுன அறுகை, குமுஞ்சு வழிக்க ஆரமிச்சு இருக்குறன், இன்னம் ஒரு எட்டுக்கூட நவுருல, இப்பவே திட்ட ஆரமிச்சுட்டியா நீயி?”
“பின்ன என்னடா, இனியுமு ரெண்டு மூனு வாரத்துல பெரிய எலெக்சன் வரப் போகுதுல்லோ?”
“அப்ப, அம்மா மறுக்காவும் ஆச்சிக்கி வந்துருவாங்களாக்கூ?”
“ஐயோ, உன்னோட பெரிய்ய இமிசியாப் போச்சுடா. இது பெரிய எலெகசனுடா... டில்லிக்கு யாரு போறதுன்னு முடுவு பண்ணுற எலெக்சன்!”
“அப்பிடியா? செரி, சூரியன்ல ஆரு, எலைல ஆரு நிக்கிறாங்க நம்மூர்ல?”
“அதாண்டா, நிக்கிற ஆளை மாத்திப் போட்டாங்களாம்... இன்னிக்கி டீவீப் பொட்டியில சொன்னாங்க.”
“க்கும்... யாரு நிக்கிறாங்கங்றது நெம்ப முக்கியமாக்கூ? காசு நெம்ப யாரு நம்பளுக்கு தர்றாங்களோ, அவிங்களுக்கு போட்டுட்டு, டவுன்ல போயி கொழந்தைகளுக்கு துணிமணி எடுத்து தரோணும். சீக்கிரம் லீவு முடிஞ்சு பள்ளிக்கூடம் தொறக்கறாங்கல்லோ?”
“ஆமாமா... யாரு செயிச்சு நம்முளுக்கென்னாவுது... நாம பாடுபழமயப் பாக்குலாம்!”
என்ன எல்லாரும் பிரச்சாரத்துக்கு வெளில போய்ட்டாங்களாக்கூ? சரி, ஒரு கதை சொல்றேன் கேட்டுகுங்க....
நான் பள்ளிக்கூடம் போய்ட்டு, பைக்கட்டைத் தோள்ல போட்டுட்டு பொடி நடையா வந்துட்டு இருந்தேன்.நல்ல தண்ணிக் கெணத்துல இருந்த பொன்னம்மக்கா அவங்க சொன்னாங்க, டேய் இராசு, போயி உங்கம்மாவை பாதாள சோதியோட வரச் சொல்லுன்னு. எங்க தோட்டத்துக்கு சோதிமணி, சோதிமணின்னு ஒரு புள்ளை களை எடுக்க வரும். அதுமாதர, இதுவும் யாரோவாக்கும்ன்னு நினைச்சிட்டு நான் எங்கூட்டுக்குப் போனேன்.
அங்க எங்கம்மா, பக்கத்து ஊட்டு அமுச்சிகோட எதோ தூத்துக்கூடை வாங்கிட்டு இருந்தாங்க. நான் போயி,பொன்னம்மக்கா பாதாள சோதியக் கூட்டிட்டு உன்னிய நல்ல தண்ணிக் கெணத்துக்கு வரச் சொல்லுச்சுன்னு சொன்னேன். அதைக் கேட்டதும் அந்த அமுச்சியும், கூடை விக்கிறவனும், எங்கம்மாவும் உழுந்து உழுந்து சிரிச்சாங்க. ஏன்னு உங்களுக்குத் தெரியுமாங்க?
4/10/2009
அமெரிக்காவில், தங்கமணி(Mrs) ஆசைமணி(Mistress) ஆனது எப்படி?!
நாங்கெல்லாம் ஒரு மேசையில உட்கார்ந்து இருந்தோம். இவன் போயி சத்யம் மக்களுக்கு எல்லாம் வணக்கம் சொல்லிட்டு, ஒரு மாதிரி புகைச்சலா வந்தான். வந்து, மத்த மத்த வெள்ளைச்சாமிகளோட எதோ கிசுகிசுத்துட்டு இருந்தான். நானும் போயி என்னோட காதைக் குடுக்கவும், அவன், என்னடா வந்த இடத்துல அவனுக்கு கிடைச்ச யோகத்தைப் பார்த்தியான்னு கேட்டான். எனக்கு ஒன்னும் புரியலை. என்னடா விசயம்ன்னு கேட்டேன். அவன் கூட வந்திருக்குற அம்மணியப் பாருடா, அது அவனோட ஆசைமணின்னான். அப்படியல்லவே, அது அவனோட வீட்டுக்காரி(wife)தானேன்னு திருப்பிக் கேட்டேன். நீ சும்மா இரு, அவனே இவங்க என்னோட Mistressன்னு சொன்னான் நீ வேற, அப்படீன்னான்.
எனக்கு நெலமை விளங்கிடுச்சி. ஆனா, அதுக்குள்ள விசயம் விறுவிறுன்னு சுத்தியும் இருந்த மேசைகளுக்கு பரவிடிச்சு. அப்புறம் நான் Donஅக் கூப்ட்டு சொன்னேன், டேய் வெண்ணெய், உங்கூர் ஆட்களுக்கு திறந்த(out of box) மனசாச் சிந்திக்கத் தெரியாதுங்றது மறுபடியும் நிரூபணம் ஆயிடிச்சு. உங்களுக்கு, இந்த Wife, Girl Friend, Fiance இதுகளைத் தவிர வேற நினைக்கத் தெரியாது. எங்க ஊர்ல எல்லாம், கல்யாணம் ஆனவங்களை, என்னோட Mrsன்னு அறிமுகப் படுத்துறது வழக்கம். அதை நீ, Mistressன்னு புரிஞ்சுட்டு இப்படிப் பத்த வெச்சிட்டியேடாப் பரதேசின்னு நான் கும்ம, அவன் குறுகுறுன்னு முழிக்க, அப்புறம் போயி விசயத்தை இன்னொரு தரம் சுத்தல்ல விட்டு சரி செய்தோம். ஆகவே, மக்கா, உங்களோட தங்கமணிய, நல்லா வலுவா, என்னோட Wifeன்னு சொல்லப் பழகிக்கிடுங்க. இஃகிஃகி! சரி, வந்துட்டீங்க, வழக்கம் போல என்னோட பினாத்தலையும் படிச்சிட்டுப் போங்க...
வலையுலக நண்பர் ஒருவர், திருவாளர், திருவாட்டி இதுகளைப் பற்றின விபரத்தை கேட்டு இருந்தாரு. அதான், அகரமுதலி, G.U.போப், பாவாணர் ஐயா அவர்களோட படைப்புகளை அடிப்படையா வெச்சி, இந்த மேலதிகத் தகவல்.
மணமாகாத இளைஞன்: குமரன் (Master)
மணமாகாத இளைஞை: குமரி (Miss)
இளந்தை கடந்த ஆடவன் (மணமானவன், ஆகாதவன்): திருவாளன் (Mr)
இளந்தை கடந்த பெண்டிர் (மணமானவள், ஆகாதவள்): திருவாட்டி (Mrs/Mistress)
கண்ணியமுற்றவன்: பெருமான்
கண்ணியமுற்றவள்: பெருமாட்டி
செல்வமுள்ளவன்: சீமான்
செல்வமுடையவள்: சீமாட்டி
மனைவியானவள்: மணவாட்டி
மணமானவள்: கண்ணாட்டி
மணமானவன்: கண்ணாளன்
பத்மஸ்ரீ : தாமரைத்திரு
Sir: வயவர்
Rajah Sir: அரசவயவர்
The Hon'ble: பெருந்தகை
The Rt. Hon'ble: மாபெருந்தகை
His Worship: வணங்குதகை
His Lordship: குரிசில்தகை
His Excellency: மேன்மைதங்கிய
His Highness: உயர்வுதங்கிய
His Majesty: மாட்சிமைதங்கிய
Rv: கனம்
Rt. Rev: மாகனம்
His Grace: அருட்திரு
His Holiness: தவத்திரு
அப்ப, இந்த திரு, திருமதியெல்லாம்? அதாவது வந்துங்க, ஸ்ரீமதின்னா, அது வடமொழி. இருபிறப்பி(hybrid)ங்ற அடிப்படையில, தமிழும் வடமொழியுங் கலந்து, திருமதி புழக்கத்துக்கு வந்துச்சு. தமிழ் ஆர்வலர்கள், அதையே தனித்தமிழ்ல திருவாளர், திருவாட்டின்னு அழைக்க ஆரம்பிச்சாங்களாம்.
மலருக்கு நறுமணம்!!
4/09/2009
மூத்த பதிவர், அண்ணன் சீமாச்சு அவர்கட்கு வாழ்த்துகள்!
கேட்டுத் தெரிஞ்சுகிட்டா தப்பில்லை! இது அண்ணன் அவர்கள் சொன்னது. ஆக, சந்தேகம் வருவது இயல்பு. அவன் ஒரு சந்தேகப் பிராணி என்று எதிர்மறை நோக்கில் இகழக் கேட்டு இருப்பீர்கள். ஆனால், அப்படி இகழத் தேவை இல்லை அன்பர்களே!
அடிக்கடி ஐயமுறுபவன், பின்னாளில் அறிவாளி! படிக்கும் குழந்தைகளாகட்டும், பணியிடத்தில் இருக்கும் பணியாளனாகட்டும் ஐயம் மேலிடுவது இயல்பு. அதே வேளையில், நம்பிக்கை இன்றி ஒருவரைக் கூர்ந்து நோக்குங்கால் அது தவறு, அது வாழ்வில் மகிழ்வைக் கொல்லும்.
ஆங்கிலத்திலே சொல்வோமானால், doubt and suspicious are two different elements. தாய்த் தமிழிலும் அதேதான் நண்பர்காள்! வாழ்வில் ஐயமும், அசுகையும் இரு வேறு அம்சங்கள். சந்தேகப் பிராணியாக இருப்பது நன்று! அசுகைப் பிராணியாய் இருப்பது நன்றன்று!!
சரி, இனி இடுகையின் தலைப்புக்கு வருவோம். அண்ணன், விரைவில் பதிவுலகில் ஐந்தாண்டு காலத்தைக் கடக்கப் போகிறார். வாழ்த்துகள்! ஏன், பதிவுகளின் எண்ணிக்கை வெகு குறைவாய் இருக்கிறது. சுவராசியம் கூட்டுவதில் வல்லவரான தாங்கள், பாராமுகமாய் இருந்து, இடுகைகள் இடாமல் இருப்பதற்குக் கண்டனங்கள்!! இனியாவது, அண்ணன் அவ்வப்போது இடுகைகள் இட்டு, பதிவுலகுக்கு பொலிவூட்டுவார் என நம்புவோமாக!!!
4/08/2009
4/07/2009
பாமா இயம்பினதும், பழமைபேசி பம்புனதும்!!!
அசைத்தல்: அடுத்தவங்களை நோகடிக்கிற மாதிரி சொல்றது
அறைதல்: வெட்டொன்னு துண்டு ரெண்டுன்னு கண்டிப்பா சொல்றது
அதிர்த்தல்: அரற்றுதல்ன்னும் சொல்றது, மிரளவைக்குற மாதிரி சொல்றது
அளவளாவுதல்: சாவகாசமா, பலதும் பகிர்ந்துகிறமா மாதிரிச் சொல்லாடுறது.
இசைத்தல்: இசைவு, சம்மதங்ற மாதிரி சொல்றது
இறுத்தல்: பதில் சொல்றது
இயம்புதல்: உடனே, டகால்ன்னும் துரிதமாவும் சொல்றது
உரைத்தல்: நெடுநேரம் தொடர்ந்து சொல்லிட்டு இருக்குறது.
உளறுதல்: ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாம சொல்றது.
ஓதுதல்: அறிவிப்புகளையும், பாடல்களையும் சொல்றது.
மொழிதல்: சொல்ல வேண்டியதை, முறைப்படி சொல்றது.
யாத்தல்: கணக்கு, சூத்திரம், இலக்கணங்களை கோரிவையா சொல்றது.
வசனித்தல்: உரையை, ஏற்ற இறக்கத்தோடயும் அங்க அசைவுகளோடயும் சொல்றது.
விடு(த்)தல்: முறைப்படி அழைப்பைச் சொல்றது.
விள்ளுதல்: முறைச்சிப் பகைக்கிறா மாதிரி எதனா சொல்றது.
விளம்புதல்: வெளிப்படையா ஒன்னைச் சொல்றது.
விளித்தல்: முறையா ஒருத்தரை, முறை வெச்சி சொல்றது.
கதைத்தல்: கோர்வையா சொல்றது.
கழறுதல்: உறுதியா சொல்றது.
கிளத்துதல்: புரியும்படியா சொல்றது.
கூறுதல்: கூற்றுகளைச் சொல்றது.
சாற்றுதல்: வெளியுலகத்துக்கு திறந்த மனதாச் சொல்றது.
செப்புதல்: ஒருத்தர் பேசினதுக்கு மறுமொழி சொல்றது.
சொல்லுதல்: சொற்களை உச்சரிக்கிறது.
நவிலுதல்: மனமுருகி, வாஞ்சையோட சொல்றது.
நுவலுதல்: மரியாதையும் பணிவும் கலந்து சொல்றது.
நுதலுதல்: ஒன்னைக் குறிச்சி சொல்றது.
நொடித்தல்: கீழயும் மேலயும் எக்குத்தப்பாச் சொல்றது.
பறைதல்: ஏகத்துக்கும் தொடர்பில்லாமச் சொல்றது.
பகருதல்: முத்தாய்ப்பாச் சொல்றது.
பிதற்றுதல்: தன்னை உயர்த்திச் சொல்றது.
பினாத்துதல்: முட்டாள்தனமா சொல்றது.
பீற்றுதல்: வீம்புக்குன்னே சொல்றது.
புலம்புதல்: துயரமா, தொடர்ந்து சோர்ந்து போய்ச் சொல்றது.
பேசுதல்: மனசுல தோணுறதை மத்தவங்களுக்கு சொல்றது.
ஏசுதல்: மத்தவங்களை குறைபாடாச் சொல்றது.
பொழிதல்: சரமாரியாத் தொடர்ந்து சொல்றது.
போற்றுதல்: புகழ்ந்து சொல்றது.
முழங்குதல்: உயர்ந்த குரல்ல, உறுமுற மாதிரிச் சொல்றது.
அதென்ன பாமா இயம்பினதும், பழமைபேசி பம்புனதும்? அது ஒன்னும் இல்லைங்க, நான் ஒரு நாள் ஆடி மாசம் தூரி ஆடுறதுக்கு ஆலமரத்தடிக்கு போயிருந்தேன். அந்த இடத்துல வெச்சி, பாமா படக்குனு, எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு இயம்ப, நான் பம்பு பம்புன்னு பம்ப, ஒரே களேபராமப் போச்சுங்க. அது இனி எந்த ஊர்ல இருக்கோ, என்னவோ?! யாருக்குத் தெரியும்...
4/06/2009
கனவில் கவி காளமேகம் - 14
”அப்பிச்சி, என்னங்க நெம்ப நாளா ஆளே காணோம்?”
“ஆமாடா பேராண்டி, நீ நாலும் எழுதுறே! முசுவா வேற இருந்தே, அதான் வரலை. ஆனா எவனோ பொழப்பத்தவன் பூனை மயிரை சிரைச்ச கதையாட்டம் எழுதத் தலைப்பட்ட மாதரத் தெரிஞ்சது. அதான், ஒரு எட்டு பாத்துட்டு போலாம்ன்னு வந்தேன்!”
“அப்படியெல்லாம் இல்லீங்க அப்பிச்சி. இனத்துக்கு ஒன்னுன்னா சும்மா இருக்க முடியுமா? அதானுங்க!”
“அதெல்லாம் செய்யணும்டா... ஆனா, பாத்து நடந்துக்க!”
“சரிங்க அப்பிச்சி, வழக்கம் போல கேள்வி கேட்டு என்னைப் படுத்தாதீங்க. நான் எதுக்கும் இன்னைக்குத் தயாரா இல்லைங்க!”
“சரி விடு, நீ கேளு, நான் கிளத்துறேன்! கேட்டலும் கிளத்தலும்ன்னு இருக்கட்டும்”
“அப்படி வாங்க வழிக்கு! உங்ககிட்ட கேக்கோணுமின்னே காத்துட்டு இருந்தேன், நீங்களே சொல்லிட்டீங்க. அப்பிச்சி, பேச்சு வழக்குல சொல்லுறமே, அது அரைகுறையா? அறைகுறையா?? இதுல எது சரிங்க அப்பிச்சி???”
”அடேய், எங்க காலத்துல எல்லாம் அறைகுறையாத்தான் இருந்துச்சு. உங்க காலத்துல அது அரைகுறைன்னு மாறிடுச்சு. அறைச்சொல் அப்படீன்னா, எழுத்துல இல்லாம வாய்வழிப் புழக்கத்துல மட்டுமே இருக்குற சொல்லு. நீ எழுதுறதுல அரைவாசி, அறைதானடா பேராண்டி? அவர்கள்ங்றது தமிழ்ச் சொல். அதையே, அவுங்கன்னு சொல்லிப் பேசினா, அது அறைச்சொல். அப்படி ஒருத்தன், பாமரத்தனமா, அடுத்தவங்க விளங்காதபடிக்குப் பேசினாச் சொல்லுறது, அவன் அறைகுறையாப் பேசுறான்! இதனோட வழக்கத்துல, பழுதுபடப் பேசுறதையும், பழுதான ஒன்னைச் சொல்லுறதும் அறைகுறைன்னு ஆச்சுதுடா பேராண்டி. அதே நேரத்துல, பாதி சொல்லியும், பாதி சொல்லாமப் பேசுறதை அரைகுறைங்றதுல தப்பில்லை”
“இப்ப விளங்குதுங்க அப்பிச்சி. வாங்க அடுத்த வினாவுக்கு போகலாம். கோயம்பத்தூருக்கு கோவை. திருநெல்வேலிக்கு நெல்லை. தஞ்சாவூருக்கு தஞ்சை. சுருக்கமாச் சொல்லுறாங்கன்னு புரியுது. அதெப்படீங்க அப்பிச்சி, இராமநாதபுரம் மாவட்டம் முகவைன்னு ஆச்சுது? புரியலீங்களே??”
”அதுவா? இராமநாதபுரம், அதை ஒட்டி இருக்குற நிறைய இடங்களை ஆண்ட இராசா சேதுபதி, இராமநாதபுரம் தனக்கு முகம் போல சிறப்பா இருக்குன்னு நினைச்சாராம். அந்த ஊரை நினைச்சு, மகிழ்ச்சிக் கடல்ல ஆழ்ந்து போயி நான் முகவை நாட்டு இராசான்னு பெருமையாச் சொல்லி மகிழ்வாராம். அதுல இருந்து வந்ததுதான் இந்த முகவை!”
”அப்படீங்களா கதை!”
"சரிடா பேராண்டி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாறன்!"
இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.
4/04/2009
”49-O"
புதுநாளை உண்டாக்கித் தமிழ்காப்பாய் புத்துணர்வைக் கொணர்வாய் இங்கே
அதிர்ந்தெழுக! தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்!
இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே!
மேற்கூறிய ஊடகங்களின் நிலைப்பாடே, ஈழத்தமிழ் ஆதரவாளர் அல்லது அபிமானிகள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பாலானவர்கள். இதைப் பலர் மறுத்தாலும், ஆட்சேபித்தாலும், கூற்று மாற்றுவதற்கு இல்லை. கூப்பாடு போடுவார்கள், விளம்பரம் தேடிக் கொள்வார்கள். ஈழ ஆதரவாளர், ஈழ அவலத்திற்கு எதிர்ப்பாளர், தமிழின ஆதரவாளர், தமிழின விரோதப் போக்கு எதிர்ப்பாளர் என்றெல்லாம் எண்ணற்ற பெயர்களைத் தாங்கி வருவார்கள். அகரமுதலியில், அடுத்து வைப்பதற்கு ஏற்ற பெயர் என்னவாக இருக்கும் என்று தேடித் திரிவோர் இன்னும் இருக்கவே செய்கின்றனர்.
இத்தகையவர்களால், இனமான உணர்வு நீர்த்துப் போனதே தமிழன் கண்ட பலன். செய்திகளை தமக்கேற்றாற்போல் ஆக்குவதும், செய்தியின் வீரியம் குறையுமுன் தமக்கு வேண்டியனவற்றை செய்துகொள்வதுமாய், எத்துனை எத்துனை நாடகங்கள்? 1980 தொடக்கம், எவ்வளவு மாறுதல்கள்?? எல்லையின் விளிம்பில் தமிழன் ஒடுங்கிச் சிக்கித் தவிக்கையில், ஆறுதல் வார்த்தைகள், “நாங்கள் கையறு நிலையில் இருக்கிறோம்!”.
இந்நிலையில், தமிழனுக்கு வாய்த்திருக்கும் காண்டீபம், ”49-O". ”அம்மா ஆதரவில்லை, அய்யா ஆதரவில்லை, அண்ணன் செய்வார், போர்வாள் செய்வார், அவர் துரோகம், இவர் முதுகில் குத்தினார்” என்று சொல்லிப் புலம்புவதும், அவரவர் விருப்புக்குத் தக்கவாறு எதோ ஒருவரின் முதுகில் சவாரி செய்வதுமாய்த்தான் இருக்கப் போகிறோமா தமிழின அபிமானிகளே?!
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், நாங்கள் தமிழ் ஈழ மக்களின் அபிமானிகள் என்று உணர்த்தக் கூடிய வகையிலே, குறைந்தது பத்தாயிரம் ஒப்பமுக்கு(vote)களை பதிய வைத்துப் பாருங்கள். மந்தையாடுகள் போல, அந்தக் கட்சி, இந்தக் கட்சி, அம்மா, அய்யா, தலைவர், தலைவி, புரட்சி, புழுதி என்று இருக்கிற அனைவரும் பதை பதைத்து ஓடி வருவர். பாராளுமன்றத் தொகுதிக்கு, ஐம்பதினாயிரம் ஒப்பமுக்குகள் என்பது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடியவை.
இவ்வகை ஒப்பமுக்குகளை அளிப்பதின் மூலம், நாம் இன்ன தீர்வு என்று சொல்ல வரவில்லை. அதை ஈழ மக்களும், அது தொடர்புடையோரும் முடிவு செய்து கொள்ளட்டும். தனித் தமிழீழம், ஒட்டுத் தமிழீழம், ஒட்டாத ஈழம் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால், தமிழினப் படுகொலைக்கு எதிர்ப்பாளர் என்று சொல்வதற்கு, இதைவிட வேறென்ன சிறந்த வழி இவ்வுலகில் இருக்க முடியும்?
எந்த அபிமானியும், சென்னை ஊர்வலம், இராமேசுவரம் ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, வெற்றுச் சங்கிலி, உண்ணாவிரதம், உண்ணும் விரதம் என்றிருக்கத் தேவை இல்லை. கையறு நிலை அவர்களுக்கு உள்ளபடியே இருக்கலாம், ஆனால் உங்களுக்கு அல்ல, ”49-O”, உங்களை நாடி, நீங்கள் இருக்கும் இடம் தேடி வருகிறது. இறையாண்மைக்கு குந்தகம். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல்! என்று எவரும் சொல்ல முடியாது.
வெவ்வேறு திருநாமங்களில் உலாவரும் ஈழ ஆதரவு அமைப்பினரே, நீங்கள் உங்கள் விருப்பம் போலவே, ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டு பிரிவுகளாவே இருந்து கொள்ளுங்கள். ஆனால், மக்களிடம் கோரும் ஆதரவு மட்டும் ஒன்றாக இருக்கட்டும். ஆம், “இனப் படுகொலையை எதிர்ப்போர் 49-Oவில் ஒப்பமுக்குங்கள்!” என்ற கோரிக்கையாக இருக்கட்டும்.
இந்த ஒற்றைச் சொற்றொடரையும், இந்த அமைப்பைச் சார்ந்தவர்களான நீவிர் விவாதம் செய்ய விழைவீர்களா? அப்படியெனில், எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரையும் விமர்சிக்கும் முகாந்திரம் உங்களுக்கு உளதா என்பதனை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்!
--பணிவுடன் பழமைபேசி
’அமெரிக்கக் கொசு’க்கு எத்தனை பல்?
என்னோட வேலையிடத்துல உடன் வேலை செய்யுற அமெரிக்க வெள்ளைச்சாமி, அலுவலக நேரத்துல செய்யுற ஒரு நல்லகாரியம்ன்னா, அது அவன் அன்றாடம் ஆங்கில அகரமுதலியில பதிவாகிற புதுச் சொற்கள், மற்றும் அறிவியல் சுற்றறிக்கையில இடம் புடிக்கிற புதுக் கண்டுபிடிப்புகளையும் படிச்சு, எங்ககூட அந்த தகவல்களைப் பகிர்ந்துகிடுறதுதாங்க.
அப்படி அவன் சமீபத்துல சொன்னது, உருப்பெருக்காடியில பார்த்து, கொசுக்கு 47 பல் இருக்குறதை உறுதிப்படுத்தின செய்திங்க. அமெரிக்கக் கொசுக்கு 47 பல்லுன்னா, நம்ம ஊர்லயும் அப்படித்தாங்க இருக்கும். ஆசுவாசப்படுத்திகுங்க, வெந்திப்பு(tension) வேண்டாம், உடலுக்கு ஆவாது!சரி, நேற்றைக்கு நீர்நிலையப் பாக்குறோம் பேர்வழின்னு, பாதிக்கடல்தான் தாண்டினோம். வாங்க, மிச்ச சொச்சத்தையும் பாத்துப்புடலாம்.
- தளிக்குளம் (tank sorrounding a temple): கோவிலின் நாற்புறமும் சூழ்ந்த அகழி போன்றதொரு நீர்நிலை
- தாங்கல் (Irrigationtank): தமிழகத்தின் ஒரு பகுதியில் ஏரியின் மறு பெயர்
- திருக்குளம் (Temple tank): ’புட்கரணி’ எனும் வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். கோவிலுக்கு அணித்தாகிய குளம்.
- தெப்பக்குளம் (Temple tank along with parapet walls): மக்கள் காண்பதற்கேற்ப உள்ள கோயிற்குளம்.
- தொடுகிணறு (Digwell): ஆற்றின் ஊடகத் தோண்டிய கிணறு
- நடைகேணி (Large well with steps): நடந்து சென்று தண்ணீர் எடுக்கக் கூடிய கிணறு
- பிள்ளைக்கிணறு (Well in middle of lake): குளம், ஏரி போன்றவற்றின் உள்ளமைந்த கிணறு
- பொங்குகிணறு (Well with bubbling spring): கொப்புளித்து ஊற்றெடுக்கும் கிணறு
- பொய்கை (Nature Lake): தாமரை முதலிய மண்டிக் கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீர்நிலை
- மடு (Deep place in a river): ஆற்றினிடையே உள்ள ஏதமான ஆழ் பகுதி
- மடை(Small sluice with single ventway): ஒரு கண்ணுடைய சிறுமதகு
- மதகு (Slice with many ventways): அடைப்புத் திறப்பு கொண்ட பல கண்களாய் அமைந்த மடை
- மறுகால்(Surplus water channel): மிகைநீர் கழிக்கக் கூடிய கால்வாய்
- வலயம்(Round tank): வட்டமாய் அமைந்த குளம்
- வாய்க்கால் (Small water course): ஏரியிலிருந்து பயிருக்கு நீர் பாயும் சிறு கால்
- வாவி (Stream): ஆற்று, ஊற்று நீர் வழிந்தோடு நிலை, நீரோடி
- புனற்குளம் (Tank of rain water): அகத்தில், மழைநீரால் நிரம்பியுள்ள நீர்நிலை
- பூட்டைக்கிணறு(Well with water lift): கம(வ/ப)லை நீர் பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு
இது போக, நீர்நிலையைப் பொதுவாகக் குறிக்கும் பெயர்கள்: அருநிலை, அலந்தை, இலந்தை, உடுவை, உவளகம், உவன்றி, ஏல்வை, கயம், குடா, குழி, கொண்டம், பள்ளம், கோட்டகம், சரசு, சலதரம், சலாசயம், சித்தேரி, சுண்டை, சூழி, தட்டம், தாங்கல், பயம்பு, வாரி, ஓருமம். இந்த சொற்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருப்பனவாதலால், மேற்குறிப்பிட்ட பட்டியலில் இடம் பெறவில்லை மக்காள்.
வந்து, கடல்ல விழுங்க இராசா?!
வணக்கம்! என்னவோ தெரியலை, அரசியலைப் பத்தின ஒரு யோசனையாவே இருக்கு! ஆனாலும், அதைப்பத்தி எழுதி, ஒரு இடுகைய வீணாக்கணுமா? வேணாம் விடுங்க! நாம வழக்கம் போல, நம்ம பேச்சு வழக்குல இருக்குற எதனா ஒன்னை, அலசித் துவச்சிக் காயப் போடலாம் வாங்க.
அது பாருங்க, நாம ஊர்கள்ல இருக்கும் போது குளம், குட்டை, ஏரி, தடாகம்ன்னு நீர் நிலைகளைப் பத்திப் பலதும் பேசக் கேட்டு இருக்கோம். தமிழ் செம்மொழி ஆச்சுங்களே? துல்லியமா, ஒன்னை குழப்பமில்லாம சொல்ல வல்லது. அப்ப, நீர் நிலைகளைத் தமிழ் எப்படிக் கையாளுது? மனசுல கேள்வி தோணுதே?? வாங்க, தமிழ் என்னதாஞ் சொல்லுதுன்னு பார்க்கலாம்.
- அகழி(Moat): கோட்டைக்கு வெளில அகழ்ந்தமைச்சிருக்குற நீர் அரண்
- அணை, அணைக்கட்டு(Dam): ஆற்றின் குறுக்கே அணைத்துக் கட்டப்பட்ட நீர்நிலை
- அருவி(Water fall): மலைமுகட்டுல இருக்குற தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது
- ஆழிக்கிணறு(Well in shore): கடலருகே இருக்கும் கிணறு
- ஆறு (River): அறுத்துக் கொண்டு பெருகி ஓடுவது
- இலஞ்சி (Reservoir for drinking): குடிதண்ணீர்த் தேக்கம்
- உறை கிணறு(Ring well): மணலில் தோண்டி, சுடுமண் வளையமிட்ட கிணறு
- ஊருணி (Drinking water tank): பருகுநீர் உள்ள நீர்நிலை
- ஊற்று(Spring): நிலத்தடியிலிருந்து நீர் ஊறி வரும் நிலை
- ஏரி(Irrigation Tank): வேளாண்மைக்கு உதவும் நீர் நிலை
- ஓடை (Brook): ஊற்றெடுத்து ஓடி வரும் வாய்க்கால்
- கட்டுக்கிணறு (Built-in-well): அகச்சுவர் கட்டியெழுப்பிய கிணறு
- கடல் (Sea): பரவை என்றும் சொல்லப்படும் பெரும் நீர் நிலை
- கம்வாய்(Irrigation Tank): ஏரிக்கு தென் மாவட்டங்களில் சொல்லப்படுவது, கண்மாய்
- கலிங்கு (Sluice with many ventwavs): தேக்கம் உடைப்பெடுக்காமல் இருக்கக் கட்டப்படும் கடைவாய் நீர் வெளி
- கால் (Channel): நீரோடும் வழி
- கால்வாய் (Supply channel to a tank): ஏரி, குளம், ஊருணிக்கு நீர் கொண்டு செல்லும் வழி
- குட்டம் (Large pond): பெருங்குட்டை
- குட்டை(Small Pond): சிறுகுட்டை
- குண்டம் (Small pool): சிறு குளிக்கும் நீர்நிலை
- குண்டு(pool): சிறுகுழியான நீர்நிலை
- குமிழி(Rock cutwell): நிலத்தின் பாறையைக் குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச் செய்த நீர்நிலை
- குமிழி ஊற்று (Artesian fountain): அடியிலிருந்து கொப்புளித்து வரும் நீர்நிலை
- குளம் (Bathing Tank): ஊரார் குளிக்கப் புழங்கும் நீர்நிலை
- கூவம்(Abnormal tank): ஒழுங்கில் அமையாத நீர்நிலை
- கூவல்(Hollow): ஆழமற்ற, கிணறு போனறதொரு பள்ளம்
- கேணி(Large Well): பெருங்கிணறு
- சிறை (Reservoir): தேக்கி வைக்கப்பட்ட பெரிய நீர்நிலை
- சுனை(Mountain Pool): மலையிடத்து இயல்பாய் அமைந்த நீர்நிலை
- சேங்கை( Tank with duck weed): பாசிக் கொடி மண்டிய குளம்
- தடாகம், தடம்(Beautiful bathing tank): அழகுற அமைக்கப்பட்ட குளம்
வந்து, நல்லாத் தமிழ்க் கடல்ல விழுந்தீங்களா? ஆனாப் பாருங்க, நாம பாதிக் கடல்தான் தாண்டி இருக்கோம். ஆகவே, மிச்சத்தை நாளைக்கு மேலதிக இடுகையா இடுறேன்!
கிணற்றுக்கு அழகு தண்ணீர்!
பழமைக்கு அழகு தமிழ்!!
4/03/2009
அமெரிக்காவில்: இப்ப என்ன எல்லாம் நான் செய்ய மாட்டேன்?
- நவீன அலைபேசிய(iPhone) பொது இடத்துல வெச்சிகிட்டு, ச்சும்மா அதைப் பாக்கவும், இதைப் பாக்கவும்ன்னு துருத்தித்தனம் செய்ய மாட்டேன்.
- Polo துணிமணிகளைப் போட்டுகிட்டு, கழுத்துப் பட்டையக் கிளப்பிகிட்டு பொது இடங்களுக்குப் போக மாட்டேன்.
- பொக்கணத்துல (wallet) குறைஞ்சது இருபது வெள்ளிப் பணம் இல்லாம வெளில போக மாட்டேன்.
- எங்கிட்ட இருக்குற புத்தம் புது மகிழூர்திய, அலுவலகத்துக்கு போய் வர மட்டுமே புழங்கிகிட்டு, பொது இடங்களுக்கு இருக்குற பழைய சிற்றூர்தியில போவேன். புது வண்டிய வெளி இடங்களுக்கு அதிகமாப் பொழங்க மாட்டேன்.
- வீட்டுக்கு வெளில தங்கமணி கோலம் போடுறதையோ, மாவிலை கட்டுறதையோ அனுமதிக்க மாட்டேன்.
- வேலைல இருக்குற மாதிரியே காட்டிக்க மாட்டேன்!
- Buffalo, Philadelphiaன்னு போற பக்கம், வேலை உண்டு, நானுண்டுன்னு வாலைச் சுருட்டி வெச்சிகினு இல்லாம இருக்க மாட்டேன்.
- அலுவலகத்துலயும் சரி, பொது இடத்துலயும் சரி, எந்த விதமான விவாதங்கள்லயும் ஈடுபட மாட்டேன்.
- உசுலும், வீட்டுக் காப்பீடும் இல்லாம இருக்க மாட்டேன்.
- தொலைபேசி எண், வீட்டு முகவரி இதுகளை தேவையில்லாம எங்கயும் பகிர்ந்துகிட மாட்டேன்.
- வங்கியில இருக்குற பாதுகாப்பு பெட்டகத்தைப் புழங்காம இருக்க மாட்டேன்.
- யாராவது ஒருத்தர், ரெண்டு பேரோட ரெண்டு மூனு நேரத்துக்கு ஒரு தடவையாவது, அலைபேசில பேசுறத வழமையானதா வெச்சிக்காம இருக்க மாட்டேன்.
வருமுன் காப்போம்!
சமூகம் பேணுவோம்!!