மகா சிவராத்திரி சமீபத்துல, எங்க ஊர், சலவநாயக்கன் பட்டிப் புதூர் சுப்ரமணி அண்ணன், ஆறுக்குட்டி அண்ணனவிக தோட்டத்துக் களத்து மேட்டுல பள்ளயம் போட்டுப் படுகளம் நடக்குமுங்க. தோட்டங் காட்டுல விளைஞ்ச மொச்சை, கொண்டக்கடலை, அவரை, பயறு, கொள்ளுன்னு பலதும் போட்டு வேக வெச்சி, அதுகளை தோட்டங் காட்டைச் சுத்தியுமு இருக்குற நாட்றாயன், பொடாரப்பன், கருப்பராயங் கோயில்ல படப்பு வெச்சி, அவிசாயங் குடுத்துக் கடைசில களத்து மேட்டுல படுகளம் நடக்கும். சாயங்காலம் ஆரம்பிச்சிதுன்னா, வெடியக் காலம் நாலு மணி, அஞ்சு மணி வரைக்கும் இந்த நிகழ்ச்சி நடக்குமுங்க. ஊரே கூடி வேடிக்கை பாக்கும். அண்ணனவிக அந்தியூர்க்கார ஊட்டுப் பசங்கன்னு சொல்லி, எங்க அண்ணந் தம்பி மூனு பேர்த்தையும் நெம்ப நல்லாப் பாத்துகிடுவாங்க. பல தானியங்களையும் கலக்கி வேக வெச்சிப் படப்பு போடுறாங்க பாருங்க, அதைச் சொல்லுறதுங்க பள்ளயம்முன்னு. அந்த ஞாவகத்துல தானுங்க, அவியலுக்கும் கிச்சடிக்குமு தொணையா நம்ம பள்ளயம். இஃகிஃகி!++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு வாரம் பத்து நாளா, இழு பறியா இருந்த, பொருளாதார வளர்ச்சித் தூண்டுநிதி ($838 billion economic stimulus bill)க்கான மசோதா சித்த நேரத்துக்கு முன்னாடிதேன், ஒரே ஒரு ஓட்டு எச்சா வாங்கி, அமெரிக்க மேல்சபையில செயிச்சு இப்ப அதிபரோட கைச்சாத்துக்கு முன்னேறி இருக்குங்க. நெம்ப நல்ல விசயமுங்க இது. இதனால, வேலை வாய்ப்பு பெருகும், வரிகெல்லாம் குறையும், பங்குச் சந்தையில போட்ட காசு கொஞ்சம் தெப்புத் தேறும்ன்னு எல்லாரும் நெம்ப எதிர்பார்க்குறாங்க.
++++++++++++++++++++++++++++++++++++++++++
கபலை ஓட்டுறதுன்னும், சால் ஓட்டுறதுன்னுஞ் சொல்லுறது இதானுங்க. சின்ன வயசுல, எங்க தோட்டத்துல எங்க அப்பாரு ஓட்டுறதை அப்பிடி நின்னு வேடிக்கை பாப்பனுங்க. காளைக, கிணத்து மேட்டுல, கீழ இருந்து மேல வரும்போது மெதுவா வரும்ங்க, சால்ல தண்ணிய மோந்த பொறகு, ய்ஃகெய்ன்னு சொன்னதுதான் தாமுசம், காளைக ரெண்டும் சல்லுன்னு கீழ போகும்ங்க. அப்ப, ஓட்டுறவிங்க, வடத்து(கயிறு) மேல ச்சங்குன்னு எட்டி லாவகமா உக்காருவாங்க பாருங்க, அது அசத்தலா இருக்கும். அவ்ளோ பெரிய சாலு கெணத்துக்குள்ள இருந்து மேல வார்றதப் பாக்க, அப்பிடியொரு வேடிக்கையா இருக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++
(அன்பால)அடக்கி ஆளணும்; இல்ல,
(அன்புக்கு)அடங்கிப் போகணும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++
அப்புறம், இந்த நீக்குப்போக்கு, போக்குநீக்கு, சாக்குப் போக்குன்னெல்லாம் ஊர்ல சொல்லிப் பேசுறதக் கேட்டு இருப்பீங்க. அதுகளக் கொஞ்சம் பாக்குலாமுங்க இன்னைக்கி. அவன் பலே ஆளு, நாலுந்த் தெரிஞ்சவன், முக்கியமா நீக்குப்போக்கு தெரிஞ்சவன்னு சொல்லக் கேட்டு இருப்பீங்க. அதாவது, மத்தவங்ககிட்ட இருக்குற குத்தம்(குற்றம்) கொறைகளைக் கண்டுக்கிடாம, சகசமாப் பழகுறவன்ங்கிறது அர்த்தமுங்க. கெட்டவற்றை மனதில் வைத்துக் கொள்ளாமல் நீக்கும் போக்கு கொண்டவன்ங்றதுங்க.
சரி, அப்ப போக்குநீக்குன்னா? எதோ ஒன்னு வெளியில போறமாதர இருந்தா அது போக்குநீக்கு(make a drain)ங்க. மேல கபலை ஓட்டுறதுல சால் இருக்கு பாருங்க, அதைச் செய்யும் போது, தண்ணி சிந்தாம ஓட்டை ஒடசல் இல்லாமச் செய்ன்னு சொல்லும் போது, வழக்கத்துல சொல்லுறது, "டேய்! சால்ல எந்த விதமான போக்குநீக்கில்லாம இருக்கோனும். இல்லாட்டி, உங்கப்பங்கிட்டச் சொல்ல வேண்டி வரும்!!"ன்னு.
சாக்குப்போக்குங்றது உங்களுக்கு சுலுவுல தெரிஞ்சி இருக்கும். எதானாச்சி சும்மா, ஒப்புக்குச் சப்பான(excuse) காரணத்தைச் சொல்றது. சாக்குங்றதே ஒரு போலியான செய்கை! அதுலவேற, மகாப் போலியான சாக்குன்னு சொல்லுறதுதாங்க நொண்டிச் சாக்கு. இது எப்பிடி இருக்குன்னு பாருங்க?! இஃகிஃகி!
நொண்டிக் குதிரைக்கு, சறுக்கினது சாக்கு!