8/31/2008

மூணாம் விழுது! படியுங்கள்!!

"விண்ணூர்"னா எல்லார்த்துக்கும் ஞாபகம் வர்றது, ஊரோரம் இருக்குற ஊர் ஆலமரம். யாரையாவது வீட்ல போயிக் கேக்கும்போது, அந்த ஆள் வீட்ல இல்லைன்னா, போயி ஊர் ஆலமரத்துல பாருங்கன்னுதான் பதிலு வரும். அந்த மரம், பத்து தலைக்கட்டுக்கு மேல பாத்து இருக்கும். மரத்துக்கு நடுவாப்புல இருக்குறது பிரதான மரம். அதை "பெரிய மரம்"னு சொல்லுவாங்க.

பெரிய மரத்தைச் சுத்தி நெலத்துல பதிஞ்சது மூணு விழுதுக. பதியாதது நெறைய. மொத்தமா ஒரு பத்து பதினஞ்சு இருக்கும். மரத்துல நெறைய பச்சைக் கிளிகளும் குருவிகளும், குயில்களும், காக்கா கூட்டமும் கூடு கட்டி இருக்கும். எப்பவும் ஓகோன்னு களை கட்டி இருக்கும். இந்த பெரிய மரத்தை சுத்தித்தான் ஊர்ப் பொம்பளைங்க ஒக்காந்து எதனாச்சும் ஊர்ப்பழமை பேசிட்டு இருப்பாங்க. காட்டுக்கு களை வெட்டப் போறவங்க காலைல இங்கதான் ஒண்ணு கூடி, அப்புறம் ஒண்ணாப் போவாங்க. கொழந்தைக்கு சாப்பாடு ஊட்டுற பொம்பளைங்களும் பெரிய மரத்தடியில இருப்பாங்க. சமயத்துல, "அவ இவங்கூடப் போனான். இவ அவங்கூடப் போனா"ங்கிற கதைக எல்லாம் ஓடிட்டு இருக்கும், பெரிய மரத்துல. "ஏண்டி நீ பெரிய மரத்தடில வச்சி, அப்படி சொன்னியாமே"ன்னு கேட்டு சண்டை எல்லாம் போடுவாங்க.

நெலத்துல பதிஞ்சு இருந்த முதலாவது விழுது, அந்த மேட்டைத் தாண்டி விநாயகங்கோயில் மூலைல இருக்கும். அதுக்குப் பக்கத்துலதான் அந்த வட்டப்பாறை தரையில பாதியும் வெளியில பாதியும் தெரியுற மாதிரி கெடக்கும். பாறைக்கு நடுப்புல மூணுகல் வெளையாட்டு (ஆடு புலி ஆட்டம்) வெளையாடுறதுக்கு உண்டான வரிக செதுக்கி இருக்கும். எந்நேரமும் வயசானவிங்க ரெண்டு பேர் உக்காந்து வெளையாடிட்டு இருப்பாங்க. அந்த ரெண்டு பேர்த்த சுத்தி மத்த பெரியவிங்க உக்காந்து, ஆடுற வெளையாட்டை வேடிக்கை பாத்துட்டு இருப்பாங்க. பாறையச் சுத்தி, ஒரே வெத்தலை பாக்கு எச்சையா இருக்கும். பெரியவிங்க இருக்குற எடம் ஆச்சே!

அந்த ரெண்டாவது விழுது, கடைசியா நெலத்துல பதிஞ்சது. சுத்துப்புறம் சின்ன அளவுல இருக்கும். தெக்கால போற இட்டேரி, இந்த விழுதுக்குத் தொட்டாப்புல இருக்கும். அப்புறம், இதைச்சுத்தி நெலத்துல பதியாத விழுதுக நாலஞ்சு, தரையில இருந்து கொஞ்சமா மேல தூக்குனாப்புல இருக்கும். சின்ன வயசுக் கொழந்தைக, ஆம்பளைப்பசங்களும் பொம்பளைப் புள்ளைகளுமா ஒண்ணு சேந்து தூரி கட்டி வெளையாடுவாங்க. சில நேரங்கள்ல சுத்திச் சுத்தி வெளையாடுவாங்க. வாண்டுக அவுக வயசுக்கு, அவுக வெளையாட்டை வெளையாடிட்டு இருப்பாங்க. நெறைய நேரங்கள்ல அண்ணனோ, அப்பிச்சியோ மரத்தடியில, வேற விழுதடியில இருப்பாங்க. இல்லைன்னா அம்மாவோ ஆத்தாவோ பெரிய மரத்தடியில இருப்பாங்க.

மூணாவது விழுது, கொஞ்சம் மேட்ல இருந்து கீழ்ப்பொறமா, காணவேடாங் கோயில் மூலைல இருக்கும். அந்த விழுது கொஞ்சம் கெழக்குப்பாத்த மாதிரி இருக்கும். அதனால வெயில் நெறைய நேரம் அங்க விழுகும். அதனால பெரிய வயசுப் பசங்க மட்டுந்தான் அந்த விழுதுப் பக்கம் ஒக்காந்து எதென்னாச்சும் பேசி சிரிச்சுட்டு இருப்பாங்க. காலைல ஆறு மணிக்கெல்லாம் ஊருப் பசங்க இங்க வந்துருவாங்க. ஆறு மணியில இருந்து வரப் போக. இப்படி இராத்திரி ஏழு மணி வரைக்கும் அந்த விழுதுல கூட்டம் இருந்துட்டே இருக்கும். வயசுப் பசங்க கூடுற எடம்ங்றதுனால, சுத்தி ஒரே துண்டு பீடிகளாக் கெடக்கும். சமயத்துல குடிக்கறதுக்கு பீடி இல்லைனா, கீழ கெடக்குற துண்டு பீடிகள்ல இருக்குற, பெரிய துண்டு பீடி எடுத்தும் குடிப்பாங்க.

இந்த மூணாவது விழுதுல வெச்சித்தான் கோயிந்தனுக்கும் மயில்சாமிக்கும் பழக்கம். ரெண்டு பேரும் ஒரே பீடியக் குடிப்பாங்க. ஒண்ணா சேந்து, கணேசங் கடைக்கு டீ குடிக்கப் போவாங்க. இப்படியே ரெண்டு பேரும் சேந்து வாழ்க்கைய ஓட்டிகிட்டு இருந்தாங்க. கூலி வேலைக்குப் போய்ட்டு இருந்த
இவிங்களுக்கு அதுல நாட்டம் கொறைஞ்சு போச்சு.

"டேய் மயிலு, எத்தன நாளைக்குடா இப்பிடி வெயில்லயும் மழைலயும் கெடந்து சாவறது?"

"ஆமாடா, நானும் அதையேதான் யோசனை பண்ணிட்டு இருந்தேன். என்னடா பண்ணுறது? ஊட்ல வேற, சின்ன அம்மினி வயசுக்கு வந்துட்டா. சீக்கிரம், நாலு காசு சம்பாதிக்கனும்டா."

"சரியாச் சொன்ன! தனலச்சுமி அக்கா காளியம்மன் கோயிலுக்கு பக்கத்துல டீக்கடை வெக்க சொல்லுது!!"

இப்படி ஆரம்பிச்ச இவிங்க, ஊருக்குள்ள ஒரு டீக்கடை சேந்தே போட்டாங்க. கணேசங் கடைக்கும் இவிங்க கடைக்கும் மைல் தூரம் இருக்கும். அதனால காளியம்மன் கோயில் பக்கத்துல இருக்குறவங்க, டீ கடைக்குப் போகாமயே இருந்தாங்க, இத்தினி நாளும். இப்ப இவிங்க கடை வந்ததுக்கு அப்புறம், எல்லாரும் இவிங்க கடைக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க. கோயிந்தனும் மயில்சாமியும் ஒத்துமையா கடை நடத்திக் காசு பாக்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு பேரும், வீட்ல இருந்த அக்கா தங்கச்சிக்கு கண்ணாலம் பண்ணி வெச்சி, ஆளுக்கு ஒரு வீட்டையும் கட்டி, அவிங்களும் கண்ணாலம் கட்டி, ரெண்டு பேர்த்துக்கும் ஆளுக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு.

மயிலு கல்லாவுல இருந்தா கோயிந்தன் அடுப்படியிலயோ, மேல் வேலையாவோ இருப்பான். கோயிந்தன் கல்லாவுல இருந்தா, மயிலு வேற வேலை பாத்துட்டு இருப்பான். இப்படி ரொம்ப நல்லா, யாவாரம் போய்ட்டு இருந்துச்சு.

இந்த நேரத்துல இருவது வருசமா நடக்காத கிராமசபைத் தேர்தல் வந்துச்சு. ரெண்டு பேர் தலைவர் பதவிக்கு போட்டி போட்டாங்க. ஒருத்தர் அருணாசலம். அடுத்தவர் சண்முகம். ரெண்டு பேரும் வேற வேற சாதி. கிட்டத்தட்ட சம பலம் இருக்குறவங்க. தேர்தல்னா வேற என்ன? வசூல் தான்! அருணாசலம் கச்சி ஆளுங்க, காளியம்மங் கோயில் டீக்கடைக்கு வர்றாங்க.

"டே மயிலு, கடை எல்லாம் நல்லாப் போகுதா? நீங்க எல்லாம் நல்லா இருக்கணும்டா. கடையச்சுத்தி இருக்குறது நம்ம சாதி சனம். அவிங்க இல்லாட்டி, இந்த பத்து வருசமா உங்க யாவாரம் நடந்து இருக்குமாடா?"

"நீங்க சொல்லுறது சரிதானுங்க! ஆனா, கோயிந்தன் வெளில போயிருக்குறான்..............."

"என்னடா இழுக்குற?.... நீ என்ன இருந்தாலும் நம்ம சாதிப்பய புள்ள.... கடைய சுத்தி இருக்குறது நம்ம பசங்க......"

யோசிச்சு பாத்த மயிலு, கடை நல்லா நடக்கணுமின்னு, படக்குனு ஒரு ஆயிரம் ரூவா எடுத்துக் குடுக்க, வந்த கூட்டம் வாங்கிட்டுப் போயிருச்சு.

அதே நேரம், கோயிந்தன் வாழை எலக்கட்டு எடுக்க, சண்முகத்தோட பங்காளியோட வாழைத் தோப்புக்கு எப்பவும் போல போயிருந்தான். போன எடத்துல,

"கோயிந்தா, வாடா, வா வா! உங்கிட்ட நாங்களே வரணும்னு இருந்தோம்!!"

"என்ன சித்தப்பா, ஏதாவது பாக்கி இருக்கா? நான், கணக்கு வழக்கு எல்லாம் சின்னாம்மாகிட்ட போனவாரம் சரி பண்ணி, மிச்சம் இருந்த ஆயிரத்து முந்நூறு ரூவாயக் குடுத்துட்டனே?!"

"அது இல்லடா.... அது நீ எப்ப வேணாலும் குடுக்கலாம். நீ நம்ம பய! அண்ணன், தலைவருக்கு நிக்குது பாரு. அதாண்டா, உங்கடைக்கு ஆயிரத்து எண்ணூறுன்னு இரசீது போட்டு வெச்சு இருக்கேன்!!"

"சித்தப்பா, கடைல மயிலு இருப்பான். அவன்கிட்ட......."

"என்னடா இழுக்குற? நீ நம்ம பயன்னு எலக்கட்டு, வாழைத்தார், கடைக்கு வேணுங்ற வெறகு எல்லாத்தையும் சகாய வெலைல, நீங்க கடை வெச்ச நாள்ல இருந்து தந்துகிட்டு இருக்கோம். நாஞ்சொல்லுறது சரியா இல்லையா? அப்ப, இனி சந்தை வெலைக்கே........"

யோசிச்சு பாத்த கோயிந்தன், கடை யாவாரம் நல்லா எப்பவும் போல இருக்கணுமின்னு, "பட"க்குனு கேட்டதை விட இருநூறு ரூவா அதிகமா, ரெண்டாயிரம் எடுத்துக் குடுத்துட்டு, எலக்கட்டையும் எடுத்துட்டு வந்து, கடை வேலையப் பாக்க ஆரம்பிச்சுட்டான் வழக்கம் போல.....

வசூல் செஞ்ச கச்சிக்காரங்க சும்மா இருப்பாங்களா? வசூல் தொகைய ஒலி பெருக்கியில சொல்ல, அங்கதான் ஆரம்பிச்சது பிரச்னை. ஆனா, மயிலுவுக்கும் கோயிந்தனுக்கும் இதைக் கேக்க எங்க இருக்குது நேரம்.....

ஆலமரத்தடியில வெளையாடுனது அந்தக்காலம். சின்னப் பசங்க கிராமசபை அலுவலக வளாகத்துல தொலைக்காட்சி முன்னாடி இருக்குறது இந்தக் காலம். அங்க இருந்த பசங்க, கோயிந்தன் மகன்கிட்டயும், மயிலு மகன்கிட்டயும் வசூல் விசயத்த எடுத்துச் சொல்லி ஒண்ணுக்கு ரெண்டா போட்டுக் குடுக்க , விபரம் போச்சு மயிலு பொண்டாட்டி சிவகாமி கிட்டயும், கோயிந்தன் பொண்டாட்டி வேலுமணிகிட்டயும்.

அடுத்த நிமுசத்துலயே கடை முன்னாடி,

"நான் எப்படி பணம் கொறச்சலாக் குடுத்துட்டு, என்னோட சாதி சனத்தோட பொழங்க முடியும்? கூட இருந்து, அவிங்க புத்தியக் காமிச்சுட்டாக! " ன்னு, மயிலு பொண்டாட்டி சிவகாமி.

"எச்சாக் குடுத்ததுல என்ன தப்பு? எஞ்சாதியோட சகாயம் மட்டும் வேணும்... காசு ரெண்டு சேத்திக் குடுக்கக் கூடாதோ?"ன்னு, சிவகாமியோட சத்தம் கேட்டு ஓடியாந்த, கோயிந்தன் பொண்டாட்டி வேலுமணி.

நிமுச நேரத்துல, கோயிந்தனும் மயிலுவும் விசயம் என்னன்னு தெரிஞ்சுக்குறதுக்குள்ள எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு. அப்புறம் என்ன, இருந்த கடை மயிலுவுக்கு! எதுத்தாப்புலயே புதுக் கடை ஒண்ணு, கோயிந்தனுக்கு. இட்லி தோசை போடுறவன் மயிலுகிட்ட, சட்னி சாம்பார் செய்யுறவன் கோயிந்தன்கிட்ட. டீ போடுறவன் மயிலுகிட்ட, வடை போண்டா போடுறவன் கோயிந்தன்கிட்ட. ஊர் சனத்துல பாதிப்பேரு பட்டணம் போயித்தான் இட்லி வடை சாப்புடறது இப்ப. மிச்சம் இருக்குறதுல பாதிப்பேர் மயிலு கடைக்கு, மிச்சம் இருக்குறவங்க கோயிந்தன் கடைக்கு. யாவாரம் வெளங்குமா?

மொதல்ல மயிலு குடும்பம் தெருவுக்கு வந்துச்சு. கடன், குடும்ப பாரம்னு மனசு ஒடஞ்சு போன மயிலு நெஞ்சு வலின்னு படுத்தவன் எந்திரிக்கவே இல்ல. அப்படியே பாடைல வடக்க போய்ச் சேந்துட்டான். போய்ச் சேந்து மாசம் ஆறு ஆவுது.


இங்க கோயிந்தனுக்கு ஓரளவு பரவாயில்ல. பையன் பட்டணத்துல படிக்குறான். ஆனாலும், இவனுக்கு எப்பவும் மயிலு நெனப்பு தான். சரின்னுட்டு, ஒரு மன அமைதிக்காக ஆலமரத்தடியில சித்த இருந்துட்டு வரலாம்னு போறான். எந்த மூணாவது விழுதுல மயிலுகோட பழக்கத்தை ஆரம்பிச்சானோ, அங்க சித்த இருந்துட்டு வரலாம்னு போறான். இவன் அந்தப் பக்கம் போயி ரொம்ப நாளாச்சு. ஆனா, இன்னைக்குப் போறான்......

போனா, அங்க அந்த மூணாவது விழுதை எடுத்துட்டு, ஊர் சனங்க தொலைக்காட்சி பாக்குறதுக்குன்னு புதுக்கட்டடம் ஒண்ணு ஆயிட்டு இருக்கு. அதப் பாத்த கோயிந்தனுக்கு, நெஞ்சு லேசாக் கட்டுனா மாதிரி இருந்தது. சரின்ட்டு, பெருசுக வெளயாடிட்டு இருந்த வட்டப் பாறைல ஒக்காரலாம்னு முதலாவது விழுதுக்குப் போறான். அங்க பாத்தா, கட்டடம் கட்டுறதுக்கு கல் வேணும்னு வட்டப் பாறையயும் தோண்டிப்புட்டாங்க. அந்தக் காட்சியப் பாத்த அவன், அந்த இடத்துல அந்த விநாடி மயிலுகிட்டயே போயிச் சேந்துட்டான்.

சாதி வெறியும், வளர்ச்சிங்கிற போர்வைல நடக்குற இறையாண்மைத் திருட்டுஞ்சேந்து, மயிலு, கோயிந்தன், வட்டப்பாறை, தன்னோட புள்ளை மூணாம் விழுதுன்னு எல்லார்த்தையும் போட்டுத் தள்ளின சோகத்துல, இப்பவும் அழுதுட்டு இருக்கு நம்ப ஊர் ஆலமரம்.


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் -மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி!

20 comments:

பழமைபேசி said...

"இந்த மாதிரி ஒரு வேலைக்காரி கிடைக்க மாட்டாள்"னும், "வேலைக்காரி பேரு கிட்டாள்"ன்னும் அர்த்தம் வர்ற மாதிரி சிலேடை நயத்துல "வேலைக்காரி கிட்டா"ன்னு ஒரு
கவிதைக்கு தலைப்பு வெச்சு இருந்தேன்.

அதே பாணியில, வெச்சதுதான் இந்தத் தலைப்பும், "மூணாம் விழுதுங்ற இந்தக் கதையப் படீங்க"ன்னும், "மூணாம் விழுது கதை கருத்துக்கு, படி(comply)யுங்க"ன்னும் இரட்டை அர்த்தம் கொண்டு இருக்கு.

vetri said...

பழமை பேசியாரே,

காலத்துக்கேற்ற, நெஞ்சைத்தொடும் பதிவு இது!! இது ஒரு காலம் நிச்சயம் நடக்கலாம் என்று எண்ணி, எங்க ஊர் ஆல மரத்தை மறக்காமல் ஒளிப் பதிவு செய்து கொண்டு வந்திருக்கிறேன்!!

ஜெய்

பழமைபேசி said...

//vetri said...
பழமை பேசியாரே,

காலத்துக்கேற்ற, நெஞ்சைத்தொடும் பதிவு இது!! இது ஒரு காலம் நிச்சயம் நடக்கலாம் என்று எண்ணி, எங்க ஊர் ஆல மரத்தை மறக்காமல் ஒளிப் பதிவு செய்து கொண்டு வந்திருக்கிறேன்!!

ஜெய்
//
வாங்க ஜெய்! இங்க ஒக்காந்துட்டு நாம பொலம்புறதத் தவிர வேறென்ன செய்ய முடியும்? எதொ, இந்த மாதிரி எழுதியாவது மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்.
நீங்க, ஒளிப்பதிவு பதிஞ்சுட்டு வந்து இருக்கீங்க.... சமத்துதான்!

Mahesh said...

கிட்டத்தட்ட நெசமான கதை மாதிரி இருக்கு.... மரங்களும், கொளங்களும், கோயில்களும் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வந்தா.... பல பேர் கதை கந்தல்தான்...

பழமைபேசி said...

//Mahesh said...
கிட்டத்தட்ட நெசமான கதை மாதிரி இருக்கு.... மரங்களும், கொளங்களும், கோயில்களும் சாட்சி சொல்ல கோர்ட்டுக்கு வந்தா.... பல பேர் கதை கந்தல்தான்...
//

நான் ஊருக்குப் போயி ரெண்டு வருசம் ஆச்சுங்க மகேசு! ஆனா, மத்தவங்க சொல்லுறாத வெச்சுப் பாத்தா, "அசோகர் சாலையின் இரு மருங்கிலும் மரங்கள் நட்டார்!"ன்னு நாம படிச்சதுக்கும், அவிங்க பாடப் புத்தகத்துல போட்டதுக்கும் அர்த்தமும் சாட்சியும் இருக்காது போல!

http://urupudaathathu.blogspot.com/ said...

அருமையான நடை..

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
அருமையான நடை..


//வாங்க! வாங்க!! ரொம்ப நன்றி!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆஹா.. உள்ளதான் இருக்கீங்களா ??

http://urupudaathathu.blogspot.com/ said...

////////மூணாவது விழுது, கொஞ்சம் மேட்ல இருந்து கீழ்ப்பொறமா, காணவேடாங் கோயில் மூலைல இருக்கும். அந்த விழுது கொஞ்சம் கெழக்குப்பாத்த மாதிரி இருக்கும். அதனால வெயில் நெறைய நேரம் அங்க விழுகும். அதனால பெரிய வயசுப் பசங்க மட்டுந்தான் அந்த விழுதுப் பக்கம் ஒக்காந்து எதென்னாச்சும் பேசி சிரிச்சுட்டு இருப்பாங்க. காலைல ஆறு மணிக்கெல்லாம் ஊருப் பசங்க இங்க வந்துருவாங்க. ஆறு மணியில இருந்து வரப் போக. இப்படி இராத்திரி ஏழு மணி வரைக்கும் அந்த விழுதுல கூட்டம் இருந்துட்டே இருக்கும். வயசுப் பசங்க கூடுற எடம்ங்றதுனால, சுத்தி ஒரே துண்டு பீடிகளாக் கெடக்கும். சமயத்துல குடிக்கறதுக்கு பீடி இல்லைனா, கீழ கெடக்குற துண்டு பீடிகள்ல இருக்குற, பெரிய துண்டு பீடி எடுத்தும் குடிப்பாங்க.////////


நேரில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு ..
நடையில் வியக்க வெய்க்கிறீர்கள்..

http://urupudaathathu.blogspot.com/ said...

////சாதி வெறியும், வளர்ச்சிங்கிற போர்வைல நடக்குற இறையாண்மைத் திருட்டுஞ்சேந்து, மயிலு, கோயிந்தன், வட்டப்பாறை, தன்னோட புள்ளை மூணாம் விழுதுன்னு எல்லார்த்தையும் போட்டுத் தள்ளின சோகத்துல, இப்பவும் அழுதுட்டு இருக்கு நம்ப ஊர் ஆலமரம்.////


எல்லா கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு ஆலமரத்தின் பின்னணியில் இப்படி பட்ட சோகங்கள் பல இருக்கும்..

பழமைபேசி said...

உருப்புடாதது_அணிமா said...
////////மூணாவது விழுது, கொஞ்சம் மேட்ல இருந்து கீழ்ப்பொறமா, காணவேடாங் கோயில் மூலைல இருக்கும். அந்த விழுது கொஞ்சம் கெழக்குப்பாத்த மாதிரி இருக்கும். அதனால வெயில் நெறைய நேரம் அங்க விழுகும். அதனால பெரிய வயசுப் பசங்க மட்டுந்தான் அந்த விழுதுப் பக்கம் ஒக்காந்து எதென்னாச்சும் பேசி சிரிச்சுட்டு இருப்பாங்க. காலைல ஆறு மணிக்கெல்லாம் ஊருப் பசங்க இங்க வந்துருவாங்க. ஆறு மணியில இருந்து வரப் போக. இப்படி இராத்திரி ஏழு மணி வரைக்கும் அந்த விழுதுல கூட்டம் இருந்துட்டே இருக்கும். வயசுப் பசங்க கூடுற எடம்ங்றதுனால, சுத்தி ஒரே துண்டு பீடிகளாக் கெடக்கும். சமயத்துல குடிக்கறதுக்கு பீடி இல்லைனா, கீழ கெடக்குற துண்டு பீடிகள்ல இருக்குற, பெரிய துண்டு பீடி எடுத்தும் குடிப்பாங்க.////////


நேரில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு ..
நடையில் வியக்க வெய்க்கிறீர்கள்..//எல்லாம் ஒரு அனுபவந்தான்..... ஆனா, நீங்க நேசம் சொல்லுறீங்களா? இல்ல, கலாய்ப்பா?

பழமைபேசி said...

உருப்புடாதது_அணிமா said...
////////மூணாவது விழுது, கொஞ்சம் மேட்ல இருந்து கீழ்ப்பொறமா, காணவேடாங் கோயில் மூலைல இருக்கும். அந்த விழுது கொஞ்சம் கெழக்குப்பாத்த மாதிரி இருக்கும். அதனால வெயில் நெறைய நேரம் அங்க விழுகும். அதனால பெரிய வயசுப் பசங்க மட்டுந்தான் அந்த விழுதுப் பக்கம் ஒக்காந்து எதென்னாச்சும் பேசி சிரிச்சுட்டு இருப்பாங்க. காலைல ஆறு மணிக்கெல்லாம் ஊருப் பசங்க இங்க வந்துருவாங்க. ஆறு மணியில இருந்து வரப் போக. இப்படி இராத்திரி ஏழு மணி வரைக்கும் அந்த விழுதுல கூட்டம் இருந்துட்டே இருக்கும். வயசுப் பசங்க கூடுற எடம்ங்றதுனால, சுத்தி ஒரே துண்டு பீடிகளாக் கெடக்கும். சமயத்துல குடிக்கறதுக்கு பீடி இல்லைனா, கீழ கெடக்குற துண்டு பீடிகள்ல இருக்குற, பெரிய துண்டு பீடி எடுத்தும் குடிப்பாங்க.////////


நேரில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு ..
நடையில் வியக்க வெய்க்கிறீர்கள்..//எல்லாம் ஒரு அனுபவந்தான்..... ஆனா, நீங்க நேசம் சொல்லுறீங்களா? இல்ல, கலாய்ப்பா?

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னங்க இப்படி கேக்குறீங்க??

அனுபவித்து தான் சொல்கிறேன் நண்பரே...

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...

வெறியும், வளர்ச்சிங்கிற போர்வைல நடக்குற இறையாண்மைத் திருட்டுஞ்சேந்து, மயிலு, கோயிந்தன், வட்டப்பாறை, தன்னோட புள்ளை மூணாம் விழுதுன்னு எல்லார்த்தையும் போட்டுத் தள்ளின சோகத்துல, இப்பவும் அழுதுட்டு இருக்கு நம்ப ஊர் ஆலமரம்.////


எல்லா கிராமங்களில் இருக்கும் ஒவ்வொரு ஆலமரத்தின் பின்னணியில் இப்படி பட்ட சோகங்கள் பல இருக்கும்..//

நிச்சயமாங்க.....

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
என்னங்க இப்படி கேக்குறீங்க??

அனுபவித்து தான் சொல்கிறேன் நண்பரே...
//
பாராட்டுக்கு நொம்ப நன்றிங்க.... எனக்கு நொம்ப சந்தோசமா இருக்கு.... உங்க பின்னூட்டம் பாக்கும் போதும்....பாராட்டுற போதும்.......

Anonymous said...

மூணாம் விழுது படித்தேன். மிக அருமையான, கோர்வையான் நடை. ஒரு ஆழ்ந்த உண்மையை, மிக யதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள். கதையில் உள்ளது போல், தினம், தினம்..ஏதோ ஒரு விழுது, எங்கோ வெட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. வெட்டுபவர்களுக்கு, அது சமுதாயத்தின் ஆணிவேரையே வெட்டுவதற்கு சமம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ஆறுதல்! விழிப்புணர்வு வர ஆரம்பித்து இருக்கிறது. நான் இருக்கும் காஷ்மீரில் உள்ள மக்கள், திருமணத்தில் அதிக செலவு செய்வதில்லை. ஏழை, பணக்காரன் எல்லோரும் அளவாகத்தான் செய்ய வேண்டும். மிகையான பாகுபாடும், படாடோபமும் ஓரளவு இதனால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

பழமைபேசி said...

@@chitravini said...

Dear Anna,

Thanks for the comments and I am at Client and sorry for typing in english. Take care and Thanks again.

பழமைபேசி said...

//நான் இருக்கும் காஷ்மீரில் உள்ள மக்கள், திருமணத்தில் அதிக செலவு செய்வதில்லை. ஏழை, பணக்காரன் எல்லோரும் அளவாகத்தான் செய்ய வேண்டும். //

இது மகிழ்ச்சி தரக் கூடிய விசயமா இருக்கு...

Anonymous said...

உறவும் நட்புமாக வாழ்ந்த தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள். வளர்ச்சி என்ற பெயரில் வாழ்வு முறை மாறுவதால் சமூகமும் மாறுகிறது. பெயரின் பின்னால் படித்தப் பட்டம், அதனால் அயல் நாட்டில் வேலை; சுற்றம் துறந்து தனித்தீவாய் அயல் நாட்டில் இருக்கும் நம் போன்ற தரைத்தொடா விழுதுகள் வேரூன்ருவது எங்கே? எப்போது?

பழமைபேசி said...

//கவிதா said...
உறவும் நட்புமாக வாழ்ந்த தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள். வளர்ச்சி என்ற பெயரில் வாழ்வு முறை மாறுவதால் சமூகமும் மாறுகிறது. பெயரின் பின்னால் படித்தப் பட்டம், அதனால் அயல் நாட்டில் வேலை; சுற்றம் துறந்து தனித்தீவாய் அயல் நாட்டில் இருக்கும் நம் போன்ற தரைத்தொடா விழுதுகள் வேரூன்ருவது எங்கே? எப்போது
//

வணக்கம்! மிக நல்ல கேள்வி, விடைதான் தெரியவில்லை!! :-o)