10/29/2011

10/23/2011

புனித லூயி நகர மிசிசிப்பி ஆற்றங்கரைக் காட்சிகள்

ஓ மிசிசிப்பி
ஓ மிசிசிப்பி
என்னில் என்னை மறந்தேனே மிசிசிப்பி
உன்னில் என்னைக் கொடுத்தேனே மிசிசிப்பி
ஓ மிசிசிப்பி
ஓ மிசிசிப்பி


Walking along, whistling a song,
Half foot and fancy free,
A big riverboat, passing us by, she’s headed for New Orleans
There she goes, disappearing around the bend.
Roll on Mississippi; you make me feel like a child again.

A cool river breeze, like peppermint leaves,
The taste of it takes me back,
Chew’n on a straw, torn overalls,
I can’t hold an old straw ???? and muddy river.
Just like a long lost friend.
Roll on Mississippi; you make me feel like a child again

Roll on Mississippi, big river roll.
You’re the childhood dream that I grew up on.
Roll on Mississippi, carry me home.
Now I can see I’ve been away too long.
Roll on, Mississippi, roll on.

Now, when the world's spinning round, too fast for me,
And I need a place to dream.
So I come to your banks, I sit in your shade
Relive the memories
Tom Sawyer and Huckleberry Finn
Roll on Mississippi; you make me feel like a child again

Roll on Mississippi, Big river roll
You’re the childhood dream that I grew up on.
Roll on Mississippi, carry me home.
Now I can see I’ve been away too long.
Roll on, Mississippi, Roll on, Mississippi,
Roll on, Mississippi, Roll on
Roll on, Mississippi, Roll on
Roll on, Mississippi, Roll on

மிசிசிப்பி ஆற்றினூடே!!

நாம் மிசிசிப்பி ஆற்றங்கரையோரமாக கடந்த நான்கு நாட்களாக இருந்து வருவது தெரிந்ததே! பயணத்தினூடாகக் கட்டுரை எழுதுவதுதான் நமது எண்ணமாக இருந்தது. இருப்பினும், இடையறாத காட்சிப் பொழுதுகள் மற்றும் தமிழ் உறவுகளுடனான சந்திப்பு என, நம் எண்ணம் ஈடேறவில்லை.

எனினும், கட்டுரைகள் தாமதமாக வெளியாகும் என்பதை ”எழிலாய்ப் பழமை பேச” சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

நான்காம் நாளான நேற்று, மிசிசிப்பி ஆற்றின் துணையாறுகளில் ஒன்றான ‘மெராமெக்” ஆற்றங்கரையோரம் இயற்கையின் எழில் பருகிப் பயனடைந்தோம். இதோ, அதன் போழ்து எடுக்கப்பட்ட சில படங்கள்!



















கெழுவளம்மிகு நண்பர் விஜய் மணிவேல் அவர்களுடன்



அமெரிக்கப் பெரியாற்றுடன் ஐந்து நாட்கள் - 1

மிசிசிப்பி(பெரியாறு)

10/21/2011

உள்ளூர் நிலவரம்

மேப்பில் மரத்தில்
தார்ச்சிட்டுக் குருவிகள்
சிலுசிலு ஓசைதனைச் சீராய்
சிந்திக் கொண்டிருந்தன!

எழுந்து வெளியே வந்தேன்
கீழ்வானத்தில் வெள்ளை
பூசப்பட்டுக் கொண்டிருந்தது

அட விடிஞ்சிடுச்சு இங்க!
ஊரில் விடிந்துவிட்டதா?
கேட்டுத்தான் பார்ப்போமே?!

ஆட்டம் போட்ட குண்டர்கள்
அனைவரும் தோற்றிருந்தனர்
மகிழ்ச்சி கொண்டது மனம்!

அப்ப இனி?
வென்றதெல்லாம் யாரு??
தெளிவாய் சொன்னார்கள்,
உறங்கி இருந்த வேறு சில குண்டர்கள்!

அட,
அங்க இன்னும் விடியல போலிருக்கு!!

10/20/2011

அமெரிக்கப் பெரியாற்றுடன் ஐந்து நாட்கள் - 1

அமெரிக்கப் பெரியாற்றைக் கண்ட நாள் முதற் கணமே எம்மைப் பற்றிக் கொண்டது என்றுந்தீராத காதல். அதன் சுவை மிகுந்த வரலாறு, எத்தகையவரையும் கட்டிப் போட்டு சிந்திக்க வைக்கும். அதன் உச்சிதொட்டு அடி வரை சென்று காட்சியுற்று வாழ்வுதனை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டுமென்கிற தணியாத ஆசை எனக்கு உண்டு.

அமெரிக்கப் பெரியாறு(மிசிசிப்பி) மெம்பிசு நகரில் எம்மை ஈர்த்து அரவணைத்தது. அவ்வரவணைப்பின் நீட்சியாகத்தான் குடும்பத்தோடு செயின் லூயிசு மாநகருக்கு எம்மை இவ்வாரம் வரவைத்தாள் அவள். எம் ஒட்டு மொத்த குடும்பமே மிசிசிப்பியுடன் ஒன்றிப் போயிருக்கிறார்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது.

நேற்று மதிய நண்பகல் உணவுக் கிரிகைகளை முடித்துக் கொண்டு, காளியர்வில் நகரை விட்டுக் கிளம்பினோம். முதல் நிறுத்தமாக, மெம்பிசி நகர முற்றத்தில் நிறுத்தி மிசிசிப்யின் ஓட்டத்தைக் கண்டுகளித்தோம். எங்களைப் பார்த்து வெகுவாய்ச் சிரித்து வைத்தாள் அவள்.

“அப்பா, நம்ம ஆத்துக்குள்ள படகுலயே செயின்ட் லூயிசு போனா என்னப்பா?” என்றாள் மூத்தமகள். “இல்லடா கண்ணூ, படகுல எதிரோட்டமா போறதுக்கு நெம்ப நேரமாகும் இல்லையா?” எனச் சொன்னாள் தாய்க்காரி.

டென்னசி மாகாணத்தின் மாநகரான மெம்பிசு, அமெரிக்காவின் தென்பகுதியில் ஆற்றின் கிழப்புறம் இருக்கிறது. மிசெளரி மாகாணத்தின் செயின்ட் லூயிசு மாநகரம் என்பது, அமெரிக்காவின் வடபகுதியில் ஆற்றின் மறுகரையில் அமைந்திருக்கிறது.

ஆற்றை மறுகரைக்கு எங்கு வைத்துக் கடப்பது என ஆய்ந்த போது, மெம்பிசு நகரில் வைத்தே மறுகரையைக் கடப்பது என்றும், அங்கிருந்து ஆற்றை ஒட்டியே மேல் நோக்கிச் செல்வது என்றும் முடிவாகியது. ஆங்காங்கே நிறுத்தி, பெரியாற்றைக் கண்டு கொண்டே செல்ல ஏதுவாக இருக்கும் என்பதே காரணமாகும்.

I-40 தேசியப் பெருஞ்சாலையினூடாக ஆற்றைக் கடந்து, ஆர்கன்சாசு மாகாணத்தில் இருக்கும் மறுகரையை அடைந்தோம். சில மைல்தூரம் சென்றவுடன், ஆற்றின் ஓரமாகவே அமெரிக்காவின் வடபகுதிக்குச் செல்லும் I-55 பெருஞ்சாலையும், I-40 ஆகியவற்றின் சந்திப்பை அடைந்தோம்.

சந்திப்பில் வடக்கு திசை நோக்கிப் பயணித்ததை அவதானித்த மகள், வினவத் துவங்கினாள். “அப்பா, இரட்டை இலக்க பெருஞ்சாலைக்கும், ஒற்றைப்பட இலக்க பெருஞ்சாலைக்கும் என்ன வேறுபாடு??” என்றாள். “ஒற்றை இலக்க எண்ணுள்ள பெருஞ்சாலைகள், அமெரிக்காவில் தென்வடலாக இருப்பவை. இரட்டை இலக்க எண்ணுள்ள பெருஞ்சாலைகள், அமெரிக்காவில் கிழமேற்காக அமைந்திருப்பவை. மூன்று இலக்க எண்ணுள்ள பெருஞ்சாலைகள், ஒரு நகரைச் சுற்றிலும் வட்ட வடிவத்தில் அமைந்திருப்பவை”, என விளக்கமளித்தாள் தாய்க்காரி.

அடுத்து எங்கே வைத்து பெரியாற்றுக் கரையில் இறங்குவது என யோசித்த போது, மறுகரையில் எங்கு கெண்டகி மாகாண எல்லை துவங்குகிறதோ, அந்த இடத்தில் வைத்து இறங்குவது என முடிவாகியது. அதன்படி, ஃகோவார்டுவில் எனும் சிறுநகரத்தில் இருக்கும் ’புது மேட்ரிட்” பாலத்தின் வழியாக ஆற்றின் நடுவே இருக்கும் ”வேண்டோவர்” ஆற்றுவீயரங்கம் சென்றடைந்தோம்.

பச்சைப் பசேல் எனக் கண்களுக்கு விருந்தாக இருந்தது நிலப்பரப்பு. “வேண்டோவர்” இடைக்குறையின் இருபுறமும் சென்று மிசிசிப்பியானவள் எப்படி ஓடிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டோம். நிதானத்தோடும், பொறுப்போடும் ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.

அங்கே நாங்கள் பேச்சுக் கொடுத்த, செவ்விந்தியரான மேக்சிம் கேம்பல் என்பார் ஆற்றுவியரங்கம், அதன்மீதான தன்னுடைய அவதானம் முதலானவற்றை எங்களுக்கு உணர்ச்சி பொங்க விவரித்தார். தனக்குத் தெரிந்து மிகச்சிறிய வணடல் திட்டுதான் இங்கே இருந்தது. வண்டற்ப் பெருக்கம் அதிகரிக்க, அதிகரிக்க ஆற்றிடைக்குறுக்கின் பரப்பும் உயரமும் பெருத்துக் கொண்டே போவதாகவும் கூறினார்.

”ஆற்றுவீயரங்கம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது??”, என்றெல்லாம் மூத்தம்கள் இடையறாது கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டே இருந்தாள். அதற்கெல்லாம் விடையளித்துக் கொண்டிருந்த தாய்க்காரி, ஓய்ந்து போய் கைவிரித்துவிடவே அவள் எம்மை நாடியவளானாள்.

ஆற்றுவீயரங்கம் அல்லது ஆற்றிடைக்குறுக்கம் என்பது, ஆற்றில் வரும் பெருந்தொகையான வண்டல் நிலைத்து நிற்பதனால் ஏற்படுவது என்று சொல்லி ஆற்றுப்படுத்தினோம். ‘மெசபடோமியா” குறித்தும் சொல்லிப் புரியவைத்தோம்.

தொடர்ந்து, அடுத்து எங்கே நிறுத்தி மிசிசிப்பியை அவதானிப்பது எனவும் கேட்டறிந்து கொண்டாள் மகள். மிசிசிப்பியும், ஒஃகாயோ ஆறும் புணர்ந்து கொள்ளும் இடமான இல்லினாய் மாகாணத்தில் இருக்கும் ”கெய்ரோ” எனும் இடத்தைத் தெரிவு செய்தோம். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களது பரப்பில் வடியும் நீரைப் பெருமளவில் கொண்டு வருபவள்தான் ஒகாயோ ஆறு. மொத்த நீரின் கொள்ளளவில், மிசிசிப்பியை விடவும் ஒகாயோதான் அதிக அளவில் நீரைக் கோண்டு வருபவளாவாள்.

இலினோய் மாகாணத்தின் கெய்ரோ நகரில் ஒஃகாயோவும், மிசிசிப்பியும் ஒருமித்துக் கொள்ளும் அழகே அழகுதான். ஆனால் நாங்கள் அங்கு வெகுநேரம் நிலைத்திருக்கவில்லை. அங்கே இருந்து புறப்படும் தருணத்தில், ’ஆறு’ என்பதற்கும், ‘நதி’ என்பதற்கும் உண்டான மாறுபாட்டை வினவினாள் இல்லாள்.

”ஆறு” என்பது ஓடோடி மற்றொரு ஆற்றோடோ அல்லது கடலோடோ கலப்பவள். ”நதி” என்பது, தானாக உயிர்த்தோ அல்லது, இயற்கையாகவே ஆற்றிலிருந்து கிளைத்து நிலத்தில் ஓடிச் செல்பவள். ஆனால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்றும் கூறி வைத்தோம்.

பிறகு புறப்பட்டு, ஒரு சில மணி நேரத்திற்குள்ளாக செயின்ட் லூயிசு நகரத்தில் இருக்கும் மேரியாட் விடுதியை வந்தடைந்தோம். மிசெளரி தமிழ்ச்சங்கத் தலைவரும், ‘அருவி’ இதழின் துணை ஆசிரியருமான திரு.ராஜ் மற்றும் திரு.பழனி அவர்களும் விடுதிக்கே வந்திருந்து வரவேற்பு நல்கி, பின்னர் திரு.பழனி அவர்களது இல்லத்தில் உண்டி புசித்துத் திரும்பினோம்.

குடும்பத்து ஆட்கள், ஒரு சிறு அறையில், ஒற்றைப் படுக்கையில் உறங்கியது இப்போதுதான். குடும்பத்திற்குள் என்றுமில்லாத ஒரு அணுக்கம் இருந்ததை உணர்ந்தோம். இரண்டு வயது கொண்ட மகளின் மழலையும் குறுஞ்செயல்களும் எங்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. பெரிய வீடுகளில் தனித்திருப்பதன் கொடுமை, கூட்டுக்குடும்பங்கள் அருகிப் போனது என எளிமையின் அருமை, பெருமைகளை நினைவு கூர்ந்து கொண்டோம். கூட்டுக்குடும்பத்தில் நான் வாழ்ந்த நாடிகளின் நினைவினூடே உறக்கமும் எம்மை ஆரத்தழுவிக் கொண்டது.

--மிசிசிப்பியின் அரவணைப்பு தொடரும்

10/18/2011

தமிழ்மணம், என்ன செய்யலாம்??

தமிழ்மணம், என்ன செய்யலாம்? நிறைய நேரம் பிடிக்கவில்லை. சிந்தனை உயிர்த்த சிறிது நேரத்துக்குள்ளாகவே, அறிவுப்புல்த்துல அகப்பட்டுடிச்சி. வேற என்ன? சிக்கின சிக்குமானங்களைத் படிக்கலாம் வாங்க!

தமிழ்மணம்

அனைவரும் நினைப்பது என்ன? தமிழ்மணம் என்றால் தமிழ் கமழ்வது, அல்லது தமிழ் மணப்பது என்றுதான். ஆனால், அது அப்படி அல்ல.

மணம் என்றால் கூடுதல். இரு மனங்கள் ஒன்றாகக் கூடி இணையும் மங்கள நிகழ்ச்சியானது, திருமணம். அது போலத்தான், தமிழர்கள் ஒன்றாகக் கூடும் இடம் தமிழ்மணம்.

இன்னும் ஐயப்பாடு நீங்கவில்லையா? மணலி என்று சொல்கிறோம்? அது என்ன மணக்கும் இடமா?? அல்ல! மக்கள் கூடும் இடம் மணலி! மணத்தக்காளி? கொத்து கொத்தாகக் கூடியபடி இருக்கும் பழங்கள் மணத்தக்காளி! ஆக, நிச்சயமாக தமிழ்மணம் என்பது தமிழர்கள் தமிழால் கூடிக் குலாவும் இடம்தான்.

அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே? ஆற்றங் கரையோரத்து உராஞ்சிக்கல், ஒற்றையடிப் பாதையில் இருக்கும் சுமைதாங்கிக் கல், ஊருக்குள் ஆங்காங்கே கிடக்கும் மாசிக்கல் போல தமிழனுக்கான கட்டமைப்புக்கல்லாக அதுவும் இருந்துவிட்டுப் போகட்டுமே?!

உராய்ஞ்சு தள்ளுவதை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் உராஞ்சிக்கல்லுக்கு உயிர் என ஒன்றிருந்தால் அதற்கு நோகாதா?

சுமைதாங்குகிற கல்லுக்குத்தான் உயிர் இருந்தால் நோகாதா?

அங்குமிங்குமாகப் போய் வரும் பாதசாரிகள், கால்களின் மாசை அப்புறப்படுத்தும் பொருட்டுத் தம் கால்க்ளால் போட்டுத் தேய்க்கும் போது, மாசிக்கற்களுக்கு உயிர் என ஒன்றிருந்தால் வலிக்காமல் போகுமா??

வரலாற்றுச் சின்னங்களாய் இருக்கும் அவற்றுக்கு என்றேனும் ஒரு பொழுதை காணிக்கை ஆக்கிக்கொள்வோமே?! ஆண்டாண்டு காலமாய் வலி தாங்கும் அவற்றுக்கு, என்றேனும் ஒரு பொழுதில் நாமும் ஏதேனும் ஒரு வலியைப் பொறுத்துக் கொள்வோமே??

10/17/2011

ஓடுகாலி

இளமாலை நேரம்
பறந்து செல்வதும்
கூட்டத்தில்
சங்கமித்து இருப்பதும்
வாசலடியில் வந்திறங்கி
தனிக்காதல் கொள்வதுமாய்
ஒன்றோடொன்று
மூக்குரசி மூக்குரசி
முத்தம் சிந்திக்
கொண்டிருந்தன
சிட்டுக்குருவிகள்!

இருள் பூசும்
கிழக்குப்புறக் கண்மாய்
வேண்டாமென
மேற்கு வானம் நோக்கி
மஞ்ச வெயிலில்
முகங் கழுவிக் கொண்டே
சென்றேன் நான்!

நினைவுக்கெட்டின
நாள்தொட்டு
நான் உறவாடிய
பூவரசப் பெரியம்மா
காற்றுப் பாட்டியுடன்
சேர்ந்து கொண்டு
கலகலவெனச் சிரித்தாள்!

பெரியம்மாவின்
காலைக் கட்டிக்கொண்டு
வாஞ்சையுடன் நின்றேன்;
மீண்டும் கலகலவென
சிரித்து வாழ்த்தியதில்
முதிர்மஞ்சள் பழுப்பிலைகள்
தலையில் விழுந்து தெறித்தன!!

அங்கிருந்த பாறையில்
பெரியம்மாவின் கீழேயே
அமர்ந்து கொண்டேன்!
அருகில் இருந்த
நெருஞ்சி மலரிடம்
வண்ணத்துப்பூச்சி
சத்தமின்றிக் கிசுகிசுத்தது
யாரோ ஒருவன்
அபலை போலத் தெரிகிறானே?!

அக்கணத்தில்
கிழக்குப்புறத்தில்
இருந்து வந்த நாயொன்று
எதிரில் வந்து நின்று
விட்டேத்தியாய்ப் பார்த்தது;
சிரித்து வைத்தேன்!
மேலும் கீழும் பார்த்துவிட்டு
’பட’க்கென வந்த திசையில்
ஓடிச் சென்றது!!

எட்ட இருந்த
எருக்கஞ் செடியில்
ஓணான் ஒன்று
தலையை அசைத்து
நையாண்டி காட்டியது
சிரித்துத் திரும்புகையில்
சென்ற நாய்
மற்றொரு நாயுடன்
வந்து நின்றது;
அவை இரண்டும்
ஒற்றைப் பார்வையாலே
ஏற இறங்கப் பார்த்திருந்தன!
பதிலுக்கு நானும் பார்த்தேன்!!

மேற்குப்புறந்தில்
இருந்து வந்த
மற்றொரு நாயும்
உடன் சேர்ந்து கொண்டது
ஒரு கணம்
ஒருசேரப் பார்த்தன
பிறகு மூன்றுமாக
ஏளனம் உமிழ்ந்து
மறுபக்கத்தில்
ஓடிப் போயின!

இவனொரு
ஓடுகாலியென
ஏளனம் உமிழ்ந்து
மறுபக்கத்தில்
ஓடிப் போயின!!
பூவரசப் பெரியம்மா
சொன்னாள்
“அழாதறா கண்ணூ!”