10/17/2011

ஓடுகாலி

இளமாலை நேரம்
பறந்து செல்வதும்
கூட்டத்தில்
சங்கமித்து இருப்பதும்
வாசலடியில் வந்திறங்கி
தனிக்காதல் கொள்வதுமாய்
ஒன்றோடொன்று
மூக்குரசி மூக்குரசி
முத்தம் சிந்திக்
கொண்டிருந்தன
சிட்டுக்குருவிகள்!

இருள் பூசும்
கிழக்குப்புறக் கண்மாய்
வேண்டாமென
மேற்கு வானம் நோக்கி
மஞ்ச வெயிலில்
முகங் கழுவிக் கொண்டே
சென்றேன் நான்!

நினைவுக்கெட்டின
நாள்தொட்டு
நான் உறவாடிய
பூவரசப் பெரியம்மா
காற்றுப் பாட்டியுடன்
சேர்ந்து கொண்டு
கலகலவெனச் சிரித்தாள்!

பெரியம்மாவின்
காலைக் கட்டிக்கொண்டு
வாஞ்சையுடன் நின்றேன்;
மீண்டும் கலகலவென
சிரித்து வாழ்த்தியதில்
முதிர்மஞ்சள் பழுப்பிலைகள்
தலையில் விழுந்து தெறித்தன!!

அங்கிருந்த பாறையில்
பெரியம்மாவின் கீழேயே
அமர்ந்து கொண்டேன்!
அருகில் இருந்த
நெருஞ்சி மலரிடம்
வண்ணத்துப்பூச்சி
சத்தமின்றிக் கிசுகிசுத்தது
யாரோ ஒருவன்
அபலை போலத் தெரிகிறானே?!

அக்கணத்தில்
கிழக்குப்புறத்தில்
இருந்து வந்த நாயொன்று
எதிரில் வந்து நின்று
விட்டேத்தியாய்ப் பார்த்தது;
சிரித்து வைத்தேன்!
மேலும் கீழும் பார்த்துவிட்டு
’பட’க்கென வந்த திசையில்
ஓடிச் சென்றது!!

எட்ட இருந்த
எருக்கஞ் செடியில்
ஓணான் ஒன்று
தலையை அசைத்து
நையாண்டி காட்டியது
சிரித்துத் திரும்புகையில்
சென்ற நாய்
மற்றொரு நாயுடன்
வந்து நின்றது;
அவை இரண்டும்
ஒற்றைப் பார்வையாலே
ஏற இறங்கப் பார்த்திருந்தன!
பதிலுக்கு நானும் பார்த்தேன்!!

மேற்குப்புறந்தில்
இருந்து வந்த
மற்றொரு நாயும்
உடன் சேர்ந்து கொண்டது
ஒரு கணம்
ஒருசேரப் பார்த்தன
பிறகு மூன்றுமாக
ஏளனம் உமிழ்ந்து
மறுபக்கத்தில்
ஓடிப் போயின!

இவனொரு
ஓடுகாலியென
ஏளனம் உமிழ்ந்து
மறுபக்கத்தில்
ஓடிப் போயின!!
பூவரசப் பெரியம்மா
சொன்னாள்
“அழாதறா கண்ணூ!”

4 comments:

சார்வாகன் said...

nice நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஓடுகாலியா. அந்த நாய்களுக்கு என்ன தெரியும் .
கொஞ்சம் விவரம் தேவை மணி.
மற்றபடி நீங்கள் பார்த்தப் பூவரசம்மாவையும் கண்மாயையும் பார்க்க ஆசை.

vasu balaji said...

நல்லாயிருக்கு கவிஞரே:)

பழமைபேசி said...

@@சார்வாகன்

நன்றிங்க!!

@@வல்லிசிம்ஹன்

வணக்கங்மா. நல்லா இருக்கீங்களா??

@@வானம்பாடிகள்

வாங்ணே... இஃகிஃகி