9/12/2011

மிசிசிப்பி(பெரியாறு)

அமெரிக்காவை இரண்டாகப் பிளந்து வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறாள் மிசிசிபி. எண்ணற்ற பல கதைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறாள் அவள். அமெரிக்காவுக்கு, அல்ல, இந்த உலகுக்கே தொண்டாற்றுபவளாய்த் திகழ்ந்து வருபவள் அவள். நாளெல்லாம் அடக்கமே உருவாய் இருந்தாலும், அவ்வப்போது சீறிப் பாய்வதும் உண்டு. அவளது சீற்றத்துக்கு முன்னால் எவரும் நிற்க இயலாதபடிக்கு வீரியத்தை உமிழக் கூடியவள் மிசிசிபி.

மெம்பிசு மாநகரம். டென்னசி மாகாணத்தின் ஓரத்தில், மிசிசிபி மற்றும் ஆர்கன்சாசு மாகாணங்களின் எல்லைகளைத் தொட்டாற்போல் இருக்கும் மாநகரம். மாநகர முற்றத்தின் விளிம்பைத் தொட்டு நளினமாய்ப் பாய்ந்தோடுகிறாள் மிசிசிபி.

மாநகர முற்றத்திற்கும் மிசிசிபிக்கும் இடையே மட் தீவு(mud island). தண்டவாட இலகு ஊர்தியில் ஏறித் தீவுக்குச் செல்லலாம். தீவில், மிசிசிபி ஆற்றை விவரிக்குமுகமாக மாதிரி ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. அது, ஆற்றின் பிறப்பிடம் மற்றும் வழித்தடம் முதலானவற்றை விளக்கும் பொருட்டு அமையப் பெற்றிருக்கிறது.

ஆற்றங்கரையில் அமர்ந்திருக்க, மிசிசிபியைத் தழுவிய காற்று நம்மீதும் படர்ந்து வருட, மெய் சிலிர்த்துப் போகிறது. அமைதியைத் தன்னகத்தே கொண்டவள் அவள். காண்போர் கண்களுக்கு மட்டுமல்ல, அண்டி வாழும் இலட்சோப இலட்சம் மக்களின் வாழ்க்கையிலும் பரவசத்தை ஊட்டுகிறாள் அவள்.

அமெரிக்காவின் வட கோடியில், மின்னசோட்டா மாகாணத்தின் மேற்கில் தன் பயணத்தைத் துவங்குகிறாள் மிசிசிபி. இவள் அங்கே ஓடி வந்ததாலேயே, மினியாபோலிசு - செயின்ட் பால் இரட்டை நகரங்கள் உயிர்த்து ஓங்கி வளர்ந்து வருகிறது. இரண்டும் இரு கரைகளில் அமைந்திருக்கின்றன.

அவ்விரு நகரங்களைக் கடந்து, விசுகான்சின் மாகாண எல்லையை இடித்துச் சரசமாடிக் கொண்டே வந்தவள், அயோவா மற்றும் இல்லினாய் மாகாணங்களின் எல்லையாய்ப் பரிணமிக்கிறாள். அயோவாவைக் கடந்து வந்து, மிசெளரி மாகாணத்தின் செயின்ட் லூயிசு மாநகரத்திற்குப் பொலிவூட்டுகிறாள் மிசிசிபி. கடக்கும் தூரமெங்கும் பல அருமை பெருமைகளைத் தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டுதான் வருகிறாள்.

அப்படியாக செயின்ட் லூயிசு மாநகரத்தில் இருந்து கீழே தெற்குப்புறமாக வந்தவளை, ஆர்கன்சாசு - டென்னசி மாகாண எல்லையிலே மெம்பிசு மாநகர முற்றத்திலே கண்டு மகிழ்கிறோம். அவளுள் ஆயிரமாயிரம் கதைகள்.

கடல் மட்டத்தினின்று 1475 அடிகள் உயரத்தில் பிறந்த அவள், மின்னசோட்டா மாகாணத்திலேயே 675 அடிகள் தாழ்வாகப் பாயத் துவங்குகிறாள். பிறகு படிப்படியாகக் குறைந்து 430 அடிகளுக்குத் தாழப் பாய்கிறாள் மெம்பிசு மாநகரில். இப்படிப் படிப்படியாகத் தாழ்ந்து, நியூ மெக்சிகோ கடலில் கலக்கும் போது அமைதியுறுகிறாள்.

மணிக்கு மூன்று மைல் வேகத்தில் பாயும் அவள், தான் உயிர்க்கும் இடாசுகா குளத்தில் பெய்யும் மழை நீரைத் தொன்னூறாவது நாளில்த் தான் சங்கமிக்கும் நியூ மெக்சிகோ கடலுக்குக் கொண்டு சேர்க்கிறாள் மிசிசிபி.

உயிர்க்கும் இடத்தில் முப்பது அடி அகலத்தைக் கொண்டவள், மெம்பிசு மாநகரில் முக்கால் மைல் தூர அகலத்தைக் கொண்டிருக்கிறாள். சீற்றத்தின் போது மூன்று முதல் ஆறு மைல்களாகவும் உருவெடுப்பாளாம் மிசிசிபி.

அமெரிக்காவுக்கு இவள் ஆற்றும் தொண்டு அளப்பரியது. கிட்டத்தட்ட 41 விழுக்காட்டு வட அமெரிக்கக் கண்டத்தின் பரப்பளவு கொண்ட, 31 அமெரிக்க மாகாணங்கள் மற்றும் கனடாவின் இரு மாநிலங்களின் நிலப்பரப்பான ஒரு இலட்சத்து என்பதினாயிரம் சதுர மைல்களில் வடியும் நீரை கடலுக்குக் கொண்டு சேர்ப்பவளும் இவளே.

மின்னியாபோலிசு நகரில் விநாடிக்கு 12000 கன அடி நீரைச் சுமந்து வரும் இவள், நியூ ஆர்லியன்சு நகரிலோ ஆறு இலட்சம் கன அடி நீரைக் கொண்டு வருகிறாள். இது போக, இடையில் நிறைய நீர்த் தேக்கங்களையும் நிரப்பிவிட்டுச் செல்கிறாள் மிசிசிபி.

260 வகையான நீர்வாழ் மீன்கள், எண்ணற்ற இதர நீர்வாழ்ப் பிராணிகள், வட அமெரிக்காவில் வாழும் பறவைகளில் 60% பறவைகள் என நிறைய உயிரினங்களுக்கு ஆதாரமாக இருப்பவளும் இவளே.

படகுகள், கப்பல்கள், கட்டுமரங்கள் எனப் பலவிதமான ஓடங்களையும் தன்னகத்தே ஓடவைத்துக் கொண்டிருக்கிறாள் மிசிசிபி.


வட அமெரிக்காவின் மிக நீண்ட, உலகில் நான்காவது நீண்ட ஆறாக இருக்கும் மிசிசிபியின் நீளம் தோராயமாக 3730 கிலோ மீட்டர்களாகும்.

விநோதமானது என்ன தெரியுமா? இவள் நீரை மட்டும் கடலுக்குக் கொண்டு வந்து சேர்க்கவில்லை. நாளொன்றுக்கு 436 டன் எடையுள்ள வண்டலையும் கொண்டு செல்கிறாள். ஆண்டு ஒன்றுக்கு 159 மில்லியன் டன் எடை கொண்ட வண்டலைக் கொண்டு போய்க் கடலில் விடுகிறாள். இதனால் சுற்றுப்புறச் சூழலுக்கு ஊறு நேர்வதாயும், கடல் மட்டம் உயர்ந்து வருவதாயும் தெரிவிக்கிறார்கள் சுற்றுப்புறச் சூழல் ஆய்வாளர்கள்.

மிசிசிபியைப் பேணுவது நம் கடமை எனப் பலர் களம் இறங்கி உள்ளனர். இயற்கை ஆர்வலர்களான நாமனைவருமே, நம் ஆறுகளைப் பேணுவது நம் கடமையாகக் கருத வேண்டும்.

மிசிசிபி என்றால். பிரெஞ்சு மொழியில் ’பெரிய ஆறு’ என்பதாம். மெம்பிசு நகருக்கு வியாபார நிமித்தம் பலரைக் கொண்டு வந்து சேர்த்ததில் மிசிசிபி பெரும் பங்கு வகித்தாளாம். அவளுக்கான பெருமைகள் அது மட்டுந்தானா? எம்மைக் குளித்துக் குளிர வைத்த பெருமையும்தான்!!

5 comments:

Vijayashankar said...

அருமை. மிசிசிப்பியை கடந்தால் தங்கம் ( வெஸ்ட் கோஸ்ட்) நிச்சயம் என்று பல கதைகளில் படித்துள்ளேன். இன்றும் கூட அது தான் அங்கு நடக்குது.

ஆன் தி மிசிசிப்பி என்று தொடக்கம் முதல் முடிவு வரை ( படகில் சென்று? ) ஒரு படம் வந்தால் நல்லா இருக்கும்.

அமுதா கிருஷ்ணா said...

சின்ன வயதில் புவியியலில் படித்த மிசிசிபி பற்றிய விபரங்கள் அருமை..

பழமைபேசி said...

@@Vijayashankar

அப்படி நிறைய இருக்குங்க... பார்ப்பதற்கு பரவசமாயும் இருக்கும்... விரைவில் தெரியப் படுத்துகிறேன்.

Murugeswari Rajavel said...

அகண்ட காவிரியை 'காவிரித் தாய்' என்போமே அதுபோல் பெரியாற்றினை விளித்து நீங்கள் சொல்லியிருக்கும் எழிலான பழமை,புதுமை.அழகிய படங்களும்,குடும்பத்தினருடன் தங்கள் உரையாடலும் அருமை.

ILA (a) இளா said...

நல்ல பதிவுங்க