6/14/2009

யோசனையா இருக்கு!

மக்களே வணக்கம்! கடந்த இரண்டு மூன்று வாரங்களாக வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் பண வீக்கம் தொடர்கிறது. இதனால் கடன் வட்டி, கல்நெய் விலை மற்றும் இதர பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதைக் காண்கிறோம். பொருளாதார மந்தம் தெளிந்தது போல்க் காணப்பட்டாலும், இன்னும் சரிவிலிருந்து மீளவில்லை. இந்நிலையில் G8 மற்றும் BRIC கூட்டங்கள் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர். இவ்விரு கூட்டங்களும் இவ்வாரத்தில் நடைபெற உள்ளது. மொத்தத்தில், கையிருப்பு இருக்கும்பட்சத்தில் பணமாக இருப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது. :-0(

நாம் ஒரு மாத விடுப்பில் 33 இடுகைகளை இட்டு, அவற்றில் பெரும்பாலானவை உங்களால் பெரும் வரவேற்பைப் பெற்றன. மிக்க மகிழ்ச்சி! ஆனால் விடுப்பு முடிந்து, Virgenia Westin Beachல் அமைந்திருக்கும் ஒரு நிறுவனத்திற்கு கட்டமைக்கப் போகும் பெரும் தொகையான ஒப்பந்த வேலைக்கு அச்சாரம் இட வேண்டியுள்ளதால் இடுகை இடுவதில் தற்காலிகத் தொய்வு!! எனினும் அவ்வப்போது வழமையான இடுகைகள் இட முயற்சிக்கிறேன் என்ற தகவலுடன்,

பழமைபேசி (எ) மணிவாசகம்.


6/12/2009

தட்டச்சு எழுத்துக காத்திருக்கு!

வேலூரு சிந்திலுப்பு
அணிக்கடவு பெதப்பம்பட்டி
புக்குளத்து ரோட்டுவழி
ஒய்யாரமா உடுமலை வந்துசேர
மாரியம்மன்கோயல் வீதிவழி
அலுங்காம அன்னநடை நடந்துவர
காது லோலாக்கு குலுங்கிவர
தாவணிக்கங்கு அசைஞ்சுவர
ஊர்க்கண்ணு மொய்யுதுன்னு
குனிஞ்சதலை நிமுராம
வாறவளோட அந்த பிஞ்சுவிரலுக
பட்டுச் சொகங்கொள்ள,
தட்டச்சு எழுத்துக காத்திருக்கு!
கூட அந்த அல்லப்பார்வைக்கு இந்த
பூத்துப்போன கண்ணுகளும் பாவிமனசும்!!

6/11/2009

என் மனைவி திருமணம்!

நீலமலைச் சாரலில் நெளிந்து வரும் தென்றலினை வளைய விட்டு, பால் போன்ற இதயங்களை உயிர்ப்பித்து, பண்பினையும் அன்பினையும் ஊட்டி விடும் பேரூர்தான் அந்த வஞ்சி நாட்டின் வாஞ்சை பொழில் நல்லூர் கோயம்பத்தூர்! பரந்து விரிந்த பல பஞ்சாலைகள் ஊருக்கு முதுகெலும்பென்றால், தொழில்நுட்பத்தில் மேலோங்கி அந்தநல்ல ஊருக்கு இதயமென அன்றைய காலத்தில் இருந்ததுதான் இலட்சுமி இயந்திர ஆலை, Lakshmi Machine Works(LMW).

ஊட்டிக்குச் செல்லும் மேட்டுப்பாளையம் சாலையிலும், தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தேழு(NH-47) அவினாசி சாலையிலும் இயந்திர ஆலையின் இளம்பச்சைச் சொகுசுப் பேருந்துகள் தவழ்ந்து திரிய, பெருமையாய்ப் பார்த்திடுவர் ஊர் மக்கள். தன் பிள்ளை, தன் மகன், தன் மகள், தன் பேரன், தன் பேத்தி இதிற்சென்று வேலை பார்த்து ஊதியம் ஈட்டுவது எந்நாளோ என ஏங்கித் தவித்ததும் உண்டு.

பிறவியிலேயே சற்று உயரமாய்ப் பிறந்ததின் பயனாய் நான்கு வயதிலேயே தன் வலக்கை தலைமேற்ச் சென்று மறுபக்கத்து காதைத் தொட்டுவிட, குடும்பத்து ஆசிரியர் அவனை ஐந்து வயதுப் பாலகனாக்கி பெயரையும் மாற்றி முதல் வகுப்பில் உட்கார வைத்துவிட, அந்த பாலகன் பதினேழு வயதிலேயே பட்டயப் படிப்பு முடிந்த கையோடு, கல்லூரியே நேரடியாக வேலைக்கு அமர்த்தியதின் பொருட்டு இயந்திர ஆலையில் பணி புரியலானான்! அதுவும் ஒரு பிரிவின் மேற்பார்வையாளனாக!!

மீசை முளைக்காத பாலகன், தன்னைவிட பல வயது மூத்த பணியாளர்களுக்கு முதன்மைப் பொறியாளனானான். உடன் பணிபுரிந்த ஏனைய அலுவலர்களும் அவனைவிட பல வயது மூத்தவர்களாகவே இருந்தனர். அதன்பொருட்டு அவன் அவர்களுக்கு குழந்தையானான். ஆம், “குழந்தை” என்றே அழைக்கப்பட்டானவன்.

பதின்மவயதுப் பாலகன் குழந்தை பணி புரிந்த பிரிவு, இழை உருளிப் பிரிவு( Flutted Rollers - FRS Department). அதே பிரிவில் உடன் வேலை செய்த தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் நாகராஜ், மனோகரன், ஜெயச்சந்திரன் முதலானோர். இவர்கள் அனைவருமே குழந்தையைவிட ஆறிலிருந்து பத்து வயது மூத்தோர், எவருக்கும் திருமணம் ஆகவில்லை. நல்ல குணமுடைய, சுவாரசியமிக்க இளைஞர்கள், நல்ல நண்பர்களும்கூட!

திங்கட்கிழமை மாலை நான்கு மணி இருபது நிமிடம்! இரண்டாவது நேர வேலைக்கு அலுவலர்களை ஏற்றி வந்த சொகுசுப் பேருந்து, இயந்திர ஆலையின் வாசலில் வந்து நிற்கிறது. சொகுசுந்தை விட்டிறங்கிய ஜெயச்சந்திரன் ஆலையினுள் உள்ள பதிவேட்டு அட்டையில்(time card) பதிந்து விட்டு உள்நுழைய, கண்காணிப்பாளர் கேசவன் பரிதாபமாகப் பார்த்துவிட்டுச் செல்கிறார். ஜெயச்சந்திரனுக்கு அவரது வித்தியாசமான பார்வை ஒரு வித வியப்பைத் தந்தது. அவர் ஏன் அப்படிப் பார்த்து விட்டுச் செல்கிறார் என்ற சிந்தனையினூடே தன் பிரிவான FRSக்குச் செல்கிறார்.

“Good Eveningடா நாகராஜ்!”

“Good Eveningடா!”

“எங்கடா மனோகரனைக் காணம்?”

“அவன் இங்கதாண்டா இருந்தான். ஒரு வேளை Sheet Metalக்கு அரவிந்தனைப் பாக்கப் போயிருப்பான்!”

“ஓ, அப்பிடியா? அப்புறம் எல்லா Machineம் நல்லாப் போகுதுதானே?:

“ஒன்னும் பிரச்சினை இல்லடா ஜெயச்சந்திரா! டேய், நான் மறக்கத் திரிஞ்சேம்பாரு, JB உன்னை வந்து பாக்கச் சொன்னாரு!”

“எதுக்குடா? எதும் பிரச்சினையா?”

“தெரியலடா, ஒன்னும் பிரச்சினை இருக்குற மாதரித் தெரியல!”

தரக்கட்டுப்பாட்டுக்கு(Quality Control) மேலாளரான இவர் (QC Manager) எதுக்கு தன்னை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார். நாம் ஏதும் வேலையில் தவறு செய்து விட்டோமோ? அல்லது, யாராவது தன்னைப் பற்றி மோசமாகக் கோள்மூட்டி விட்டார்களோ? இப்படிப் பல விதமான யோசனைகளின் ஊடே தனது மேலாளரான J.பாலகிருஷ்ணன் அவர்களுடைய அறையை அடைந்தார் ஜெயச்சந்திரன்.

“Sir, May I come in?"

"Yes!"

"Sir, Good Evening Sir!"

"வாப்பா ஜெயச்சந்திரா! உனக்கு ரொம்பப் பெரிய மனசு!! ஆனாலும் மனசு ரொம்பச் சங்கடமா இருக்குப்பா, வாழ்க்கைன்னு இருந்தா இப்படித்தான். அதுக்காக நாம நொடிஞ்சு போய் உக்காந்துற முடியுமா? அதையே நினைச்சுட்டு இருக்காத, ஆமா வீட்ல நீ ஒருத்தந்தான?”

அவர் பேசியது ஒன்றுமே விளங்காத ஜெயச்சந்திரன், “ஆமாங்க சார்!”

“நல்லதாப் போச்சு, இன்னும் ஒரு வருசங்கழிச்சு இன்னொன்னு பாத்துகிடலாம், நொம்ப செளரியமாப் போச்சு போ!”

“சார், நீங்க என்ன பேசுறீங்கன்னே ஒன்னும் புரியலீங்க சார்!” என்று தயங்கித் தயங்கி பயங்கலந்த மரியாதையுடன் சொன்னார் ஜெயச்சந்திரன்.

“யோவ், எனக்கெல்லாம் தெரியும்யா! இது உன்னோடதுதானே?” என்று வினவியபடியே எதையோ காண்பிக்க, ஜெயச்சந்திரனின் முகம் ஆப்பிள்பழத் தோல் போலச் சிவந்தது. பின் ஓரிரு நிமிடம் தனது மேலாளரிடம் ஏதோ பேசிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினார்.

நேராக தனது பிரிவான FRSக்கு வந்த ஜெயச்சந்திரன், கடுமையான முகத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,

“டேய் நாகராஜ், எங்கடா அந்த நாதாரி மனோகரன்?”

“டேய் என்றா நடந்துச்சு, இவ்ளோ கோவமா இருக்கே?”

“இல்லடா, அவனைக் கையக் கால ஒடைக்காம விடப் போறதில்லை இன்னைக்கு!”

“அண்ணா ஏனுங்ண்ணா இவ்ளோ கோவமா இருக்கீங்க, கொஞ்சம் அமைதியா...” என்றான், அந்த நேரத்திற்கு எங்கிருந்தோ வந்த குழந்தை.

“நீ ச்சும்மா இரு குழந்தை! நாயி, அவன் மண்டையப் பொளக்காம விடுறதுல்ல இன்னைக்கி, என்ன ஆனாலுஞ்சரி!”

இடைமறித்த நாகராஜ் மிகக் கடுமையான குரலில், “நிறுத்துறா! மொதல்ல என்ன நடந்துச்சு சொல்வியா? ச்சும்மா எகுறாங் கெடந்து?!”

நாகராஜின் கடுமையை எதிர்பார்த்திராத ஜெயச்சந்திரன், ”இல்லடா, நான் சனிக்கிழமை ஒரு கல்யாணத்துக்கு போக வேண்டி இருந்ததால வேலைக்கி வரல பாரு. அதுக்காக மனோகரங்கிட்ட லீவு கார்டைக் குடுத்து JB ரூம்ல போடச் சொல்லியிருந்தேன்!”

“சரீ, அதுக்கென்ன இப்போ?”

“Reason columnல நான் எழுதி இருந்த மேரேஜ்ங்றதுக்கு முன்னாடி மை வொய்ஃப்ங்றதைச் சேத்தி, மை வொய்ஃப் மேரேஜ்(my wife marriage)னு வர்றமாதிரி மாத்தி அவரு ரூம்ல போட்டுட்டான் இந்த நாயி. ரொம்ப மானக்கேடாப் போயிருச்சு தெரியுமா?”

அடக்கமுடியாத சிரிப்புடன் அண்ணன் நாகராஜும் குழந்தையும் ஆளுக்கொரு திசையாய் சிட்டெனப் பறந்தனர்!

6/09/2009

அமெரிக்கா: கிலி பிடித்தவன் எஞ்சி, மிஞ்சி நிற்பான்!

1996 ஆம் ஆண்டு! அமெரிக்கப் பொருளாதாரம் தொழில் நுட்பத்தில் கொடிகட்டிப் பறந்த நேரம். உலகமயமாக்கல், பொருளாதார மயமாக்கல், தாராளமயமாக்கல், அயலாக்கம்(outsourcing), இப்படிப் பல புதிய பரிமானங்களுடன், மென்பொருள், கணினி, வலைச்சந்தை, நவீனமயப்படுத்தும் வேலைகளுடன் ஏற்றம் ஒன்றே கண்களுக்கு புலப்பட்ட தருணமது என்று சொன்னால் மறுப்பதற்கு இல்லை. அந்த காலகட்டத்தில், Intel Andrew S. Grove அவர்கள் வெளிப்படையாகச் சொன்னார்,

கிலி பிடித்தவன் எஞ்சி நிற்பான்!
Only the Paranoid Survive!

உலகமே ஏற்றத்தில் பயணிக்கும் போது இவர் ஏன் இப்படிச் சொல்கிறார் என மற்றவர்கள் வியந்தனர். வெகு சிலரே அவரை ஏறெடுத்துப் பார்த்தனர். மற்றவர்களுக்கு அவர் சொல்வதைப் பரிசீலித்து, சரியான திறம்(strategy) கொள்வதற்கு நேரம் இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. ஏற்றத்தில் இருப்பவனுக்கு ஒவ்வொரு மணித் துளியும் அறுவடைத் தருணம்; அதை அவன் வேறொன்றில் முதலீடு செய்யும் போது, உடனடி இலாபம் பாதிக்கப்படும், எனவே எவரும் அதைக் கவனிக்கவில்லை.

இனி, ஏன் அவர் அப்படிக் கூறினார் என்பதைப் பார்ப்போம். முதலாவது காரணம், அசுர வேகத்தில் நிகழும் தொழில்நுட்ப மாற்றங்கள். அதுமட்டுமே முக்கிய காரணம் என்றும் சொல்லிவிட முடியாது, கூடவே மனித சக்தி, சந்தையின் புதிய பரிமானம், போட்டியாளர்கள், கச்சாப்பொருட்கள், உற்பத்தி நிகழும் இடம் என பல அம்சங்களில் நிகழும் மாற்றங்கள். இந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

வியாபாரமாகட்டும், தொழிலாகட்டும் எந்தப் புள்ளியில் துவங்குகிறதோ, அங்கிருந்து சில காலத்திற்கு முன்னேற்றப் பாதையில் செல்லும். ஏனென்றால், அது நடப்புத் தொழில் நுட்பத்தையும் இன்ன பிற அம்சங்களையும் துவங்கும் தருணத்தில் கொண்டிருப்பதால்! B'se they are up-to-date!!

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, வியாபாரமோ தொழிலோ, அது மேற்கூறிய மாற்றங்களையும் அவ்வப்போது உள்வாங்கி இருக்க வேண்டும். இல்லாவிடில், அந்த ஒரு நிலையில் வியாபாரம் வீழ்ச்சியை நோக்கி இறங்கு முகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க இயலாமற்ப் போகும். அந்த ஒரு நிலைதான் திறம்மாறு புள்ளி என்பது(Strategic Inflection Point).
ஆக, நிகழும் மாற்றங்களை உள்வாங்கித் தகுந்த திறம்(strategy) பாவிக்கத் தவறினால், வியாபாரம் வீழ்ச்சியடையுமே என கிலி கொண்டவனாக இருத்தல் ஒருவனுக்கு அவசியம். அப்படியாகக் கிலி கொண்டவன் எஞ்சி நிற்பதைக் காணும் நிலையில்தான் இன்று அமெரிக்கா! மற்றவர்கள் நிலை??

நிறுவனங்கள் கிலி பிடித்தவையாக இருக்க வேண்டும் என்கிற நிலை, தற்போது தனி மனிதனுக்கும் ஏற்பட்டு இருக்கிறது என்பது கண்கூடு. உலகின் மறுபக்கத்தில் எப்படியோ தெரியாது, அமெரிக்காவில் இன்றைய நிலை இதுதான்!

ஆக, ஒருவன் இனியாவது கிலி பிடித்தவனாக இருப்பது அவசியம் ஆகிறது. நன்னம்பிக்கை கொண்டவனாக இரு! அதே தருணம் மாற்றங்களைக் கற்பவனாகவும் இரு!! Be a paranoid optimist!!!

தொழிலில், வியாபாரத்தில் நிகழும் மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்றாற்ப் போல் தம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பணிபுரிவோர், புதிதாக அறிமுகப் படுத்தப்படும் தொழில்நுட்பக் கூறுகள், நேரடி உற்பத்தி(hands on) முதலியவற்றிலான தேர்ச்சியை மேம்படுத்துதல் வெகு முக்கியம்.

எந்தத் தொழிலாக இருப்பினும் சரி, அது நிரந்தரம் அல்ல! யாருக்கும் உச்சம் என்பது கிடையாது; பிரபலம், வெற்றி, புகழ், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்பதெல்லாம் இன்றைய உலகில் வெறும் தற்காலிகம் மற்றும் மாயை! ஆகவே, உங்களுக்கான அடுத்த சவாலுக்குத் தயாரா? Only the Paranoid Optimist Survive!!

(இது குறித்து இடுகை இடக் கோரிய அண்ணன் சீமாச்சு அவர்கட்கு, இந்த இடுகை அன்புடன் சமர்ப்பிக்கப்படுகிறது)

6/08/2009

தலைவர்களுக்குத் திறந்த மடல்!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே,
புரட்சித் தலைவி வெற்றிகொள்அம்பிகை அவர்களே,
புரட்சிக் கலைஞர் வெற்றிச்செல்வன் அவர்களே,


எங்கள் செந்தமிழ் நாட்டில், மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் நீங்கள் மூவருமே! இது எந்த தனி மனிதனின் விருப்பு வெறுப்பின் அடிப்படையிலும் தெரிவானது அல்ல. மக்களாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான தேர்தலில், மாநிலந் தழுவிய மக்களால் தெரிவான ஒன்று. உங்கள் மூவருக்கும் முதற்கண் வணக்கங்களை உரித்தாக்குகிறேன்!

தமிழ்நாட்டில் இல்லாத இவனுக்கு, பொதுமடல் எழுத என்ன முகாந்திரம் இருக்கிறது என்று நீங்கள் வினவலாம். மேலை நாடுகளில், புலம் பெயர்ந்து வாழும் வாக்களர்களுக்குத் தரும் வாக்குரிமையைப் போன்று, இந்தியாவிலும் கொடுத்தால் என்னவென்று எந்த அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் யோசிக்கிறதோ, அதே அடிப்படையில் எழுதுவதுதான் இந்த மடல்.

இன்றைக்குத் தமிழ்நாட்டிலே, எந்த ஒரு தனிமனிதனும் தனது வசதிக்கேற்ப கட்சி துவங்கி, தேர்தலில் பங்கு பெறலாம் என்கிற நிலை கோலோச்சுகிறது. அதன் விளைவாய், தான் நடித்ததில் மூன்றாவது அல்லது நான்காவது திரைப்படம் வெற்றி பெறும் போதே, கட்சிக்கு பெயர் தேடும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரும் வழக்கம் வந்து விட்டதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாதி என்றால் மனம் கூச்சப்படுகிறதென்று, சமூகமாகிவிட்ட அந்த மக்கள்த் திரள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்சி. வசதி வாய்ப்பு வாய்க்கும்பட்சத்தில் இரண்டு அல்லது மூன்று கட்சிகள். இந்த மக்கள்த் திரள்களில் உள்ள மூத்தோர், இளையோரைக் கட்சி துவக்க வாய்ப்பளிக்க விடாமல் அவர்களே கட்சிகளைத் துவக்கி ஆக்கிரமித்துக் கொள்வதால், புது மக்கள்த் திரள்களை உருவாக்குவது எப்படி என்று தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஒருவர் முழு வீச்சில் புத்தகம் எழுதி வருவதாகவும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன.

நிலமை இவ்வாறிருக்க, தமிழகம் எங்கும் வியாபித்திருக்கிற மற்றும் வரப்போகிற எண்ணற்ற கட்சிகளால் மக்கள் சலிப்படைந்து வருவதையும் அறிய முடிகிறது. அதன் விளைவாய், அதிகப்படியான கட்சிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதகங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து பார்த்ததில், நமக்குத் தெரிந்தது கீழே வருமாறு:

1. சமூகப் பிரச்சினைகளுக்கு யாரை அணுகுவதென்றே தெரியவில்லை.

2. உணர்வுப் பூர்வமான பிரச்சினை என்றால், ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் அதைக் கையிலெடுத்துக் கொண்டு, ஊதிப் பெரிதாக்கிப் பெரிதாக்கி, இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களையே அழித்தொழிக்கிற அவலம்.

3. கட்சிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கும் போராட்டங்களினால், வெகுசன மக்களுக்கு பெருத்த கால விரயம் மற்றும் பணநட்டம்.

4. ஒற்றுமையாக இருக்க வேண்டிய சமூகம், பல பிரிவுகளாகப் பிரிந்து அல்லல்படுகிறார்கள்.

5. ஒவ்வொரு கட்சியும் தனக்கென காணொளி அலைகள் வைத்திருப்பதால், நம்பகமான செய்திகள் கிடைக்கப் பெறுவதில்லை. அதில் ஏற்படும் குழப்பத்தின் காரணமாய் பல சிக்கல்கள்.

6. கட்சியை மாற்றச் சொன்னார்கள். பிறகு பிடித்த நடிகனை மாற்றச் சொன்னார்கள். இப்போது இல்லாத சாதியையும் மாற்றச் சொல்கிறார்கள். மாநில எல்லையில் இருப்போரை, இனத்தையும் மாற்றச் சொல்கிறார்கள். இப்படி மாறி மாறி, மாறுவதே ஒரு கூடுதல் தொழிலாக ஆனதினால், பொது மக்களுக்கு கூடுதல் பணிச்சுமை.

7. எண்ணற்ற கட்சிகள் இருப்பதால், அரசியல் ரீதியாகக் கொள்கை கோட்பாடுகளுடன் இருந்த நீங்களும், பொறுப்பு(accountability)லிருந்து தப்பித்து உங்கள் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளையே காற்றில் பறக்கவிட்டு வருகிறீர்கள்.

இதைப் போல நிறைய பாதகமான அம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இருந்தாலும் உங்களுடைய நேரத்தை வீணடிக்க விரும்பாததால், நேரடியாக விசயத்துக்கு வருகிறோம். மக்களாட்சித் தத்துவத்தின்படியும், தனிமனித உரிமைகளின்படியும் நாம் எவரையும் கட்சி ஆரம்பிக்க வேண்டாமென்றோ, இருக்கும் கட்சியைக் கலைத்து விடும்படியோ வற்புறுத்த முடியாது, வற்புறுத்தவும் கூடாது. எனவேதான் உங்களுக்கு இந்த மடல்!

ஆமாம். நீங்கள் மூவரும் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஏற்கனவே, மத்திய நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்குவதில், அந்தந்த மாநிலங்களின் பங்களிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதில் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். பாராட்டுகள்!

அது போலவே, தேசியக் கட்சிகள் தவிர மற்ற சிறு சிறு கட்சிகளுடன் உடன்பாடு கொள்ளாமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என உங்கள் தலைமையிலான கட்சிகள் ஒருமித்த முடிவு மேற்கொள்ள வேண்டும். இதனால், சிறு அளவிலான கட்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும். மேற்கூறிய பாதகமான அம்சங்களும் ஒழிந்து போகும். செய்வீர்களா?

இல்லாவிடில், தமிழ்ச் சமுதாயம் மேலும் பிரிந்து பிரிந்து சிறு சிறு குழுக்களாக ஆவதில் இருந்து தப்பவே முடியாது. தமிழனைச் சீர்குலைத்த பழி பாவம் உங்களையே வந்தடையும். மாநிலந் தழுவிய ஆதரவு இல்லாத கட்சிகள், வெறும் துணைநிலை குழுக்களே!

அவர்களின் ஆதரவு தேவைப்படுமாயின், அவர்களுக்கு ஆதரவு உள்ள பகுதிகளின் உள்ளாட்சி அதிகாரங்களை அவர்களுக்கு அளிக்கலாம். அவர்களும் கைமாறாக, அவர்களது ஆதரவினை சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் உங்களுக்கு அளிக்கலாம்.

இதன் மூலம், அவர்களும் சமுதாயக் கடமை ஆற்றுவதில் பங்கு பெற முடியும். சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில், கணக்கு அடிப்படையிலான முடிவு அல்லாது, மக்களின் நேரிடையான முடிவு வெளிப்படும். உங்களுக்கும் களப்பணி ஆற்றுவது எளிமையாக இருக்கும். எனவே, இவ்விசயத்திலும் ஒன்றிணைந்து செயல்படுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்களுக்கு:

இந்த மடல் எழுதியவனுக்கும் உங்களுக்கும் உள்ள தோழமை அல்லது பகைமையக் கருத்தில் கொள்ளாது, சிறு சிறு கட்சிகள் நாட்டிற்கு இம்சை என்று கருதினால் தமிழ்மணப் பட்டையில் உள்ள மேல்நோக்கில் ஒப்பமுக்குங்கள்! சிறு கட்சிகளின் பங்களிப்பு தேர்தலில் தேவை எனக் கருதினால், கீழ்நோக்குப் பொத்தானில் ஒப்பமுக்குங்கள்!!

இதன் மூலம் வாசகர் கருத்து வலையுலகினருக்கும், மேற்கூறிய தலைவர்களுக்கும் தெரிய வருமன்றோ? ஆகவே கட்டாயமாக உங்கள் கருத்தை ஒப்பமுக்குவதின் வழியாகத் தெரிவித்துச் செல்லுங்கள்!

6/07/2009

மகிழ்விப்புநர்

”என்னங்கடா இது? இடுகை இடுறேம்பேர்வழின்னு ஊருக்கு உபதேசமா? மனவெறுமை(boredom)ங்கறான்... கிருதா(ego)ங்றான்... என்ன வெளையாட்டா இருக்கா எங்களைப் பார்த்தா?”, இப்படியெல்லாம் ஊருக்குள்ள பேசுவாங்க... இஃகிஃகி, அது நமக்குந் தெரியும்... ஆனா, அவிங்க நெனைக்குறா மாதர இல்லை நம்ம பொழப்பு.

நெசந்தாங்க, சொன்னா நம்போணும்! வெளிநாட்டுக்கு வந்தப்புறம் கொஞ்ச நாள் அமைதியா இருந்துதான் பாத்தேன். குழுமங் குழுமமா எங்கியோ ஒரு எடத்துல எதோ ஒரு காரியத்துக்கு கூடுறது உண்டு. அங்க அரைச்ச மாவையே அரைச்சிகினு, பாடுன பல்லவியே பாடிகினு... வெறுமையாத்தான் இருந்துச்சு... கூடவே வாற சனங்களுக்குள்ள அவிங்க அவிங்க தகுதிக்கேத்தாப்புல கிருதாவும்...

நம்ம சனங்கன்னு இல்ல, அது எல்லார்த்துகிட்டயுந்தான் ஒளிஞ்சிட்டு இருக்குது. கிருதாமானின்னு ஒன்னு இருந்து அதை வெச்சுப்பாத்தா தெரியும், ஒவ்வொருத்தர்கிட்டவும் அது எவ்வளவு இருக்குன்னு... அப்ப, கூடுன எடத்துல, முன்பின் தெரியாத நம்ம சனத்தை ஒருத்தொருக்கொருத்தர் எப்பிடி சகசமாப் பழக வெக்கிறதுன்னு யோசிக்க, அப்புறமேல்ட்டு கட்டுனதுதான் இந்த மகிழ்விப்புநர் வேசம்.

ஆமாங்க, அஞ்சாறு வருசமா வாய்ப்பு கெடைக்கும் போதெல்லாம் நாம இந்த வேசங்கட்டிட்டு வர்றோம். நூறு பேர் வரைக்கும் கூடுன கூட்டத்தை எல்லாம் நாம சிரிக்க வெச்சு, ஒரு நல்ல சூழ்நெலைய உண்டு பண்ணி இருக்கோம். பிறந்த நாள் விழாக்கள் நடத்தி இருக்கோம்... நல்ல அனுபவம் இருக்கு கைவசம்... இஃகிஃகி!

வந்த சனங்களுக்குள்ள பேதமை கலந்த, அதாவது நல்ல தமிழ்ல சொன்னா கேனத்தனமான வெளையாட்டு நடத்துறதுதாங்க இந்த மகிழ்விப்புநர் வேலை. அதென்ன கேனத்தனமான வெளையாட்டு? ஆமாங்க, நல்ல வெளையாட்டுலயும் கிருதா வந்து உக்காந்துக்குறதுக்கு வாய்ப்பு இருக்கே, அதான் இந்த பேதமை கலந்த வெளையாட்டு.

Small Fish, Big Fish

வந்திருக்குற சனத்தை எல்லாம் வட்டமா உட்கார வெச்சிடணும். பத்து பேர்ல இருந்து எவ்வளவு பேர் வேணுமின்னாலும் இதுல கலந்துகிடலாம். ஒருத்தர் பெரியமீனைக் காண்பிக்கற மாதிரி கைய விரிச்சிட்டு சின்னமீன் அப்படீன்னு சொல்ல, அடுத்தவர் சின்ன மீனைக் காண்பிக்கிற மாதிரி கையக் காண்பிச்சிட்டு பெரியமீன் அப்படீன்னு சொல்லணும். இப்படியே மாறி மாறி சொல்லிட்டே வரணும். அப்ப யார் தப்பா சொல்றாங்களோ, அல்லது தப்பா கையக் காண்பிக்கிறாங்களோ அவங்க ஆட்டத்துல இருந்து விலக்கம். இப்படியே, ஒருத்தர் ஒருத்தரா விலக்கிட்டு வந்து கடைசியா யார் மிஞ்சி இருக்காங்களோ, அவர் வெல்லுனவர். விளையாடிப் பாருங்க, ரொம்ப நல்லா இருக்கும். மகிழ்விப்புநர் சிரிப்பைக் கட்டுப்படுத்தி நடத்தணும், அதுலதான் அவரோட திறமை இருக்கு.

Plain Bun, Plum Bun, Bun without Plum

ஆட்களை வட்டமா உட்கார வெச்சிடணும், அல்லன்னா நிக்க வெச்சுடணும். ஒருத்தர் Plain Bun சொல்ல, அடுத்தவர் Plum Bun சொல்லணும், அடுத்தவர் Bun without Plum சொல்லணும். இப்படியே மாறி மாறி சொல்லிட்டு வரணும். அப்படி சொல்லிட்டு வரும்போது யார் தவறுதலா சொல்றாங்களோ, அல்லது கேனத்தனமா சிரிச்சிட்டு காலம் தாழ்த்துறாங்களோ அவங்க விலக்கம். இப்படி விலக்கிட்டு வரும்போது கடைசியா யார் மிஞ்சி இருக்காங்களோ அவங்க வெற்றியாளர். ஆங்கிலத்துல இதை tongue twistterனு சொல்றது.

இப்படி நிறைய விளையாட்டுகள்... ஒரு இருபது, முப்பது விளையாட்டுக தெரியும். எல்லார்த்தையும் சொல்ல ஆரம்பிச்சா விடிஞ்சிடும். அதுனால இதோட நிறுத்திக்கிறேன். கடைசியா, நம்மூரு tambolaவும் விளையாடுறது உண்டு. அதுக்குண்டான சீட்டுகளை இங்கியே உங்களுக்கோசரம்... இஃகிஃகி!!









கடைசியா திரி ஒன்னை கொழுத்திப் போடுலாம், இப்ப என்ன? தலைகீழா நின்னுட்டுப் பொய் சொல்ல முடியாதுன்னு சொன்னோம் இல்லீங்களா? அதே மாதிரி, கண்ணைத் திறந்திட்டே தும்ம முடியாதுங்களாமே? அப்பிடிக்கிப்பிடி தும்ம(sneeze) முடிஞ்சா சொல்லி அனுப்புங்க, சரியா? வர்றேன்??

6/06/2009

வெறுமை ஒழிக!

மாந்தனுடைய வாழ்க்கையில் அடிக்கடி தென்படுவது மனவெறுமை (boredom); அதனால் அவனுக்கு அவதி! மனம் தவிக்கிறது, இருந்த இடத்தில் இருக்கப் பிடிக்கவில்லை, உடன் இருப்போரைக் கண்டால் பிடிக்கவில்லை, எதைச் செய்யவும் சலிப்பு மேலிடுகிறது, இதை ஒருவழிக்குக் கொண்டு வர வேறேதோ ஒன்றை நாடுகிற சூழ்நிலை.

திரைப்படம் பார்க்கிறான், சலிப்பாக இருக்கிறது. கதை கட்டுரை படிக்கிறான், அதில் மனம் ஒன்றவில்லை. ஏன்? அவனது மனம் இது வரையிலும் கண்டிராத எதோ ஒன்றுக்கு இட்டுச் செல்கிற தூண்டுதல் (stimulation) அதில் இருந்திருக்கவில்லை(lack of variety). மனமானது மாற்றங்களுக்கும் மாற்றான உணர்வுகளுக்கும் ஏங்கிக் கொண்டே இருக்கும். அதையறிந்து, மாந்தனை வேறொரு எண்ணச் சூழலுக்கு இட்டுச் செல்கிற வகையில் படைப்புகள் தருவதில்தான், படைப்பாளியின் வெற்றி அடங்கியுள்ளது.

இந்திய சமூகத்தில், குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பது என்ன? மாற்றங்களைக் கொணர்கிறோம், இரசிப்புத் தன்மையை மெருகேற்றி சுவராசியத்தைக் கூட்டுகிறோம் (variance in variety) என்று சொல்லி, தனிமனிதனின் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்து, அதன்மூலம் இலாபம் ஈட்டப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இங்கே நீங்கள் கையாளப்படுகிற வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும். சுவராசியம் என்பார்கள். சுவராசியம் என்றால் என்ன? சுவை + இராசியம்! இராசியம் என்றால் ஏதோ ஒன்றை மறைபொருளாக வைத்துச் செயல்படுதல். நாங்கள் இராசி ஆகிவிட்டோம் என்று சொன்னால், எங்களுக்குள் நட்பு எனும் மறைபொருள் துளிர்த்து விட்டது என்று பொருள்.

அப்படியாக சுவராசியம் என்பது, சுவையான பாங்கில் மறைபொருள் ஒன்றை வெளிப்படுத்தும் செயல். ஆனால், நடப்புச் சூழலில் அது எப்படிக் கையாளப் படுகிறது? பெரும்பாலான படைப்புகளில், தனிமனிதத் தாக்குதல், உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்து மனத்தை ஆட்கொள்தல், குறை சொல்லிச் சுட்டுதல், புறம் பேசுதல், ஆதிக்கம் செலுத்துதல் முதலான, மாந்தனுக்கு எதிரானவற்றை லாவகமாகக் கையாளும் போக்கு சுவராசியம் என்படுகிறது.

உதாரணத்திற்கு ஒரு காணொளிக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். நாயகன், வில்லன் ஆகிய இருவரும் சொல்லவொண்ணா அவலங்கள் செய்வர், நாயகியையும் அவர் சார்ந்தோரையும் அவலநிலைக்கு ஆளாக்குவர்(domestic violence), அல்லது பாலியல் ரீதியான கொடுமைகள் (sexual harassment), அதனை எதிர்கொண்டு நாயகன் வெல்வதுதான் கதை. பெரும்பாலான படைப்புகளில், இந்த அடிப்படையில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. அப்படியானால் மேலே குறிப்பிட்டபடி varience in variety, சுவ்ராசியம் மற்றும் புதுமையான சூழலை உண்டு செய்து படைப்பில் வெற்றி பெறுவது எப்படி?

அங்கேதான், இன்றைய சூழலைப் பொறுத்த மட்டில், நமது சமுதாயம் படைப்பில் வெற்றி பெற்று, அதே நேரத்தில் மனிததர்மத்தில் (ethic) தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. எப்படி?

பெரும்பாலான படைப்பாளிகள், புறநிலையில் வெகுவாக மாற்றத்தைக் கொணர்ந்து, மனிதனின் எண்ண மாறுதலுக்கான ஏக்கத்துக்குத் தீனி இட்டு வருகிறார்கள். அது என்ன புறநிலை? வில்லன் நாயகியைக் கொடுமைப் படுத்துவதில் புதிய யுக்திகள். நாயகனைச் சிறுமைப் படுத்துவதில் புதிய நேர்த்தி. பின்னர் வில்லனை வெற்றி காண்பதில் புதிய வழிமுறை. இப்படியானவற்றில் சமுதாயம் சோரம் போனதுதான் வேதனையான ஒன்று!

பின் எப்படியான மாற்றங்கள் மாந்தனுடைய எண்ண மாறுதலுக்கு உகந்ததாக இருக்கும்? அகநிலை மாற்றங்கள்! படைப்பின் கருவில் மாற்றம் இருக்க வேண்டும். அவன் கடந்த முறை கண்டது காதல் கதை என்றால், அடுத்த முறை அது வேறொன்றாக இருக்க வேண்டும். அந்தக் களம், மனிதனின் மனதைக் கொள்ளை கொள்ள வேண்டும்.
Iyer the Great, வரவேழ்ப்பு, வந்தனம், New Delhi, வைசாலி என்று தொடர்ந்து ஒன்றுக்கொன்று மாறுபட்ட கோணத்தில் படைப்புகள் வர, தமிழ் வணிகசக்தி ஆடிப் போய், அவை தமிழகத்தில் வெளிவரத் தடை வந்தமை இதற்குத் தகுந்த உதாரணமாகச் சொல்லலாம்.

மனவெறுமையைத் துடைத்தெறிந்து மகிழ்வு கொள்வதில், தனிப்பட்ட மனிதனுக்கும் உரிய கடமைகள் உண்டு. அவன் அவனது மனதை எளிமையாக, ஏழ்மையாக வைத்திருத்தல் மிக அவசியமானது. ஒருவனுடைய வாழ்வுக்கு உண்டானது 100 பெட்டி மகிழ்ச்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த 100 பெட்டிகளையும் முதல் 25 ஆண்டுகளிலேயே செலவழித்து விட்டான் என்கிறபோது, எஞ்சிய நாட்களுக்கு அவன் மேலதிக மகிழ்ச்சியைத் தேடித்தான் திரிய வேண்டும். அந்த காலகட்டத்தில் மனநிம்மதியை அவன் இழப்பது தவிர்க்க இயலாதது ஆகிவிடுகிறது.

இன்றைய நிலையில், மனமகிழ்ச்சி என்பது மற்றவர்களின் வணிகரீதியான வெற்றிக்காக, விரைவில் செல்விடப் படுகிறது. மேல்நாட்டவன் ஒற்றைத் தூண்டில் கொண்டு மீன்பிடிப்பதை நாட்கணக்கில் இரசித்து மகிழ்கிறான். நமது சமுதாயம், அதை அந்த அளவில் வைத்திருக்கிறதா? இல்லை. காரணம், நமது மனது சிறுவயதிலேயே உச்சம் எய்தி விட்டதுதான் நிதர்சனம். அந்த மனதுக்கு இது போன்ற சிறு சிறு செயல்களில் மகிழ்ச்சி ஏற்படாது. உணர்ச்சிகள் என்ற கடப்பாரை கொண்டு, நெஞ்சினுள் நச் நச்சென்று இடிக்க வேண்டிய அளவுக்கு அது முதிர்ச்சியாகி விட்டதென்பதே உண்மை.

ஆகவே வெகுளித் (Innocence) தன்மை கொண்டு, மனதை ஏழ்மையாக வைத்திருத்தல் அவசியம். அதை வளர்த்தெடுக்க, குழந்தைகளோடு பெற்றவர்கள் நிறைய நேரம் செலவிட வேண்டும். வக்கிரங்கள் கொண்ட படைப்புகளைத் தவிர்த்திடுவதால், மகிழ்ச்சியானது விரைவாகவும் மலிவாகவும் செலவிடப்படுவது தடைபடும்.

வக்கிரப்படுதலை ஊக்குவித்து, நாட்டத்தை உண்டுபண்ணி, உங்களது நீண்ட நாளைய மகிழ்ச்சியை குறுகிய நேரத்தில் செலவிடச் செய்து படைப்பை வெற்றி பெறச்செய்வது என்பது, ஒரு பொருளீட்டும் மாயை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், விளையாட்டு, குழந்தைகளுடன்கூடிய தொடர்பை மேலும் வலுப்படுத்துதல், கலை இலக்கியங்கள், சமூகப் பங்களிப்பு, ஆன்மீகம், உடற்பயிற்சி போன்றவை மனதுக்கு மகிழ்வளித்து, கூடவே மனவெறுமையையும் வென்றொழிக்கும் என்பது சொல்லித் தெரிவதில்லை!

“The good things of life are not earned, but obtained with little or no effort!”