சரவணன் கிருஷ்ணன்
தகவல் தொடர்புக்குழுவால் என்ன செய்திட முடியுமென்பதைக் காண்பித்தோம். ஒரு அமைப்பின் தகவல் தொடர்பாளர், நிறுவனத்தின் வெளிப்புற, உள்புறத் தொடர்புகளை நிர்வகிப்பதற்கும், அதன் நற்பெயரைப் பேணுவதற்கும், அதன் குறிக்கோள்களை, செயற்பாடுகளைப் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கும் பொறுப்பானவர் ஆவார். அவரின் முக்கிய பணிகள் கீழ் வருமாறு:
அமைப்பின் இலக்குகள், செய்தியை, பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய வகையில் தொடர்புத் திட்டங்களையும் உத்திகளையும் உருவாக்குதல், செயல்படுத்துதல்.
பத்திரிகை வெளியீடுகள், செய்திமடல்கள், இணையதள உள்ளடக்கங்கள், அறிக்கைகள், உரைகள், சமூக ஊடகப் பதிவுகள் போன்ற பல்வேறு வகையான உள்ளடக்கங்களை எழுதுதல், திருத்துதல், பரப்புதல் முதலானவற்றைச் செய்ய வேண்டும். அதற்கு, அமைப்பின் செயல்பாடுகள், திட்டங்கள், மதிப்புகள் குறித்து ஈர்க்கக்கூடியதும் உண்மையானதும் துல்லியதுமான தகவலை உருவாக்கிட வேண்டும்.
ஊடகவியலாளர்களுடலும் உறுப்பினர்கள் தோழமை அமைப்புகளுடன் உறவுகளை ஏற்படுத்திப் பேணுதல் மிக அவசியம். வினாக்களுக்கும் விசாரிப்புகளுக்கும் முறையாகப் பதிலளித்து அக்கறை கொண்டாக வேண்டும்.
குறிப்பாக ஊடங்களிலும் பொதுவெளியிலும் வெளிவரும் செய்திகளைக் கண்காணித்தல், அதற்கொப்பச் செயற்பாடுகளை, எதிர்வினைகளை உடக்குடன் அமைத்துக் கொண்டாக வேண்டும்.
எண்ணிம, சமூக ஊடக மேலாண்மை, அமைப்பின் சமூக ஊடகக் கணக்குகளை நிர்வகித்தல், உள்ளடக்கத்தைப் பதிவிடுதல் மற்றும் கருத்துகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் பார்வையாளர்களுடன் ஈடுபடுதல். இணையதளத்தை புதுப்பித்தல்,உள்ளடக்கத்தை ஈர்க்கக்கூடியதாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதி செய்தல்.
உள் செய்திமடல்கள், அக இணையப் புதுப்பிப்புகள் மூலம் அமைப்புக்குள் தகவல் பரிமாற்றத்தை அமைத்துக் கொண்டு, அமைப்பினரின் செயல்பாடுகளும் அதற்கொப்ப இருக்குமாறு அறிவுறுத்திடல் வேண்டும். மாநாடுகள், நிகழ்வுகள், பிற விளம்பர நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்தலும் ஒருங்கிணைத்தலும்.
ஏதேனும் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், எதிர்மறையான நிகழ்வின்போது, அமைப்பின் செய்திகள் தெளிவாகவும், துல்லியமாகவும் சரியான நேரத்திலும், உறுப்பு அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்தல்.
தகவல் தொடர்புக்குழுவினர் எப்போதும் ஒருவருக்கொருவர் அளவளாவிக் கொண்டும் பணிகளைப் பங்கிட்டுக் கொண்டும் இருந்தனர். வட அமெரிக்காவெங்கும், ஏன் உலகமெங்கும் பேரவைக்கான ஆர்வலர்கள் உள்ளனர். பல பகுதிகளிலும் பல நிகழ்வுகள் நடக்கும். அப்படியானவற்றைக் கண்காணித்து, அமைப்பின் தகவலை அதற்கொப்ப அமைத்துக் கொள்தலுக்கும், திருவிழா குறித்த பொதுமக்களின் எதிர்பார்ப்பினை அறிந்து உடனுக்குடன் நமக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குமான சிறந்த தொடர்பாளராக விளங்கியவர்தாம் உய்த்துணர்வில் சிறக்கும் திரு. சரவணன் கிருஷ்ணன் அவர்கள்.
தமிழ், மக்கள், பண்பாடு முதலானவற்றின்பால் அக்கறை கொண்டவர். விழாவின் பயணக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். குறைவான கட்டணத்தில் விடுதி, குழுவாகப் பயணம் செய்வதன் மூலம் செலவுக்குறைப்பு உள்ளிட்ட பல ஏற்பாடுகளை தொடர்பு கொண்ட ஆர்வலர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க நம்மோடு துணை நின்றவர் திரு. சரவணன் கிருஷ்ணன் அவர்கள்.
’ஏப்பா, மெய்யாலுமே இத்தனையும் செய்யப்பட்டதா?’ என்றால், ஆமாம், செய்யப்பட்டதுதான்!
𝐖𝐢𝐭𝐡 𝐭𝐡𝐞 𝐫𝐢𝐠𝐡𝐭 𝐜𝐨𝐥𝐥𝐚𝐛𝐨𝐫𝐚𝐭𝐨𝐫, 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐏𝐑 𝐦𝐢𝐬𝐬𝐢𝐨𝐧 𝐛𝐞𝐜𝐨𝐦𝐞𝐬 𝐚 𝐬𝐭𝐨𝐫𝐲 𝐰𝐨𝐫𝐭𝐡 𝐭𝐞𝐥𝐥𝐢𝐧𝐠, 𝐚𝐧𝐝 𝐰𝐞 𝐣𝐮𝐬𝐭 𝐰𝐫𝐨𝐭𝐞 𝐨𝐮𝐫𝐬!🎉🎉
-பழமைபேசி.
தகவல் தொடர்புக்குழு, FeTNA 2025.
