ஒவ்வொரு சமூகத்தின் விழாக்கால உணவும் அதன் பாரம்பரிய சமையல் முறைகளையும், உள்ளூர் விளைபொருட்களையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துகின்றது. விழாக்களில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது ஒரு முக்கியமான சமூகச் சடங்காகும். இந்தச் செயல் உறவுகளையும் நட்பையும் வலுப்படுத்துகிறது. சமைப்பவர்களும் பரிமாறுபவர்களும் அன்பைப் பரிமாறுகிறார்கள், உண்பவர்கள் உவப்பினைப் பகிர்ந்துகொள்கிறார்கள். உணவு பரிமாறப்பட்டு அமர்ந்து உண்ணும் ஒவ்வொரு மேசையுமே ஒரு சிறிய பொதுவெளியாக மாறி, உரையாடல்களுக்கும் மகிழ்ச்சிக்கும் சிரிப்பொலிக்கும் வழிவகுக்கிறது. போதாததுக்கு எதிரிலேயே வட அமெரிக்க வாகை சூடியின் மாபெரும் துள்ளாட்டங்களும் இசையொலிகளும்.
தமிழர்களின் மரபில், விருந்தினரை உபசரிப்பது மிக முக்கியமான கடமையாகக் கருதப்படுகிறது. விழாக்களில் வழங்கப்படும் உணவு, விருந்தோம்பலின் உச்சகட்ட வெளிப்பாடு ஆகும். பரிமாறப்படும் உணவின் தரம், வகை, மற்றும் அளவு ஆகியவற்றைக் கொண்டே விருந்தினர்கள் உபசரிப்பின் நேர்த்தியை மதிப்பிடுகிறார்கள். உணவு சுவையாகவும், மனநிறைவாகவும் இருக்கும்போது, விழா முழுமை அடைகிறது. முன்பெல்லாம் பேரவை விழாவுக்கான அரங்கங்களைப் பார்க்கும் போதேவும், உண்ணும் இடத்தைப் பொறுத்தேவும் இடம் தீர்மானிக்கப்பட்டது. அந்த அளவுக்கு உண்ணல் என்பது அடிப்படை.
2025 பேரவை விழாவின் உணவுக்குழு நண்பர்கள் ஷான் பச்சமுத்து, ஜெயராஜ் கனகராஜ் குழுவினர் பின்னிப்படல் எடுத்திருந்தனர். இந்த இடத்தில்தாம் சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர் சரவணக்குமார் மணியன் அவர்களைக் குறிப்பிட்டாக வேண்டும். அவ்வப்போது அழைத்துப் பேசுவார். மாற்றுக்கருத்துகளாகவே சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்த நாம், ஒருமுறைக்குப் பலமுறை நன்கு திட்டிவிட்டோம். இஃகிஃகி. ஆனாலும் அவர் மனத்தில் கொள்ளாது அழைத்து, விழா ஏற்பாடுகளைப் பற்றி வினவுவார்.
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, தமிழ்நாடு அறக்கட்டளை மாநாடு, தமிழ்நாட்டு முதல்வர் விழா என அடுத்தடுத்து விழாப்பணிகளில் ஈடுபட்டதன் வாயிலாக அனுபவங்கள் பெற்றிருப்பவர். ’பிளேட் வாங்கியாச்சா, தண்ணி வாங்கியாச்சா, அதுக்கு என்ன செய்தீங்க, இதுக்கு என்ன செய்தீங்க, மக்கள் மறுசோறு வாங்க எப்படிப் போவாங்க?’ எனப் பலவாறாகப் படுத்தி எடுத்தார். நான் உணவுக்குழுத் தலைவரை அழைத்து இவருடன் கோத்துவுட்டுவிட்டேன். தம் தரப்பு நண்பர்களையும் அழைத்துக் கோத்துவுட்டார் சரவணன். பேசிக்கொண்டு இருந்தனர். செல்ல வேண்டிய பாதை புலப்படுவதாக இருந்தது. அதன்பிறகு, சிகாகோ தமிழ்ச்சங்க நண்பர்கள் இரத்தினக்குமார், விஜய்சாந்தலிங்கம் முதலானோர் முந்தினநாளே வந்திருந்து விழாப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
அறை எண் 322. மறக்க முடியாது. 24 மணிநேரமும் அதன் கதவு திறந்து வைக்கப்பட்டே இருந்தது ஒரு வார காலத்துக்கும். இஃகிஃகி. அன்னவாசல் அறை எண் 322. எந்த நேரத்திலும் எவர் வேண்டுமானாலும் அங்கு சென்று வகைவகையான உணவுகளை உட்கொண்டு பசியாறலாம். அறைமுழுக்க குடிநீர் பாட்டில்கள் வேறு. எதோவொரு நேரத்தில், ”உள்ளூர் தன்னார்வலர்கள் குறைவாக இருக்கின்றாற்போல இருக்கின்றது. சம்பளத்துக்குத்தான் ஆட்களை அமர்த்த வேண்டும் போலுள்ளது” என்பதாகப் பேச்சு. நான் அதைப் பற்றிக் குறிப்பிடவே, நண்பர் சொன்னார், “கம்னு இருங்ணா. வாறவுக எல்லாமே வேலை செய்யோணும்ங்ற எண்ணத்துலதா வரப் போறாங்க!”.
𝑳𝒊𝒕𝒕𝒍𝒆 𝒔𝒕𝒆𝒑𝒔 𝒆𝒗𝒆𝒓𝒚 𝒅𝒂𝒚 𝒍𝒆𝒂𝒅 𝒕𝒐 𝒃𝒊𝒈 𝒓𝒆𝒔𝒖𝒍𝒕𝒔.
-பழமைபேசி.

No comments:
Post a Comment