வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது தமிழ்விழாவுக்கான தன்னார்வலர்கள் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமெனும் ஆவலுக்கு முதன்மைக் காரணமாக இருந்தவர்தாம் திரு. முருகையா முரளீதரன் அவர்கள். பதிவுக்குழுத் தலைவர், ஈழத்தமிழர் செயற்பாட்டுக்குழுவின் துணைத்தலைவர். விழாவில் கலந்து கொள்ளப் பதிந்தும் இருந்தேன். ஆனால், மாகாண அளவிலான இசைநிகழ்ச்சியில் மகர்கள் கலந்து கொண்டிருந்ததால் வெளியூர் செல்லும்படியாக ஆகிவிட்டது. https://www.ncmea.net/sections-2/orchestra/orchestra-events/nc-all-state-honors-orchestra/
காலையிலேயே, நண்பரும் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவருமான திரு மோகன் வைரக்கண்ணு அவர்கள் நினைவூட்டுத் தகவலைப் பகிர்ந்திருந்தார். அழைத்து இயலாமையைப் பற்றித் தெரிவித்ததோடு, தொடர்ந்து திரு முரளி அவர்களைப் பற்றியும் சற்று அளவளாவிக் கொண்டிருந்தோம். அவரைப் பற்றி விழாவில் பேச வேண்டுமென எண்ணியிருந்தேன்.
துவக்கத்தில் இருந்தேவும் 24x7 தொடர்பில் இருந்து வந்தார். எப்போது என்ன கேட்டாலும், அக்கறையுடனும் உள்ளன்போடும் உடனுக்குடனே மறுமொழி அனுப்புவார். வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளுக்கான முனைப்புகளில் ஏராளமான நண்பர்கள், தாமாக முன்வந்து பங்களித்துக் கொண்டிருந்தனர். தன்னார்வலர்கள் உலகெங்குமிருந்து ஊக்கத்துடன் தாமாக முன்வந்ததுதான் விழாவின் வெற்றிக்கான ஒரே காரணம். நண்பர் செந்தூரன் அவர்கள் பொதுவெளியில் பகிர்ந்தது: “நான் 2005ஆம் ஆண்டுகால கட்டத்திலிருந்து ஆண்டுதோறும் கலந்து கொள்கின்றேன். சார்ல்ஸ்டன் விழாவுக்குப் பிறகான சிறப்பு விழாவாக இந்த ஆண்டு விழாவினைக் கண்டேன்”. இதற்கிடையில், பொருளாளர் வள்ளிக்கண்ணன், வட அமெரிக்க வாகை சூடிக்கான சிறப்பு நுழைவுகளின் முன்வரைவினை முன்வைத்தார். செயற்குழு, வழிகாட்டுதல் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, அதனைச் செயற்படுத்துவதில் திரு முரளியின் பங்கு முக்கியமானது.
பல்வேறு கோணங்களில் பெற்றோர்கள் அணுகுவார்கள். அவற்றுக்கெல்லாம் தாயன்போடு பணிவிடை செய்த திருமிகு பரணி இடைக்காடர் அவர்களுக்குப் பக்கத்துணையாக இருந்து, பதிவுகளில் இருக்கும் விதிவிலக்குகளுக்கான தீர்வுகளைச் செய்து கொடுத்தவர் திரு.முரளி அவர்கள். இடையில் அவரது கணினி தொலைந்து விட்டது, அல்லது பழுதாகிவிட்டதென நினைக்கின்றேன். அந்த நேரத்திலும் கூட, பரபரப்புகள் வலுவாகி சர்ச்சைகள் ஆகிவிடாவண்ணம் துரிதமாகச் செயலாற்றியவர்.
கேட்பதா வேண்டாமாயென்கின்ற மனச்சலனம். கேட்டே விட்டேன். முரளி, ”ஒரு மூணு வாலண்டியர் பாஸ்....”. சொல்லிக் கூட முடிக்கவில்லை. ”இந்தாங்க பழமைபேசி”, சற்றும் யோசிக்காமல் கொடுத்த அந்த மனப்பாங்குக்கு நான் நன்றியுடையவனாகின்றேன்.
காலையில் 8 மணிக்கு விழா துவங்க வேண்டும். இரவெல்லாம் இருக்கைகள் தூக்கிப் போட்டு ஒழுங்குபடுத்திவிட்டு குளித்துவிட்டுப் படுக்கும் போது மணி அதிகாலை 3. காலை ஏழு மணிக்கெல்லாம் வளாகம் வந்தாயிற்று. ஒருங்கிணைப்பாளர் மீனா அவர்களிடமிருந்து அழைப்பு, “பழமைபேசி, நாகசுர தவில் குழுவினர் அங்க முன்னாடி இருக்காங்க. உள்ள வுடமாட்றாங்களாம், பாருங்க”. அவர்களுக்கான நுழைவு அட்டைகளைப் பெற வேண்டுமானால், பதிவுக்குழு வேண்டும். அவர்கள் ஏழரை மணிக்குத்தான் வருவார்கள். முரளி அவர்கள் கொடுத்திருந்த அந்த மூன்று பாஸ்களைப் பாவிக்கலானேன். அதிலிருந்து, அந்த மூன்று பாஸ்கள் செயலாற்றிய கடமைகளுக்கு அளவேயில்லை.
முக்கிய விருந்திநர்களில் பலர் தங்கள் பாஸ்களைக் கொண்டுவரவில்லை. அழைப்பு நமக்கு வரும். இவற்றைக் கொடுத்து, அவர்களை அழைத்து வர வேண்டும். திரும்பவும் அவர்களிடமிருந்து கொடுத்த பாஸைக் கேட்டு வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிடும். இஃகிஃகி.
Mr. Murali, it’s because of people like you that the world continues to spin with kindness, empathy, and grace. FeTNA and the entire Tamil community owe you immense gratitude for your selfless service.
-பழமைபேசி.
