12/30/2022

2022 கடைசிநாள்

கடைசி நாளை உணர்வுப்பூர்வமாகவும் அணுகலாம். ஆக்கப்பூர்வமாகவும் அணுகலாம். ஆனால் நமக்குத் தேவையானது, உகந்த அளவில் இரண்டுமேயாகும். உணர்வுகளுக்கு உகந்த இடமளிக்காவிட்டால் அது எந்திரத்தனமான வாழ்வாகிப் போகும். அறிவுப்புலத்துக்கு இடமளிக்காமற்போனால் அது ஆக்கப்பூர்வமான மேம்பாட்டுக்கு இடமில்லாமற்செய்து விடும். ஆகவே இரண்டையுமே அவரவர் தேவைக்கொப்பச் செய்து கொள்ள வேண்டியதுதான்.

ஆக்கப்பூர்வமான நோக்கில் நாம் செய்து கொள்ள வேண்டியதென்ன?

-அடுத்த 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை எனவொன்று இருந்தாக வேண்டும். வரவு, செலவு, சேமிப்பு என்பதெல்லாம் வரையறுத்துக் கொள்ள வேண்டியது. பொருளாதாரச் சுணக்கம் வருமென்கின்ற நிலை மேலோங்குகின்ற போது, வருவாய் இழப்பை எதிர்கொள்ளவும் திட்டமிட வேண்டியதாயிருக்கின்றது.

-கடன் இருந்தால், அது அடைபடும் வேகம், வட்டி, இவற்றையெல்லாம் கூர்நோக்கித் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

-குழந்தைகளின் கல்விக்கட்டணம், பயணம் முதலானவற்றைக் கண்டறிந்து வகைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

-சேமிப்பின் வேகம், இருப்பு, அளவு முதலானவற்றைச் சீராய்வு செய்து கொள்ள வேண்டும்.

-ஓய்வூதியக் கணக்கில் செய்து கொள்ள வேண்டிய மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். இனம் கண்டு திட்டங்களை வகுத்துக் கொள்ளப்பட வேண்டியது. நமக்குப் பின்னான பயனாளர்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

-மருத்துவச் செலவீட்டுச் சிறப்புக் கணக்கில்(healthcare spending account), கடத்துபணத்துக்கும்(ரோல்-ஓவர்) எஞ்சிய பணம் இருப்பின், இரவு 12 மணிக்கு முன்பாக, அப்பணம் கொண்டு அனுமதிக்கப்பட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

-எல்லாக் கணக்குகளின் கடைசிநாள் இருப்பு உள்ளிட்ட விபரங்களைத் தரவிறக்கி ஆவணப்படுத்திக் கொளல். ஒவ்வொன்றிலும் நமக்குப் பிறகான பயனீட்டாளரின் பெயர் பதியப் பெற்றிருத்தல் வேண்டும்.

-கிரடிட் ஸ்கோர் கண்டறிந்து, தேவையற்ற கணக்குகளை முடித்துக் கொளல், ஈட்டுப்புள்ளிகளின் நலத்துக்கேற்ற பணிகளை மேற்கொள்ளலாம்.

-காப்பீட்டு(இன்சூரன்ஸ்)த் திட்டங்களை மறுசீராய்வு, திட்டமிடுதல் முதலானவற்றை மேற்கொள்தல்

-மரணம், நலமின்மை என்பது யாருக்கும் எப்போதும் நேரலாம். உயில் என்பது அவசியம். கூடவே வாழ்வியற்தெரிவுகளை வரையறுத்துக் கொள்ளக்கூடிய ஆவணங்களை(லிவ்விங் வில்)ப் புனரமைத்துக் கொள்ள வேண்டும்.

-கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்), வாகன ஓட்டுதல், மருத்துவத்துறை உள்ளிட்ட தொழில்சார் உரிமங்கள்(லைசென்ஸ்) புதுப்பிப்பு, வரி செலுத்துநாட்கள், மருத்துவப் பரிசோதனைக்கான நாட்கள் உள்ளிட்ட யாவற்றையும் தத்தம் நிகழ்காட்டியில்(காலெண்டர்) குறித்துக் கொளல்.

-தொடர்பு வளையத்தில்(ஃபோன், சோசியல் மீடியா, மின்னஞ்சல் முதலானவை) இருக்கின்ற தொடர்புகளில் உறுப்பினர்களைச் சேர்த்தலும் நீக்கலுமாகச் சீர்படுத்திக் கொளல்.

-குறிப்பேட்டில்(டைரி) ஆய்வு, திட்டமிடுதல் மேற்கொள்ளலாம்.

-நிழற்படங்கள், காணொலிகள் முதலான ஆவணப்படுத்தலை முறைப்படுத்திக் கொள்ளலாம். சேமிப்பில் வரிசைப்படுத்திக் கொள்ளலாம். முக்கியமான ஆவணங்களின் மின்நகல்களை ஏதோவொரு இணையக்கணக்கில் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ள வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் நேரம் பிடிக்கும். ஒதுக்கிச் செய்து கொள்ளத்தான் வேண்டும். இன்று செய்ய முடியாவிட்டாலும் கூட, அதனதற்கான நேரத்தைக் காலண்டரில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். Every task, goal, race and year comes to an end, therefore, make it a habit to FINISH STRONG.

உணர்வுப்பூர்மாக அணுகப்பட வேண்டியதும் அவசியம். எப்படி? நடப்பு ஆண்டில் நாம் செய்த தவறுகள், மேம்பாடுகள், இழந்தவை முதலானவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து குறித்துக் கொள்ள வேண்டும். நம்மால் சமூகத்துக்கு விளைந்த நன்மைகள் என்ன? கூர்நோக்க வேண்டும். 

முன்பெல்லாம் அவர்களாகவே சத்தியமங்கலம், கோபி எல்லாம் நல்லா இருக்கும் என்பார்கள். ‘இல்லை, நான், உடுமலை பொள்ளாச்சிக்கு இடைப்பட்ட அந்தியூரைச் சார்ந்தவன்’ என்பேன். இப்போதெல்லாம் அப்படியில்லை. மேம்பட்ட சாலைவசதிகள் ஏற்பட்டுவிட்டதன் காரணமாக, மதுரை, திண்டுக்கல், பழநி எனச் செல்பவர்கள் எல்லாம் எங்கள் ஊர் வழியாகச் செல்கின்றனர். செல்லும் போது, ’அந்தியூர்’ எனும் ஊர்காட்டிப் பலகையைப் படம் பிடித்து எனக்கு அனுப்பி வைக்கின்றனர். வாரம் ஒருமுறையாவது, முன்பின் தெரியாதோர் அப்படி அனுப்பி வைக்கின்றனர். சமையற்குறிப்புகளையும், மரபுசார் விழுமியங்களையும் ‘பொட்டிதட்டிச் சித்தர்’ எனும் பெயரில் (கம்ப்யூட்டர் பொட்டியைத் தட்டுபவன்) அவ்வப்போது எழுதுவது வழக்கம். இன்று பரமத்திக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த அன்பர் அங்கிருக்கும் ’பொட்டிதட்டி’ எனும் ஊர்காட்டிப் பலகையின் படத்தை எனக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். இப்படித்தானே இருக்கும் என் எழுத்துகளில் அறியக் கொடுக்கின்ற சிந்தனைகளும், தகவல்களும்? ஏதோவொரு தாக்கத்தை, வாசிக்கும் எவருக்கோ ஏற்படுத்தும்தானே? அதனைச் சரியாகவும் நேர்மையாகவும் அறத்தோடும் நான் செய்தாக வேண்டும்தானே? அக்கறையோடு சொல்கின்றேன். தமிழ் அமைப்புகளிலே, பொதுத்தளங்களிலே அப்படியான அறம் என்பது வணிகத்தாக்கத்தினால் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது. பொய்யும் புரட்டும் தங்குதடையின்றிப் புரள்கின்றன. எங்கு பார்த்தாலும் மாயக்கணக்கு உணர்வுகள் ஊட்டப்படுகின்றன. எதற்காக?? சிந்தனைவயப்படுவோம்! மாற்றம் மனிதத்தை வார்த்தெடுக்கும்!!

The bad news is time flies. The good news is you’re the pilot. 

12/28/2022

மாயக்கணக்குகள்

”தினத்தந்தி"யில் சிந்துபாத் கதையைப் படித்துவிட்டு பள்ளிக்கு ஓடிய தலைமுறையைச் சேர்ந்தவன் யான். தொலைக்காட்சி வந்த புதிதில் தூர்தர்ஷனில் ஷோபனா ரவி வாசிக்கும் செய்திக்காக காத்திருக்க வேண்டிய தலைவிதியும் எமக்கு விதிக்கப்பட்டிருந்தது. பிறகு, சன் தொலைக்காட்சி அந்த இடத்தை ஆக்கிரமித்தது. அந்த ஆக்கிரமிப்பு, பல பொழுதுபோக்குத் தொலைக்காட்சிகள் உருவானதும் உடைந்தது. பிறகு, பொழுதுபோக்குத் தொலைக்காட்சிகளின் இடத்தை பல்வேறு செய்தித் தொலைக்காட்சிகள் ஆக்கிரமித்தன. அண்மையில், அவ்விடத்தை இணையத்தில் வெளியாகும் யூடியூப் செய்தி சானல்கள், வாட்ஸ் அப் குழுக்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அப்போதிருந்து இப்போதுவரை, செய்திகளை வாசித்து நாட்டு நடப்பையும் உலகையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யும் ஒருவருக்கு, உலகம் ஏதோவொரு பதட்டத்தில், அழிவின் விளிம்பில் எப்போதும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்ற விவரிப்பே கிடைக்கும்.

ஆனால் பாருங்கள், எங்கள் தெருவில் இருக்கும் மூன்று முஸ்லிம் கடைக்காரர்கள் எவரும் தமிழ்நாட்டு "ஷாஹின் பாக்"கிற்காகக் கடையை அடைத்துவிட்டு போகவில்லை. பக்கத்துத் தெருவில் இருக்கும் தலித் மக்கள் நேற்று தொடங்கி என்னவென்றே தெரியாத மாரியம்மன் பூசைக்காக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஸ்பீக்கர்களை அலரவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தினம் பல சினிமா/அரசியல் கிசுகிசுக்களும், வாரத்திற்கு ஒரு தமிழ் சினிமாக் குப்பையும், வருடத்திற்கு இரண்டு மூன்று ஹீரோக்களின் கழிவும், வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. முகநூல் பக்கத்தையும், வாட்ஸ் அப்பையும் திறந்தாலோ, எங்கும் போராட்டம், எதிலும் போராட்டம் என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகை எப்படிப் புரிந்துகொள்வது? ப்ச்செ!”

வளர்மதி என்பார் பிப்ரவரி 22ஆம் நாளன்று இப்படியாகத் தன் நிலைத்தகவலைத் தம் முகநூல் கணக்கின் வழியாக வெளியிட்டு இருக்கின்றார். நமக்கும் அதே காலகட்டப் பின்னணிதான். புலம்பெயர் மண்ணில் வாழ்கின்றோம். பன்னாட்டுப் பண்பாடுகள், கூடவே நமக்கான அனுபவம் என்பதைக் கொண்டு பார்க்கின்றோம். புலப்படுகின்றது. நம் ஐம்புலன்களின், பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல் என இவற்றின் உள்ளீடுகள் அவை எவையாகினும், அவற்றை இருவகையாகப் பிரித்து விடலாம். ஆமாம். உள்நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது, உள்நோக்கமெதுவுமற்றது என்பதாகப் பகுத்து விடலாம்.

பார்க்கின்றோம். வாசித்தல், காட்சிகளைக் காணுதல் என்பனவாக. செவிகளால் ஒலிகளை உள்வாங்குகின்றோம். பேச்சு, பாட்டு, இசை, சமிக்கையொலி இப்படியாக. சுவைக்கின்றோம். இயற்கையின்பாற்பட்ட பொருள், சமைக்கப்பட்ட பொருள், சுவையூட்டப்பட்ட பொருள் எனப் பலதரப்பட்டதையும் சுவைக்கின்றோம். மணக்கின்றது. இயற்கையின்பாற்பட்ட மணம், செயற்கையின்பாற்பட்ட மணம், மறைக்கப்பட்ட மணம், உருவாக்கப்பட்ட மணம் எனப் பலவாக. துடுவுணர்வு, அகவுணர்வு, அது எதுவாகினும் அதிலும் சுயம்புவாக ஏற்படுவது, ஊக்கியால் ஏற்படுவதெனப் பார்க்கலாம். இத்தனையிலும்தான் இருக்கின்றது, உள்நோக்கம் கொண்டதும், உள்நோக்கமில்லாததும்.

வாட்சாப்பில் நண்பர் ஒருவர் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். தமிழ்ச்சூழலின் மிகப் பெரிய பேச்சாளர். பேசுகின்றார். ”மருத்துவரிடம் வருகின்றவர்களுள் 60+% எந்த நோயுமில்லாமல், சும்மாவேனும் ஏதோ குற்றங்குறைகளைச் சொல்பவர்கள். மருத்துவர் மருந்தும் கொடுக்கின்றார். ஆனாலும் நோயாளிக்குக் குணமாவதில்லை. எப்படி ஆகும்? அவருக்குத்தான் எந்த நோயும் இல்லையே?”, என்றெல்லாம் பேசி, கேட்பவர்களை இலயிக்கச் செய்து கைதட்டல் வாங்கிச் சென்று விடுகின்றார். நமக்குப் பார்த்தவுடன் நகைப்புத்தான் மேலிட்டது. காரணம், அவருக்கு அவருக்கான ஒரு உள்நோக்கம் இருக்கின்றது. பேச்சு சிறக்க வேண்டும். வந்திருந்தோரிடம் பாராட்டுப் பெற வேண்டும். பேச்சுக்கலை மேலோங்க வேண்டுமென்பதெல்லாம் அவருக்கான உள்நோக்கம். உள்வாங்குகின்ற நமக்கு அப்படியான உள்நோக்கம் என்ன இருந்து விடப் போகின்றது? அறிதலும், கற்றுணர்தலும் என்பதைத் தவிர.

குழுவில் மறுமொழியிட்டேன். “ஒருவேளை, நோயே இல்லாமல் அறிகுறிகளாகப் பலதைச் சொல்லி, ஒருவர் தொடர்ந்து மருத்துவம் கோருவாரேயாகின், அந்த மருத்துவர், அந்த நபரை உளவியல் மருத்துவரிடம் அனுப்பி வைக்க வேண்டும். அதுவும் ஒரு நோய்தான்”. வாசித்த மற்றொரு நண்பர், பகடியாக, உன்னைத்தான் உளவியல் மருத்துவரிடம் அனுப்பி வைக்க வேண்டுமெனச் சொன்னார். அதற்கும் நான் மறுமொழிந்தேன், “அம்மணாண்டிக லோகத்துல கோவணம் கட்டினவன் கோமாளி -பழமொழி”.

சரி, பேச்சாளர் குறிப்பிட்டது உண்மைச் செய்தியா? உண்மை கலந்த வளைக்கப்பட்ட செய்தி என்பதாகக் கொள்ளலாம். நோயே இல்லாமல் தமக்கு நோய் இருப்பதாகக் கருதி சோகையில் ஆழ்ந்து போவோர் உண்டுதாம். ஆனால் அது மூவரில் இருவருக்கு அந்த நிலை என்பது மிகவும் மிகைப்படுத்தப்பட்டது. உலகின் நடத்தையை எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடியும்? ஏதோ ஒரு இடத்தில் பத்துப் பேரை ஆய்ந்து விட்டுச் சொன்னால், அது சேம்ப்ளிங் எர்ரர்(கணக்கீட்டுத் தவறு) என்பதாகத்தான் இருக்கும். உண்மையாகவே இருந்தாலும், அது மனநோய் என்றுமாகி விடுகின்றது. 

மேற்கூறப்பட்டது ஓர் எடுத்துக்காட்டுக்கான நிகழ்வுதாம். இப்படி, காலையில் விழிக்கப்பெற்று மீண்டும் கண்ணயரும் வரையிலான எல்லாவற்றிலும் உள்நோக்கமுடையன, இல்லாதன என்பது உண்டு. இவற்றை எதிர்கொள்ளப் பழகிவிட்டால், ஒவ்வொரு நாளும் நமக்கு வாய்க்கப்பெற்ற இன்புடை நாளாகவே அமையும். வருத்தமே ஏற்பட்டாலும் கூட, அது, நியாயமான வருத்தமாக, சோகமாக, துயராக இருக்கும். இல்லாதவொன்றுக்கு வீணாய்ப் பறிகொடுக்கும் பொழுதாக இராது.

தானியம் எனும் எமன், வேட்டையாடி புலால் உண்ணுவதே மனிதர்களின் வாடிக்கை என்றெல்லாம் சொல்லி ஒரு கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் தலைவர் நல்லகண்ணு அவர்களோடு இருநாட்கள் இருக்கும் வாய்ப்புக் கிட்டியது. பேச்சுவாக்கில், அவருடைய உணவுப்பழக்கம் குறித்து வினவலானேன். அவர் சொன்னதிலிருந்து, “புலால் உண்ணுவதில்லை. கூடுமான வரையிலும் வேக வைக்கப்பட்ட பண்டங்கள், இட்லி, சோறு என்பதைக் காய்கறிகளோடு உண்கின்றேன்”. புலால் உண்பதில்லையா என எதிர்வினாவும் விடுத்தேன். ஐம்பதுகளின் மத்தியில் விட்டு விட்டதாகச் சொன்னதாக, என் நினைவு. முதல்வர் கருணாநிதி அவர்களும் இறைச்சியைத் தவிர்த்து, மீன், மஞ்சள்க்கரு தவிர்த்த முட்டை மட்டும் உட்கொள்பவராக இருந்தார் என எங்கோ படித்த நினைவு. இவர்களெல்லாம் உடற்பேணுதலுக்கான நம் வழிகாட்டிகள். நம் உடலுக்கேற்ற உணவு என்பதை, நம் உடலின் தன்மையைக் கவனித்து அமைத்துக் கொள்ள வேண்டியது நம்மால் மட்டுமே முடியும் என்பதுதான் உள்நோக்கமற்ற தகவலாக இருக்க முடியும்.

உள்நோக்கமற்ற செய்திகளுக்காகவும் அறிதலுக்காகவும் நவீன ஊடகங்களைப் பயன்படுத்தத்தான் வேண்டி இருக்கின்றது. நாம்தாம், உள்நோக்கமுடை மாயக்கணக்குகளையும் மெய்க்கணக்குகளையும் புரிந்துகொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். பழகிக் கொண்டால், உலகில் கொள்ள வேண்டிய இன்பங்கள் கோடானுகோடி!



12/23/2022

மாயக்கணக்கும் மெய்க்கணக்கும்

’அடுத்தவர் சாப்பாட்டை நீ எப்படிக் குறை கூறலாம்? அப்படியா, இப்படியா?’யென கொந்தளிப்போடு அணுகினார். புரிந்து விட்டது. ஏதோவொரு மாயக்கணக்கொன்று நம்மைத் துரத்திக் கொண்டு வந்திருக்கின்றதெனப் புரிந்து விட்டது. ஒருவருடைய உடை, உணவு, உருவம் குறித்துக் கருத்துரைப்பது ஒருபோதும் ஏற்புடையதல்லயெனும் கருத்துடையவர்களல்லவா நாம்?

சொல்லப்பட்டது இதுதான், “What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are!”. இதில் எங்கும் நாம் எந்த உணவு குறித்தும் சொல்லவில்லை. எழுதப்பட்டதற்குத்தான் நாம் பொறுப்பேற்க முடியும்; புரிந்து கொள்ளப்பட்டதற்கெல்லாம் நாம் பொறுப்புடையவர் அல்லர். I am only responsible for What I Say, Not for what you understand.

What you eat, how you are! இன்னமும் இந்தக் கருத்தில் ஊன்றியே இருக்கின்றோம். ஆமாம், நாம் உண்ணும் உணவே நாம் எப்படி இயங்குகின்றோமென்பதைத் தீர்மானிக்கின்றது. எப்படி?

பலதரப்பட்ட சத்துகள் உள்ளடங்கிய உணவை உட்கொள்கின்றோம். உடல் சமநிலை கொண்டு இயங்கத் தலைப்படுகின்றது. ஏதோவொன்று கூடவோ குறையவோ உண்கின்றோம். உடலில் இருக்கின்ற பல்வேறு உறுப்புகளும் பல்வேறு வேதிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. உடல் என்பதே ஒரு வேதிச்சாலைதான். குறிப்பிட்ட வேதிப்பொருள் கூடும் போதோ, குறையும் போதோ ஏதோவொரு உறுப்புக்குப் பணிச்சுமை கூடும் அல்லது அந்த உறுப்பின் செயல் குன்றும். கோளாறு(கள்) தோன்றுகின்றன. அந்தக் கோளாறு மனத்தைக் குலைக்கின்றது. சினம், எரிச்சல், உறுதியின்மை, தொய்வு, சோகை இப்படியான உணர்வுகளில் ஏதோவொன்று தலையெடுக்கின்றது. Now read it again. What you eat, how you are!

இன்று வீட்டில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு.  அந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தேன். ஒரு சிறு நெகிழிக்குமிழி இருக்கக் கண்டேன். “என்ன இது?” “அதா, ஒரே அசிடிட்டி. ஏண்ட்டாசிட் போட்டு ஆஃபிசுக்கு எடுத்திட்டுப் போனன்” “ரொம்பத் தப்பாச்சே?” “எனக்குத் தெரியாதா?”. அக்கப்போர். 

“போனவாரம் பூரா ஒரே சைனசு, தலைவலின்னு மாத்திரைகளப் போட்டன். அது அசிடிட்டிய இழுத்து வுட்ருச்சி”

“அதுக்கு? ஏண்ட்டாசிட் போட்டா, இருக்கிறது நியூட்ரல் ஆகிடும். செரிமானத்துக்குப் பத்தலையேன்னு ஏசிட் மறுக்கா மறுக்கா சுரக்குமே?”

“ஞே ஞே”

“அதுக்குப் பதிலா எச்2 பிளாக்கர் போட்லாம் தேவையின்னா. ஆனா அதுவும் தேவையில்லன்னுதா நினைக்கிறன். துன்ற சாப்பாடு செரியாத் துன்னணும்”

சினமேறி விட்டது தலைக்கு. ஆனாலும் நம் சொற்பொழிவைக் கேட்டுத்தான் ஆக வேண்டி இருக்கின்றது. -3 டிகிரிக் குளிரில் வீட்டை விட்டு வெளியேதான் போக முடியுமா??

காரம் மிகுந்த உணவு, செரிமானத்துக்குக் கடினமான உணவு உண்கின்றோம். செரிமான நீர்கள் கூடுதலாகச் சுரக்கத்தான் வேண்டும். அதுவே தொடர்கதையாகி விடும் போது, உணவுக்குழாயின் மேற்புறமாகச் செரிமான நீர் ஏறிவிடும். விளைவாக, நெஞ்சுக்கரிப்பு தோன்றும். மோர், தயிர், மருந்து, மாத்திரை என சமாளித்து விடுகின்றோம். பொதுவாக இது எல்லாருக்கும் தெரிந்த கணக்கு. பொதுப்புத்திக்கு அவ்வளவாகத் தெரியாதவொன்றும் உள்ளது.

சிறுகுடலிலே ஐநூறு வகையான நுண்ணுயிரிகள் 20 இலட்சத்துக்கும் மேலாக உள்ளன. அவையும் செரிமானச் செயற்பாடுகளுக்கு வித்தாக இருக்கின்றன. சில பல நேரங்களிலே அவற்றால் செரிக்கப்படுகின்ற ஏதோவொரு மாவுப்பொருள் செரிக்கப்படுவதில் தொய்வு. காரணம், அவற்றைச் செரிக்கக் கூடிய நுண்ணுயிரிகள் குறைந்து விட்டன. அவை ஏன் குறைந்தன. அவை விரும்பும் உணவு வெகுநாட்களாக உண்ணப்படவில்லை. ஒரு முப்பது கிராம் மாவுப்பொருளைச் செரிக்க முடியாமல் பத்து லிட்டர் அளவுக்குக் கூட வாயு உருவெடுக்கும். அந்த வாயு கீழாகவும் பிரியலாம். மேலாக வந்து இரைப்பையினூடாகப் பயணித்து உணவுக்குழாய் வழியாக ஊடுருவி தொண்டை(silent reflux), மூச்சுக்குழாயையும் தொடலாம்.

தொண்டையைத் தொடும் போது செருமத் தோன்றும் நமக்கு. வறட்டு இருமல் கூட எழக்கூடும். பேசும்போது அக்கம்பக்கம் இருப்பவர்கள் முகம் சுழிக்கக் கூடும். தொண்டைக்கு மேலே இருக்கின்ற நாசிகளில் புகும்போது, அந்நியப் பொருள் ஏதோ தீண்டுகின்றதேயெனக் கருதி மூக்கில் நீர் வடியும் அவற்றை அலசிக் கழுவிவிட. கூடவே நாசித்துவாரங்களின் உட்புறச் சுவர்கள் வீங்கத் தலைப்படும். கண்களைச் சுற்றியுள்ள காற்றறைகளில் இறுக்கம் ஏற்படும். தலைவலி, சைனசு, சளி எனக் கருதி அவற்றுக்கான மருந்து, மாத்திரைகள் உட்கொள்வோம். செரிமானச் சுரப்பு நீர்கள் கூடுதலாகச் சுரக்கும். மீண்டும் மருந்து, மாத்திரைகள். அதற்கான பக்க விளைவுகள். இஃகிஃகி, read it again. What you eat, how you are! 

என்ன செய்யலாம்? பட்டினி கிடக்கலாம். இரைப்பை, செரிமானமண்டலத்தில் இருக்கின்ற உணவெல்லாம் தீர்ந்து வெளியேறும் வரையிலும் பட்டினி கிடக்கலாம். அவ்வப்போது தேவையான நீர் குடிக்கலாம். படிப்படியாகத் தொல்லைகள் நீங்கியதும், பசியெடுக்கத் தோன்றியதும், காய், கனி, சத்து மிகுந்த சமச்சீர் உணவை உட்கொள்ளலாம். தொடர் தொல்லைகளாக இருக்கும் போது நல்ல மருத்துவரைத்தான் நாட வேண்டும்; நாமாக அள்ளி வீசக் கூடாது வேதிப்பொருட்களை நம் உடலெனும் வேதிச்சாலையில்!

என்ன, எப்போது சாப்பிட்டாரோ தெரியாது. இருமல், தலைவலி வந்திருக்கின்றது. அதற்கான மருந்துகள். அது, செரிமான நீரேற்றம் காற்றேற்றத்தைக் கூட்டி இருக்கின்றது. தற்போது அதற்கான மாத்திரை. இது இன்னமும் நீரேற்றத்தைக் கூடுதலாக்க இடம் கொடுக்கும். இப்படியானவை தொடர்ந்து கொண்டே இருக்குமானால், வேதிசாலையானது முன்கூட்டியேவும் தன் பணியை நிறுத்திக் கொள்ளும் நிலைக்கு ஆட்படும். எல்லாம் இந்த மாயக்கணக்குகள் செய்யும் வேலை! மாயக்கணக்குகள் செய்யும் வேலை!!

What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are!



12/21/2022

மனத்தடை

எல்லாமே கைகூடி வரும்; செய்துவிடலாமென்கின்ற துணிவிருந்தால். மாந்தனுக்குத் தடையாக இருப்பது அவனுடைய சொந்த மனத்தடைதான். நம்மில் எல்லாருக்குமே மனத்தடை இருக்கின்றது; நம்மால் இவ்வளவுதான் செய்ய முடியும், இதனைச் செய்ய முடியாது எனப் பலவாறாக. மனம் அனுமதிக்குமேயானால் முயற்சிகளுக்கு எல்லையே இல்லை. What you believe, why you are! What you eat, how you are! What you think, what you are!

எப்போதெல்லாம் தாயகம் செல்கின்றேனோ அப்போதெல்லாம் ஈரோட்டு உறவினர்களைச் சந்திப்பது வழக்கம். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லிக் கொண்டு இருந்ததுதான். தோட்டத்தைச் சென்று பார்க்க வேண்டுமென்பது. கைகூடி வரவில்லை. செல்லக் கூடாதென்பதும் இல்லை. அமையவில்லை, அவ்வளவுதான். உலகில் நடக்கின்ற, இடம் பெறுகின்ற ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருந்தே ஆக வேண்டுமென்பதில்லை. ஆனால் நாம் காரணங்களைத் தேடுகின்றோம். கிடைக்காத பொழுதில் நாமாக ஒன்றைக் கட்டமைத்துக் கொள்கின்றோம். இதுதான் நம்மில் பலருக்குமான நிம்மதிக் கேட்டுக்கும் வழிவகுக்கின்றது. இவர் என்னிலிருந்து தோட்டத்தைக் காண்பிக்கத் தயங்குகின்றாரென நானே ஒரு காரணத்தைச் சூட்டிக் கொண்டு வெம்பிப் புழுங்கிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? அதற்கு ஒருபொருளுமில்லை. இம்முறை அந்தப் பக்கமாக அன்னையர் தொழுதல் மிகப் போற்றுதலாக அதன் போக்கில் இடம் பெற்றது. அப்படித்தான் எழுத்தாளர் ஈரோடு கதிர் அவர்களின் தோட்டம் சென்று வந்தோம்.

நிறையத் தகப்பன்கள் வளர்ந்து ஆளாகிய மகளைக் குழந்தைகளாகவே எண்ணி சோறூட்டுவது முதற்கொண்டு செய்வதைச் சிலாகித்து வலைதளங்களில் மனமுருகுவதைப் பார்க்கின்றோம். ஆனால் அதே தகப்பன்கள்தாம் அன்னையர்களையும் குழந்தைகளாகவே பார்க்கின்றனர் என்பதும்.

அம்மாவுக்கு ஏட்டுக்கல்வி என்பது அறவே கிடையாது. ஆனாலும் கூட, நிர்வாகம், நிதிமேலாண்மை(ஃபைனான்சிங்), இடர் மேலாண்மை(crisis management) இப்படிப் பல துறைகளிலும் தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். வீட்டில் வசதி இருந்திராது. விருந்திநர்கள் வந்து விடுவர். புறக்கொல்லை, இட்டேரி, ஊர்நத்தம் என எங்கிருந்தாவது ஏதாவது  காய் கனி தாவரம் பண்டங்களைக் கொணர்ந்து ஒரு நிறைவான விருந்தோம்பலை அரங்கேற்றி விடுவர். இதற்கெல்லாம் என்ன அடிப்படை? மனத்தடை இல்லாததுதான் அடிப்படை. வந்திருப்போரைக் கவனித்து அனுப்ப வேண்டுமென்கின்ற ஆவல் பிறந்து விடுகின்ற போது அது ஈடேறி விடுகின்றது. அண்ணன் காசி ஆறுமுகம் அவர்களின் தாயார் அவர்களது செய்கைகள் இப்படியானதாக இருக்கின்றதைப் பார்க்கின்றோம். இப்படி நிறையப் பேர் நம்மிடையே இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

தோட்டத்தை விட்டுக் கிளம்பி வருகின்றபோது பேசலானார் மாப்பு. ஆங்கில வரி வடிவங்களின் அடையாளம் கூடத் தெரியாது. ஆனாலும் காணொலிக் கூட்டங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு குறித்த நேரத்தில் அவற்றில் கலந்து கொள்வது, பேசுபொருளின்பாற்பட்டுக் கற்றுக் கொள்வது, யுடியூப்களில் எது சரியான செய்திகள், போலிகள் என்பனவற்றைப் பகுத்துணர்ந்து கொள்வது முதலானவற்றைக் குறிப்பிட்டு, ஒரு குழந்தையின் அசைவுகளைப் பார்த்துப் பார்த்து இலயித்து இன்புறும் தகப்பனைப் போலே பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டே வந்தார். இதற்கும் அடிப்படை இதுதாம், மனத்தடை இல்லாததுதான் அடிப்படை. துள்ளுமனம் வாய்த்து விடுகின்றது அவர்களுக்கு. அதுவே நோயெதிர்ப்பு ஆற்றலுக்கும் வழிவகுத்து மூப்பெய்துதலின் வேகத்தையும் குறைத்து விடுகின்றது.

காசி, அயோத்தி இன்னபல இடங்கள் குறித்த வடநாடு என்பதான பயணம், சென்று வர வேண்டுமென அனுமதி கோரினார். எண்பத்து இரண்டு வயது மூதாட்டி முடங்கிக் கிடக்காமல் உலகைச் சுற்ற வேண்டுமென நினைப்பதே மனத்தடை இல்லாமைக்கான வேர்தான். அந்த வேரில் வெந்நீரைப் பாய்ச்சுவதற்கு நான் யார்? அடுத்தவர்களின் ஊக்குவிப்பு என்பதான புறத்தாக்கமாக அல்லாமல், போய்வர வேண்டுமென்கின்ற திண்ணிய மனம் உங்களிடத்தே இருக்குமானால் சென்று வாருங்களெனச் சொன்னேன்.

வானூர்திப் பயணத்திலே தள்ளுவண்டி(வீல்சேர்)க்குப் பணித்திருக்கின்றார்கள். கண்டு மனம் பதைப்புக்கு ஆட்பட்டிருக்கின்றது. என்னால் மற்றவர்களைப் போல இயல்பாய் நடக்க, ஏற முடியும், மறுத்து விட்டிருக்கின்றார். இவரின் ஊக்கம், தொய்வின்மையைக் கண்டு மற்றவர்கள் சோம்பலுக்கு ஆட்படாமல் ஊக்கம் கொண்டிருந்திருக்கின்றனர். அன்றாடமும் காலையில் வந்து இவரிடம் ஆசி பெற்றிருக்கின்றனர். வீடு திரும்பும் தருவாயில், மனநிறைவுடன், அடுத்தடுத்த பயணங்களுக்கும் தாங்கள் வர வேண்டுமெனக் கோரியிருக்கின்றனர். உவப்புடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பயணத்தில் தம்மை ஈடுபடச் செய்த மருமகள் குறித்தும் பாராட்டுதல்களைப் பணித்துக் கொண்டார். மழலைச் சொல் கேட்டுக் கொண்டிருப்பது போல இருந்தது.

குழந்தைகள் எல்லாருமே பிறவிக்கலைஞர்கள்தாம். வளர்ந்து ஆளாகி மூப்பெய்திப் பெரியவரானதும் அந்தக் கலைஞருக்குள் இருக்கும் கலைக்கு உயிரூட்டுவதில்தான் சிக்கல்! நீரை ஊற்றினால், எந்தச் செடியும் உயிர்ப்புடன் இருக்கும்தானே!!



12/11/2022

அமெரிக்கக் கதை

ரொம்ப நாட்களாக, அமெரிக்கக் கதை ஒன்றை எழுதியாக வேண்டுமென்கின்ற ஆசையானது படுத்தி எடுத்திக் கொண்டிருந்தது. தூக்கம் வந்தபாடில்லை. ’கதை என்பது ஒவ்வொருவர் சொல்லும் போதும் அது அவருடைய கதையாக தனித்துவம் அடைந்து விடுகின்றது. அதிலே அமெரிக்கக் கதையென்றால் எப்படி இருக்க வேண்டும்? அமெரிக்க மண்ணிலே இருந்து கொண்டு எழுதினால் அமெரிக்கக் கதை ஆகிவிடுமா? அமெரிக்க மண்ணின் தனித்துவத்தை, அமெரிக்க மண்ணுக்கேவுரிய ஏதோவொன்றைக் கதைப்பதாக இருந்தால் அது அமெரிக்கக் கதை’, இப்படியெல்லாம் பலவாக்கில் தான்தோன்றித்தனமாகச் சுற்றிக் கொண்டிருந்தது சிந்தை.

கதவுக்கு வெளியில் இருந்து வந்த ஓசை தாக்கியது, “காலையில ஆறு மணிக்கெல்லாம் எந்திரிச்சிரோணும். குளிரடிக்கிதுன்னெல்லாம் என்னியத் திட்டக் கூடாது. வர்றேன்னு சொல்லி பதிஞ்சு வுட்டது உங்க விருப்பத்தின் பேரில்!”

புதிய ஊரான இந்த ஊருக்கு வந்து சேர்ந்ததும் தேடியலைந்தது வயலின் பயிற்றுநருக்குத்தான். எங்குமே சரியாக அமையவில்லை. மணி நேரத்துக்கு நூறு வெள்ளி கூடக் கொடுத்துப் பார்த்துவிட்டோம். அலுப்பாய் இருந்தது. காற்றுவழிச் சேதிகளுக்கு இல்லாத வலு வேறெதற்கும் இருக்க முடியாது. ’இந்த வட்டாரத்துலேயே இன்னார்தாம் நெம்பர் ஒன்’ என்பதாக யாரோ ஒருவர் சொல்ல, அன்னாரிடம் நமக்கு வாய்க்குமா? மனத்தடை. ஒருநாள் போய்த்தான் பார்ப்போமேயென்று அண்டை மாநிலத்தில் இருக்கும் அவருடைய வீட்டிற்கே சென்றாயிற்று.

“யார் நீங்க?”

“இவங்க என் மகர். வயலின் கற்க ஆசை. வாலண்டீரிங் செய்யப் போன இடத்துல இருந்தவங்க உங்ககிட்டப் போகச் சொன்னாங்க!”

“என்ன வாலண்டீரிங்? எவ்ளோ காலமாச் செய்றீங்க?”, இப்படியாக தன்னார்வப் பணி குறித்த கருத்தரங்கமாக அந்த வீடு உருமாறிக் கொண்டிருந்தது. 

“வாய்ப்பே இல்லை. புது ஆட்களுக்கு என்னிடம் வாய்ப்பே இல்லை. யாராவது கடைசி நேரத்துல வர முடியாமற்போனால், அந்த நேரத்திற்காக அழைப்பேன். நீங்க வரலாம், உங்களுக்கு விருப்பமிருந்தால்”

மனைவியாருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. “மகிழ்ச்சி. எப்ப, எந்த நாள், நேரம்னாலும் சரி. அழையுங்க. வேலைக்கு விடுப்பு எடுத்துகிட்டாவது அழைச்சிட்டு வந்திருவன்”

ஓரிரு ஒரு மணிநேர வகுப்புகள் கிடைத்தன. டிசம்பர் மாதம் வந்து விட்டது. வயலின் டீச்சரின் குழு, ஆங்காங்கே இருக்கும் மூத்தோர் இல்லங்கள், மருத்துவமனைகள், சர்ச்சுகள், நகரமன்றங்கள் முதலானவற்றுக்குத் தன்னார்வத் தொண்டுப்பணியாக விழாக்கால வயலின் இசைநிகழ்ச்சிகள் வாசிக்கச் செல்வர். நாங்களும் வருகின்றோமெனச் சொல்லவே, உங்கள் குழந்தைக்கு அந்த அளவு வாசிப்புத்திறம் இல்லையேயென்பதாகச் சொல்ல, உடனிருந்து மற்ற மற்ற உதவிகள் செய்ய வருகின்றோமெனச் சொல்லி ஆயிற்று. அருகிலிருந்த அம்மையாரின் கணவரும், “ஆமாம், நானே எல்லாக் கருவிகள், ஒலிபெருக்கிகள் எல்லாவற்றையும் பொருத்திக் கொண்டிருக்க முடியாது! உடன் வந்தால் உதவியாய் இருக்கும்!!”.

டிசம்பர் மாதம் முழுதும் தன்னார்வப் பணிகள். அதிற்கிடைத்த பழகுதருணங்களின் கொடையாக, ஜனவரியிலிருந்து வாராவாரம் ஒரு ஒருமணிநேர வகுப்பு என்றாகிப் போனது மகருக்கு.

டீச்சரம்மா சீனாவுக்குப் பயணம். வீட்டில் இரு பிள்ளைகள், அவரது கணவர். இரு பிள்ளைகளென்றால் அவரது பிள்ளைகளே அல்லர். பெற்றோரில்லாக் குழந்தைகளுக்கு மாகாண அரசாங்கம்தாம் அம்மா அப்பா. அரசாங்கத்திடம் இருந்து இப்பிள்ளைகளை வளர்த்துப் போற்றும் பொறுப்பை பொறுப்பான தன்னார்வலர்கள் பெற்றுக் கொள்ளலாம். அப்படியான பிள்ளைகள்தாம் இவர்கள். இவர்களுக்குச் சரியான நேரத்தில் சப்பாடு போக்குவரத்து இல்லாமற்போய் விடுமோயென்கின்ற கவலை அம்மையாருக்கு. நம்மாள் நேரம் பார்த்துப் போட்டுவிட்டார் ஒரு போடு, “திருமிகு லில்லி, மூன்று வாரங்கள்தானே? அன்றாடமும் எங்கள் வீட்டிலிருந்து சாப்பாடு போகும், நீங்கள் சென்று வாருங்கள்!”.

அடுத்த இரு மகர்களுக்கும் கூடச் சேர்த்து வயலின் வகுப்புகள் துவங்கி விட்டன. மூத்தவர், உள்ளூர், வட்டாரம், மேற்குச்சரகம், மாகாண அளவிலான போட்டிகளிலெல்லாம் பங்குகொண்டு பரிசுகள் பெறும் நிலைக்கு வந்துவிட்டார். இளையவர்கள் லில்லியின் போக்கில் கரைந்து விட்டிருந்தனர். அவர்களுடைய அந்தநாள்ப் பொழுதில் நாமும் கலந்து கொள்வதென ஆகிவிட்டது. நம்மைத்தான் துரத்திக் கொண்டிருக்கின்றதே இந்த அமெரிக்கக் கதையாசை?

அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆசுதிரேலியா, நியூசிலாந்து எனப் பல நாடுகளுக்கும் பொதுப் பண்பாடுதாம் என்றாலும் அமெரிக்காவுக்கெனத் தனித்துவம் உண்டு. அது ஒரு நிறுவனப்படுத்தப்பட்டதும் அன்றாட வாழ்வியலில் இரண்டறக் கலந்ததுமாகும். அதுதான் உணவுக்கொடைக் கூடங்கள். ‘ஃபூட்பேங்க்’ என்பது எங்கும் இருக்கும். இல்லாத நகரங்களில்லை. ஒன்றிய அரசின் கட்டிப்பாட்டில் உள்ள ஐக்கிய அமெரிக்க வேளாண்துறையின் நேரடிக் கண்காணிப்பில் இவையங்கும். அவற்றுக்கென முறைசார் நெறிமுறைகள், சட்டதிட்டங்கள் கடுமையாகக் கடைபிடிக்கப்படுகின்றது. இவற்றினூடாக யாரும் பணம் பண்ணக்கூடாது. அரசியல் தலையீடு அறவே இருக்கக் கூடாது. தரமற்ற உணவுகள் இடம் பிடிக்கக் கூடாது. சார்புத்தன்மை, ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. அனைத்தும் உடனுக்குடனே ஆவணப்படுத்தப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எவருக்கும் வினாவெழுப்ப உரிமை உண்டு.

வளவுகளிலே வசிக்கின்ற எவரும் உணவுப் பொருட்களைக் கொடையாக வழங்கலாம். கடைகளிலே, பேரங்காடிகளிலே இருந்து வண்டி வண்டியாகப் பொருட்கள் கொடையாக வந்து சேரும். வேளாண்பெருமக்கள் விளைபொருட்களை அனுப்பி வைப்பர். பெருநிறுவனங்களிலே மிஞ்சிய எஞ்சிய பொருட்களை வீணாக்காதபடிக்குச் சென்று மீட்புப் பணிகள் இடம் பெறும். இப்படியெல்லாம் சேகரம் செய்யப்பட்ட பொருட்கள் கொடைக்களஞ்சியம் வந்து சேரும். ஒருவளாகத்துக்குச் சராசரியாக ஐந்து டன் முதற்கொண்டு பத்து டன்களுக்கும் மேலாகக் கூட பொருட்கள் வந்து சேரும். வந்து சேர்ந்த பொருட்கள், பிரித்தெடுக்கப்பட்டு வகைமைப்படுத்தும்(sorting) பணிகளுக்கு உள்ளாகும். அந்தந்தப் பொருட்கள் அந்தந்தத் தட்பவெப்பத்தில் சேமிக்கப்பட்டு இருத்தலும் வேண்டும். வகைமைப்படுத்தப்பட்ட பொருட்கள் அடுத்தநாள் பொட்டிகட்டலுக்கு(packing) உட்படுத்தப்படும்.

ஆளுயரப் பொதிகளில் பெட்டிகள் அடுக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் என்ன பொருள் வேண்டுமானாலும் இருக்கலாம். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து நயம்பார்த்து, காலாவதிநாள் பார்த்து,  தரச்சான்று பார்த்து, பொட்டணவுறுதி பார்த்து, அந்தப் பொருளுக்கான வகைமைப் பெட்டியில் கொண்டு சேர்க்க வேண்டும். இதுதான் வகைமைப்படுத்தும் பணி என்பதாகும். இப்படியான வகைமைப் பெட்டிகள் அடுத்தநாள் எடுத்துச்செலுத்திகள் (கன்வேயர் பெல்ட்) பின்பாக நிறுத்தப்படும். ஒவ்வொரு அணியிலும் பத்து பேர், பதினைந்து பேர் வரிசையாக நிறுத்தப்படுவர். முன்னே எடுத்துச்செலுத்தியில், ஒருவர் அட்டைப்பெட்டியை வைப்பார். நகர்ந்து கொண்டிருக்கும் பெட்டியில் ஒருவர் முதற்பொருளை வைப்பார். அடுத்தவர் அடுத்த பொருளை வைப்பார். இப்படியாக அந்த அட்டைப் பெட்டியில் கொடையாகக் கொடுக்கப்பட வேண்டிய பொருட்கள் இடம் பெறும். கடைசியின் தானியமக்காம அந்தப் பெட்டி பூட்டப்பட்டு இறுக்கமாக ஒட்டப்பட்டுவிடும். இப்படியான பெட்டிகள் உடனுக்குடனே வண்டியிலேற்றப்பட்டு, ஊரகப்பகுதிகளிலே இருக்கும் மூத்தகுடிமக்கள், ஏழை எளியோர், பள்ளிகள் போன்ற இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு ஓரிரு மணி நேரத்துக்குள்ளாக விநியோகிக்கப்பட்டு விடும்.

“அப்பா, do you know all the rules & regulations about sorting? You better learn before We leave!"

"ஞே ஞே”

ஆவணக் கோப்பு ஒன்றைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார் மகர். விற்பனைநாள், உகந்த பயனாக்கநாள், பயனாக்கநாள், கெடுநாள் இவற்றுக்கான வேறுபாடுகளை அறிந்து கொண்டேன். விற்பனைநாள்(sell by) என்பது இந்த நாளுக்குள் வணிகர் பொருளை விற்றாக வேண்டும். அதற்குப் பின் அங்காடியில் வைத்திருத்தலாகாது. உகந்த பயனாக்கநாள் (best if used by) என்பது இந்த நாளுக்குள் பயன்படுத்தப்பட்டால் பொருளின் விழுமியம் மேம்பட்டதாக இருக்கும். பயனாக்கநாள் (use by) என்பது உற்பத்தியாளரால் பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாள், கெட்டுவிடும் என்பதாகக் கருத முடியாது. கெடுநாள் (expiry date) என்பது, இந்த நாளுக்குப் பின் பொருள் கெட்டுப் போகக்கூடிய வாய்ப்பு இருக்கின்றதைக் குறிக்கின்ற நாள்.

”கண்ணூ, இதெல்லாம்தான் ஏற்கனவே நமக்குத் தெரியுமே?”

“பேசாமப் படிங்க அப்பா. தெரிஞ்சதுனால படிக்கக் கூடாதுங்றது எப்பயுமே இல்லை. மறுபடியும் படிக்கும் போது, புதுப்புரிதல் ஏற்படலாம். நினைவடுக்குகளின் மேலடுக்குகளுக்கு எடுத்து வருவதாக அமையலாம். ஏதோவொன்று காலாவதியாகி புதுத்தகவல் நடைமுறைக்கு வந்திருக்கலாம். படிச்சிட்டு வரச் சொல்றாங்க, படிச்சிட்டுத்தான் போகணும். நாமாக எல்லாம் நமக்குத் தெரியும்னு நினைக்கிறதுதான் அறியாமையின் முதல் அறிகுறி. பேசாமப் படிங்க”, பல்பு வாங்கிக் கொண்டு மீண்டும் ஊன்றிப் படிக்கலானேன்.

ஒவ்வொரு பொருளின் தரப்பிரிப்புகள் எப்படியெல்லாம் இடம் பெற வேண்டுமென விவரிப்புகள் இடம் பெற்றிருந்தன. மூடி வளைந்திருந்தால் குப்பையில் போட்டு விட வேண்டும். வெளிப்புறத்தில் ஒடுக்குகள் இருந்தால் குப்பையில் போட்டு விட வேண்டும். ஏன்? ஒடுக்குள் நேர்கின்ற நேரத்திலே உட்புறம் அழுத்தம் கூடியதால் விளிம்புகளில் நுண்ணிய அளவில் இடைவெளிகள் ஏற்பட்டிருக்கலாம். அதன் நிமித்தம் நுண்கிருமிகள் உட்புக வாய்ப்பிருக்கின்றது. எனவே அதைக் குப்பையில் போட்டுவிட வேண்டும். பொட்டலங்கள் கிழிந்திருந்தால் குப்பையில் போட்டுவிட வேண்டும். ஒட்டுநறுக்குகளில் தேதிகள், சத்துவிவரப்பட்டியல் போன்றவை இல்லாவிட்டாலும் குப்பை. புதிதாய்த் தெரியும். வீணாகின்றதேயென அகங்கலாய்ப்பாகத்தான் இருக்கும். இருந்தாலும் குப்பையாக்கத்தான் வேண்டும். இப்படியான பொருளைக் கொடுத்து ஒருவர் நலம் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் கொடுக்காமல் இருப்பதே நன்றாம். கடுமையான சட்டதிட்டங்கள்.

களஞ்சிய வளாகம் சென்று சேர்ந்து விட்டோம். குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர் எல்லாரும். சிலநாட்கள், நீதிமன்றத்தால் பணிக்கப்பட்டவர்கள் தன்னார்வப் பணிகளுக்காய் வருவர். சிலநாட்களில் வயதுக்கு வந்தோர் மட்டும் வருவர். ஒரு சில நாட்களில் மட்டும்தான் சின்னஞ்சிறு பிள்ளைகள் முதற்கொண்டு குடும்பத்தினர் வரலாம். அப்படியானநாள்தாம் இன்று.

“அப்பா, வாங்க நாம அந்த ரெண்டாவது டேபிள் எடுத்துக்கலாம். அம்மாமாரி வேகவேகமாச் செய்யாதீங்க. அது தவறு”

“யேய், என்னியப்பத்திப் பேசறியா? நான் மெதுவாப் பார்த்துப் பார்த்துத்தான் செய்யுறன்"

வேலையை விரைவாகச் செய்வதென்றால் எல்லாராலும் எளிதாகச் செய்து விட முடியும். ஆனால், மெதுவாக, நிதானமாகச் செய்வது மிகவும் கடினம். வேலையே செய்யாமல் இருப்பதோ, குறைவான வேகத்திலோ செய்வதல்ல மெதுவாகச் செய்வதென்பது. விரைவைக் கைவிட்டு விட்டு, முழுக்கவனத்துடன் மனம் ஊன்றி ஒன்றியவாக்கில் செய்தாக வேண்டும். பொதிகளுக்குள் எல்லாப் பொருட்களும் இருக்கும். விலை கூடிய உயர்ரகப் பொருட்களாக இருக்கும். அவற்றைக் குப்பையாக்க மனம் ஒப்பாது. ஆனால் நாம் விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செய்தாக வேண்டும். தேதி பார்த்து, ஒடுக்கம் பார்த்து, விளிம்புகள் பார்த்து, கிழிசல் பார்த்து, பொருளின் பெயர் பார்த்து, நூற்றுக்கு நூறு எல்லாமும் உகந்தபடிக்கு மேம்பட்ட வகையில் இருந்தால்தான் அந்தப் பொருள் அடுத்த கட்ட வகைமைப் பெட்டிக்குச் சென்று சேரலாம். ஆகவே விரைந்து வேலை செய்யத் தலைப்படக் கூடாது. இது ஒரு வேள்விப்பணி.

ஒரு தன்னார்வலர் மூன்று மணி நேரம்தான் இந்த வகைமைப்படுத்தும் பணியை(sorting)ச் செய்யலாம். அனுபவத்தின் பேரில் அப்படியானதொரு வரையறை. அதற்கும் மேல் ஒருவர் பணிக்கப்பட்டால், மூளை களைத்துப் போய் ஏனோதானோவென வேலை பார்க்கத் தலைப்பட்டு விடுவர். அதனாலே உணவுப் பொருள் பாதுகாப்பு, தரம் என்பவற்றுக்குக் குந்தகம் நேரிடலாம். ஆகவே மூன்று மணி நேர வரையறை. எல்லா உணர்வுகளிலிருந்தும் விடுபட்டு, கவனம், அக்கறை, பொறுப்பு, கடமை முதலான உணர்வுகள் மட்டுமே கொண்டு குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொண்டு கடக்கும் அந்த மூன்று மணி நேரம் என்பது எத்தகையவரையும் நிர்வாணப்படுத்தியே தீரும். கட்டுக்கடங்காத எந்த மனமும் கட்டுக்குள் வந்தே தீரும்.

“என்னங்க, எவ்ளோ பொருள் வீணாகுது? மலையாக் குமிஞ்சு கிடந்தது பார்த்தீங்கல்ல?”, வணிக அங்காடிகளில் பொருள் வாங்கிக் குவிப்பதென்பது ஒரு போதை. நம்மவர் அப்படி அல்லதான், என்றாலும் கூப்பான்கள் அசைத்து விடுகின்றனவே? அப்படியானவர் சொல்கின்றார். 

”ஆமா ஆமா. இந்த டிசம்பர் விடுப்புக்காலத்துல நம்ம வூட்லயும் எல்லாத்தையும் ஓர்சல் பண்ணுனாக்கூட நல்லாத்தா இருக்கும்”

“ஆமாங்க, நோ மோர் ஷாப்பிங். நிறைய டொனேசன்ல போடக் கிடக்கு. செரி, மூத்தவளை பத்து மணிக்கு எழுப்பி விட்ருங்க. இட்லியும், நிலக்கடலைச் சட்னியும் காஃபி டேபிள்ல வெச்சிருக்கு.  டே, நடங்கடா. கொஞ்ச லேட்டானாலும் லில்லி திட்டும்”

“அம்மா, மிஸ் லில்லிக்கு?”

“எடுத்தாச்சு எடுத்தாச்சு, மிஸ் லில்லிக்கும் இட்லி, பீநட் சட்னி எடுத்தாச்சு”

நினைவுக்கு வந்தது. லைன்மேன் மகன் மணிமாறனை நாடகத்தில் அந்தக் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க வைத்தார்கள் பிச்சுமணி வாத்தியாரும் கைத்தொழில் மாஸ்டரும். மெய்நிகர் வாழ்க்கையிலும் அவன் அதுவாகவே ஆகிவிட்டான்.


12/09/2022

புதுமை

புதுமை என்பது எப்போதும் புதியதாகவே இருந்து கொண்டிருக்கும். மனித நாகரிகம், அறிவுத்திறம் வளர வளர நடப்பில் இருக்கும் பழக்க வழக்கங்கள் தேய்வழக்குகளாகத்தான் செய்யும். நமக்குச் சரி என்பதாக இருந்தது நம் அடுத்த தலைமுறையினருக்குத் தவறாகப் புலப்படும். அதுதான் அறிவியல்.

வயது கூடக்கூட இயக்குநீர்களின்(ஹார்மோன்) சுரப்பு அளவுகள் மாறும். விடலைப் பையனிடம் இருக்கும் துள்ளல், நடுத்தர வயதுள்ள ஒருவரிடம் இருக்காது. காரணம் இயக்குநீர்களின் அளவில் மாற்றம். குறைவதும் கூடுவதும் இயல்பு. ஆனால் இயக்குநீர்கள் ஒன்றுக்கொன்று இயைந்து செல்லக் கூடியன. ஒன்று கூடும் போது இன்னொன்று குறையும். அந்தச் சமன்பாட்டில் இடர்கள் ஏற்படும் போது உளவியற்கோளாறுகள் தோன்றுகின்றன.

உளவியற்கோளாறுகளினால் கவலை, வருத்தம், அச்சம், மருட்கை, சாலேச்சுவரம் உள்ளிட்ட பல உணர்வுகள் மேலிடுகின்றன. பத்து வீடுகள் கடந்து வந்தபின்னும் மனம் உறுதிகொள்ள முடியவில்லை. திரும்பவும் போய் கதவைத் தாழிட்டோமாயென்பதைச் சோதிக்கத் தோன்றுகின்றது மனம். இதுகூட ஓர் உளவியற்கோளாறுதான். இது குறித்துக் கேலி, கிண்டல், எள்ளல் செய்யத் தேவையில்லை.

கடந்த காலத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு நமக்கில்லை. தற்காலத்தில் அப்படியான விழிப்புணர்வுக்கு நாம் ஆட்படுகின்றோம். ஒரு சிறு சொல் போதும், நம் அம்மாவோ அப்பாவோ மூலையில் உட்கார்ந்து அழச் செய்வதற்கு. “அம்மாவுக்கு கண்பார்வைல கோளாறு” ”குருடு” என்பதற்கும், “அம்மாவுக்கு அப்பப்ப கண்பார்வை மங்கலாயிடும்” என்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. முன்னைய சொல்பாவனை அவரது மனத்தைப் புண்படுத்தி நிலைகுலைய வைக்கக் கூடியது. மனக்குறைபாட்டினைப் பெருக்கக் கூடியது.

ஆண்டுதோறும் உடற்பரிசோதனை என்பது அமெரிக்காவில் நடைமுறைப்பழக்கம். அத்தகைய சோதனையின் போது கேட்கப்படும் வினாக்களில் முதன்மையானது, மனச்சோகை, மனப்பதற்றம், மனச்சலனம் முதலானவைக்கு ஆட்படுகின்றீர்களா?, ஆம் எனில் அதன் வீச்சு எப்படி? நாளைக்கொருமுறையா? வாரத்துக்கொருமுறையா? இப்படியெல்லாம் வினவுவர்.

நடுத்தர, மூப்பெய்தியவர்களிடம் இப்படி இப்படியான வகையில் பேசக்கூடாது, இப்படி இப்படியெல்லாம்தான் அணுக வேண்டுமெனப் பயிற்றுவிக்கும் சிறப்புப் பயிலரங்கங்கள்கூட உண்டு. தற்கொலை செய்து கொண்டார் எனச் சொல்வதில்லை. தற்கொலையால் இறந்து போனார் எனத்தான் சொல்ல வேண்டுமெனப் பயிற்றுவிக்கப்படுகின்றது. காரணம், செய்து கொண்டார் எனும் போது, உங்களாலும் செய்து கொள்ள முடியுமென்கின்ற தகவல் உட்பொதிந்து இருக்கின்றது. பின்னைய சொல்லாடலில், இறந்து போவதற்கான வாய்ப்பு அதில் இருக்கின்றதெனும் எச்சரிக்கையுணர்வு வெளிப்படுகின்றது.

மேற்கூறப்பட்ட பயிற்சிகள் சமூகத்தில் இருக்கும் எல்லாரிடமும் இருக்குமெனச் சொல்லிவிட முடியாது. ஆகவே, அக்கறையுடன், அன்புடன், வீட்டுப் பெரியவர்களை, தேர்ச்சிபெற்ற விருந்தோம்பல் இருக்கும் கூடங்களிலே வாழப் பணிக்கப்படுகின்றோம். அதைப் போய், வீட்டுப் பெரியவர்களைக் கவனிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டான், மூத்தவர்களை மதிக்க மாட்டேனென்கின்றானெனச் சொல்வதெல்லாம்கூட ஒருவகையில் சாலேச்சுவரம்தான். words matter!

12/03/2022

பிரியாணி

”ஐசுகிரீம்கோன் கொறஞ்சது எட்டாவது இருக்கணும், போயி வாங்கிட்டு வாங்க! அருணா ஆண்ட்டி சிக்கன்பிரியாணி கொண்டுட்டே வந்தாச்சு. நீங்க என்னப்பா பித்துப் பிடிச்சமாரி உக்காந்துட்டு இருக்கீங்க? அகோ, அப்பா! ”

நான் இன்னமும்கூட 2001ஆம் ஆண்டிலேயே நிலை கொண்டிருந்தேன். கல்யாணமாகிப் பதினான்காவது நாள். சாயங்காலம் கிளம்பிப் போக வேண்டும். ”மாப்ள மட்டும்தான் அமெரிக்கா கிளம்பிப் போறாறாம். பொண்ணுக்கு எப்ப விசா வரும்னு தெரியாதாம்!”, அங்கிருந்த மரங்களுக்குக் கூட பற்றியம் தெரிந்திருக்க வீடு புழுங்கிக் கொண்டிருந்தது. அப்பா மட்டும் தயங்கித் தயங்கிக் கேட்டார், “மூணு மாசத்துக்குள்ள கூப்பிட்டுக்குவதானே?”. எனக்கு மனமெல்லாம் விஜயாபதிப்பகத்தின் மீதுதான் இருந்தது. ஈரோட்டிலிருந்து எப்படியும் மாலைக்குள் புத்தகம் வந்துவிடுமெனச் சொல்லி இருக்கின்றார்கள்.

அப்படியென்ன அப்பாடக்கர் புத்தகம்? கொங்குச் சிறுகதைகள், யாரோ பெருமாள்முருகனாம், அவர் தொகுக்க காவ்யா பதிப்பகம் வெளியிட்டிருக்கின்றதாம். மொகானூர் விஷ்வான், மேட்டுக்கடைப் பழநிச்சாமி, ரெண்டு பேருமே சொல்லி இருக்கின்றனர். அவன்களே வாங்கிக் கொடுத்திருக்கலாம். எப்படியெல்லாம் அலைய விட்டான்கள்?

கடைக்குப் போகும் வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பதே நான்தான் என்பதை அறிந்து கொள்ளும் தன்நிலைக்கு வந்தேன்.

ஐசுகிரீம் பெட்டிகளை எடுத்து அட்டையைத் தேய்த்த நினைப்பு இருக்கின்றது. அதற்குப் பிறகு மீண்டும் பித்துலோகத்துக்குள் நுழைந்து விட்டிருந்தேன்.

காலம், நினைத்துச் சிரித்துக் கொண்டேன். கொங்குச் சிறுகதைகளில் இருந்த, இந்திரா என்பவர் ஜோதிமணியாகி இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டார். திலகவதி பெரும் பொறுப்பும் செல்வமும் கையாளப் பெற்று ஓய்வுகூடப் பெற்று விட்டார். கன்னிவாடி சீரங்கராயன் சிவகுமார் விடுதலை அடைந்து விட்டார். வீட்டுக்கே வந்திருந்து தங்கிய பெருமாள் முருகன். அந்தப் புத்தகம் இன்னமும் நம்மோடுதான் இருக்கின்றதா? தொகுப்பாசிரியர் பெருமாள் முருகனிடம் காண்பித்து, அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. பதிப்பிலேயே இல்லாத இந்தப் பழைய நூலைக் கண்டதில், அதுவும் அமெரிக்காவில் கண்டதில் அவருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

திலீப்குமார் புத்தகக்கடை வைத்திருந்தார். வியாபாரம் பண்ணிக் காசு பார்க்கக் கடை நடத்துகின்றனர் இன்று. அன்றெல்லாம் அப்படி இல்லை. கொங்குச் சிறுகதைகள் தேடி அலைந்த இந்தக் கிராமத்தானைப் போல யாராவது தேடி வந்தால், அவர்கள் கேட்பதைக் கொடுப்பதற்கென்றே வீம்புக்காக கடை நடத்திய மனுசன். இவரது மூங்கில் குருத்துக் கதையும் கொங்குச் சிறுகதைகளில் ஒன்று.

”ஏங்க, இதுக்குத்தான் சொன்னது? நேத்தே வாங்கிட்டு வரச்சொல்லி. கொண்டாங்க இங்க. கொழந்தைங்கெல்லாம் காத்திருக்காங்க”, பையைப் பிடுங்கிக் கொண்டு போனார் மெய்யாளுநர். புற உடலை மட்டும்தானே அவரால் ஆள முடியும்?

பயிற்சிப் பட்டறையெனும் சொல்லாடலுக்கே அது நேர் எதிரானது. எப்படி? தொழிற்கூடம் என்பதற்கான பிறமொழிச் சொல், பட்டறை என்பது. அதாவது பலரும் ஈடுபட்டுப் படைத்தல் தொழில்புரியும் கூடம். பயிலுநராக ஈடுபட்டுப் படைத்தற்தொழில் புரியும் இடமாகும் போது, அது பயிற்சிப் பட்டறை ஆகிவிடுகின்றது. ஆனால் அறிவிக்கப்பட்டு இடம் பெற்றிருந்த நிகழ்வோ அறிவரங்கம் போல இருந்தது. அதாவது துறைசார்ந்த ஒருவர் தமது கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்க, மற்றவர் செவிமடுத்துக் கொண்டிருந்தனர். மற்றைய எவரும் அந்த வேளையில் படைத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

”அப்பா, நீங்க சாப்டலையா? பிரியாணி சூப்பர்”

“நான் ஒரு புத்தகம் தேடிகிட்டு இருக்கன். அப்றம் சாப்ட்டுக்கிறன்”

பயிற்சிப் பட்டறையென்றால் பாடத்திட்டம் இருக்க வேண்டும். சிறுகதைக்கான பாடத்திட்டமென்று ஒன்று உள்ளதா? அமெரிக்காவில் இருக்கும் எந்த நூலகம், துவக்கப்பள்ளியில் கேட்டாலும் கொடுப்பார்கள். இடத்துக்கிடம் சற்று வேறுபடலாம். கதைமாந்தர், கதைநோக்கு, கதையிடம், கதைக்கரு, கதைப்போக்கு என்பவை இன்றியமையாத திட்டக்கூறுகளாக இருந்தே தீரும். இவற்றைப் பற்றியெல்லாம் விரித்துக் கூறி, எடுத்துக்காட்டுகளைச் சுட்டி, மொத்த அணியும் அவரவர் அறிதலுக்கொப்ப உடன்சேர்ந்து கட்டிக் கொண்டே வந்து, பயிற்சியின் நிறைவில் ஆளுக்கொரு கதையை அடுத்தவர் பார்வைக்கு வைத்து கற்றுக் கொள்வது பயிற்சிப் பட்டறையாக, பட்டறிவாக அமையும்.

தேடிய கொங்குக் கதைகள் நூல் கிடைத்து விட்டது. ஆஸ்டின் நகரில் திலீப்குமாருடன் மூங்கில் குருத்துக் கதையில் வரும் கோயமுத்தூர்க் காட்சிகளைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

“ஏங்க, சாப்டுங்க. மிச்சம் இருக்கிற பிரியாணிய அருணா திரும்பக் கொண்டுட்டுப் போனாலும் போவாங்களாயிருக்கும்”

“மூங்கில் குருத்துகளை வீசியெறிஞ்ச அந்த அம்மாவோட கோபம் நியாயமானதுதானே?”

“உங்களுக்குப் பைத்தியமா பிடிச்சிருக்கு. அருணாவோட சிக்கன் பிரியாணிக்கும் உங்க உளறலுக்கும் எதனா சம்மந்தம் இருக்கா?”

“ஓ, சாரி, சாரி. இது வேற. நீ எனக்குக் கொஞ்சம் எடுத்து வெச்சிரு. நான் அப்றம் சாப்ட்டுக்கிறன்”

“என்னமோ மூங்கில் குருத்துன்னீங்ளே?”

“இலக்கியக் கூட்டத்துல கேட்ட கேள்வி அது”

“நீங்க இன்னும் திருந்தவே இல்லியா? இன்னுமா அதைக்கட்டிகிட்டு அழ்றீங்க?”

“இல்ல, நீ போ, நான் வர்றன்”

தேடப்பட்ட, திலீப்குமாரோடு எடுத்துக் கொண்ட படங்களும் கிடைத்தன.

அப்படி என்ன கேள்வி கேட்டாங்க?

“தெருவில் இறங்கியதும் திடீரென்று எதிர்வீட்டின் சிறிய சந்திலிருந்து அம்மணமாய் ஒரு எட்டு வயதுப் பையன் குறி குலுங்க ஓடி வந்து பாதையோரம் அமர்ந்துகொண்டான்.

வெயில் அறைந்து தாக்கியது.”

இந்த வரிகள் கடைசியாக இடம் பெற்றிருக்கு. ஏன்?

முந்தைய பத்தியில் கதைசொலன் அம்மாவின் மீது சினம் கொள்கின்றான். “’நீயே போய்ப் போட்டுக் கொள்’ என்று கூறிவிட்டு நடந்தேன். எல்லாம் அர்த்தமற்றதாக இருந்தது” என்று சொல்கின்றான். அதற்கு விடை சொல்லும் முகமாகத்தான் அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கு முத்தாய்ப்பாக. எப்படி? எதிர்வீட்டுப் பையன் வீட்டிலிருந்து விரைவாக அம்மணமாக ஓடி வந்து அமர்கின்றான். வெயில் அறைகின்றது. அதாவது, அம்மா, குடும்பம் என்பதெல்லாம் ஒருவரின் காத்திரமான உடுப்புகள். உதறித்தள்ளி, உடுப்புகள் இல்லாதவிடத்தே வெயில் அறைய உடம்பு சுடுபட்டுக் கொள்ளத்தான் செய்யும்.

”பாப்புமா, நேரத்துக்கு சாப்டாட்டி வாயில புண் வந்திரும்னு உனுக்குத் தெரியும்தானே? கொஞ்சம் போட்டுட்டு வந்து குடுத்திருக்கக் கூடாதா? செமப்பசி!”

“பேசாதீங்க, மூங்கில் குருத்து, அது இதுன்னு பினாத்திகிட்டு இருந்தது நீங்க. பிளேட்ல போட்டு மூடி வெச்சிருக்கு, போய்ச்சாப்டுங்க போங்க!”

கிட்ட இருப்பது, பிரியாணியாகவே இருந்தாலும் கண்களுக்குத் தெரிவதில்லை!