2/27/2022

ஏர்லிஃப்ட்

யார் இந்த டொயொட்டோ சன்னி என்கின்ற மாத்துண்ணி மேத்யூஸ்? அப்படியென்ன உலகசாதனை? டொயொட்டோ சன்னி, கேரளாவில் இருக்கும் கும்பநாடு எனுமிடத்தில் 1936ஆம் ஆண்டு பிறந்தவர். தொழில்மயமாக்கலின் துவக்ககாலத்தில், 1956ஆம் ஆண்டு கப்பல்வழியாக வேலைதேடிக் குவைத் நாட்டுக்குப் போய்ச் சேர்ந்தார் இவர். பல வேலைகளைச் செய்து வந்த இவர் படிப்படியாக வளர்ந்து, டொயொட்டோ ஏஜன்சி ஒன்றில் 1989ஆம் ஆண்டு வரையிலும் பணிபுரிந்து வந்தவர்தாம் டொயொட்டோ சன்னி. கூடவே இந்தியர்களுக்கான பள்ளிக்கூடம், இந்தியர்நல சங்கங்கள் போன்றவற்றையும் நடத்தி வந்தார்.

1990 ஆகஸ்ட் 2ஆம் நாள், ஈராக் படைகள் குவைத் நாட்டினைக் கைப்பற்றிவிட, ஈராக்கின் 19ஆவது மாநிலமாக அறிவித்துக் கொண்டார் சதாம் உசேன். அங்கிருந்த இந்தியர்கள் பதற்றம் கொள்ளத் துவங்கினர். இந்தியா அரசும் கவலை கொள்ளத் துவங்கியது. உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தர்குமார் குஜ்ராலை அனுப்பி வைத்தார் பிரதமர் வி.பி.சிங்.

புறப்பட்ட ஐகே குஜ்ரால் குவைத் நாட்டிற்குச் செல்லவில்லை. மாறாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பேக்கரைச் சந்தித்து அமைதியான முறையில், ஈராக் வெளியேறுவதற்கான வேலைகளுக்குத் தாம் பொறுப்பேற்றுக் கொண்டால் மட்டுமே அங்கிருக்கும் இந்தியர்களின் நலம் பாதுகாக்கப்படும். அல்லது, அவர்களை நாட்டுக்குத் திரும்ப அழைத்துக் கொள்ள ஒத்துழைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். ஐநா சபை மூலமாகத் தீர்த்துக்கொள்வதற்கு அமெரிக்கா சம்மதிப்பதாகக் கூறினார் பேக்கர். உடனடியாக சவூதி அரேபியாவில் இருந்த அரசகுடும்பத்தைச் சந்தித்து ஒப்புதல் வாங்கிக் கொண்டார் குஜரால். அன்று மாலையே பாக்தாத் சென்றவர், ஈராக் அமைச்சர் தாரிக் அஜீஸைச் சந்தித்து, மறுநாள் காலை சதாம் உசேனோடு சந்திப்பு.

விமானப்படை விமானங்களை குவைத்துக்கு அனுப்பி, நாட்டுமக்களை அழைத்துக் கொண்டுவருவதென முடிவு செய்யப்பட்டு ஐநா சபையிடம் ஒப்புதல் கோரியது இந்திய அரசு. குவைத், ஈராக் உள்ளிட்ட வான்வழித்தடம் மூடப்பட்டிருப்பதால் எவ்வித விமானங்களும் இயங்குவதற்கு அனுமதியில்லை, ஆனால், ஜோர்டான் தலைநகரான அம்மானில் அனுமதிக்கலாமென முடிவு செய்யப்பட்டது. குவைத்துக்கும் அம்மானுக்குமிடையேயான போக்குவரத்துக்கான பேருந்துகளைத் தாம் வழங்குவதாகச் சொன்னார் சதாம் உசேன்.

இங்குதாம் பிரச்சினை. குவைத்தில் பல பாகங்களிலும் இருந்தனர் இந்தியர்கள். அவர்களிடம் உரிய பாஸ்போர்ட்கள் இல்லை. எல்லாமும் எம்ப்ளாயர்களிடம் இருந்தன. நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு விட்டனர். நிறுவன முதலாளிகள் அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்தும் இருந்தனர். இங்குதான், நாயகர் டொயொட்டோ சன்னி வருகின்றார். உள்ளூர் ஒருங்கிணைப்பு வேலைகளைச் சக இந்தியர்களான ஹர்பஜன் சிங் வேதி போன்றோடுடன் இணைந்து மேற்கொள்கின்றார். ஒவ்வொரு நபரையும் தேடிப் பிடித்து, முடியுமேயானால் அவர்களின் பாஸ்போர்ட்களைக் கைப்பற்றியெனக் களமாடுகின்றார். 1990, இந்தியப் பொருளாதாரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. இருந்தாலும், ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்சுக்குச் சொந்தமான விமானங்களில், ஒரு இலட்சத்து 76 ஆயிரம் பேரும் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். சிவில் விமானங்களில், ஏர்லிஃப்ட் செய்யப்பட்டதன் அதிகபட்ச எண்ணிக்கை இதுவரையிலும் இதுவாகத்தான் இருக்கின்றது. குவைத் விமானநிலையத்தில் அனாதரவாக இருந்த பாகிஸ்தான் நாட்டுப் பணியாளர்களையும் இந்தப் பயண விமானங்கள் கொண்டு கரை சேர்த்தன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.   The airlift, which began in the first week of September 1990, lasted 59 days and involved 499 sorties. Mathews was among the last to leave. Then, there was a long waiting period and it was only after a few months that the new edition of the Guinness Book of World Records was published with Air India's achievements duly listed.

இந்தியர்கள் அனைவரும் திரும்ப அழைத்துக் கொள்ளப்பட்ட சில நாட்களிலேயே வளைகுடாப் போர்-2, பாலைவனக் கேடயம் எனும் பெயரில் துவங்கிற்று.

2016ஆம் ஆண்டு, ஜனவரி 22ஆம் நாள், ஏர்லிஃப்ட் எனும் பெயரில், நாத்துண்ணி மேத்யூசாக அக்சய்குமார் நடித்த திரைப்படமும் இதன் பின்னணி கொண்ட கதையுடன் வெளியானது.

https://www.news18.com/news/india/mathunny-mathews-the-real-life-hero-of-airlift-dies-in-kuwait-1407625.html


2/04/2022

மனமே மனமேகு

அவசியம், தேவையானவொன்று அல்லது இன்றியமையாதவொன்று. அதற்கு முன்னம் ‘அ’ சேர்த்துக் கொண்டால், அதன் எதிர்ச்சொல்லாகிவிடும், in the form of 'anti'. அ + அவசியம் = அனாவசியம். அ + சிங்கம் = அசிங்கம். ஏகம் என்றால், எல்லா இடத்தும் பரந்துபட்டு மொத்தமாக. ஏகமாக எல்லா இடத்திலும் மழை பெய்தது. அ + ஏகம் = அனேகம். எல்லா இடத்தினின்று என்பதற்கு மாற்றாக, இந்த இடத்தில் மட்டும், விதிவிலக்காக. அனேகமாக இன்று வரலாம். இப்படியானதன் வினைச்சொல் ஏகுதல். மனமெல்லாம் நிரவிப் போதல் மனமேகுதல், affirmation. சிலபல கொள்கைகளை, பண்புகளை மனத்தின்பால் பூணுதல் என்றும் கொள்ளலாம்.

பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்கின்றன. அன்றாடம் காலை 8.55 மணிக்கு முதலோசை. ஒன்பது மணிக்கு இரண்டாமோசை. பள்ளிவளாக முன்றலில் கூட்டம் அதற்கான ஒழுங்குடன் துவங்குகின்றது. தமிழ்த்தாய் வாழ்த்து. தேசியப்பாடல். தலைமை ஆசிரியர் உரை. பின்னர் உறுதிமொழி கூறல். ‘இந்தியா என் தாய்நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள், ..’ இப்படியாக ஒவ்வொருநாளும். என்ன காரணம்? ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கால், மனம் அந்தப் பற்றியத்தினின்று தடம் பிறழாமல் இருக்கவும், அதன்பால் ஊக்கம் கொள்ளவும் நாட்டம் உடைத்தாவதுமாக ஆகும் என்பதுதான். அதாவது, மனம் யாவிலும் சிந்தனையை நிரவிச்செல்லுதல் என்பதாகும்.

தன்மீதான எதிர்மறை எண்ணங்கள் தனது செயலாற்றலின் வீரியத்தைக் குறைக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ’குளிராயிருக்கின்றது, வெளியே சென்றால் நமக்கு அது செரிவராது, இன்று விட்டுவிடுவோம், ஒருநாள் சைக்கிளிங்க போகாவிட்டால்தான் என்ன?’ என்று நினைத்தால் இல்லைதான். ‘அதற்கென்ன, நம்மிடம் தேவையான உடுப்புகள் இருக்கின்றன. அணிந்து கொண்டு போனால் குளிர் நம்மையொன்றும் செய்துவிடப் போவதில்லை, போய்வருவோம்’ என்று நினைத்தால் போகலாம்தான். இப்படியான தருணங்களிலே, மனமேகுதலெனும் பயிற்சி ஓர் உந்துதலைக் கொடுக்க வல்லது.

ஒருவரைப் பார்த்து இன்னொருவர் வினவுகின்றார், ‘பலதையும் எழுதுகின்றீர்கள். எழுதியவண்ணம் முதலில் உங்களால் இருக்க முடிகின்றதா?’. முதலில் இந்த வினாவின் முகாந்திரத்தைத் தெரிந்து கொள்ள முற்படுவோம். இவையெல்லாம் எதார்த்தத்தில் செயற்படுத்தக் கூடியதுதானாயெனத் தெரிந்து கொள்வது வினாவின் அடிப்படையாக, நோக்கமாக இருக்குமேயானால் நல்ல கேள்வி. அல்லது, எழுதியவரைச் சாடவேண்டுமென்கின்ற நோக்கில் விடுக்கப்பட்ட வினாவாக இருக்குமேயானால் அது அபத்தமான கேள்வி. பேசுபொருளின் தன்மை, சாதகபாதம், அதன் உண்மைத்தன்மை முதலானவற்றை ஒட்டியும் வெட்டியும் கலந்துரையாடும்போதுதான் பேசுபொருள் குறித்த முழுப்பார்வையும்(wholistic view) வெளிப்படும். அல்லாவிடில், பேசுபவரது விருப்பு வெறுப்பு மனச்சாய்வுக்கொப்ப ஒருசார்புப் பார்வை மட்டுமே பார்வையாளனுக்கு, வாசகனுக்குக் கிட்டும். அப்படியானவை பெரும்பாலும் உள்நோக்கம் கொண்டவையாக, சார்புடையதாக இருக்கும். அதை விடுத்து, படைப்பாளரின் கிரிடிபிளிட்டியை, சுயத்தைக் கேள்விக்குள்ளாக்குவது பொழுதை வீணாக்குவதிலேதான் முடியும். எனவே அப்படியான உள்நோக்கம் இருக்குமேயானால் அது அபத்தம். சிகரட்டுக்கு கட்டுண்டு போன ஒருவர், புகைபுடிக்காதேயெனச் சொல்லக் கூடாதாயென்ன? ஆகவே தர்க்க ரீதியாகத்தான் எதையும் அணுக வேண்டும் நாம்.

மனம் கடந்தகாலத்திலேயே இருந்து, நினைத்துக் கொண்டிருந்தால், நடப்புக்காலம் வீணாகின்றதெனப் பொருள். எதிர்காலக் கனவை, திட்டத்தை மட்டுமேயெண்ணிக் கொண்டிருந்தால் நினைப்பை இலக்கினை இல்லாதொழித்துவிடும். ஆக, நடப்புக் காலத்துக்கு நாம் ஆட்பட்டாக வேண்டும். அந்த நடப்புக்காலம் ஓர் ஒழுங்கில் செல்லும்படியாக இருக்க வேண்டும். அப்படியானதற்கு, தான் விரும்பும் செயற்பாடுகள் குறித்தான சிந்தனைகளைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் கலந்துரையாடுவதும், அந்தந்த நபரை நடப்புக்காலத்தில் இருக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் பிறழ்ந்து போகாமைக்கு வழிவகுக்கும். அப்படியானதொரு முயற்சியாகக் கூட இருக்கலாம். ஆகவே அந்தத் தனிமனிதரைப் பற்றிப் பேசுவதற்கு மாறாகப் பேசுபொருள் குறித்து அறிய முற்படல் மேன்மையளிக்கும். ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கால், வெளிப்படுத்துங்கால் மனம் அதனோடு பிணைத்துக் கொள்கின்றது. அடுத்தவரின் பார்வைக்கும் ஆட்படுகின்றது. அதுவே gurdrail தடம்புரளா வழிகாட்டியாகவும் அமைந்து போகின்றது. 

மனநலத்துக்கும் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளுக்கும் மனமேகுதல் (அஃபர்மேசன்) உகந்தது. எனவேதான், தொடரியக்கமாகத் தலங்களுக்கு, பாடசாலைகளுக்கு, வாசகசாலைகளுக்குச் சென்று ஊக்கமுறு கருத்துகளைத் திரும்பத் திரும்ப உள்வாங்கலும் செப்புதலும் என்பது அடிப்படை.

I am committed to improving myself and I am getting better daily. ― Idowu Koyenikan





2/03/2022

சுவடுகள்

ஆகக்குறைந்தபட்சம் ஓராண்டாவது விடுதியில் தங்கிப் படிக்க வேண்டுமென்பது அமெரிக்காவின்  90%க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் கட்டாயம். அனுப்பப்பட்ட பிள்ளை நன்றாகப் படிக்கின்றதா என்பதைக் காட்டிலும் மனநலத்துடன் இருக்கின்றதாயென்பதில்தான் எல்லாப் பெற்றோர்களும் மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பர். பணம் செலவாவதைப் பற்றியோ படிப்பைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. என்ன காரணம்? 18 வயதில் வீட்டை விட்டு வெளியில் தங்குவதினால் தன்னாட்சியுடன் அவர்கள் வாழத்தலைப்படும் போது எதிர்கொள்ளும் சவால்களும், பன்னாட்டுப் பல்லினமக்களும் வந்து படிக்கின்ற இடத்தில் நேரும் பண்பாட்டு வித்தியாசங்களினால் ஏற்படும் மனக்கசப்புகளும்தான்.

ஆண்டுக்குப் பதினொரு இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவுக்குப் படிக்க வருகின்றனர். அதிலே தோராயமாக 2 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள். அந்த 2 இலட்சத்திலே தோராயமாக 50 ஆயிரம் பேர் தமிழர்கள்.

உலகமயமாக்கல் என்பது உலகப்பொதுப் பண்பாட்டுக்கு நம்மை இட்டுச் சென்று கொண்டிருக்கின்றதென்பதை எவராலும் மறுக்க முடியாது. பிடிவாதமாக மறுத்தோ இடித்தோ பேசினாலும்கூட அதுதான் உண்மை. பெங்களூரிலும் சென்னையிலும் கால்செண்ட்டர்கள் இருக்கின்றன. ஜான், மைக்கேல் போன்ற பெயர்களிலே அந்தந்தநாட்டுப் பேச்சு, பழக்க வழக்கங்களோடு பயனர்களை அணுகிப் பேசியாக வேண்டும். ஆங்கிலம் தெரிந்திருந்தாலும், அதன் ஒலிப்பு, பேச்சு முறைமைகள் எல்லாம் அந்தந்த நாட்டுப் பண்பாட்டை ஒத்துத்தான் இருந்தாக வேண்ட்டும். இப்படி இதன் தாக்கம் பலதுறைகளிலும் இன்றியமையாததாகப் போய்விட்டது. எனவே, பன்னாட்டு முறைமைகளுக்கொப்ப நாம் நம்மை மாற்றிக் கொண்டாக வேண்டிய கட்டாயமும் ஏற்படுகின்றது.

வீட்டிலே, அக்கம்பக்கத்திலே எண்ணங்களும் சிந்தனைகளும் ஒவ்வாமை, பகைமை, நல்லிணக்கப்போதாமை போன்றன சார்ந்து இருக்கும் போது, இலைமறை காயாக அதன் தாக்கம் அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கும் ஏற்படும். அவர்கள் வளர்ந்து மேலே வரும் போது அவர்களின் செய்கைகள், திட்டமிட்டுச் செய்யாமல் அனிச்சையாக நிகழ்ந்திருந்தாலும் கூட (ignorant), அது அவர்களின் முன்னேற்றத்துக்கு. நற்பெயருக்குக் குறைபாடாகப் போய் முடியும்.

நேரிடையாக, நீ இதைச் செய்தாய் எனச் சொல்லிவிட்டால், தொடர்புடையவர் அதைச் சரி செய்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். அதையும் சொல்ல மாட்டார்கள். சிரிக்க சிரிக்கப் பேசி அனுப்பி விடுவர். ஒரு ஆய்வுப் பயிற்சிக்கான வாய்ப்பு, ஒரு விளையாட்டுக்கான வாய்ப்பு, ஒரு பிசினஸுக்கான வாய்ப்பு இப்படி எல்லாமும் நழுவிப் போகலாம். இவையெல்லாம் மறைமுகமான பக்கவிளைவுகள். பல நேரங்களில், ஹானர்கோட் வயலேசன், ரிமார்க் நொட்டேசன் போன்றவை நிகழ்ந்துவிடும். அவ்வளவுதான். அவை அந்தந்த நபரது பட்டயங்களிலே இடம் பெறும். காலம்முழுமைக்கும் அதன் தழும்பு/வடு இருந்து கொண்டேயிருக்கும். எடுத்துக்காட்டாக, ஆட்டையாம்பட்டியில் இருந்து கொண்டு ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கின்றார். அந்த நிறுவனம், அந்த விண்ணப்பதாரின் விபரத்தை, தான் பிசினஸ் செய்யும் வெளிநாட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கும். கணினியில் கணக்குக் கட்டமைக்க, பயனர்களின் விபரங்களைப் பகிர்ந்து கொள்ள எனப் பலவற்றுக்கும் அவர்கள் செக்யூரிட்டி கிளியரன்சு பெற்றாக வேண்டும். அப்படியாப்பட்ட கிளியரன்சு பெறுமையில் அன்னாரது பெயருக்குப் பங்கம் ஏற்பட்டிருப்பது புலப்பட்டால், அவருக்கான வாய்ப்பு மறுக்கப்படும். சரி, என்னதான் செய்ய வேண்டும்?

திறமை(டேலண்ட்) மட்டுமே போதுமானது அல்ல. பண்புநலம்(கேரக்டர்) இன்றியமையாதது. திறமைக்குறைபாடு இருக்கலாம், ஆனால் பண்புக்குறைபாடு இருப்பது தெரிய நேர்ந்தால் நிச்சயம் அவர் தவிர்க்கப்படுவார் பெரும்பாலும். உலகில் இருக்கும் எல்லா சமயங்களும், மாந்தசமுதாயத்துக்கான நெறிமுறைகளின் தொகுப்பே. நன்மை கருதியே அவை கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் எந்தக் கோளாறுமில்லை. நேரிய எண்ணங்களின் தொகுப்பாகக் கொள்ளலாம். நாத்திகம்/சமயம்சாராமை எனச் சொல்லிக் கொண்டாலும் கூட, சில பல ஒழுங்குகளை வரிசைப்படுத்தி இதுதான் வாழ்க்கைமுறையெனச் சொல்ல முற்படும்போது, அதுவுமொரு சமயமாகவே மாறிவிடுகின்றது. எனவே, இவை எல்லாவற்றின் அடிப்படைத் தார்மீகம் ஒன்றுதான். மாந்தநேயம், நல்லிணக்கம், கூடிவாழ்வது, பிழைத்திருத்தலை நல்வழிப்படுத்துவது மட்டுமே. எனவே கீழ்க்கண்ட பற்றியங்களைப் பற்றியொழுகல் அவசியமானது.

rumor spreading வதந்தி பரப்புதல்: உறுதியற்றவற்றைப் பரப்புவது, இட்டுக்கட்டிப் பேசுவது, ஃபேக்நியூஸ் பகிர்வது

name calling தனிமனிதத்தாக்குதல்: தொடர்பற்றமுறையில் தனிப்பட்ட நபரைச் சாடுவது

psychological manipulation உளவியற்தாக்குதல்: உணர்வுகளைத் திசைதிருப்புவதும் புரட்டிப் போடுவதும்

character assassination நற்பெயருக்குக் களங்கம்: ஒருவரை மானக்கேடாக்குவது

social exclusion சமூகவிலக்கம்: சமூகத்தில் இருந்து, மக்கட்திரளில் இருந்து விலக்கி வைப்பது

purposeful ostracism ஒதுக்கல்: பாராமுகம் கொண்டு நோகடிப்பது

extortion மிரட்டிப்பெறுதல்: பிணையாக்கிப் பயன் பெறுவது

malicious teasing அவமானப்படுத்தல்: பலர் சேர்ந்து ஒருவரைத் தனிமைப்படுத்தி அவமானப்படுத்தி நிலைகுலைய வைப்பது

slander இழிமொழிகூறல்: மொழி, இனம், சாப்பாடு போன்ற விழுமியங்களைக் கொண்டு இழிவுபடுத்துவது

avoiding தவிர்த்தல்: நாடி வருபவரை, தேடி வருபவரை திட்டத்துடன் தவிர்ப்பது

மேற்கூறிய செயற்பாடுகள் இல்லாத இடம் இப்புவியில் உண்டா? கிடையாது. கிடையாது என்பதற்காகவே taking it for granted, அனுமதிக்கப்பட்டவொன்றாகக் கருதலாமா? கூடாது. ஏனென்று சொன்னால், ஒருவருக்கு அவருக்கான சுவடு(legacy) முக்கியமானது. நம் சுவடுகள் வழியாகத்தான் நம் பிள்ளைகள் பயணிக்கத் தலைப்படுகின்றனர். எங்கோவொரு நாள், ஏதோவொரு தருணம் அவர்களுக்கு அது பின்னடைவாகப் போயே தீரும். அதைத்தான் சமயங்கள் முன்னோர் செய்த பாவம் என்கின்றன. சமயங்களுக்கும் அரசியல் கொள்கைகளுக்கும் பரிந்து பேசிப் பயனில்லை, அதனதன் அடிப்படையைப் புரிந்து கொள்ளாத வரையிலும். யாரோ சிலர் பணம் பண்ணுவதற்காக, அதிகாரப்பயன்களை அனுபவிப்பதற்காக நாம் நம் சுவடுகளைக் கறையாக்கிக்(corrupt) கொள்ள வேண்டிய அவசியமில்லை.

No matter what happens in life, be good to people. Being good to people is a wonderful legacy to leave behind. -Taylor Swift


2/01/2022

மனக்கரையான்

நஞ்சென்பது உணவிலோ மூச்சுக்காற்றிலோ மட்டுமேயில்லை. அது நாம் உள்வாங்கும் ஐம்புலன்களினூடாக உட்புகுந்து உணர்வாகவும் நம்முள் குடிகொண்டிருக்கும். உள்ளிருந்து கொண்டேவும், அது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அரித்துக் கொண்டிருக்கும். நமக்குள் வெறுப்புணர்வு இருக்கின்றதாயென்பதை எப்படி அறிந்து கொள்வது?

வெறுப்புணர்வு என்பது புற்றுநோயைப் போலக் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆட்கொள்ளக் கூடியது. நம் ஊக்கத்தை, உள்ளத்தை, ஆன்மாவை அரித்துக் கொண்டேவும் நம்மை அண்டியிருக்கின்ற அம்மா, அப்பா, குழந்தைகள், மனைவி, உற்றார், உறவினர், சக நண்பர்களென அனைவரையும் பதம்பார்க்கக் கூடியவொன்று. வெறுப்புள்ளம் கொண்டவர் மனம் தகித்துக் கொண்டேயிருக்கும். அடங்குவதற்கு நேரம் பிடிக்கும். சதா சர்வகாலமும், தனக்கான தீனியைத் தேடிக்கொண்டேவும் இருக்கும். மீம்கள், வீடியோக்கள், சக நண்பர்களின் அவதூறுப் பேச்சுகள் எனத் தீனிகளில் பலவகை. மனமெல்லாம் அதுவே நிறைந்திருக்கும். ஒரு சொல் போதும், வெறுப்புணர்வு கொப்பளிக்கக் கொப்பளிக்க அடுத்தவரைச் சென்று சேரும். அதிலும் நண்பர் அல்லது குடும்பத்தினரின் சொல்லாக இருக்கும்பட்சத்தின் அதன் வீரியம் பன்மடங்கு அதிகம்.

வெறுப்பென்பது எதன்மீதும் பாயலாம். விலங்குகள், சப்பாடு, வேலை, கலைப்படைப்புகள் என் எதன்மீதும் வெறுப்புணர்வு பாயக்கூடும். விருப்பமின்மை என்பது நாட்டம் கொள்ளாமலிருப்பது. வெறுப்பென்பது தொடர்பில் இருந்து கொண்டேவும் உள்மனத்தகிப்புக் கொள்வது.

நாம் நம்மிடத்தே இவ்வகையான வினாக்களைத் தொடுத்துக் கொள்ளலாம். என்னுள் வெறுப்பு குடிகொண்டிருக்கின்றதா? எரிச்சலுணர்வு, பாராமை, சகிப்பின்மை, சினம், எள்ளல் முதலான உணர்வுகள் இன்று காலையிலிருந்து எப்போதெல்லாம் மேலிட்டது? அடுத்தவருக்கு முகமன்(ஹாய், வணக்கம்) சொல்ல மனம் கோணியதா? இவையெல்லாமும் குறித்து வைத்துக் கொண்டு, அதன் காரணங்களை ஆராயத்தலைப்பட்டால் வெறுப்பின் இருப்பிடம் அறியவரும். 

சில தருணங்களில் வெறுப்பின் சீற்றம் வெளிப்படுகின்ற பேச்சிலே, செயலிலே தெறித்து வெடிக்கும் (explosion). அதன்நிமித்தம் புறத்தாக்கம் தீங்குக்கு இட்டுச் செல்லும். நிறைய நேரங்களிலே உள்ளத்துள் (implosion) வெடித்துக் கொண்டிருக்கும். அப்படியான பொழுதுகளில், நிகழும் வேதிவினைகள் ஏராளம். உடலே ஒரு வேதிக்கூடம்தான். அந்த வேதிக்கூடத்தின் கெமிக்கல் பேலன்ஸ் தவறும் போது, சொந்த செலவிலே சூன்யம்தான். இதனைக் கவனிக்காமல் விடுவோமேயானால், ஊக்கத்தினைக் காலியாக்கும்; கவனக்குவியம் பழுதாகிப் போகும்; நாட்கள் இருண்டு போகும்.

பிறர்மீது ஒவ்வாமை கொள்வதும் வெறுப்புக் கொள்வதும் மாண்பைக் குறைக்கும்; மாந்த அழகைக் கெடுக்கும். வன்மம் குடிகொண்டால் ஏதோவொன்று எங்கோ நாசமாகிக் கொண்டிருக்கின்றதென்பதே பொருள். 

அலுவலகங்களிலே, ஆலைகளிலே, பணியிடங்களிலே பணிகளில் தொய்வு, தடை ஏற்படுகின்றது. அதன் செயல்முறை, செயலாக்கம், தொழில்நுட்பம், கருவிகள், சுற்றுச்சூழல், பணியாளின் திறம்(skill) போன்றவற்றை ஆராயமுற்படுமுன் ஏதொவொரு பலியாட்டினைத் தேடுகின்றதா மனம்? வெறுப்பு குடிகொண்டிருக்கின்றதென்பதே பொருள். யாரோமீதெறிய எரிதழலைக் கையில் வைத்திருக்கின்றோம்; அது தன்கையையே பெரிதும் பதம் பார்க்குமென்கின்றார் புத்தர்.

பழங்குடியினப் பேரன் தாத்தாவிடம் கேட்கின்றான், “அன்பு, இணக்கம், கருணை கொண்ட ஓநாயும், வெறுப்புக்கொண்ட ஓநாயும் என்னுள்ளே இருக்கின்றன, எது வெற்றி பெறும் தாத்தா?”. “எதற்கு உணவூட்டி வளர்க்கின்றாயோ அது வெற்றி பெறுமடா பேராண்டி!”.

விமானநிலைய வளாகத்தில் சென்று கொண்டிருக்கின்றீர்கள்; முன்னால் செல்பவரை இடித்து விட்டீர்கள் அல்லது அவரது காலை மிதித்து விட்டீர்கள். அவர் திரும்பிச் சொல்வார், “ஐயாம் சாரி”. இதுபோன்ற சிற்சிறு தருணங்களைக்கூட மென்மையாக்க வல்லது அப்படியான ’சாரி’களும் மன்னிப்புக் கோரல்களும். ஈகோ பார்க்கத் தேவையில்லை. வெறுப்பைக் களைய இதைவிட எளியவழி வேறேதுமிருக்க முடியாது.

பொதுவாக வெறுப்பின் தோற்றுவாய் நான்கே நான்குதாம்:

1. பிடித்தமானதாக ஆக்கிக்கொள்ள இயலாத பிடித்தமற்றவொன்று

2. பிடித்தமானதாக ஆக்கிக்கொள்ளத் துணிவற்றவொன்று

3. மனவலியை ஏற்படுத்தக்கூடியது

4. நல்லது, சரியென நம்புவதற்கு எதிரானது

இத்தகைய தோற்றுவாயின் அடிப்படையைப் புரிந்து கொண்டாலே போதும், அதனைக் களைவதற்கான வழி பிறந்து விடும். தனதாக்கிக் கொள்ள இயலாதாயின், உலகில் இருக்கும் எத்தனையோ கோடி மாற்றுகளில் இதுவுமொன்றனக் கருதிவிடலாம். துணிவில்லையாயின், உதவிகளைப் பெறலாம். மனவலியாயின், தொடர்புடைய நபரிடம் பேசலாம் அல்லது பொருளைக் களைந்து விடலாம். மாற்று நம்பிக்கையின் அடிப்படையைப் புரிந்து கொள்வதும் சகித்துக் கொள்ள பயிற்சி மேற்கொள்வதும் பயனளிக்கும்.

படிப்பதற்கு போதனை(preaching) போல் இருக்கின்றது. இயல்பில் இது சாத்தியம்தானா?எல்லாமும் மனப்பழக்கம்தான்.முடியுமென்றால் முடியும். 

Let's try together. We can only learn to love by loving.