5/05/2012

அமெரிக்காவுல இது தீராத ’பஞ்சாயத்து’ங்க!!

தமிழ் மொழியில, ஒற்று விதிகள்னு கிட்டத்தட்ட அறுபத்து ஐந்துக்கும் மேலான விதிகள் இருக்குங்க. அந்த அறுபத்து ஐந்துக்கும் மேலானதையும் அறிந்து வைத்துக் கொண்டு, தனக்கே உரிய ஏரணத்தையும் மனதிற்கொண்டுதான் இந்த விவாதத்துல ஒருவர் பங்கு கொள்ள முடியும். அதிலயும் ஒரு விதிவிலக்கு உண்டு. குறிப்பிட்ட ஒன்றைத் தவறு என உணர்வதற்குப் பெரும்பாலும் இவ்விதிகளை அறிந்திருக்கத் தேவையில்லை. ஒலிப்புகளும், பொருள் மயங்கா இடுகுறியைத் தருகிறதாவென ஆய்ந்து பார்க்கும் ஏரணம் மட்டுமெ தவறைச் சுட்டிக்காட்டப் போதுமானது.

அமெரிக்க பறவைகள் சரணாலயம்
இந்திய பொதுவுடமைக் கட்சி
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
ஏழாவது வட்ட கட்டிடத் தொழிலாளர் சங்கம்
தயிர் கடை


மேற்கண்ட தொகைச் சொற்களில் பார்த்தோமானால், முதல் சொல்லானது நிலைமொழி நின்று, வருமொழியோடு புணரவில்லை. ஏன்?

புணரக்கூடாது என்பதில்லை. புணரும் போது, வெளிப்படுகிற பொருள் மாறும்.

அமெரிக்கப் பறவைகள் புகலிடங்கள்.

ஆப்பிரிக்க யானை, அராபியக் குதிரை என்பதைப் போல, அமெரிக்காவுக்கே உரிய பறவைகளின் புகலிடங்கள் எனப் பொருள் வெளிப்படுகிறது.

அமெரிக்க பறவைகள் புகலிடங்கள்.

அமெரிக்காவில் இருக்கிற பறவை புகலிடங்கள்.. அப்புகலிடங்களில் எப்பற்வை வேண்டுமானாலும் புகலாம்.

இந்திய பொதுவுடமைக் கட்சி: இந்தியாவில் இருக்கிற பொதுவுடமைக் கட்சி. இந்தியப் பொதுவுடமைக் கட்சி: பொதுவுடமை நாடான இந்தியாவில் இருக்கிற கட்சி.

ஏழாவது வட்ட கட்டிடத் தொழிலாளர் சங்கம்: ஏழாவது வட்டத்தில் இருக்கிற கட்டிடத் தொழிலாளர் சங்கம். 

ஏழாவது வட்டக் கட்டிடத் தொழிலாளர் சங்கம்: ஏழாவதாக இருக்கும் வட்டக்கட்டிடத்தில் உள்ள தொழிலாளர் சங்கம்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: மதுரையில் இருக்கும் காமராசர் பல்கலைக்கழகம்.

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்: தென்னாட்டு காந்தி போல, மதுரையில் இருக்கும் காமராசரான சோமராசர் நினைவாக இருக்கும் பல்கலைக்கழகம்.

தயிர் கடை என்றால், தயிரைக் கடை
தயிர்க் கடை என்றால் தயிர் விற்கும் கடை.

வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம்: வாசிங்டன் வட்டாரத்திற்கான தமிழ்ச்சங்கம்.
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்: வாசிங்டனில் இருக்கும் வட்டாரத்தமிழுக்கான சங்கம் அல்லது வாசிங்டனில் இருக்கும் வட்டாரத்தமிழ்ச்சங்கம். வாசிங்டன் வட்டாரத்திற்கான தமிழ்ச்சங்கம் எனப் பொருள் கொள்ள ஏதில்லை.

ஒற்று இடுவதால் என்ன பொருள் வெளிப்படுகிறது, இடாமல் விடுவதால் என்ன பொருள் வெளிப்படுகிறது என்பதைக் கண்டோம்.

மரபுகள் போற்றப்பட வேண்டும். மறுப்பதற்கில்லை. சொல்லாக்கத்தின் அடிப்படை விதியான, ஒரு பொருளுக்கு ஒரு சொல் எனும் அடிப்படை அதனினும் இன்றியமையாதது.

ஒரு விதியை மட்டுமே அடிக்கோடிட்டு வாதிடுவது சரியாகா. மொத்த விதிகளையும் ஒலிப்புகளையும் ஒரு சேரக் கருத்திற்கொள்ள வேண்டும். அத்துனையையும் கருத்திற் கொண்ட பிறகும் பொருள் மயங்கினால், பொருள் மயங்கா வண்ணம் ஒற்றுகளை அமைத்துக் கொள்வதே தமிழுக்குச் சிறப்பு சேர்க்கும்.

6 comments:

ராஜ நடராஜன் said...

வந்தோம்!கண்டோம்!எம் பொருள் குற்றங்களும் உணர்ந்தோம்.

dondu(#11168674346665545885) said...

ஒற்றுமிகுதல் விஷயம் எனக்கு எப்பவுமே தகராறுதான்.

பழமைபேசி பழமைப் பேசியிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

வவ்வால் said...

பழ மை பேசி,

இப்படி ஒற்றுச்சேர்க்காமல் பிரிச்சிட்டாலும் பொருள் மாறிடுமா?

ஒற்று சொன்னீர்கள் ,ஒற்றுச்சொன்னீர்கள், ஒற்றுக்கொண்டோம் ,ஒற்று கொண்டோம் ...ஹி.ஹி சும்மா சொல்லிப்பார்த்தேன்... ஏடா கூடமா தான் வருது.
-----------

தோண்டு,

பழமை பேசி= பழங்கதை பேசுதல்,

பழமைப்பேசி= ரொம்ப பழைய பேச்சாளார் என்பது போல பொரூல் மாற்றம் வரும் என நினைக்கிறேன்.

பழமைபேசி said...

//dondu(#11168674346665545885) said...//

வணக்கம் ஐயா. பொதுவாக இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின்னால் ஒற்று வராது.

இலை கிள்ளினான்.

இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின்னால் ஒற்று வரும்.

இலையைக் கிள்ளினான்.

பெயர்ச்சொல்லுடன் ‘ஐ’ இருப்பின் அது முதல் வேற்றுமை உருபு. பெயர்ச்சொல்லுடன் ‘ஐ’யைக் கூட்டி வருவது, இரண்டாம் வேற்றுமைத் தொகை.

பழமை - பெயர்ச்சொல், ’ஐ’ என்பது பெயர்ச்சொல்லின் ஓர் அங்கம்.

பழமையைப் பேசி. இரண்டாம் வேற்றுமை உருபு கலந்து வருவது, பழமை + ஐ = பழமையை

பாற்கடல் சக்தி said...

இரண்டாம் வேற்றுமை உருபுக்குப்பின்னால் ஒற்று வராது./// நண்பரே உருபுக்குப் பின்னால் வரும். இரண்டாம் வேற்றுமைத் தொகைக்குப் பின்னால்தான் வராது.

நாரத முனி said...

இருவது ஆண்டுகள் முன் , பத்தாம் வகுப்பில் இது போல ஒரு பாடல் படித்த நியாபகம் உண்டு,

"வெற்றி மதர் போர் காய வம்பிறைக்கும் காலம்,
வேங்கனலே போர்காய அம்பிரைக்கும் காலம்.. " காளமேக புலவர் பாடலா என்று தெரியவில்லை,