12/04/2011

எழுச்சிமிகு இசை, நாடக நாட்டிய விழாவது கண்டிடக் கூடிடுவீர் தமிழர்காள்!

இயற்றமிழ் பண்ணோடு புணர்ந்து தாளத்தோடு நடைபெறின் அது இசைத்தமிழாக உருவெடுத்து நம்மையெல்லாம் பேரின்பத்தில் திளைக்கச் செய்கிறது. அத்தகைய தமிழிசை, தமிழனின் ஆதிகாலம் முதற்கொண்டே அவர்தம் வாழிவியலோடு பின்னிப் பிணைந்தே வந்திருக்கிறது.

முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, சிற்றிசை, பேரிசை, பரிபாடல், பெருநாரை, பெருங்குருகு, பஞ்சமரபு, பஞ்சபாரதீயம், தாளசமுத்திரம், சச்சபுட வெண்பா, இசைநுணுக்கம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுள்துறைக் கோவை முதலான பண்டைய நூல்களின் மூலம் இசைத்தமிழின் தொன்மையை நாம் உணரலாம்.

குரலானது, துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழு நிலைகளாகத் தமிழிற் சுட்டப்படுகிறது. சிலப்பதிகாரம் தமிழிசை இலக்கண நூல் என்றே போற்றப்படுகிறது. அதற்குரிய அரும்பதவுரையும், அடியார்க்கு நல்லாருரையும் இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிகின்றன.

இடைக்காலத்தில் இசையோடு தமிழ் பாடிய ‘தேவார திருவாசகம்’ தமிழிசை வளர்ச்சியைக் காட்டக் கூடியனவாகும். திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவர் மனைவியார் மதங்க சூளாமணியாரும் தேவாரத்திற்குரிய பண்களை வகுத்து அவற்றை அதன்படி பாடி, நாடெங்கும் பரப்பி வந்துள்ளனர். பரிபாடலும், தேவாரமும் இங்ஙனம் பண்முறைப் படி தொகுக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி இசைத்தமிழை வளர்த்தார். ஆயிரத்தெட்டு மேளகர்த்தாப் பண்களுக்கும் அவர் திருப்புகழ் பாடினார்.

வடலூர் வள்ளலார் இராமலிங்கரும், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரும் முறையே கீர்த்தனைகளும், காவடிச் சிந்தும் பாடினர். குணங்குடி மஸ்தான் சாகிபு, கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர், கவி குஞ்சரபாரதி, முத்துத் தாண்டவர், மயிலாடுதுறை வேதநாயகம் பிள்ளை போல்வாரும் இசைத்தமிழ் வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றினர்.

பாரதியார் பண் அமைந்த பாடல்கள் பல பாடினார். தேசிக விநாயகம் பிள்ளை பல கீர்த்தனைகளை இயற்றினார். பாரதிதாசன் இசையமைதி பொருந்திய பாடல்களை மிகுதியும் பாடித் தமிழிசையை வளப்படுத்தினார் என்பதை அவருடைய முதலிரு தொகுதிகளும், இசையமுது தொகுதிகளும் மெய்ப்பிக்கும். யோகி சுத்தானந்த பாரதியார், பெரியசாமித்தூரன் போல்வார் தமிழிசைப் பாடல்களை மிகுதியாக இயற்றினர்.

அண்ணாமலை அரசர் 1943-இல் தமிழிசை இயக்கத்தைத் தொடங்கித் தமிழிசை வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்தார். சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியாரும், கோவை சி.எஸ். இரத்தினசபாபதி முதலியாரும், இரசிகமணி டி.கே.சியும், கல்கியும் தமிழிசை இயக்கத்தை முன்னின்று செயல்படுத்தினார்கள்.

அதன்பின்னர் தமிழிசையைப் பலரும் தொடர்ந்து போற்றி வந்திருக்கிறார்கள். சமகாலத்தில் தமிழிசையின் தொடர்ச்சியில் பங்குவகித்துப் போற்றி வருபவர்களுள் ஒருவர்தான் திருபுவனம் G.ஆத்மநாதன் ஆவார்கள்.

சங்ககாலத்துப் பரிபாடல் முதல் காப்பியகாலத்துச் சிலப்பதிகாரம், பக்தி இயக்க காலத்துப் பன்னிருதிருமுறை, ஆழ்வார்களின் நாலாயிர திவய்பிரபந்தம், ஆதிமும்மூர்த்திகளின் கீர்த்தனைகள், திருப்புகழ், வள்ளல் பெருமானின் திருவருட்பா, பாரதியார், பாரதிதாசனார், பாபநாசம் சிவன் மற்றும் இன்றைய அருளாளர்களின் பாடல்களை இளைய தலைமுறையினர்க்குக் கொண்டு செல்லும் மாபெரும் பணியை ஏற்றுத் தொடர்ந்து செய்துவருகிறார் இன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள்.

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையும், இராசராசன் கல்வி பண்பாட்டுக்கழகமும் இன்னிசையேந்தல் திருபுவனம் ஆத்மநாதன் அவர்களும் இணைந்து நடத்தும் ஏழாம் ஆண்டு தமிழிசை விழாவானது சென்னையில் எதிர்வரும் டிசம்பர் 24 முதல் டிசம்பர் 28 வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. அதன்போது, 'காகிதப்பூட்டு’ நாடகம், திருவருட்பா இசை, கவியரசு கண்ணதாசன் பாடல்கள் இசை, மகாகவி பாரதியார் பாடல்கள் இசை, பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் இசை, பாபநாசம் சிவன் பாடல்கள் இசை, நாட்டியம் உள்ளிட்ட நிறைய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

வள்ளல் பெருமானின் திருவருட்பா இசைவிழாவாக முதன் மூன்றுநாட்களும், கலைமாமணி போழகுடி கணேசய்யர் - சவாய் கந்தர்வ தஞ்சாவூர் உதயசங்கர்ஜோஷி ஆகியோரது நினைவாக இரண்டு நாட்களும் தமிழிசை நாடக நாட்டிய விழா நடைபெற உள்ளது.

இத்தகைய தமிழ்விழாவில் அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறுவது அனைவருக்கும் சிறப்புச் சேர்க்கும் என்பது திண்ணம். வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் இருபத்து நான்காவது ஆண்டு விழாவில் தமிழிசையால் வந்திருந்தோர் அனைவரையும் கட்டிப்போட்டுப் பேரின்பத்தில் ஆழ்த்திய இன்னிசையேந்தல் அவர்களது முயற்சிகளுக்கும் பணிக்கும் நல்லாதரவுக்கும் வலுச்சேர்ப்பதென்பது தமிழிசையை நுகர்ந்து போற்றுவதுமேயாகும்.

(வலதுகீழ் முனையில் இருக்கும் உருப்பெருக்கி வில்லையைச் சொடுக்கிப் பெரிய அளவில் காண்பீராக!)

2 comments:

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

ஓலை said...

Nalla thagaval. Nanri.