12/19/2011

உதயசூரியன்

தெருமுனையில் வைத்தே பசையை நன்கு தோய்த்துக் கொண்டான். மேற்பக்கத்து இருமுனைகளையும் கைக்கு ஒரு முனையாகப் பற்றிக் கொள்ள வேண்டும். அப்படிப் பற்றிக் கொண்டு போவதில் ஒரு நேர்த்தி இருக்கிறது என அடிக்கடி சொல்வான் ரொட்டிக்கடை சுப்பு. பற்றிக் கொண்டு இருக்கும் இரு கைகளும் அகலத்தைத் துல்லியமாகக் கடைபிடிக்க வேண்டும். அகலம் நீளுமானால் பசையுள்ள தாள் கிழிந்து விடும். அகலம் குறுகிப் போகும் தருவாயில் மடிப்பு உண்டாகி தாளில் சுருக்கம் விழுந்து போகும். அப்படி விழுந்து விட்டால் கதவில் சரிவர ஒட்டுப்படாது. மிகக் கவனமாக வாசலில் காலை வைத்தான். இலாகவமாய் வேலு வீசிய கருப்பட்டித் துண்டில் சரணாகதி அடைந்தது முன்வாசலில் இருந்த நாய்.

வாசற்படியேறி மேல்பக்கத்து இருமுனைகளையும் கதவில் வாகாய்ப் பதிய, ஒரு அடிக்கு ஒன்னரை அடி நீளமுள்ள மொத்தத் தாளும் கதவோடு அப்பிக் கொண்டது. வலது உள்ளங்கையை தன் வலது குண்டியின் மீது தோய்த்து பசை ஈரமெதுவும் இல்லையெனச் சரிபார்த்த பின்னர் மென்மையாக ஒட்டிய தாளை நேர்த்தியாய் தடவி விட்டுக் கொண்டான். மஞ்சள்தாளில் கருப்பு அலைகளினூடாக செங்கதிரோன் பளபளத்துக் காட்சி அளித்தது. “அண்ணா கண்ட சின்னம் உதயசூரியன்!” கத்திக் கூப்பாடு போட வேண்டும் போல இருந்தது. மனம் அவனின்று பிய்த்துக் கொண்டு ஓடி அருகே உள்ள குப்பைமேட்டின் மீது நின்று கூவ முயன்றது. அந்நேரம் பார்த்துச் சட்டையின் பின்புறத்தை இழுக்காமல் இழுத்தான் வேலு.

இன்னும் வேலை நிறைய எஞ்சி இருக்கிறது என உணர்ந்தவன், அவனைப் பின்தொடர்ந்து போனான். வெல்லக்கட்டியைத் தின்று தீர்த்த நாயானது இவர்களைப் பார்த்து வாலை ஆட்டிக் கொண்டு நின்றது. கால் பாதங்கள் தரையைத் தொடாதபடிக்கு மெதுவாக நடந்து போயினர். கிளுவ மரத்தில் இருந்த குருட்டாந்தை ஒன்று அலறியது. அந்த அலறல் ஒலியைத் தமக்கு ஏதுவாகப் பயன்படுத்திக் கொண்டு தெருமுனைக்கு ஓடிப் போயினர் இருவரும்.

“தடிமுண்டமே இங்கெதுக்குடா நிக்கற? வேலி மறப்புக்குள்ளார போலாம் வா”

“செரி மூடீட்ட்ப்போ”

செடிபீடி ஒன்றை எடுத்து உள்ளங்கைகளில் வைத்து நன்கு உருட்டிக் கொண்டான். அப்படி உருட்டிக்கொள்வதில் ஏற்படும் சூட்டில் பீடியின் நதநதப்புப் போய் கதகதப்பாக்குள்ளாக்கும் வாடிக்கையது. அந்த பீடியை வாயில் வைத்தபடித் தன் கால்ச்செராயில் இருக்கும் தீப்பெட்டியை எடுக்க முற்படுகையில், அதற்கெனவே தயாராக இருந்த மற்றவன் தனது தீப்பெட்டியால் தீ மூட்டி அவன் வாயருகே கொண்டு போனான்.

“கேனப்பொச்சு, காத்துல அவியுறதுக்குள்ள இழுத்துத் தொலை!”

பீடியை உறிஞ்சி நன்கு உள்ளிழுத்ததில் பீடிமுனை நன்கு கனன்று, பழுத்த ஊசிமுனையாய் மிளிர்ந்தது. தீமூட்டிய கைகளைப் பின்வாங்கலாம் என வேலன் நினைத்த மாத்திரத்திலேயே, புகையைப் பற்றவைத்தவன் முகத்தில் குறும்புச் சிரிப்போடு ஊதினான் சுந்தர்.

“இந்த ஏத்தமசுறுதான ஆகாதுங்றது. எனக்கொரு பீடியக் குடுறா!”

வேலனும் தன் பங்குக்கு ஒரு பீடியை வாங்கிக் கைகளால் உருட்டித் தன்வாயில் வைத்துக் கொண்டு பீடிக்கு நெருப்பு வாங்கத் திரும்பினான். பீடி இழுப்பில் இலயித்து இருந்ததில், இவன் தன்னருகே வருவதை கவனித்திருக்கவில்லை.

“யாரு, உங்கப்பனா வந்து பீடிக்குத் தீ குடுப்பான்?”

வெறுக்கென இவன் பக்கந்திரும்பிய சுந்தர், தன் பீடியை இவனுக்குக் கொடுக்க பீடியும் பீடியும் முத்தமிட்டுக் கொண்டன.

“டே.. இந்த கீகாத்துல பீடி அவிஞ்சி போயிரும். முட்ட வெச்சா மட்டும் பத்தாது. நல்லா வெரசலா இழுக்கோணுமாக்கூ”

“அல்லாந்தெரியுமடி… நீ மூடு”, வேகவேகமாக இழுத்துப் புகையை நெஞ்சில் வைத்துக் கொண்டு அவனது பீடியை அவனிடமே கொடுத்தான் வேலு.

கீழ்க்காற்று சிலுசிலுவென மெலிதான தண்மையோடு அடித்துக் கொண்டிருந்தது. ஊருக்கு மேற்கே ஓடும் உப்பாற்றுப் பள்ளத்தின் நீரோடைச் சத்தம் ஒரு சீராகக் கேட்டுக் கொண்டிருந்தது. இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. மாறி மாறி செடிபீடியை இழுத்துக் கொண்டிருந்தனர். கும்மிருட்டாக இருந்தது. இருட்டில் இருந்து அவ்வப்போது மின்னாம்பூச்சிகள் கிளம்புவதும் ஒளி மறைவதுமாக இருந்தது.

“ஊருக்குள்ள கொஞ்சமாச்சி வெளிச்சம் இருக்குதா பாரு. தொப்பித்தலையன் ஒழியணுமடா. அப்பதான் நாட்டுக்கு நாலு நல்லது நடக்கும்!”

“மூடு வாய. என்ற அப்பனைப் பேசிப் போட்டாண்டா அந்த அரணாசலம். அவனைப் பழி வாங்கோணும். அவனூட்டுச் செவுத்தல அவனுக்காகாத உதயசூரியனை வரைஞ்சி, அவம்மூஞ்சீல எச்சியத் துப்புனாப்புல செய்யோணும். அவ்வளவுதேன். தலைவரைப் பத்தி எதனாச்சிம் பேசினாப் பார்த்துக்கோ!”

“செர்றா… வா, வேலையப் பாக்குலாம்”

திண்ணைக்குக்கீழே வைத்திருந்த நுவாக்கிரான் தகரப் பொட்டியில் கரித்தூளைக் கொட்டினான் சுந்தர். பருத்திக்காட்டுக்கு வாங்கிய மருந்துக் கொள்கலம் அது. ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்டது. அதில் கால்வாசியளவுக்கு கரித்தூளைக் கொட்டி, ஐந்து லிட்டர் சிம்புசு மருந்து நெகிழிக்கலத்தில் இருந்த நீரைத் தேவையான அளவுக்கு ஊற்றிக் கொண்டான். “டே, அந்த பைக்குள்ள இருக்குற மொன்னை புருசை எடுறா!”. பாவித்துச் சிதைந்த தூரிகை கைக்குக் கிடைத்ததும் நன்கு கலக்கிய கரியநிறக் குழம்பு தயாரானது.

“நெம்ப கெட்டியா இருக்கான்னு பாரு சித்த”

“இல்ல.. கருப்பட்டிப் பாகாட்ட நல்ல பகுனமாத்தான் இருக்குது!”

“செங்காவியுங் கலக்கீட்டுப் போயிர்லாமா? அல்லன்னா, கருப்பு அடிச்சிப்போட்டு வந்து செங்காவி கலக்கி எடுத்துட்டுப் போலாமா?”

“ஒன்னொன்னாச் செய்யலாம். நான் டப்பாவைப் புடிச்சிக்கிறன். நீ புருசுல தொட்டு நல்லாப் பெருசா வரஞ்சுடு. என்ன நாஞ்சொல்றது நல்ல ஓசனைதான?”

“ஆமா, அதுஞ்செரிதான்! வா போலாம்!! புருசையுமு அந்த கருப்பட்டித்துண்டுல ஒன்னையுமு கையிலயே வெச்சிக்கோ. அவனூடு வந்ததீமு வாங்கிக்கிறேன்”

வெந்தயக்கார முனியப்பன் வீட்டுப் புதரில் இருந்து மெதுவாகப் புறப்பட்டு, வெண்ணக்கார கந்தசாமி வீட்டின் பிறவடையில் வந்து நின்று நோட்டம் விட்டுக் கொண்டார்கள். மீண்டும் மெதுவாகச் சென்று, கிளைச் செயலாளர் அருணாசலம் வீட்டுக் கிளுவை மரத்திற்கடியில் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டனர் இருவரும்.

“டே வேலு. நீ மொதல்ல போ. போயி அந்த கருப்பட்டித் துண்டை நாயிக்குப் போட்டு அதோட வாயக்கட்டு. நான் அதுக்குள்ள, இந்த ஊமாத்தாந் தழைய இதுக்குள்ள புழிஞ்சு உட்டுர்றன், அப்பத்தான் காய்ஞ்சவிட்டு அழிச்சாலும் அழியாது”

பதுங்கிப் பதுங்கி சென்ற வேலுவுக்கு காதுகள் இரண்டும் விர்றெனப் புடைத்தது. நெஞ்சு திக்திக்கென அடித்துக் கொள்வது அவனுக்குப் புலப்பட்டது. உடலெங்கும் பின்தங்கி இருக்க ஒருபாதி முகம் மட்டும் பக்கச்சுவர் கடந்து ஒரு கண்ணால் அருணாசலக் கவுண்டர் வீட்டு வாசலைப் பார்த்தான். நாய் மட்டும், வெளிப்புறச்சிவரில் இருந்து ஈரடி தொலைவிலேயே படுத்திருந்தது. மெதுவாக கருப்பட்டி உருண்டைய உருளவிட்டான். கருப்பட்டி மணங்கொண்ட நாய் வாயுதிர்த்து, புணர்ந்து வீழ்ந்த பொதிக்கழுதையாகிப் போனது.

திரும்பவும் சுந்தரிடமே வந்தான். “அந்த அரணாசலம் குப்புறப்படுத்துத் தூங்கறாம் போல இருக்கு. ஆரையுங்காணம் அங்க”

“நல்லதாப் போச்சு. இந்தாபுடி இந்த டப்பாவை”

சுந்தர் இங்கேயே டப்பாவுக்குள் தூரிகையை ஒரு முக்கு முக்கிக் கொண்டான். “டே மாங்காமடையன்டா நீயி. அங்கெங்க போற?”

“வாசலுக்குத்தான்!”

“இங்க வீதிச் செவுத்துல வரஞ்சாத்தானொ அல்லாரும் பார்த்து அவம் பொச்சுல சிரிப்பாங்கோ? இங்கியே நில்லு!”

சுந்தர் ஓவியத்தில் படுகெட்டி. எந்தப் படத்தையும் பார்த்த மாத்திரத்தில் வரையக்கூடியவன். தூரிகையால் நாலே நாலு முக்குத்தான் முக்கியிருப்பான். கடல் அலைகள் எழுவதைப் போலப் பெரிய அளவில், அலையின் இரு எழுச்சியை அடியிலிருந்து உச்சிவரை நெளிவு சுழிவோடு வரைந்திருந்தான்.

“ஏன்டா ரெண்டு கரட்டுக்கும் நடுவாப்புல சூரியன் உதிக்கிற மாதரதானொ வரோணும்? நீ என்னொ ரெண்டு கத்தாழை நிக்கிறாப்புல எதையோ வரைஞ்சு உட்டுருக்குற?”

“அடக் கோமாளி, நீ சொல்றாப்புல வரைஞ்சா அது மறையுற சூரியனாய்டும்டா. பாரு, நம்மூருக்கு மேக்க அல்லாம் மலைகதான இருக்குதூ?”

“ஆமா. அதுக்கு கத்தாழைகளை வரைஞ்சா செரியாப் போயுறுமாக்கூ?”

”இல்லடா. அது கடல்ல எழும்புற அலைகடா.. அலைகளுக்கு நடுவாப்புல உதிக்கிற மாதர இந்த ரெண்டு உச்சிக்கு நடுவுல காவித்தண்ணியில வரைஞ்சு உட்டா செரியாப் போயிரும்”, இருவரும் மாறி மாறி கிசுகிசுத்துக் கொண்டே கருவண்ண வேலைகளை முடித்து விட்டு வெந்தயக்கார முனியப்பன்வீட்டுப் புதருக்குத் திரும்பினார்கள்.

”அருணாசலம் பொண்டாட்டி காலையில வாசல் தொளிக்குறதுக்கு வந்து பாக்கப் போறா. பாத்து என்னென்ன சொல்லி வையிவாளோ?”, இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

”அந்த டப்பாவுலயே போட்டுக் கலக்குனா செரிவராது. கருப்படிச்சிரும். இந்தா, இந்தப் பழைய வாணா சட்டியில காவித்தூளைப் போட்டுத் தண்ணிய ஊத்து. நான் அந்த புருசை மாத்திரம் கழுவிக்கிறன்.”

காவிக்குழம்பும் தயார் செய்யப்பட்டு, ஊமத்தையைக் கரைத்து விட்டார்கள். பதுங்கிப் பதுங்கித் திண்ணையைக் கடந்து கவுண்டர் வீட்டுச் சுவருக்கருகே போனார்கள். நாய் வாலை ஆட்டிக் கொண்டு வந்து அருகே நின்று கொண்டது.

சுந்தர், தூரிகையைப் பட்டையாகச் சுவற்றில் அரைவட்டத்தினை வரைந்து, அதினின்று கிளம்பும் ஐந்து கதிர்களை ஒளிர விட்டான். வேலுவுக்கு எழுச்சி மனத்துள் கரைபுரண்டு ஓடியது. தொடர்ந்து சுந்தர் தூரிகையை காவிக்குழம்புக்குள் முழுதுமாக முக்கி எடுக்காமல், ஒற்றி எடுத்து வேலைப்பாட்டினைச் செம்மையுறச் செய்து கொண்டிருந்தான். உதயசூரியன் மிடுக்காய் ஒளிர்ந்தது. தொடர்ந்து அதன் கீழே, “எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே” என எழுதிவிட்டு, வியப்புக் குறியிடலாம் என எண்ணினான். அதன்பொருட்டுத் தூரிகையில் இருக்கும் மிகுதியான கரைசலை வடித்தெடுக்க, வேலு பிடித்துக் கொண்டிருக்கும் கொள்கலத்தின் விளிம்பின் மீது அழுத்தினான்.

“டமால்’ என அந்தப் பழைய வாணா சட்டியானது கீழேயிருந்த கருங்கற் கூளங்களின் மீது விழுந்து மோதியது. அவ்வளவுதான், முதலில் வேலு கிழக்குப் புறமாகத் தாவினான். அவனைத் தொடர்ந்து சுந்தரும் அதே திசையில் ஓடினான். இருவருக்கும் அடிவயிறு சுண்டி இழுத்தது. டில்லி முற்களுக்குள் புகுந்து ஏரிக்காட்டு இட்டேரியில் ஓடி, வெள்ளக்கோயில் தேவராயன் புழுதிக்காட்டில் வந்து நின்றார்கள். இருவராலும் நிற்க முடியவில்லை. சுருண்டு கீழே விழுந்தவர்கள், மெலிதாகச் சிரிப்பதும் அடங்குவதுமாய் இருந்தனர். அவர்களது மூச்சிறைப்பு நிற்க வெகுநேரம் பிடித்தது.

புழுதிக்காட்டில் ஒருக்களித்துப் படுத்திருந்தவர்களுள், முதலில் கண்ணைத் திறந்து பார்த்தவன் வேலு. காரிருளில் யாரோ வெண்மையைக் கலப்படம் செய்தாற் போன்றதொரு பிரமை. வெகுதூரத்தில் ஊர் எல்லையில் இருக்கும் ஆலமரத்தில் இருந்து பறவைகளின் ஒலி சிறிது சிறிதாய்க் கூடி வருவது போன்ற உணர்வு. “என்றா சுந்தரு இது?”. “அட ஆமாண்டா. கிழக்க ஒதயமாகுதுறா சூரியன்!”

2 comments:

வடிவேல் கன்னியப்பன் said...

சபாஷ்!

கொங்கு நாடோடி said...

“கேனப்பொச்சு, காத்துல அவியுறதுக்குள்ள இழுத்துத் தொலை!”

அடிக்கடி என் நண்பன் உபயோகிக்கும் வார்த்தை" கேனப்பொச்சு"....

ஊரே நியாபகப்படுதியமைக்கு நன்றி அண்ணா...