12/14/2011

தோற்றது யார்?

அவையில் நுழைந்தேன்
பணிவாய் அமர்ந்தேன்
வீட்டின் ஏதோ ஒரு கடைக்கோடியில்
ஒதுக்கில் இருக்கும் காலணி போல
எனக்காகக் கொடுக்கப்பட்ட இடத்தில்!
விட்டு வேடிக்கை பார்ப்பதற்காகவேனும்
எனக்கும் முறைவைத்து
வாய்ப்பொன்று கொடுத்தார்கள்
கூற நினைத்ததைக் கூறினேன்
ஏகடியமும் எக்காளமும்
நையாண்டியும் எள்ளலுமாய்
அவை துள்ளியது
தோற்கடிக்கப்பட்ட தொனியோடு!
புன்முறுவல் கொண்டு வெளியேறினேன்
காற்று கட்டித்தழுவியது
நீலவானம் வாழ்த்தியது
வெயிலோன் ஒளி பொருத்தி மகிழ்ந்தான்
தோற்றது யார்?!!

செய்தோற்பு தெரிந்திருந்தும் வைக்கப்படும் வாதங்கள் வீணானது அல்ல! அவை வரலாற்றுப் பதிவுகள்!!

2 comments:

அரசூரான் said...

யார் யாருகிட்ட? எப்படியோ மன மகிழ்வோட கவிதை முடிந்திருப்பது வெற்றியே!

வெற்றி said...

நல்ல கவிதை. படித்தேன். இரசித்தேன்.
ஏகடியம் என்ற சொல்லை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை.
ஏகடியம் என்றால் என்ன என்பதை தயவு செய்து விளக்க முடியுமா?

மிக்க நன்றி.