9/07/2010

புகல்தலொடு புகழ்தலும்! புகழ்தலொடு நவில்தலும்!!

ஒருவர், தனது மனதில் நினைத்த எண்ணத்தைச் சொற்களாக்கி மற்றவரிடத்துக் கொண்டு சேர்ப்பதை, அதன் தன்மையைக் கருத்திற் கொண்டு பலவாறாகப் பிரிக்கலாம்.

சொல்லுதல், கூறுதல், அறைதல், செப்புதல், இயம்புதல் இப்படியாகச் சொல்லிக் கொண்டே போகலாம். அதற்கான விளக்கங்களையும் எழுதலாம்தான்.... ஆனால், இன்றைய நேரத்தின் தன்மை கருதி அவ்வரிசையில் உள்ள சில சொற்களை மட்டும் பார்த்துவிட்டு, ஆக வேண்டியதைப் பார்க்கலாம் வாருங்கள்.

நவில்தல் என்றால், நல்லூழ் ஒன்றைக் கருத்திற் கொண்டு, அவ்வெண்ணத்தின் வெளிப்பாட்டை அறியத் தருவது. உ-ம்: நன்றி நவில்தல்.

புகல்தல் என்றால், எண்ணம் என்பது தானாக எழுவதற்கு மாறாக, குறிப்பிட்ட எண்ணத்தை தன்னுள் எழச் செய்து அல்லது நாடிச் சென்று, அதற்கான சொற்பிரயோகங் கொண்டு வெளிப்பாட்டை அறியத் தருவது. உ-ம்: வீரனெனப் புகல்தல்

புகழ்தல் என்றால், எண்ணம் என்பது தானாக மனதிற் சொரிந்து, இசைந்து, உருகி, அவ்வெண்ணத்தைத் தக்க சொற்களால் அறியத் தருவது. உ-ம்: கொடையாளன் எனப் புகழ்ந்தான்.

இளம்பிராயத்திலே அவ்வப்போது நிர்ப்பந்தனைக்கு ஆளாவது வழமையே. ஏதாவது ஒன்றை, மீண்டும் மீண்டும் ஐம்பது தடவை எழுது, நூறு தடவை எழுது என நிர்ப்பந்தம் செய்வார் ஆசிரியர். அதாவது, மீண்டும் மீண்டும் ஒன்றைத் திரும்பத் திரும்பச் செய்வதன் மூலம், அதாகப்பட்டது அவனுள் பற்றுதலாய்ப் படியும் என்பது நம்பிக்கை.

மேலே சொன்ன நிர்பந்தனைக்கு ஒத்த அமைவதே புகல்தல் என்பதும். அடுத்தவர் தம்மை நிர்ப்பந்தம் செய்வதற்கு மாறாக, தன்னைத் தானே எண்ண ரீதியாகச் செய்து கொள்வது.

நான் நல்லவன் எனும் நினைப்பைத் தன்னுள் உருவாக்கிக் கொண்டு, நேர்மறை எண்ணம் கொண்டு, நல்லவன் போன்றதொரு தோற்றத்தின் வெளிப்பாடாய் இடுகை இடுகிறோமே, அதுவும் புகல்தல்தான்.

ஒரு போக்கிரியை, அன்றாடம் திருமபத் திரும்ப, அவனொரு நல்லவன் என்று சொல்லிப் பாருங்கள். நிச்சயமாய் நாளடைவில் அவன் நல்லவன் ஆவது உறுதி. இப்படி அவனைப் போற்றுவதும் ஒரு புகல்தல்தான்.

பதிவுலகத்தில் எழுதும் பெரும்பாலானோரும் இதற்கு விதிவிலக்கற்று, புகல்தலின்கண் நல்லவராய் உருவெடுப்பர் எனபது எம் புகழ்தலே!!

முன்பின் தெரியாத ஒருவரை அண்ணா, அண்ணா என விளிக்கிறோம். மாப்பு எனச் சிலாகிக்கிறோம்; பங்காளி எனப் பிரியம் கொள்கிறோம். இதுவே, திரும்பத் திரும்ப நிகழும் போது எண்ணங்கள் மனிதனை வெற்றி கொள்கின்றன. சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், மனிதனை எண்ணங்கள் வெற்றி கொள்வதே மிகுதி.

இப்படியானதொரு அகச்சூழலில்தான், தாயகப் பயணம் மேற்கொண்டோம் நாம். கண்டவரெலாம் நல்லவராகத் தெரிந்தார்கள். அது மட்டுமா?? நாடிய போதெலாம், தயக்கமின்றி உதவினார்கள்.

இன்ன தேதியில் வருகிறேன், உங்களுக்கு ஏதாவது வாங்கி வர வேண்டுமா என்றேன். நீங்கள் நல்லபடியாய் வந்து சேருங்கள். மற்றனவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். நானும் நல்லபடியாப் போய்ச் சேர்ந்தேன்.

புகல்தலின் பயனாய், அவர்களும் எனது அகச்சூழலைப் போன்றதொரு அகச்சூழலையே கொண்டிருந்தார்கள். சமூகத்திற்கு இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும் என எண்ணங்களைப் பரிமாறிக் கொண்டார்கள். நல்லவனாய் நினைத்து எழுதப்படும் எழுத்துகள், எழுதியவனை நல்லவனாக்கிப் புன்னகைக்கும் காட்சி எம்முள் விரிந்தது.

அந்நேரத்தில்தான், நூல் அறிமுக விழாவும் வந்தது. பெருந்திரளாய்ப் பதிவர் கூட்டம். அன்போடு வந்து கலந்து கொண்டார்கள். மனதார மகிழ்ந்தேன். காலத்தின் இன்மை கருதி, நன்றி நவிலக் கூட இயலாதவன் ஆனேன். என்றாலும், அவர்கள் வருந்தி இருக்க மாட்டார்கள். ஏனென்றால், எண்ணங்களை எழுத்தாக்கும் பதிவர்கள் அவர்கள்; வணிகர் அல்ல அவர்கள்!! வாழ்க பதிவுலகம்!!!

ஆரூரன், சஞ்சய் காந்தி, ஈரோடு கதிர், வானம்பாடிகள் பாலாண்ணன், பாலாசி, வெயிலான், பங்காளி சிவசு, தமிழ்ப்பயணி சிவா, முன்னெப்போதும் பார்த்திராத பெண்பதிவர்கள் எனப் பட்டியல் வெகு நீளம்!

இருப்பைத் தொலைத்து மீண்டு வந்த உறவுக் கதையும் இதில் அடக்கம். தம்பிமார்கள் அரங்கசாமி, ரங்சு, செயப்பிரகாசு என இப்பட்டியலும் வெகு நீளம். உறவுகளைக் கொண்டு வந்து சேர்க்கவல்ல எண்ணங்களை எழுத்தாக்கும் பதிவர்கள் இவர்கள்! வாழ்க பதிவுலகம்!!

ஆரூரன் மற்றும் ஈரோடு கதிர் ஆகியோர் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். எந்த ஒரு இடமும் எங்களைக் குதூகலிக்கச் சென்ற இடம் அல்ல அவை. எல்லாமும் கல்விச் சாலைகள்... எண்ணங்களை விதைத்தோம்... விதைத்த விதைகள் காணாமற் போகலாம்... விதைப்பது காணாமற் போகாது அல்லவா?? வாழ்க பதிவுலகம்!!

அடுத்து நிகழ்ந்தது... இந்தியன் எக்சுபிரசு இதழின் செய்தியாளர் சந்திப்பு... நூல் அறிமுக விழாவிற்கு வந்த அன்பரும் பதிவருமான வெங்கட் என்னை நாட, நானோ மற்றவரை நாடினேன். மாலையில் மனதுக்கினிய ஒரு நிகழ்வு அது. சஞ்சய் காந்தி, குதூகலமாக்கிக் கொண்டிருந்தார். எண்ணங்கள் ஒருவனை முன்னெடுத்துச் செல்லும். சஞ்சய் காந்தியைப் பற்றிச் சொல்வதற்கு சொற்கள் போதாது. வாழ்க பதிவுலகம்!

அதைத் தொடர்ந்து, அன்பு அண்ணல் மஞ்சூராரின் வேண்டுகோள். அவரது இல்லத்திலே மீண்டுமொரு சந்திப்பு. அன்பர்களோடு அளவளாவல். காசி அண்ணாவை மீண்டும் சந்திக்கலாம் என நினைத்திருந்தேன். வாய்ப்பு அமையவில்லை.

எண்ணங்களை விதைக்க வேண்டி, கோவையிலிருந்து சென்னையில் இருக்கும் மக்கள் தொலைக்காட்சி அகத்திற்குச் செல்லும் ஏற்பாடுகள் அனைத்தையும் முன்னின்று செய்திருந்தார் ஆரூரன். குடும்ப நிகழ்ச்சியதன் முக்கியத்துவம் கருதி, இறுதி வேளையில் பயணத்தைக் கைவிடலாயிற்று. ஆரூரன் அவர்கள் இது குறித்து வருத்தப்பட மாட்டார் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால், அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்!!

திடீரென, மறந்து விட்டிருந்த திட்டத்தை உயிர்ப்பித்தபடி அழைத்திருந்தார் அண்ணன் உண்மைத்தமிழன். இருவருமாகச் சிறிது நேரம், சீமாச்சு அண்ணன் பெருமை பகர்ந்தோம். பின்னர் மீண்டும் ஆரூரன் அவர்களே பயண ஏற்பாடுகளைச் செய்யலானார். ஆனால், இம்முறை ஜெயா தொலைக்காட்சி நிகழ்வுக்கு!

எனக்கோ, சென்னையைப் பற்றி அவ்வளவாக அறிமுகம் கிடையாது. இருந்தாலும், பதிவுலகின் மேல் நம்பிக்கைச் சுமையை இறக்கி வைத்துவிட்டுக் கிளம்பினேன். ஈரோடில், வழியனுப்பி வைத்தார்கள் மாப்பு கதிரும் ஆரூரனும். பாலாண்ணன் வாழ்த்தினார்.

அடை மழையுனூடாக, அபலையாய் வந்திறங்கியவனைக் கோயம்ப்பேட்டில் வந்து அரவணைத்தார் அண்ணன் அப்துல்லா. விருந்தோம்பலால் அடித்துத் துவைத்தார் அண்ணன். எண்ணங்கள் ஆட்டுவித்தது. ஏனென்றால் அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்!!

தொலைக்காட்சி நிலையம்... தயாரிப்பாளர் என்னை முன்னிலைப்படுத்தி நிகழ்ச்சியை வடிவமைப்பாரோ எனத் தயங்கி நின்றேன். அவரோ, தமிழை முன்னிலைப்படுத்தினார். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது தமிழக ஊடகத் துறையைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்வதில்லை என ஆதங்கப்பட்டுக் கொண்டார். எமக்கோ, இரட்டிப்பு மகிழ்ச்சி! அண்ணன் சரவணன் (உ.த) அவர்கள் அறிமுகப்படுத்திய விதம் அப்படி. ஏனென்றால் அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்!

நிகழ்ச்சியை முடித்ததும், அண்ணன் அப்துல்லா வசம் நாம். எண்ணங்கள் கரைபுரண்டு ஓடியது. கடற்கரைக்கு, பிறந்த பிள்ளையை அழைத்துச் செல்வது போல வாஞ்சையுடன் அழைத்துச் சென்றார். பதிவர் சந்திப்பு நடக்குற இடம் இதாண்ணே என்றார். புன்னகை வழிந்தோடியது. வாழ்க பதிவுலகம்!!

கோவைக்கு விமானத்தில் சென்று, சென்ற வேகத்தில் மீண்டும் சென்னை. இம்முறை அமெரிக்காவுக்குத் திரும்ப. பிற்பகல் மூன்று மணியில் இருந்து, இரவு பதினொரு மணி வரைக்கும் என்ன செய்வதென யோசித்திருந்த நேரமது.

எண்ணங்கள் கைகூடி வந்தது. எழுத்தாள்ர், இதழியலாளர், பண்பாளர் எனச் சகலதும் எழுதிக் கொள்ளலாம்தான்... அவற்றால் எங்கள் எண்ணங்கள் கூடவில்லையே? ஆம், நண்பர் யாணன் வந்திருந்தார் விமான நிலையத்திற்கு. பக்கத்துலதாங்க அய்யா வீடு, வாங்க வீட்டுக்குப் போலாம் என்றார். ஏனென்றால் அவரும் ஒரு பதிவர். வாழ்க பதிவுலகம்!!

வீட்டிற்கு அழைத்துச் சென்று, நாளைய பதிவர்கள், சாதனையாளர்களான அவர்தம் இளவல்களோடு களிப்புற்று மகிழ்ந்தோம் நாம். சின்னஞ்சிறு மகன்களே ஆனாலும், தீர்க்கம் கண்களில் வழிகிறது அவர்களுக்கு. நல்ல எண்ணங்கள் அவர்களுள்... ஏனென்றால் அவர்களும் நாளைய பதிவர்களே! வாழ்க பதிவுலகம்!!

விமான நிலையம் வந்து ஏற்றிவிட்டுச் சென்ற, அன்பரும் பதிவருமான யாணன் அவர்கள், இதோ தொலைக்காட்சியின் ஊடான நம் எண்ணங்களையும் வலை ஏற்றியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்தின் மீதும், நம்மீதும் பற்றுக் கொண்ட அவரது எண்ணங்களும் நமது எண்ணங்களே! வாழ்க பதிவுலகம்!!








தமிழால் இணைந்தோம்!!!

20 comments:

விஜய் மணிவேல் said...

நண்பர் பழமை,
மிக மிக அருமை. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.....

அன்புடன்
விஜய் மணிவேல்

ஆரூரன் விசுவநாதன் said...

புகல்தலோடு புகழ்ந்த உங்கள் பாங்கு அருமை. ஆனாலும் அதிகப்படியான புகல்தலும் புகழ்தலும் கூச்சத்தை தருகின்றன.

எங்களால் இயன்ற பணியை எங்களுக்காக செய்து கொண்டோம் என்பதே உண்மை. ஆம் நீங்களும் எங்களில் ஒருவர் தானே

மணிநரேன் said...

பகிற்விற்கு நன்றி பழமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்க பதிவுலகம்!!

:)

a said...

நானும் இணைந்து வாழ்த்துகிறேன்... வாழ்க பதிவுலகம்

பேட்டி என்றவுடன் " ஹலோ " என்று ஆரம்பித்து முடிந்தவரை ஆங்கிலத்தில் பேசுவோர் மிக அதிகம்...

தங்களின் பேட்டியை பார்த்தவுடன் ஒன்று மட்டும் ல்லத்தோன்றுகிறது.....

"நிறை குடம் நீர் தளும்பாது...."

Mahi_Granny said...

வாழ்க பதிவுலகம் . வாழ்க பதிவர்கள்

vasu balaji said...

நிகழ்ச்சி நன்றாயிருந்தது. ஆரூரன் சொன்னதேதான்:)

sakthi said...

ஆஹா பதிவுலகத்திற்கு இத்தனை வாழ்த்தா????

ரொம்ப சந்தோஷம்ங்க

வாழ்க வளமுடன்!!!

ஈரோடு கதிர் said...

||ஆரூரன் விசுவநாதன் said...

புகல்தலோடு புகழ்ந்த உங்கள் பாங்கு அருமை. ஆனாலும் அதிகப்படியான புகல்தலும் புகழ்தலும் கூச்சத்தை தருகின்றன.

எங்களால் இயன்ற பணியை எங்களுக்காக செய்து கொண்டோம் என்பதே உண்மை. ஆம் நீங்களும் எங்களில் ஒருவர் தானே
||

போங்க

மாப்பு

வழக்கமா...
எங்க ஆளு ..ம்ம்ம்.. அல்லது அருமை / மிக அருமைனுதான் பின்னூட்டம் போடுவாரு..

அவர, இம்புட்டு எழுத வச்சுட்டீங்களே!!!

ஈரோடு கதிர் said...

...இதேனுங்க மாப்பு,
இதென்னமோ டிவி பொட்டியில மணிவாசகம் / வட அமெரிக்க தமிழ் சங்க உறுப்பினர்னு போடறாங்க

எங்கீங்க...
பழமபேசினு ஒருத்தர் எழுதுவாரே.. அவரு இல்லீங்களா இவரு

ஈரோடு கதிர் said...

பூவோட சேர்ந்து நாறும் மணக்கிற மாதிரி, நானும் அங்கங்கே உங்ககூட பிலிம் காட்டிக்றோம்ல

வாழ்க பதிவுலகம்
வாழ்க மாப்பு

பவள சங்கரி said...

வாழ்த்துக்கள்....உங்கள் பணி மேலும் சிறக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறோம்....

க.பாலாசி said...

பகிர்தலுக்கு நன்றியும், மகிழ்ச்சியும்...

Anonymous said...

வாழ்த்துகள் மணி அண்ணே :)

நசரேயன் said...

வாழ்க பதிவுலகம்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நன்றிங்க அண்ணே பகிர்வுக்கு.

//புகல்தலோடு புகழ்ந்த உங்கள் பாங்கு அருமை. ஆனாலும் அதிகப்படியான புகல்தலும் புகழ்தலும் கூச்சத்தை தருகின்றன.
//

:)

Thekkikattan|தெகா said...

keep it going! vazhka! valarka!! :)

Unknown said...

"ஒரு போக்கிரியை, அன்றாடம் திருமபத் திரும்ப, அவனொரு நல்லவன் என்று சொல்லிப் பாருங்கள். நிச்சயமாய் நாளடைவில் அவன் நல்லவன் ஆவது உறுதி. இப்படி அவனைப் போற்றுவதும் ஒரு புகல்தல்தான். " .

சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொன்னீங்களா அல்லது நிஜமா. ரொம்ப சொல்லி தான் அரசியல்ல புகுந்து நாட்டையே குட்டி சுவராக்கிறாங்க. பார்த்துக்கங்க.

Rest. Thanks for sharing. Nice one.

கருவாயன் said...

அடடா,..நான் இதை கவனிக்காமல் விட்டு விட்டேனே... ரொம்ப வருத்தமா இருக்கின்றது...

வாழ்த்துக்கள் நண்பரே..

-சுரேஷ் பாபு

தமிழ் பையன் said...

அடடே... தொலைக்காட்சி வரைக்கும் வந்துட்டீங்க.. இனி "டி.வி. புகழ்" அப்படின்னு போட்டுக்கலாம்ல. அப்படியே ஒரு தேர்தல்ல நின்னு எம்.எல்.ஏ. மந்திரின்னு கொஞ்ச நாள்ல முதல்வர் ஆயிடமாட்டீங்க.. வாழ்த்துக்கள்.