9/01/2010

மீளக் கிடைத்த நாளிதுவோ?!

முன்னிரவில் உற்றார் உறவினரோடு அளவளாவல், அதன் பின்னர் கொஞ்சு மழலையருடன் உறவாடல் என நடுநிசியைக் கடந்துதான் நித்திரைத் தழுவலானது நிகழ்ந்தது. வழமை போலவே பிஞ்சுக் கால்கள் தேகம் வருட, பஞ்சுக் கைகள் காதைத் திருகக் கண்கள் விழித்தன மறுநாட்க் காலைப் பொழுதில்!

மூத்தவள் நான் முந்தி நீ முந்தியென ஓடி வந்து கழுத்தைப் பிடித்து கொஞ்சு முத்தத்தினூடாகச் சொன்னாள், “அப்பே... உங்களுக்கு இன்னிக்கி பிறந்த நாளுப்பா... பாட்டி, உங்களுக்குப் புடிச்ச நிலக்கடலை உருண்டை செஞ்சி வெச்சிருக்காங்க...”

மாலை ஆறு மணிக்கு வரவேண்டிய மின்சாரம், முன்னதாகவே அருள் பாலித்துப் பிரகாசித்த முற்றத்து மின்விளக்கு போல சுயத்தின் பிரஞ்ஞை இன்றியே பிரகாசித்தது அவன் முகம்.

தன் பெற்றோரை அண்டியிராத பிறந்த நாட்ப் பொழுதுகள் பதினெட்டு... புலம் பெயர்ந்து வாழுமவனுக்கு கிடைக்கக் காணாத நாளாக எண்ணி மகிழ்ந்தான். அம்மகிழ்ச்சியினூடகத் தன் பிள்ளைகளை வாரி இழுத்துக் கட்டியணைத்தபடி அறையை விட்டு வெளியில் வந்தான்.

மொத்த வீடும் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. பிறந்த நாள்க் காணுபவனைக் கவனிக்கும் பொருட்டு, தாய், தந்தை, மனைவி மற்றும் சின்னஞ்சிறு பிள்ளைகள் என வீட்டில் இருக்கும் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

”போ...கண்ணூ... போ... கையோட போய்க் குளிச்சிட்டு வந்துரு... அந்த கம்ப்யூட்டர்ப் பொட்டியோட மெனக்கெடாத சொல்லிட்டன்”, கண்டிப்பாய்ச் சொன்னாள் அம்மா.

“இந்தாங்க காப்பி!”, பவ்யமாய் வளைய வந்தாள் மனைவி.

வெற்றுக் கொப்பளித்தளோடு அன்றைய சூடாகாரம் உள்ளே இறங்கியது. என்றுமில்லாத சுவையாக இருந்தது மனைவியின் கைபட வந்த காப்பியானது. அந்த வேகத்திலேயே, குளியலுமாகி, புது ஆடைகளும் தரித்து வெளியே வந்தான் பிறந்த நாள்க் காணும் அவன்.

ஏற்கனவே குளித்துச் சிரித்துப் புளகாங்கிதத்தில் இருக்கும் பெற்றோரை வணங்கி, அமர்ந்த நிலையில் படமும் கிளிக்கிக் கொண்டான்.

“கண்ணூ, நாமப்ப தெக்க திருமூத்தி மலைக்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துறலாமா?”, இளகிய மனதோடு மொழியால் வருடினாள் தாய்.

“அவ்ளோ தூரம், கைக் கொழந்தைகளை வெச்சிட்டுப் போய்ட்டு வாறது சிரமம்... வேற எதனா சொல்லுங்மா!”, பணிவாய் இரங்கினாள் மனைவி.

“அப்ப, நாம மருதமலை போய்ட்டு வரலாமுங்ளா?”, கனிவாய்க் கேட்டார் வாகன ஓட்டி.

“அது நல்ல ரோசனை...”, முடித்து வைத்தார் அப்பா.

காலைச் சிற்றுண்டியுடன், குதூகலமாய்ப் புறப்பட்டது வாகனம் மணியகாரன் பாளையம், நல்லாம்பாளையம், கவுண்டம்பாளையம் வழியாக. குக்கிராமங்களாய் இருந்து, கிராமிய மகோன்னதத்தை அள்ளி அள்ளிக் கொடுத்த கிராமங்கள், தத்தம் விழுமியங்களைத் தொலைத்து அம்மை போட்ட தேகமென உருமாறிக் கிடந்தன. போக்குவரத்து நெரிசல் வேறு. காலத்தின் கோலமடா... வீடெல்லாம் வேலியடா... இயற்கைக்கே கொள்ளியடா என முணுமுணுத்துக் கொண்டான்.

இடையர் பாளையம் சந்தியில் இருக்கும் கனத்துப் பருத்த ஆலமரங்கள் இன்னமும் இருக்கிறது. வாழ்க கவுண்டம்பாளையம் நகராட்சி!!! வடவள்ளி சாலைக்கு மாறியது வாகனம்.

இருமருங்கிலும் இருந்த வாழைத் தோப்புகளும், கமுக மரங்களும் மஞ்சள்த் தோட்டங்கள் போனால் என்ன? வண்ண வண்ணமாய், கட்டிடங்கள், கட்டிடங்கள்... எங்கும் கட்டிடங்கள்... சாக்கடைகள் கண்ட இடமெலாம் அடுக்ககங்கள்... சாக்கடையும் அடுக்ககமும் ஒட்டிப் பிறந்த குழந்தைகளோ??

வடவள்ளியைக் கடந்து, கல்வீரம் பாளையம் வரவும்தான் மனம் நிலைகொள்ள ஆரம்பித்தது அவனுக்கு. ஆம், பச்சைப் பசேல் மரங்கள் முன்பிருந்தது போலவே தலைகாட்டத் துவங்கியது. அப்பப்பா.... தாயகத்துப் பசுமையே பசுமை! நெடிய, விழுதுடன் கூடிய மரங்கள், அடி பெருத்த மரங்கள், குடையாய்க் கவிழ்ந்த மரங்கள்.... இரசித்து நெகிழ்ந்தான் அவன்.

இடையில் தட்டுப்பட்ட மண்டபத்தின் முன் இருந்த அம்பாரிப் பந்தலைப் பார்த்ததும் குதூகலம் பொங்கி, ஆனந்தக் கண்ணீர் வடித்தான். தன் தாய் மாமன் மணத்திற்குப் பின், கிட்டத்தட்ட தனக்குப் பத்து பனிரெண்டு வயதில் நடந்த தன் மாமன் திருமணத்தை நினைவுக்கு மீட்டு வந்தது அந்த அம்பாரிப் பந்தல். வாகாய்க் கிளிக்கிக் கொண்டான்.

பாராதியார் பல்கலைக் கழகம் வரவேற்றது. மிகத் தூய்மையாய் இருக்கும் வளாகம் கண்டு, மிக்க மகிழ்ச்சியுற்றான் அவன். “என்ணிய முடிதல் வேண்டும்”, முகப்பில் மிளிர்ந்த வாசகத்தை மீண்டும் மீண்டும் வாசித்து உருப் போட்டுக் கொண்டான். எண்ணிய முடிதல் வேண்டும்!!

அந்தோ! அதே இடம்!! தனக்கு வயது பதினேழாக இருக்கும் போது, எந்த இடத்தில் இரவு ஏழு மணிக்கு இறங்கி, நடு நடுங்கி, அங்கே இருந்த இட்டேரியின் வழியாகச் சென்றானோ, அதே இடம். ஆம், வெளிநாடு செல்ல வேண்டும் என்கிற பேராவலில், அதற்கான வாய்ப்பை நாடி, ஐஓபி காலணியில் இருக்கும் ஒருவரை நாடிச் சென்ற அதே இட்டேரிதான் அது. இன்று, நல்லதொரு வழித்தடத்தோடு காட்சி அளித்துக் கொண்டு இருந்தது.

அகமகிழ்ச்சியோடு மேற்குமுகமாக நிமிர்ந்து பார்த்தான். பாம்பாட்டி சித்தர் கண்ட மருதமலை எழில் கொஞ்சிக் கொண்டிருந்தது. முகிலினமோ மலைமுகடுகளை முகர்ந்து சிருங்காரத்தில் மெய்மறந்து தன்னை இழந்து கொண்டிருந்தன.


இலயிப்பில் இருந்தவனை நோக்கித் திடீரெனக் கிறீச்சிட்டாள் மூத்தவள், “அப்பே இங்க பாருங்கப்பா, அப்பா சீக்கிரம் இங்க பாருங்”. திடீரென வந்த ஓசையின் பொருட்டு அதிர்ந்து திரும்பினான் அவளிருக்கும் திசை நோக்கி!!

(தொடரும்)

13 comments:

நசரேயன் said...

ஊருக்கு போயிட்டு ஏகப்பட்ட இடுகைக்கு விஷயத்தை உஷார் பண்ணிட்டீங்க
போல

sathishsangkavi.blogspot.com said...

நம்ம ஊரு அழக நீங்க சொல்லிய விதம் மீண்டும் மீண்டும் படிக்கத்தோணுது....

a said...

//
நசரேயன் said...
ஊருக்கு போயிட்டு ஏகப்பட்ட இடுகைக்கு விஷயத்தை உஷார் பண்ணிட்டீங்க
போல
//
athe than... innum sarakku irukku....

Unknown said...

இந்தத் தரம் போயிட்டு வந்தத எழுதி முடிக்கக்கொள்ள அடுத்த தரம் போயிருவீங்க போலருக்கே?

சீமாச்சு.. said...

// பெற்றோரை வணங்கி, அமர்ந்த நிலையில் படமும் கிளிக்கிக் கொண்டான்//

அது என்னங்க அம்மா அப்பா பக்கத்துல உட்கார்ந்திருக்கும் போது அவ்வளவு விரைப்பா உக்கார்ந்திருக்கீங்க.. நானெல்லாம் அம்மா மடியிலே தலை அப்பா மடியிலே கால் போட்டுக்கிட்டு.. அம்மா என் தலையில் (மீதம் இருக்கும் ??) முடியைக் கோதிவிட்டுக்கிட்டிருக்கிற மாதிரி படம் எடுத்திககிட்டிருக்கேன்..

அம்மா அப்பாவை அப்படியே கட்டிக்கிட்டிருக்குற மாதிரி எடுத்த படமிருந்தால் போடுங்களேன்

Mahesh said...

பிறந்தநாள் வாழ்த்துகள் !!

அப்பா அம்மா கூட உக்காரும்போதும் தொப்பியோடயா ??? :)))))))

குறும்பன் said...

பழமை உங்க பிறந்த நாளும் தமிழ்மணம் தோன்றிய நாளும் ஒன்றல்லவா. தமிழ்மணத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று ஓர் இடுகையும் காணோமே??

அம்மா பையனா நீங்க.

தமிழ் said...

பிறந்தநாள்
வாழ்த்துகள்

இனிக்கும் இளமை நினைவுகள்

sakthi said...

தாயகத்துப் பசுமையே பசுமை! நெடிய, விழுதுடன் கூடிய மரங்கள், அடி பெருத்த மரங்கள், குடையாய்க் கவிழ்ந்த மரங்கள்.... இரசித்து நெகிழ்ந்தான் அவன்.

விவரித்திருக்கும் விதம் அழகு

க.பாலாசி said...

//அந்த கம்ப்யூட்டர்ப் பொட்டியோட மெனக்கெடாத சொல்லிட்டன்”, கண்டிப்பாய்ச் சொன்னாள் அம்மா.//

கண்டிப்பா சொன்னாலும் நாமதான் கேட்கமாட்டமே...

அனுபவம் தொடரட்டும்.

Mahi_Granny said...

many more happy returns of the day

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கடந்து போன பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. பத்திக்குப் பத்தி படம் போட்டது நல்லாயிருக்கு..

இடைவெளிகள் said...

பெற்றோரின் ஆசியோடு பயணப்பட்ட அனுபவத்தை யதார்த்த வரிகளோடு பதிவிட்டு அதை படித்தபோது நானும் எனது பெற்றோரோடு வழிநெடுக வந்ததைப்போல் உணர்ந்தேன். நன்றி.