5/27/2010

ஓர் ஆசங்கை!

மக்களே, நான் ஒரு தமிழ் மாணவன். அன்றாடம் தவறாது தமிழ் கற்று வருகிறேன். அவ்வகையிலே, உங்கள் உதவியோடு மேலதிகமாக ஒன்றை இன்று கற்க விரும்புகிறேன்.

நான் எழுப்பப் போகிற வினாவானது, அறிவிலித்தனமான மற்றும் பக்குவமற்ற வினாவாகவும் இருக்கக் கூடும். அப்படி இருப்பின் பொறுத்தருள்வதோடு, எம்மடமையை அகற்றித் தெளிவித்திடுவீராக!

பண்புத்தொகை என்பது பண்புப் பெயரைச் சேர்த்து வரும் பெயர்ச் சொல். அப்படியா? அப்படியானால், பண்புப்பெயர் என்றால் என்ன?? பண்பைக் குறிப்பது பண்புப் பெயர்; செம்மை, வட்டம், பசுமை என்பன போன்ற பண்புகளைக் குறிப்பது.

இப்படியான பண்புகளைத் தாங்கி வரும் பெயர்ச் சொல், பண்புத்தொகை. பெருங்கடல், செந்தமிழ், பசும்பொன் முதலானவை அதற்கான உதாரணங்கள். செம்மையான தமிழ், செந்தமிழ் என்று ஆகிறது.

செம்மையான மொழி செம்மொழி. அந்த வகையிலே, செம்மொழியான தமிழ், செம்மொழித் தமிழ். இந்த செம்மொழித்தமிழுக்கு, உலகந் தழுவிய அளவிலே ஒரு மாநாடு. ஆக, அந்த நல்லதொரு நிகழ்வுக்கான பெயர்ச்சொல், உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு என்று வரும். தருக்கம் சரியாக இருக்கிறதா? நிச்சயமாக, சரியாக இருப்பதைப் போலத் தோணக்கூடும்.

அப்படியானால், ஏன் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று அழைக்கிறோம்? இங்கே, தமிழ் என்பது ஒரு பண்பைக் குறிக்கிறதா?? கன்னடச் செம்மொழி, தெலுங்குச் செம்மொழி எனப் பண்பால் குறிப்பதாகுமா??

செம்மொழித்தமிழ் என்பதில் பெருமையின் வீரியம் தூக்கலாக இருக்கிறதா? அல்லது, தமிழ்ச் செம்மொழி என்பதில் தமிழுக்கான பெருமையின் வீரியம் அதிகமா?? அன்பு கூர்ந்து, எனக்குள் தலைதூக்கி இருக்கும் இந்த ஆசங்கத்தை விரட்டி அடிக்க உதவி புரியுங்கள் தமிழரே!!


வேர்கள் தமிழில்!
விழுதுகள் உலகெங்கும்!!

18 comments:

பாலா said...

எதுனா.. பொற்கிழி பரிசா கெடைக்குங்களா தல? :)

எனக்கு ஒரு டவுட்டுங்க. நான் பேசறது செம்மொழியா? தமிழா?

பாலா said...

//உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு//

உலகச் செந்தமிழ் மொழி மாநாடு??

========

இப்ப யாருகிட்டயாவது “தமிழ் மொழி செம்மையானது”-ன்னு டிக்ளேர் பண்ணுறோம்னு வச்சிக்குவோம். அப்ப...

“உலகின் செம்மையான மொழி, தமிழ்”-ன்னு சொல்லலாம். அது...

“உலகச் செம்மொழி[,](த்) தமிழ்”-ன்னு வரும்.

===

செம்மையான மொழி, தமிழ்-ன்னு சொல்லுறதுக்கும்,

செம்மையான தமிழ் (ஒரு), மொழி-ன்னு சொல்லுறதுக்கும்

....உள்ள வித்தியாசத்தின் அளவு அதிகம்னு நினைக்கிறேன்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

உலக செந்தமிழ் மாநாடு .

Unknown said...

//எனக்கு ஒரு டவுட்டுங்க. நான் பேசறது செம்மொழியா? தமிழா//

தமிழ் என்னும் செம்மொழி..

Unknown said...

//இப்ப யாருகிட்டயாவது “தமிழ் மொழி செம்மையானது”-ன்னு டிக்ளேர் பண்ணுறோம்னு வச்சிக்குவோம். அப்ப...

“உலகின் செம்மையான மொழி, தமிழ்”-ன்னு சொல்லலாம். அது...

“உலகச் செம்மொழி[,](த்) தமிழ்”-ன்னு வரும்.
//

ஹாலி பாலி, உங்க லாஜிக்குக்கே வர்றேன்..

செம்மையான மொழி தமிழ். செம்மொழித் தமிழ்.

தமிழ் செம்மையான மொழி - தமிழ் செம்மொழி..

எப்பூடி?

மாதேவி said...

ஆராய்ச்சி நல்லாக இருக்கிறது.

vasu balaji said...

அப்புச்ச்ச்சீஈஈஈ. பேராண்டி உறங்கபோயீட்டாரு. கனவுல வந்து விளக்கம் சொல்லுங்க சித்த. அவருக்கு இடுகையாச்சு, எங்களுக்கு விளக்கமாச்சு, உங்களுக்கு புண்ணியமாப் போவும். என்னா ஒரு வில்லங்கம்:))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நியாயமான கேள்வியாத்தான் படுது..

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

பழமைபேசி said...

பரமாத்மா காந்தி அவர்களை, காந்தி பரமாத்மா என்பதைப் போல,

நாட்டாமை முருகன் அவர்களை, முருக நாட்டாமை என விளிப்பதைப் போல,

தாத்தா காந்தியை, காந்தித் தாத்தா என உறவாடுவதைப் போல,

செம்மொழித் தமிழை, தமிழ்ச் செம்மொழி எனவும் அடைமொழியிடலாம். அதன் அடிப்படையில், உலக அளவிலே தமிழ்ச் செம்மொழிக்கு நடைபெறும் மாநாடு, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என விளக்கம் கிடைத்துள்ளது. மகிழ்ச்சி; நன்றி!!

“உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”

உலகத் தமிழைப் போல, மதுரைத் தமிழுக்கு மதுரையிலும்,

நெல்லைத் தமிழுக்கு நெல்லையிலும்,

ஆமாவா என இராகமிடும் பெங்களூருத் தமிழுக்கு பெங்களூருவிலும்,

பினாங்குத் தமிழுக்கு பினாங்குவிலும் மாநாடுகள் நடைபெறுமா என வாதிடுகின்றனர் சிலர்.

இதன் அடிப்படியிலே பார்த்தால், ”உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு” என்றிருத்தல் வேண்டும்.

இத்தகைய சுவைமிகு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் களம்:

களம்-1

களம்-2

விவாதத்தில் இடம் பெற்ற கருத்துகளை நான் இன்னமும் உற்று நோக்குகிறேன்.

இந்திய சட்டத்தரணிகள் மாநாடு என்றால், இந்தியாவிலே இருக்கிற சட்டத்தரணிகள் எல்லாம் ஒன்று கூடுகிற மாநாடு எனப் பொருள் கொள்ளலாம்.

இந்தியச் சட்டத்தரணிகள் மாநாடு என்று சொல்கிற போது, இந்திய அரசுக்குப் பணிபுரியும் சட்டத்தரணிகள் எனப் பொருளாகிறது.

மேலும் தென்னாப்பிரிக்க காந்தி சீடர்கள் கூட்டம் என்றால், தென்னாப்பிரிக்காவிலே காந்தியின் சீடர்களுக்கான கூட்டம் எனப் பொருள் வரும்.

இதுவே, தென்னாப்பிரிக்கக் காந்தி சீடர்கள் கூட்டம் என்றால், உலகின் எதோ ஒரு இடத்தில் நெல்சன் மண்டேலாவினுடைய சீடர்கள் கூட்டம் எனப் பொருள் கொள்ள வேண்டி இருக்கும்.

ஆகையால், ”உலகத்” என்பது விவாதத்திற்கு உள்ளாகும் என்பது புலனாகிறதல்லவா??

அதே வேளையில், உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு எனும் போது, உலக(ச்) செம்மொழியான தமிழுக்கான மாநாடு எனப் பொருள் கொள்ளலாம். விவாதத்திற்கே இடமில்லை என்பதும் புலனாகும்.

இடுகையில் வினவியதற்கு மட்டுமே நான் பொறுப்பு; மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் விவாதத்தில் இதுவரையிலும் பங்கு கொண்டோரின் பங்களிப்பே!!

vasu balaji said...

அட ஆமாம். இவ்வளவு விசயமிருக்கு இதில. ரொம்ப நன்றி. களச்சுட்டிக்கும்.:)

சிநேகிதன் அக்பர் said...

தமிழ்தாண்ணே பெஸ்ட் லாங்குவேஜ் :)

தாராபுரத்தான் said...

மிகவும் நல்ல விவாதம்..கருத்து சொல்லும் அளவுக்கு தமிழை கற்கவில்லையே என வருந்துகிறேன்.ஆர்வம் இருந்தும் முரசொலி படிப்பது மட்டுமே தமிழை காப்பாற்றுவதாக எண்ணிவிட்டோமே என இப்போது வருந்துகிறேன்.

Mahesh said...

"செம்மொழி தமிழ் - உலக மாநாடு" என் பங்குக்கு நானும் :))))

பழமைபேசி said...

//தமிழாகிய செம்மொழியா?? செம்மொழியாகிய தமிழா??//

தமிழ்மொழி என்றுதான் சொல்கிறோம். தமிழ் என்பது சிறப்புப் பெயர். மொழி என்பது
பொதுப் பெயர். எனவே தமிழ்மொழி என்பது இருபெயரொட்டுப் பண்புத் தொகை.

மொழி என்பதற்கு அடையாக செம்மை சேர்ந்து ‘தமிழ்ச் செம்மொழி‘ என வந்துள்ளது. அதாவது தமிழாகிய செம்மொழி எனப் பொருள்படுகிறது.

தமிழ் > தமிழ்மொழி > தமிழ்ச் செம்மொழி

திரு விஜயராகவன் வினாவிற்கு என்சார்பாக விடையளித்த, தமது கருத்தையும் பதிவு செய்த திரு ஹரிகி அவர்களுக்கும் நன்றி

அன்புடன்
ஆராதி

Paleo God said...

வடை போச்சே!!


==

சரி குதாவடை மிச்சம்!!

Unknown said...

இந்தத் தமிழப் படிச்சி என்னண்ணே புண்ணியம்? தமிழ் புரபசர் வேலைக்கா போவ முடியும்? அதுக்கு பதிலா இங்கிலீஷ் கான்பாரன்ஸ் அல்லது இந்தி மாநாடு நடத்தின வெளி மாநிலத்துல இல்லை வெளி நாட்டுல வேலை தேடி தமிழ் நாட்டுக்காரன் பொளைச்சிக்குவானே.. கொஞ்சம் பாத்து ஏற்பாடுசெய்யுங்க

Unknown said...

//இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தும் போது இதே கேள்வி வந்துச்சா?
//

“உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு”

உலகத் தமிழைப் போல, மதுரைத் தமிழுக்கு மதுரையிலும்,

நெல்லைத் தமிழுக்கு நெல்லையிலும்,

ஆமாவா என இராகமிடும் பெங்களூருத் தமிழுக்கு பெங்களூருவிலும்,

பினாங்குத் தமிழுக்கு பினாங்குவிலும் மாநாடுகள் நடைபெறுமா என வாதிடுகின்றனர் சிலர்.