6/06/2009

வெறுமை ஒழிக!

மாந்தனுடைய வாழ்க்கையில் அடிக்கடி தென்படுவது மனவெறுமை (boredom); அதனால் அவனுக்கு அவதி! மனம் தவிக்கிறது, இருந்த இடத்தில் இருக்கப் பிடிக்கவில்லை, உடன் இருப்போரைக் கண்டால் பிடிக்கவில்லை, எதைச் செய்யவும் சலிப்பு மேலிடுகிறது, இதை ஒருவழிக்குக் கொண்டு வர வேறேதோ ஒன்றை நாடுகிற சூழ்நிலை.

திரைப்படம் பார்க்கிறான், சலிப்பாக இருக்கிறது. கதை கட்டுரை படிக்கிறான், அதில் மனம் ஒன்றவில்லை. ஏன்? அவனது மனம் இது வரையிலும் கண்டிராத எதோ ஒன்றுக்கு இட்டுச் செல்கிற தூண்டுதல் (stimulation) அதில் இருந்திருக்கவில்லை(lack of variety). மனமானது மாற்றங்களுக்கும் மாற்றான உணர்வுகளுக்கும் ஏங்கிக் கொண்டே இருக்கும். அதையறிந்து, மாந்தனை வேறொரு எண்ணச் சூழலுக்கு இட்டுச் செல்கிற வகையில் படைப்புகள் தருவதில்தான், படைப்பாளியின் வெற்றி அடங்கியுள்ளது.

இந்திய சமூகத்தில், குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பது என்ன? மாற்றங்களைக் கொணர்கிறோம், இரசிப்புத் தன்மையை மெருகேற்றி சுவராசியத்தைக் கூட்டுகிறோம் (variance in variety) என்று சொல்லி, தனிமனிதனின் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்து, அதன்மூலம் இலாபம் ஈட்டப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இங்கே நீங்கள் கையாளப்படுகிற வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும். சுவராசியம் என்பார்கள். சுவராசியம் என்றால் என்ன? சுவை + இராசியம்! இராசியம் என்றால் ஏதோ ஒன்றை மறைபொருளாக வைத்துச் செயல்படுதல். நாங்கள் இராசி ஆகிவிட்டோம் என்று சொன்னால், எங்களுக்குள் நட்பு எனும் மறைபொருள் துளிர்த்து விட்டது என்று பொருள்.

அப்படியாக சுவராசியம் என்பது, சுவையான பாங்கில் மறைபொருள் ஒன்றை வெளிப்படுத்தும் செயல். ஆனால், நடப்புச் சூழலில் அது எப்படிக் கையாளப் படுகிறது? பெரும்பாலான படைப்புகளில், தனிமனிதத் தாக்குதல், உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்து மனத்தை ஆட்கொள்தல், குறை சொல்லிச் சுட்டுதல், புறம் பேசுதல், ஆதிக்கம் செலுத்துதல் முதலான, மாந்தனுக்கு எதிரானவற்றை லாவகமாகக் கையாளும் போக்கு சுவராசியம் என்படுகிறது.

உதாரணத்திற்கு ஒரு காணொளிக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். நாயகன், வில்லன் ஆகிய இருவரும் சொல்லவொண்ணா அவலங்கள் செய்வர், நாயகியையும் அவர் சார்ந்தோரையும் அவலநிலைக்கு ஆளாக்குவர்(domestic violence), அல்லது பாலியல் ரீதியான கொடுமைகள் (sexual harassment), அதனை எதிர்கொண்டு நாயகன் வெல்வதுதான் கதை. பெரும்பாலான படைப்புகளில், இந்த அடிப்படையில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. அப்படியானால் மேலே குறிப்பிட்டபடி varience in variety, சுவ்ராசியம் மற்றும் புதுமையான சூழலை உண்டு செய்து படைப்பில் வெற்றி பெறுவது எப்படி?

அங்கேதான், இன்றைய சூழலைப் பொறுத்த மட்டில், நமது சமுதாயம் படைப்பில் வெற்றி பெற்று, அதே நேரத்தில் மனிததர்மத்தில் (ethic) தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. எப்படி?

பெரும்பாலான படைப்பாளிகள், புறநிலையில் வெகுவாக மாற்றத்தைக் கொணர்ந்து, மனிதனின் எண்ண மாறுதலுக்கான ஏக்கத்துக்குத் தீனி இட்டு வருகிறார்கள். அது என்ன புறநிலை? வில்லன் நாயகியைக் கொடுமைப் படுத்துவதில் புதிய யுக்திகள். நாயகனைச் சிறுமைப் படுத்துவதில் புதிய நேர்த்தி. பின்னர் வில்லனை வெற்றி காண்பதில் புதிய வழிமுறை. இப்படியானவற்றில் சமுதாயம் சோரம் போனதுதான் வேதனையான ஒன்று!

பின் எப்படியான மாற்றங்கள் மாந்தனுடைய எண்ண மாறுதலுக்கு உகந்ததாக இருக்கும்? அகநிலை மாற்றங்கள்! படைப்பின் கருவில் மாற்றம் இருக்க வேண்டும். அவன் கடந்த முறை கண்டது காதல் கதை என்றால், அடுத்த முறை அது வேறொன்றாக இருக்க வேண்டும். அந்தக் களம், மனிதனின் மனதைக் கொள்ளை கொள்ள வேண்டும்.
Iyer the Great, வரவேழ்ப்பு, வந்தனம், New Delhi, வைசாலி என்று தொடர்ந்து ஒன்றுக்கொன்று மாறுபட்ட கோணத்தில் படைப்புகள் வர, தமிழ் வணிகசக்தி ஆடிப் போய், அவை தமிழகத்தில் வெளிவரத் தடை வந்தமை இதற்குத் தகுந்த உதாரணமாகச் சொல்லலாம்.

மனவெறுமையைத் துடைத்தெறிந்து மகிழ்வு கொள்வதில், தனிப்பட்ட மனிதனுக்கும் உரிய கடமைகள் உண்டு. அவன் அவனது மனதை எளிமையாக, ஏழ்மையாக வைத்திருத்தல் மிக அவசியமானது. ஒருவனுடைய வாழ்வுக்கு உண்டானது 100 பெட்டி மகிழ்ச்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த 100 பெட்டிகளையும் முதல் 25 ஆண்டுகளிலேயே செலவழித்து விட்டான் என்கிறபோது, எஞ்சிய நாட்களுக்கு அவன் மேலதிக மகிழ்ச்சியைத் தேடித்தான் திரிய வேண்டும். அந்த காலகட்டத்தில் மனநிம்மதியை அவன் இழப்பது தவிர்க்க இயலாதது ஆகிவிடுகிறது.

இன்றைய நிலையில், மனமகிழ்ச்சி என்பது மற்றவர்களின் வணிகரீதியான வெற்றிக்காக, விரைவில் செல்விடப் படுகிறது. மேல்நாட்டவன் ஒற்றைத் தூண்டில் கொண்டு மீன்பிடிப்பதை நாட்கணக்கில் இரசித்து மகிழ்கிறான். நமது சமுதாயம், அதை அந்த அளவில் வைத்திருக்கிறதா? இல்லை. காரணம், நமது மனது சிறுவயதிலேயே உச்சம் எய்தி விட்டதுதான் நிதர்சனம். அந்த மனதுக்கு இது போன்ற சிறு சிறு செயல்களில் மகிழ்ச்சி ஏற்படாது. உணர்ச்சிகள் என்ற கடப்பாரை கொண்டு, நெஞ்சினுள் நச் நச்சென்று இடிக்க வேண்டிய அளவுக்கு அது முதிர்ச்சியாகி விட்டதென்பதே உண்மை.

ஆகவே வெகுளித் (Innocence) தன்மை கொண்டு, மனதை ஏழ்மையாக வைத்திருத்தல் அவசியம். அதை வளர்த்தெடுக்க, குழந்தைகளோடு பெற்றவர்கள் நிறைய நேரம் செலவிட வேண்டும். வக்கிரங்கள் கொண்ட படைப்புகளைத் தவிர்த்திடுவதால், மகிழ்ச்சியானது விரைவாகவும் மலிவாகவும் செலவிடப்படுவது தடைபடும்.

வக்கிரப்படுதலை ஊக்குவித்து, நாட்டத்தை உண்டுபண்ணி, உங்களது நீண்ட நாளைய மகிழ்ச்சியை குறுகிய நேரத்தில் செலவிடச் செய்து படைப்பை வெற்றி பெறச்செய்வது என்பது, ஒரு பொருளீட்டும் மாயை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், விளையாட்டு, குழந்தைகளுடன்கூடிய தொடர்பை மேலும் வலுப்படுத்துதல், கலை இலக்கியங்கள், சமூகப் பங்களிப்பு, ஆன்மீகம், உடற்பயிற்சி போன்றவை மனதுக்கு மகிழ்வளித்து, கூடவே மனவெறுமையையும் வென்றொழிக்கும் என்பது சொல்லித் தெரிவதில்லை!

“The good things of life are not earned, but obtained with little or no effort!”

21 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஆகவே வெகுளித் (Innocence) தன்மை கொண்டு, மனதை ஏழ்மையாக வைத்திருத்தல் அவசியம்.//

ஏழ்மை என்ற சொல் வெறுமை என்ற சொல்லின் பொருளைக்கொடுக்காதா? தல

பழமைபேசி said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
//ஆகவே வெகுளித் (Innocence) தன்மை கொண்டு, மனதை ஏழ்மையாக வைத்திருத்தல் அவசியம்.//

ஏழ்மை என்ற சொல் வெறுமை என்ற சொல்லின் பொருளைக்கொடுக்காதா? தல//

கொடுக்காதுங்க...

ஏழ்மை, s. Ignorance, simplicity, அறியாமை. 2. Timidity, pu sillanimity, want of fortitude and energy, powerlessness, பேதமை

தீப்பெட்டி said...

நல்ல அர்த்தமுள்ளவைகளை பதிவிடுகிறீர்கள் நன்றி..

அது ஒரு கனாக் காலம் said...

"Iyer the Great, வரவேழ்ப்பு, வந்தனம், New Delhi, வைசாலி" ...நல்லா அனுபவித்து பார்த்திருகிறீர்கள் ... அதுவும் அந்த வரவேழ்ப்பு படம் பற்றி , சாதரண ஒரு பஸ் ஓட்டும் ...ஆளை பற்றிய கதை, அந்த உடமையாளரே , டிகேட்ட் கொடுப்பவராக மாறும் பொழுது .... அவரை நீ ஒரு பூஷ்வா.... தொழிலாளியின் விரோதி ...அப்படி, இப்படின்னு சொல்லும் பொழுது ...ரொம்ப நல்லா இருக்கும்.

கேரளா, நிஜ வாழ்கையிலும் .. கொஞ்சம் நன்றாக உடை உடுத்தி இருந்தால், ( செழுமை இருந்தால் )... வழியில் கால் விரித்து இடைஞ்சலாக இருந்தாலும் , நம்மை கண்ணோடு கண் நோக்கி , நம்மை சிறிது தள்ளி நடக்க செய்து விடுவர். ...

உங்கள் பதிவ நன்றாக இருக்கிறது, ...மிகவும் உண்மையுள்ள வரிகள் " குழந்தைகளுடன்கூடிய தொடர்பை மேலும் வலுப்படுத்துதல், கலை இலக்கியங்கள், சமூகப் பங்களிப்பு, ஆன்மீகம், உடற்பயிற்சி "

தேவன் மாயம் said...

தமிழன்னையின் புகழ் பரப்பும் தமிழ்மைந்தா வாழ்க!!

தமிழ் said...

சொற்களின் விளக்கம்
சொக்க வைக்கிறது

நல்ல இருக்கிறது

பழமைபேசி said...

@@தீப்பெட்டி
@@அது ஒரு கனாக் காலம்
@@thevanmayam
@@திகழ்மிளிர்

நன்றி மக்களே!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//மேல்நாட்டவன் ஒற்றைத் தூண்டில் கொண்டு மீன்பிடிப்பதை நாட்கணக்கில் இரசித்து மகிழ்கிறான். நமது சமுதாயம், அதை அந்த அளவில் வைத்திருக்கிறதா? இல்லை. காரணம், நமது மனது சிறுவயதிலேயே உச்சம் எய்தி விட்டதுதான் நிதர்சனம்.//

சரியா சொன்னீங்க.

ஆ.ஞானசேகரன் said...

வழக்கம்போல பல தமிழ் சொற்களையும், அதற்கான விளக்கமும் அருமை நண்பா

பழமைபேசி said...

//அது ஒரு கனாக் காலம் said...
"Iyer the Great, வரவேழ்ப்பு, வந்தனம், New Delhi, வைசாலி" ...நல்லா அனுபவித்து பார்த்திருகிறீர்கள் ... அதுவும் அந்த வரவேழ்ப்பு படம் பற்றி , சாதரண ஒரு பஸ் ஓட்டும் ...ஆளை பற்றிய கதை, அந்த உடமையாளரே , டிகேட்ட் கொடுப்பவராக மாறும் பொழுது .... அவரை நீ ஒரு பூஷ்வா.... தொழிலாளியின் விரோதி ...அப்படி, இப்படின்னு சொல்லும் பொழுது ...ரொம்ப நல்லா இருக்கும்.

//

அதெல்லாம் இப்பிடி எழுதி, அந்த உணர்வுகளை வெளிக் கொணர முடியாதுங்க.... அனுபவிச்சுப் பாக்கணும்.... நான் சின்ன வயசுல இருக்கும் போது பார்த்த படங்கள்!

வருண் said...

ரொம்ப நல்லாயிருக்கு இந்த கட்டுரை, பழமைபேசி :)

ஆனால்,

**“The good things of life are not earned, but obtained with little or no effort!”***

இதுக்கு என்ன அர்த்தம். கொஞ்சம் தமிழில் இன்னொரு உதாரணத்தை வைத்து விளக்குங்கள்!

You mean obtained from the parents???

பழமைபேசி said...

//வருண் said...
**“The good things of life are not earned, but obtained with little or no effort!”***

இதுக்கு என்ன அர்த்தம். கொஞ்சம் தமிழில் இன்னொரு உதாரணத்தை வைத்து விளக்குங்கள்!

You mean obtained from the parents???
//

earned - சம்பாதிப்பது
obtained - அடைவது/பெறுவது

மகிழ்ச்சியைத் தரவல்லனவற்றைத் தேடிப் போக வேண்டியது இல்லை. அது எங்கும் இருக்கும், உடனடியாகவோ அல்லது சிறு முயற்சியின் பயனாகவோ அடைய/பெற முடியும்.

வெறுமையாக இருக்கிறது மனம். குழந்தையோடு விளையாடலாம், உங்களுக்கென இருக்கும் ஊர்தியைக் கழுவலாம், உடற்பயிற்சி செய்யலாம், பாடலாம், ஆடலாம்... கவிதை எழுதலாம்... எண்ணற்றவை இலவசம்! அதை விடுத்து, நெஞ்சைத் தைக்கும் உணர்ச்சிகளை நாடுவது, போதைப் பொருளை நாடுவதற்கு இணையாகாதா?

வருண் said...

நல்ல விளக்கம், பழமைபேசி :-) நன்றி :)

பதிவுலகில் நேரம் செலவிடுவது மற்றும் உங்க பதிவை வாசிப்பது, பின்னூட்டமிடுவதெல்லாம் "வெறுமையினையை obtained with little effort" தான் :-)))

வருண் said...

நல்ல விளக்கம், பழமைபேசி :-) நன்றி :)

பதிவுலகில் நேரம் செலவிடுவது மற்றும் உங்க பதிவை வாசிப்பது, பின்னூட்டமிடுவதெல்லாம் "வெறுமையின்மையை obtained with little effort" தான் :-)))

பழமைபேசி said...

//வருண் said...
நல்ல விளக்கம், பழமைபேசி :-) நன்றி :)
//

:-0) உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்...இஃகிஃகி!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

மணி,

தேவையான அருமையான பதிவு. சின்ன வயதிலிருந்து மனதை அதீத எதிர்பார்ப்புக்களுக்கு ஆளாக்காமலும், எதிர்பார்ப்புகள் தோல்வியடையும்போது சாதாரணத்தன்மை இருக்குமாறும் பழகிக்கொண்டால் வெறுமை இருக்காது.

கௌபாய்மது.

சந்தனமுல்லை said...

மிக நல்ல பதிவுங்க!

பழமைபேசி said...

@@மதுவதனன் மௌ.
@@சந்தனமுல்லை

நன்றிங்க!

குறும்பன் said...

தமிழ் பட்ந்தாங்க பார்கிறது... ;-( உங்களை மாதிரி மலையாளப் படம் பார்க்குற ஆளு நானில்லை. இஃகிஃகி

தீபக் வாசுதேவன் said...

தங்களது தமிழ்ச் சொல் உதவிக்கு நன்றி. இன்றைய பதிவில் இன்னும் சில தமிழ்ச்சொற்களை பதிவில் சேர்த்துள்ளேன். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவும்.

பழமைபேசி said...

//குறும்பன் said...
தமிழ் பட்ந்தாங்க பார்கிறது... ;-( உங்களை மாதிரி மலையாளப் படம் பார்க்குற ஆளு நானில்லை. இஃகிஃகி
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......


//தீபக் வாசுதேவன் said...
தங்களது தமிழ்ச் சொல் உதவிக்கு நன்றி. இன்றைய பதிவில் இன்னும் சில தமிழ்ச்சொற்களை பதிவில் சேர்த்துள்ளேன். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவும்.
//
வந்தேனே?!