முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே,
புரட்சித் தலைவி வெற்றிகொள்அம்பிகை அவர்களே,
புரட்சிக் கலைஞர் வெற்றிச்செல்வன் அவர்களே,
எங்கள் செந்தமிழ் நாட்டில், மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் நீங்கள் மூவருமே! இது எந்த தனி மனிதனின் விருப்பு வெறுப்பின் அடிப்படையிலும் தெரிவானது அல்ல. மக்களாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான தேர்தலில், மாநிலந் தழுவிய மக்களால் தெரிவான ஒன்று. உங்கள் மூவருக்கும் முதற்கண் வணக்கங்களை உரித்தாக்குகிறேன்!
தமிழ்நாட்டில் இல்லாத இவனுக்கு, பொதுமடல் எழுத என்ன முகாந்திரம் இருக்கிறது என்று நீங்கள் வினவலாம். மேலை நாடுகளில், புலம் பெயர்ந்து வாழும் வாக்களர்களுக்குத் தரும் வாக்குரிமையைப் போன்று, இந்தியாவிலும் கொடுத்தால் என்னவென்று எந்த அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் யோசிக்கிறதோ, அதே அடிப்படையில் எழுதுவதுதான் இந்த மடல்.
இன்றைக்குத் தமிழ்நாட்டிலே, எந்த ஒரு தனிமனிதனும் தனது வசதிக்கேற்ப கட்சி துவங்கி, தேர்தலில் பங்கு பெறலாம் என்கிற நிலை கோலோச்சுகிறது. அதன் விளைவாய், தான் நடித்ததில் மூன்றாவது அல்லது நான்காவது திரைப்படம் வெற்றி பெறும் போதே, கட்சிக்கு பெயர் தேடும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரும் வழக்கம் வந்து விட்டதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாதி என்றால் மனம் கூச்சப்படுகிறதென்று, சமூகமாகிவிட்ட அந்த மக்கள்த் திரள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்சி. வசதி வாய்ப்பு வாய்க்கும்பட்சத்தில் இரண்டு அல்லது மூன்று கட்சிகள். இந்த மக்கள்த் திரள்களில் உள்ள மூத்தோர், இளையோரைக் கட்சி துவக்க வாய்ப்பளிக்க விடாமல் அவர்களே கட்சிகளைத் துவக்கி ஆக்கிரமித்துக் கொள்வதால், புது மக்கள்த் திரள்களை உருவாக்குவது எப்படி என்று தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஒருவர் முழு வீச்சில் புத்தகம் எழுதி வருவதாகவும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன.
நிலமை இவ்வாறிருக்க, தமிழகம் எங்கும் வியாபித்திருக்கிற மற்றும் வரப்போகிற எண்ணற்ற கட்சிகளால் மக்கள் சலிப்படைந்து வருவதையும் அறிய முடிகிறது. அதன் விளைவாய், அதிகப்படியான கட்சிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதகங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து பார்த்ததில், நமக்குத் தெரிந்தது கீழே வருமாறு:
1. சமூகப் பிரச்சினைகளுக்கு யாரை அணுகுவதென்றே தெரியவில்லை.
2. உணர்வுப் பூர்வமான பிரச்சினை என்றால், ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் அதைக் கையிலெடுத்துக் கொண்டு, ஊதிப் பெரிதாக்கிப் பெரிதாக்கி, இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களையே அழித்தொழிக்கிற அவலம்.
3. கட்சிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கும் போராட்டங்களினால், வெகுசன மக்களுக்கு பெருத்த கால விரயம் மற்றும் பணநட்டம்.
4. ஒற்றுமையாக இருக்க வேண்டிய சமூகம், பல பிரிவுகளாகப் பிரிந்து அல்லல்படுகிறார்கள்.
5. ஒவ்வொரு கட்சியும் தனக்கென காணொளி அலைகள் வைத்திருப்பதால், நம்பகமான செய்திகள் கிடைக்கப் பெறுவதில்லை. அதில் ஏற்படும் குழப்பத்தின் காரணமாய் பல சிக்கல்கள்.
6. கட்சியை மாற்றச் சொன்னார்கள். பிறகு பிடித்த நடிகனை மாற்றச் சொன்னார்கள். இப்போது இல்லாத சாதியையும் மாற்றச் சொல்கிறார்கள். மாநில எல்லையில் இருப்போரை, இனத்தையும் மாற்றச் சொல்கிறார்கள். இப்படி மாறி மாறி, மாறுவதே ஒரு கூடுதல் தொழிலாக ஆனதினால், பொது மக்களுக்கு கூடுதல் பணிச்சுமை.
7. எண்ணற்ற கட்சிகள் இருப்பதால், அரசியல் ரீதியாகக் கொள்கை கோட்பாடுகளுடன் இருந்த நீங்களும், பொறுப்பு(accountability)லிருந்து தப்பித்து உங்கள் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளையே காற்றில் பறக்கவிட்டு வருகிறீர்கள்.
இதைப் போல நிறைய பாதகமான அம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இருந்தாலும் உங்களுடைய நேரத்தை வீணடிக்க விரும்பாததால், நேரடியாக விசயத்துக்கு வருகிறோம். மக்களாட்சித் தத்துவத்தின்படியும், தனிமனித உரிமைகளின்படியும் நாம் எவரையும் கட்சி ஆரம்பிக்க வேண்டாமென்றோ, இருக்கும் கட்சியைக் கலைத்து விடும்படியோ வற்புறுத்த முடியாது, வற்புறுத்தவும் கூடாது. எனவேதான் உங்களுக்கு இந்த மடல்!
ஆமாம். நீங்கள் மூவரும் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஏற்கனவே, மத்திய நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்குவதில், அந்தந்த மாநிலங்களின் பங்களிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதில் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். பாராட்டுகள்!
அது போலவே, தேசியக் கட்சிகள் தவிர மற்ற சிறு சிறு கட்சிகளுடன் உடன்பாடு கொள்ளாமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என உங்கள் தலைமையிலான கட்சிகள் ஒருமித்த முடிவு மேற்கொள்ள வேண்டும். இதனால், சிறு அளவிலான கட்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும். மேற்கூறிய பாதகமான அம்சங்களும் ஒழிந்து போகும். செய்வீர்களா?
இல்லாவிடில், தமிழ்ச் சமுதாயம் மேலும் பிரிந்து பிரிந்து சிறு சிறு குழுக்களாக ஆவதில் இருந்து தப்பவே முடியாது. தமிழனைச் சீர்குலைத்த பழி பாவம் உங்களையே வந்தடையும். மாநிலந் தழுவிய ஆதரவு இல்லாத கட்சிகள், வெறும் துணைநிலை குழுக்களே!
அவர்களின் ஆதரவு தேவைப்படுமாயின், அவர்களுக்கு ஆதரவு உள்ள பகுதிகளின் உள்ளாட்சி அதிகாரங்களை அவர்களுக்கு அளிக்கலாம். அவர்களும் கைமாறாக, அவர்களது ஆதரவினை சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் உங்களுக்கு அளிக்கலாம்.
இதன் மூலம், அவர்களும் சமுதாயக் கடமை ஆற்றுவதில் பங்கு பெற முடியும். சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில், கணக்கு அடிப்படையிலான முடிவு அல்லாது, மக்களின் நேரிடையான முடிவு வெளிப்படும். உங்களுக்கும் களப்பணி ஆற்றுவது எளிமையாக இருக்கும். எனவே, இவ்விசயத்திலும் ஒன்றிணைந்து செயல்படுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்களுக்கு:
இந்த மடல் எழுதியவனுக்கும் உங்களுக்கும் உள்ள தோழமை அல்லது பகைமையக் கருத்தில் கொள்ளாது, சிறு சிறு கட்சிகள் நாட்டிற்கு இம்சை என்று கருதினால் தமிழ்மணப் பட்டையில் உள்ள மேல்நோக்கில் ஒப்பமுக்குங்கள்! சிறு கட்சிகளின் பங்களிப்பு தேர்தலில் தேவை எனக் கருதினால், கீழ்நோக்குப் பொத்தானில் ஒப்பமுக்குங்கள்!!
இதன் மூலம் வாசகர் கருத்து வலையுலகினருக்கும், மேற்கூறிய தலைவர்களுக்கும் தெரிய வருமன்றோ? ஆகவே கட்டாயமாக உங்கள் கருத்தை ஒப்பமுக்குவதின் வழியாகத் தெரிவித்துச் செல்லுங்கள்!