3/27/2009
மாப்பு மாடசிங்கமே, ஏன்டா உனக்கு இந்த காந்தல்?
அப்படித்தாங்க ஒரு நாள் இவன், நாங்க படிச்ச பாடத்துல இருந்து சில சொல்லுகளைச் சொல்லி, இதுகளுக்கெல்லாம் தமிழ்ல என்னன்னு கேட்டுப் பிராணனை வாங்கினான். இப்பவே, எனக்கு அறிவுங்றது நெம்பக் குறைச்சல். அப்ப, எம்புட்டு இருந்திருக்கும்ன்னு நீங்களே யூகம் பண்ணிகிடுங்க. சரி, இவனுக்கு இப்ப பதில் சொல்லிப் பழைய கடனைத் தீர்த்துகிடலாம் வாங்க!
தமிழ்லயும், 'இப்ரூ'வுலயுந்தான் எதையும் நுணுக்கமாச் சொல்ல முடியுன்னு ஆராய்ச்சி செய்து, பெரியவங்க சொல்லி இருக்காங்க. Tamil is the far most sensitive language in which one could express as it is! இந்த வாசகம் நான் சமீபத்துல படிச்சது. இது வெறும் ஏட்டளவுலதானே இருக்கு? கி.பி 1820ல அகில உலக தமிழர் மக்கள் தொகை, ஒரு கோடின்னும் அதே புத்தகத்துல சொல்லி இருக்காங்க. இன்னைக்கு ஒரு கோடி, ஆறு கோடிக்கு மேல ஆயிடுச்சி. இங்கதாங்க எனக்கு பெரிய வியப்பு?! 2000 ஆண்டுகளுக்கு முன்னாடி, தமிழர்களோட மக்கள் தொகை என்ன?? ஒரு சில இலட்சங்கள்தானா??
அந்த ஒரு சில இலட்சம் மக்களை வெச்சிட்டு, ஒரு மொழியை உண்டாக்கி, அதைப் பேணிப் பாதுகாத்தாங்களா? இல்லை, இடையில எதோ காரணங்களால மக்கள் தொகை அருகி, மறுபடியும் பெருகி இருக்கா?? இந்த மாதிரி நிறையக் கேள்விகள்! அலசிட்டு இருக்கேன். தெரிஞ்சவங்க சொல்லிட்டுப் போங்க.
அதைவிடுங்க, இந்த நூற்றாண்டுல தமிழ், தமிழ் வளர்ச்சின்னு சொல்லுறவங்க தமிழர்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் செஞ்சது என்ன? வீழ்ச்சிக்கு அடிகோலினது மற்றவங்களா? கிடையவே கிடையாது! தேர்தல் நேரம்!! இதுகளைப் பேசி பலன் ஒன்னுங் கிடையாது. வாங்க, நம்ம விபரத்துக்கு வருவோம்.
மாப்பு மாடசிங்கமே, நீர் கேட்டது spinning, rotating, revolving, whirl, curl இவைகளுக்கான தமிழ்ச் சொற்கள்தானே? இதோ, அதை விடவும் நுணுக்கமாய்!
ஆமாங்க, வட்டமாச் சுத்துறதுல என்ன நுணுக்கம் இருந்திட முடியும்? சுத்துது, சுழலுதுன்னு மேம்போக்காச் சொல்லிட்டிப் போறோம் நாம?! ஆனாப் பெரியவிங்க எப்படியெல்லாம் நுணுக்கமாச் சொல்லி இருக்காங்கன்னு அலசித் துவைச்சிக் காயப் போடலாம் வாங்க!
சுழல்தல்: எதோ ஒன்னு, ஒரு மையப் புள்ளியில நின்னுட்டு சுத்துறதுங்க (spin) இது. பூமி தன்னைத் தானே சுழலுது.
சுற்றுதல்: ஒரு மையப் புள்ளியில நிக்காம, எதோ ஒன்னைச் சுத்தி வர்றது சுற்றுதல்(rotate). பூமி, சூரியனை மையமா வெச்சி சுத்துது.
உருளுதல்: படுகிடையாப் படுத்துட்டு சுத்துறது, உருளுதல் (roll-in). கோவிலில் உருண்டு வலம் வந்தான்.
புரளுதல்: நெடுகிடையா விழுந்து சுத்துறது புரளுதல்(to tumble over). உயர வாக்குல சுத்துறது.
உழல்தல்: வட்டமாச் சுழலுலறதுல, ஒரு பகுதி மாத்திரம். வட்டப் பாதையில போவதும், வருவதும் உழல்தல்(oscillation), இதை ஊசல்ன்னும் சொல்லுறோம். இது நெடு(vertical movement)வாக்குல நடக்குற அசைவு. கடிகார ஊசல்.
உளர்தல்: சுழலும்போது, தொய்வடைஞ்சா மாதிரி, வலுவில்லாமச் சுழலுறது. உளர்ந்த பம்பரம் போலானான்(whiffle).
சுலவுதல்: எதோ ஒன்னைச் சுத்தி நெட்டுக்குத்தலா, வளைஞ்சி வளைஞ்சி சுத்துறது, coil around. தென்னையைச் சுலவிய கொடி.
சிலுப்புதல்: இதுவும் உழல்தல் மாதிரிதான், ஆனா படுகிடையா (horizontal) நடக்குற அசைவு. தலையைச் சிலுப்பினான்.
சுரிதல்: படுகிடையா, வளைஞ்சி வளைஞ்சி சுத்துறது (spiral around).
சுழங்குதல்: சுற்றிகிட்டே (toss) மேல கீழ அசையுறது. துடுப்பாட்ட மைதானத்தில், நாணயம் சுழங்க இரு அணித் தலைவர்களும் வெளிப்படுகிறார்கள்.
இந்த மாதிரி இன்னும் கொஞ்சம் சொற்கள், சூர்தல், சொரிதல், முறுகுதல், துடித்தல், விசிறுதல், அலமருதல், ஆவர்த்தித்தல்ன்னு இருக்குங்க. காந்தலான மாடசிங்கம், இதைப் படிச்சதும் சாந்தமாயிடுவான். ஆனா, இதுக்கு மேலயும் நீட்டி முழக்கினா, படிக்கிற நீங்க காந்தல் ஆயிடுவீங்க! அதான், இதோட முடிச்சிகிடுறேன்!! இஃகிஃகி!!!
3/24/2009
பள்ளயம் 03/27/2009
கொக்குச் சிக்கு
ரெட்டைச் சிலாக்கு
கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு
மூக்குச் சிலாந்தி
மூக்குச் சிலாந்தி
நாக்குல வரணும்
நாக்குல வரணும்
ஐயப்பஞ் சோலை
ஐயப்பஞ் சோலை
ஆறுமுக தாளம்
ஆறுமுக தாளம்
ஏழுக்குக் கூழு
ஏழுக்குக் கூழு
எட்டுக்கு முட்டி
எட்டுக்கு முட்டி
ஒம்பது கம்பளம்
ஒம்பது கம்பளம்
பத்துக்கு பழுப்பேன்
பத்துக்கு பழமடி
கொக்குச் சிக்கு
கொக்குச் சிக்கு
ஈரிரிண்டைப் போடடா
இறுக்க மாட்டைக் காட்டடா
பருத்திக் கொட்டை வையடா
முக்கட்டு வாணியன் செக்கடா
செக்கும் செக்கும் சேந்தாட
வாணியன் வந்து வழக்காட
வாணிச்சி வந்து கூத்தாட
நாலை வச்சி நாலு எடு
நாரயணன் பேரெடு
பேரெடுத்தபின்ன பிச்சையெடு
அஞ்சுவரளி பசு மஞ்சள்
அரைக்க அரைக்கப் பத்தாது
பத்தாதமஞ்சள் பசு மஞ்சள்
ஆக்குருத்தலம் குருத்தலம்
அடுப்புத்தண்டலம் தண்டலம்
வேம்பு சுட்டா வெங்கலம்
ஏழுபுத்திரச் சகாயம்
எங்கபுத்திரச் சகாயம்
மாட்டுப்புத்திரச் சகாயம்
எட்டும் பொட்டும்
எடக்கண்ணு பொட்டை
வலக்கண்ணு சப்பட்டை
ஒம்போதுநரி சித்திரத்தை
பேரன் பொறந்தது பெரியகதை
பெதப்பம்பட்டிப் பெரியத்தை
பத்துரா சித்திரா கோலாட்டம்
பங்குனி மாசங் கொண்டாட்டம்
ஆடி வெள்ளி வந்துச்சுன்னா
அம்மனுக்கல்ல கொண்டாட்டம்.
இப்படியாக ஆறு திருடர்கள் வாதித்துக் கொண்டிருக்கையில், ஒரு முத்து மீந்தது. ஏழாவது திருடனுக்கும் சேர்த்து ஏழு பங்கிடச் சரியாயிருந்தன அந்த முடிப்பிலிருந்த முத்துகள். அப்படியானால், இருந்த முத்துகள் எத்தனை?
3/23/2009
முதல்தாரம், ரெண்டாந்தாரம் ஆன கதை!
அவனும், நானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்துலதான் Toronto வந்து, படிக்கிறோம் பேர்வழின்னு அங்க குப்பை கொட்டிட்டு இருந்தோம். அப்பவே, அவனோட பேச்சு வழக்கு மாறினா மாதிரி இருந்துச்சி. படிப்பு முடிஞ்சதும் அவனுக்கு கல்யாணம் ஆச்சுது. அந்த அம்மணியும் அவனும் மருந்துக்கு கூட தமிழ்ல பேசுறது கிடையாது. அவரு, எங்கூடப் பேசும்போதும் அப்படியே அள்ளி விடுவாரு. அப்பப்ப வாங்கிக் கட்டிக்கவும் செய்வாரு.
அப்படித்தானுங்க, ஒரு நாள் Hello'க்குத் தமிழ்ல என்னன்னு கேட்டு ஒரே கிண்டல்! நாம தகவலைச் சொன்னவுடனே, ’Ta-Ta க்குத் தமிழ்ல என்ன?’ங்குறான். ’Good-Bye க்குத் தமிழ்ல என்ன?’ங்குறான். நான் திருப்பிக் கேட்டேன், ‘திண்ணைக்கு ஆங்கிலத்துல என்ன?’ன்னு. அவ்வளவுதேன், கவுந்துட்டான்!!
இந்த மாதிரி ஆட்களுக்குங்க தமிழைக் கண்டா ஒரு இளக்காரம். மஞ்சள்க் காமாலை வந்தவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்ன்னு ஊர்வழில சொல்வாங்க. அந்த மாதிரி, தமிழ்ல எதையும் கேலியாத்தான் பாப்பாங்க இவங்க. தாய்மொழி முதல்தாரம். அடுத்தடுத்து கால நேர சூழ்நிலைக்களுக்கு ஏத்தமாதிரி மத்ததுகளும் அமைஞ்சு போகுது. ஒன்னு, முதல் தாரத்துக்கு ஏத்த மரியாதை குடு. இல்லையா, எல்லார்த்துக்கும் தனி இடத்தைக் குடுத்துட்டுப் போ. அதெப்படி, அவங்களுக்கு முதல்குடி மனசளவுல ரெண்டாந்தாரமாவும், ரெண்டாந்தாரம் ஒசத்தியாவும் ஆகுதுன்னுதான் புரியலை?!
உண்மை நிலவரம் என்னன்னா, ஆங்கிலமொழி பேசுற, 90% வெள்ளைச் சாமிகளுக்கே Tah-Tah, Good-Bye இதுகளுக்கான வெவரந் தெரியாது. இந்தப் பொழப்புல இவனுங்க அலம்பல் வேற? உண்மையாலுமே, தமிழ்ல அர்த்தம் கேக்குறத நாம பாராட்டுறோம். இப்படி வெறுப்பேத்தறதுக்குன்னே கேட்டா, நாமளும் கேப்பமில்ல?
அவங்கதைய விடுங்க, இப்ப நாம வெவரத்துக்கு வருவோம். 'God be with you'ங்றதுதான், 16ஆம் நூற்றாண்டுல இருந்து, படிப்படியா படிப்படியாத் திரிபடைஞ்சு, கடைசில Good Bye ன்னு ஆச்சுதுங்களாம். இது இப்படி இருக்க, ஆங்கிலம் பேசுற வேறொரு வட்டாரத்துல, கடவுள் உன்னோடு இருப்பார் அன்பேங்ற அர்த்தத்துல, tara chuckன்னு சொல்ல ஆரம்பிச்சு, சுருக்கமா taraன்னும் சொல்ல ஆரம்பிச்சாங்களாம். நாளடைவில அதுவும் திரிபடைஞ்சு ta-ta ஆயிடுச்சுங்களாம்.
இந்த பின்னணியில ta-taக்கு தமிழாக்கம், ’ஆண்டவன் ஆசியுறுக’ங்ற பொருள்ல ’ஆஆ’ன்னு வெச்சிக்கலாம்ன்னு நான் சொன்னா, நீங்க ஏத்துகிடவா போறீங்க?! ’Ta Ta’தான் சொல்லியாகணுமா? எதோ ஒன்னு நீங்க சொல்லிகிங்க. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், இனிப் போய் பொழப்பு கிழப்பைப் பாக்கலாம்! இஃகிஃகி!!
3/22/2009
பதிவுலக வாசகர்களுக்கு சூடான கேள்வி!
திரட்டிகளிலே வாசகர் பரிந்துரையை ஏற்கும்படியாக, அதற்கான வசதிகளை அளித்து இருக்கிறார்கள். அது குறித்து சிந்திக்க முற்பட்டதின் விளைவே இவ்விடுகையின் ஆக்கம். சிந்தனையில், எம்முள் தோன்றியவற்றை இனிக் காண்போம், வாருங்கள்!
- பதிவுக்கு வரும் வாசகர்கள் இடுகையினை வாசித்த பின்னர், யாதொரு வாக்கும் அளிக்காமல் செல்லும் பட்சத்தில், அது குறித்த விமர்சனத்திற்கு இடமெதுவும் இல்லை.
- வாக்களித்துச் சென்றவர்கள், நன்றிக்கு ஆட்பட்டவர்கள். விமர்சனத்திற்கு இடமில்லை!
- இடுகையினை இட்ட பதிவருக்கு அபிமானத்தைத் தெரிவிக்கும் பொருட்டும், அளவளாவும் பொருட்டும் பின்னூட்டம் இட்டுவிட்டு, வாக்களிக்காமல் விடுகிற பட்சத்திலும், அதனை விமர்சனம் செய்வதற்கு எதுவுமில்லை.
- ’சூப்பர், கலக்கல், நச்னு இருக்கு, அருமை, அள்ளுது, பயனுள்ளதா இருக்கு’, இந்த ரீதியில் பின்னூட்டம் இட்டுவிட்டு வாக்களிக்காமல் செல்வோருக்கு இரு வேறு காரணங்கள் இருக்க முடியும் என நினைக்கிறேன். இரண்டுமே விமர்சனத்திற்கு ஆட்பட்டவை என்பது இந்த சாமன்யனின் எண்ணம்.
- இடுகையினை உள்ளபடியாகவே இரசித்து, பாராட்டும் விதமாக பின்னூட்டம் இட்டுவிட்டு, வாக்களிக்க வேண்டும் என்கிறதில் சிரத்தை இல்லாமல் போதல். சிரத்தையுடன் நேரம் செலவு செய்து ஊக்குவிக்கும் இந்த வாசகர், மற்ற வாசகர்களுக்கும் இப்பதிவைச் சுட்டிக் காட்டுவதில் ஏனிந்தப் பாராமுகம்? வாக்களியுங்கள் வாசகர்களே!
- பதிந்த பதிவரின் அபிமானத்தைப் பெறும் முனைப்பில், இடுகை பாராட்டுக்கு தகுதி இல்லாதிருந்தும் பாராட்டிவிட்டு, தெரிந்தே வாக்களிக்காமல் செல்வது. தகுதியில்லாத இடுகைக்கு பாராட்டுவது தேவையா? அல்லது, வாக்களித்து மேலும் அதிகப்படியான அபிமானத்தைப் பெறுவதில் என்ன சிரமம்?? ஒன்று போலியாகப் பாராட்டுவதைத் தவிர்க்கலாம். அல்லது வாக்களித்து, இட்ட பின்னூட்டத்திற்கு வலுச் சேர்க்கலாம். அப்படி இல்லாத பட்சத்தில், இட்ட பின்னூட்டம் போலியானதுதானே?
வாக்களிக்க நினைவூட்டுவதை இகழ்வாகக் கருதி விமர்சனம் செய்ததின் பொருட்டு, அப்படிக் கோருவதை பல பதிவர்கள் அறவே கைவிட்டு விட்டார்கள். அவர்களுள் அடியேனும் ஒருவன். அந்த ஒரு தகுதியின் பொருட்டாகவே, இவ்விடுகையினை இடுகிறேன் வாசகர்களே!
’நீயெல்லாம் பதிவிடவில்லை என்று யார் அழுதார்கள்?’ என்று வினவும் வாசகரா நீங்கள்? இப்பதிவைப் படிக்க வந்த உங்களைப் போன்றோருக்கும், இன்ன பிற வாசகர்களுக்காவும்தான் பதிவிடுகிறோம் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள் நண்பா!
ஞாயிறு போற்றுதல்!
உஷா கணவன் சொல்லுவதை நம்பினாலும் பணி இடம் சென்றால் அந்த சந்தேகம் வலுத்து கொண்டே வந்தது. அது உண்மையே என்றும் சொல்லத் தொடங்கினாள். "அவர்கள் அடிககடி "Quit" என்று சொல்லி என்னை வேலை விட்டு போக சொல்லுகிறார்கள்" என்றும் சொன்னாள். ஜெயராமன், "அப்படி நீ நினைத்தால் மேலாளரிடம் புகார் செய்யலாமே" எனச் சொல்ல, "அவரிடம் சொல்ல எனக்கு பயமாக இருக்கிறது", என்றாள் இவள்.
உஷா தொடந்து பணிக்கு போய்க் கொண்டுதான் இருந்தாள். ஆனால், ஒரு நாள் விடிகாலை எழுந்ததும், "உங்களுக்கு தெரியுமா? GE நிறுவனத்தில் ஆயுதங்கள் செய்கிறார்கள். சதாம் உசேன் அமெரிக்கருக்கு எதிராக சதி செய்கிறான், எங்கள் நிறுவனத்தில் திரைச்சீலை தொங்கவிடும் குழாய்களில் ஆயுதங்களை ஒளித்து வைக்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது. நாம் இந்தியாவுக்கே திரும்பிப் போய்விடலாம்", என்று தொடர்பு இல்லாதவற்றை சொல்லத் தொடங்கினாள். ஜெயராமன் அதிர்ந்து போனான்.
தன் மனைவிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு விட்டது உறுதியாகிவிட்டது. எனவே, "சரி நாம் ஊருக்கு போயிடலாம். நீ இனிமேல் வேலைக்கு போகவேண்டாம். வீட்டிலேயே இரு. நாம் மருத்துவரை போய் பார்க்கலாம், உனக்கு உடம்புக்கு சரியில்லாமல் இருக்கலாம்." என்றான். உஷாவும் அன்று முதல் பணிக்குப் போகவில்லை. "எனக்கு அந்த அமெரிக்க டாக்டர் வேண்டாம். இந்திய பெண் டாக்டர்கிட்டதான் போவேன்" என்றாள்.
அடுத்த நாள் ஒரு இந்திய பெண் மருத்துவரிடம் அழைத்து சென்றான். அவரோ எல்லாவற்றையும் கேட்டு விட்டு, " நம் நாட்டில் இருந்து வந்த பலர் இந்த மாதிரி ஆகி இருக்கிறார்கள். இது பண்பாட்டு வேறுபாட்டால் வருவதுதான். நான் ’புரொசாக்’ என்ற மருந்து கொடுக்கிறேன். அதை சாப்பிட்டால் உடம்பில் உற்சாகம் இருக்கும், ஆனால் தொடர்ந்து பல நாள் சாப்பிட வேண்டும் " என்றார்.
ஜெயராமன் அவர் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்கி உஷாவுக்கு தினமும் சாப்பிட கொடுத்தான், இந்த காலத்தில் உஷா அதிகமாக யாருடனும் பேசுவது இல்லை. ஏதோ சிந்தனையில் இருப்பவள் போல் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளிப்பாள். ஜெயராமனோ தன் மனைவிக்கு நேர்ந்ததை நினைத்து மிக கவலையுற்றான். இந்த அயல் நாட்டில் எத்தனை நாட்களுக்கு இந்த மாதிரி மனநிலமையில் இவள் இருப்பாளோ? எப்படி இவளை குணப்படுத்துவது?
அந்த குளிர்காலம் முழுமையும் உஷாவின் மனநிலமை ’புரோசாக்'கின் தயவால் கட்டுக்குள் இருந்தது. ஒரு அடக்கமான பெண்ணைப் போல் யாருடனும் அதிகம் பேசாமல் தான் உண்டு தன் வீட்டுப்பணி உண்டு என்று இருந்தாள். குளிர்காலம் முடிந்து இளவேனில் தொடக்கத்தில் ஒருநாள் ஜெயராமன் அலுவலகத்தில் அன்றைய நாளிதழை புரட்டி கொண்டு இருந்தான். அதில் நலவாழ்வு பற்றிய பகுதியில் கண்ட ஒரு கட்டுரை அவனை ஆர்வமுடன் வாசிக்க செய்தது.
அந்த கட்டுரையின் சுருக்கம் இதுதான். "சூரிய ஒளிக்கும் மனித மூளைக்கும் உள்ள தொடர்பு இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை. ஆனால் சூரிய ஒளிக்கும் மனநிலைக்கும் தொடர்பு உள்ளது என ஆய்வாளர்கள் கண்டுள்ளனர். குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் பல மக்களின் மன நிலை பாதிக்கப்பட்டு ஒரு மனநிலை சுணக்கம் (depression) உண்டாகிறது. கோடையில் அது நீங்கி புத்துணர்வு பெறுகிறார்கள்"
அடுத்த குளிர் காலத்தில் உஷாவின் மனநிலை எப்படி இருக்குமோ என ஜெயராமன் தயங்கிக் கொண்டுதான் இருந்தான். அதே நேரத்தில் வீட்டுக்குள் சன்னல்கள் வழியே சூரிய வெளிச்சம் நன்கு பாயும் வண்ணம் பார்த்துக் கொண்டான். உஷாவும் தன் சூரிய வழிபாட்டை தொடர்ந்தாள்.
அவன் அஞ்சியதற்கு மாறாகவே உஷாவுக்கு மனநிலை சுணக்கம் என்பது ஒரு முடிந்து போன பழம்கதை ஆகிவிட்டது. அவளும் வழக்கம் போல கலகலப்பான ஒரு இல்லத்தரசியாக மிளிர்ந்தாள்..
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
3/21/2009
வட்டத்திற்குள் பெண்!
=============================================
பெண்ணுக்கு மதிப்பளித்துப் பார்!
3/20/2009
சக்களத்தியும், காவாலிப் பயலும்!!
உடனே முன்னாடி வரிசை நல்ல பசங்கள்ல ஒருத்தன் எழுந்து, ’ஐயா, கொல்வது, அடிப்பது எல்லாம் கெட்டதுதானே?’ன்னான்.
அவரு, ’நல்ல கேள்வி! பின்னாடி வரிசைத் தண்டங்களுக்குக் கேள்வி கேட்கணும்ங்ற எண்ணம் எப்பவுமே வராதா?’ன்னு என்னைப் பாத்து கரிச்சுக் கொட்டிட்டு, சொல்ல ஆரம்பிச்சாரு, ‘எந்த வினை(காரியம்)யும் நடக்குற இடம், பொருள் ஏவலைப் பொறுத்துத்தான் நல்லதாவோ, கெட்டதாவோ இருக்கும். காரியம் மாத்திரமே கெட்டதாகவும் முடியாது, நல்லதாகவும் முடியாது! அந்த வகையில தீயவனைக் கொலவது நல்லது. சாமான்யனைக் கொல்வது கெட்டது!’ன்னாரு.
அதைக் கேட்ட நான், இவருக்கு நல்லா முத்திடுச்சி போல இருக்குன்னும், என்னை மக்குன்னு திட்டிட்டாரேன்னும் நினைச்சிட்டே எந்திரிச்சி, ‘ஐயா, அது எந்த இடம், பொருள், ஏவலா வேணாலும் இருக்கட்டும், கற்பழிப்புங்றது எப்படி ந்ல்லதாகும்?’ன்னு போட்டுத் தாக்கினேன். கூடக் கடைசி வரிசையில இருந்த என்னோட சிநேகிதனுக எல்லாம், பெருமிதத்தோட நிமிர்ந்து உக்காந்தாங்க.
சாவகாசமா எங்கபக்கம் திரும்பின அவரு, ‘உங்களை மாதிரித்தானடா இருக்கும், உங்க புத்தியும்?! டேய், கற்பழித்தல்ங்றது ஒரு அடிப்படைக் காரியம் கிடையாதுடா. இசைவின்றிப் புணர்தல்ங்றதனோட மறுசொல்தான் இது. இசைவின்றிங்ற இடம் பொருள் ஏவல் அதுல தொக்கி நிக்கிறதால, அது கெடுதல். இல்லாட்டா, அது நல்லது!’ன்னு விளக்கம் சொன்னாரு. அவர் அப்ப சொன்னது, இப்பதாங்க எனக்கு சரியாப்படுது. இஃகிஃகி!!
எதுக்கு இந்த நிகழ்வைச் சொல்லுறேன்னா, நிறையப் பேர் வலைப்பூ நடத்துவதும், வாசிப்பதும், கெடுதல் அல்லது நல்லதுன்னு விவாதம் செய்யுறாங்க. எங்க ஆசிரியர் சொன்னா மாதிரி, இடம் பொருள் ஏவலைப் பொறுத்ததுதான் இதுவும். நம்ம பக்கத்தோட வாசகர், அபிமானி தம்பி ஸ்ரீராம் வழக்கொழிந்த தமிழ்ச் சொற்கள்ன்னு ஒரு வலைத் தொடர் ஆரம்பிச்சி, நூறு பதிவுகளுக்கு மேல, இப்ப அந்தத் தொடர்ல இடம் புடிச்சி இருக்கு. கிட்டத்தட்ட மூனு மணி நேரம் இந்த வாரத்துல அதுகளைப் படிக்கிறதுல நேரம் செலவழிச்சதுல, நிறையத் தெரிஞ்சிக்க முடிஞ்சது. அவருக்கும், தொடர்ல கலந்துகிட்ட எல்லாருக்கும் நன்றி சொல்லியாகணும். இஃகிஃகி!!
நல்லது கெட்டது பாத்தம்ல? தலைப்புல இருக்குற சொற்கள் நல்லதா? கெட்டதா?? இஃகிஃகி! ‘டேய், அது இடம் பொருள் ஏவலைப் பொறுத்தது’ன்னு நீங்க சொல்லுறது கேக்குது, கேக்குது... சரி அப்ப, அதுகளோட அர்த்தத்தை அலசித் துவச்சிக் காயப் போடலாம் வாங்க.
மனையில் துணைவியாக வாழுறவ மனைவி! அதையே வீட்டுக்காரின்னும் சொல்லுறோம். வாழ்க்கைங்ற களத்துல துணையா இருக்குற அதே மகராசியக் களத்தின்னும் சொல்லுறது. களத்திரம்ன்னும் சொல்லுறாங்க. சக பதிவர்ங்ற மாதிரி, சக மனைவி, இஃகிஃகி, மனைவி மாதிரி, களத்தி மாதிரி இருக்குறவ சக களத்தி, அதாங்க சக்களத்தி! சக களத்தி இருக்குறது நல்லதா, கெட்டதா இராசா? உங்க இடம் பொருள் ஏவல் என்னா சொல்லுது?? மனைவியே இல்லையா உங்களுக்கு? உங்களுக்கும் நல்ல காலம் பொறக்கும் இராசா, கவலைய விடுங்க!
காவாலின்னா இளமை! இளங்கன்று பயமறியாதுங்ற மாதிரி, இள வயசுல இருக்குறவங்க விடலையா இருப்பாங்கன்னு ஒரு மனநிலை. அந்த இடம் பொருள் ஏவல்ல, ஊர்வழில சொல்லுறது, ’காவாலிக எல்லாம் கோயில்த் திண்ணையில இருப்பாங்க! அவன் ஒரு காவாலி!’, இப்படி பல வாக்குல காவலியப் பேசுறதுங்க.
3/19/2009
'தொடர்பதிவு' என்று எழுதும் பதிவர்களே!
- ஒரு பதிவர், ஒரு தலைப்பின் பேரில் தொடர்ந்து எழுதுவது தொடர் இடுகை!
- ஒருத்தர், இனியொருத்தருக்கு கோர்த்துவுடுற இடுகை சங்கிலித் தொடர் இடுகை!!
- ஒருத்தர், ஒன்றுக்கு மேற்பட்டவிங்களுக்கு கோர்த்துவுட்டா, அது வலைத் தொடர் இடுகை!! அதாவது, வலையில ஒரு கண்ல இருந்து, பல கண்களுக்கு கோர்த்து வுடுறா மாதிரி!!!
ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்!
3/17/2009
பள்ளயம் 03/17/2009
அமெரிக்காவில்:
பள்ளயத்துல ஒரு படைப்பு அமெரிக்காவைப் பத்தினதா எழுதுறது வழக்கம்! அதான், இன்னைக்கும்!! இஃகிஃகி!!! விசயம் என்னன்னா, சில மாகாண அரசுகள்கிட்ட போதுமான நிதி இருப்பு இல்லீங்களாம். ஆக, வருமான வரிப் பிடித்தத்துல இருந்து வர வேண்டி திரும்பு தொகை இப்போதைக்கு வராதாமுங்க. எப்ப வருமோ, என்னவோ போங்க?!
அசைவுகள்
தமிழ் தொனமையான மொழி, செம்மொழி! அதனால, எந்த ஒரு செய்கை, உணர்வு, எதுவானாலும் பிறழ்வும் திரிபும் ஐயமும் குழப்பமும் இல்லாம அப்படியே கொண்டு போய்ச் சேர்க்க வல்லதுங்றது நமக்கெல்லாம் நிறைய நேரங்கள்ல தெரியறது இல்ல. இந்த நிலைமை வந்ததுக்கான காரணங்களை அலசுறதுல, நமக்கொன்னும் கிடைக்கப் போறது கிடையாது! இஃகிஃகி!! அதை விடுங்க, இந்த அசைவுகளை எப்படியெல்லாம் தமிழ் சொல்லுதுன்னு பாக்கலாம் வாங்க.
மேலுக்கும் கீழுக்கும்(vertical) ஏற்படுற அசைவு குலுங்கல். அதையே நாம, "டேய், ஒரு குலுக்கு குலுக்குடா"ன்னும் சொல்லுறோம். இங்கயும் அங்கயும் (horizontal)அசையுறதச் சொல்லுறது அலுங்கல். ஊர் வழில சொல்லக் கேட்டு இருப்பீங்க, "டேய், அலுங்காமக் குலுங்காமக் கொண்டு வரணும்"ன்னு. வளைஞ்சு வளைஞ்சு(circular) அசையுறத சொல்லுறோம், கலங்கல்ன்னு. சாஞ்ச வாக்குல(slant) அசையுறதச் சொல்லுறது மலங்கல்ன்னு. சோள மூட்டை மலங்கிடுச்சுங்றோம். ஒட்டு மொத்தமா நாலாபுறமும் உள்நோக்கி அசைஞ்சி, கசங்கிப் போறதைச் (crush) சொல்லுறது, நலங்கல்ன்னு. அதையே நலுங்குதல்ன்னும் சொல்லுறது. மேற்புறமா நடக்குற அசைவுக்கு சொல்லுறது துலங்கல். அப்படி நடக்குறதால ஏற்படுற அந்த மினுமினுப்பைப் பாத்து சொல்லுறது, ”டேய், புளி போட்டுத் தேச்சதுல சால் நல்லாத் துலங்கிடுச்சு”ன்னு. இப்படி நிறைய அசைவுகள் இருக்கு, அதை இனியொரு நாளைக்குப் பாக்கலாமே? இஃகிஃகி!!
(நன்றி: சித்தகிரி கண்காட்சி)
மேல இருக்குற படத்துல இருக்குற பெரியவர், சாணை பிடிச்சிட்டு இருக்காரு. அந்த சாணைச் சக்கரத்தைப் பத்தி நிறைய எழுத வேண்டி இருக்கு. அதையும் இனியொரு நாளைக்கு வெச்சிகிடலாமுங்க. வெளியூர்ல இருக்கோம், கால அவகாசம் இல்லை, அதான்! இஃகிஃகி!!
நெல்-எள் கணக்கு
கணக்கு குடுத்தா, நாளமேல் உங்கபக்கமே வரமாட்டோம்ன்னு சொல்லுறாங்க. குடுக்காட்டி, என்ன இன்னைக்கு கணக்கு எதுவும் இல்லையான்னு கேக்குறாங்க? அதான், இந்தப் பதிவுல ஒரு சின்னக் கணக்கு. இஃகிஃகி!!
எள்ளத்தனையாழம் வெட்டினவனுக்கு நெல் அளமானால், ஒரு ஆள்பிரமாணம் வெட்டினவனுக்கு எத்தனை நெல்?
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
சாண் 8 கொண்டது ஆள் பிரமாணமென்றறிந்து, எள்ளத்தனையாழம் வெட்டினவனுக்கு நெல்லு அ(8). ஆக, மனிதர்மட்டமாவது எண்சாணுயரம். இதை வைத்து 8 சாண் உயர் மனிதனுக்கு எவ்வளவு நெல் என்று கணக்கிடுங்களேன்.இஃகிஃகி!!
எதற்கும் நல்லது கெட்டது கிடையாது!
3/15/2009
வந்து அழுதுட்டுப் போங்க மக்கா!!
சிரிப்பு, விழிப்புல என்னென்ன வகையிருக்குன்னு விலேவாரியாப் பார்த்தாச்சு. நீங்க இன்னும் அதைப் படிக்கலையின்னா, ஒரு எட்டுப் போயி படிச்சுட்டு வாங்க. இப்ப, அழுகையப் பத்தி பாக்கலாம் வாங்க.
ஊமைக் கண்ணீர்: அழுகையின்னா, கண்ணுல தண்ணி வரும். கண்ணுல தண்ணி வராமலேக் கூட சில பல நேரங்கள்ல நாம அழுவோம். அது ஊமைக் கண்ணீர். ஊமைக் கண்ணீர் வடித்தான்னு சொன்னா, மனதளவுல அழுகிறான்னு நாம பொருள் கொள்ளலாம்.
அழைக் கண்ணீர்: பொதுவா, விருது வழங்குற இடங்கள்லயும், பொதுவான இடங்கள்லயும் பெருமைப் படுத்தும் போது, கண்களோட வால்ப் பகுதியில ஒரு சில திவலைகள் வெளிப்படும். அதைச் சொல்லுறது அழைக் கண்ணீர்.
இகுத்தல் கண்ணீர்: அவ்வளவு துயரமான ஒன்னாவே அது இருக்காது. ஆனாலும் மனசை வலிய வலிய உணர்வுக்கு உட்படுத்தி கண்ணீரைச் சொரியுறது, இகுத்தல்க் கண்ணீர். இந்த நீலிக் கண்ணீர், முதலைக் கண்ணீரெல்லாம் இந்த வகையச் சேர்ந்ததுங்க.
உகுத்தல் கண்ணீர்: விமான நிலையத்துக்கு அவசர கதியில போறோம். அவங்க, நீங்க ரெண்டு மணித் துளிகள் தாமதம், இனி உங்களுக்கு காலையிலதான் அடுத்த விமானம்னு சொல்லும் போது, ஏன் இன்னும் விமானம் கிளம்பலைதானே? ஏன் நான் உள்ள போகக் கூடாதுன்னு வாதாடிட்டு இருக்கும் போது கண்ணீரும் வடியுது. சோகம், துயரம் இல்ல, இருந்தாலும் கண்ணீர்... இதுதாங்க உகுத்தல்க் கண்ணீர்.
உவகைக் கண்ணீர்: அளவு கடந்த மகிழ்ச்சியில, முழு கதியில வடிக்கிற கண்ணீர். ஆனந்தக் கண்ணீர்ன்னும் சொல்லலாம். சிரிக்கும் போதும் இது வெளிப்படும்.
கலுழிக் கண்ணீர்: ஒரு விதமான கலக்கம், உங்க வீட்டை இடிக்கப் போறாங்கன்னு ஒரு செய்தி. அது உண்மையான்னு கூடத் தெரியலை. அங்கயும் இங்கயும் போறீங்க, வர்றீங்க. எதேச்சையாப் பாத்தா, ஒன்னு ரெண்டு விரல் ஈரமா இருக்கு. அப்புறமாத்தான் தெரியுது, அது கண்ணீர்ன்னு. இதாங்க கலுழிக் கண்ணீர்.
சிந்து கண்ணீர்: தீராத சோகம், துயரம், பேரிழப்பு இந்த மாதிரியான சூழ்நிலையில மூக்கிலயும், கண்ணுலயுமா சிந்துறதுதாங்க, சிந்து கண்ணீர். நாட்கணக்குல கூட ஓடுமாமுங்க. இந்த சூழ்நிலையில யாராவது இருந்தா, அடிக்கடி தண்ணி குடுங்க அவங்களுக்கு. இல்லையின்னா, அவங்க உயிருக்கே கூட ஆபத்து வரலாம்.
நயனவாரிக் கண்ணீர்: இது கண்னுல இருக்குற கோளாறுனால வர்ற கண்ணீர். அவங்களுக்கே தெரியாம, அது தொடர்ந்து வந்திட்டு இருக்கும்.
புலம்பல் கண்ணீர்: இது உங்களுக்கு சுலுவுல தெரியும். அது நடந்து போச்சே, இது நடந்து போச்சேன்னு எப்பப் பார்த்தாலும் அழுவாங்க. இந்த மனநிலையில இருக்குறவங்க கூடக் குடித்தனம் நடத்துறவங்க கதி, அதோ கதிதான் பாவம்! எதோ ஒரு சூழ்நிலையில புலம்பற புலம்பலும் இருக்கு. புலம்பல்க் கண்ணீர்ன்னாப் பொதுவா, சொல்லி சொல்லி அழுகுறதுங்க.
வடு கண்ணீர்: ஏதாவது வலி வர்றப்ப அழுகுறப்ப வர்ற கண்ணீர். மனசுல சோகம், துயரம் இருக்காது. ஆனா, வலியைப் பொறுக்க முடியாம வர்ற கண்ணீர்.
இரங்கல் கண்ணீர்: மெல்லிய ஒலியோட, மூக்குறிஞ்சுற சத்தம் கேட்கும். கண்ல இருந்து பெருசா தண்ணீர் வரக் காணோம், ஆனாக் கலங்கி நிக்குது. அதாங்க இரங்கல்க் கண்ணீர்.
இராவணக் கண்ணீர்: உகுத்தலும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்னுதான். ஆனா, இதுல கொஞ்சம் அரட்டல் அதிகமா இருக்கும். ஒரே இரைச்சலும், கூச்சலுமுமா, வெறித்தனமாக் கத்திட்டே அழுகுறது. சிங்கப்பூர்ல Jalan Bezarங்ற இடத்துல, ஒரு பெண்மணியோட வாடிக்கையாளரை இன்னொருத்தி கூட்டிட்டுப் போய்ட்டான்னு சொல்லி அந்தப் பெண்மணி போட்ட ஆர்ப்பாட்டமும் அழுகையும் இருக்கு பாருங்க, அதாங்க இராவணக் கண்ணீர். அந்த இடத்துல உமக்கு என்ன வேலைன்னு எல்லாம் கேக்கப் படாது மக்கா!
இரியல் கண்ணீர்: நல்லாப் பேசிட்டு இருப்பாங்க. திடீர்னு பாத்தா, அழுவாங்க. என்னன்னு கேட்டா, அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் ரெண்டு நாள் நீங்க கூட இருக்க மாட்டீங்கன்னு சொன்னீங்கல்ல, அதான்னுவாங்க. இப்படி வர்ற திடீர்க் கண்ணீர்தாங்க இரியல்க் கண்ணீர்.
ஊளைக் கண்ணீர்: இதை பிடிவாதக் கண்ணீர்ன்னும் சொல்லலாம். கேட்டதைக் குடுக்கலைன்னாலோ, அல்லது அவங்க மனசைக் காயப்படுத்திட்டாலோ ஓன்னு ஊளையிட்டு அழும்போது வர்ற கண்ணீர்.
ஏங்கல் கண்ணீர்: மனசு எதுக்காவது ஏங்கும் போது வர்ற கண்ணீர். இழுத்து இழுத்து அழும்போது வர்ற கண்ணீர்.
கலங்கல் கண்ணீர்: ஒரு விதமான பயத்துல அழறது. வீல்ன்னு கத்தும் போது வர்ற கண்ணீர். மருட்கைக் கண்ணீர்ன்னும் சொல்லலாம் இதை.
சிணுங்கல் கண்ணீர்: இரங்கல்க் கண்ணீர்ல மூக்கும், கண்ணும் சேந்து அழும். இந்த சிணுங்கல்க் கண்ணீர்ல மூக்கு மாத்திரம் அழும். கண்ல சில நீர்த் திவலைகள் மாத்திரமே கட்டும். ஆனாக், கண்ணை மூடி மூடித் திறப்பாங்க.
நரிமிரட்டல் கண்ணீர்: தூக்கத்துல குழந்தைகள் சிரிச்சாலோ, அழுதாலோ வர்ற கண்ணீர் நரிமிரட்டல்க் கண்ணீர்.
ரோதனைக் கண்ணீர்: ஒருத்தர் உங்களைப் படுத்திகினே இருக்கார். அப்ப அவங்களோட தொந்தரவு தாங்கமாட்டாம அழறது ரோதனைக் கண்ணீர்.
விலாபக் கண்ணீர்: பெரியவங்க தூக்கத்துல அழும்போது வர்றது விலாபக் கண்ணீர்.
சரிங்க, கண்ணீர் வடிச்சது போதும்! இப்ப, விசயத்துக்கு வரலாம். இஃகிஃகி! Helloக்குத் தமிழ்ல என்ன? ஆங்கிலத்துல இந்த சொல் வந்ததுக்கு ஏகப்பட்ட காரணம் சொல்லுறாங்க. அதை இந்த சுட்டியில போயித் தெரிஞ்சிகிடுங்க. ஆனா, தமிழ்ல இதுக்கு இணையான சொல் சங்ககாலத்துல இருந்தே இருக்கு. அது என்ன? ‘அகோ’ங்றதுதாங்க அந்த சொல். வழியில நடையா போய்ட்டு இருக்குற ஒருத்தரைப் பார்த்து சொல்லுறது, ”அகோ! பெரியவரே!! வாங்க இங்க!!!” நீங்கெல்லாம் நம்ப மாட்டாம, மலங்கலாப் (taperஆப்) பாப்பீங்கன்னு எனக்குத் தெரியும். அதான், தமிழ்க் கையேடுல இருந்த குறிப்பை மேல குடுத்து இருக்கேன்! இஃகிஃகி!!
3/14/2009
அந்த பதிவர் அயோக்கியன் இல்லை! இந்த பதிவரின் ஞே முழிப்பு?
சில நாட்களுக்கு முன்னாடி, பல விதமான சிரிப்புகள், அதற்குப் பின்னாடி பல விதமான முழிப்புகள் பார்த்தோம். முழிப்புகள்ல, மலங்க மலங்க முழிக்கிறது, பேந்த பேந்த முழிக்கிறது, திருதிருன்னு முழிக்கிறது, துறுதுறுன்னு முழிக்கிறது பார்த்தாச்சு. அதுகளை நீங்க இன்னும் படிக்கலையின்னா, மேல குடுத்த சுட்டிகளைச் சொடுக்கிப் படிச்சிட்டு வாங்க சித்த!
பப்பரப்பே முழிப்பு: நீங்க ஒரு தடவை நிலைக்கண்ணாடி முன்னாடி போயி, முழு கதியில ‘பே”ன்னு வாய் விட்டு சொல்லிப் பாருங்க. உங்களையே அறியாம, கண்ணுக ரெண்டும் நாலா பக்கமும் நல்லா விரிஞ்சி, வெளியில வர்ற மாதிரியே இருக்கும். ஒரு வியப்பான காரியம் நடந்தாலோ, திடுக்கிடும் காரியம் நடந்தாலோ நாம இந்த மாதிரிதான் முழிப்போம். கோவணமே கட்டிட்டு இருக்குற ஒரு பதிவர், திடீர்னு மேனாட்டு நடை, உடை, பாவனையில வந்தா நாம, “பே”ன்னுதான் முழிக்க வேண்டி இருக்கும். அதேதாங்க, இந்த பப்பரப்பே முழிப்பும்.
ததும்பத் ததும்ப முழிப்பு: மலங்கன்னா, சாயுறது. அதே நேரத்துல கலங்குதல்ங்ற பொருளும் இருக்கு. அதை வெச்சிட்டு, கண்கள் கலங்கின முழிப்புதான் மலங்க மலங்க முழிப்புன்னு சொல்லுறதும் இருக்கு. ஆனா பாருங்க, இந்த taperஆப் பாக்குறான்னு சொல்லுறாங்க பாருங்க, அதான் மலங்க மலங்க முழிக்கிறது. கண்கள் கலங்கின முழிப்பைச் சொல்லுறது, ததும்பத் ததும்ப முழிக்கிறதுன்னு.
ஞே முழிப்பு: மேல சொன்னா மாதிரியே, நிலைக்கண்ணாடி முன்னாடி போயி ”ஞே”ன்னு வலுவா ஒரு தடவை சொல்லிப் பாருங்க. கண்களோட ரெண்டு புருவங்களும் அந்த “ஏ’ங்ற ஒலிக்குத் தகுந்த மாதிரி மேல மேல விட்டத்தப் பாத்தா மாதிரியே சொருகும். இப்பெல்லாம் ஏது விட்டம்? இஃகிஃகி! அதை விடுங்க, இது எப்ப நடக்குமின்னா, வாத்தியார் எதனாக் கேள்வி கேக்கும் போது பதில் ஒன்னுந் தெரியாம, நம்ம கண்ணுக ரெண்டும் அவரோட பார்வையிலிருந்து விலகி, மேல மேல பாக்கும். அதாங்க, ஞேன்னு முழிக்கிறது. அப்ப வாத்தி சொல்லுவாரு, ஏண்டா கேள்வி கேட்டா விட்டத்தைப் பாக்குறேன்ன்னு?
தேமே முழிப்பு: ’தேமே’ன்னாங்க, தேன் போன்ற மா. அதே நேரத்துல கள், மதுங்ற அர்த்தமும் இருக்கு. கள்ளுண்ட ஒருத்தன் எப்படி ஒரு விதமான கதியில, எதுலயும் பற்றில்லாம திரியும் போது, நாம, “ஏண்டா இவன் தேமேன்னு திரியறான்?”ன்னு கேக்குறோம் பாருங்க, அந்த மாதிரி, எதுலயும் மனங்கொள்ளாம முழிக்கிறதுதாங்க, தேமேன்னு முழிக்கிறது.
திருட்டு முழிப்பு: மேல சொன்ன எதுலயும் பற்றுக் கொள்ளாம, ச்சும்மா வெத்து வேட்டா முழிக்கிற தேமே முழிப்புக்கு நேர் மாறான முழிப்புதாங்க திருட்டு முழிப்பு. மனசு பூராவும் கிடந்து தவிக்கும். அந்தத் தவிப்புல, முழியும் சேந்து தவிப்பாத் தவிக்கும். அப்படி இருக்கும் போது வர்ற, விறுவிறு முழிப்புதாங்க திருட்டு முழிப்பு.
குறுகுறு முழிப்பு: குறுகுறுத்தல்ன்னா, மனம் சின்னப்படுதல். அதாவது, உவகையற்ற நேரத்துல சொல்லுறது, மனசு குறுகுறுத்துப் போச்சுன்னு. அந்த மாதிரி, மகிழ்ச்சியில்லா மனசு கண்கள்ல வெளிப்படும் முழிப்புதாங்க, குறுகுறு முழிப்பு! பொச்சிறுப்பு புடிச்சவன், எப்படிக் குறுகுறுன்னு பாக்குறாம்பாரு?!இப்படி செம்மொழியான தமிழ்ல, எந்த உணர்வையும் துல்லியமா எழுத்து வடிவில உணர்த்த முடியுமுங்க. நாம சிரிப்பு, முழிப்புகளைப் பார்த்தாச்சு இல்லீங்களா? இன்னொரு நாளைக்கு, இந்த மனுசன் எப்படியெல்லாம் அழறாங்றதப் பத்தியும் வெவரமாப் பாக்கலாமுங்க! தலைப்புல, அயோக்கியன்னெல்லாம் போட்டுக் காரம் கூட்டினாப்புல இருக்கே, அதென்னன்னு முழிக்கிறீங்க?! அதையும் பாக்கலாம் வாங்க. இஃகிஃகி!!
அவன் அயோக்கியன் இல்லை! இந்த வாக்கியம் சரியா? தவறா?? தவறுன்னு சொல்லுதுங்க, போப் அடிகளோட தமிழ்க் கையேடு! ஆமுங்க, அவன் அயோக்கியன் அல்ல அப்படீங்றதுதான் சரி! எங்கயெல்லாம் இருக்கு அல்லது உண்டுன்னு சொல்ல முடியுமோ, அங்க மட்டுந்தான் இல்லைங்றதும் வரும். அவன் அயோக்கியன் உண்டுன்னு எழுத முடியுமா? முடியாது அல்ல?? அப்ப, அவன் அயோக்கியன் இல்லைங்றதும் முடியாது. அவன் அயோக்கியன் அல்ல என்பதே சரி! என்னிடம் அறிவு இல்லைங்றது சரி, ஏன்னா என்னிடம் அறிவு உண்டுன்னு சொல்ல முடியுமே?? இஃகிஃகி!!
’Hello’ ங்றதுக்கு தமிழ்ல என்னன்னு தெரியுமாங்க? இஃகிஃகி! எல்லாம் ஒரே நாள்ல சொல்லிட்டா, நாங்க இன்னொரு நாளைக்கு என்ன பதிவு எழுதறது? இன்னைக்குப் போய்ட்டு நாளைக்கு வாங்க போங்க! இஃகிஃகி!! என்னா வில்லத்தனம்??
தரணியில தமிழ் ஆளும்!
3/13/2009
எங்கூர்ல வித்தை காமிக்கிறாங்க, வாங்க எல்லாரும்!
’சாமி, கும்புட்டுக்கறனுங்க!’
‘என்னடா குப்பா? என்ன இந்த வேளையில் வந்திருக்கிற? கஞ்சி குடிச்சியா??’
‘ஆமாஞ்சாமி, உங்க தயவால எல்லாம் ஆச்சுதுங்கோ!’
‘சரி, ஊரில என்ன விசேசம் இன்னைக்கு?’
‘ஆமாங்க, நம்மூர்ப் புறம்போக்கு ஆலமரத்தடியில வித்தையாடுறவங்க கூடாரம் போட்டு இருக்காங்க. இளைய பண்ணாடிக எல்லாரும் வித்தை பார்க்கணும்ன்னு ஆசைப்படுறாங்க!’
‘அப்படியா, சரி சாயுங்காலம் நாலு மணிக்கு அவங்களை வரச் சொல்லு!அவங்க நல்லபடியா வித்தை காமிக்க வேணும். ஊருக்குள்ள எல்லார்த்துக்கும் சொல்லிடு! நம்மூர் வினாங் கோயில் முன்னாடி ஆடட்டும். வீட்ல பண்ணாடிச்சிகிட்ட சொல்லி, அவங்களுக்கு கஞ்சி எதனா ஊத்தச் சொல்லு போ!’
‘ஆகட்டுஞ் சாமி, உத்தரவு வாங்கிக்கிறனுங்க!’
உடனே ஊர் முழுதும் அல்லோலகலப்பட்டது. பறையடித்து விளம்பரப் படுத்தினான். வாத்தியார் பள்ளிக்கூடம் சாத்தினார். சங்கதி எல்லாப் பண்ணைகளுக்கும் தெரியப்படுத்தப் பட்டது. மூன்று மணியிலிருந்தே ஊர் மக்கள் வரத் தொடங்கினர். வினாங் கோயில் முன்னால் வெளியிடம் நிரம்பி விட்டது. நடுவிலே பத்து அடி வட்டமாகக் காலியிடம் வித்தைக்காரனுக்கு என்று விடப்பட்டது. அதை ஒரு கரை போட்டு அத்துப்படுத்தி விட்டான் வித்தைக்காரன். அதைச் சுற்றிலும் சிறு பிள்ளைகள் உட்கார்ந்தார்கள், நானும் அவர்களுடன் உட்கார்ந்தேன். அவர்களைச் சுற்றிலும் பெரிய பிள்ளைகள் உட்கார்ந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பெரியவர்கள், ஒரு புறம் ஆண்களும், மற்றொரு புறம் பெண்களும் அமர்ந்தார்கள். சரியாக நான்கு மணிக்கு வித்தைக்காரன் துடியடித்தான். தலைவர் சாமி ஐயாவும், மற்றவர்களும் கோயில்த் திண்ணையில் உட்கார்ந்தார்கள்.
வித்தைக்காரன் தன்வித்தைகளை ஒவ்வொன்றாகக் காட்டினான். பாம்புக்கும் கீரிக்கும் சண்டை, செத்த பாம்பை உயிர்ப்பித்தல், கோழி கீரி இவைகளை ஒன்றுமில்லாக் கூடையிலிருந்து வெளிவரச் செய்தல், வாயில் நெருப்பு எரித்தல், வாயில் புல்லாங்குழல் ஊத, அப்போது ஒரு மூக்கில் நீர் ஊற்ற மறு மூக்கில் நீர் ஓடச் செய்தல், பத்து பந்துக்களை கீழே விழாமல் எறிதல் முதலானவைகளை எல்லாம் காட்டினான்.
மாங்கொட்டையிலிருந்து, மாஞ்செடி முளைக்கச் செய்ததை நாங்கள் சிறுவர்கள் எல்லோரும் மிகவும் இரசித்தோம். ஒரு பெண்ணை பெரிய கூடை ஒன்றினால் மூடி விட்டு கத்தியினால் குத்தவும் அவள் சாகாமல், வேற்று உடையில் வெகுதூரத்திலிருந்து வெளி வந்தது மிகவும் வியப்பாய் இருந்தது. அன்று இருளும் வரை வித்தைகள் நடந்தன. வித்தை காண்பித்தவர்கட்கு, தேவையான உணவு, பழந்துணி, நிறையப் பணம் தரப்பட்டன. வித்தை காண்பித்தவ்ர்கள், கூட்டத்தினரைச் சுற்றி வந்து நன்றி சொல்லியவிதம் இன்னும் மனக் கண்களில் அகலாமல் நிழலாடுகிறது!
வித்தையைக் கண்டு களித்த பின், கோயில் மைதானத்தில் இருந்து வீட்டிற்குச் செல்ல முற்படுகையில், சாமி ஐயா எங்களுக்கு ஒரு கணக்கைச் சொல்லி, மறு தினம் வந்து விடையளிக்கச் சொன்னார். நீங்களும் உங்கள் விடையைச் சொல்லுங்களேன்!!
ஒரு முள்ளம் பன்றி தினம் முப்பது காதம் ஓடத்தக்கினது. அப்பன்றியைப் பிடிக்க ஒரு நாயானது அதன்பின் தொடர்ந்து, அந்நாய் முதல்நாள் ௧(1) காதம், இரண்டாம் நாள் ௨(2) காதம், மூன்றாம் நாள் ௩(3) காதம், இவ்விதமாகவே நாளுக்கு நாள் ஒவ்வொரு காதமா அதிகமாக இந்நாய் ஓடுமாதலால், அப்பன்றியை எத்தனை நாளில் இந்நாய் பிடிக்கும்?
3/12/2009
அமெரிக்கா வாழ் நம்மவர் கவனத்திற்கு!!!
The industries most represented on the list are media, automotive, retail and manufacturing. Companies in the most acute danger are those with reduced cash flow and a high debt load. A lot of big, well-known companies are in danger. On the list: Advanced Micro Devices; AirTran; AMR (parent of American Airlines); Chrysler; Duane Reade; Eastman-Kodak; Ford; General Motors; JetBlue; Krispy Kreme; Palm; R.H. Donnelly; Reader's Digest Association; Rite-Aid; UAL (parent of United Airlines); Unisys; and US Airways.
http://biz.yahoo.com/usnews/090310/10_more_companies_at_risk_of_failing.html?.&.pf=family-home
3/08/2009
சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
இரண்டாங்கல்லே இமையவர் பெருமான்
மூன்றாங் கல்லே முக்கண் மூர்த்தி
நான்காங் கல்லே நஞ்சுண்ட கண்டன்
ஐந்தாங் கல்லே ஐந்து முகத்தோன்
ஆறாங் கல்லே ஆற்றுச் சடையன்
ஏழாங் கல்லே எமனை உதைத்தோன்
எட்டாங் கல்லே எருத்து வாகனன்
ஒன்பதாங் கல்லே உமை ஒரு பாகன்
பத்தாங் கல்லே பத்தர்கட் கபயன்!
ஒரு ஊரிலே ஒரு தேவதாசிக்குத் தினம் ஒரு வராகன் விகிதமாக, அந்தத் தேவதாசிக்குப் பட்டணமாளுகிற இராவினுடைய ஊழியக்காரன் உடன்படிக்கை சொன்னது யாதெனில் ஒரு மாதத்துக்கு முப்பது வராகன் கட்டளையாதலால், என்கையில் ஐந்து மோதிரமிருக்கின்றது. அது முப்பது வராகனெடையிலே செய்தது. மாதம் ஒன்றுக்கு(க), நாள் ௩௰(30)க்கு நடந்து கொண்டால், இந்த ௫(5) மோதிரமும் தருகிறேன். அல்லவென்று ஆளும் அரசன் ஒரு வேளையில் தூர தேசங்களுக்குப் பயணம் போகச் சொன்னால், நடந்து கொண்ட நாளைக்கு ௫ மோதிரத்திலும் உண்டான வராகன் கணக்குப் பார்த்துக் கொடுத்துப் போகிறேன் என்றான். ஆக, அந்த ௫ (ஐந்து) மோதிரம் ஒவ்வொன்றும் எத்தனை வராகன் எடை?
சோழியன் குடுமி சும்மாடு ஆகு(டு)மா?
3/07/2009
சின்ன சின்னத் தாரகையாய்...
மின்னும் மின்னும் நீ யாரோ
துன்னும் உலகில் வெகு மேலாய்
மின்னி விண்ணில் வைரமதாய்!
கொதிக்கும் கதிரோன் சென்றவுடன்
எதற்கும் அவனொளி இலையாகில்
உதிக்கும் சிற்றொளி நீ காட்டி
மதிக்கும் இரவில் மின்னிடுவாய்!!
அப்போதிருட்டில் வழி நடப்போன்
ஒப்பி உன்னொளி போற்றிடுவான்
அப்படி மின்னா திருந்தனையோ
எப்படி அவன் வழி அறிந்திடுவான்?
கருநீல வானம் தாங்கிடுவாய்
அருமென் திரைக்குள் நுழைந்திடுவாய்
இருவான் கதிரோன் வருமட்டும்
திருநின் கண்கள் மூடிடலாய்!
முன்னம் இருட்டில் வழி நடப்போற்
குன்நல் சிற்றொளி காட்டிடல்போல்
மின்னும் எனக்கே, நினை அறியேன்,
சின்னஞ்சிறிய தாரகையாய்!
சின்ன சின்னத் தாரகையாய்
மின்னும் மின்னும் நீ யாரோ
துன்னும் உலகில் வெகு மேலாய்
மின்னி விண்ணில் வைரமதாய்!
இது எந்த ஆங்கிலப் பாடலின் தமிழ்ப்படுத்தல்?
இப்பால் ஒரு ஊரிலே தலையாரிக்கு மூன்று மனைவியர் உண்டு. (ஐயோ, பாவம்!) அந்தத் தலையாரி சிறிது வெள்ளரிக்காய் களவிலே கொண்டு வந்தான். மூத்தாள் வந்து தன் பிள்ளை கையில் ஒரு காயைக் கொடுத்து மற்றதை மூன்றாய்ப் பகுந்து ஒரு பங்கை எடுத்துக் கொண்டு போனாள். நடுவானவள் வந்து தன் பிள்ளை கையில் ஒரு காயைக் கொடுத்து மற்றதை மூன்றாகப் பகுந்து ஒரு பங்கு எடுத்துக் கொண்டு போனாள். இளையவள் வந்து, தன் பிள்ளை கையில் ஒரு காயைக் கொடுத்து மற்றதை மூன்றாய்ப் பகுந்து ஒரு பங்கு எடுத்துக் கொண்டு போனாள். இப்படி, ஒருத்தியை அறியாமல் ஒருத்தி பங்கிட்டு எடுத்துக் கொண்டு போனார்கள். இவர்கள் கொண்டு போனது போக மற்றதைப் பொழுது விடிந்த பிறகு தலையாரி வந்து மூன்று பேருக்குஞ் சரியாய்ப் பகுந்து கொடுத்தான். அப்படியானால், களவாடிக் கொண்டு வந்த காய்கள் எத்தனை?
பொறுப்பி: படைப்பின் மூலம் தெரியாது!
3/06/2009
பிறழ்ந்தது: இந்திய நர்சுகளுக்கு வாய்ப்பு தடுக்கிறார் ஒபாமா
சரி, உண்மையில என்ன நடந்தது? இங்க அமெரிக்காவுல, செவிலி(nurse)யர்களுக்கு அளவு கடந்த தேவை. அதனால குடியுரிமை வாரியம், வெளிநாட்டுல இருந்து அவர்களை வேலை வாய்ப்புக் கொடுத்து, எளிதா உள்ள வர்றதுக்கு பிரத்தியேக வழிமுறைகள், சிறப்பு உள்புகல் குறித்த சட்டத்திற்கான மசோதாவுக்கு அறிமுகம் கொடுத்து இருக்காங்க.
The W Visa for Nurses - Nursing Relief Act of 2009
The purpose of this Act is to create a new nonimmigrant, temporary visa category for registered nurses - the W Visa, that will work in a very similar way as the H-1B visa. The bill is a good one for nurses, healthcare providers and, of course, for patients.
இந்த நேரத்துல ஒரு பாராளுமன்ற உறுப்பினர், தேவை இன்னும் அதிகமாகி, அது ஐந்து இலட்சத்தையும் தாண்டும்ன்னு சொல்லவே, அதுக்கு அதிபர் ஒபாமா ஒரு கூட்டத்துல பேசும் போது, நாம எத்தனை நாட்களுக்குத்தான் வெளிநாட்டு செவிலியர்களையே நம்பிட்டு இருக்குறது. அதே நேரத்துல உள்ளூர்ல நிறைய வேலை இல்லாம இருக்காங்க. ஆகவே, இங்க இருக்குறவிங்களை இது தொடர்பான படிப்புகளைப் படிக்க வைக்கணும்ன்னு பேசி இருக்கார். இது தடுக்குறதுன்னு ஆயிடுமா?
நானும் பதிவுகளைப் போட்டுகிட்டே இருக்கேன். யாரும், என்கிட்ட விவாதத்துக்கு வர மாட்டேனுங்கிறாங்க! நிச்சயம், அரசு அதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள் யாராவது என்னோட பதிவைப் பார்ப்பாங்கங்ற நம்பிக்கை இருக்கு. தயவு செய்து, உங்க கருத்தைச் சொல்லுங்க. ஏன் பிறழ்ந்த செய்திய, வெகுசன மக்களுக்குத் தர்றீங்க?
மக்கா, தகுதி வாய்ந்த செவிலியர்கள் யாராவது இருந்தா, இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கச் சொல்லுங்க. ஊடகங்களின் தலைப்பைப் பார்த்து ஏமாற வேண்டாம்!
கோவை நொய்யலாற்றுக் குருவியின் தேவையில்லாத வேலை!!!
அப்படியானால், வந்த குருவிகள் எத்துனை?
புனமூன்றில் மேய்ந்து நெறியைந்திற்சென்று
இனமான வேழ்குள்நீருண்டு - கனமான
காவொன்பது தன்னிற் கட்டுண்டுநிற்கவே
கோமன்னர் கூட்டக் களிது!
பொழிப்புரை:திருமூர்த்திமலைப் புனத்தில் ஒற்றைப்படையாக மேய்ந்து, வழியில் ஒற்றைப் படையாகப் பிரிந்து, உடுமலை அருகேயுள்ள ஏழுகுளத்தில் ஒற்றைப்படையாகத் தண்ணீரருந்தி ஒன்பது கம்பத்தில் ஒற்றைப்பட கட்டுண்ட யானைகள் எத்தனை?
நீர்வளம் பொருந்திய ஒரு தடாகத்தினடமாகச் சிறிது தாமரைப் புட்பங்கள் மலர்ந்திருந்தது. அப்புட்பங்களின் பேரில் சில வண்டுகள் வந்து பூ ஒன்றுக்கு வண்டுகள் ஒன்று இறங்கி, ஒரு வண்டுக்கு இறங்க மலர்களில்லாமையால் வந்த வண்டுகளெல்லாம் எழுந்திருந்து பூ ஒன்றுக்கு இரண்டு வண்டுகளாக இறங்கின போது ஒரு பூவு மீந்தது. ஆதலால் வந்த வண்டுகள் எத்தனை?
3/05/2009
தாசிக்கும், தேவிக்கும் கொடுத்ததை கணக்குப் பண்ணலாம் வாங்க!
ஒருவன் சிறிது கற்பூரப் பழங்கொண்டு வந்தான். கொண்டு வந்ததிற்பாதி தன் தேவிக்குக் கொடுத்தான். நான்கிலொரு பங்கைத் தன் தம்பிக்குக் கொடுத்தான். கொண்டு வந்ததில் எட்டிலொரு பங்கைத் தன் தாயாருக்கு ஈந்தான். ஒன்பதில் ஒரு பங்கைத் தன் தாசிக்குக் கொடுத்தான். குறை மீந்தப் பழம் ௫. ஆகையால் முதற்கொண்டு வந்த பழம் எத்தனையென்று சொல்வது? #௪௰
கிட்டத்தட்ட விடையும் மேல இருக்கு... இருந்தாலும் நீங்க ரோமானிய எண்ல சொல்லிட்டுப் போங்களேன்! இஃகிஃகி!!
3/04/2009
அமெரிக்கப் பதிவரும், ஐதர் அலி காலத்து வலைப்பூவும்!
இப்படிக் கேட்டதுதான் தாமதம், உடனே அந்த பிரபலம், “தங்கமணி எதோ அவசர அழைப்பாணை அனுப்பி இருக்காங்க!”ன்னு சொல்லிப் போனவருதான். இன்னைக்கி வரைக்கும் காணோம். வந்து, ”அமெரிக்காவில் பேருந்துப் பயணம் செல்லாதீர், அமெரிக்க மாமரத்தில் வெளவால்”ன்னு பதிவு போடுவாரு பாருங்க. ச்சும்மா சொல்லக் கூடாது, சுவராசியமா கலந்து கட்டிப் பின்னிப் படல் எடுக்குறாரு. இல்லைன்னா, வலைஞர் தளபதிங்ற அந்த கெளரவத்துக்கே இழுக்குதானே? இஃகிஃகி!! புளியங்குடிப் புளியோதரைன்னு ஒரு பதிவு போடுறேன்னு சொன்னாரு, அதையும் இன்னும் போடலை மனுசன்?!
சரி, கேள்வியக் கேட்டுட்டு நாம சும்மா இருந்தா, அவர் நம்மளை சும்மா விடுவாரா? புளியங்குடி ஆட்களை விட்டுத் தூக்கிடமாட்டாரு? ஆகவே, நாம அதை அலசித் துவச்சிக் காயப் போடலாம் வாங்க. அது பாருங்க, ஐதர் அலி காலத்துல எப்பவும் போர்க்கோலந்தானாமுங்க. போர் நடக்காத நாட்கள்தான் குறைவாமுங்க. அதான் சாக்குன்னு போர் வீரர்கள் எல்லாம், மக்களோட வீடுகளுக்குள்ள புகுந்து கொள்ளையடிக்கிறதும் வெகு காலத்துக்கு நடந்துட்டே இருந்ததாம்.
இதுல இருந்து தப்பிக்கிறதுக்காக, கிராம நகரங்கள்ன்னு எந்த வித்தியாசமும் பார்க்காம, வீடுகளை மறு சீரமைச்சாங்களாம் அந்தக் காலத்துப் பெரியவிங்க. அதாவது, வீடுகளோட பிரதான வாயில் எப்பவும் வீதிகளை நோக்கி இருக்கும். அப்படி இருந்தா, இந்த கொள்ளையர்கள் சுலுவுல உள்ள புகுந்திடறாங்கன்னு, வீதியில இருந்து பக்கச் சந்துல புகுந்து, இடமாத் திரும்பி, வலமாப் போயி, மறுபடியும் இடமா உள்ள போயி, வலமா வெளில வந்துன்னு அப்புறம் உள்ள போற மாதிரியெல்லாம் சிக்கலான அமைப்புல வீடுகளைக் கட்டினாங்களாம்.
இதுதான் கதவுன்னு நினைச்சி உள்ள போனீங்கன்னா, அது மூத்திரச் சந்துக்கு இட்டுட்டுப் போகுமாம். இல்லைன்னா, பன்றிகள், நாய்கள்ன்னு இருக்குற கொத்தளத்துக்கு இட்டுட்டுப் போகுமாம். அப்படி ஒரு அமைப்புக் கொண்டதாமுங்க, ஐதர் அலி காலத்துல கட்டின வீடுகள். அதுக்கப்புறம் வெள்ளைக்காரன் வந்ததுக்கப்புறம், மறுபடியும் வெள்ளைக்காரனோட வழிகாட்டுதலின் பேருல வந்ததுதான் நவீன வீடுகள், சீமை ஓடுகளையும், காரை வாசலையும் உள்ளடக்கின வீடுகள்.
இப்படியாக பின்னாள்ல வந்தவங்க, விவசாயம் செய்யுறவங்க கிட்ட கம்பு, சோளம் இதெல்லாம் மூட்டை இருபது ரூபாய்ன்னு விலை நிர்ணயம் செய்து வாங்கினா, ஒரு சிலருக்கு மட்டும் ஒரு ரெண்டு ரூபாய் குறைவா வெச்சி பதினெட்டு ரூபாய்ன்னு விலை வெப்பாங்களாம். அது ஏன் அப்படின்னு கேட்டாக்க, வணிகஞ் சொல்லுறது, மூட்டைகளை அந்த ஐதர் அலி காலத்து வீட்டுல இருந்து வீதிக்குக் கடத்திட்டு வர்றதுக்கு நாங்க அதிகக்கூலி தரணுமல்ல?ன்னு சொல்வாங்களாம். இதுவே, வழக்கத்துல எந்த பழமையான ஒன்னைப் பாக்குறப்பவும் சொல்லுற ஒரு வழக்காச்சுதாம். இஃகிஃகி!!
கோளாறுகாரிக்குப் பல மொழி!!
அமெரிக்கக் கனவு கானல் நீராகிறதா?
இந்த ஊடகங்கள் ஏத்திச் சொல்லுற செய்திகளை மெய்ப்பிக்கிற மாதிரியே, திட்டக்குழுத் தலைவர் அலுவாலியா ஊடகத்துல வந்து பேசினாரு. போனாப் போகுதுன்னு பாத்தா, நிதி அமைச்சர்(இப்போதைய வெளியுறவு) அதையும் தாண்டி அழுதே போடுவார் போல இருக்கே?! உங்களுக்கு எல்லாம், தூதரகம்ன்னு ஒன்னு அமெரிக்காவில இல்லையா? அவங்ககிட்ட உண்மை நிலை என்னன்னு கேட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பேசக் கூடாதா?? ஊடகங்கள்ல வர்ற செய்திதான் பிரதானமா??
இப்ப்ப் புதுசா, ஒரு இலட்சம் பேர் மூனு வருசத்துக்குள்ள திரும்பி வரப் போறாங்கன்னு புலம்பல். வந்தவங்க இங்க(US)யே இருந்துக்கணும்ன்னு எதிர்பாக்கறாங்களோ?? அதை விடுங்க, வருசம் 65000 பேர், அது போக இதர உள்நுழைவு(L1, B1...)ல எண்ணிலடங்காத பேர் உள்ள வருவாங்களே? அது கண்ணுக்குத் தெரியலையா?? நீங்க எல்லாம் நிர்வாகிகள்தானா?? அவ்வளவு கடுமையான சவால்கள் இருந்தும், தன்னம்பிக்கை ஊட்டுற பேச்சு, என்னா சுறுசுறுப்பு?? ஒபாமாவைப் பாத்தாவது தெரிஞ்சுக்குங்க... வேலியே பயிரை மேயலாமா?? தன்னம்பிக்கை ஊட்ட வேண்டிய அரசாங்கமே, தகர்ந்து போகலாமா??? கொஞ்சம் எதிர்மறையாப் பேசுறதை, மக்கள்தான் அலட்சியம் செய்யணும் இந்த இக்கட்டான சூழ்நிலைல!!!
மக்கா, மென்பொருள் படைப்பாளிகளுக்கு எப்பவும் எதிர்காலம் இருக்கு. இந்தப் புலம்பல்களைக் கண்டுகிடாதீங்க... இது தற்காலிகமான தொய்வுதான்!இளநிலைல இருக்குற மாணவர்கள், இளைஞர்கள் இயற்கை(green collar jobs) எரிசக்திக்கான தொழில்நுட்ப படிப்பு/வேலைகள்ல கவனம் செலுத்தலாம். காற்றாலை, சூரிய எரி/மின் சக்தி, சாணவாயு எரிசக்தி, இப்படி இயற்கைய ஒட்டின எதுக்கும் எதிர்காலம் இருக்கு. அது மீளாக்கத்(renewable)துக்கு ஏதுவா இருக்கணும். இந்த அரசாங்கம் அதுகளை ஆராய்ஞ்சி, வழிகாட்டணும். ச்சும்மா, எடுத்தேன் கவிழ்த்தேன்னு பீதியக் கிளப்புறதுக்குத் துணை போகக் கூடாது.
மக்கா, நான் இது தொடர்பான படிப்புகள், மேலதிகத் தகவல்களை இனிதான் சேகரிக்கணும். எனக்குத் தெரிஞ்சதை எதிர்வரும் காலங்கள்ல பதியுறேன்...
3/03/2009
பள்ளயம் 03/03/2009
பலர் பார்க்கும் பள்ளையம்!
பணிவோடு பழமைபேசி,
பதிவாக்கும் பள்ளையம்!!
பழந்தமிழ்ப் பெருமைபேசும்,
பாரெல்லாம் போய்ச் சேரும்!
பண்பாடு பலவும் பேசும்,
பண்ணாய்ப் பாடியும் வரும்!!
பள்ளையமாம் பள்ளையம்,
பலர் பார்க்கும் பள்ளையம்!
பணிவோடு பழமைபேசி,
பதிவாக்கும் பள்ளையம்!!
நன்றி: சித்தகிரி கண்காட்சி
அட மணி என்னாச்சு? எங்க ஊட்டுல கெடியாரம் கோளாறாயி நின்னு போச்சு. அவன் மண்டையில எதோ கோளாறாட்ட இருக்கூ. இப்படிக் கோளாறு பல இடங்கள்ல புழக்கத்துல வருது. இதுக்கு நடுவுல, ஒருத்தர் வந்து உங்க தோள்ல கையப் போட்டு, உங்களை அந்தப் பக்கமா, "வா, நான் உனக்கு ஒரு கோளாறு சொல்றேன்!"ன்னும் கூட்டிட்டுப் போறதையும் பாத்து இருப்பீங்க. அதோட நின்னுதா இந்தக் கோளாறு? நம்ம குடுகுடுப்பையார் அப்பப்ப மண்டையில கோளாறாயி, "பழமைபேசி வலைஞர்களுக்குள்ள ஒன்னுக்கு ஒன்னு கோள் மூட்டுறான்"ன்னும் சொல்லிட்டுத் திரிவாரு பாருங்க. இஃகிஃகி! அது என்ன இந்த கோளு, கோளாறு எல்லாம்?
கோள் அப்பிடின்னாங்க, ஒரு நிலையில இருந்து விலகிப் போறது. புதன் ஒரு கோள். அந்த மாதிரி, எது ஒன்னும் தன்னோட நிலையில இருந்து விலகி, முறைபிறழ்ந்து போச்சுன்னா, அது கோளாறு ஆகிப் போச்சுன்னு அர்த்தம். வண்டியில கோளாறுன்னா, வண்டியோட அக்கு ஒன்னு செய்ய வேண்டிய வேலைல இருந்து விலகிடுச்சுன்னு அர்த்தம்.
"நான் அந்தப் பதிவர் குழுவுக்குள்ள கலகமூட்டுறதுக்கு ஒரு கோளாறு சொல்லுறேன் வா!"ன்னு சொன்னா, முறையா இருக்குற குழுமத்துக்குள்ள பிறழ்வு செய்ய யோசனை சொல்லுறேன்னு அர்த்தம். கோளாறு சொல்றேன்னா, எதோ அவரு தெரியாத சூத்திரஞ் சொல்ல வர்றாருங்ற அர்த்தத்துல, அது புழக்கத்துல இருக்கு. இஃகிஃகி! ஆனா பழமொழி சொல்லுது, "கோளாறு சொல்லுறவனைக் கூட்டத்துல சேர்க்காதே!" அந்தமாதிரி கோளாறு செய்ற குணம், கோளாறுத்தனம்.
ஆனாப் பாருங்க, கருணைக் கொலைங்ற மாதிரி, இந்தக் கோளாறு சில நேரங்கள்ல நல்ல கோளாறாவும் இருக்கும். நிலையில இருக்குற கெட்டவிங்களைப் பிரிச்சி விடுற கோளாறு நல்லதுதானுங்களே?! மேல இருக்குற படத்துல பாருங்க, குறிப்புச் சொல்லுற பெரியவரு, அந்தம்மாவிகளுக்கு நல்ல பலன்களோட, கெட்டது நடக்காம இருக்க, கிரகங்களோட தாக்கத்தை எப்படிப் பிறழ வைக்கிலாம்ன்னும் கோளாறு சொல்லிட்டு இருக்காரு. இஃகிஃகி!!
3/02/2009
எச்சரிக்கை: நெகிழ்மனம் உடையோர், இது கண்டு மனம் கோண வேண்டாம்!
மூலம்: மின்னஞ்சலில் கிடைக்கப் பெற்றது! 65க்கு அருகண்மையில் உள்ள சிறு சதுரவடிவத்தைச் சொடுக்கி, பெரிதாகப் பார்க்கவும்.
எளிமை, சிக்கனம், மனிதநேயம் போற்றுவோம்!!!
3/01/2009
மலங்க மலங்க முழிக்காமல் நம்ம கோவி.கண்ணன் அவர்களுக்கு...
நம்ம கடைக்குத் தவறாம வந்து போற தம்பி Sriram, நம்மளைக் கெளரவப் படுத்துறேன் பேர்வழின்னு வழக்கொழிந்த சொற்கள்ன்னு ஒரு வலை(net)ப் பதிவு ஒன்னை ஆரம்பிச்சாரு. மக்கா, இனி அதைத் தொடர் பதிவுன்னு விளிக்காதீங்க, என்ன? தொடர் பதிவுன்னா, அது உங்க பூவுல தொடர்ந்து வர்றது மக்கா! சங்கிலிப் பதிவுன்னா, ஒருத்தர்ட்ட இருந்து இனியொருத்தருக்கு கொக்கி போடணும். இதுல ஒருத்தர், ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு கொக்கி போடுறதால, இது வலைப் பதிவு. வலையோட ஒரு கண்ணுல இருந்து சுத்தியும் பல கண் வரும் இல்ல, அதனால இது வலைப் பதிவு.
இப்ப அன்பர் கோவி.கண்ணன் அவர்களும் நமக்கு ஒரு சிறப்புச்..., அடச் சே, எதுக்கு இந்த சுயம் இங்க? அடங்குடா பழமைபேசி!! ஆமுங்க, கோவியார் தமிழுக்கு ஒரு சிறப்புச் செய்திருக்காரு. அப்ப, நாம அதுக்குப் போட்டியா செய்தாகணும் இல்ல?! இல்லைன்னா, T.V. Radhakrishnan ஐயா கோவிச்சுக்குவாக. அய்ய, எதுக்கு இப்ப நீங்க மலங்க மலங்க முழிக்கிறீங்க? சித்த வேணா அவரோட இந்தப் பதிவுக்கு ஒருவாட்டிப் போய்ட்டு வாங்க, சரியா?!
அதென்ன அந்த மலங்க மலங்க முழிக்கிறது? முழிப்புங்ற விழிப்பு, எப்பிடி எல்லாம் இருக்கு பாருங்க... பேந்தப் பேந்த முழிப்பு, மலங்க மலங்க முழிப்பு, திருதிருன்னு முழிப்பு, துறுதுறுன்னு முழிப்பு... இஃகிஃகி! வாங்க சித்த வெவராமா அல்சித் துவச்சிக் காயப் போடலாம்...
பேந்தப் பேந்த முழிக்கிறது: கோவி ஐயா வெவரமாச் சொல்லிட்டாக. இராவுல, தங்கமணிக்குத் தெரியாமத் தண்ணியடிச்சிட்டு, குளியலறையில பொங்க வெச்சி இருப்போம்...என்னதான் கழுவி சுத்தம் செய்திருந்தாலும், அது அரை குறையாத்தான் செய்திருப்போம். காலையில, அவிங்க எந்திரிச்சதும் என்ன அறையில ஒரு மாதிரியா இருக்கேன்னு கேக்குறப்ப முழிக்கிறம் பாருங்க, பயந்து பயந்து ஒரு முழிப்பு, அதாங்க பேந்த பேந்த முழிப்பு.
மலங்க மலங்க முழிப்பு: மலங்கல்ன்னா, சாய்வா இருக்குறதுங்க. கோணிப்பை சாஞ்சுட்டாச் சொல்லுறது, சாக்கு மலங்கிடுச்சுன்னு. அந்த மாதிரி, தேர்வுல அல்லையில இருக்குறவன் எழுதுற விடைய, சாஞ்சாப்புல பாத்து முழிக்கிறது இருக்கு பாருங்க, அதாங்க மலங்க மலங்க முழிக்கிறது. ஆமாமா, அம்மணி நம்மளைக் கடந்து போகும் போது முழிக்கிறதும் மலங்க மலங்க முழிக்கிறதுதான்...நேர்ல பாக்குறதுக்கு தைரியம் இல்லைங்றது சொல்லித் தெரியணுமா என்ன?! அந்த முழிப்புக்குத்தான அம்மணி தண்ணியெடுக்க கொடத்தை இக்கத்துல வெச்சிட்டு வெளில வர்றதே?!இஃகிஃகி!!
திருதிரு முழிப்பு: திருக்கைன்னாங்க, திருகறது. திருகாணி...அந்தத் திருகலுங்க. சொன்னாக் கோவிச்சுக்க கூடாது நீங்க... பையில உறவுக்காரங்க எதானா வெச்சி இருப்பாங்க... அந்த பையோட மேல்த் துணியையும் தாண்டி ஊடுருவற மாதிரி, கண்ணு திருகல் போட்டு அதுல என்ன இருக்குன்னு பாக்கும். அதாங்க, திருதிரு முழிப்பு. இந்த இடத்துல கொஞ்சம் பொறுத்துகோங்க...
துறுதுறு முழிப்பு: துறுன்னாங்க, நெருக்கமானங்றது பொருள். தலைவனும் தலைவனும் நெருங்கிப் பாக்குறாங்க பாருங்க, அதாங்க துறுதுறு முழிப்பு. அதே நேரத்துல, ஒன்னை வெச்ச கண் வாங்காமப் பாக்குறதும் துறுதுறு முழிப்புங்க.
இப்படி இன்னும் பல வகையான முழிப்புக இருக்குங்க...இனியொரு நாளைக்கு எஞ்சினதை வெச்சிக்கலாம். காலையில எழுந்ததும், இன்னும் இப்படிப் பொட்டி தட்டிட்டு இருந்தா, நான் பேந்தப் பேந்த முழிக்க வேண்டி வரும்...