3/13/2009

எங்கூர்ல வித்தை காமிக்கிறாங்க, வாங்க எல்லாரும்!

ஒரு நாள் வீதம்பட்டி வேலூர் சாமி ஐயா தெருத் திண்ணையில் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் முன்னால், தலையாரி குப்பன் தோன்றினான்.

’சாமி, கும்புட்டுக்கறனுங்க!’

‘என்னடா குப்பா? என்ன இந்த வேளையில் வந்திருக்கிற? கஞ்சி குடிச்சியா??’

‘ஆமாஞ்சாமி, உங்க தயவால எல்லாம் ஆச்சுதுங்கோ!’

‘சரி, ஊரில என்ன விசேசம் இன்னைக்கு?’

‘ஆமாங்க, நம்மூர்ப் புறம்போக்கு ஆலமரத்தடியில வித்தையாடுறவங்க கூடாரம் போட்டு இருக்காங்க. இளைய பண்ணாடிக எல்லாரும் வித்தை பார்க்கணும்ன்னு ஆசைப்படுறாங்க!’

‘அப்படியா, சரி சாயுங்காலம் நாலு மணிக்கு அவங்களை வரச் சொல்லு!அவங்க நல்லபடியா வித்தை காமிக்க வேணும். ஊருக்குள்ள எல்லார்த்துக்கும் சொல்லிடு! நம்மூர் வினாங் கோயில் முன்னாடி ஆடட்டும். வீட்ல பண்ணாடிச்சிகிட்ட சொல்லி, அவங்களுக்கு கஞ்சி எதனா ஊத்தச் சொல்லு போ!’

‘ஆகட்டுஞ் சாமி, உத்தரவு வாங்கிக்கிறனுங்க!’

உடனே ஊர் முழுதும் அல்லோலகலப்பட்டது. பறையடித்து விளம்பரப் படுத்தினான். வாத்தியார் பள்ளிக்கூடம் சாத்தினார். சங்கதி எல்லாப் பண்ணைகளுக்கும் தெரியப்படுத்தப் பட்டது. மூன்று மணியிலிருந்தே ஊர் மக்கள் வரத் தொடங்கினர். வினாங் கோயில் முன்னால் வெளியிடம் நிரம்பி விட்டது. நடுவிலே பத்து அடி வட்டமாகக் காலியிடம் வித்தைக்காரனுக்கு என்று விடப்பட்டது. அதை ஒரு கரை போட்டு அத்துப்படுத்தி விட்டான் வித்தைக்காரன். அதைச் சுற்றிலும் சிறு பிள்ளைகள் உட்கார்ந்தார்கள், நானும் அவர்களுடன் உட்கார்ந்தேன். அவர்களைச் சுற்றிலும் பெரிய பிள்ளைகள் உட்கார்ந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பெரியவர்கள், ஒரு புறம் ஆண்களும், மற்றொரு புறம் பெண்களும் அமர்ந்தார்கள். சரியாக நான்கு மணிக்கு வித்தைக்காரன் துடியடித்தான். தலைவர் சாமி ஐயாவும், மற்றவர்களும் கோயில்த் திண்ணையில் உட்கார்ந்தார்கள்.


வித்தைக்காரன் தன்வித்தைகளை ஒவ்வொன்றாகக் காட்டினான். பாம்புக்கும் கீரிக்கும் சண்டை, செத்த பாம்பை உயிர்ப்பித்தல், கோழி கீரி இவைகளை ஒன்றுமில்லாக் கூடையிலிருந்து வெளிவரச் செய்தல், வாயில் நெருப்பு எரித்தல், வாயில் புல்லாங்குழல் ஊத, அப்போது ஒரு மூக்கில் நீர் ஊற்ற மறு மூக்கில் நீர் ஓடச் செய்தல், பத்து பந்துக்களை கீழே விழாமல் எறிதல் முதலானவைகளை எல்லாம் காட்டினான்.

மாங்கொட்டையிலிருந்து, மாஞ்செடி முளைக்கச் செய்ததை நாங்கள் சிறுவர்கள் எல்லோரும் மிகவும் இரசித்தோம். ஒரு பெண்ணை பெரிய கூடை ஒன்றினால் மூடி விட்டு கத்தியினால் குத்தவும் அவள் சாகாமல், வேற்று உடையில் வெகுதூரத்திலிருந்து வெளி வந்தது மிகவும் வியப்பாய் இருந்தது. அன்று இருளும் வரை வித்தைகள் நடந்தன. வித்தை காண்பித்தவர்கட்கு, தேவையான உணவு, பழந்துணி, நிறையப் பணம் தரப்பட்டன. வித்தை காண்பித்தவ்ர்கள், கூட்டத்தினரைச் சுற்றி வந்து நன்றி சொல்லியவிதம் இன்னும் மனக் கண்களில் அகலாமல் நிழலாடுகிறது!


வித்தையைக் கண்டு களித்த பின், கோயில் மைதானத்தில் இருந்து வீட்டிற்குச் செல்ல முற்படுகையில், சாமி ஐயா எங்களுக்கு ஒரு கணக்கைச் சொல்லி, மறு தினம் வந்து விடையளிக்கச் சொன்னார். நீங்களும் உங்கள் விடையைச் சொல்லுங்களேன்!!

ஒரு முள்ளம் பன்றி தினம் முப்பது காதம் ஓடத்தக்கினது. அப்பன்றியைப் பிடிக்க ஒரு நாயானது அதன்பின் தொடர்ந்து, அந்நாய் முதல்நாள் ௧(1) காதம், இரண்டாம் நாள் ௨(2) காதம், மூன்றாம் நாள் ௩(3) காதம், இவ்விதமாகவே நாளுக்கு நாள் ஒவ்வொரு காதமா அதிகமாக இந்நாய் ஓடுமாதலால், அப்பன்றியை எத்தனை நாளில் இந்நாய் பிடிக்கும்?

27 comments:

சீமாச்சு.. said...

59 நாள்ல பிடிக்கும். சரிதானே !!

( 2 X 30 X n ) / ( n (n+1 )) = 1

சமன்பாடு தீர்வு செஞ்சா வரும்.

சரியா?

பழமைபேசி said...

௫௯தான சொல்லுறீங்க ஐயா? இஃகிஃகி! நீங்க சொன்னா அது தப்பா இருக்குமா என்ன?!

குடுகுடுப்பை said...

சீமாச்சுவை வழிமொழிகிறேன்.

கிகிகிகி

குடுகுடுப்பை said...

பதிவில் வெளிப்படும் வர்னாசிரமம் தவிர்க்கலாம்.

gayathri said...

நீங்களும் உங்கள் விடையைச் சொல்லுங்களேன்!!


intha mathiri kastamana question kepenganu thenji iruntha intha pakkam vanthey iruka matteny.

intha question naan chaesla vettuten

மதிபாலா said...

பதிவில் வெளிப்படும் வர்னாசிரமம் தவிர்க்கலாம்.
/

பதிவில் மட்டும் தவிர்த்தால் போதுமா நண்பரே........நிதர்சனம் அதுதானே...

இருப்பினும் கதை சொல்லும் போது அதைத் தவிர்ப்பது வரலாற்றை திரிப்பதாகவே அமையும் என்பதால் வர்னாசிரமத்தை தவிர்க்க வேண்டியதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

குடந்தை அன்புமணி said...

// மதிபாலா said...
பதிவில் வெளிப்படும் வர்னாசிரமம் தவிர்க்கலாம்.
/

பதிவில் மட்டும் தவிர்த்தால் போதுமா நண்பரே........நிதர்சனம் அதுதானே...

இருப்பினும் கதை சொல்லும் போது அதைத் தவிர்ப்பது வரலாற்றை திரிப்பதாகவே அமையும் என்பதால் வர்னாசிரமத்தை தவிர்க்க வேண்டியதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.//

நடப்பதை நடந்தவாறு சொல்வதுதான் நமது(பதிவர்) வேலை. மாற்றுவது அனைவரின் கடமை. அதைதான் நீங்கள் செய்திருக்கிறீர்கள்.

கணினி தேசம் said...

நானும் சீமாச்சுவை வழிமொழிகிறேன்.

நன்றி

அப்பாவி முரு said...

Seemachu said...
59 நாள்ல பிடிக்கும். சரிதானே !!

( 2 X 30 X n ) / ( n (n+1 )) = 1

சமன்பாடு தீர்வு செஞ்சா வரும்.

சரியா?//\\

சரிதான் நண்பர் சீமாச்சு

இராகவன் நைஜிரியா said...

ஓட்டு போடச் சொல்லுங்க போடறேன்.

மூளைக்கு வேலை கொடுப்பது எல்லாம் நடக்காத வேலை.. (இருந்தால் தானே வேலை செய்யும்..)

பதிவை படிச்சுட்டேன்.

தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போட்டுடேன்.

இதுக்கு மேலே என்னால என்னப் பண்ணமுடியும் சொல்லுங்க...

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
பதிவில் வெளிப்படும் வர்னாசிரமம் தவிர்க்கலாம்.
//

கடந்த காலத்தில் அலபாமா மாகாணத்தில் இருந்த நிர்வாகக் கட்டமைப்பைக் கண்காட்சியாகக் காண்பிக்கிறார்களாமே?

கற்கக் கற்கக் கசடறும்!

பழமைபேசி said...

//gayathri said...
நீங்களும் உங்கள் விடையைச் சொல்லுங்களேன்!!
//

வாங்க Gaya3! வணக்கம்!! இஃகிஃகி!!!

பழமைபேசி said...

// மதிபாலா said...
பதிவில் வெளிப்படும் வர்னாசிரமம் தவிர்க்கலாம்.
/

பதிவில் மட்டும் தவிர்த்தால் போதுமா நண்பரே........நிதர்சனம் அதுதானே...

இருப்பினும் கதை சொல்லும் போது அதைத் தவிர்ப்பது வரலாற்றை திரிப்பதாகவே அமையும் என்பதால் வர்னாசிரமத்தை தவிர்க்க வேண்டியதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
//

வாங்க தம்பி, நிறைவாச் சொல்லி இருக்கீங்க.

திருடன் திருடிய நிகழ்வை விவரிப்பதால், நாம் திருடுவதை ஆதரிப்பவர் என்றோ, ஊக்குவிப்பவர் என்றோ ஒருகாலும் ஆகிவிட முடியாது.

பழமைபேசி said...

//குடந்தைஅன்புமணி said...
நடப்பதை நடந்தவாறு சொல்வதுதான் நமது(பதிவர்) வேலை. மாற்றுவது அனைவரின் கடமை. அதைதான் நீங்கள் செய்திருக்கிறீர்கள்.
//

வாங்க ஐயா! வெகு நேர்த்தியா சொல்லி இருக்கீங்க!!

எழுதும்போது ஒரு ஆசிரமத்தையும் நினைக்கலை நான். அது ஒரு நினைவோடை, நடந்ததை மனக்கண் முன் நிறுத்தி எழுதி இருக்கேன். நான் பதியுறதை நிறுத்துறதால, காலில் விழும் கலாச்சாரமும், கும்பிடு போடும் கலாச்சாரமும் ஒழியும்ன்னோ, வளரும்ன்னோ நினைக்கல. நான் ஒரு வெகு சாமான்யன்.

அகம் சுத்தமா இருந்தாப் போதும்ன்னு நினைச்சுட்டு, பொழப்பைச் சரியா ஓட்டுலாம் வாங்க! இஃகிஃகி!!

பழமைபேசி said...

// கணினி தேசம் said...
நானும் சீமாச்சுவை வழிமொழிகிறேன்.

நன்றி
/

வாங்க, நான் தம்பி மதிபாலாவையும், அன்புமணி ஐயாவையும் வழி மொழியுறேன்!!

பழமைபேசி said...

//muru said...
Seemachu said...
59 நாள்ல பிடிக்கும். சரிதானே !!

( 2 X 30 X n ) / ( n (n+1 )) = 1

சமன்பாடு தீர்வு செஞ்சா வரும்.

சரியா?//\\

சரிதான் நண்பர் சீமாச்சு
//

தம்பீ வாங்க, அண்ணன் முந்திட்டாரே? இஃகிஃகி!!

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
பதிவை படிச்சுட்டேன்.//

இது பிரதானம்! நன்றிங்க ஐயா!!

//தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போட்டுடேன்.//

இது ஒரு ஊக்குவிப்பு, மிக்க நன்றிங்க ஐயா!!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
சீமாச்சுவை வழிமொழிகிறேன்.

கிகிகிகி
//

நானும் வழி மொழிஞ்சுட்டேனுங்கண்ணே!!

குடுகுடுப்பை said...

நடந்ததை சொல்லும்போது தவிர்க்கமுடியாதுதான்.நான் உங்களை குறை சொல்லவில்லை பழமை.ஆனால் இன்றைய தேதி வரை நடப்பது இதுதானே நாம் என்ன செய்ய முடியும்

- இரவீ - said...

சுவராஸ்யமான விஷயங்களுடன் சிறந்த சிந்தனை துளிகளும் அள்ளி தருகின்றீர்.
மிக்க நன்றி .

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நடந்ததை சொல்லும்போது தவிர்க்கமுடியாதுதான்.நான் உங்களை குறை சொல்லவில்லை பழமை.ஆனால் இன்றைய தேதி வரை நடப்பது இதுதானே நாம் என்ன செய்ய முடியும்
//

ஆமாங்கண்ணே! ஆமாங்க!!

பழமைபேசி said...

//Ravee (இரவீ ) said...
சுவராஸ்யமான விஷயங்களுடன் சிறந்த சிந்தனை துளிகளும் அள்ளி தருகின்றீர்.
மிக்க நன்றி .
//

நன்றிங்க இரவீ, நன்றிங்க!! வந்து போங்க அடிக்கடி!!!

vasu balaji said...
This comment has been removed by the author.
vasu balaji said...

கி.ரா மாதிரி எழுத்துல மண்ணு மணம் தெரியணும். தெரியுது. எப்படி உண‌ர்ந்தோமோ அப்படி எழுதறத எதுக்காகவும் மாத்தப் போனா ஒரே ஒரு வார்த்தை கூட செயற்கையா சேர்த்தா அது வராது. படிக்கிறப்போ ஊருக்கு போன உணர்வு வருது. வாழ்த்துக்கள். இந்த கணக்கெல்லாம் குடுத்தா தணிக்கை பண்ணி அப்புறம் போடலாம்ல பழமை பேசி. சீத்தலை சாத்தனார் லெவலுக்கு மண்டய புண்ணாக்கிக்கிட்டு பின்னூட்டம் போட வந்தா ஏற்கனவே விடை இருந்தா அந்த 'ஙே' நு விழிக்க வேணாம் பாருங்கோ!

ராஜ நடராஜன் said...

நானும் பாம்பு,கீரி சண்டைய முழுசாப் பார்த்திடனுமின்னு பார்க்கிறேன்.இதுவரைக்கும் சங்கல்பம் தீர்ந்தபாடா காணோம்.

பழமைபேசி said...

//Bala said...
சீத்தலை சாத்தனார் லெவலுக்கு மண்டய புண்ணாக்கிக்கிட்டு பின்னூட்டம் போட வந்தா ஏற்கனவே விடை இருந்தா அந்த 'ஙே' நு விழிக்க வேணாம் பாருங்கோ!
//

பாலா அண்ணே, எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே இந்த் எள்ளல் மொழிதான்... இஃகிஃகி!!

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
நானும் பாம்பு,கீரி சண்டைய முழுசாப் பார்த்திடனுமின்னு பார்க்கிறேன்.இதுவரைக்கும் சங்கல்பம் தீர்ந்தபாடா காணோம்.
//

வாங்க அண்ணே! ஊர்ப் பக்கம் போயிட்டு வாங்க அப்ப....