தமிழருங்க ரெண்டு பேர், ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிற மாதிரியான பழம் பாடல் நினைவுக்கு வந்துச்சுங்க.... மூளை நெறஞ்சவங்க
காலம் தெரிஞ்சவங்க
மூத்தவங்க படிச்சவங்க
வாழ்கின்ற நாடு இது!
மூச்சுத் திணறுதுங்க
முளியும் பிதுங்குதுங்க
பாத்துக்குங்க கேட்டுக்குங்க
சனங்கள் படும்பாடு இது!
நெலமை இப்படி இருக்குது
நீதி கெடந்து தவிக்குது
கொடுமை மேலே கொடுமை
வளர்ந்து நெருக்குது! அது
அருமையான பொறுமையைத்
தான கெடுக்குது!!
பாதை மாறி நடக்குது,
பாஞ்சுபாஞ்சு மொறைக்குது
பழமையான பெருமைகளைக்
கொறைக்குது-நல்ல பழக்கமெல்லாம்
பஞ்சு பஞ்சாப் பறக்குது!
என்ன இருந்தாலும் மனுசன்
இப்படி ஆடக் கூடாது!
எதுக்கும் ஒரு முடிவிருக்குது
அதிகநாளு ஆடாது!
ஏழைகளை அடிச்சுப் பறிக்கும்
எண்ணம் உடம்புக் காகாது!
காலம் கொஞ்சம் திரும்புச்சுன்னா
கவனிக்காமெப் போகாது!
அன்பு வளர்ந்த கோட்டைகுள்ளே
அகந்தை புகுந்து கலைக்குது!
வரம்பு மீறி வலுத்த கைகள்
மக்கள் கழுத்தை நெரிக்குது!
விருப்பம் போல நரிகள் சேர்ந்து
வேட்டையாடிக் குவிக்குது!
நாய்க்கு உரிமை வந்து
வீட்டுக்காரனையே கடிக்குது!
--பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்