6/10/2012

அமெரிக்க நாட்டுப்பண் உயிர்த்த இடத்தில் திருவிழா

இலக்கியவாதி கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்
எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்
எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன்
வாழும் கலைப்பயிற்சி இரவிசங்கர் அவர்கள்
பாடகி K.S.சித்ரா அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி
ஐங்கரன் இசைக்குழு
பலகுரல் மன்னன் முகேசு
வித்யா, வந்தனா சகோதரிகளின் பண்ணிசை
பகடிக் கலைஞன் மதுரை முத்து
பல்சுவைக் கலைஞர் சிவகார்த்திகேயன்
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி
வீரத்தாய் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்
தமிழன் - தமிழச்சி, நாடளாவிய வாகைசூடிக்கான போட்டி
முனைவர் மு.வ அவர்களின் நூற்றாண்டுச் சிறப்புரை
மு.வ அவர்களின் வழிகாட்டுதலில் அமெரிக்கத் தமிழர்
தமிழ் இலக்கியக் கூட்டம்
வலைஞர் கூடல்
தொடர் மருத்துவக் கல்வி
இலக்கிய விநாடி வினா
தொழில் முனைவோர் கூட்டம்
யோகாசனப் பாசறை
தமிழ்த்தேனீ
மாபெரும் தமிழிசை நிகழ்ச்சி
பல்கலைக்கழக முன்னாள் மாணவர் கூட்டங்கள்
பாட்டரங்கம்
பட்டி மண்டபம்
உரைவீச்சு
வெள்ளி விழா மலர் வெளியீடு
பேரவை இதழான அருவி ஆசிரியர் குழுவின் சொல்வீச்சு 
தமிழ்ச்சங்கங்களின் கலை நிகழ்ச்சிகள்
இன்னும் பல நிகழ்ச்சிகள்



Register early before it gets full. It happened in FeTNA 2009!  Register Now!!

6/04/2012

FeTNA: அமெரிக்க தமிழ்த் திருவிழா 2012

தமிழ்த் திருவிழா

தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு முதலானவற்றைப் பேணவும், ஒழுகிப் போற்றவும் அமெரிக்காவில் செயல்பட்டுவரும் ஓர் அமைப்புதான் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை(FeTNA) என்பதாகும். வட அமெரிக்கக் கண்டத்திலுள்ள கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிவரும் தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் பேரவையானது கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

ஆண்டு தோறும் நாடளாவிய தமிழ்த் திருவிழாவையும் கொண்டாடி வருகிறது பேரவை. இவ்வாண்டு அதன் 25 ஆண்டுகாலப் பணியையும் நிறைவு செய்யும் பொருட்டு, அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தனது வெள்ளி விழாவாக வெகுப் பிரமாண்டமான முறையில், மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்ட்டிமோர் நகரில், ஜூலை 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இம்மூன்று நாள் பெருவிழாவுக்கு கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடவுள்ளார்கள்.

ஒவ்வோர் ஆண்டும், அமெரிக்க தமிழ்த் திருவிழாவினை தமிழறிஞர் ஒருவருக்குச் சிறப்புச் செய்யும் விதத்தில் அவர்தம் பெயர் சூட்டி பெருமைப்படுத்தி வருகிறது பேரவை. சென்ற ஆண்டு பெருமழைப்புலவர் பொ.வெ.சோமசுந்தரனார் நூற்றாண்டு விழாவாகப் பரிணமித்தது. அவ்விதத்தில் இவ்வாண்டு, பேரவையின் வெள்ளி விழாவானது முனைவர்.மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாகப் போற்றப்பட்டு அவர்தம் பணிகளை அமெரிக்க தமிழர்களுக்குக் கொண்டு சேர்க்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

”தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!” எனும் இயன்மொழியைக் கொண்ட அமெரிக்க தமிழ்த் திருவிழாவில், தமிழ்க்கலை, இலக்கியம், பண்பாடு போற்றுமுகமாகப் பல நிகழ்ச்சிகள் இடம் பெறவுள்ளன.

வாழும் கலைப்பயிற்சி ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி அவர்களின் உரையுடன் கூடிய பட்டறை, மூத்த தமிழறிஞர் மறைமலை இலக்குவனார் சொற்பொழிவு, கவனகக்கலை வித்தகர் கலை.செழியன் பயிற்சி, மாவட்ட ஆட்சியர் சகாயம் அவர்களின் எழுச்சியுரை, வீரத்தாய் வேலுநாச்சியார் நாடக நாட்டியம், ‘விஜய் டிவி’ சிவகார்த்திகேயன் பல்சுவை நிகழ்ச்சி, இயக்குநர் சசி, முன்னணி நடிகர் பரத் முன்னணி நடிகை அமலா பால் மேடை நிகழ்ச்சி, திரைப்பட நடிகையும் சின்ன திரைக் கலைஞருமான பிரியதர்ஷினி நாட்டியம், கன்னடப் பைங்கிளி சரோஜாதேவி, நாட்டுப்புறக்கலை ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரெண்டா பெக், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் இலக்கியப் பாசறை, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களது கவியரங்கம், TKS கலைவாணன் தமிழிசை நிகழ்ச்சி, சின்னக்குயில் சித்ரா, ஐங்கரன் குழுவினர் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சி, உள்ளூர்க் கலைஞர்களின் கண்கவர் நாடக நாட்டியங்கள் என ஏராளமான பண்பாட்டுப் பொருண்மியங்கள் தாங்கிய கலைநிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன.


இணையரங்குகளில் இணை அமர்வுகளாக, தமிழ்த்தேனீப் போட்டிகள், தமிழிசைப் போட்டிகள், தமிழன் – தமிழச்சி 2012, முன்னாள் மாணவர் சங்கம், தொழில் முனைவோர் அரங்கம், மென்பொருள் கட்டமைப்பாளர் அரங்கம், அமெரிக்க தமிழ் இளையோர் சங்கமம், கவனகக்கலை நினைவாற்றல் பயிற்சி, தமிழ்மணம் இணையப் பட்டறை, வலைஞர் சங்கமம் முதலானவையும் இடம் பெறவுள்ளன.

2012 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க தமிழ்த் திருவிழாவானது, பேரவையின் வெள்ளி விழாவாகவும் அமைந்திருப்பதால் அமெரிக்காவின் பல பாகங்களிலிருந்தும் ஏராளமான தமிழர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். விழா ஏற்பாடுகளை, வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம் சிற்ப்பாகச் செய்து வருகிறது. ஜூலை ஐந்தாம் தேதி மாலை தமிழிசை விழா, விருந்தினர் மாலை எனத் துவங்கும் தமிழ்த் திருவிழா, ஜூலை 6, 7 ஆகிய நாட்களில் முழுநாள் விழாவாக நடைபெறும். ஜூலை 8ம் நாள் காலை, இலக்கியக் கலைந்துரையாடலுடன் நிறைவுக்கு வரும்.

விழாவுக்கு பேரவை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும். முன்பதிவு செய்து கொள்ளவும், பேரவை விழா குறித்த கூடுதல் தகவல்களைப் பெறவும் நாட வேண்டிய இணையதள முகவரி: www.fetna.org

பிரபல பதிவர்கள் புதுகை அப்துல்லா, கேபிள் சங்கர், ORB இராஜா முதலானோர் கலந்து கொள்ளும் பேசுபுக், ட்விட்டர், கூகுள் பிளசு, மின்னஞ்சல் குழுமப் பயனீட்டாளர்கள், வலைப்பதிவர்களுக்கான ’வலைஞர் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் பதிவர் பழமைபேசி: 980 322 7370.

தமிழிசை விழாவிலும், மாணவர்களுக்கான தமிழ்த்தேனீ போட்டிகளில் பங்கேற்க அதன் ஒருங்கிணைப்பாளர் திரு. பொற்செழியன் 314 249 0706 
நாஞ்சில் பீற்றர் அவர்களின் நெறியாள்கையில் இடம் பெறும் தமிழ் இலக்கிய விநாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்க, திரு.கொழந்தைவேல் இராமசாமி 443 254 4775
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையிலான கவியரங்க ஒருங்கிணைப்பாளர், திரு.கார்த்திகேயன் தெய்வீகராசன். ’இதயங்கள் இயங்கட்டும்’ எனும் தலைப்பிலான கவியரங்கத்தில் பங்கேற்க விழைவோர் அவரைத் தொடர்பு கொள்ள: 860 212 2398

‘விஜய் டிவி’ புகழ் சிவகார்த்திகேயன் நடத்தும் விவாத மேடையில் பங்கேற்றுக் கலாய்க்க, அதன் ஒருங்கிணைப்பாளரான இரா. மனோகரன் அவர்களைத் தொடர்பு கொள்ள: 267-421-2891

கூடுதல் தகவல்களைப் பெறவும், இதர செய்திகளுக்கும் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொண்டு பேசலாம். முனைவர் தண்டபாணி குப்புசாமி, தலைவர், வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை, 843-814-7581  திரு.பாலகன் ஆறுமுகசாமி, வெள்ளி விழா ஒருங்கிணைப்பாளர், 301-237-1747

அமெரிக்காவின் நாட்டுப்பண்(national anthem) உயிர்த்த நகரமாம் பால்ட்டிமோர் நகரில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கத் தமிழர்கள் ஒன்று கூடி, இவ்வாண்டுக்கான தமிழ்த் திருவிழாவினைத் தங்களது பேரவையின் வெள்ளி விழாவாகக் கொண்டாடுப் பொருட்டு பேரவை முன்னணியினர் முனைப்பாகக் களப்பணியாற்றி வருகிறார்கள்.

6/03/2012

திரைப்பட, தொலைக்காட்சி கலைஞர் பிரியதர்ஷினி


தமிழ் திரைப்பட நடிகர், நாடகக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நாட்டியக் கலைஞர் எனப் பல ஆற்றல் கொண்டவர் பிரியதர்ஷினி ஆவார். தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ’புலி வருது’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் ‘மானாட மயிலாட’ எனும் தொடர் நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சித் தொடரிலும் ‘சிறந்த நடனக் கலைஞர்’ விருதினைப் பெற்றிருக்கிறார். முதன் முதலாக, 1998ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியின் ’விழுதுகள்’ நெடுந்தொடரில் தன் கலை வாழ்க்கையைத் துவங்கிய இவர், ‘கோலங்கள்’, ’ரேகா அய்.பி.எசு’ உள்ளிட்ட பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார்.

கலையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகரும், தொலைக்காட்சி நடிகரும், நாட்டியக் கலைஞருமான திவ்யதர்ஷினி இவரது உடன் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பரதக்கலையை முறையாகப் பயின்ற இவர், அமெரிக்க தமிழ்த் திருவிழா - 2012இல் இடம் பெறும் “வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகத்தில் முக்கிய வேடத்தில் நாட்டியமாடி அசத்த இருக்கிறார்.

Register today for such a great Tamil Event. www.fetna.org

5/20/2012

பத்மினியோடு பண்ணையார்

அழகானதொரு கிராமம். அவ்வூரில் ஒரு பண்ணையார். மிகவும் நல்லவர், ஊருக்காக எண்ணற்ற நல்ல பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர். அத்தகைய நல்லவருக்கு, எப்படியாவது பத்மினியை அடைந்துவிட வேண்டுமென்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அப்படி இப்படி எனப் பலவழிகளிலும் முயன்றவர், தன் ஆசைப்படியே பத்மினியைத் தனதாக்கிக் கொண்டார். நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்து, ஊரே அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்த அவர்தம் மகள் சினம் கொண்டு, பத்மினியிடமிருந்து பண்ணையாரைப் பிரிக்க முயல்கிறார். ஆனால், அம்முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. ஆம், உள்ளூர் வாலிபர் முருகேசன் துணையோடு பத்மினி தன்னைப் பிரிந்து போவதில் இருந்து மீண்ட பண்ணையார், பத்மினியோடு ஊருக்குள் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் நகரத்தில் இருந்த பண்ணையாரது மகன் ஊருக்கு வருகிறார்.அவரும், பண்ணையாரை அவர்களது குடும்பச் சொத்தான செங்கற்சூளைக்கு அழைத்துச் சென்று அவர் மனத்தை மாற்ற முயல்கிறார். அவரும் மனம் மாறிவிட்டார். இறுதியில் பத்மினிக்கு என்ன ஆயிற்று? ஊர் மக்கள் பத்மினிக்கு உதவுகிறார்களா?? பத்மினியோடு குதூகலமாய் இருந்த பண்ணையார் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவர் பத்மினியோடு எப்படிக் குதூகலமாயும் கிளுகிளுப்பாயும் இருந்தாரென்பதை இக்காணொலியில் கண்டு களிப்படையுங்கள்.

5/15/2012

தலைப்பு

வயிறார உண்டு
உண்ட வட்டலிலே
கை கழுவி
இன்னும் நான்
எழக்கூட இல்லை
வாஞ்சையாய்
நீண்டது தலைப்பு
புடவைத் தலைப்பு!!

5/05/2012

அமெரிக்காவுல இது தீராத ’பஞ்சாயத்து’ங்க!!

தமிழ் மொழியில, ஒற்று விதிகள்னு கிட்டத்தட்ட அறுபத்து ஐந்துக்கும் மேலான விதிகள் இருக்குங்க. அந்த அறுபத்து ஐந்துக்கும் மேலானதையும் அறிந்து வைத்துக் கொண்டு, தனக்கே உரிய ஏரணத்தையும் மனதிற்கொண்டுதான் இந்த விவாதத்துல ஒருவர் பங்கு கொள்ள முடியும். அதிலயும் ஒரு விதிவிலக்கு உண்டு. குறிப்பிட்ட ஒன்றைத் தவறு என உணர்வதற்குப் பெரும்பாலும் இவ்விதிகளை அறிந்திருக்கத் தேவையில்லை. ஒலிப்புகளும், பொருள் மயங்கா இடுகுறியைத் தருகிறதாவென ஆய்ந்து பார்க்கும் ஏரணம் மட்டுமெ தவறைச் சுட்டிக்காட்டப் போதுமானது.

அமெரிக்க பறவைகள் சரணாலயம்
இந்திய பொதுவுடமைக் கட்சி
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
ஏழாவது வட்ட கட்டிடத் தொழிலாளர் சங்கம்
தயிர் கடை


மேற்கண்ட தொகைச் சொற்களில் பார்த்தோமானால், முதல் சொல்லானது நிலைமொழி நின்று, வருமொழியோடு புணரவில்லை. ஏன்?

புணரக்கூடாது என்பதில்லை. புணரும் போது, வெளிப்படுகிற பொருள் மாறும்.

அமெரிக்கப் பறவைகள் புகலிடங்கள்.

ஆப்பிரிக்க யானை, அராபியக் குதிரை என்பதைப் போல, அமெரிக்காவுக்கே உரிய பறவைகளின் புகலிடங்கள் எனப் பொருள் வெளிப்படுகிறது.

அமெரிக்க பறவைகள் புகலிடங்கள்.

அமெரிக்காவில் இருக்கிற பறவை புகலிடங்கள்.. அப்புகலிடங்களில் எப்பற்வை வேண்டுமானாலும் புகலாம்.

இந்திய பொதுவுடமைக் கட்சி: இந்தியாவில் இருக்கிற பொதுவுடமைக் கட்சி. இந்தியப் பொதுவுடமைக் கட்சி: பொதுவுடமை நாடான இந்தியாவில் இருக்கிற கட்சி.

ஏழாவது வட்ட கட்டிடத் தொழிலாளர் சங்கம்: ஏழாவது வட்டத்தில் இருக்கிற கட்டிடத் தொழிலாளர் சங்கம். 

ஏழாவது வட்டக் கட்டிடத் தொழிலாளர் சங்கம்: ஏழாவதாக இருக்கும் வட்டக்கட்டிடத்தில் உள்ள தொழிலாளர் சங்கம்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: மதுரையில் இருக்கும் காமராசர் பல்கலைக்கழகம்.

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்: தென்னாட்டு காந்தி போல, மதுரையில் இருக்கும் காமராசரான சோமராசர் நினைவாக இருக்கும் பல்கலைக்கழகம்.

தயிர் கடை என்றால், தயிரைக் கடை
தயிர்க் கடை என்றால் தயிர் விற்கும் கடை.

வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம்: வாசிங்டன் வட்டாரத்திற்கான தமிழ்ச்சங்கம்.
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்: வாசிங்டனில் இருக்கும் வட்டாரத்தமிழுக்கான சங்கம் அல்லது வாசிங்டனில் இருக்கும் வட்டாரத்தமிழ்ச்சங்கம். வாசிங்டன் வட்டாரத்திற்கான தமிழ்ச்சங்கம் எனப் பொருள் கொள்ள ஏதில்லை.

ஒற்று இடுவதால் என்ன பொருள் வெளிப்படுகிறது, இடாமல் விடுவதால் என்ன பொருள் வெளிப்படுகிறது என்பதைக் கண்டோம்.

மரபுகள் போற்றப்பட வேண்டும். மறுப்பதற்கில்லை. சொல்லாக்கத்தின் அடிப்படை விதியான, ஒரு பொருளுக்கு ஒரு சொல் எனும் அடிப்படை அதனினும் இன்றியமையாதது.

ஒரு விதியை மட்டுமே அடிக்கோடிட்டு வாதிடுவது சரியாகா. மொத்த விதிகளையும் ஒலிப்புகளையும் ஒரு சேரக் கருத்திற்கொள்ள வேண்டும். அத்துனையையும் கருத்திற் கொண்ட பிறகும் பொருள் மயங்கினால், பொருள் மயங்கா வண்ணம் ஒற்றுகளை அமைத்துக் கொள்வதே தமிழுக்குச் சிறப்பு சேர்க்கும்.