வணக்கம்! பொருளாதார மந்தம், அதன் விளைவுகள், எதிர் நடவடிக்கைகள்ன்னு நாலும், உலகம் பூராவும் நடந்துட்டு இருக்கு. இங்க அமெரிக்காவுல, பொருளாதார வளர்ச்சி(stimulus package) முடுக்குநிதிக்கான திட்ட முன்வரைவு, அமெரிக்க நடுவண் அரசாங்கத்தோட கீழ்சபையில ஒப்புதல் வாங்கி, மேல் சபையோட ஒப்புதலுக்கு போயிருக்கு. சனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் இடையில ஒரு பொதுவான ஒப்புதல் கை கூடினதை ஒட்டி, நேத்தைக்கே வாக்கெடுப்பு முடிஞ்சு, உடனே அதிபரோட ஒப்புதலுக்கு போகும்ன்னு எதிர்பார்த்தாங்க. ஆனா போகலை, திங்கள்கிழமை மேல்சபையில வாக்கெடுப்பு இருக்கும்ன்னு சொல்லுறாங்க அரசியல் பக்கிக!
இந்த நிதி ஒதுக்கீடு ($780 Billion) அமலுக்கு வந்தா, வேலை வாய்ப்பு பெருகும்ன்னு ஒரு எதிர்பார்ப்பு. நிதி ஆதாரம் கூடினா, சிறு தொழில்கள் பெருகலாம். பொருளாதாரம் ஏற்றப் பாதைக்கு திரும்பும்ன்னு ஒரு எதிர்பார்ப்பு. ஆனா, இந்த நிதி ஒதுக்கீடுனால ஒன்னும் பலன் இருக்காதுன்னும் சிலர் சொல்லுறாங்க. அது குறிச்ச வேடிக்கையான, ஒரு எள்ளல் மின்னஞ்சல் கூட உலகம் பூராவும் உலாவிகினு இருக்கு. அதனோட தமிழாக்கம் கடைசியில குடுத்து இருக்கேன்.
எனக்கு எங்க அமுச்சியவிங்க நினைவு வந்தது நேத்து. ஒன்னுமில்லைங்க, என்னோட அருமை நண்பர், திருச்சிக்காரப் பயல் Rockfort மகேந்திரன் கலிஃபோர்னியா மாகாண அரசுக்கு வேலை பாக்குறாரு. வழக்கம் போல அலைபேசில அழைச்சாக்க, எப்பவும் அலைபேசில கொறஞ்ச குரல்ல மருகுற ஆளோட சத்தம் வெகு தூக்கலா இருந்துச்சி. என்னடா இது ஆச்சரியமா இருக்கேன்னு கேட்டப்பதாங்க, எனக்கு எங்க அமுச்சியவிங்க ஞாவகம் வந்துச்சி.
சுருக்குப் பையில பணம் கொறச்சலா இருந்துச்சின்னு வையுங்க, திடீல்ன்னு எங்க தோட்டத்துல வேலை செய்யுற சுப்பனையும், வள்ளியையும் கூப்ட்டு இன்னைக்கி வீட்லயே இருந்துக்குங்கன்னு சொல்லிப் போடும் எங்க அமுச்சி. அது மாதர கலிஃபோர்னியா மாகாணத்துலயும், மாகாண அரசு வேலை செய்யுறவிங்களை மாசத்தோட முதல் வெள்ளிக் கிழமையும் கடைசி வெள்ளிக் கிழமையும் வேலைக்கு வர வேண்டாம்ன்னு சொல்லிப் போட்டாங்களாம். அதனாலதான், வீட்ல இருந்த நம்ம திருச்சிக்காரப் பய மகேந்திரனோட குரல் வலுவா இருந்துச்சுங்க. இந்த வழக்கத்தோட பேருதாங்க இன்னைக்கு வீட்லயே இரு(Furlough) வழக்கம்.
நேத்தைக்கு இதனால மட்டும் 38 மில்லியன் வெள்ளி மிச்சம் ஆச்சுதாம் மாகாண அரசுக்கு.மேலும் இந்தத் திட்டம் 2010ம் ஆண்டு பாதி வரைக்கும் தொடரலாம்ன்னு ஒரு யூகம் இருக்காம். ஏன்னா, கலிஃபோர்னியா அரசுக்கு 40 பில்லியன் பற்றாக்குறை இருக்குதாமுங்க, அதான்! சரி இப்ப, அந்த மின்னஞ்சலோட தமிழாக்கத்தைப் பாப்பமா?
கேள்வி: அது என்ன பொருளாதார வளர்ச்சி முடுக்கு நிதி?
பதில்: இந்த நிதியை, அரசு கந்தாயங் கட்டுபவர்களுக்குத் தரும்.
கேள்வி: அரசுக்கு எப்படி இந்த நிதி கிடைக்கும்?
பதில்: கந்தாயங் கட்டுபவர்களிடம் இருந்து.
கேள்வி: ஆக, அரசு நமக்கே நம் பணத்தைத் திருப்பித் தருகிறது?
பதில்: கொஞ்சமா.
கேள்வி: இந்த நிதியோட நோக்கம்?
பதில்: நீங்க இந்த பணத்துல போயி நாலும் வாங்குவீங்க, அது பொருளாதார வளர்ச்சிய முடுக்கும்.
கேள்வி: அப்ப, அது சீனப் பொருளாதார வளர்ச்சியையல்ல முடுக்கும்?
பதில்: டப்பிய மூடு?!
நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்!
கொசுறு: நம்ம ஊர்ல எல்லாம், காசு குடுத்துப் பதவி வாங்கி, வாங்கின பதவியில காசு பாப்பாங்க. நான் இருக்குற ஊர்ல, விளையாட்டுப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கு இருக்கைய சந்தையில விக்கிறாரு இவரு. அவரோட விபரம்.