7/21/2025

தூரிகைப் போராளி டிராட்ஸ்கி மருது

தூரிகைப் போராளி டிராட்ஸ்கி மருது

ஓவியர் டிராட்ஸ்கி மருது, அணுக்கமானோர் இடையில் மருது அண்ணன்  என அறியப்படும் மருதப்பன் மருது அவர்களுக்கு, இயங்குபடக் கலைஞர், திரைப்பட சிறப்புத் தோற்ற இயக்குநர், கோட்டோவியக் கலைஞர், கணிப்பொறி வரைகலைஞர், காண்பியல்தள அறிஞர், முற்போக்கு சிந்தனையாளர், இப்படியான அறிமுகங்களை நாம் எங்கும் காணலாம்.

சார்லட் நகரில், எங்கள் வீட்டில் இடம் பெற்ற கலந்துரையாடலின் வழி(7/20/2025) நாங்கள் அறிந்து கொண்டது யாதெனில், பல்நோக்குச் சிந்தனையாளர் (Lateral Thinker) என்பதுதான். அடுக்கடுக்கான நுட்பங்களை விவரிக்கிறார். அவற்றை வரிசையாகச் சொல்லிக் கொண்டு போகும் போது, நல்லதொரு கதையாடலாக, சொற்பொழிவாக அது உருவெடுக்கும்.

அண்ணன் மருது அவர்கள் அப்படியான ஒரு பாங்கினைக் கொண்டிருக்கவில்லை. இந்தக் காலத்தில், இந்தக் கோட்டையானது இப்படி அமைந்திருக்கின்றது; அது ஒரு கல்கோட்டை. அதன் அமைப்பு இப்படியிப்படி எனச் சொல்கின்றார். மனம் இறும்பூது கொள்கின்றது. அங்குதான் திருப்பம். அந்த வேகத்திலேயே, அப்படி அமைந்திருக்காமல், இப்படி இப்படியெல்லாம் அமைந்திருக்கலாம்(what are the other options). அவற்றுக்கிடையே இது இப்படி அமைந்திருக்கின்றது. அதன் நுட்பம் இதுவாக இருக்கலாமென அவர் சொல்கின்ற பாங்கில், தனித்துவமாக மிளிர்கின்றார். நமக்குள் அந்த இடத்தில் ஒரு புது உலகம் காணக்கிடைக்கின்றது. நுட்பத்தின் அடி ஆழத்துக்கே அழைத்துச் செல்கின்றார்.

எடுத்துக்காட்டாக, குதிரை ஓடுகின்றது. அந்த ஓட்ட இயங்குதலில் பல்வேறு விதங்கள் உள்ளன. விரைவாக நேர்கோட்டில் ஓடுவது, வளைந்து வளைந்து பாதையின் அமைப்புக்கொப்ப ஓடுவது, கொண்டாட்ட மனநிலையில் சவாரி மனப்பான்மையில் ஓடுவதென நிறைய. ஒவ்வொன்றின் தன்மையும் இயற்பியலுக்கொப்ப மாறுகின்றது. அந்த இயற்பியலைப் புரிந்து கொண்டால்தான், காண்பியலும் நிறைவுகொள்ளும்; இயற்கையை வெளிக்காட்ட வல்லதாக அமையும். இந்த நுட்பத்தை விவரிக்கின்றார்.

ஏராளமான கலைஞர்களைப் பற்றியும் அவர்களின் பின்னணியில் நிகழ்ந்த சுவைமிகு சம்பவங்களையும் குறிப்பிடும்போது, அந்தக் கலைஞனின் தனித்துவத்தைத் தன்பார்வையில் சொல்லும் போது, அந்தத் தனித்துவத்தின் சிறப்பு புலப்படுகின்றது.

கலைப்பார்வையிலிருந்து விலகி, அதே சம்பவத்தை சமூகப்பார்வையிலும் விவரிக்கத் தலைப்படுகின்றார். பொதுவாக ஆதிக்கசக்திகளை நாம் விமர்சிக்கின்றோம், வெறிகொண்டு திட்டித் தீர்க்கின்றோம். ஆனால், இவரோ, அது ஏன் ஆதிக்கசக்தியாக நிலைபெற்றதென்பதைச் சொல்கின்றார். காரணங்களை நாம் புரிந்து கொள்கின்றபோது நாம் நம்மைத் திருத்திக் கொள்வதற்கும் சூழலின் தன்மையில் இருக்கும் புலப்படாப் பொருளை புரிந்து கொள்வதற்குமான அகவெளி நமக்கு அமைகின்றது.

பிரிய மனமில்லைதாம். ஓவியர் மருது என்பவர் யாரென்று கேள்விப்படாதவர்கள்தாம், பிரியமனமின்றி விடைபெற்றுச் சென்றனர்.


-பழமைபேசி, pazamaipesi@gmail.com


 

No comments: