வணக்கம். இப்பதிவினை நான் தனிமனிதன் எனும் இடத்தில் இருந்து எழுதுகின்றேன். எவ்விதப் பொறுப்பின்சார்பாகவும் எழுதவில்லை.
2025 விழா துவக்கப்பணிகளேவும், எதிர்மறை எண்ணங்கள் நிரம்பிய சூழலில்தான் துவக்கப்பட்டன. உள்ளூரிலும் சரி, பேரவை சார்ந்தவர்களும் சரி, வதந்திகளை, அவதூறுகளை நீக்கமற எங்கும் பரப்பிக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில்தான் துவக்கவிழா(kickoff meeting) இடம் பெற்றது. நானும் அதில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்திலும் சரி, மற்ற நேரங்களிலும் சரி, திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டது, be optimistic, convention will be sold out.
மாமதுரைத் தொழில்முனைவோர் மாநாடு வந்தது. அங்கிருந்த நண்பர்கள் சொன்னார்கள். நடுத்தர, விளிம்புநிலை மக்களுக்கானதாக இருத்தலே, உங்களின் இலக்காக இருக்க வேண்டுமெனச் சொன்னார்கள். அப்படியேவும் நடந்தது. சகலதரப்பும் அடங்கிய பொதுநிகழ்வாக இருக்கவும் ஆசைப்பட்டோம். அவ்வண்ணமே விருந்திநர்களும் அழைக்கப்பட்டனர். தம் தரப்பு மட்டுமே இடம் பெற வேண்டுமென நினைப்பது, இலாபநோக்கற்ற பொது அமைப்புக்கு என்றுமே உகந்ததன்று. மாநாடு பெருவெற்றி கொண்டது. துணை அரங்கும் நிரம்பியது. அதுகண்டாவது அமைதி கொண்டிருந்திருக்கலாம்.
அவதூறுகள், வதந்திகள், கொடைதடுப்புப் பணிகள் மேலும் வீறு கொண்டன. தகவல் தொடர்புப் பணிகள் சீராகவும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருந்து வந்தன. சகல தரப்பும் உள்ளே வரும் போது, எல்லாமும் ஈடேறும் என்பதில் பெரும் நம்பிக்கை நமக்கு உண்டு. இருந்தாலும், செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் குறியாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினேன். வாய்த்த பொருளாளரும் அதில் வல்லவர். இருந்தாலும், விருந்திநர் எண்ணிக்கையைக் கூட்டியதில் எனக்குப் பெரும் ஏமாற்றமே! 2009 - 2017ஆம் ஆண்டு வரையிலான தரவுகளை முன்வைத்துப் பேசினேன்.
வட அமெரிக்க வாகை சூடிப் போட்டிகளை வடிவமைத்ததும் நானே. பிற்பாடு, அதற்கான ஒருங்கிணைப்பாளரிடம் பொறுப்புகள் கையளிக்கப்பட்டு, பல்வேறு போட்டிகளின் தலைவர்களும் இனம் கண்டறியப்பட்டு, பன்மைத்துவம் போற்றப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.
ஒருங்கிணைப்பாளர்கள் மனவுறுதியோடு இருந்தனர். எவ்விதக் காரணத்துக்கும், நட்டமே ஆனாலும் சரி, விலையில்லா அனுமதியைத் தரக்கூடாது என்பதில். மிகச்சரியான முடிவு.
முதன்மை அரங்க நிகழ்ச்சிகள், இணையமர்வுகள், போட்டிகளில் பங்கேற்பது, விருந்திநராக வருவது போன்றவற்றுக்கு பலத்த போட்டி நிலவியது. காரணம், ஏற்படுத்தப்பட்ட நம்பகமும் தரமும்!
விழாவில் குறைகளே இல்லையா என்றால், இருக்கின்றனதான். அவையெல்லாம் பொருட்படுத்தக் கூடியன அல்ல. உள்ளூர் தன்னார்வலர்கள் குறைவு, ஆட்களை வேலைக்கமர்த்தித்தான் சாப்பாடு போட வேண்டுமென்றார் நண்பர். நான் சொன்னேன், அன்போடு அழைத்தால், ஊரே வருமென்றேன். அப்படித்தான் நடந்தது. பரிமாறுவதற்கும் போட்டா போட்டி.
அன்பை விதைத்தால் அன்பே விளையும்! 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பேரவை கண்டிருக்கின்றது Sold Out , that too twice, Madurai, Now in Raleigh!!
-பழமைபேசி.
No comments:
Post a Comment