அப்படியான அறுவடைத் திருநாளை நாம் ஏன் சிந்திக்க, நினைத்துப் பார்க்க மறுக்கின்றோம்? நினைத்துப் பார்த்தால் விரைவில் அது நம்மை நோக்கிவந்து விடும் என்பதாலா?? கடந்த இருபது ஆண்டுகளாக நான் நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றேன். 2009ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில், மரணம் குறித்தும் அதன்நிமித்தம் அமெரிக்காவில் இருப்போரெல்லாம் எப்படியான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டுமென்றும் வலைதளத்தில் கட்டுரை எழுதி வெளியிட்டேன். இதுவரையிலும் இலட்சம் பேருக்கும் சற்றுக் கூடுதலாகப் படித்திருப்பதாக கூகுள்நிரலி கணக்குக் காண்பிக்கின்றது. மேலும், பல்வேறு தளங்களில் அக்கட்டுரை கொண்டு சேர்க்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. அண்மையில் அம்மாவுடன் ஒருவரது மரணத்தைப் பற்றி நானும் அண்ணனும் கூறினோம். எவ்விதப் பதற்றமுமில்லாமல் அவர் அதை எதிர்கொண்டார். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு, அம்மாவின் அணுகுமுறையில் பெருமளவிலான முதிர்ச்சியைக் காண்கின்றோம். காரணம், அப்பாவின் மரணமாகத்தான் இருக்க வேண்டும்.
ஒருவர் தம் மரணத்தைப் பற்றி யோசிக்கத் தலைப்படும் போது, முதலில் பயமாகவும், பதற்றமாகவும் இருக்கும். தொடர்ந்து அது குறித்துச் சிந்திக்கத் தலைப்படும் போது, வாழ்வு குறித்த தெளிவு பிறக்கும். நல்ல அறுவடையை மேற்கொள்ள வேண்டுமானால், அந்த களத்து மேட்டிலிருந்து பின்னால் நோக்கி என்னென்ன செய்தாக வேண்டுமென உழவன் சிந்திக்கின்றானோ அதைப் போன்றதொரு பாங்கும் பக்குவமும் தலையெடுக்கும்.
சாவு என்பதை எவனொருவன் தன்னுடைய அறுவடையாக நினைக்கின்றானோ அவனெல்லாம் திட்டமிடலைச் சரியாகக் கையாளுவான். எவனொருவன் அஞ்சி நடுங்குகின்றானோ, அவனெல்லாம் திட்டமிடலின்றித் தன்போக்கில் நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பான் என்பதுதான் சரி. சாவு என்பது வெகுநிச்சயமான ஒன்று. யாராலும் அதைத் தவிர்க்க இயலாது. வேண்டுமானால், வேண்டுமானாலென்ன வெகுநிச்சயமாக முன்கூட்டியே நிகழாமல் இருக்க ஓரளவுக்குச் செயற்பட முடியும். அப்படிச் செயற்பட வேண்டுமானால் அவன் அதைப் பற்றிச் சிந்தித்தாக வேண்டும். உடல்நிலை ஒழுக்கம் குறித்து யோசிப்பான். முன்னெடுப்புகளை மேற்கொள்வான். அதன்வழி, சுகாதாரம் மேன்மையுறும். மூப்பெய்துதல் மட்டுப்படும்.
எதிர்பாராமல் நிகழ்வனவற்றைப் பற்றி யோசிப்பான். அப்படி ஏதும் நிகழ்ந்து விட்டால், அதைச் சரிக்கட்ட என்ன செய்ய வேண்டுமென யோசிப்பான். அதன்நிமித்தம், உயில் எழுதி வைப்பான். வேண்டிய தகவல்களை உற்றார் உறவினருக்குத் தெரியப்படுத்தும் பொருட்டு எங்கோ எழுதிவைப்பான்.
நேற்றைய நாள் நமக்குத் திரும்பக் கிடைக்காது. நாளைய நாள் நமக்கு வாய்க்குமா என்பதற்கு முழு உத்திரவாதம் எவராலும் கொடுக்க இயலாது. ஆகவே இருக்கின்ற இந்த நாளை நல்லபடியாக வாழத்தலைப்படுவான். எப்படியானவன் அப்படிச் செய்யத் தலைப்படுவான். மரணம் குறித்த உணர்வுற்று, அதன்வழி வாழ்வின் வழியைக் கட்டமைத்துக் கொண்டவன் தற்காலத்தைப் புசித்துப் பசியாற்ற எண்ணுவான்.
நம்மை நம்பி இருக்கும் குடும்பமோ சமூகமோ நாம் இல்லாமற் போய்விட்டால் என்ன செய்வார்கள் என நினைக்கத்தலைப்படுவான். ஒருவேளை அப்படியாகிவிட்டால் என யோசிப்பான். அவர்கள் நடுத்தெருவுக்கு வந்து விடக் கூடாதேயென்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்குவான். மாற்று ஏற்பாடுகளைச் செய்வான். யார் செய்வான்? சாவென்கின்ற அறுவடைத் திருநாள் குறித்த பிரஞ்ஞை இருக்கின்றவன் செய்வான்.
ஒரு கடைக்கு லாட்டரி வாங்கப் போகின்றான். அவன் கடைக்குப் போய் வாங்கிய லாட்டரியில் பெரும்பரிசு வாங்குவதற்கான வாய்ப்பைக் காட்டிலும், மின்னலோ விபத்தோ இடியோ நேர்ந்து இறப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். சாவு என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று. அதற்கு, ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் படித்தவன் படிக்காதவன் போன்ற பாகுபடெல்லாம் தெரியாது, தெரியாது, தெரியாது. “நமக்கு எதுவும் நேராது” என்பதுதான் உலகப்பொதுமறையாக இருக்கின்றது. ஆனால் உண்மைநிலை என்ன? எவனுக்கும் எந்த நேரத்திலும் அது நிகழலாம் என்பதுதான் உண்மை. உறங்கப் போகின்றான் ஒருவன். நல்லபடியாகக் களைப்பு நீங்கி எழுவான் என்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றதோ, அதேபோன்ற சாத்தியக்கூறுகள் எழாமற்போவதற்கும் உண்டுதானே?? ஆளுக்காள் அதற்கான அளவீடுகள் மாறுபடலாம். அவ்வளவுதான். வயதிற்குறைந்தவன், உடற்பயிற்சி செய்கின்றவனுக்கு மரித்துப் போவதற்கான தகவு குறைவு. மற்றவனுக்கு அதிகம். அதையும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது. ஆகவே, தன் மரணம் என்பதைச் சிந்தித்தால் சிந்திக்கின்றவனுக்குத் தெளிவு பிறக்கும்.
தெளிவு பிறக்குங்கால் ஆசைகளைப் பட்டியலிடத் துவங்குவான். அறுவடையாக, நான் இன்னின்ன இடங்களைப் பார்த்தாக வேண்டும். இன்னின்னவற்றை அனுபவித்தாக வேண்டும். இன்னின்ன செயல்களைச் செய்தாக வேண்டும். இப்படியிப்படியாகத் தன் சுவடுகள் இருக்க வேண்டும். இன்னின்ன பழக்கவழக்கங்களைக் கட்டமைக்க வேண்டும். குடும்பமரபுகள் இப்படியிப்படியாக இடம்பெற வேண்டும். இப்படி இப்படியாகத் தன் வேளாண்மையை அவன் அறுவடைத்திருநாள்க் கனவினூடக் கட்டமைக்கத் தலைப்படுவான். அய்யோ அறுவடை என்பது முன்கூட்டியே வந்து விடுமா? நல்லபடியாக முடியுமா? அலங்கோலமாக ஆகிவிடுமாயென்றெல்லாம் கவலைப்பட்டால், வெள்ளாமை வீடு வந்து சேராது.
மரணம் என்பதன் பேரிலான சிந்தனையை புறக்கணித்துவிட்டு, திட்டமிடல் வேலைகளை நிராகரிப்புச் செய்து விட்டு, திடீரென அது வந்து வாசற்கதவைத் தட்டுங்கால் நிலைகுலைந்து நின்று ஒப்பாரி வைப்பதும், மனம் கலங்கிக் கடைசி தருணங்களில் அல்லலுறுவதும் நல்லதொரு அறுவடைக்கு அழகாக இருக்கவே இருக்காது. நல்வாழ்வு என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது நற்சாவு என்பதும். நற்சாவு என்பதற்கான வரையறை, ஒருவரது முடிவு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதில் இல்லை. மாறாக, சாவை நோக்கிய அவரது வாழ்க்கைப்பயணமும் திட்டமிடலும் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதில்தான் அடங்கி இருக்கின்றது.
ஆழ்ந்து வாழப்பழகியவனுக்கு மரணம் குறித்த அச்சமில்லை. ஒருவனது மரணம் அடுத்தவனுக்குப் பாடம். மரணம் குறித்தான சிந்தனையென்பது கண்ணாடி போன்றது; அந்தக் கண்ணாடியினூடாக அவன் தான் வாழும் வாழ்க்கையைக் கண்டுகொள்ளலாம். எப்படி வாழ வேண்டுமென்பதை, எப்படியாகச் சாக வேண்டுமென்பதிலிருந்து அவன் தெரிந்து கொள்ளலாம். அறுவடைநாள்க் கனவு இனிமையானது. விளைச்சல் வெகுவாக இருக்க வேண்டுமானால், அந்த நாளை நினைக்க வேண்டும். அந்த நாள் இப்படியிப்படியாக இருக்க வேண்டுமெனக் கனவும் கண்டாக வேண்டும். அதற்கொப்ப செயற்படவும் வேண்டும். Cheers!!
1 comment:
உங்கள் பதிவையும் உங்கலையும் மீண்டும் இங்கு கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
மிகக் கச்சிதமாகவும் அழகாகவும் எளிமையாகவும் சிறப்பாகவும் ஒரு சீரிய உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள் பழமைபேசி. உங்களைப் பல நாட்களாக காணவில்லை என்று யோசித்தேன். நீங்கள் மீண்டும் வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. இவ்வாறான பதிவுகளைத் தொடர்ந்தும் தாருங்கள். நம் ‘பாதை’யை சீராக்க அது பெரிதும் உதவுகிறது.
ஒருகாலத்தில் மிக அன்னியோன்னியமாக எழுத்துவழி பயணித்த பலர் இன்று இந்த பதிவுலகில் இருந்து காணாமல் போய் விட்டார்கள். அவர்கள் என்னவாகியிருப்பர் என்று சிலவேளைகளில் நான் நினைத்துப் பார்ப்பதுண்டு. அவ்வாறு நினைத்துப் பார்ப்பவர்களில் நீங்களும் ஒருவர்.
தொடர்ந்து எழுதுங்கள். நீங்கள் எழுத வேண்டும்.
’அறுவடைக்கனவு’ - பொருத்தமான தலைப்பும் கூட.
Post a Comment