1972 ஆம் ஆண்டு, அமெரிக்க உயராய்வு
அறிவியல் கழகத்தின் 139ஆவது கூட்டத்தின் போது அறிவியலறிஞர் எட்வர்டு லோரன்சு என்பார்
அவையோரிடையே ஒரு வினாவினை எழுப்பினார். ”தென்னமெரிக்காவில் உள்ள பிரேசிலின் ஏதோவொரு
காட்டில், ஏதோவொரு செடியினுடைய மலரொன்றில் அமர்ந்திருக்கும் அந்த சிறு வண்ணத்துப்பூச்சியின்
அந்த ஒற்றைச் சிறகசைப்பு அமெரிக்காவில் பெரும்புயல் ஒன்றை உருவாக்கும் வல்லமை கொண்டதா?”
என்பதுதான் அவரின் வினா. ‘பட்டர்ஃபிளை எபெக்ட்’ எனும் பெயரில், இந்த கருத்தாக்கமானது
அறிவியலுலகில் இன்றுவரையிலும் பெரும் விவாதங்களை விதைத்துச் சென்றிருக்கின்றது.
பதினெட்டு வயதுடைய எட்வினா
எனும் மாணவி வீட்டின் முன்னறையில் அமர்ந்து நூல் ஏதோவொன்றை வாசித்துக் கொண்டிருக்கின்றாள்.
அவளுடைய தாய் உள்ளே நுழைகிறார். உள்ளே வந்ததும், பரபரப்போடும் ஆவலோடும் அந்தக் காலணிகளைப்
பிரித்தெடுத்து அணிந்து நடந்து பார்க்கின்றார். எட்வினாவுக்கு மனம் ஒப்பவில்லை. ‘அம்மா,
இந்த வயதில் இது உனக்குத் தேவையற்றது. இந்த உயரமான குதிகள்(high heels) செருப்பு உனக்கு
வேண்டாமம்மா’ எனச் சொல்லி அகங்கலாய்த்துக் கொள்கின்றாள். அம்மாவின் வேட்கை அம்மாவுக்கு.
மறுநாள், அந்த உயர்குதிச் செருப்புகளை
அணிந்து கொண்டு சென்ற எட்வினாவின் தாயார் அவர்தம் கால் இடறிக் கீழே விழுந்ததில் காற்பாத
எலும்பு பிசகிவிடுகின்றது. அதன்நிமித்தம் கால்கட்டு போடப்பட்டு ஒருமாத கால ஓய்வில்
இருக்கப் பணிக்கப்படுகின்றார். கூரையானது மரத்துண்டுகளினால் வேயப்பட்ட வீட்டில், வெளியே
எங்கும் செல்லாமல் தொடர்ந்து ஒருமாதகாலம் தங்கியிருந்ததில், மரத்தில் இருந்து வெளிப்பட்ட
பூஞ்சைக்காற்றினால் எட்வினா அம்மாவுக்கு சுவாச அழற்சி ஏற்படுகின்றது. அந்த அழற்சிக்கு
பென்சிலின் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றார். அந்த தடுப்பூசி போட்டுக் கொண்டதில், அவர்
உட்கொண்டு வந்த கருத்தடை மாத்திரைகள் பயனற்றுப் போயின. விளைவு, எட்வினாவுக்கு 19 வயதுகள்
குறைந்த தம்பி பிறக்கின்றான். ஒரு குதிகாற்செருப்பு வாங்கிய அந்த ஒற்றை முடிவுக்குப்
பயனாக எட்வினா அம்மாவுக்கு மகன் பிறக்கின்றான்.
ராபர்ட் வேலையில்லாத இளைஞன்.
அமெரிக்கத் தந்தைக்கும் பிலிப்பைன்சு தாய்க்கும் பிறந்து, அமெரிக்காவில் பள்ளிப்பருவத்தை
முடித்து, தாய்க்கும் தந்தைக்கும் ஏற்பட்ட பிணக்கின்பாற்பட்டு தாயோடு பிலிப்பைன்சு
நாட்டுக்கு வந்து, வந்த இடத்தில் வேலை எதுவுமின்றி அல்லாடிக் கொண்டிருப்பவன். பிற்பகல்
நேரம். கடுமையான பசி. வீட்டுக்குச் செல்வதா,
உணவகம் செல்வதாயென மனம் தள்ளாடுகின்றது. ஒருவழியாக ஒரு முடிவினை மேற்கொண்டு, இருக்கின்ற
காசை வைத்துக் கொண்டு, அந்த சீன உணவகத்துக்குச் சென்று பசியாறுகின்றான். எல்லாம் ஆன
பிறகு, பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டுடன் ஃபார்ச்சூன்குக்கீ எனப்படுகின்ற அந்த
இனிப்புப் பண்டமும் வைக்கப்படுகின்றது. பிரித்துப் பார்க்கின்றான். அந்தப் பண்டத்தினுள்ளே
இருக்கின்ற துண்டுச்சீட்டில், “பிறருக்குக் கற்பிக்க வேண்டுமாயின், நாம் அதனை ஒருமுறைக்கு
இருமுறை தீரக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று இருக்கின்றது. அது அவனது சிந்தையைக் கிளறி
விடுகின்றது. உணவகத்தில் இருந்து நேரே அருகில்
இருக்கும் பள்ளிக்குச் சென்று, தாம் பட்டப்படிப்பு எதுவும் படிக்கவில்லையென்றாலும்,
ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவன்; அமெரிக்காவில் பள்ளிப்படிப்பை முடித்தவன் என்கின்ற
அடிப்படையில் ஆங்கிலப் பயிற்றுநர் வேலைக்கு விண்ணப்பித்தான். விண்ணப்பித்திருந்ததை
மறந்தும் விட்டிருந்தான் ராபர்ட்.
தைவான் நாட்டில் ஏற்பட்ட பெரும்
நிலநடுக்கத்தினை முன்னிட்டு, தைவான் நாட்டு ஆசிரியர்கள் பலரும் பிலிப்பைன்சிலிருந்து
கிளம்பிச் சென்றுவிட்டனர். அதன்காரணம், ஆங்கிலப் பயிற்றுநர்களுக்கான தேவை ஏற்பட, எங்கோ
இருந்த ஒரு விண்ணப்பத்தின் பொருட்டு ராபர்ட்டுக்கு அழைப்பு வந்து, ஆங்கில வகுப்பு பகுதிநேர
ஆசிரியர் வேலை கொடுக்கப்பட்டது. படிப்படியாக, முழுநேர வேலை, வீடு, திருமணம் என வாழ்க்கையை
விரிவுபடுத்திக் கொண்டான் இராபர்ட். சீன உணவகத்தின் அந்த ஒரு துருப்புச்சீட்டு, அவனைப்
பெரும் கல்வியாளனாகக் கட்டமைத்து பெரும் பாடசாலைக்கு உரிமையாளனாகவும் இட்டுச் சென்றது.
புறநகர்ப்பகுதி ஒன்றில் சேவையைப்
பெறுவதற்காக மக்கள் வரிசையில் நின்றிருந்தனர். அந்த ஒருவர் மட்டும், வரிசை ஒழுங்கினைப்
பின்பற்றாமல் ஓரிருவருக்கு முன்பாகப் போய் நின்றார். அதனை அங்கிருந்த காவலர் ஒருவர்
தட்டிக் கேட்டார். வாக்குவாதம் நீண்டது. அந்த நபரைக் கைது செய்தது போலீசு. போலீசுக்
கட்டுப்பாட்டில் இருந்த அவர் கடும் சொற்களைப் பாவித்தார். அடிகள் வாங்கினார். எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் உடலின் படத்தை சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது. நாடெங்கும் மக்கள் மனம்
வருந்தினர். நாட்டின் அதிபருக்கு எதிராக அதனைத் திருப்பிவிட்டனர் சிலர். மக்கள் வீதிக்கு
வந்தனர். ஒரே வாரத்தில் அரசு கவிழ்ந்தது. அதனைக் கண்ட அண்டை நாட்டவரைச் சார்ந்தவர்களும்
அவரவர் அரசுக்கு எதிராக சமூகவலைதளங்களின் வாயிலாகக் கொந்தளித்து வீதியில் இறங்கினர்.
அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டன இன்னபிறசக்திகள் பலவும். அந்த ஒற்றை இளைஞர் வரிசையில்
முந்திச் சென்றதன் விளைவு, பல நாடுகளில் அரசுகள் கவிழ்ந்து நாடுகள் துண்டாகின. வாழ்வு
பாழானது. பின்னர் அதற்கு ‘அராபிய வசந்தம்’ எனப் பெயரும் சூட்டப்பட்டது.
கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தங்கள்,
அமைப்புகள், முறைமைகள், நெறிகள் முதலான எதுவுமற்று, ஏதோவொரு சிறு சிறகசைப்பின்பாற்பட்டும்,
வெறுப்புணர்வின்பாற்பட்டும் முடிவுகளை மேற்கொள்ளும் வழக்கம் நாளுக்கு நாள் பெருகிக்
கொண்டே வருகின்றது. சாதி, சமய, இன உணர்வுகளைக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்தித் துருவப்படுத்தும்
செயற்பாடுகளும் நாளுக்கு நாள் உலகெங்கும் மேலோங்கி வருகின்றன. எந்தவொரு சிற்சிறு சிறகசைப்பையும்
தமதாக்கிக் கொள்ள எல்லாச் சக்திகளும் சமூகவலைதளங்களைப் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றன.
எந்தவொரு சிறகசைப்பும் நல்லதொரு விளைவையும் உண்டு செய்யலாம். நேர்மாறாகப் பாரிய பின்னடைவையும்
உண்டு செய்யலாம். பெரும்பாலும் பின்னடைவுகளையே இந்த சிறகசைப்புத் தாக்கங்கள் உண்டு
செய்து வந்திருக்கின்றன. அவற்றினின்று விடுபட்டுக் கொள்ளவும், அவற்றை மேன்மைக்குரியதாக
உட்படுத்திக் கொள்ளவும் நமக்கு இருக்கும் ஒரே தீர்வு, முறைசார் அரசியலையும் தன்னார்வப்
பணிகளையும் மேற்கொள்வது மட்டுமே.
-பழமைபேசி.
No comments:
Post a Comment